Thursday, April 20, 2023

அட்சயம் என்ற சொல்லுக்கு`குறைவற்றது` என்று பொருள். அட்சய திருதியை நாளில் எந்த நற்செயல் செய்தாலும் அது குறைவற்றுப் பெருகும்

அட்சய திருதியை!

அட்சய திருதியை என்பது ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் கொண்டாடப் படுகிறது. 

அட்சயம் என்ற சொல்லுக்கு
`குறைவற்றது` என்று பொருள். அட்சய திருதியை  நாளில் எந்த நற்செயல் செய்தாலும் அது குறைவற்றுப் பெருகும் என்பது நம் ஆன்மிக நம்பிக்கை. 

கோயில்களுக்குச் செல்வது, ஜபதபங்கள் செய்வது போன்ற புண்ணியச் செயல்களுக்கெல்லாம் அன்று வழக்கத்தை விடப் பல மடங்கு பலன் கிட்டும்.  

ஆனால் அட்சய திருதியை என்றாலே கடைக்குப் போய் ஏதேனும் சிறிய அளவிலாவது தங்கம் வாங்க வேண்டும் என்பதாக சமீப காலத்தில் அதன் பொருள் குறுகிப் போய்விட்டது. 

மண்ணாசை, பொன்னாசை, பாலியல் ஆசை ஆகிய மூன்றையும் துறக்க வேண்டும் என்றே நம் ஆன்மிகம் உரத்துச் சொல்கிறது. 

காமினி காஞ்சனம் இரண்டு ஆசைகளையும் விட்டுவிடுங்கள் என அறைகூவுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர். இதில் காமினி என்ற சொல் பாலியல் வேட்கையைக் குறிக்கிறது. காஞ்சனம் என்றால் தங்கம். 

பொன்னாசையைத் துறக்க வேண்டும் என்று சொல்லும் ஆன்மிகம், பொன்னை வாங்குவதற்கென்று ஒரு நாளைப் பரிந்துரைக்குமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 

அட்சய திருதியை அன்று வழக்கமாக உள்ளதை விட அதிகமாக இறைச் சிந்தனையில் ஈடுபட வேண்டும். 

அட்சய திருதியை போலவே கிரகண காலத்திலும் எது செய்தாலும் அது வளரும் என நம்பப் படுகிறது. விவேகானந்தர் ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்தார். 

எதிர்காலத்திலாவது சற்றேனும் ஓய்வு கிட்டும் வகையில் தன் வாழ்க்கை அமைய வேண்டும் என ஏங்கிய அவர், அதன்பொருட்டு ஒரு கிரகண காலத்தன்று சற்றுநேரம் உறங்கினார் என்கிறது அவர் வரலாற்றில் வரும் ஒரு குறிப்பு. 

அட்சய திருதியை நாளின் பெருமையைப் புராணங்கள் பல விதங்களில் புலப்படுத்துகின்றன. பத்து அவதாரங்களில் ஓர் அவதாரமான பரசுராமரின் பிறந்த நாள் அட்சய திருதியை தான். 

மகாபாரதத்தில் துச்சாதனன் பாஞ்சாலியைத் துகிலுரியும் கட்டம். பஞ்ச பாண்டவர்களும் பீஷ்மர் உள்ளிட்ட சான்றோர்களும் வேறு வழியின்றி அமைதி காக்கிறார்கள். 

அடுத்த கணம் தனது மானம் போய்விடும் என்ற இக்கட்டான நிலை. திரெளபதி காலமும் சூழலும் கணவர்களும் தன்னைக் கைவிட்டதை எண்ணிக் கண்ணீர் வடிக்கிறாள். 

மனித உதவி கிட்டாத நிலையில் தெய்வ உதவியை நாட முடிவெடுக்கிறாள். 

கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி, `கண்ணா, நீ அடியவர்களை உரிய நேரத்தில் காக்கும் கடவுள் என்பது உண்மைதானே? கஜேந்திரனின் காலை முதலை கவ்வியபோது நீதானே சக்கரத்தால் முதலையை வதம் செய்து யானையைக் காப்பாற்றினாய்? இப்போது என் மானம் போகாமல் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பல்லவா? ` என்றெல்லாம் கண்ணனது அருளின் பெருமைகளைச் சொல்லிக் கதறுகிறாள். 

எங்கோ துவாரகையில் இருக்கும் கண்ணனுக்கு அஸ்தினாபுரத்தில் தன் பக்தை எழுப்பிய தீனக்குரல் கேட்கிறது. புன்முறுவலோடு கையை உயர்த்துகிறான் பரந்தாமன். 

அடுத்த கணமே துச்சாதனன் இழுக்க இழுக்க, திரெளபதியின் சேலை கிடுகிடுவென வளரத் தொடங்குகிறது. சேலை வளர்ந்த அற்புத நிகழ்ச்சியை பாரதியாரின் பாஞ்சாலி சபதம் மிக அழகாகச் சித்திரிக்கிறது. 

பொய்யர்தம் துயரினைப் போல் - நல்ல 
புண்ணிய வாணர்தம் புகழினைப் போல் 
தையலர் கருணையைப் போல் - கடல் 
சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல் 

பெண்ணொளி வாழ்த்திடுவார் - அந்தப் 
பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல்போல் 
கண்ணபிரான் அருளால் - தம்பி 
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய் 
வண்ணப் பொற் சேலைகளாம் - அவை 
வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே..`

என எழுதிச் செல்கிறார் பாரதியார். 

பாஞ்சாலிக்கு அவள் கட்டியிருந்த சேலையை வளரச் செய்து குறைவில்லாமல் துணியை அருளி அவள் மானத்தைக் கண்ணன் காத்தது ஓர் அட்சய திருதியை நாளில்தான்.  

எனவே இந்த நன்னாளில் செய்யும் செயல்கள் திரெளபதியின் சேலை வளர்ந்ததுபோல் வளரும் என்பது நம்பிக்கை. இந்நாளில் வஸ்திரதானம் செய்வது சிறப்பு. 
  
கண்ணன் சேலை தந்த நிகழ்வை ஒரு விடுகதையாகச் சொல்கிறது நம் நாட்டுப்புறத் தமிழ். `அத்தினத்துக்கும் ஓட்டைக் கைக்கும் ஆயிரம் காதம், ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்!` என்பது அந்த விடுகதை. 

அத்தினம் என்றால் அஸ்தினாபுரி. `ஓட்டை`க் கை என்றால் `துவார` கை. அஸ்தினாபுரியிலிருந்த பாஞ்சாலி, பக்தியை விலையாக அளித்து, துவாரகையிலிருந்த கண்ணனிடமிருந்து ஏராளமான சேலைகளைப் பெற்றுகொண்ட வியாபாரம்தான் அந்த நிகழ்ச்சி என்கிறது இந்த விடுகதை!

சூதாட்டத்தில் நாட்டை இழந்த பஞ்சபாண்டவர்கள் துரியோதனன் விதித்த நிபந்தனையின்படி வனவாசம் மேற்கொண்டார்கள். நாட்டைத் துறந்து பாஞ்சாலியோடு வனம் நோக்கி நடந்தார்கள். 

கானக எல்லையை அடைந்தவுடன் அவர்கள் வயிற்றுப் பசியை உணர்ந்தார்கள். துன்பம் வரும்போதெல்லாம் அவர்களைக் காக்கும் கண்ணன் உணவோடு அவர்கள் முன் தோன்றி அவர்களின் பசியைத் தீர்த்து வைத்தான். வனவாசத்தில் அவர்கள் வயிற்றுப் பசி போக்கும் வழியையும் எடுத்துச் சொன்னான். 

சூரிய பகவானை உபாசனை செய்து வற்றாமல் உணவளிக்கும் அட்சய பாத்திரத்தை வேண்டிப் பெற்றுக் கொள்ளுமாறு சொன்னான். சூரிய உபாசனைக்கான மந்திரத்தையும் பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்கும் அவனே உபதேசித்தான். 

அந்த மந்திரத்தை உச்சரித்து உபாசனை செய்தார்கள் பாண்டவர்கள். சூரியதேவன் அவர்கள் முன் தோன்றி அவர்கள் வேண்டியபடி அட்சய பாத்திரத்தை அருளினான். 

வனவாச காலத்தில், அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் தரும் அட்சய பாத்திரத்தால் வந்த விருந்தினர்க்கெல்லாம் அமுது படைத்து மகிழ்ந்தாள் பாஞ்சாலி என்கிறது மகாபாரதம். 

அட்சய பாத்திரத்தை சூரியனிடம் தர்மபுத்திரர் பெற்றது ஓர் அட்சய திருதியை நன்னாளில்தான். எனவே அட்சய திருதியை அன்று அன்னதானம் செய்வது சிறப்பு. அன்று செய்யும் அன்னதானத்தின் புண்ணிய பலன் பல மடங்கு கிட்டும்.  

இருபத்தேழு குழந்தைகளைப் பெற்று வறுமையில் வாடிய குசேலர் ஒரு பிடி அவலுடன் கண்ணனை தரிசிக்கச் சென்றாரே? 

கூச்சத்தோடு மாமன்னன் கண்ணனிடம் அந்த அவலைக் கொடுக்க அவர் தயங்கியபோது கண்ணனே அவரிடமிருந்து அதைப் பறித்து உண்டான் அல்லவா? 

அப்போது கண்ணன் கருணையால் குசேலரின் இல்லத்தில் செல்வ வளம் பலமடங்கு பெருகியதை பாகவதம் சொல்கிறது. 

அப்படிக் குசேலர் கண்ணனுக்கு பக்தியுடன் அவலைக் கொடுத்த நாளும் கண்ணன் அவருக்குச் செல்வத்தை அருளிய நாளும் அட்சய திருதியை நன்னாள்தான். 

அட்சய திருதியை அன்று அவல் நிவேதனம் செய்து கண்ணனைப் பிரார்த்தித்தால்  இல்லத்தில் செல்வ வளம் பெருகும். 

பகீரதன் தன் முன்னோர்கள் முக்தி அடைவதற்காக வானுலகில் இருந்த கங்கை நதியை மண்ணுலகிற்குக் கொண்டுவர வேண்டிப் பலகாலம் தவம் செய்தான். அந்தத் தவத்திற்கு இரங்கி கங்கை பூமிக்கு வந்தாள். 

அவளின் வேகத்தை மண்ணுலகம் தாங்காது என்பதால் அதை மட்டுப் படுத்த வேண்டி பரமசிவன் கங்கையைத் தன் ஜடாமகுடத்தில் தாங்கினார். பின்னர் பூமியில் வேகம் குறைந்து செல்ல அனுமதித்தார். கங்கை அடக்கத்தோடு பூமியில் ஓடலானாள். 

கங்கையை சிவபெருமான் தன் ஜடாமகுடத்தில் அடக்கிய நிகழ்வை மையமாக்கி காளமேகப் புலவர் ஓர் அழகிய வெண்பா இயற்றியுள்ளார். `குடத்திலே கங்கையடங் கும்` எனக் கொடுக்கப்பட்ட ஈற்றடிக்கு அவர் எழுதிய வெண்பா அது. 

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் 
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே கொண்ட இறைவனின் ஜடாம
குடத்திலே கங்கையடங் கும்!`

பகீரதப் பிரயத்தனத்தால் கங்கை நதி பூமிக்கு வந்த நாள் அட்சய திருதியை நாள்தான்.

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் அதன் தலைவியான மணிமேகலை மணிபல்லவம் என்னும் தீவிற்குச் செல்கிறாள். அங்கே உள்ள பொய்கைக் கரையில் நிற்கிறாள். 

அன்று வைகாசி மாதத்துப் பெளர்ணமியான புத்த பூர்ணிமை. ஒவ்வொரு புத்த பூர்ணிமை அன்றும் அந்தப் பொய்கையிலிருந்து அமுதசுரபி என்னும் பாத்திரம் வெளிப்பட்டுத் தோன்றும். 

அன்றும் அது தோன்றுகிறது. பொய்கையின் அலைகளிலே மிதந்து கரையை நோக்கி வருகிறது அந்த விந்தையான பாத்திரம். தன்னை நோக்கித் தவழ்ந்து வந்த அந்தத் திருவோட்டைத் தலைவணங்கிக் கையில் எடுத்துக் கொள்கிறாள் மணிமேகலை. 

அள்ள அள்ளக் குறையாத உணவைத் தரும் அட்சய பாத்திரம் அது என்பதை அறிந்துகொள்கிறாள். அதன்மூலம் எண்ணற்ற ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கிவந்தாள் அவள் என்கிறது மணிமேகலையின் கதை. 

அமுதசுரபி என்ற அதிசயப் பாத்திரத்தை மணிமேகலை பெற்றது ஓர் அட்சய திருதியை நன்னாளில் தான். 

ஆக அட்சய திருதியை நாளைத் தங்கம் வாங்கி நாம் சேமிப்பதற்கு உரிய நாளாகக் குறுக்க வேண்டிய அவசியமில்லை. 

அது பாஞ்சாலியின் நினைவாக ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்யும் நாள். மணிமேகலையின் நினைவாக ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அளிக்கும் நாள். 

குசேலரின் நினைவாக கண்ணனை அவல் நிவேதனம் செய்து பூஜித்து வறுமையில் வாடுவோருக்குப் பொருளுதவி செய்யும் நாள். பகீரதனின் நினைவாக கங்கா மாதாவை வழிபட்டு நம் பாவங்களைத் தொலைக்கும் நாள். 

இத்தகைய எண்ணற்ற சிறப்புகள் உள்ள நாளில் அதிகமாக மந்திர ஜபம் செய்தும் இறைச் சிந்தனையில் ஈடுபட்டும் நம் மனத்தை மாசில்லாததாக ஆக்கிக் கொள்வோம்.

No comments:

Post a Comment

Followers

திருவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திரபடி கட்டப்பட்டுள்ளது.

அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி போஸ்ட், கடலூர் மாவட்டம். காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல...