தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம், மருங்கப்பள்ளம் சிவன் கோயில்
இக்கோயில் பேராவூரணிக்குக் கிழக்கில் உள்ள சேதுபாவா சத்திரம் செல்லும் சாலையில், 5 கி.மீ. சென்றவுடன் குருவிக்கரம்பை உள்ளது, இந்த இடத்தில் வடக்கில் திரும்பி மூன்று கிமி தூரம் சென்றால், மருங்கப்பள்ளம் சிவன் கோயில். உள்ளது.
ஔஷதபுரி என்றும், மருந்துப்பள்ளம் என்றும் முன்னர் அழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது மருங்கப்பள்ளம் என்றழைக்கப்படுகிறது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து செல்லும்போது இறைவன் திருவருளால் அதிலிருந்து ஒர் பகுதி இவ்வூரில் விழுந்தது. . விழுந்ததினால் ஏற்பட்ட பள்ளம், மருந்து தீர்த்த திருக்குளமானது. மலையிலிருந்து சிதறிய மூலிகைகள் இவ்வூரெங்கும் பரவியது. இதனால் இவ்வூர் மருந்துப்பள்ளம் என பெயர்பெற்றது.
இறைவன் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர்.
இறைவியின் மருத்துவ நாயகி ,பெரியநாயகி.
சூரியனுக்கும் உஷா தேவிக்கும் பிறந்தவர்கள் அஸ்வினி குமாரர்கள்; இவர்கள் இருவரும் பிரம்மாவின் ஆணைப்படி, தேவலோக ஔஷாதா குரு பதவியை அடைவதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, அந்த பதவியை அடைந்தார்கள்.
அவர்கள் முதலில் மூலிகைகளை அரைக்க பயன்படுத்திய, கல்வம் (கல்வம் என்பது கல்லினாலான ஆன நீள் வட்ட வடிவமான குழியுள்ள அம்மி) மற்றும் குழவியையே, சிவலிங்கமாக பிரதிஷ்டைசெய்து ஔஷதீஸ்வரர் என்று திருநாமம் வைத்து வழிபட்டார்கள். இந்த லிங்கத்தில், குழவியின் விளிம்பு இருப்பதுபோன்று, நாம் வேறு எந்த கோயில் லிங்கத் திருமேனியிலும் காண முடியாது.
மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் திருவாதிரை அன்று சூரிய பகவான் அதிகாலை நேரத்தில் மருந்தீஸ்வரரை தனது பொற்கதிர்களால் ஆராதனை செய்வது கண்கொள்ளாக் காட்சி. அன்றே நடராஜமூர்த்தி திருவீதியுலா நடைபெறுவது சிறப்புடையது. அன்று தேவலோக மருத்துவர்களுக்கு (அஷ்வினி குமாரர்கள்) நன்றிக்கடனாக அஸ்வ பூஜை நடைபெறும்.
தஞ்சையை ஆண்டு வந்த இரண்டாம் சரபோஜி மன்னர் ஆங்கிலேயரின் மேலாதிக்கத்தின் கீழ் தன் அரசை நடத்தி வந்தார். ஆங்கிலேயர் அந்த சமயம் நெப்போலியனை வென்றிருந்தனர். அதனால் ஆங்கிலேயர் வெற்றிக்கு ஒரு நினைவு சின்னம் அமைக்க எண்ணி மனோரா ஒன்றை கடற்கரை ஒட்டி அமைத்தார், அதன் பணிகளை பார்வையிட சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு படுக்கையில் இருந்தார். அப்போது அவரது கனவில் ஒரு குரல் “மருந்துபள்ளம் போ உன் நோய்கள் நீங்கும் உனக்கு உதவ மச்ச முனிவர் வருவார்” என கூறியது அதன்படி மன்னர் அடுத்த நாள் மருந்துப்பள்ளம் சென்றார் அங்கிருந்த தீர்த்த குளத்தில் நீராடி மச்ச முனிவர் கொடுத்த மூலிகைகளை உண்டு இறைவனை வணங்கி குணமடைந்தார்; அதன் நன்றிக்கடனாக மிகப்பெரிய அளவில் ஆலயத்தை விரிவு படுத்தி திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்தார். முக்கிய அமைச்சராக பணியாற்றிய அநிருத்தப் பிரம்மராயர் என்பவரால் செப்பனிடப்பட்டது. அவரின் திருவுருவ சிலையை நந்தி அருகே தரிசிக்கலாம்.
இரண்டாம் சரபோஜி மருந்துப்பள்ளம் எனப்பட்ட கிராமத்தை இக்கோயிலுக்கே தானமாகத் தந்துள்ளார்,
கிழக்கு நோக்கிய திருக்கோயில், கோயிலின் எதிரில் பெரிய அளவிலான ஒரு தீர்த்தக்குளமும் உள்ளது. அதன் கரையில் ஒரு பெரிய பாதிரி மரமும் உள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கருவறை முகப்பு மண்டபம் நந்தி மண்டபம் பலிபீடம் என வரிசையாக உள்ளது. கருவறையில் இருக்கும் மருந்தீசரின் வாயிலில் பெரிய துவாரபாலகர்களுள்ளனர். இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார். எப்போது கவசம் சார்த்தியே வைத்துள்ளனர்.
தெற்கு நோக்கிய அம்பிகையின் வாயிலிலும் இரு துவாரபாலகியர் உள்ளனர். மருத்துவநாயகி அம்பாள் சன்னதிக்கு மேற்குபுறத்தில் ஒரு திறக்கப்படாத சுரங்கபாதை உள்ளது என கூறுகின்றனர். அம்பிகையை வணங்குவோர் குடும்பத்தில் நிம்மதி நிலவும், ஒற்றுமை நிலைக்கும் ஆரோக்கியத்தை தருபவள் என்பது நம்பிக்கை.
முற்றிலும் கருங்கல் திருப்பணியாக கோயில் மாற்றப்பட்டுள்ளது. கோஷ்டங்களில் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். சிற்றாலயங்களில் விநாயகர் முருகன் உள்ளனர். சண்டேசர் தனி சன்னதியில் உள்ளார் பார்க்க மிகுந்த அழகுடன் இருப்பது சிறப்பு. வடகிழக்கில் பைரவர் மேற்கு நோக்கிய சனி சூரியன் சந்திரன் உள்ளனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட அன்பர்கள் அபிஷேக தீர்த்தம் வாங்கி, இறைவன் பிரசாதமாக உண்ணும் பொழுது நோய்கள் உடனே நீங்கும். அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன் தரும் தலம் என்கின்றனர்.
எல்லோருக்கும் எதவது ஒரு மருத்துவ பிரச்னை இருத்தல் கூடும் அதனால் கோயிலுக்கு வருவோர் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கும் ஏற்பாடுகளுடன் வாருங்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment