அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்,
ஆண்டாங்கோவில்,
ஆண்டாங்கோவில் அஞ்சல்,
வலங்கைமான் S.O.
திருவாரூர் மாவட்டம் - 612 804. )
*இறைவன்: சொர்ணபுரீஸ்வரர் (பொன்வைத்தநாதர்).
*இறைவி: சொர்ணாம்பிகை (பூர்ணாம்பிகை).
*தல மரம் : வன்னி.
*தீர்த்தம் : திரிசூல கங்கை.
*பாடல்பெற்ற தலம். இத்தலத்து இறைவனை திருநாவுக்கரசு சுவாமிகள் பதிகம் பாடியுள்ளார்.
*இந்த தலம் தேவார காலத்தில் "கடுவாய்க்கரைத் தென்புத்தூர்" என்று திருநாவுக்கரசரால் போற்றப்பட்டுள்ளது.
பெயர்க்காரணம்: 'கடுவாய்' (குடமுருட்டி ஆறு) கரையில் அமைந்துள்ள 'புத்தூர்' என்பதால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்று பெயர் பெற்றது.
*இன்று மக்கள் வழக்கில் ஆண்டார் கோயில் /ஆண்டான்கோயில் என்று உள்ளது.
*முனிவர் காசிபர் வழிபட்ட தலம்.
*மூலவர் சொர்ணபுரீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது.
*அம்பாள் சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.
*இத்தலம் ருது பரிகாரத்தலமாக விளங்குகிறாது.
ருது தோஷ பரிகாரம் செய்ய வரும் சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் இந்த திருத்தலத்தின் எதிரில் உள்ள திரிசூல கங்கை என்ற திருக்குளத்தில் நீராட வேண்டும். பின்னர் 7 எலுமிச்சைப் பழம், 7 மஞ்சள் கிழங்கு கொண்டு வந்து ஆலயத்தில் கொடுத்து இறைவனுக்கும், இறைவிக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் மடியில் ஒரு மஞ்சள் கிழங்கும், ஒரு எலுமிச்சைப் பழமும் வைக்கப்படும். பின்னர் இறைவனுக்கும், இறைவிக்கும் அர்ச்சனை செய்யப்படும். பின்னர் அந்தப் பெண், 7 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 7 திங்கட்கிழமைகள் செய்து வந்தால் ருது தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
மாத விலக்கு பிரச்சினை உள்ள பெண்களும் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்யலாம்.
இத்தகைய சக்தியை இந்த ஆலயத்திற்கு அளிப்பது, அம்பிகையின் கருவறையினுள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, சக்தி வாய்ந்த சக்கரங்கள் என்று கூறப்படுகிறது.
*குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் எனபது ஐதீகம்.
*விசாக நட்சத்திரத்தில் பிறந்து ஜாதகத்தில் தோஷம் இருப்போர் தோஷ நிவர்த்திக்கு வழிபட வேண்டிய திருத்தலமாகக் குறிப்பிடப்படுகின்றது.
*இத்தல வன்னி மரம் முக்திப்பேற்றை வழங்கும் ஒன்றாக போற்றப்படுகிறது.
*கோயிலின் உட்பிரகாரத்தில் மூலவர் கருவறை மற்றும் அம்மன் சந்நிதி இரண்டையும் சேர்த்து 21 முறை வலம் வந்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
*தல வரலாறு: முனிகுமாரரான மயந்தன் என்பவர் தாம் செய்த சிறு தவறுக்காக தந்தை அளித்த சாபத்தின் காரணமாக ’கண்டதேவர்’ என்ற பெயரில் பூவுலகில் மறுபிறவி எடுத்தார். முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சராக இருந்த வந்த கண்டதேவருக்கு சிவபெருமானுக்கு திருக்கோயில் எடுக்கும் ஆவல் எழ, அதற்கு பெரும் பொருள் தேவைப்படும் என்பதையும் உணர்ந்தார். பெரும்பொருள் செலவிட மன்னர் சம்மதிக்க மாட்டார் எனினும் அவரும் சிவபக்தராதலால் திருக்கோயிலைக் கட்டி முடித்த பின்னர் மறுக்கவோ தண்டிக்கவோ மாட்டார் என்ற நம்பிக்கையில் அமைச்சர் பதவியை பயன்படுத்தி அழகிய திருக்கோயிலை சிவபெருமானுக்கு எழுப்பினார்.
கண்டதேவர் தகவலைத் தெரிவித்தபோது, நேர்மையான அமைச்சர் இவ்வாறு தாம் அறியாமல் பதவியை பயன்படுத்தி கோயில் எழுப்பியது கண்டு வெகுண்டார் மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தி. சட்டத்தை மட்டுமே நினைந்த மன்னர் அமைச்சரை சிரச்சேதம் செய்ய ஆணையிட்டார்.
கலங்காமல், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி பலிக்கட்டையில் தலை வைத்த அமைச்சரைக் கொல்ல ஓங்கிய வாள் மாலையாக மாறி அமைச்சர் கழுத்தில் விழுந்தது.
பல கோடி சூரியப்பிரகாசத்தில் இடபவாகனத்தில் தரிசனம் தந்தார் சிவபெருமான். கண்டதேவர் சிவபெருமானுடன் ஐக்கியமானார். தகவல் அறிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, தாம் செய்த பிழையினைப் பொறுக்க வேண்டி இறைவனிடம் அழுது முறையிட, அசரீரி வாக்கில் இறைவனுக்குத் திருக்கோயில் எழுப்புதல், சீரமைத்தல், தீபம் ஏற்றுதல் ஆகியவற்றின் புண்ணிய பலன்கள் உபதேசிக்கப்பெற்றார்.
*கண்டதேவருக்கு காட்சியளிக்க இறைவன், அம்பிகையுடன் தோன்றிய போது நகரமே தங்கமயமாக ஒளிர்ந்தது. அதனால் சொர்ணபுரி என்ற பெயரை ஊரும், இறைவன் சொர்ணபுரீஸ்வரர் என்றும் அம்பிகை சொர்ணாம்பிகை என்றும் வழிபடப்படுகின்றனர்.
*அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து இக்கோயில் வழியாகச் செல்கிறது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment