Saturday, June 10, 2023

அர்ஜுனருக்கு சிவன் பாசுபதாஸ்திரம் வழங்கிய சங்கரனார் திருக்கோயில் பார்த்திபனூர்...!

அர்ஜுனருக்கு சிவன்  பாசுபதாஸ்திரம்  வழங்கிய  சங்கரனார் திருக்கோயில் பார்த்திபனூர்...!
சிவகங்கையிலிருந்து 31 கிமீ தொலைவில் உள்ளது பார்த்திபனூர். பண்டைய காலத்தில் ‘நல்லூர்’ என்ற பெயரில் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு பழமையான சங்கரனார் கோயில் உள்ளது. 

மூலவராக சங்கரனார் என்று அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். மூலஸ்தானத்தில் சங்கரனார், சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். அம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. 

மதுரை மீனாட்சியின் உருவ அமைப்பில் அம்பிகை காட்சி தருவது சிறப்பாகும். சித்தி விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நாகர் சிலைகள் உள்ளன. தல மரமாக மாவலிங்க மரம் உள்ளது. சங்கரன்குளம் தீர்த்தம் உள்ளது.

சங்கரனார் கோயிலை கட்டியவர் குறித்தும், கட்டிய ஆண்டு குறித்தும் சரிவர விபரங்கள் இல்லை. பண்டைய காலத்தில், மகாபாரத போரில் பாண்டவர் மற்றும் கவுரவ படையினர் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டனர்.

‘‘சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரத்தை பெற்றால் துரியோதனனை எளிதில் வெற்றி பெறலாம்’’ என்று அர்ஜுனனுக்கு, வியாசர் ஆலோசனை வழங்கினார். அதன்படி அர்ஜூனனும் சிவபெருமானை வேண்டி தவமிருந்தார். இதனையறிந்த துரியோதனன், அர்ஜூனனின் தவத்தை கலைக்க முகாசுரன் என்ற அரக்கனை அனுப்பினான். பன்றி வடிவில் வந்த அசுரனை, அர்ஜூனன் அம்பு எய்து கொன்றார். 

அங்கு வேடன் வடிவில் வந்த சிவபெருமான், ‘‘பன்றியை நான்தான் கொன்றேன். எனவே அது எனக்கு சொந்தமானது’’ என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த அர்ஜுனன், வேடன் மீது அம்பெய்தார். அம்பு பட்டதால் வேடனின் தலையில் காயமேற்பட்டது.

ரத்தம் வழியும் நிலையில் தனது சுயரூபத்தை அர்ஜுனன் முன்பு சங்கரனார் வெளிப்படுத்தினார். இதனால் வருந்திய அர்ஜுனன், சிவபெருமானிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். சிவபெருமான் அவரை மன்னித்ததுடன், அவருக்கு பாசுபதாஸ்திரத்தை வழங்கினார். பின்னர், அர்ஜுனன் பல சிவத் தலங்களுக்கு சென்று வழிபட்டார். இந்த கோயிலுக்கும் வந்து, இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளார்.

தனது பாடலில் பிழை இருப்பதாக கூறி தன்னை எதிர்த்த நக்கீரரை, சிவபெருமான்  நெற்றிக்கண்ணால் எரித்தார். சங்கப்புலவர்கள் வேண்டியதால், சிவபெருமான் நக்கீரரை மீண்டும் உயிர்ப்பித்தார். தவறை உணர்ந்த நக்கீரர், சிவபெருமானை வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். பின்னர் பல சிவன் கோயில்களுக்கு அவர் யாத்திரை சென்றார். 

யாத்திரையின் போது, இங்குள்ள மூலவரையும் அவர் வழிபட்டார். நக்கீரர் சிவபெருமானுடன் வாதம் செய்த போது, ‘‘சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனாருக்கு ஏது குலம்’’ என்றார். சிவபெருமானை சங்கரனார் என்று நக்கீரர் குறிப்பிட்டதால், இந்த தலத்தில் சங்கரனார் என்ற பெயரில் மூலவர் அழைக்கப்படுகிறார் என்பது புராணம்.

திருக்கார்த்திகை, சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம் உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்களாகும். மூலவரை வேண்டினால் மனக்குழப்பங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணத்தடை, கிரக தோஷம் நீங்க அம்மனிடம் வேண்டுகின்றனர். 

பிரார்த்தனை நிறைவேறியவர்கள் மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் நடை தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும்  திறந்திருக்கிறது.

முகவரி-
அருள்மிகு  சங்கரனார் திருக்கோவில்,
ராமேஸ்வரம்  ரோடு,
பார்த்திபனூர்- 623608.
ராமநாத புரம்.

No comments:

Post a Comment

Followers

சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்...

🌹ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  🌹உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்க ள...