Monday, April 21, 2025

செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் சாஸ்திரம்பாக்கம் சிவபெருமான் ‘வைத்தீஸ்வரன்’

சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சாஸ்திரம்பாக்கம் என்ற திருத்தலம். இங்கு சிவபெருமான் ‘வைத்தீஸ்வரன்’ என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். அம்பாளின் திருநாமம் தையல்நாயகி என்பதாகும்.

பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் காலப்போக்கில் சிதிலமடைந்து, மண் மூடி போய்விட்டது. முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து பாம்புகள் நடமாடும் இடமாக மாறிப்போனது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வாழ்ந்த மனநோய் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர், இறைவனின் சக்தியால் மனநோய் தீர்ந்து தீர்க்கமான இளைஞனாக மாறினார். இதையடுத்து அந்த வாலிபர், மண் மூடிப்போயிருந்த சிவலிங்கத்தை வெளியே எடுத்து அபிஷேகம், ஆராதனை செய்து வந்தார்.

இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், மனநோயால் பாதிக்கப்பட்ட இந்த வாலிபனின் செய்கையைக் கண்டு திகைத்தனர். அவனிடம் இதுபற்றிக் கேட்டபோது, தான் முழு குணம் அடைந்து விட்டதாகவும், அதற்கு இந்த இறைவனே காரணம் என்றும் தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதையடுத்து அதே இடத்தில் இறைவனுக்கு குடில் அமைத்து தினமும் வழிபாடு செய்து வந்தனர். தற்போது கோவில் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து வருகிறது.ஆலய அமைப்பு

ஆலயம் கிழக்கு நோக்கியபடி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், முற்றிலும் செங்கல்லால் கட்டப்பட்ட 16 கால் மண்டபம் காணப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே கருவறையில் கிழக்கு நோக்கிய படி மூலவர் வட வைத்தீஸ்வரன் அருள்பாலித்து வருகிறார். இறைவனின் இடது பக்கத்தின் தனிச் சன்னிதியில் மாங்கல்ய பலம் தரும் அன்னையாக தையல்நாயகி அம்மன், கமல பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாளின் சன்னிதி அருகே, இறைவனின் சன்னிதியை நோக்கியபடி காலத்தை நிர்ணயிக்கும் கால பைரவர், நாய் வாகனத்துடன் அற்புதமாக காட்சியளிக்கிறார். மூலவருக்கு முன்பாக நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார். இத்தல இறைவன் வந்த பிணி, வரும் பிணிகளை நீக்கும் சக்தி படைத்தவராக விளங்குகிறார். இதனாலேயே இவரை வட வைத்தியநாதர் என்று அழைக்கின்றனர்.

இங்குள்ள இறைவன் சன்னிதியில் துவார பாலகர்களாக விநாயகப் பெருமானும், முருகப்பெருமானும் வீற்றிருக்கின்றனர். ஆலயத்தைச் சுற்றி பிரகார வலம் வரும்போது, பரிகார தெய்வங்களான தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, லிங்கோத்பவர், பிரம்மதேவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். புதிதாக குபேர மூலையில் லட்சுமி, கணபதிக்கு தனி சன்னிதி, வாயு மூலையில் வள்ளி– தெய்வானை சமேத சண்முகநாதர் ஆகியோருக்கு சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. கொடிமரமும் இல்லை. ஆலயத்தின் தல விருட்ச மாக விலா மரமும், அரச மரமும் உள்ளன. இவற்றில் தற்போது அரச மரம் மட்டுமே உள்ளது.சித்தர்கள் வழிபாடுஒவ்வொரு பவுர்ணமி அன்றும், கருங்குருவி வடிவிலும், வண்டு வடிவிலும் சித்தர்கள், இத்தல இறைவனை வழிபாடு செய்வதாக நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் காலை 6.10 மணி முதல் 6.25 மணி வரை, சூரியனின் கதிகள் இத்தல இறைவனின் லிங்கத் திருமேனியில் விழுவது காணக்கிடைக்காத அற்புதக் காட்சியாகும். பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சாஸ்திரம், ஜாதகம் பார்ப்பதில் அற்புத அந்தணர்கள் இந்த இடத்தில் வாழ்ந்து வந்ததாகவும், பல்லவர்கள் சாஸ்திரம் பார்க்க வந்தபோது இந்த ஆலயத்தை நிர்மாணித்ததாகவும் செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலயம் இருந்த இடம் முன்பு தர்ப்ப வனமாக இருந்துள்ளது. ஆகவே இந்த ஆலயத்திற்கு வந்து தர்ப்பை ஆசனம் செய்து, அதில் அமர்ந்து,

‘த்ர்யம்பகம் யஜாமஹே
ஸூகந்திம் புஷ்டிவர்தனம்
ஊர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்
முஷிய மாம்ருதாத்’

என்ற சுலோகத்தைச் சொல்லி இறைவனை வழிபட்டால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

இங்குள்ள கல்வெட்டுகள் பலவும் சிதிலமடைந்து விட்ட காரணத்தால், பல குறிப்புகளைக் கண்டறிய முடியவில்லை. ஒரு சில குறிப்புகளே கிடைத்துள்ளது. இறைவனின் பெயர் ‘மிருத்யூஞ்ஜிஸ்வரர்’ என்றும், இறைவியின் திருநாமம் பாலாம்பிகா என்ற பவரோக விநாசினி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் மனக் கஷ்டத்தையும், பணக் கஷ்டத்தையும் போக்கும் தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு நிகரான தலம் இது என்று கூறப்படுகிறது. மேலும் குழந்தைப் பேறு கிடைக்கச் செய்யும் ஆலயமாகவும் இந்தத் தலம் திகழ்கிறது.

இத்தல இறைவன் விஸ்வாமித்திர முனிவரின் கண் நோயைத் தீர்த்தவர் என்று கூறப்படுகிறது. ஒரு முறை விஸ்வாமித்திர முனிவர், சாஸ்திரப்பாக்கத்தின் அருகே உள்ள திருக்கச்சூர் சிவபெருமான் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது ‘ராவணனை அழிப்பதற்காக, ராமபிரான் மனிதனாக அவதரித்துள்ளார். உலக மக்களைக் காக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு எடுத்துள்ள இந்த அவதாரத்தில், ராவணனை எதிர்த்து ஜெயிக்கும் வரை ராமனுக்கு நோய்கள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளும்படி, திருக்கச்சூர் தலத்தில் உள்ள இருள்நீக்கி அம்மனிடம் விஸ்வாமித்திரர் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு இருள்நீக்கி அம்பாள், ‘நோயைத் தடுக்கும் பலை, அதிபலை என்ற மூலிகையின் பெயரைச் சொன்னாலே ராமன் உள்பட பூலோகத்தார் அனைவரும் நோயில் இருந்து தப்பி பயன்பெறுவார்கள்’ என்று அருளினார்.

அந்த தலத்தில் வழிபட்டு திரும்பும் வேளையில்தான் விஸ்வாமித்திரர் கண் நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அருகில் உள்ள சாஸ்திரப்பாக்கம் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வடவைத்தியநாதர் பெருமாளை வழிபட்டு தன்னுடைய கண் நோய் நீங்கும் அற்புதத்தைப் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.

தற்போது ஒரு வேளை மட்டுமே பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

இந்த ஆலயத்திற்குச் செல்ல பஸ்வசதி குறைவாக உள்ளது. சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

No comments:

Post a Comment

Followers

அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்,மேலஉளூர் அஞ்சல்,தஞ்சாவூர் மாவட்டம் – 614 904.

அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில், மேலஉளூர் அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம் – 614 904.                     *மூலவர்: பரிதியப்பர், பாஸ...