அரியலூர் நகரம் வடமூலேஸ்வரர் திருக்கோயில்.
புராணத்தின் படி, அரியலூர், அரி இல் ஊர் என்று அழைக்கப்பட்டது, அதாவது மகாவிஷ்ணு குடிஇருக்கும் ஊர் என கூறப்படுகிறது. ஊரின் மையத்தில் இருக்கும் அரியலூர் கோதண்டராமசாமி கோயிலில் ஒன்பது தூண்களில் ஆளுயரத்தில் செதுக்கப்பட்ட ஒன்பது அவதாரங்கள் காணப்படுகின்றன.
அரியலூர் பகுதி ஏரிகளால் ஆனது. ஊர்தோறும் கிராமம் தோறும் ஏரிகள் உண்டு. ஏரிகளை அசுத்தப் படுத்தினால் கடும் தண்டனை வழங்கப் பட்டது. ஏரிகளைச் சுற்றி மரம் நட்டு நிழலுக்கும், பறவைகள் வருகைக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள் முன்னோர்கள். இதனால் ஏரியின் ஊர் என அழைக்கப்பட்டு அரியலூர் ஆனது என்பர்.
இருப்பதிலேயே சிறிய மாவட்டம் இந்த அரியலூர் தான் கிழக்கு மேற்கில் 50km வடக்கு தெற்கில் 50km தான் பரப்பு.
குறிஞ்சி எனப்படும் பெரிய ஏரியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது அரியலூர் நகரம். ஊரின் மையத்தில் பெருமாள் கோயில் அதன் அடுத்தடுத்த தெருக்களில் அமைந்துள்ளது கைலாசநாதர் மற்றும் வடமூலேஸ்வரர் கோயில்கள். சிவன் கோவில் தெருவில் ஸ்ரீ அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையார் கோவில் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அரியலூர் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்து வந்தது.சோழர்காலத்திற்கு பிறகு அரியலூர் ஜமீன்தார்கள்... சுமார் 600ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவிஜயஒப்பில்லாத மழவராயர் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீஆலந்துறையார் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு 1986 ௧௯௮௬ ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதை கோவில் கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிந்தது. அதன் பின்னர் சென்ற ௨௦௨௩ 2023ம் ஆண்டில் குடமுழுக்கு கண்டுள்ளது. இக்கோயிலை ஒட்டி தென்புறத்தில் ஒப்பிலாதம்மன் கோயில் உள்ளது.
கிழக்கு நோக்கிய திருக்கோயில் முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனை கடந்தால் உயர்ந்து நிற்கிறது தங்கத்தை ஒத்த பிரகாசத்துடன் நிற்கிறது கொடிமரம் பலி பீடம் அடுத்து நான்கு கால் கருங்கல் மண்டபத்தில் நந்தியெம்பெருமான் என வரிசையாக உள்ளது. அடுத்து அகன்று உயர்ந்து நிற்கிறது 32 கருங்கல் தூண்களுடன் மகாமண்டபம்; அதன் மேல் பஞ்சமூர்த்திகளும் அழகு மிளிர அமைக்கப்பட்டு உள்ளனர். இடதுபுறத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய அக்னி திக்கு குளம். அதனை ஒட்டி ஒரு நால்வர் மண்டபம் உள்ளது, இன்னும் நால்வர்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. மகாமண்டபத்தில் இடதுபுறம் சிறிய கருங்கல் மண்டபத்தில் விநாயகர் உள்ளார் வாயிலின் இருபுறமும் கருங்கல் துவாரபாலகர்கள்.
பெரிய பெயர்பலகை ஒன்று இறைவன் பெயர் வடமூலேஸ்வரர் எனும் ஆலந்துறையார் என எழுதப்பட்டுள்ளது இந்த வாயில் முகப்பில் பித்தளை விளக்கு சட்டம் அணி செய்கிறது ஒருபுறம் வராகி அம்மனும் ஒரு புறம் லட்சுமியும் மாடங்களில் உள்ளனர்.
அதனை கடந்து அர்த்தமண்டபம் சென்றால் இருபதுக்கும் மேற்ப்பட்ட தூண்கள் உயர்த்தி பிடித்த பெரிய மண்டபமாக உள்ளது அதில் வலதுபுறம் நவகிரகங்கள் உள்ளன. இறைவனது சன்னதிக்கு பெரிய கதவுகள் கொண்டுள்ளன. அதனை கடந்து இடைநாழி பகுதி. அதனை கடந்து சென்றால் இறைவன் ஆலந்துறையார் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார்.
இறைவன் கருவறை சுற்றில் ஒரு பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இடதுபுறமாக சென்றால் வரிசையாக அறுபத்துமூவர்களும் உள்ளனர். விநாயகர் வீரபத்திருடன் உள்ளது இந்த தொகுப்பு. பின்புறம் நீண்ட வரிசையில் விநாயகர் முருகன் மகாலட்சுமி உள்ளனர். சண்டேசர் சன்னதி உள்ளது. இதன் வடபுறம் ஒரு லிங்கமூர்த்தியும் அம்பிகையும் எதிரில் அழகிய நந்திகளும் கொண்டு இருக்கின்றனர்.
மகாமண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில் அம்பிகை தீர்க்க தபஸ்வினி எனும் அருந்தவநாயகி உள்ளார். வடகிழக்கில் பைரவ பெருமான் ஒரு உயர்ந்த மேடை உள்ளார். கோபுரத்தின் வலது புறம் நடராஜ தரிசன மண்டபம் உள்ளது.
திருக்கோயில் ஊழியர்கள் கோயிலை மிக நன்கு பராமரிக்கின்றனர். திருக்கோயில் அர்ச்சகரும் இறை மூர்த்தங்களை நன்கு அலங்காரம் செய்து வைத்து வருவோரை பரவசம் அடைய செய்கிறார்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment