உலகப் புகழ்பெற்ற
#தென்_காளஹஸ்தி என்று அழைக்கப்படும் இராகு கேது பரிகார தலமாக விளங்கும் இடமான, இராகுவும் கேதுவும் மனைவியருடன்
காட்சி தரும் சிறப்புமிக்க
#தேனி
மாவட்டத்தில் உள்ள சுருளியாற்றங்கரையில்
அமைந்துள்ள
##உத்தமபாளையம்
#திருக்காளாத்தீஸ்வரர்ர் (காளத்தி நாதர், வாயுலிங்கேஸ்வரர்)
#ஞானாம்பிகை அம்மன்
திருக்கோயிலை காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
புராணங்கள் போற்றும் பஞ்சபூத திருத்தலங் களில் ஒன்றாக, வாயுலிங்கத் தலமாக ஒளிரும் திருத்தலம் காளஹஸ்தி எனப்படும் திருக்காளத்தி. கண்ணப்ப நாயனாருக்கு அருள் வழங்கிய தலம், உத்தரவாகினியாகப் பொன்முகலி ஆறு பாயும் ஊர், ராகு, கேது ஆகிய சாயா கிரகங்கள் நல்ல கிரகங்களாக நன்மை வழங்கும் புண்ணிய க்ஷேத்திரம் என்று இவ்வூருக்கு மகிமைகள் நிறைய உண்டு.
அதனாலேயே இவ்வூருக்குச் சென்று அங்கு உறையும் காளத்திநாதரையும் ஞானாம்பிகையையும் வழிபட்டு வருவதை பெரும் பாக்கியமாகக் கருதுவார்கள் பக்தர்கள்.
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
மூலவர் :
திருக் காளாத்தீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : ஞானாம்பிகை
தல விருட்சம் : செண்பகம்
தீர்த்தம் : உத்திரவாகினி
ஊர் : உத்தமபாளையம்
மாவட்டம் :தேனி
மாநிலம் : தமிழ்நாடு
இராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில், பிச்சை என்ற சிவ பக்தர் உத்தமபாளையம் பகுதியில், ராணியின் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் ஆந்திர மாநிலத்திலிருக்கும் காளகஸ்திக்குச் சென்று, அங்கிருக்கும் காளாத்தீஸ்வரரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவரால் அங்கு செல்ல இயலாமல் போனது. இதனால் மனம் வருந்திய அவர் இறைவனை நினைத்து உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கினார். அவரது கனவில் தோன்றிய இறைவன், செண்பக மரத்தின் கீழே லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு இருந்து தன்னை எடுத்துச் சென்று விரும்பும் இடத்தில் கோவில் கட்டி வழிபடலாம் என்றும் தெரிவித்தார்.
மறுநாள் தான் கண்ட கனவினை ஊர்மக்களிடம் தெரிவித்த அவர், ஊர்மக்கள் துணையுடன் செண்பக மர வனம் சென்றார். அங்கு அவரது கனவில் இறைவன் சொன்னபடி செண்பக மரத்தின் கீழாக லிங்கம் ஒன்று இருந்தது. அவரும், ஊர்மக்களும் அந்த லிங்கத்தை வழிபட்டுத் தாங்கள் கொண்டு சென்றிருந்த வண்டியில் அந்த லிங்கத்தை எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஊருக்கு அருகில் வந்த போது ஒரு இடத்தில், அந்த வண்டியின் அச்சு முறிந்து, வண்டி நின்று போனது. அதன் பின்பு எவ்வளவு முயன்றும் அந்த வண்டியை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. அப்போது அந்த இடத்தில் ஆறுமுகத்துடனான முருகன் சிலை ஒன்று இருப்பதைக் கண்டனர். அதன் பிறகு, அவர்கள் அந்த இடத்திலேயே காளத்தீஸ்வரருக்கும், ஆறுமுகப்பெருமானுக்கும் தனித்தனியாகச் சன்னதிகள் அமைத்துக் கோவிலமைத்தனர்.
அதன் பின்னர் இக்கோவிலில் அம்மனுக்குத் தனிச் சன்னதி அமைத்திட முடிவு செய்த ஊர் மக்கள், அம்மன் உருவத்தைச் சிலையாக வடிவமைக்க பல சிற்பிகளைக் கொண்டு முயற்சித்தனர். ஆனால், அந்தச் சிற்பிகளால் அம்மன் உருவத்தைச் சிலையாக உருவாக்க முடியாமல் போனது. இதனால் மனம் வருந்திய பிச்சை, கோவிலில் அம்மன் சிலை அமைக்கத் தங்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று இறைவனிடம் தொடர்ந்து வேண்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் கனவில் தோன்றிய இறைவன், 'பக்தனே, இன்னும் சில நாட்களில் மழை பெய்து ஊருக்குக் கிழக்காக ஓடும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அந்த ஆற்று வெள்ளத்தில் அம்மன் மூங்கில் கூடையில் அமர்ந்து வருவார். அந்த அம்மன் சிலையைக் கொண்டு வந்து, கோவிலில் அம்மன் சன்னதி அமைத்து வழிபடுங்கள்' என்று சொல்லி மறைந்தார். இறைவன் சொன்னபடி சில நாட்களில் பெரும் மழை பெய்தது. மழையினால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் இறைவன் சொன்னபடியே ஒரு மூங்கில் கூடை மிதந்து வந்தது. அக்கூடையில் அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் இருந்தன. அந்தச் சிலைகளை ஊர் மக்கள் காளத்தீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அம்மனுக்கான சன்னதியில் அம்மன் சிலையை வைத்து அம்மனுக்கு திருக்காளகஸ்தியிலிருக்கும் ஞானாம்பிகை என்ற பெயரையேச் சூட்டி வழிபட்டனர். கோயிலில் விநாயகர் சிலையை நிறுவிச் செல்வ விநாயகர் என்று பெயர் சூட்டினர்.
*கனவில் கிடைத்த கட்டளை:
ஒருநாள், அவர் கனவில் அந்தணக் குழந்தையாகத் தோன்றிய சிவபெருமான், ''காட்டூர் எனும் ஊர் அருகே வில்வ வனத்தில், வெள்ளை அரளி பூத்திருக்கும் மரத்தடியில், உனக்கு அருள்பாலிக்கக் காத்திருக்கிறேன். என்னை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடு'' என்று அருள்புரிந்தார்.
விழித்தெழுந்த பிச்சை காட்டூர் சென்று ஊர் மக்களிடம் கனவு விஷயத்தைக் கூறி, அவர்களையும் அழைத்துக்கொண்டு வில்வ வனத்துக்குச் சென்றார். அங்கே, வெள்ளை அரளி பூத்திருந்த மரத்தின் அடியில் லிங்கத்திரு மேனியராக காட்சியளித்த சிவனாரைக் கண்டு சிலிர்த்துப்போன மக்கள் சிவ நாம பாராயணம் முழங்க, லிங்கத் திருமேனியை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு காட்டூருக்குச் செல்ல முற்பட்டனர். ஆனால், சிவ சித்தமோ வேறு விதமாக இருந்தது. வண்டி குறிப்பிட்ட தொலைவைக் கடந்ததும் அதன் அச்சு முறிந்தது; மேற்கொண்டு நகர முடியவில்லை.
சிவனின் சித்தம் இது என்பதை உணர்ந்து அந்த இடத்துக்கு அருகில் இருந்த ஆறுமுகப் பெருமான் கோயிலிலேயே, வேத மந்திரங்கள் முழங்க சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தனர். அந்த இடம்தான் தற்போது உத்தமபாளையம் என அழைக்கப்படுகிறது. திருக்காளத்திக்குச் சென்று வந்தால் கிடைக்கும் பலனை பக்தனுக்கு அருள்வதற்காக எழுந்தருளிய பெருமான் திருக்காளத்தீஸ்வரர் என்று திருநாமம் கொண்டார். தலமும் தென்காளஹஸ்தி என்று சிறப்பு பெற்றது.
தல வரலாறு:
இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். ராணி மங்கம்மாள் ஆட்சியில், இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர், அவரது படையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தார். காளஹஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது தீவிர பக்தி கொண்டிருந்த அவர், அடிக்கடி அத்தலத்திற்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு வயதானபோது, காளஹஸ்தி செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவர், சுவாமியை வழிபட்டார். அப்போது அவருக்கு இத்தலத்தில் காட்சி தந்த காளாத்தீஸ்வரர், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே லிங்க ரூபமாக எழுந்தருளினார். சிவன், “காளாத்தீஸ்வரர்’ என்றும், தலம் “தென்காளஹஸ்தி’ என்றும் பெயர் பெற்றது.
வரலாறு:
நாயக்கர்கள் ஆட்சிக் காலகட்டத்தில் புகழ் பெற்ற ராணிமங்கமாளின் படைப் பொறுப்பை ஏற்று வந்தவர் கொண்டம நாயக்கர். இவர் காளகஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது மிகுத்த பக்தி கொண்டவர். அவர் வயதான காரணத்தால் காளகஸ்தி செல்ல முடியாமல் அவதிப்பட்டார் . இவரின் நிலையை அறிந்த காளாத்தீஸ்வரர், அவர் இருக்குமிடத்திலேயே கோவில் அமைத்து வழிபடலாம் என்றும், இங்கு வழிபட்டால், காளகஸ்திக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்றும் அருளினார் என்பது ஐதீகம். உடனே அவர் இப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் பூஜையா நாயக்கரிடம் தெரிவித்தார். பாளையக்காரர் அங்கே ஒரு கோவில் அமைத்துக் கொடுத்தார். இதுவே தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் இக்கோயில் ஆகும்.
தலபெருமை:
ஆற்றில் வந்த அம்பிகை!:
காளாத்திநாதர் இங்கு எழுந்தருளியபின்பு, அம்பிகைக்கு சன்னதி அமைக்க பக்தர்கள் விரும்பினார். இதற்காக பல சிலைகள் அமைத்தும், சிலை சரியாக அமையவில்லை. இதனால் அம்பிகை இல்லாத தலமாகவே இக்கோயில் திகழ்ந்தது. ஒருசமயம் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், “அம்பிகை முல்லைப்பெரியாற்றில் வருவாள்!’ என்றார். அதன்படி, ஒருசமயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்தபோது, ஒரு கூடை மிதந்து வந்தது. அக்கூடையில் அம்பிகையின் சிலை இருந்தது. மகிழ்ந்த பக்தர்கள் அம்பிகையை இங்கே பிரதிஷ்டை செய்தனர். காளாத்தியில் அருளும் அம்பிகையின் பெயரால், “ஞானாம்பிகை’ என பெயர் சூட்டினர். இந்த அம்பிகையின் முகத்தில் ஆற்றில் அடித்துவரப்பட்டபோது ஏற்பட்ட தழும்புகள் இருப்பதை தற்போதும் காணலாம். இந்த அம்பிகை இங்கு மிகவும் பிரசித்தி பெற்றவளாக அருளுகிறாள். கோயிலும் இவளது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இப்பகுதியில், “ஞானாம்பிகை கோயில்’ என்றால்தான் தெரியும். காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை இருவருக்குமிடையே சண்முகர் (சோமாஸ்கந்த அமைப்பில்) தனிச்சன்னதியில் இருக்கிறார். கோயில்களில் ஒரு சன்னதியில் நின்று ஒரு சுவாமியையே தரிசிக்க முடியும். ஆனால் இங்கு ஒரே சமயத்தில் அம்பிகை, முருகப்பெருமான் இருவரையும் தரிசிக்கலாம். அம்பாள் சன்னதிக்கு எதிரில் ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. இதற்கு அருகில் அமர்ந்து கொண்டால், இவ்விருவரின் தரிசனமும் நமக்குக் கிடைக்கிறது. இத்தகைய தரிசனம் கிடைப்பது அபூர்வம். தாய், மகன்களின் ஒற்றுமைக்கான பிரார்த்தனை தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. மகனைப்பிரிந்துள்ள தாயார், இங்கு வேண்டிக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்வர் என்கிறார்கள்.
பிறந்த வீட்டு சீர்!:
ஆற்றில் வந்த அம்பாள், இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள கோகிலாபுரம் என்ற இடத்தில் கிடைக்கப்பெற்றாள். எனவே, இவ்வூரை அம்பிகையின் பிறந்த வீடாகக் கருதுகின்றனர். சிவன், அம்பிகை திருக்கல்யாணம் நடக்கும்போது, இவ்வூரிலிருந்து பக்தர்கள் அம்பிகைக்கு பிறந்த வீட்டுச் சீரும், தங்களது மருமகனான சிவனுக்கு வஸ்திரங்களும் கொண்டு வருகின்றனர். இதையே சிவன், அம்பிகைக்கு அணிவித்து பூஜிக்கிறார்கள்.
வாஸ்து பகவான்:
முல்லைப்பெரியாற்றின் மேற்கு கரையில் அமைந்த கோயில் இது. காசியில் கங்கை நதி தெற்கிலிருந்து, வடக்கு திசை நோக்கி ஓடுகிறது. இதன் கரையில் கோயில் கொண்டுள்ள காலபைரவர், மிக விசேஷமான மூர்த்தியாக வழிபடப்படுகிறார். இதைப்போலவே இங்கும் பெரியாறு நதி, உத்தரவாகினியாக வடக்கு நோக்கி ஓடுகிறது. இதனால் இக்கோயிலில் உள்ள பைரவரும், சிறப்பான மூர்த்தியாக வழிபடப்படுகிறார். செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தி கிடைக்கவும் இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். ஜாதகத்தில் நட்சத்திரம், ராசி தோஷம் உள்ளவர்களும், நிலம், பூமி தொடர்பான பிரச்னை உள்ளவர்களும் வாஸ்து, சூரிய ராசி சக்கரங்களின் கீழ் நின்று சிவனை தரிசித்துச் செல்கிறார்கள்.
கண் நோய் நிவர்த்தி தலம்:
பஞ்சபூத தலங்களில் காளஹஸ்தி, வாயு தலமாக இருக்கிறது. இதேபோல இத்தலத்தில் சிவன், வாயு அம்சமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே இவருக்கு, “வாயுலிங்கேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. வாயுவை தொடமுடியாது என்பதால் இவரை “தீண்டாத்திருமேனியன்’ என்றும் அழைக்கிறார்கள். வேடுவரான கண்ணப்பருக்கு காளஹஸ்தியில் சிவன் முக்தி கொடுத்தருளினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கண்ணப்பருக்கு சன்னதி இருக்கிறது. கையில் ருத்ராட்ச மாலை, அம்பு, வில்லுடன் காட்சி தருகிறார் இவர். சிவராத்திரியன்று இரவில் காளாத்தீஸ்வரர், கண்ணப்பர் இருவருக்கும் விசேஷ பூஜை நடக்கும். கண் தொடர்பான நோய் உள்ளவர்கள் இவ்விருவருக்கும் வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.
அஷ்டமாதர்:
கோயில்களில் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டாதேவி ஆகிய சப்த மாதர்களையே தரிசித்திருப்பீர்கள். ஆனால் இக்கோயிலில் “அஷ்ட மாதர்களை’ (எட்டு அம்பிகையர்) தரிசிக்கலாம். ஆதிசக்தியிலிருந்து ஏழு அம்சங்களாக ஏழு தேவியர் தோன்றினர் என்றும், அவர்களே சப்தமாதர்களாக அருளுகின்றனர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவியும், சப்த மாதர்களுடன் சேர்ந்து காட்சி தருகிறாள். இவர்களது தரிசனம் விசேஷ பலன் தரக்கூடியது. மடியில் வீணையை வைத்து இரண்டு கைகளாலும் மீட்டியபடி காட்சி தரும் சரஸ்வதி, இங்கு இடது கையில் வீணையைப் பிடித்தபடி காட்சி தருகிறாள். வலது கையில் அட்சர மாலை வைத்திருக்கிறாள். இத்தகைய அமைப்பில் சரஸ்வதியைக் காண்பது அரிது.
மனைவியருடன் ராகு, கேது:
பிரகாரத்தில் குபேரர், ஐஸ்வர்ய லட்சுமியுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவர்களுக்குப் பின்புறம் மகாலட்சுமியும் இருக்கிறாள். அட்சய திரிதியையன்று குபேரருக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவருக்கு திரிதியை நாட்களில் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். கோயில்களில் ராகு, கேது இருவரும் நவக்கிரக மண்டபத்தில்தான் காட்சி தருவர். திருநாகேஸ்வரத்தில் ராகுவும், கீழப்பெரும்பள்ளத்தில் கேதுவும் தனிச்சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் இவ்விருவரும் மனைவியருடன் அருளுகின்றனர். இவர்கள் இருவரும் சுயரூபத்துடன் இருப்பது மற்றொரு சிறப்பு. ஆவுடையாருடன் கூடிய சதுர பீடத்தில் ராகு, சிம்ஹிகையுடனும், கேது, சித்ரலேகாவுடனும் காட்சி தருகின்றனர். இவர்களது சன்னதிக்கு தனித்தனி துவாரபாலகர்களும் இருக்கின்றனர். ஏழு நாக தேவதைகளும் இவரது சன்னதியில் சுதை சிற்பமாக வடித்துள்ளனர். சுவாதி நட்சத்திர நாட்களில் இவர்களுக்கு விசேஷ பாலபிஷேகம் செய்கின்றனர். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 – 6 மணி) இவர்களது சன்னதியில், “சர்ப்பதோஷ பரிகார ஹோமம்’ நடக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு, ராகு, கேதுவை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவர்களது சன்னதியில் ஹோமத்துடன் பரிகார பூஜையும், திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
விஷராஜா:
நவக்கிரகங்களில் சனீஸ்வரருக்கு கருப்பு நிறம் உகந்தது. எனவே இந்த நிறத்திலான வஸ்திரத்தையே அணிவித்து வழிபடுவர். ஆனால், இக்கோயிலில் சனீஸ்வரருக்கு, பச்சை நிற வஸ்திரத்தை அணிவிக்கிறார்கள். கல்விக்கு அதிபதியான புதனுக்குத்தான், பச்சை வஸ்திரம் அணிவிப்பர். ஆனால் கல்வியில் சிறப்பிடம் பெற சனீஸ்வரருக்கு, இவ்வாறு பச்சை வஸ்திரம் அணிவிக்கும் வழக்கம் இருக்கிறது. காளாத்தீஸ்வரர் கோயிலுக்கு வெளியில் விஷராஜா இருக்கிறார். இவருக்கு சன்னதி கிடையாது. இவரது சிலையைச் சுற்றி சிறிய சுவர் மட்டும் இருக்கிறது. இவர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் இங்கு வரும் பக்தர்களுக்கு அருளுவதாக ஐதீகம். பாம்பு மற்றும் விஷ பூச்சிகளால் கடிபட்டவர்கள் பவுர்ணமியன்று இவருக்கு வஸ்திரம் அணிவித்து, பாலபிஷேகம் செய்வித்து, அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். முருகன் சன்னதி எதிரில் நவவீரர்கள் இருக்கின்றனர்.
கோபுரத்தை அடுத்து சூரியன், சந்திரன் இருவரும் தாமரை மலர் மீது மனைவியருடன் காட்சி தருகின்றனர். நரசிம்மர் இல்லாத சரபேஸ்வரரை இங்கு தரிசிக்கலாம். செவ்வாய் கிழமை ராகு காலத்தில் இவரை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு தாலி அணிவித்து, மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். கோபுரத்தின் கீழே நந்திதேவர், மனைவியுடன் இருக்கிறார். வீணா தட்சிணாமூர்த்தியை, இங்கு உற்சவமூர்த்தியாக தரிசிக்கலாம்.
#சனீஸ்வரருக்கு பச்சை ஆடை உடுத்தும் வித்தியாசமான நடைமுறை:
நவகிரகங்களில், சனீஸ்வரருக்கு உரிய வஸ்திரம் கருப்பு நிறம் . எனவே, சனீஸ்வரருக்கு அனைத்து கோவில்களிலும் கருப்பு நிறத்திலான ஆடையை அணிவித்து வழிபடுவதுதான் வழக்கம். ஆனால் இக்கோவிலில் கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள், இறைவன் காளத்தீஸ்வரர், இறைவி ஞானாம்பிகை ஆகியோரை வழிபட்டு, இங்குள்ள சனீஸ்வரருக்கும் பச்சை ஆடை அணிவித்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. கல்விக்கு உரியவரான புதனுக்கு உடுத்தும் பச்சை நிற ஆடையைப் போன்று, சனீஸ்வரருக்குப் பச்சை நிற ஆடையினை அணிவித்து வேண்டுவதன் மூலம், மாணவப் பருவத்தில் சனியின் பிடியிலிருந்து விடுபட்டு கல்வியில் சிறப்புகளைப் பெற முடியும் என்பது இத்தலத்து பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.
*ராசி, நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் காட்சியளிக்கும் வாஸ்து பகவான்:
சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு
இக்கோவிலின் சிவன் சன்னதி முன்பாக இருக்கும் மண்டபத்தின் மேற்கூரையில் ராசி, நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் வாஸ்து பகவான் சடாமுடியுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது. வாஸ்து பகவானின் தலைக்கு மேலே பிரம்மா, அம்பிகை இருவரும் வழிபாடு செய்வது போன்ற சிற்பம் இருக்கிறது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியிருப்பது போன்று உள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் இருக்கின்றனர். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசிகளுக்கான சின்னங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. இதனையடுத்து, நடுவில் சூரியனும், சுற்றிலும் 12 ராசிகளும் கொண்ட 'சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம்' இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே ஆவுடையார் கோவில், உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில் ஆகிய இரண்டு தலங்களில் மட்டுமே, இந்த சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் இருக்கின்றது. இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
நிலம், வீடு தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள், இந்தச் சக்கரங்களின் கீழ் நின்று இறைவனை வழிபட்டால் அவர்களின் பிரச்சனை விரைவில் தீர்ந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
*மனைவியருடன் ராகு, கேது அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தரும் அபூர்வ அமைப்பு:
கோவில்களில் ராகு, கேது இருவரும் நவக்கிரக மண்டபத்தில்தான் காட்சி தருவர். திருநாகேஸ்வரத்தில் ராகுவும், கீழப்பெரும்பள்ளத்தில் கேதுவும் தனிச்சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் ராகுவும், கேதுவும் தம் மனைவியருடன் அருளுகின்றனர். இவர்கள் இருவரும் சுயரூபத்துடன் இருப்பது மற்றொரு சிறப்பு. ஆவுடையாருடன் கூடிய சதுர பீடத்தில் ராகு, சிம்ஹிகையுடனும், கேது, சித்ரலேகாவுடனும் காட்சி தருகின்றனர்.
இவர்களது சன்னதிக்கு தனித்தனி துவாரபாலகர்களும் இருக்கின்றனர். ஏழு நாக தேவதைகளும் இவரது சன்னதியில் சுதை சிற்பமாக வடித்துள்ளனர். சுவாதி நட்சத்திர நாட்களில் இவர்களுக்கு விசேஷ பாலபிஷேகம் செய்கின்றனர். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 - 6 மணி) இவர்களது சன்னதியில், "சர்ப்பதோஷ பரிகார ஹோமம்' நடக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு, ராகு, கேதுவை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவர்களது சன்னதியில் ஹோமத்துடன் பரிகார பூஜையும், திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
திருவிழா:
சித்திரையில் திருக்கல்யாணம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழியில் ஆருத்ராதரிசனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.
*ராகு கேது பரிகாரம்...
சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. ராகு பகவான் சிம்ஹிதேவியுடனும், கேதுபகவான் சித்ரலேகாவுடனும் அடுத்தடுத்த சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு நடக்கும் காலசர்ப்ப தோஷ பரிகார ஹோமத்தில் பங்கு கொண்டு வழிபடுவதுடன், ஹோமம் முடிந்ததும் தரப்படும் (ஹோமத்தில் கிடைக்கும்) ரோக சாம்பல், தேங்காய்வாழைப்பழம், நவதானியம், ராகுகேதுவின் வெள்ளித் தகடுகள் ஆகியவற்றை எடுத்துச்சென்று அருகில் உள்ள முல்லையாற்றில் இடவேண்டும். இதனால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
*சகஸ்ரலிங்கம், சுரதேவர்:
ஒரே லிங்கத் திருமேனியில் சிறிய அளவில் 1008 லிங்கங்களுடன் காட்சிதரும் சகஸ்ரலிங்க தரிசனம் இக்கோயிலின் விசேஷம்.
இங்குள்ள சுரதேவருக்கு ரசம் சாதம் படைத்து வழிபட்டால், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் உடல் உஷ்ண நோய்கள் நீங்கும்.
பாம்பு மற்றும் விஷப் பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதுடன், பெளர்ணமி தினங்களில் இந்தக் கோயிலுக்கும் வந்திருந்து, இங்கு அருள்பலிக்கும் விஷராஜா என்ற தெய்வத்துக்கு வஸ்திரம் அணிவித்து பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இதனால் விஷத்தின் பாதிப்பு நீங்கி விரைவில் குணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தல சிறப்பு:
பஞ்சபூத தலங்களில் இத்தலம் வாயு தலமாக இருக்கிறது. ராகு, கேதுவுக்கு தனிசன்னதி உள்ளது.
பொது தகவல்:
இத்தலவிநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதி முன் மண்டப மேற்சுவரில் ராசி, நட்சத்திர கட்டத்தின் மத்தியில் வாஸ்து பகவான், பத்மாசனத்தில் அமர்ந்து சடாமுடியுடன் காட்சி தருகிறார். வாஸ்து பகவானின் தலைக்கு மேலே சிவலிங்கத்தை பிரம்மா, அம்பிகை இருவரும் பூஜிக்கும் சிற்பம் இருக்கிறது. இம்மூவரையும் ஒரு நாகம் சுற்றியுள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலியும் இருக்கின்றனர். வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கடுத்து, சூரிய மண்டல ஆகாய ராசி சக்கரம் இருக்கிறது. நடுவில் சூரியபகவான், நின்றிருக்க அவரைச் சுற்றிலும் 12 ராசிகள் இருக்கிறது.
சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, கல்லால மரம் இல்லாமல் காட்சி தருகிறார். லிங்கோத்பவர், தனிச்சன்னதி அமைப்பில் இருக்கிறார். அருகில் பிரம்மா, பெருமாளும், எதிரே நந்தியும் இருக்கிறது. காசி விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மீனாட்சி சொக்கநாதர் மற்றும் பராசக்தியுடன் சகஸ்ரலிங்கத்திற்கு பிரகாரத்தில் சன்னதிகள் இருக்கிறது.
பவுர்ணமியன்று சகஸ்ர லிங்கத்திற்கு விசேஷ பூஜைகள் நடக்கும். தட்சிணாமூர்த்தி அருகில் நின்றுகொண்டு கன்னிமூல கணபதி, விஸ்வநாதர், சொக்கநாதர், சகஸ்ரலிங்கம் ஆகிய மூர்த்திகளை ஒரே சமயத்தில் தரிசிக்கலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment