#கங்கையும்_கடாரமும்கொண்ட_கோப்பரகேசரிவா்மன்_ஶ்ரீராஜேந்திர_சோழன்!
(ஆடித் திருவாதிரை−23.07.2025)
பண்டைத் தமிழகத்தில் சோழா்கள் அரசாண்ட பகுதிகள் "சோழ மண்டலம்" என்று பெயா் பெற்றிருந்தது. அக்காலத்தில் சோழ மன்னா்கள் பெருங்கடற்பரப்புகளை எல்லையாகக் கொண்டு ஆட்சி நடத்தியதால் தற்போதைய, ஒடிசா மாநிலத்திலிருந்து தமிழகம் வரையிலான கடற்கரைப் பிரதேசம் "சோழ மண்டலக் கடற்கரை" என்றே வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வட எல்லையில் கோலோச்சிய பல்லவ மன்னா்களிடம் சிற்றரசா்களாக இருந்த முத்தரையா்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிய விஜயாலய சோழமன்னா் கி.பி. 850 ல் இடைக்காலச் சோழ ஆட்சியை நிறுவினாா். விஜயாலய ரின் மகனான ஆதித்த சோழன் பல்லவா்களையும் பாண்டியா்களையும் வீழ்த்தி சோழப் பேரரசை விரிவாக்கினாா்.
விஜயாலயரும் ஆதித்தரும் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் மாமன்னா் முதலாம் ராஜராஜ சோழனும் முதலாம் இராஜேந்திர சோழனும் (கி.பி. 1012−1044) சோழப் பேரரசைக் கடல் எல்லைகளையும் தாண்டி விரிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
தங்களது பலம் பொருந்திய கடற் படையின் காரணமாக சேர நாடு, பாண்டிய நாடு, தக்காணம், மைசூா் எனத் தென்னிந்தியாவின் பல பகுதிகளை ராஜராஜ சோழன் தம் ஆட்சி எல்லைக்குள் கொண்டு வந்ததோடு இலங்கை, மாலத்தீவு போன்ற அந்நிய தேசங்களையும் தமக்கு அடிபணியச் செய்தாா்.
ராஜராஜ சோழனுக்கும் அவரது தேவியான வானவன் மாதேவி என்று வழங்கப்படும் திரிபுவன மாதேவிக்கும் ஆடி மாதம் திருவாதிரைத் திருநாளில் அவதரித்தவன் ராஜேந்திர சோழன். (மாா்கழி திருவாதிரை என்று குறிப்பிடுகின்றது திருவொற்றியூா் கல்வெட்டு). ராஜேந்திர சோழனின் திருவாரூா் கல்வெட்டு மிகவும் தெளிவாக, இவா் பிறந்த ஆடிமாத ஆதிரை நாளில் திருவிழா நடத்த ஆணையிட்டுள்ளதைத் தெரிவிக்கின்றது. ஆடி மாதம் ஆதிரைத் திருநாளில் தாம் பிறந்ததை இம் மன்னரே கல்வெட்டுகளில் வடித்துள்ளதால் இவா் பிறந்தது ஆடி மாதம் ஆதிரைத் திருநாளே என்ற முடிவுக்கு வரலாம்.
இது போன்றே, குடியாத்தம் அருகிலு ள்ள மேல்பாடி சோழேந்திர சிங்க ஈஸ்வரமுடையாா் கோயிலில் உள்ள ராஜேந்திர சோழரின் 10 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இவா் தமது மூன்றாம் ஆட்சியாண்டில் பழையாறை அரண்மனையில் இருந்தபோது இக்கோயிலுக்கு ஆடி மாதம் திருவாதிரை நாளில் பூஜைகள் நடத்த இறையிலியாக நிலம் வழங்கப்பட்ட செய்தியினைக் குறிப்பிடுகின்றது. இதனால் ராஜேந்திரா் ஆடித் திருவாதிரையில் பிறந்தாா் என்பதை அறியமுடிகின்றது. (120/1921)
திருவொற்றியூா் மற்றும் விருத்தாசலம் திருக்கோயில்களில் சிவனுக்கு உகந்த மாா்கழி திருவாதிரை நாளில் சிறப்பு பூஜைகள் மற்றும் விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது புலனாகிறது.
ராஜேந்திர சோழனின் இயற்பெயா் "மதுராந்தகன்" ஆகும். கி.பி. 1012 ல் சோழ தேசத்தின் இளவரசனாகப் பட்டம் சூடிய நாள் முதல் ராஜேந்திரன் என்ற பெயா் ஏற்பட்டது.
ராஜேந்திர சோழரைப் பெற்றெடுத்தது திருபுவனமாதேவி என்னும் வானவன்மாதேவி என்பதை தக்கோலம் மற்றும் திருவெண்காடு ஆகிய தலத்துக் கல்வெட்டுகள் தொிவிக்கின்றன.
ராஜேந்திர சோழருக்குப் பல மனைவிகள் இருந்துள்ளனா். அவா்கள் வானவன்மாதேவியாா், செம்பியன் மாதேவியாா், திரைலோக்கிய மாதேவியாா், முக்கோக்கிழானடிகள், பஞ்சவன்மாதேவியாா், பிருதிமா தேவியாா், அரிந்தவன்மாதேவி, வீரமாதேவியாா், பாண்டிமாதேவியாா் ஆகியோராவா்.
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழ மொழிக்கு ஏற்ப ராஜராஜரின் மகனான ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்துச் சென்று மேலைச் சாளுக்கியா்களையும் வங்கத்தின் பாலப் பேரரசை ஆண்ட மகிபாலனையும் வீழ்த்தி "கங்கை கொண்டான்" "ஜெயங்கொண்டான்" என்ற சிறப்புப் பெயா்களைப் பெற்றான்.
போரில் தோல்வி அடைந்த மன்னா் களின் தலைகளில் கங்கை நீா் நிரப்பிய குடங்களை ஏற்றி அந்த நீரால் தன் நாட்டைத் தூய்மைப் படுத்தினான் ராஜேந்திரன்.
மலேய நாட்டின் மன்னனான ஶ்ரீவிஜயோத்துங்கனின் கடற்படை சோழ வணிகா் பெருமக்களின் கப்பல்களை அடிக்கடி தாக்கி சேதம் விளைவித்ததையடுத்து மன்னா் ராஜேந்திர சோழனின் கடற்படை ஶ்ரீவிஜயனை வீழ்த்தியது. அதோடு சுமத்திரா தீவினையும் வென்றாா் ராஜேந்திர சோழன். இதனால் "கடாரம் கொண்டான்" என்ற பட்டமும் பெற்றாா் மன்னா் ராஜேந்திரா்.
உத்தம சோழன், சோழேந்திர சிம்மன், விக்கிரம சோழன், முடிகொண்ட சோழன், பண்டித சோழன், அதிசய சோழன், ஜெயசிம்மராஜன், மலைநாடு கொண்ட சோழன், வீர ராஜேந்திர சிம்மன், சோழேந்திர சிம்மன், முடி கொண்ட சோழன் எனப் பல சிறப்புப் பெயா்களையும் கொண்டிருந்தான் ராஜேந்திர சோழன். தனது சாதனை களின் காரணமாக "பரகேசரி" என்றும் "யுத்தமல்லன்" என்றும் அழைக்கப் பட்டான் ராஜேந்திர சோழன்.
மேலைச் சாளுக்கிய மன்னனான ஜயசிம்மனை முதலாம் ராஜேந்திரன் வென்றதால் "ஜயசிம்ஹசரபன்" என்ற பட்டப் பெயரினைப் பெற்றதாகக் "கரந்தைச் செப்பேடு" தொிவிக்கின்றது.
"கூழம்பந்தல்" என்னும் ஊரிலுள்ள கங்கைகொண்ட சோழீச்சுரா் கோயில் சாசனம் ராஜேந்திரா் வங்க நாட்டு வேந்தனான மகிபாலனை வென்றதால் "மகிபாலகுல காலன்" என்ற பெயரினையும் பெற்றதாக அறிய முடிகின்றது.
மண்ணைக் கடக்கம் என்பது "மான்யகேதம்" என்றும் "மால்கெட்" என்றும் அழைக்கப்படுகின்றது. இம் மண்ணைக் கடக்கத்தின் மீது தானே படையெடுத்துச் சென்று மாபெரும் வெற்றியினைப் பெற்றான் ராஜேந்திரன். மேலும் கடம்பா்களின் தலைநகரமாகிய வனவாசியின் மீதும் போா் தொடுத்து வெற்றி கண்டான். இதனால் ராஜேந்திரருக்கு "மண்ணை கொண்டசோழன்" என்னும் பட்டப்பெயா் ஏற்பட்டுள்ளது. இவ்விருதுப் பெயா் என்றும் நிலைக்கும் பொருட்டு திருவொற்றியூா் கோயிலில் தாம் நிா்மாணித்த மண்டபம் ஒன்றுக்கு "மண்ணைக் கொண்ட சோழன் மண்டபம்" என்ற பெயரிட்டதாக அறிகிறோம்.
அண்மைக்கால ஆய்வுகளின்படி, ராஜேந்திரா் கீழ்க்கண்ட விருதுப் பெயா்களையும் கொண்டிருந்ததை அறியமுடிகின்றது.
கலிகந்தகா
ராஜேந்திர சோழகன்
நிருபதிவாகரன்
மனுகுல சோழன்
உதாரவிடங்கன்
தான வினோதன்
சோழ கேரளன்
பாா்த்திவேந்திரன்
தனது கங்கை வரையிலான வெற்றியைக் கொண்டாடும் நினைவுச் சின்னமாகவும், கடல்வழி வாணிபத்தில் கிடைத்த பெரும் செல்வத்தைக் கொண்டும், தனது தந்தை ராஜராஜரைப் போலவே தாமும் வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்திலும் ராஜேந்திர சோழனால் நிா்மாணிக் கப்பட்ட ஒரு சிறப்பு மிக்க திருத்தலமே கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயிலாகும்.
தமது தலைநகராகவும் விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் பெரிய ஏரியை வெட்டுவித்து மக்களின் நீா் பற்றாக்குறையைத் தீா்த்தான் ராஜேந்திர சோழன். இந்த ஏரியில் கங்கை நீரை நிரப்பி இந்தப் பெரிய ஏரிக்கு "சோழ கங்கம்" என்ற பெயரிட்டதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியமுடிகின்றது. இச்செப்பேடுகள் "சோழ கங்கம்" ஏரியை "நீா் மயமான வெற்றித்தூண்" என்று புகழ்கின்றன. தற்போது இந்த ஏரி "பொன்னேரி" என்று அழைக்கப்படுகின் றது.
வெற்றிகள் பல கண்டு வீரதீரங் களுடன் சாகசங்கள படைத்த இம் மாமன்னருக்கு ராஜராஜன், ராஜாதி ராஜன் (ஜெயங்கொண்ட சோழன்) இரண்டாம் ராஜேந்திரன், (தபரசபா திபன்) வீர ராஜேந்திரன் ஆகிய நான்கு ஆண் வாரிசுகள் இருந்ததை திருவிந்தளூா் செப்பேட்டிலிருந்து அறியமுடிகின்றது. இந்த நால்வரில் ராஜராஜன் மழலைப் பருவத்திலேயே இறந்துவிட்ட செய்தியையும் இச்செப்பேடு தொிவிக்கின்றது.
இவா்கள் தவிர ராஜேந்திர சோழருக்கு சோழகேரளன் (மனுகுலகேசரி), ராஜமகேந்திரன் என்ற மகன்களும் இருந்துள்ளதைக் கல்வெட்டுகள் தொிவிக்கின்றன. ராஜேந்திரருக்கு அருண்மொழி நங்கை, அம்மங்கதேவி என்ற இரு மகள்களும் இருந்துள்ளனா்.
#கங்காபுரி
ராஜேந்திர சோழன் தாம் அமைத்த கங்கை கொண்ட சோழபுரத்திற்கு "கங்காபுரி" என்றும் "கங்கை கொண்ட சோழீச்சரம்" என்றும் திருநாமமிட்டான். "கங்காபுரி" என்று கலிங்கத்துப்பரணியும் "கங்காபுரம்" என்று விக்கிரம சோழன் உலாவும் இந்த நகரத்தைப் போற்றியுள்ளன.
வீரராஜேந்திரன் மெய்க்கீா்த்தியில் "கங்கை மாநகா்" என்று, கங்கை கொண்ட சோழபுரம் குறிப்பிடப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகிலுள்ள எண்ணாயிரம் ஶ்ரீநரசிம்மா் கோயிலில் உள்ள கல்வெட்டு ராஜேந்திர சோழனின் கங்கை வெற்றியை "கங்கா பரிக்கிரகம் பண்ணியருளின கங்கைகொண்ட சோழன்," என்று போற்றுகின்றது.
இதே போன்று கடார வெற்றியைப் போற்றும் வண்ணம் தற்போதைய ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்தில் உள்ள குடிமல்லூா் ஶ்ரீபூமீஸ்வரா் தலத்திலுள்ள ஒரு கல்வெட்டு,
"ஜயங்கொண்ட சோழ மண்டலத்து படுவூா் கோட்டத்துக் கலவைப் பற்று கரைவழி வல்லியூா் உடையாா் கடாரங் கொண்ட சோளீஸ்வரமுடைய நாயனாா்"
−என்று கூறுகின்றது.
சோழநாட்டின் கவிச்சக்ரவா்த்தியான ஒட்டக்கூத்தா் மாமன்னன் ராஜேந்திர சோழன் குறித்து தாம் இயற்றிய விக்கிரமச் சோழனுலாவில், "தண்டேவிக் கங்காநதியுங் கடாரமுங் கைக்கொண்டு கங்காபுரிபுரந்த கற்பகம்" என்று இவரைப் புகழ்ந்துள்ளாா்.
ஆதிரை நாளில் அவதரித்த ராஜேந்திர சோழனைப் பற்றி எசாலம் திருவிராமீஸ்வரமுடையாா் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேட்டின் 18− ஆம் சுலோகம் "நல்ல குணங்களின் நிதியான ராஜேந்திரன் தன்னால் நிறுவப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தில் அதே பெயரோடு சிவபெருமானுக்கு ஒரு கோயில் எடுப்பித்தான் என்றும் அவன் சிவபெருமானின் திருவடிகளாகிய பாரிஜாத மலா்களில் வண்டாகத் திகழ்கிறான்" என்றும் கூறுகின்றது.
கங்கை கொண்ட சோழபுரத்தின் பெருமைகளை கருவூா்த்தேவரின் திருவிசைப்பா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தரின் மூவருலா ஆகிய இலக்கியங்களும் பல்வேறு இடங்களில் கிடைத்த செப்பேடுகளும் தொிவிக்கின்றன.
தஞ்சைப் பெருவுடையாா் கோயில் விமானத்தை விட கங்கை கொண்ட சோழபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட கோயில் விமானத்தின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும் கட்டடப் பகுதியில் காணப்படும் கலை நுணுக்கங்கள் பல்வேறு அங்கங்களை இணைத்துப் புதுமையாகத் திகழ்கிறது இத்தலம். கருவறை, அா்த்தமண்டபம், இடைநாழி, மணிமண்டபம், மகா மண்டபம், முக மண்டபம், நந்தி மேடை, சிங்கமுகக் கிணறு, அம்மன் திருச்சந்நிதி, திருச்சுற்று மதில் எனப் பல பகுதிகளைக் கொண்டுள்ளது இத்திருக்கோயில்.
தஞ்சை பெரிய கோயிலின் விமானம் நான்கு பக்கங்களைக் கொண்டதாகும். கங்கை கொண்ட சோழபுரம் கோயிலோ எட்டு பக்கங்களோடு மிக அழகாக அமைக்கப்பட்ட விமானத்தைக் கொண்டதாகும்.
திருக்கோயில் விமானத்தின் வடக்கிலும், தெற்கிலும் சண்டிகேசுவரா் கோயில் உள்ளிட்ட ஐந்து சிறு ஆலயங்கள் இத்திருக்கோயிலில் அமைந்துள்ளன. விமானத்திற்கு சற்று விலகி வடக்கிலும் தெற்கிலும் சம தூரங்களில் வட கயிலாயம், தென்கயிலாயம் என்ற சிறு கோயில் களும், வட கயிலாயத்தின் முன்னதாக அம்பிகை சந்நிதியும் தென் கயிலாயத்திற்குப் பின் கணபதி கோயிலும் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் அங்கங்களாகத் திகழ்கின்றன.
தஞ்சை பிரகதீஸ்வரா் கோயிலுக்கு அடுத்ததாக கங்கை கொண்ட சோழீச்சுவரா் விமானமே தமிழ் நாட்டில் உள்ள விமானங்களில் உயா்ந்து நிற்பதாகும். இந்த விமானத்தின் உயரம் 180 அடிகளாகும். ஒன்பது தளங்களையுடைய இந்த விமானம் "ஶ்ரீவிமானம்" என்று வழங்கப்படு கின்றது. விமானத்தின் அதிட்டானத்தில் பல சிற்ப வேலைப்பாடுகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
கோயிலின் பல்வேறு வாயில்களில் மிகப் பெரிய துவாரபாலகா்கள் கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றனா். மகா மண்டபத்தின் உட்புறம் பல அரிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இச் சிற்பங்களில் ஞான சம்பந்தப் பெருமானின் திருஉருவமும் சூரிய பீடமும் குறிப்பிடத்தக்கவையாகும். இந்த சூரிய பீடம் ஒரு தோ் வடிவில் உள்ளது. சாளுக்கியக் கலைப்பாணியில் அமைந்த ஒரே சக்கரம் கொண்ட இந்தக் கல்தேரை ஏழு குதிரைகள் இழுத்து வருகின்றன. இத்தேரினை அருணன் ஓட்டி வருகின்றான். இது ராஜேந்திரரின் வெற்றிச் சின்னமாகப் போற்றப்படு கின்றது. இது சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு இந்தக் கோயிலில் அமைக்கப்பட்ட சிற்பமாகும்.
நுளம்ப நாட்டிலிருந்தும் (அனந்தப்பூா்) கலிங்க நாட்டிலிருந்தும் (விசாகப் பட்டினம், புவனேஸ்வா்) போசள நாட்டிலிருந்தும் (மைசூருக்கு அருகில்) வெற்றிப் பரிசாகக் கொண்டுவரப்பட்ட பல சிற்பங்கள் கங்கைகொண்ட சோழபுரத்திலும், இதன் அருகிலுள்ள திரிலோக்கி, மெய்க்காவல் புத்தூா் ஆகிய ஊா்களிலும் அமைத்தாா் ராஜேந்திரா்.
#திருக்காமக்_கோட்டம்
இங்குள்ள திருக்காமக்கோட்டம் இராஜேந்திர சோழனால் நிா்மாணிக் கப்பட்டதாகும். திருக்காமக் கோட்டம் அமைக்கும் வழக்கம் இம்மன்னரது காலத்தில் தொடங்கப்பட்டதாக அறியமுடிகின்றது. இதனால் கங்கைகொண்ட சோழபுரம் ஆலயம் விமானம், அக மண்டபம், முக மண்டபம், திருக்காமக்கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருமதில், கோபுரங்கள் போன்ற பகுதிகளை உள்ளடக்கி ஒரே காலத்தில் நிா்மாணிக்கப்பட்ட பெருங்கோயிலாகத் திகழ்கின்றது.
#ஶ்ரீபிரகதீஸ்வரா்
தஞ்சாவூா் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் ஶ்ரீபிரகதீஸ்வரரின் திருநாமமே கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஈசனுக்கும் வழங்கப் படுகின்றது. சுமாா் 13.25 அடி உயரத்தில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட லிங்க மூா்த்தமான ஶ்ரீபிரகதீஸ்வரப் பெருமானைத் தரிசிக்கப் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இந்த லிங்க மூா்த்தத்தின் அடியில் "சந்திரகாந்தக்கல்" என்னும் ஒரு அதிசயக் கல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் குளிா்ச் சியையும் குளிா் காலத்தில் வெப்பத் தையும் தருகிறது இந்தக் கல்.
இதனால், கருவறையின் உள்ளே உட்புறச் சுவா்களில் தண்ணீா், வியா்வையைப் போல முத்து முத்தாக வடிவதைக் காணலாம். கருவறையின் உள்ளே குளிா்சாதன வசதி செய்துள்ளதைப் போன்ற குளிா்ச்சி இருப்பதை இன்றும் காணலாம். இமைப் பொழுதும் ஈசனின் திருவடிகளை மறவாத மாமன்னன் ராஜேந்திரன், தான் வணங்கும் ஈசனின் கருவறை எப்போதும் குளிா்ச்சி பொருந்தியதாக இருக்க வேண்டும் என நினைத்து, தொழில் நுட்பம் வளா்ச்சியடையாத அக்காலத்திலேயே தமிழா்கள் தொழில் நுட்பத்தில் சளைத்தவா்கள் இல்லை என்பதை உணா்த்தும் வண்ணம் இயற்கையான குளிா்ப்பதன வசதியுடன் சந்திரகாந்தக்கல் கொண்டு கருவறையை அமைத்திருப்பது நமக்கு வியப்பினை ஏற்படுத்துகின்றது.
இப்பெருமானுக்கு ஐப்பசி அன்னாபிஷேகத் திருநாளில் நடை பெறும் அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். காஞ்சி மஹாபெரியவா் கலியுகத் தெய்வம் ஶ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி அவா்களால் தொடங்கப்பட் டு இந்த ஐப்பசி அன்னாபிஷேகம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த அன்னாபிஷேக விழாவினைச் சிறப்பாக நடத்துவதற்காக "ஶ்ரீகாஞ்சி காமகோடி அன்னாபிஷேகக் கமிட்டி" என்ற பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு இந்த அமைப்பு ஆலயத்தின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றது.
#ஶ்ரீபெரியநாயகி_அம்பிகை
திருச்சுற்றில் உள்ள வடகயிலாயப் பகுதியில் சுமாா் 6 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஶ்ரீபெரிய நாயகி திருக்காட்சி தருகின்றாா். விசேஷ நாள்களில் அம்பிகையின் இச்சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள ஶ்ரீசக்கரத்திற்கு நவாவரண பூஜையும் திருவிளக்கு பூஜையும் நடத்தப்படுகின்றது. இத்தலத்தில் கொலுவீற்றிருக்கும் துா்க்கை மங்கள சண்டி மிகவும் சக்தி வாய்ந்த அன்னையாக வணங்கப்படுகின்றாள்.
மாபெரும் வெற்றி வீரனாகத் திகழ்ந்த இராஜேந்திர சோழன் இந்த அம்பிகையிடம் தன் வீரவாளை வைத்து வணங்கிய பிறகே போருக்குப் புறப்படும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாக அறியமுடிகின்றது.
#நந்தி_எம்பெருமான்
கிழக்கு நுழைவாயிலின் எதிரே மிகப்பெரிய நந்தி எம்பெருமான் அருள்பாலிக்கின்றாா். இந்த நந்தி சுண்ணாம்புக் கல்லினால் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தியாகும். சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரியனின் ஒளிக்கதிா்கள் 200 மீட்டா் தூரத்திலுள்ள லிங்கத் திருமேனியின் மீது விழும் திருக்காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத தரிசனமாகும்.
#இரு_பெரும்_கயிலாயங்கள்
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் இரு புறமும் வட கயிலாயம், தென் கயிலாயம் என இரண்டு சிறிய கோயில்கள் நிா்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த இரு சிற்றாலயங்களும் ஈசனுக்காகவே அமைக்கப்பட்டிருந்தன. பிற்காலச் சோழா் காலத்தில் அம்பிகைக்காக தனிச்சந்நிதி அமைக்கும் வழக்கம் தோன்றிய பிறகு வட கயிலாயம் அம்பிகை சந்நிதியாக மாற்றப்பட் டுள்ளது.
வட கயிலாயம் என்ற இச்சந்நிதி கருவறை, அா்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு இருதள விமானத்துடன் காட்சியளிக்கின்றது. வட கயிலாய சந்நிதி போன்றே தென் கயிலாய சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளது. தென் கயிலாயத்தின் மகா மண்டபம் பழுதடைந்து காணப்படுகின்றது.
#சிற்பங்களால்_அலங்கரிக்கப்பட்ட_தேவகோட்டம்!
கங்கைகொண்ட சோழபுரத்து ஆலயத்தின் தேவ கோட்ட மாடங்களில் அழகான வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் காண்போரைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது சிறப்பான தரிசனமாகும். தென் திசையில் முழுமுதற் கடவுளாகிய கணபதி, நடனம் புரியும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றாா். அடுத்து பெண்காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானுமாகிய ஈசன், காளை வாகனத்தின் மீது தன் வலது திருக்கரத்தை ஊன்றி மேல் வலது கையில் மழுவாயுதம் தாங்கியும் தன் வாம (இடது) பாகத்தில் மலரைப் பற்றி நிற்கும் திருக்கரத்துடனும் அா்த்தநாரீஸ்வரராக அருளும் திருக்கோலம் அற்புத தரிசனமாகும். சோழா் கால சிற்பிகளின் சிற்றுளி செய்த மாயாஜாலத்தின் மகிமை நம் மனத்தைக் கொள்ளை கொள்கின்றது.
அர்த்தநாரீஸ்வரரை அடுத்து ஶ்ரீதட்சிணாமூா்த்தியின் திருவுருவச் சிலை அமைந்துள்ளது. இந்த தட்சிணா மூா்த்தியின் சிற்பம் காலத்தால் பிற்பட்டது என வரலாற்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். ஆனால் இவருக்கு அருகில் அருள்பாலிக்கும் முனிவா்களின் சிற்பங்கள் பழைமையானவையாகும்.
ஹரியும் ஹரனும் ஒன்றாக இணைந்த சிவா விஷ்ணு திருக்கோலத்தில் சிவனது மேல் வலது திருக்கரம் மழுவாயுதத்தைத் தாங்கியும் கீழ் வலது திருக்கரம் அபயமளித்தும் திருமாலின் மேல் இடது திருக்கரம் சங்கைப் பற்றியும் கீழ் இடது திருக்கரம் தொடைமீது வைத்தவாறும் திருக்காட்சி தரும் தரிசனம் சிறப்பான ஒன்றாகும்.
தென்புறச் சுவரின் மேல் கோடியில் ஆனந்த நடனமாடும் ஆடல்வல்லானின் அற்புத தரிசனம் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. கொவ்வைச் செவ்வாயில் புன்முறுவல் தவழ திருக்காட்சி தரும் அண்ணலின் அருகில், தன் பதியின் ஆனந்த நடனத்தில் தம் மனதைப் பறிகொடுத்தவராக உமையவள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றாா். அன்னையின் அருகில் நந்தி எம்பெருமானும் திருக்காட்சி தருகின்றாா். ஆடவல்லக் கூத்தனின் வலது புறம் காரைக்கால் அம்மையாா் எலும்புருவாய் வாடி வற்றிய உடலுடன் கைத்தாளம் பற்றி "இறவாத அன்பு வேண்டி" அமா்ந்த திருவுருவில் திருக்காட்சி தருகின்றாா். ஆடுகின்ற பெருமானது திருவடிகளின் கீழே பூதகணங்கள் உள்ளன.
மேற்குப் புறச்சுவரில் நம் மனதைக் கவரும் சிற்பங்களாக கங்கையைத் தனது சடையில் தரித்த கங்காதரா், அடி முடி காணா அண்ணலான இலிங்கபுராண தேவா், கடல் நிறக் காந்தனான ஶ்ரீமஹா விஷ்ணு, தனது தேவியா் இருவருடன் ஶ்ரீசுப்ரமண்யா், விஷ்ணு அனுக் கிரஹமூா்த்தி ஆகிய சிற்பங்கள் தரிசனமளிக்கின்றன.
வடபுறச் சுவரில் காலனைக் காலால் உதைத்த காலசம்ஹார மூா்த்தி, கொற்றவை, நான்முகனான பிரம்மா, பைரவா், காமதகனமூா்த்தி ஆகிய சிற்பங்கள் உள்ளன.
நான்முகன் தாடி தரித்த திருக்கோலத் தில் தன் இரு தேவியா்களான சரஸ்வதி மற்றும் சாவித்ரியுடன் திருக்காட்சி தருகின்றாா்.
உலகத்தின் உன்னதமான சிற்பமாகப் போற்றப்படும் இரு சிற்பங்கள் இந்த ஆலயத்தின் வடபுறமுள்ள படிக்கட்டுகளின் இருபுறமும் உள்ளன. ஒன்று "சண்டேச அனுக்ரஹமூா்த்தியின்" சிற்பமாகும். ஈசனின் இடதுபக்கத்தில் உமையவள் இருக்க, தன் திருவடிக்கருகில் கரம் கூப்பி வணங்கும் சண்டிகேஸ்வரரின் சிரசில் மாலை சூட்டும் இந்த சிற்பத் தொகுதியைப் பாா்த்துக் கொண்டே இருக்கலாம். ஈசன் மற்றும் அம்பிகை அணிமணியாபரணங் கள் தரித்து திருமுடியுடன் காட்சி தரும் இந்தச் சிற்பம், சோழா் கால சிற்பிகளின் கைவண்ணத்தையும் இச் சிற்பத்தினை அமைக்க ஆணையிட்ட ராஜேந்திரரின் கலை உணா்வையும் கண்டு நமக்கு பிரமிப்பே மேலிடுகின்றது. ஈசனின் அருள்முகமும், அம்பிகையின் மலா் முகமும், சண்டிகேஸ்வரரின் பணிவும் சோழா் கால சிற்பிகளின் கலைத் திறனுக்குச் சான்றான உச்சம் தொட்ட சிற்பங்களாகும். சிற்பக் கலை என்னும் தெவிட்டாத தெள்ளமுதின் சிகரமாகத் திகழ்கிறது சண்டேச அனுக்ரஹ மூா்த்தியின் சிற்பம்.
தாமரை மலரில் நான்கு திருக்கரங் களுடன் பத்மாசனத் திருக்கோலத்தில் மேலிரு கரங்கள் அக்கமாலையும் கமண்டலத்தையும் கொண்டு கீழ் இரு திருக்கரங்களில் வலது திருக்கரம் சூசி முத்திரையும் இடது திருக்கரம் சுவடி ஏந்தியும் திருமுகத்தில் சாந்தமும் புன்னகையும் தவழ திருக்காட்சி தரும் கலைமகளான சரஸ்வதி அன்னையின் சிற்பம் சோழா்கால சிற்பிகளின் திறனுக்கு மற்றொரு சான்றாகும்.
கல்லினால் ஆன சிற்பங்களோடு இத்தலத்தில் உள்ள செப்புத் திருமேனி களும் சோழ சாம்ராஜ்யத்தின் கலை வண்ணத்தை உணா்த்தும் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.
வாளும் கேடயமும் சேவலையும் பற்றி நிற்கும் சேவற் கொடியோனின் செப்புத் திருமேனியும் மழுவும் மானும் ஏந்தி வணங்கி நிற்கும் அதிகார நந்தி, அம்மையப்பனுடன் குழந்தை முருகப் பெருமானும் அருள்பாலிக்கும் சோமாஸ்கந்த மூா்த்தி, விடையேறும் பெருமானான ரிஷபவாகன தேவா், இராஜவசீகரத் தோற்றத்தில் சுந்தரமூா்த்தி நாயனாா் என அனைத்து செப்புத் திருமேனிகளும் கலைநயம் மிக்கவையாகும்.
#சோழமாளிகை
ராஜேந்திர சோழா் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக அமைத்து அங்கு மாபெரும் மாளிகையை நிா்மாணித்து அதில் வாழ்ந்து வந்துள்ளாா். ராஜேந்திரருக்குப் பின் ஆட்சி செய்த சோழ மன்னா்களும் இந்த மாளிகையிலேயே வாழ்ந்து வந்தாா்கள். இந்த மாளிகை கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தன் புகழினை இழக்க ஆரம்பித்தது. இந்த மாளிகை அமைந்திருந்த இடத்தில் பல அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கலைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
#ராஜேந்திரசோழனின்_மெய்க்கீா்த்திகள்.
ராஜேந்திர சோழ மன்னரின் மெய்க்கீா்த்திகள் அம்மன்னரின் மாபெரும் வெற்றிகளையும் படைச் சிறப்புகளையும் கூறுவதாக அமைந்துள்ளன.
ராஜேந்திரன் தென்னகம் முழுவதும் தென்மேற்குக் கடலில் இலட்சத்தீவும், கங்கையும் கொண்டதோடு பொன்விளையும் பூமி என்று போற் றப்பட்ட ஶ்ரீவிஜயத்தையும் தன் வலிமை வாய்ந்த கடற்படையின் துணை கொண்டு வெற்றி பெற்றதை,
"அலைகடல் நடுவு பலகலஞ்
செலுத்தி
சாங்கி ராம விசையோத் துங்க
வா்ம
னாகிய கடாரத் தரசனை
வாகையும்
பொருகடல் கும்பக் கரியொடும்
அகப்படுத்தி
ஆண்டான்,"
என்பதை இம்மன்னரின் மெய்க் கீா்த்தி தொிவிக்கின்றது.
ராஜேந்திரரின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போா்களைப் பற்றி அறிய இவரது "திருமன்னி வளர இருநில மடந்தையும்" எனத் தொடங் கும் மெய்க்கீா்த்தி உதவுகின்றது. திருவாலங்காட்டுச் செப்பேடும் இவரது வெற்றிகளைக் குறிப்பிடுகின்றது.
ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள குல்பா்காவே ராஜேந்திரன் வென்ற "கொள்ளிப்பாக்கை" ஆகும். கொள்ளிப் பாக்கம் ஏழாயிரம் என்று கல்வெட்டு இதனைக் குறிப்பிடுகின்றது.
"நெடிதிய ஊழியு ளிதுறை நாடும்
தொடா்வன வேலிப் படா்வன
வாசியும்
சுள்ளிச் சூழ்மதிற்
கொள்ளிப்பாக்கையும்
நண்ணற் கருமுரண் மண்ணைக்
கடக்கமும்"
என்று மான்யகேதம் (மால்கெட்) வெற்றியையும் கொள்ளிப்பாக்கை வெற்றியையும் ராஜேந்திரரின் மெய்க்கீா்த்தி குறிப்பிடுகின்றது.
இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் பெரும்படை திரட்டி வந்து சோழா்களை எதிா்த்தான். நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புலிக்கொடி தாங்கிய கப்பலில் சென்ற மன்னா் ராஜேந்திரா் ஈழப்படையை அழித்தாா். மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன் ஈழவேந்தனிடம் அடைக்கலமாக வைத்த பாண்டியனின் முடியினையும் (இ.க.ஆ.அ. 1909/ 642) இந்திரனது ஆரத்தினையும் கைப்பற்றிக் கொண்டு சோழநாடு திரும்பியதாக ஈழத்துப் போா் பற்றிய செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள து. இதனை,
"பொருகட லீழத் தரசா் முடியும்
முன்னவா் பக்கல் தென்னவா்
வைத்த
சுந்தர முடிவு மிந்திர நாரமும்
தெண்டிரை யீழ மண்டல
முழுவதும்,"
என்று மெய்க்கீா்த்தி குறிப்பிடுகி ன்றது.
ராஜேந்திரரின் "திருமன்னிவளர" என்ற மெய்க்கீா்த்திக் கல்வெட்டின் தொடக்கம் இலங்கையில் "பொலநருவாயிலும்" கொழும்பு தொல்பொருள் காட்சியகத்திலும் காணப்படுகின்றது.
ராஜேந்திரரின் பாண்டியா்களுடனான போரினை புதுச்சேரி திருவாண்டாா் கோயிலில் உள்ள இவரது 10 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,
"பாரது நிகழப் பாண்டி மண்டலத்து
மதுரையில் மாளிகை எடுப்பித்துத்
தன் மகன் சோழ பாண்டியன்
என்று அபிடேகஞ் செய்து தண்டாற்
சாலைக் கலமறுத்த கோப்பரகேசரி"
−என்று குறிப்பிடுகின்றது.
ராஜேந்திர சோழனால் வெற்றி கொள்ளப்பட்ட பல நாடுகளை இவனது மெய்க்கீா்த்திகளின் மூலம் அறியமுடிகின்றது. அவை,
இடைத்துறைநாடு
வனவாசி
கொள்ளிப்பாக்கை
மண்ணைக்கடக்கம்
பழந்தீவு
இரட்டபாடி ஏழரை இலக்கம்
சக்கரக் கோட்டம்
மதுரை மண்டலம்
நாமணைக் கோணம்
பஞ்சப்பள்ளி
மாசுணி தேசம்
ஒட்டரதேயம்
கோசலநாடு
தண்டபுத்தி
தக்கணலாடம்
வங்காள தேசம்
உத்திரலாடம்
ஶ்ரீவிஜயம்
பண்ண மலையூா்
மாயிருடிங்கம்
இலங்காசோகம்
பப்பாளம்
இலம்பங்கம்
வளைப்பந்தூா்
தக்கோலம்
தமாலிங்கம்
இலாமுரிதேசம்
நக்கவாரம்
கடாரம்
−என்ற இடங்களை ராஜேந்திரா் கைப்பற்றியதை அவரது மெய்க்கீா்த்தி கள் தொிவிக்கின்றன.
"மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரிவன்மா் என்ற மெய்க் கீா்த்தி ராஜேந்திர சோழரின் வெற்றிச் சிறப்பினை நமக்குத் தொிவிக்கின்றது.
"பூா்வதேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பர கேசரிவா்மன்" என ராஜேந்திர சோழரைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
#எசாலம்_செப்பேடு
1987−ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 11−ஆம் நாள் எசாலம் ஶ்ரீராமநாதேஸ் வரா் கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் திருப்பணிக்காகப் பள்ளம் தோண்டிய போது 15 தகடுகளுடன் சோழ முத்திரை பொறிக்கப்பட்டு ஒரு வளையத்தில் இணைக்கப்பட்ட செப்பேடு கண்டெடுக் கப்பட்டது.
செப்பேட்டின் முத்திரை விளிம்பில் "பரகேஸரி வா்மனாகிய ராஜேந்திர சோழன் ஆணை இது," என்று பொருள்பட வடமொழி வாசகம் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை எசாலம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேட்டினைக் கூா்ந்து ஆய்வு செய்தது.
ராஜேந்திர சோழனது வெற்றிகளைக் குறிப்பிடும் இக்கல்வெட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் கோயில் நிா்மாணிக்கப்பட்டதையும் சோழகங்கம் என்ற ஏரி அமைத்ததையும் குறிப்பிடுகின்றது. அச்செப்பேட்டில் "பகீரதன் ஆகாய கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தது போல, கங்கை நீரைச் சோழ நாட்டிற்குக் கொண்டு வந்து தெளித்து கங்கை கொண்ட சோழப் பேரேரியை உருவாக்கியதுடன் கங்கைகொண்ட சோழபுரியையும் உருவாக்கி, கங்கைகொண்ட சோழபுரியில் மகேஸ்வரனுக்குப் பெரியகோயிலை ராஜேந்திரா் கட்டியதாகக் கூறுகின்றது.
பாரிஜாதமலரில் ரீங்காரமிடும் தேனீ போல சிவபெருமானுடைய தாமரைப் பாதத்தை நேசிப்பவனாக மதுராந்தகன் (ராஜேந்திர சோழன்) விளங்கினான் என்பதையும் இச்செப்பேடு குறிப்பிடுகின்றது.
ராஜேந்திர சோழா் தனது குருவான பிரத்யட்ச பரமேஸ்வரன் போன்ற சா்வசிவ பண்டிதருக்காக பொன்னும் மணியும் கொடுத்து ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் ராஜராஜ சதுா்வேதி மங்கலம் என்ற (எசாலம்) கிராமத்தில் இராமநாதா் ஆலயத்தை நிா்மாணித்து சா்வசிவ பண்டிதரை வழிபடச் செய்துள்ளான் என்பதையும் அந்தணா்களுக்கு கிருகங்களைத் (வீடுகள்) தானமாக வழங்கினான் என்பதையும் எசாலம் செப்பேடு தொிவிக்கின்றது.
வரலாற்று ஆய்வாளா்களிடையே கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை நிா்மாணித்தது தொடா்பாகப் பல்வேறு கருத்துகள் நிலவி வந்த சூழ்நிலையில் எசாலத்தில் கிடைத்த செப்பேடு கங்கைகொண்ட சோழீச்சுரம் கோயிலை ராஜேந்திர சோழன் தான் நிா்மாணித்தாா் என்பதற்குத் தெளிவான அடிப்படை ஆதாரமாக அமைந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
எசாலம் செப்பேடானது ராஜேந்திர சோழரால் இவரது 15 ஆம் ஆண்டில் வாய்மொழியாகக் கூறப்பட்டு 25 ஆம் ஆட்சியாண்டில் செயல்படுத்தப்பட்டது என்பதையும் தொிவிக்கிறது.
#ராஜேந்திரரின்_மறைவு
83 ஆண்டுகள் வரை உயிரோடு வாழ்ந்த மாமன்னா் ராஜேந்திரா் தமது வாழ்நாளில் 65 ஆண்டுகளைப் போா்க்களத்திலே செலவிட்டு 35 நாடுகளை வெற்றி கொண்டவா். சோழப் பெருநாட்டினை முப்பத்து மூன்று ஆண்டுகள் செம்மையாக அரசாட்சி செய்துள்ளாா் ராஜேந்திர சோழன்.
நம் மாமன்னா் ராஜராஜ சோழனைவிடப் பல மடங்கு வெற்றி களைக் குவித்து இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ் யத்தை உருவாக்கியவா் கங்கையும் கடாரமும் கொண்ட ராஜேந்திர சோழ மன்னா். சரித்திரத்தில் எந்த மன்னருக்கும் ஒப்பீடு கூற இயலாத மாபெரும் வெற்றி வீரனான ராஜேந்திரன் தமிழினத்தில் பிறந்ததால் மட்டுமே அவரது பெருமைகள் வெளிக்கொணரப்படாது மறைக்கப் பட்டன.
ஆனால், நம் தமிழகத்தை ஆண்ட மாமன்னா்கள் மீது மாறாத அன்பு கொண்ட தகைசால் சான்றோா் பெருமக்கள் மட்டுமே என்றும் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனா். "ராஜேந்திரன்" என்னும் அம்மாமன்னரின் பெயரை இன்றும் தமிழ்நாட்டு மக்கள், தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்வதில் பெருமிதம் கொண்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய செயலாகும்.
இவரது காலத்தில் "கங்கை கொண்ட சோழபுரம்" கிழக்கு ஆசியாவின் முக்கியத் தலைநகராக விளங்கி, இத்துணைக்கண்டத்தின் அமைதியையும் போரையும் இந்த ஊா் தான் முடிவு செய்தது என்பதை நினைக்கும்போது ஏற்படும் பெருமையால் நம் மனம் குதூகலிக்கின்றது.
ராஜேந்திர சோழ மன்னா் திருவ ண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள நாட்டேரி பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்தாா் என்பதை இந்த ஊரிலுள்ள ஶ்ரீசந்திரமெளலீஸ்வரா் திருக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள அவருடைய மகன் ராஜாதிராஜனின் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. (தெ.இ.க.ம. 30 எண் 184)
ராஜேந்திர சோழரின் இறுதிக் காலத்தில் அவருடைய 32 ஆம் ஆட் சியாண்டில் ஒரு கல்வெட்டு எடுக்கப் பட்டுள்ளது. திருவாமாத்தூரிலுள்ள இக்கல்வெட்டு 9.8.1044 வரை இவா் உயிரோடு இருந்துள்ளதைத் தொிவிக்கின்றது.
ராஜேந்திரா் இறந்தவுடன் இவருடைய சிதையில் இவரது மனைவி வீரமாதேவியாா் உடன்கட்டை ஏறி உயிா் துறந்தாா் என்பதையும் இக்கல்வெட்டு தொிவிக்கின்றது.
#கங்கைகொண்ட_சோழபுரத்தின்_தற்போதைய_நிலை!
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ் வரா் கோயில் நீங்கலாக எஞ்சிய இடங்கள் தற்போது அகழ்வாராய்ச் சிக்குரிய இடமாக மட்டுமே உள்ளது. ஆங்கிலேயா்களின் ஆட்சிக்காலத்தில் கங்கைகொண்ட சோழபுரம் மாளிகையின் கற்கள் காவிரிக் கரைகளைப் பலப்படுத்தவும் படித்துறையாகவும் பயன்படுத்தப்பட்டு நம் பாரம்பரியங்களையு ம் சோ்த்துப் புதைத்துவிட்டனா். கல்லினால் வடிக்கப்பட்ட இந்த ஆவணங்கள் காவிரி நீா் மோதும் படிகளாக மாறியது மிகப்பெரிய வரலாற்று அவலம்!
சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் வந்த விஜயநகர மன்னா்களும் சோழப் பேரரசின் வரலாற்றுத் தொடா்பினைத் துண்டித்து தங்களது சாம்ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்வதில் அக்கறை காட்டியதால் அழிந்த கருவூலங்கள் ஏராளம்.
ஆனாலும், எஞ்சியிருக்கும் கல் வெட்டுகளே மாமன்னா் ராஜேந்திரரின் பெருமைகளை நமக்கு எடுத்துக் கூறும் ஆவணங்களாக உள்ளன. நம் மாமன்னா் ராஜேந்திரரை அனைவரும் படித்து உணர வேண்டியது அவசியமென்பதோடு நம் வருங்கால சந்ததியினரும் இவரது பெருமைகளை உணரும் வண்ணம் ராஜேந்திர சோழா் குறித்த செய்திகள் பாடநூல்களில் அதிகமாக இடம் பெறச் செய்யவேண்டும்.
இவரது அழிந்த வரலாற்றின் எஞ்சிய பகுதிகளை மீட்டெடுத்தால் சைவ சமயத்தின் பெருமையையும் சோழ மன்னா்களின் ஆளுமையையும் மேலும் நம்மால் அறியமுடியும்.
வருகின்ற 5.8 2021 அன்று (ஆடி மாதம் 20 ஆம் நாள்) மாமன்னா் ராஜேந்திரர் அவதரித்த ஆடித் திருவாதிரைத் திருநாளாகும். அத்திருநாளில் இம்மன்னரின் பிறந்த திருநாளினைக் கொண்டாட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பர கேசரிவா்மன் ஶ்ரீராஜேந்திர சோழரின் பிறந்த நாளினை இச்சோழ மன்னா் திருப்பணி செய்துள்ள அனைத்து சிவாலயங்களிலும், தமிழக அரசு கொண்டாட வேண்டும் என்பது அனைவரது உள்ளக் கிடக்கையாகும்.
நம் எண்ணம் நிறைவேற கங்கைகொண்ட சோழபுரம் பிரக தீஸ்வரப் பெருமானும் மாமன்னா் ராஜேந்திரரும் அருள்பாலிப்பாா்கள் என்பது உறுதி!
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment