Saturday, February 17, 2024

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்...



மகத்துவம் நிறைந்த மாசி மாதம்...
மாசி மாத விசேஷங்கள்...!!

மாதங்களில் மகத்துவம் நிறைந்தது மாசி மாதம். மாதங்களில் மாசி மாதத்தினை "கும்ப மாதம்" என்றும் அழைப்பார்கள். இவ்வளவு மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மாசி மகம், சிவராத்திரி, மாசி அமாவாசை மற்றும் காரடையான் நோன்பு போன்ற புண்ணிய நிகழ்வுகள் பலவும் வருகின்றன. மாசி மாத விழாக்கள் குறித்தும், அதன் அற்புதங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

மாசி பௌர்ணமி : 

இந்த ஆண்டு மாசி 23ஆம் தேதி அதாவது செவ்வாய் கிழமை (07.03.2023) மாசி பௌர்ணமி வருகிறது. இத்தினத்தில் இறைவனை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.

அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாத பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.

மாசி மகம் :

மாசி மகம் மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள்.

அந்த வகையில், வரும் (06.03.2023) திங்கள் கிழமை அதாவது, மாசி 22ஆம் தேதி மாசி மகத்தன்று இறைவனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.

மாசி சங்கடஹர சதுர்த்தி :

மாசி 26ஆம் தேதி அதாவது ஞாயிறுயன்று (10.03.2023) மாசி சங்கடஹர சதுர்த்தி வருகிறது. இந்த நாளில் விநாயகப்பெருமானை வழிபட எல்லா தோஷங்களும் நீங்கி நற்பேற்றினைப் பெறலாம்.

மகா சிவராத்திரி : 

மாதந்தோறும் வரும் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. அதிலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி இன்னும் விசேஷமானது. பிற மாதங்களில் வரும் சிவராத்திரியின்போது விழித்திருந்து இறைவனை வழிபடாதவர்கள் இந்த மாசி மாத மகா சிவராத்திரி நாளில் வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவராத்திரி வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும்.

அந்த வகையில், வரும் 18.02.2023 சனிக்கிழமை அதாவது மாசி 6ஆம் தேதியன்று அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவாராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

மாசி அமாவாசை : 

அமாவாசை தினங்கள் அனைத்தும் முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாட்களே. மாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புண்ணிய பலனை தரக்கூடியது. அதன்படி மாசி 8ஆம் தேதி அதாவது திங்கள் கிழமை (20.02.2023) மாசி மாத அமாவாசை வருகிறது.

காரடையான் நோன்பு :

வீரமும், விவேகமும், பக்தியும் உடைய பெண்ணான சாவித்திரி எமதர்மனிடம் இருந்து கணவனைத் திரும்பப் பெற நோற்ற நோன்பே காரடையான் நோன்பாகும்.

இந்நோன்பு மாசி கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்டு, பங்குனி முதல் நாளில் முடிக்கப்படுகிறது.

அமிர்தம் நிறைந்துள்ள மாதம்.

இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகத்தான் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கும்பமேளா கொண்டாட்டம்.

இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும். கங்கையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

மாசி மாத புண்ணிய பலன்கள்.

மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும். மாசி மகத்தன்று விரதமிருந்து இறைவனை நம்பிக்கையோடு வழிபட்டு வந்தால் வாழும் வரை ஆரோக்கியத்தோடு, உலகையே ஆளக்கூடிய ஆசி கிட்டும் என்பது ஐதீகம்.

பகவான் மகா விஷ்ணு ஸ்ரீ வராக அவதாரம்.

பகவானின் மிக முக்கிய 10 அவதாரங்களில் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் எடுத்து உலகைக் காப்பாற்றியது இந்த மாசி மாத்தில்தான் என்பது மாசி மாதத்திற்கேயுரிய கூடுதல் சிறப்பாகும்.

சாவித்திரி தன் கணவன் உயிரை எமனிடம் இருந்து மீட்ட மாதம்.

சத்தியவான் மரணமடைய, அவனது உயிரைக் கவர்ந்து சென்ற எமதர்மராஜரிடம் மன்றாடி, போராடி, வாதம் செய்து, தன் கற்பின் சக்தியினால், தன் கணவரின் உயிரைத் திரும்பப் பெற்றாள் சாவித்திரி. இந்த சம்பவம் மாசி மாதக் கடைசி தினத்தில் நிகழ்ந்ததாக, ஸ்ரீமத் மகாபாரதம் கூறுகிறது.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐப்பசி சிவன் அன்னாபிஷேகம் அறிவியல் ரீதியான விளக்கம்..

அன்னாபிஷேகம்...! ஐப்பசிமாத முழுநிலவு நாளில்      உலகெங்கும் உள்ள சிவ ஆலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மரபு. ஒவ்வொரு மா...