Saturday, June 14, 2025

கேரளா திருவஞ்சிக்குளம் அஞ்சைக்களத்தீஸ்வரர்(மகாதேவர்) திருக்கோயில்

கேரள மாநிலத்தில் உள்ள ஒரேயொரு 
தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், சுந்தரமூர்த்தி நாயனார் கடைசி பதிகம் பாடிய தலமாகவும் உள்ள
#திருஅஞ்சைக்களம் என்ற
#திருவஞ்சிக்குளம்
#அஞ்சைக்களத்தீஸ்வரர்
(மகாதேவர்) திருக்கோயில்

திருவஞ்சைக்குளம் மகாதேவசுவாமி கோயில்  என்பது பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேரமான் பெருமான் ஆண்ட ஊரிலுள்ள தலமெனப்படுகிறது.
தென்னிந்தியாவின் மிக பழமையான சிவன் கோயில்களின் ஒன்றாக கருதப்படும் இந்த திருவஞ்சிக்குளம் மஹாதேவா கோயில் கொடுங்கல்லூர் நகரின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது.

மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது. 

மூலவர்:மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்,
அம்மன்/தாயார்:உமையம்மை
தல விருட்சம்:சரக்கொன்றை
தீர்த்தம்:சிவகங்கை
புராண பெயர்:திருவஞ்சிக்குளம்
ஊர்:திருவஞ்சிக்குளம்
மாவட்டம்:திருச்சூர்
மாநிலம்:கேரளா

பாடியவர்கள்:

சுந்தரர்

தேவாரப்பதிகம்:

தலைக்குத்தலை மாலை அணிந்த தென்னே சடைமேற்கங்கை வெள்ளம் தரித்த தென்னே அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்த தென்னே அதன்மேற்கத நாகங்கச்சு ஆர்த்த தென்னே மலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு அலைக்கும்கடல் அங்கரை மேல் மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற மலைநாட்டுத்தலம்.

பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம்.
 
இங்குள்ள நடராசர், சேரமான் பெருமான் பூசித்தது.
 
வீதியின் நடுவில் உள்ள பெரிய மேடை "யானை வந்த மேடை" என்று வழங்கப்படுகிறது.
 
கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து இத்தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றது வரலாறு.

தல வரலாறு:

சேரநாட்டை ஆண்டு வந்த பெருமாக் கோதையார் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன் திருவஞ்சிக்குளம் உமாமகேஸ்வரர் மேல் தீராக் காதல் உடையவன். அவன் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும்போதெல்லாம் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி கலீர் கலீரெனக் கேட்கும். சிலம்பொலி நாதம் கேட்டபின்பே மன்னன் அமுதுண்ணுவது வழக்கம்.

ஒருநாள் சேரமான் இறைவனை வழிபடும் போது சிலம்பொலி கேட்க வில்லை. மன்னன் திகைப்படைந்தான் தன் பக்தியில் குறை நேர்ந்துவிட்டதோ! அதனால்தான் சிலம்பொலி கேட்கவில்லையோ எனக் கருதி, தன் உடைவாளால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான். அப்போது சிலம்பொலி அதிரசேரமான் முன்பு ஈசன் தோன்றி, வருந்தாதே மன்னா! என் பக்தன் சுந்தரன் தேனினும் இனிய பாடல்களால் தினமும் என்னை அபிஷேகம் செய்வான். இன்று அதில் நான் மெய்மறந்து விட்டேன். எனவேதான் சிலம்பொலி கேட்க சற்று தாமதமாகிவிட்டது என்றார். ஈசனின் இதயத்தையே உருக்கும் பாடல்களைப் புனையும் இத்தகையதோர் சிறப்புமிக்க சிவனடியாரை அறியாது போனோமே என்றெண்ணிய சேரன், தில்லை சென்று அம்பலவாணரைத் தரிசித்தான். பின் திருவாரூர் சபாபதியைத் தரிசித்துவிட்டு சுந்தரரின் இல்லம் தேடிச் சென்றான். அவருடன் நட்பு கொண்டு அளவளாவி மகிழ்ந்தான். சேரன் தனது பூர்வீகமான திருவஞ்சிக்குளத்துக்கு வருமாறு சுந்தரருக்கு அழைப்பு விடுத்தான். அவரது அழைப்பையேற்று வஞ்சிக்குளம் சென்று, சிறிது காலம் அங்கு கோயில் கொண்டுள்ள ஈசனை ஆராதித்து மகிழ்ந்தார் சுந்தரர்.

பின் தன் நாடு திரும்பிய சுந்தரர் தொண்டை மண்டலம் பாண்டிநாடு என பல சிவத் தலங்களையும் தரிசித்து விட்டு மீண்டும் திருவஞ்சிக்குளம் சென்றார். சேரனின் நட்பு அவரை காந்தமென ஈர்த்தது. தன்னைக் காண வந்த சுந்தரரை மன்னன் மேளதாளங்களுடன் வரவேற்று. யானை மீது அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, அரியணையில் அமர்த்தி பாத பூஜை செய்து கவுரவித்தான். சுந்தரரும் அங்கேயே தங்கி மலைநாட்டுப் பதிகள் பல கண்டு வழிபட்டார். சுந்தரர் கயிலை செல்ல வேண்டிய நேரம் வந்தது. தலைக்குத் தலை மாலை என்ற பதிகம் பாடிக்கொண்டிருந்த அவரை, வெள்ளை யானையை அனுப்பி அழைத்துவரும்படி சிவகணங்களுக்கு உத்தரவிட்டார் ஈசன். அமரர்கள் சூழ யானையின்மீது கயிலாயம் சென்ற சுந்தரரின் நெஞ்சம் நண்பனையே நினைத்தபடி இருந்தது. தன் உள்ளுணர்வால் இதையறிந்த சேரமான், சுந்தரர் விண்ணிலேறி கயிலை செல்வதைக் கண்டான். உடனே இந்த தலத்தில் இருந்து தன் வெண்புரவியில் ஏறியமர்ந்து, அதன் காதில் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஓத, விண்ணில் சென்ற யானையைத் தொடர்ந்து சென்றது குதிரை. இருவரும் கயிலையை அடைந்தனர்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தனது 18வது வயதில் தன் நண்பர் சேரமானுடன் கேரளாவில் உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்குள்ள இறைவனிடம், இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி தலைக்கு தலை மாலை என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். உடனே சேரமான் குதிரையில் சுந்தரரை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன்னே கைலாயம் சென்று விட்டார். சுந்தரர் இறைவனின் பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போதும் இறைவனை நினைத்து பதிகம் பாடினார். தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே நானெனை பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 266 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:

இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள்.

கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை.

கேரள பாணியில் அமைந்த கோயில்.
 

துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன.
 

கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுண்டாம்.

இங்குள்ள நடராசர் பஞ்சலோகச்சிலை; இதன் கீழ் "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்று எழுதப்பட்டுள்ளது
 

கிழக்கு ராஜகோபுர நுழைவாய் பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்கள் செப்புத் திருமேனிகளாக  உள்ளன.
 

சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது.
 

இங்குள்ள மரவேலைப்பாடுகள் காணத்தக்கவை.

கோபுரம் தேவர், தட்சிணாமூர்த்தி, பசுபதி, நட்டக்கால் சிவன், சந்தியாவேள சிவன், பள்ளியற சிவன், உண்ணி தேவர் மற்றும் கொன்னக்கால் சிவன் ஆகிய சிவபெருமானின் பல்வேறு ரூபங்களின் சித்தரிப்புகளை இந்தக்கோயிலில் காணலாம். 2000 வருடங்கள் பழமையான இந்த கோயில் சிவபெருமானின் பல்வேறு அவதார ரூப சித்தரிப்புகளுக்காகவே பிரசித்தி பெற்றுள்ளது.

தலபெருமை:

சமயக்குரவர்களில் சுந்தரர் பாடிய தலம் இது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். ஒரு முறை சேர மன்னன் திருவாரூர்க்கு வர, சுந்தரர் அவரை வரவேற்று உபசரித்தார். சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார்.

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார்.

திருவிழா:

இந்த கோயிலில் நடத்தப்படும் ஆனயோட்டம் எனப்படும் யானைப்பந்தயமும் மிகப்பிரசித்தமான நிகழ்ச்சியாக அறியப்படுகிறது. வருடாந்திர கோயில் திருவிழாவின் அங்கமாக இந்த ஆனயோட்டம் நடத்தப்படுகிறது. 

மாசி மாதம் மகாசிவராத்திரி 8 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசையில் ஆறாட்டு நடக்கிறது.

இத்தகைய சிறப்புகளைக்கொண்ட இந்த திருவஞ்சிக்குளம் மஹாதேவா கோயில் இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம்,கொடுங்கலூர்-680 664. திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம்.

அமைவிடம் மாநிலம் : 

கேரளா சென்னை - கொச்சி இருப்புப்பாதையில் 'இரிஞாலக்குடா' நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ளது. திரிச்சூரிலிருந்து 32 கி. மீ.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருமாகறலீஸ்வரர் திருமாகறல் காஞ்சிபுரம்

மூலவர் : #திருமாகறலீஸ்வரர்  உற்சவர் : #சோமாஸ்கந்தர், நடராஜர்  அம்மன்/தாயார் : #திரிபுவனநாயகி  தல விருட்சம் : எலுமிச்சை  தீர்த்தம் : அக்னி  ப...