தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது திருப்பூந்துருத்தி. மிகப் பிரமாண்டமான திருத்தலம் இது.
அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில், 4 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் திருப்பூந்துருத்தி இருக்கிறது.
திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும்.
இத்தலத்தின் சிறப்பம்சம் இங்குள்ள வீணாதட்சிணாமூர்த்தி. ஒலி எனும் நாதத்தின் உற்பத்தி ஸ்தானமான நாதப்பிரம்மம் எத்தகையது என கந்தவர்களும், தேவர்களும், நாரதரும் கேட்க... பூந்துருத்திக்கு வருக எனப் பணித்தார் சிவனார்.
ஞான குருவாக எழுந்தருளி வீணையை ஏந்தி மீட்டினார். நாதத்தின் மையத்தோடு அனைவரும் கலந்தனர். இந்தக் கோலம் வேறெங்கும் காணமுடியாத அற்புதம். இசையில் தேர்ச்சிபெற இந்தத் தல தட்சிணாமூர்த்தியை வணங்குவார்கள்.
நாரதருக்கு நாதோபதேசம்:
நெறியை மேற்கொண்டு, அந்த வீணை நாதத்தில் மனமொருமித்த நிலையில் அருள்கிறார். நாரத முனிவருக்கு நாதோபதேசம் செய்த அருட்கோலம் இது!
சிவபெருமான் மீட்டும் வீணையின் நாதமே உயிர்களுக்கு ஆத்ம ஞானத்தை அளிக்கிறது. இவரை ‘கேய தட்சிணாமூர்த்தி’ என்று உத்தர காமிக ஆகமம் கூறுகிறது.
‘கேயம்’ என்பதற்குப் பாடுதல், இசைக்கருவி வாசித்தல் என்றும் பொருள். இந்த வடிவில் முன் இரண்டு கரங்களும் வீணை மீட்டிக் கொண்டிருக்க, பின்னிரு கரங்களில் அட்ச மாலையும், தீ அகலும் உள் ளன.
இவரது இடது கால், ‘உத்குடிகாசன’ அமைப்பு கொண்டதாக இருக்கும்.
சுகர், நாரதர், கந்தர்வர்கள், கின்னரர்கள் ஆகியோருடன் பிராணிகள், விலங்குகள் மற்றும் பூதங்கள் ஆகியனவும் இவரைச் சூழ்ந்திருக்கும்.
இவர் நின்ற அல்லது அமர்ந்த கோலத்திலோ, முனிவர்களால் சூழப்பட்டோ அல்லது அவர்கள் இல்லாமலோ, முயலகன் மீது கால் பதித்தோ அல்லது பதிக்காமலோ ஆல மரத்தின் கீழோ அல்லது ஆலமரமே இல்லாமலோ காட்சி தருவார்.
திருப்பூந்துருத்தி- புஷ்பவனேஸ்வரர் கோயிலில் உள்ள வீணாதர தட்சிணாமூர்த்தியை அப்பர் சிறப்பித்துப் பாடி இருக்கிறார்.
திருவையாறில் தியாக பிரம்ம இசை விழா நடைபெறும் போது, இங்கே திருப்பூந்துருத்தி திருத்தலத்துக்கு வந்து வீணை தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபட்டுச் செல்வார்கள் பக்தர்கள்.
அதேபோல், பங்குனியிலும் சித்திரையிலும் வந்து வணங்கினால், கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்!
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment