முருகப்பெருமான் வழிபட்ட பஞ்ச கடம்ப ஆலயங்கள் 02 : அகர கடம்பனூர் மற்றும் கடம்பூர் வாழ்க்கை ஆலயங்கள்.
முருகப்பெருமான் தான் சூரபத்மனைக் கொன்ற சாபம் தீர சிவனை வணங்கிய தலங்களில் இந்த ஐந்து கடம்ப ஆலயங்களும் முக்கியமானவை என்பதைக் கண்டோம்.
இவை முருகன் சக்தியிடம் வேல் வாங்கிய அந்த சிக்கல் பக்கம் அமைந்துள்ளன. முருகப்பெருமான் எங்கே தன் யுத்தத்தின் தொடக்கத்தை கண்டாரோ அங்கே அந்தப் போருக்கான பிராயசித்தமும் தேடினார். கீழ்வேளூரில் சிவனை வணங்கி அந்த ஆலயத்தினைச் சுற்றி கடம்பமரத்தடியில் ஐந்து லிங்கம் ஸ்தாபித்து வணங்கினார்.
ஒருவகையில் இவை பஞ்சலிங்க தத்துவம் கொண்டவை. பஞ்சலிங்கங்கள் என்றால் சிவனின் ஐந்து தொழில்களையும் ஐந்து பூத தத்துவத்தையும் ஒருசேர சொல்லும் தத்துவம் கொண்டவை.
அவ்வகையில் முதல் ஆலயமாக ஆழியூர் உண்டு. அங்குக் கங்காளநாதராக அதாவது எலும்பினைப் பெற்றுக்கொள்ளும் வடிவமாக சிவன் உண்டு.
ஆழி என்றால் கடல் அவ்வகையில் அந்த ஆலயம் சிவனின் பஞ்சபூத வடிவமான நீர் தத்துவத்தைச் சொல்லி போதித்த ஆலயம். அப்படியே அவரின் ஐந்து தொழில்களில் ஒன்றான அழித்தல் தொழிலையும் சொன்னது.
கங்காள நாதர் என்றால் எலும்பினைத் தாங்குபவர். அதாவது, ஒருவன் காலம் முடிந்து எது அழியாததோ அந்த அவன் ஆத்மா சிவனோடு கலக்கின்றது, வாழ்வின் முடிவில் அவன் அடைவது சிவனே என்பதைச் சொல்லும் தத்துவம்.
எல்லாம் சிவனில் முடிகின்றது என்பதைச் சொல்லும் தத்துவம் அது. சிவன் நம் கர்மவினைகளை எல்லாம் ஏற்றுக்கொள்கின்றார், எல்லாம் அவரில் கரைகின்றது என்பது அந்தத் தத்துவம்.
அவ்வரிசையில் இரண்டாம் ஆலயம் இந்த அகர கடம்பனூர் எனும் ஊரில் இருக்கும் கைலாச நாதர் ஆலயம், இது ஆழியூருக்கு வெகு அருகில் உண்டு.
இந்த அகர கடம்பனூர் என்பது இப்போது கோயில் கடம்பனூர் என அழைக்கப்படுகின்றது. இது ஒரே ஒரு பிரகாரம் கொண்ட ஆலயம், இறைவன் கைலாச நாதர், அன்னை சௌந்தர நாயகி.
இவர்களோடு முருகப்பெருமான் அழகே உருவான வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கின்றார்.
அகரம் என்றால் சிவன் என்பதை அவரே மூலம் என்பதை உணர்ந்தால் இந்த ஆலயத்தின் சிறப்பு விளங்கும், "அ" என்பது எழுத்துக்கு மட்டும் முதல் அல்ல, எது மூலமோ அது அகரம்.
தமிழ் அச்சிறப்பைச் சிவபெருமானின் அடையாளமாக பெற்றது. ஓங்காரமான ஓம் எனும் ஒலி அ+உ+ம் எனக் கூடிவரும், அந்த அ என்பது மூலம், அந்த மூலமே சிவம்.
இதையே சிவஞான சுவாமிகளின் பாடல் சொல்லும்,
"பகவதி கரவணை மிசைதுயில் பயிலு
மிகலறு குமரனை யினிதமுள் புரிக
அகரமு முகரமு மகரமு மாகித்
திகழுறு பிரணவ மெழுசிறு களிறே"
என்பது அகரம், உகரம், மகரமே பிரணவம். அந்தப் பிரவணமே மூல சக்தி. அது ஆதிசக்தியிடம் இருந்து வந்தது என்பதைச் சொல்கின்றது.
திருமூலர் சொல்வார்.
"அகார முதலா யனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகார வுகாரம் இரண்டு மறியில்
அகார வுகாரம் இலிங்கம தாமே"
"அகர வுயிர்போ லறிவாகி வெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து"
என்பது உமாபதி சிவாச்சாரியார்.
"தகர மணியருவித் தடமால் வரைசிலையா
நகர மொருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை யணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே"
என்பது ஞானசம்பந்தர் பாடல்.
இதையே வள்ளுவன் சொன்னான்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
இதைத்தான் இறைவனை அடையும் வழியின் தொடக்கம் என்றார்கள் இந்துக்கள். அதைத்தான் வள்ளுவனும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவனை அடையும் வழி, அவனே உலகில் முதன்மையானவன் எனச் சொன்னான்.
("அகர முதல" என்பது "அகர முகர" என்றுதான் இருந்திருக்க வேண்டும். பின்னாளில் அது மாறியிருக்கலாம் என்பாரும் உண்டு, அப்படி ஒரு வாதம் உண்டு. )
அகரம் உகரங்கள் எனும் உயிர்சக்தி 'ம்' எனும் மெய்சக்தியுடன் கூடி 'ஓம்' என்றாகி படைப்பைத் தொடங்கின. எல்லாப் படைப்புக்கும் எல்லா உயிர்க்கும் அதுவே மூலம்.
ஆக, 'அ' என்றால் தொடக்கம், மூல தொடக்கம். அந்த அகரத்தைக் கொண்டு அகர கடம்பனூர் என எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது சிவன், எல்லாம் அவரிடம் இருந்தே தோன்றுகின்றது எனும் தத்துவத்தைச் சொல்லும் ஆலயம் இது.
எது மூலமோ அது சிவன், அந்தச் சிவன் நம்மை நம் பாவங்களைத் தீர்த்து சாபம் தீர்த்து தாயினைப் போல் அணைத்துக் கொள்வார், அவர் புதுவாழ்வு தருவார் என்பது இதன் தாத்பரியம்.
இங்குக் கைலாசநாதர் எனச் சிவன் அமர்ந்திருக்கின்றார், அது ஒருவகையில் அவரின் படைப்புத் தொழிலைக் குறிப்பது. கைலாசம் என்பது சிவனின் இருப்பிடம் அங்கிருந்தே சிவன் படைப்புத் தொழிலுக்கு மூலமாய் அமர்ந்திருக்கின்றார்.
உலகின் எல்லா முடிவும் படைப்பும் தீர்மானமும் இயக்கமும் அங்கிருந்தேதான் வருகின்றன. அந்தப் படைப்புத் தொழில் தத்துவத்தைச் சொல்லும் இந்த ஆலயம் சிவனின் பஞ்சபூத தத்துவத்தையும் சொல்கின்றது.
அதன்படி இது மண் எனும் பஞ்சபூத தத்துவம் கொண்ட தலம் இது. மண் என்பது நீரில் இருந்தே உருவாகும், மண்ணே எல்லா உயிரின் தோற்றத்துக்கும் இயக்கத்துக்கும் அடிப்படை ஆதாரம், மண் என்பதே எல்லா உயிர்கள் தோன்றவும் வாழவும் ஆதாரம்.
சுருக்கமாகச் சொன்னால் மானுடர் கர்மா தீர மண்ணே ஆதாரம். கர்மா கழிக்க ஆத்மா மானிட உடலில் தங்கி உலாவும் இடம் இந்த மண்ணே, மண்ணே கர்மம் தீர முதல் அடிப்படை ஆதாரம்.
இந்த மண்மேல் தங்களுக்கு அதிகாரம் கொடுத்தவர் சிவன் எனப் பல்லவர்கள் எழுப்பிய ஆலயம் கைலாசநாதர் ஆலயங்களாகவே இருந்தன. அந்தப் பின்னணியில் இந்தத் தத்துவமும் நுணுக்கமாக இருந்தது.
அவ்வகையில் அந்த ஞான தாத்பரியத்தில் இந்த ஆலயம் இந்த மண்ணில் செய்யும் அத்தனை கர்மத்தையும் ஏற்றுக்கொண்டு புதிய பிறப்பாக, புதிய படைப்பாக நம்மை மாற்றும், முருகப்பெருமானுக்கு இந்த ஆலயம் செய்த அருள் இது.
கர்ம வினையினை நீக்கிப் புதிய வாழ்வினைப் புதுபிறப்பாக தரும் சக்திமிக்க ஆலயம் இந்த அகர கடம்பனூர் ஆலயம். எல்லாமே புதிதாக இங்கிருந்து தொடங்கும்.
அடுத்த ஆலய கடம்பூர் வாழ்க்கை எனும் ஊரில் அமைந்திருக்கும் விஸ்வநாதர் ஆலயம்.
இது அகர கடம்பனூரில் இருந்து அண்மித்திருக்கின்றது. இது கிழக்கு நோக்கிய ஆலயம் முகப்பில் விநாயகர், முருகன் மற்றும் நாயன்மார்கள் சூழ ரிஷபரூடர் சிலைகள் உண்டு.
பலிபீடமும் நந்தி மண்டபமும் கருவறையை நோக்கியவாறு அமைந்துள்ளது, கருவறையில் மகா மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை உண்டு.
மூலஸ்தான தெய்வம் இங்கு விஸ்வநாதர் அல்லது சகலநாதர் எனக் கிழக்கு நோக்கி இலிங்க வடிவில் வீற்றிருக்கிறார். தாயார் கற்பகவல்லி, அவள் மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறாள். இங்கு வரதராஜப் பெருமாளுக்குத் தனிச் சன்னதி உள்ளது.
இந்த ஆலயம் விஸ்வநாதர் என சிவன் அமர்ந்து அருள்பாலிக்கும் ஆலயம், அவ்வகையில் இது அக்னி தலம்.
காசி என்பது முக்தி தலம், அங்குதான் விஸ்வநாதாராக சிவன் அமர்ந்து எல்லா ஆத்மாவுக்கும் முக்தி நிலை வழங்கிக்கொண்டிருகின்றார். அதாவது, முழு கர்மமும் தீர்த்துத் தன்னுள் ஏற்று அருள்பாலிக்கும் தன்மையில் அவர் விஸ்வநாதர் அதாவது உலக உயிர்கலெல்லாம் அடைக்கலமானவர் என வணங்கப்படுகின்றார்.
காசி என்பது ஞானம் வழங்குமிடம் ஞான ஒளியினைத் தரும் ஸ்தலம் என்பதால் அந்த விஸ்வநாதர் பெயரில் அருள்பாலிக்கும் சிவன் இங்கும் ஞான அக்னி தருகின்றார், ஞான ஜோதியினைத் தரும் நெருப்புத் தலம் இது.
சிவபெருமானின் ஐந்து தொழில்களில் ஒன்று அருளல். அதாவது, முக்தி நிலையினை அருள்பவர். ஒருவரின் வினை எல்லாம் போக்கி ஞானம் தந்து முக்தி நிலை தருபவர், காசியில் விஸ்வநாதராக நின்று அவர் தரும்
முக்தியினை இங்கும் அருள்கின்றார்.
ஆம். இந்தத் தலம் அக்னி தத்துவத்தோடு முக்தி நிலையினை அருளும் ஆலயம். சிவன் இங்கு எல்லா ஆத்மாவுக்கும் முக்தி கொடுக்கும் தத்துவ சொரூபமாக அருளல் தொழிலைச் செய்கின்றார்.
முருகப்பெருமான் சிவனிடம் தன் கர்மங்களை அழிக்கச் சொன்ன இடம் ஆழியூர். தன்னைப் புதுப்பிறப்பாக படைக்க சொன்ன இடம், தொடக்கத்திலிருந்த புண்ணிய நிலையினைத் தர வேண்டிய இடம் அகர கடம்பனூர், அவர் முக்தி வேண்டிய இடம் இந்தக் கடம்பூர் வாழ்க்கை எனும் விஸ்வநாதர் ஆலயம்.
இப்படி முருகப்பெருமானே நமக்கு வழிகாட்டினார். இந்த மூன்று ஆலயங்களும் முருகனை நினைந்தபடி சிவபெருமானை வழிபட்டால் இந்த மூன்று வரங்களையெல்லாம் தரும். இது சத்தியம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment