Friday, December 19, 2025

பராய்த்துறைநாதரை வணங்க குழந்தைகளுக்கு பேச்சு வரும்

அருள்மிகு பராய்த்துறைநாதர் கோயில்,   திருப்பராய்த்துறை,
 PIN - 639115  
திருச்சி மாவட்டம்.                        
*இறைவன்: பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்).

*இறைவி: பசும்பொன் மயிலாம்பிகை.

*தல விருட்சம்: பராய் மரம்.

*தீர்த்தம்: அகண்ட காவிரி.         

*தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம். சம்பந்தர், அப்பர் இருவரும் பதிகம்  பாடியுள்ளனர்.         

*பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதாலும், காவிரி துறையில் இருப்பதாலும் இத்தலம் பராய்த்துறை எனப் பெயர் பெற்றது.

*பராய் மரம் சமஸ்கிருதத்தில் 'தாருகா விருக்ஷம்' எனப்படுகிறது. எனவே இத்தலத்திற்கு 'தாருகாவனம்' என்றும் பெயருண்டு. 
*இந்தத் தலத்தில் தவம் செய்த முனிவர்கள், கடவுளை பற்றிய சிந்தனை இல்லாமல் கடமையை செய்வதே போதுமானது என்று எண்ணி வாழ்ந்தனர். இதனால் இவர்களுக்கு அகந்தை (ஆணவம்) வளர்ந்தது. இவர்களை தடுத்தாட்கொள்ள நினைத்த சிவபெருமான், பேரழகு பிழம்பாக பிச்சை ஏற்கும் பிச்சாடனர் கோலத்தில் அவர்கள் வீட்டு வாசலில் நின்றார். 

அன்பு பிச்சை ஏற்று அருட்பிச்சை போடும் அப்பனை முனிவர்கள் உணரவில்லை.      
முனிவர்களின் மனைவிமார் இறைவனுடைய பிச்சாடனர் கோலத்தில் மயங்கினர். தம்மை மறந்து  தலைவன் பின்னால் செல்லத் தொடங்கினர். இதையறிந்த முனிவர்கள் பிச்சாடன மூர்த்தியை அழிக்க அபிசார வேள்வி என்ற யாகம் செய்தனர். யாகத்தில் தோன்றிய புலியை இறைவன் மேல் ஏவினர். அவர் புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக கட்டிக் கொண்டார்.  

அடுத்து முனிவர்கள் மானை ஏவினர். இறைவன் அதை  தனது இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார்.  

*முனிவர்கள் பாம்புகளை ஏவினர். சிவபெருமான் அவற்றை தனக்குரிய அணிகலன்களாக மாற்றி இடுப்பிலும், கழுத்திலும் ஏற்றுக் கொண்டார்.      

*அதன் பின்னர் முனிவர்கள் பூதகணங்களை ஏவினர். பெருமான் அவற்றை தனது படையில் சேர்த்துக் கொண்டார்.  

*இறுதியாக மிகப்பெரிய யானையை ஏவினர்.  இறைவன் அந்த யானையின் தோலை உரித்து போர்த்திக் கொண்டு கரியுரி போர்த்த செஞ்சேவகனாக காட்சியளித்தார். 

*பகையாக வந்தவை அனைத்தும் உறவாயின.  இதன் பிறகுதான் முனிவர்களின் ஆணவம் அடங்கியது. பக்தி கண்களால் பரமனை தேடினர். இறைவன் தாருகாவனேஸ்வரராக காட்சியளித்து  முனிவர்களின் செருக்கை மாற்றி தடுத்தாட்கொண்டார். 
முனிவர்களின் அகங்காரத்தை அடக்கிய பிக்ஷாடனர் என்ற சிவபெருமானுடைய வரலாற்றின் தொடக்க புள்ளியாக இந்த கோவில் கருதப்படுகிறது.   

*பராய்த்துறைநாதரை வணங்கிட தோல் நோய், புற்றுநோய் நீங்கும், பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும்,  என்பது நம்பிக்கை.                   

*இத்தலத்தில் உள்ள இறைவியின் திருநாமம் பசும்பொன் மயிலாம்பாள். வடமொழியில் ஹேமவர்ணாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கி அன்னை எழுந்தருளியிருக்கிறார்.           
அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும்

*திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் சப்தகன்னிகளில் ஒருவரான வராகிக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

* அம்மன் சன்னதிக்கு அருகே உள்ள ஒரு தூணில் ஊர்த்துவ தாண்டவத்தில் சிவபெருமானின் சிற்பம் உள்ளது, இதற்கு எதிரே உள்ள மற்றொரு தூண் காளி நடனமாடுவதைக் காட்டுகிறது.

 *புரட்டாசி மாதம் 18-ஆம் தேதி சுவாமி மீது சூரிய ஒளி விழும்.

*இங்கு  ஐப்பசி முதல் நாள் துலாஸ்நான திருவிழா மிக சிறப்பாக நடக்கிறது. இது "முதல் முழுக்கு" எனப்படும். அதிகாலையில் அம்மையும், அப்பனும் எழுந்தருளி திருவீதியுலாவாக காவிரிக்கு வந்து தீர்த்தம் கொடுப்பர். அஸ்திர தேவர் காவிரியில் திருமுழுக்காடுவார். அதன் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் காவிரியில் நீராடுவார்கள். *முதல் முழுக்கு திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி மாதம் கடைசி நாளில் கடைமுழுக்கு மயிலாடுதுறையிலும் நடக்கும்."

*முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.
இக்கோவிலின் கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும்; இறைவன் பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும்; "பராய்த்துறைப் பரமேஸ்வரன்" என்றும் குறிக்கப்படுகிறது. 

*இத்தலம் திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலை வழியில் சுமார் 16 கி.மி. தொலைவில் உள்ளது. திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து  திருப்பராய்த்துறை செல்ல நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.          

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பராய்த்துறைநாதரை வணங்க குழந்தைகளுக்கு பேச்சு வரும்

அருள்மிகு பராய்த்துறைநாதர் கோயில்,   திருப்பராய்த்துறை,  PIN - 639115   திருச்சி மாவட்டம்.                         *இறைவன்: பராய...