Monday, June 23, 2025

சிவபூத கணங்கள் யார்?

_சிவபூத கணங்கள்_
பூத கணங்களை நம் சிவாலயங்களிலும் ,தேர்களிலும் சிலைகளாக பார்த்திருப்போம்....

இவர்கள் யார்? 

இவர்களுடைய பணி என்ன? 

இவர்கள் எங்கே இருப்பார்கள்? 

இவர்கள் என்ன செய்வார்கள்? என்ற கேள்வி எனக்கு தோன்றியது...... 

அதனை சைவ நூல்களின் வழியே காண்போம்.....

கயிலையில் இருக்கும் பதினெண் வகை கணங்களில் ஒன்று தான் இந்த பூதகணங்கள்...

பூத கணங்களில் முப்பத்தி மூன்று வகை உண்டு என பழந்ததிழ் நூல்கள் பதிவு செய்கிறது... இந்த முப்பத்தி மூன்று வகை பூதகணங்களும் நம் ஈசரோடு கயிலையில் வாழும் வரம் பெற்றுள்ளது..

ஈசனார் கூத்தாடும் வேளையில் இசை கருவிகள் வாசிக்கவும், அவரோடு இணைந்து ஓலமிட்டபடி ஆடும் பெரும் பாக்கியத்தையும் இப்பூதங்கள் பெற்றிருக்கின்றன.....

இதனை சுந்தரமூர்த்தி சுவாமிகள்

"தென்னாத் தெனா தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் திசை திசையென"

என்று திருபரங்குன்றம் பதிகத்தில் பாடுவதின் மூலம் அறியலாம்......

இது தவிர இறைவரின் அனுக்க சேவர்களாக இப்பூதங்கள் பெரும் பணி செய்வதை நாயன்மார்கள் புராணத்தின் வழி காண்போம்....

ஒரு அரசன் தான் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்கு பல்வேறு நிலையிலுள்ள அரசவை ஊழியர்களை வைத்திருப்பார். அதுபோல இறைவனின் கட்டளையை ஏற்று அதை நிறைவேற்றுவதற்கும் சில  சக்திகள் உண்டு.

இவ்வாறு ஈசனின் கட்டளையை ஏற்று அவற்றை ஈசனின் அருளுடன் நொடிப் பொழுதில் நிறைவேற்றுபவை பூதகணங்களே. 

கயிலையில் இருக்கும் ஒரு பூதகணத்துக்கே  படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் செய்யும் ஆற்றல் உண்டென படித்துள்ளேன். 

ஒரு பூத கணத்துக்கே இவ்வோள ஆற்றல் உண்டென்றால் இவர்களை அடக்கி ஆளும் முக்கண் முதல்வர்க்கு உரிய ஆற்றலை பற்றி நம்மால் சொல்ல முடியுமா ? சிவசிவ...

ஒரு ஜீவன் கயிலைக்கு செல்லும்போது கூட உடன் வந்து  அழைத்துச் செல்பவை சிவகணங்களே.

அப்பர் பெருமான் சமண சமயத்தை விட்டு நீங்கி திருவதிகை பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சூளை நோய் நீங்கி
தற்போதைய திருபெண்ணாகடம் வந்து பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்னு பதிகம் பாட தூங்கானைமாடம் சுடர்கொழுந்துநாதரின் ஆணையின் படி சிவபூதகணம் ஒன்று கயிலையை விட்டு பூலோகம் இறங்கி வந்து பெண்ணாகடத்தில் அப்பர் சுவாமிக்கு இடபம் சூலம் முத்திரை பதித்ததும் இச் சிவபூதகணமே.

ஈசனின் கட்டளைப்படி சம்பந்தருக்கு திருவாவடுதுறை தலத்தில் உலவாப் பொற்கிழியையும், பட்டீஸ்வரம் எனும் தலத்தில் முத்துச் சிவிகையையும் கொண்டு  வந்து கொடுத்தவை பூத வேதாள கணங்களேயாம்.

 திருமுருகன்பூண்டியில் சிவபெருமானின் கட்டளைப்படி செல்வத்தை வேடர்களாக வந்து சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளிடம் திருவிளையாடல் நடத்தியதும், திருக்கோளிலியில் மலையென நிறைந்த நெல்லினை   ஓர் இரவில் திருவாரூர் சேர்த்ததும் இந்த பூத  வேதாளங்களே ஆகும். 

இதை சிவனார் 

"நம் கணங்கள் இவ்விரவே ஆரூர் சேர்க்கும் கவலையற்க"

என்று சுந்தரரிடம் சொன்ன அழகினை காண்க.

அப்படிப்பட்ட பூத வேதாள கணங்கள் வணங்கும் தலங்கள் மண்ணில் வந்து வழிபட்ட தலங்களும் உண்டு.

அதனில் ஒன்றுதான்  செய்யூர் எனும் முருகன் தலம் ஆகும்.

இதை கந்தர் அனுபூதியில்..

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்பும் அதோ?
கூதாள! கிராதகுலிக்கு இறைவா!
வேதாள கணம் புகழ் வேலவனே’

இப்பாடல் வழியே பூத வேதாளங்ள் வழிபட்டமையை காணலாம்...

பூதகணங்கள் சிவலிங்கம் தாபித்து வழிப்பட்ட ஊர் கன்னியாகுமரி அருகில் உள்ள பூதப்பாண்டி எனும் ஊர் ஆகும்.

பூதங்கள் வழிப்பட்ட காரணத்தால் இறைவர் திருநாமம்  பூதலிங்கசுவாமி என்பதாகும்...

இதுதவிர இறைவரின் ஏவலால் திருவையாறு கோயில் மகா மண்டபத்தை கட்டியதும் சிவகணங்களை எனும் ஐதீகம் உள்ளது.. இதை உணர்த்தும் ஏரளாமான சிற்பங்கள் இருப்பதையும் காணலாம்..

ஆவுடையார் கோயிலையும் இறைவன் ஏவலால் சிவபூத கணங்கள் தான் கட்டியதாக அப்பகுதி மக்கள் தீவிர நம்பிக்கையோடு பேசுகின்றனர்.

இந்த சிவனாரின் அனுக்க சேவர்களான பூதகணங்களை  எங்கே கண்டாளும் ஒரு வணக்கத்தை போட்டு வையுங்க.... 

எதுக்கு வம்பு நம் இறக்கும் தருவாயில் நம்மை கயிலைக்கு அழைத்து செல்ல ஈசனார் இவர்களை தான் அனுப்பி வைப்பார்...... என்பதை மறக்காதீங்க....

நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே.

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி! 
ஆழிமிசைக் கண்மிதப்பில்! அணைந்த பிரான் அடிபோற்றி!! 
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!!! 
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!!!!
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மூன்றடுக்குகோவிலில்மூலிகைலிங்கம்.

மூன்றடுக்குகோவிலில்மூலிகைலிங்கம். பல வகை லிங்கங்களைப் பார்த்திருப்போம்.மூலிகையால் ஆன லிங்கத்தைப் பார்க்க,மூன்றடுக்குள்ள, பிரான்ம...