தேவாரம் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்றான #திருஆமாத்தூர்
மூலவர் : #அபிராமேஸ்வரர்
அம்மன்/தாயார் : #முத்தாம்பிகை
தல விருட்சம் : வன்னி, கொன்றை
புராண பெயர் : கோமாதுபுரம், திருஆமத்தூர்
ஊர் : திருவாமத்தூர்
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
#பாடியவர்கள்:
அப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்
#தேவாரப்பதிகம்
மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை வேறாக நில்லாத வேடமே காட்டினான் ஆறாத தீயாடி யாமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 21வது தலம்.
#திருவிழா:
சிவராத்திரி, நவராத்திரி
#தலசிறப்பு:
இங்கு மூலவர் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார்.இங்குள்ள முத்தாம்பிகையை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். பொதுவாக சிவாலயங்களில் ஒரே கோயிலுக்குள் சிவனும் அம்மனும் அருள்பாலிப்பார்கள். ஆனால் இங்கு சிவன் தனிக்கோயிலில் கிழக்கு பார்த்தும், எதிரே அம்மன் தனிக்கோயிலில் மேற்கு பார்த்தும் அருள்புரிகின்றனர். அம்மனின் திருமேனியில் நாகப்பாம்பின் வால் பகுதி அமைந்துள்ளது. சிவன் கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் துளை ஒன்று உள்ளது. இதன் வழியாக அம்மனும் சிவனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர். திருவட்டப்பாறை என்ற சிவலிங்க மூர்த்தி இங்கு மிகவும் சிறப்பு பெற்றது. இதன் முன் அமர்ந்து ராமனும், சுக்ரீவனும் ராவணனை வதம் செய்வதற்கு அனுமனின் சான்றுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டதாக வரலாறு. சுவாமி கோயில் ராஜகோபுரம் பிற்காலத்தில் கட்டப்பட்டது. கருவறை அகழி அமைப்பு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது (233) வது தேவாரத்தலம் ஆகும்.
#பொதுதகவல்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அம்மன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கோயில் உள் பிரகாரத்தில் மால்துயர் தீர்த்த விநாயகர், முருகன், நடராஜர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடணர், சகஸ்ரலிங்கம், சட்டநாதர், காசிவிஸ்வநாதர், அருணாச்சலேஸ்வரர், ராமர், சப்தமாதர், நால்வர், 63 நாயன்மார், சண்டேஸ்வரர், பைரவர், நவகிரக சன்னதிகள் உள்ளன. தென் மேற்கு மூலையில் வட்டப்பலகை என்னும் சத்திய மண்டபம் உள்ளது.
கோபுர வாயிலைக்கடந்து உள்ளே நுழைந்தவுடன் சுதையால் ஆன பெரிய நந்தியும், பாதாள நந்தியும், கொடிமரமும், பலி பீடமும் காட்சிதருகின்றன. கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் கோப்பரகேசரி வர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது காலத்தை சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன.
#தலபெருமை:
ராவணனை வதம் செய்த ராமன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு சிவனுக்கு தண்ட தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார்.
சூரபத்மனை அழிப்பதற்காக முருகன், இங்குள்ள சிவனையும் பார்வதியையும் வணங்கியுள்ளார். பார்வதி தனது சக்தி வேலை முருகனுக்கு கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார்.
இத்தல இறைவனை விநாயகர், முருகன், பார்வதி, ராமர், சீதை, லட்சுமணன், நாரதர், அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருகு முனிவர், பராசரர், விஸ்வாமித்திரர், வியாசர், உரோமசர், மதங்க முனி, அஷ்ட வசுக்கள் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.
அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். ஈசனை மட்டுமே வழிபட்டு வந்த பிருங்கி முனிவர் பார்வதி தேவியின் சாபத்தால் வன்னி மரமாக மாறிவிட்டார். அவரே இத்தலத்தின் தல விருட்சமாக சுவாமி, அம்மன் சன்னதிக்கு இடையே அருள்பாலிக்கிறார்.
#தலவரலாறு:
ஒரு காலத்தில் பசுக்களுக்கு கொம்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் பசுக்களை கொடிய விலங்குகள் கொடுமைப்படுத்தி வந்தன. வருத்தமடைந்த பசுக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சிவனை வேண்டி கொம்புகளை பெற்ற தலம் தான் திரு+ஆ+மத்தூர்.
இத்தலத்தை பசுக்களின் தாய் ஊர் என்பார்கள். பசுவின் உடலில் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிக்கின்றனர். பசுவே வந்து இங்குள்ள இறைவனை பூஜித்ததால் இத்தலம் மிகவும் பெருமை பெற்றது.
இத்தல இறைவன் அபிராமேஸ்வரர் பசுவின் கால் குளம்பை தன் தலையில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார்.
#ஆமாத்தூர் #தேவாரம்_திருநாவுக்கரசு அருளியது:
1). வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
கடியதோர் விடையேறிக் காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
2). வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை
விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்
கந்தாரந் தாமுரலாப் போகா நிற்கக்
கறைசேர் மணிமிடற்றீ ரூரே தென்றேன்
நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய்
ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே.
3). கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக்
கடிய விடையேறிக் காபா லியார்
இட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு
இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
4). பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
5). உருளுடைய தேர்புரவி யோடும் யானை
ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்
இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்
பொருளுடைய ரல்லர் இலரு மல்லர்
புலித்தோ லுடையாகப் பூதஞ் சூழ
அருளுடைய அங்கோதை மாலை மார்பர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
6).வீறுடைய ஏறேறி நீறு பூசி
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்திக்
கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு
குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து
பாறுடைய படுதலையோர் கையி லேந்திப்
பலிகொள்வா ரல்லர் படிறே பேசி
ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
7). கையோர் கபாலத்தர் மானின் றோலர்
கருத்துடையர் நிருத்தராய்க் காண்பார் முன்னே
செய்ய திருமேனி வெண்ணீ றாடித்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி
மெய்யொரு பாகத் துமையை வைத்து
மேவார் திரிபுரங்கள் வேவச் செய்து
ஐயனார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
8). ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றொற்றியூர் உம்மூரே உணரக் கூறீர்
நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்
நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்
என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்
இருக்குமூர் இனியறிந்தோம் ஏகம் பமோ
அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ
டழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
9). கல்லலகு தாங்கொண்டு காளத் தியார்
கடியவிடை யேறிக் காணக் காண
இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை
என்றாருக் கெதிரெழுந்தேன் எங்குங் காணேன்
சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது
துருத்தி பழனமோ நெய்த்தானமோ
அல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
10).மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
மணிமிழலை மேய மணாளர் போலுங்
கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலுங்
கொடுகொட்டி தாள முடையார் போலுஞ்
செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலுந்
தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
சுவாமி : ஆமாத்தீஸ்வரர்;
அம்பாள் : அழகியநாயகியம்மை.
#அமைவிடம்
விழுப்புரம் - திருவண்ணாமலை - செஞ்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் "திருவாமாத்தூர்" கைகாட்டி உள்ளது. அங்கு இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் 6 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். விழுப்புரம் - சூரப்பட்டு நகரப் பேருந்து திருவாமாத்தூர் வழியாகச் செல்கிறது. விழுப்புரம், சென்னையில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில்,
திருவாமாத்தூர் அஞ்சல்,
விழுப்புரம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் – 605 402.
#திறக்கும்நேரம்
இக்கோயில், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment