கேரளாந்தகன் நுழைவு
வாயில் கதை தெரியுமா உங்களுக்கு ?
மாமன்னன் ராஜராஜ சோழனும், சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனும் நட்பால் நாட்டை ஆண்டு கொண்டிருந்தனர்.
அப்போது, சேரமன்னன் தன் மகளுக்கு வரன் தேடும் தகவல் வந்தது.
ராஜராஜ சோழன் தன்னுடைய மகன் மதுராந்தக சோழனுக்கு சேரநாட்டின் மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடைய மகளை மணம் முடிக்க விரும்பினார்.
இதற்காக நேரம் பார்த்துக் காத்திருந்த ராஜராஜ சோழன் தன்னுடைய நாட்டின் தூதுவராக யாரை அனுப்பினால் சரியாக இருக்கும் என பலவாறு யோசித்து, சிறப்பாகச் செயல்படும் தூதுவன் சங்கரத்தேவனை சேரநாட்டுக்கு பரிசுப் பொருட்களுடன் அனுப்பி அம்மன்னனின் மனதை அறிந்தும், மனம் நன்றாக இருந்தால் தன்னுடைய விருப்பத்தைக் கேட்டுவிட்டு வருமாறும் அனுப்பி வைத்தார்.
ஆனால் சேரநாட்டு மன்னனோ, பாண்டிய நாட்டுடன் உறவு கொண்டு சோழத்தை அழிக்க வேண்டும் என உள்ளுக்குள் ஒரு திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்.
சங்கரத்தேவன் சேரநாட்டுக்குச் சென்ற நேரத்தில் அங்கு மிகப்பெரிய விழாவை பாஸ்கர ரவிவர்மன் நடத்திக் கொண்டிருந்தார். அந்நாட்டுக்கே உரித்தான யானைகள் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது, அங்கிருந்தவர்களிடம் அலங்கரிக்கப்பட்ட ஒரு யானையைச் சுட்டிக்காட்டி யானை மீது ஒருவர் இருக்கிறாரே அவர் யார் என சங்கரத்தேவன் கேட்க, சேரநாட்டு இளவரசியை மணம் முடிக்க உள்ள பாண்டிய நாட்டு இளவரசர் அமரபுஜங்க பாண்டியன் எனக் கூறினர்.
ஒரு நொடியில் இடிந்து, ராஜராஜனின் மனதை நினைத்து வருந்திய தூதுவன் சங்கரத்தேவன் அங்கிருந்த படை வீரர்களிடம், சோழநாட்டின் தூதுவனாக வந்த விவரத்தைச் சொன்னதும், சேரநாட்டுத் தளபதிக்கு தகவல் சென்றதும் அப்படியே தூக்கிக்கொண்டு போய் விருந்தினர்கள் தங்கும் இடத்தில் சிறை வைத்தான்.
அன்று இரவு தூதுவன் சங்கரத்தேவன் சிறைவைக்கப்பட்டதை அறிந்த சேரமன்னன், உடனடியாக காந்தளூர் சாலைப் பகுதியில் கொண்டு போய் சிறை வைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில் தூது போன சோழநாட்டின் தூதுவனையும் காணவில்லை, தகவல் ஏதும் வரவில்லை என்பது குறித்து ராஜராஜன் தன் மகன் மதுராந்தகச் சோழன் மற்றும் வந்தியத்தேவர் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது வந்த தகவலை கேட்டு ராஜராஜன் அதிர்ச்சி அடைந்தார். கடல் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு சேரநாட்டைச் சேர்ந்த வீரனைப் பிடித்து விசாரித்தபோது, சங்கரத்தேவன் சிறைவைக்கப்பட்ட தகவலைக் கேட்டு கொந்தளித்தார்.
உடனடியாக ராஜராஜன் தன் படையினரை திரட்டிக் கொண்டு முதலில் பெரும் தொல்லையை கொடுத்து வந்த மதுரையை ஆளும் பாண்டியர்களைத் தாக்கி அமரபுஜங்க பாண்டியனை சிறைப்படுத்தி, மதுரையை தன் வசப்படுத்திக் கொண்டு, பின்னர் சேரநாட்டுக்கு சென்று சேரநாட்டையும் வென்றார். வந்தியத்தேவன், மதுராந்தகன் என தனித்தனியாக படைகளுக்குத் தலைமை தாங்கி சேரநாட்டுடன் போரிட்டனர்.
சேரநாட்டில் காந்தளூர்ச்சாலையில் சிறைவைக்கப்பட்ட சங்கரத்தேவனை மீட்டு, அங்கிருந்த படைக்கலன்களை தயாரிக்கும் கூடத்தையும் அழித்து ஒழித்தது சோழப்படை.
பாண்டிய நாட்டை வென்று, சேரநாட்டுக்கு ராஜராஜன் சென்றபோது அங்கிருந்தவர்கள் வாய் பிளந்து நின்றனர். போரில் பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் ஏதும் ஏற்படாமல் எப்படி சோழப்படையினர் சேரநாட்டைக் கைப்பற்றினர் என எண்ணி வியந்தனர்.
பின்னர் சேரநாட்டில் ராஜராஜன், வந்தியத்தேவன், மதுராந்தகன், சங்கரத்தேவன் ஆகியோர் அரசவையில் வீற்றிருந்தபோது போரில் சிறைபிடிக்கப்பட்ட சேரநாட்டின் மன்னன் பாஸ்கர ரவிவர்மனை வரவழைத்து மீண்டும் அவரிடமே நாட்டை ஆளும் பொறுப்பை வழங்கினர். அப்போது, அவர் வெட்கித் தலைகுனிந்தார்.
தான் செய்த செயலை எண்ணி மனம் வருந்தியபோது, எனக்கு தாங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதாக கூறினார் பாஸ்கர ரவிவர்மன்.
என்னுடைய சோழ நாட்டின் பிரதிநிதியாக வந்த தூதுவனை நீ சிறைபிடித்து கொடுமைப்படுத்தி அவமானப்படுத்தியதற்கு பலனாக உன் சிம்மாசனத்தின் அருகிலேயே சங்கரத்தேவனுக்கும் ஒரு சிம்மாசனம் அமைத்து அதில் ஒரு நாள் முழுவதும் அமர வை என்று உத்தரவிட்டார் மாமன்னன் ராஜராஜன்.
இதைக் கேட்டு தூதுவனாக சென்ற சங்கரத்தேவனும், சேரநாட்டு மன்னனும், சேரநாட்டு மக்களும் இப்படி ஒரு மன்னனா என எண்ணி வியந்தனர்.
பின்னர், சில நாட்கள் கழித்து சோழப்படையினர் தஞ்சையை நோக்கி வந்தனர். நண்பனாக இருந்த சேரமன்னன் நமக்கு துரோகத்தை நினைத்துள்ளார். அவர் மூலம் பாண்டியர்களையும், சேரர்களையும் ஒரு நேரத்தில் நாம் வென்றுள்ளோம்.
சேரநாடு எனப்படும் கேரளத்தின் மீதிருந்த பகையை தன் அன்பாலேயே அளந்து அழித்தவர் ராஜராஜன், எனவே தன்னுடைய வெற்றியை பதிவு செய்ய விரும்பி கேரளத்தை அளந்ததன் நினைவாக தஞ்சை பெரிய கோயிலில் கேரளாந்தகன் வாயிலை 90 அடி உயரத்தில் மூன்று மாட கோபுரத்துடன் எழுப்பினார் மாமன்னன் ராஜராஜ சோழன்.
அன்று எழுப்பப்பட்ட இந்த நுழைவு வாயில் இன்றும் விமான கோபுரத்துக்கு ஈடாக கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
No comments:
Post a Comment