தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான
#திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள #செய்யாறு என்று அழைக்கப்படும்
#திருவோத்தூர் #வேதபுரீஸ்வரர்
#இளமுலையம்பிகை (பாலகுஜாம்பிகை)
திருக்கோயில் வரலாறு:[242]
வேதபுரீசுவரர் கோயில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில், தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
மூலவர்:வேதபுரீசுவரர், வேதநாதர்
அம்மன்:இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை
தல விருட்சம்:பனைமரம்
தீர்த்தம்:மானச தீர்த்தம், கல்யாண கோடி, திருகுளம்
புராண பெயர்:திருவோத்தூர், திருஓத்தூர்
ஊர்:செய்யாறு
மாவட்டம்:திருவண்ணாமலை
மாநிலம்:தமிழ்நாடு
#வழிபட்டோர்:
தொண்டைமான், சம்பந்தர், அப்பர், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்
பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்
#தேவாரப்பதிகம்:
குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின்று ஆடுவர்
அழையா மேயருள் நல்குமே.
-திருஞானசம்பந்தர்
மக்கள் வழக்கில் செய்யாறு, திருவத்திபுரம், திருவத்தூர் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. கோயில் உள்ள பகுதி திருவத்திபுரம் ஆகும்.
ஓத்து - வேதம். இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் - 'திரு' அடைமொழி சேர்ந்து 'திருஓத்தூர் ' - திருவோத்தூர் என்றாயிற்று.
சம்பந்தர் பதிகம் பாடி, இப்பெருமான் அருளால் ஆண்பனை, பெண்பனையான பெரும்பதி.
இத்தலத்தின் மூலவர் வேதபுரீசுவரர், தாயார் இளமுலையம்பிகை. இத்தலத்தின் தலவிருட்சம் பனைமரமாகும். இந்த இறைவன் வேதபுரீசுவரர் என்று பெயர்பெற்ற கதை பின்வருமாறு வேதங்களை ஓதியுணர்ந்து பிறருக்கு உரைக்கும் முனிவர்களே வேதம் ஓதுதலை மறந்து விடுகிறார்கள். அவர்கள் எல்லோருமாக வேண்ட, இறைவனே வேதியர் உருவில் வந்து தேவர் முனிவர்களுக்கெல்லாம் வேதத்தை விரித்து ஓதுகிறார். வேதம் ஓதுவித்த ஊர் ஓத்துர் எனப் பெயர் பெறுகிறது. இதை இறைவனே சொல்லுவதாகக் காஞ்சிப் புராணம் கூறுகிறது.
நத்தி சுவாமியை நோக்கியிராமல் முன் கோபுரத்தைப் பார்த்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து தலப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ள வரலாறு - விசுவாவசு என்னும் மன்னனின் வலிமைக்கு ஆற்றாது தோற்று, ஓடி, காட்டில் திரிந்த தொண்டைமான் வேதபுரீஸ்வரரைத் துதித்து வழங்கினான். இறைவன் காட்சி தந்து, அவனுக்கு அதிக பலத்தையும் சேனைகளையும் அருளி, விசுவாவசுவுடன் போரிட்டு மீண்டும் தன் அரசை எய்துமாறு பணித்தார். கேட்ட மன்னன் 'எங்ஙனம் போரிடுவேன்' என்று அஞ்சியபோது, 'நந்தி உனக்கு படைத் துணையாக வருவார், நீ அதற்கு முன்பாக யாம் கொடுத்த சேனைகளோடு சென்று போரிடுவாயாக' என்றார். மேலும்; "நாம் கூறியதில் உன் மனத்திற்கு சந்தேகமிருப்பின் சாட்சி காட்டுகின்றோர். நீ போய்ப்பார்; அந்த நந்திதேவன் கீழ்த்திசை நோக்கியிருக்கின்றார்." என்றார். அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க, (அவனுக்கு படைத்துணையாகும் நிலையில்) மேற்கு நோக்கியிருந்த நந்திதேவர் கீழ்த்திசையில் திரும்பியிருப்பதைக் கண்டு பயம் நீங்கினான். இறைவன் நந்தியைத் தளபதியாக்கி, சிவகணங்களைக் குதிரைகள் யானைகள் தேர்களைச் சேனைகளாகச் செய்து தந்து, தொண்டடைமானைப் போர்க்கு அனுப்ப, அவனும் அவ்வாறே சென்று, விசுவாவசுவை வென்று நாட்டாட்சியை அடைந்தான்
#தல_சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம்.ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும்.ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம் : வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய சிறப்பம்சம் இது. அதாவது கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம். ஒரே இடத்தில் நின்று இவர்கள் எல்லாவற்றையும் தரிசிக்க முடியும் என்பது இத்தலத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்று.சிவபக்தனான தொண்டைமான் என்ற மன்னனுக்காக சிவனின் ஆணைப்படி நந்தி தேவர் படைத்துணையாக சென்றுள்ளார். இதற்காக இங்கு நந்தி சிவனுக்கு எதிர் திசையில் திரும்பியுள்ளார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும்.
ஆலயத்துள் வெளிப் பிரகாரத்தில் (தல மரமான) பனைமரங்கள் உள்ளன.
அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலத்து ஐதீகமான பனைமரம், ஞானசம்பந்தர், சிவலிங்கம் கல்லில் (சிலா ரூபத்தில்) அமைக்கப்பட்டுள்ளன.
பஞ்சபூதத் தலங்களை நினைவூட்டும் வகையில், தனித்தனி சிவலிங்கத் திருமேனிகள், தனித்தனி சந்நிதிகளாக - திருச்சிற்றம்பலவன், திருக்காளத்தியார், திருஆனைக்காவுளார், திருவண்ணாமலையார், திருவேகம்பன் சந்நிதிகளாக அமைந்துள்ளன.
சண்டேஸ்வரர் - ஒரு காலை மடக்கி, ஒரு காலைத் தொங்கவிட்டு, ஒருகையில் மழுவுடன்; ஒரு கையை மடக்கிய காலின் தொடைமீது வைத்தவாறு காட்சி தருகிறார்.
தட்சிணாமூர்த்திக்கும், துர்க்கைக்கும் தனிக் கோயிலாக உள்ளது.
இராசாதிராசன், குலோத்துங்கன், இராசேந்திரன், விக்ரமசோழன் முதலியோர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
கல்வெட்டில் இறைவன், 'ஓத்தூர் உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார். மேலும் வழிபாட்டிற்கும், நிவேதனத்திற்கும், அர்ச்சகர்க்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களால் தெரியவருகின்றன.
திருவோத்தூர்த் தலபுராணம் இயற்றியவர் கருணாகரக் கவிராயர்.
தை மாதம் ரத சப்தமியைத் தேர் திருநாளாக பத்து நாள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
பொது தகவல்:
சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதப்பொருளை விளக்கி அருளிய காரணத்தால் இத்தலம் திருவோத்தூர் எனப்பட்டது. தற்போது “திருவத்திபுரம்’ என அழைக்கப்படுகிறது.
இத்தலத்தை சம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரப்பாடலில் பாடியுள்ளார்கள். இங்குள்ள முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார். விநாயகர், முருகன், வயிரவர், திருமால், பிரமன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். இங்கு சிவன் வீர நடனம் புரிந்துள்ளார்.
சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் “செய்யாறு’ என அழைக்கப்படுகிறது.
இத்தலவிநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.
#நாகலிங்கம் அபிசேகம் :
கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை அதன்மேல் 11 சர்ப்பம், அதன்மேல் லிங்கம் அதன்மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது.
#தலபெருமை:
இத்தலத்தில் 9 வாயில்களை கடந்து மூலவரை தரிசிக்க முடியும். சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம்.ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும். பஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சன்னதிகள் இருப்பதால்பஞ்சபூத தலங்கள் அனைத்தையும் இத்தலத்தில் ஒரு சேர தரிசிக்க முடியும்.
8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும்.
திருஞானசம்பந்தரால் 11 தேவாரப்பாடல்கள் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலம். அருணகிர நாதரால் பாடல் பெற்ற தலம். அம்பாள் கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரை மொட்டும், அபய அஸ்தம், வரத அஸ்தம் ஆகியவற்றோடு காட்சி தருகிறார்.
#பனை மரம் :
இத்தலம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு அதனால் கோயிலின் சுவர்கள் பாழானது. இதனால் வருத்தமடைந்த சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தி கரை கரைந்து போகாமல் இருக்க பனங்கொட்டைகளை நட்டு பனைமரங்களை வளர்த்து வந்தார். பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனால் நுங்கு முதலிய பயன்கள் கிடைக்கவில்லை. இதைக்கண்ட சிலர், சிவனடியார்களிடம், “”எல்லாம் ஆண் பனையாக இருக்கிறது. ஒரு பெண் பனை கூட இல்லை. உமது சிவனின் அருள் இது தானோ? என கேலி செய்தனர். இதனால் வருத்தமடைந்த சிவனடியார், சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது இதுபற்றி கூறினர். உடனே சம்பந்தர் பதிகம் பாடினார். இறுதிப்பாடலில் “குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்’ என முடித்தார். அப்போது ஆண்பனைகள் பெண் பனைகளாக மாறி குலை தள்ளின. இந்த அதிசயத்தை கண்டவர்கள் சைவர்களாக மாறினர். தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தினால் இத்தலத்தில் பனை மரங்களாக பிறந்து சாப விடுதலைக்காக காத்திருந்தனர். அப்போது சம்பந்தர் இறையருளால் ஆண்பனையை பெண்பனையாக்கினார். இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் சிவபதம் பெற்றன என தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக அம்மன் சன்னதிக்கு முன் கருங்கல் பனைமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.
#நந்தி :
இத்திருக்கோயிலில் நந்தி மூலவரை நோக்கி நிற்காது. அதற்கு நேர் மாறாக வாயிலை பார்த்தபடி இருக்கும்.ஈசன் தேவர்களுக்கு வேதம் ஓதிக்கொண்டிருந்தாராம்.அப்போது தக்கவர்களைத் (அதாவது பாடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது வேறு யாராவது வந்து இடைஞ்சல் செய்துவிடக்கூடாது என்பதுபோல்) தவிர வேறு யாரையும் உள்ளே நுழைய விடாது பார்த்துக் கொள் நந்தியை பணித்தார் என்று புராணம் சொல்லுகிறது.
இது இவ்வாறிருக்க இன்னொரு வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகிறது.அதாவது தொண்டைமான் எதிரிகளுடன் போர் புரியச் செல்ல தயக்கம் காட்டி இறைவனை வேண்ட,”பயப்படாதே உனக்கு துணையாக நம் நந்தியை அனுப்புகிறேன்,’ என்று ஈசன் கூறியதால் நந்தி வாயில் நோக்கி செல்வது போல் அமைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
#நாகநாதர்:
திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
11 தலையுள்ள இதை சனிக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
#தல_வரலாறு:
தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி.
இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். ஓத்து என்றால் வேதம். மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான். நமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலால் ஓத்தூர் என அழைக்கப்படுகிறது. அதில் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருவோத்தூர் என்று வழங்கப்படுகிறது.
திருஞான சம்பந்த பெருமான் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இங்கு போந்து வேதபுரீசுவரரையும் இளமுலையம்பிகையையும் வழிபட்டு ஆண்பனை பெண்பனையாய்க் காய்க்குமாறு பதினோறு பாசுரங்கள் பாடியருளினார்.
தலவிருட்சமாகிய அப்பனைகள் இன்றும் காய்த்து கனிந்து குலுங்கும் பெற்றி மிக்கவனவாய் எழிலோடு விளங்குகின்றன. அப்பனையின் இனிய கனிகளை உண்பார் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர் , பிணியுடைவர்கள் பிணி நீங்கப்பெறுவர் என்று பெரியோர்கள் கூறுவதாக தலபுராணம் கூறுகிறது.
#கோயிலுக்கு திருஞானசம்பந்தர் வருகை :
ஒரு சமயம் திருஞானசம்பந்தர் தொண்டை நாட்டிலே உள்ள திருவோத்தூர் என்னும் இந்தத் தலத்துக்கு வருகிறார். இங்கே சமணர்கள் ஆதிக்கம் மிகுந்திருப்பதையே காண்கின்றார். தென்திசையிலிருந்து வந்த ஞானசம்பந்தர், சேயாற்றின் தென்கரையில் இருந்தே, திருவோத்தூர் வேதபுரி நாயகன் கோபுரத்தையும் மதிலையும் தரிசித்து, அந்தக் கரையிலுள்ள திருமடத்தில் தங்குகிறார்.
மதுரையில் ஞானசம்பந்தர் நிகழ்த்தியவைகளைக் கேட்டிருந்த சேயாற்றுச் சமணர்கள், ஒரு வேள்வி செய்து, அதிலிருந்து எழுந்த கொடிய பாம்பொன்றை அவர் மீது ஏவுகின்றார்கள். அவரோ பாம்பைச் சமணர்களது 'வேந்தன் வாழ் இஞ்சி சூழ் திருமனைக்கே ஏகென்று உத்தரவு இடுகிறார். அதனால் துயருற்ற அரசன் வந்து, அடிவணங்க, ஞானசம்பந்தர் வேண்டுகோளை ஏற்று இறைவனும் மகுடி ஏந்திப் பாம்பாட்டியாக வந்து, அதைப் பிடித்துக் கொண்டே கோயிலுக்குள் சென்று மறைகிறார்.
#அனக்காவூர் செய்யாற்றை வென்றான் பெயர் காரணம் :
இதனால் சமணர் பகை வளர, அரசன் விரும்பியபடி புனல் வாதத்திற்கே ஒத்துக் கொள்கிறார். சமணர்கள் எழுதியிட்ட ஓலையைச் சேயாற்று வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விடுகிறது. ஆனால் ஞானசம்பந்தர் பாடிய பதிகத்தில் ஒரு பாட்டை ஏட்டில் எழுதி, ஆற்றில் இட, அது புது நீரைக் கிழித்துக் கொண்டு முன்னேறி ஒரு பழம்பதியை அடைகிறது. இவ்வாறு ஏடு எதிர் சென்று நின்று தங்கின இடமே அன்று முதல் சேயாற்றில் வென்றான் என்ற பெயரால் வழங்கப்படுகிறது. தற்போது இது செய்யாற்றைவென்றான் என அழைக்கப்படுகிறது. மேலும் அந்த எடுகல் அனுகாமல் சென்றதால் அனுகாவூர் எனவும் தற்போது அனக்காவூர் என அழைக்கப்படுகிறது.
#ஆண் பனைகள் குழையீன்றன :
இப்படியெல்லாம் தோற்றாலும் சமணர்கள் மாத்திரம் தங்கள் வாதத்தை விடுபவர்களாக இல்லை. 'இவ்வூர்க் கோயிலிலும் ஆற்றங்கரையிலும் காயாது நிற்கும் ஆண் பனைகள் நிற்கின்றன. அவைகளைக் காய்க்கும் பென் பனைகளாக ஆக்க முடியுமா?' என்று சம்பந்தரிடமே மறுபடியும் சவால் விடுகிறார்கள். அந்தச் சவாலை ஏற்றுக் 'குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்’ என்ற பாடலைப் பாட, எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம், கோயிலுக்குள் நின்ற ஆண்பனை குலைதள்ளிப் பெண்பனையாக மாறுகிறது. இன்றைக்கும் அந்தப் பனைகளின் வாரிசாகக் கோயில் பிராகாரத்திலேயே குலை ஈனும் ஐந்து பனைகள் நின்று கொண்டிருக்கின்றன.
#சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம். ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும்.
#அமைவிடம்:
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில், சுமார் 14 கி.மீ. சென்றால், செய்யார் செல்லும் சாலை வலதுபுறம் பிரிகிறது. அச்சாலையில் சுமார் 20 கி.மீ. சென்றால் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 34 கி.மீ. தொலைவு. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர், ஆரணி ஆகிய இடங்களிலிருந்து இத்தலத்துக்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன
#திறந்திருக்கும்_நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.30
#கோயிலின்_முகவரி:
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவோத்தூர்- திருவத்திபுரம், திருவண்ணாமலை மாவட்டம். 604 407.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment