Wednesday, August 20, 2025

சிதம்பர ஈஸ்வரர் தில்லைவிளாகம் சிவன்கோயில்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் தில்லைவிளாகம் சிவன்கோயில் 

திருத்துறைபூண்டியில்  இருந்து முத்துப்பேட்டை சாலையில் வந்து உதயமார்த்தாண்டபுரத்தினை தாண்டியதும் தெற்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு கிமி தூரம் கடந்தால் தில்லை விளாகம் அடையலாம். வீசும் ஈரக்காற்றில் தென்னையின் வாசமும் உப்புச்சாரலின் வாடையும் சேர்ந்து வருகிறது. 

தெற்கில் இருக்கும்  பாக்-ஜலசந்தியை நோக்கி வேகமாக வரும் கோரையாறு தில்லைவிளாகம் வந்தவுடன் ராமர் சிவபூஜை செய்வதை  பார்த்து மேற்கு நோக்கி திரும்பி சில கிமி தூரம் சென்று மீண்டும் தெற்கு நோக்கி சென்று கடலில் கலக்கிறது. இவ்வூரின் கிழக்கில் சிறிது தொலைவில் மரைக்கா-கோரையாறு பாக்-ஜலசந்தியில் கலக்கிறது. இந்த இரண்டு ஆறுகளின் இடைப்பட்ட பெரும் பிரதேசம் சுரபுன்னை எனப்படும் தில்லை மரங்களால் ஒரு காலத்தில் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதி தில்லை விளாகம் எனப்பட்டது. 

இப்படிப்பட்ட ஒரு அமைதியான பிரதேசம் தான் முன்னர் தண்டகாரண்யம் (பெரும் மரங்கள் அடர்ந்த காடு) என அழைக்கப்பட்டது. இங்கு பரத்வாஜ முனிவர் ஆசிரமம்  அமைத்து தவம் செய்து வந்தார். ஸ்ரீராமர் ராவணனை வென்றபின் சேதுக்கரை வழியே வந்தபோது, இவரது ஆசிரமத்தில்  சில நாட்கள் தங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் சிவ பூஜை செய்த இடமே தற்போது சிவாலயம் இருக்குமிடம். அயோத்தி நோக்கி புறப்பட்ட ராமனிடம்  தன்னை விட்டு செல்லக்கூடாது என முனிவர் வேண்டுகோள் வைக்க, அவருக்காக தன் சௌந்தர்யங்கள் ஒன்று சேர்ந்த சிலாரூபம் ஒன்றை விட்டு சென்றதாக வரலாறு. 

இங்கு ஹேமபுஷ்கரிணி, ராம தீர்த்தம், ஹனுமன் தீர்த்தம். என மூன்று புண்ணிய தீர்த்தங்கள் இருந்தன. 

கி.பி. 1862ம் ஆண்டு வேளூர்தேவர் எனும் பக்தர்,  கனவில் கண்டவாறு குளம் வெட்டியபோது புதைந்திருந்த பழமையான திருக்கோயில் தெரியவந்தது. கார்த்திகை மாதம் 12ம் தேதி பதினான்கு வைணவ சிவாலய தெய்வத்திருமேனிகள் வெளிப்பட்டன. இங்கே நடராஜமூர்த்தி சிவகாமசுந்தரி சிலைகளும் கிடைத்தன., 

சில நூறாண்டுகளின் முன்னம் நாட்டுகோட்டை நகரத்தார்களால் சிவாலயம் எடுப்பிக்கப்பட்டது.. ஆயினும் இக்கோயில் நடராஜர் கோயில் என்றே அறியப்படுகிறது. சிவன் மற்றும் ராமரின் இரண்டு கோயில்களும் ஒன்றோடொன்று அருகருகே ஒரே வளாகத்தில் காணப்படுகின்றன,

சிவாலயம் கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கும் ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்டது.  வாயிலின் இருபுறமும்  மாடங்களில்  விநாயகரும் முருகனும் உள்ளனர். நந்தி  தேவர் இறைவன் சன்னதியின் நேர் எதிரில் உள்ளார். ராஜகோபுரத்தின் முன்னர் அலங்காரவளைவு ஒன்றுள்ளது. 

 இறைவன் சிதம்பரேஸ்வரர்      இறைவி உமையாம்பிகை 

 ராஜகோபுரம் தாண்டி உள்ளே சென்றவுடன் தெற்கு வடக்கில் நீண்டுள்ள கருங்கல் மண்டபத்தின் நடுவில் அழகிய கருப்பு வண்ண சலவை கற்கள் கொண்டு செதுக்கப்பட்ட பெரிய சன்னதி ஒன்றில்  ஸ்ரீ நடராஜமூர்த்தி சிவகாமசுந்தரியும் உள்ளனர். ஆளுயர நடராஜமூர்த்தி, அழகிய வட்ட பிரபாவளியில் ஆனந்த தாண்டவம் ஆடும் காட்சி பார்க்க அற்புதமானது. இவ்விரண்டு சிலைகளும்  ‘அம்பல ஊருணி’ என்ற குளத்தருகில் கிடைத்தன. சோழர்களின் படைப்பாக இருக்கலாம். ஆகவே இந்த தலம் “ஆதி தில்லை” என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டை “ஆதி சிதம்பரம்” என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

 இக்கோயிலின் மேற்கு திருமாளிகை பத்தியில் விநாயகர் சிதம்பரேஸ்வரர் உமையாம்பிகை முருகன் மஹாலட்சுமி என வரிசையாக உள்ளனர். கோஷ்ட மூர்த்திகள் சண்டேசர் உள்ளனர். தென்மேற்கில் நால்வர்கள் உள்ளனர். வடகிழக்கில் பைரவர் நவகிரகங்கள் உள்ளனர்.  கோயில் வாயிலில் புதிய தேர் ஒன்றும் பெருமானை சுமந்து செல்ல தயாராக நிற்கிறது.
சிவாலயத்தின் தென்புறம் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ராமர்  கோயில் கொண்டுள்ளார்.  கிழக்கு நோக்கி காட்சி தரும் ராமனின் முன் மண்டபத்தில் நாம் வடக்கு நோக்கி நின்றோமானால் சிவாலயத்தில் இருக்கும் நடராஜரையும் கோதண்டராமனையும் ஒருசேர தரிசிக்கலாம். 

கோயிலின் பின் புறம் மிகப்பெரிய குளம் ஒன்றுள்ளது, அதுவே மூர்த்திகள் கிடைத்த குளம். கட்டிய கோவிலுக்குப் புஷ்கரிணியாக இப்போது ‘ராம தீர்த்தம்’ எனப்படுகிறது. அதற்க்கு  முன்  ரொம்ப காலமாக ‘நல்ல பிள்ளை பெற்றாள் குளம்’ என்ற பெயர் வழங்கி வந்திருக்கிறது. யார் அந்த ‘நல்ல பிள்ளை பெற்றாள்’ என்றால் கௌசல்யை தான். ‘கௌஸல்யா ஸுப்ரஜா’ என்ற சுப்ரபாத வரிகளில் வரும் ’சுப்ரஜா’வுக்கு நற்றமிழ் சொல் தான் ‘நல்ல பிள்ளை’ என்பது. 

ஐந்தடி உயரத்துக்கு சர்வாங்க சுந்தரனாய் நிற்கும் ராமசந்திர மூர்த்தியை எவ்வளவு  நேரம்  பார்த்தாலும் தெவிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படியொரு நளினமான  சிற்ப வேலைப்பாடு. அவரது வலது கையில் ‘ராம சரம்’ என பெயரிடப்பட்ட  அம்பு உள்ளது.  சீதா லட்சுமணன் அனுமன்  அனைத்துமே அழகு. வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்கவேண்டிய மூர்த்திகள். பஞ்ச ராம தலங்களில் ஒன்றல்லவா! 
பணிவின் திறலாக, பக்தியின் வடிவமாக ‘திறல் விளங்கு மாருதி’ என்று ஆழ்வார் சொன்னது போல வடித்தெடுக்கப்பட்டதாகும். பவ்யமாக பேசும்போது வலதுகையை வாயின் முன்புறத்தில் வைத்து பணிவாக நிற்கும் காட்சி. 

 ஆலயத்தின் வடபுறத்தில் செட்டியார்விடுதி எனப்படும் பெரிய வீடு, சுமார் தோராயமாக நூறு  ஆண்டுகளுக்கு மேல்  பழமையான உள்முற்ற வீட்டில் தங்கி இக்கோயிலை பெரி.நா.நாராயணன் செட்டியார் எனும் நகரத்தார் குடும்பத்தினர்  பெரும் திருப்பணி செய்தது 1922 என ஒரு கல்வெட்டு சொல்கிறது. அதன் பின்னர் நூறாண்டுகள் கடந்து சென்ற வருடம் தான் குடமுழுக்கு கண்டது.

No comments:

Post a Comment

Followers

சிதம்பர ஈஸ்வரர் தில்லைவிளாகம் சிவன்கோயில்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் தில்லைவிளாகம் சிவன்கோயில்  திருத்துறைபூண்டியில்  இருந்து முத்துப்பேட்டை சாலையில் வ...