Wednesday, February 14, 2024

மாசி மாத வளர்பிறை சஷ்டி

மாசி மாத வளர்பிறை சஷ்டி
 மாசி மாத வளர்பிறையில் முருகபெருமானுக்கு சஷ்டி விரதம் இருந்து வழிபடலாம் 

முருகப்பெருமான் பக்தர்களை அரவணைப்பதில் ஜனநாயகம் கொண்டவர். அவருக்குரிய கந்தசஷ்டி கவசத்தை விடாமல் தொடர்ச்சியாக 48 நாட்கள் பாராயணம் செய்து வருவீர்கள் என்றால் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம். உங்களுடைய பாவங்கள் தீரும், தீராமல் இழுபறியாக இருக்கும் வினைகள் முடிந்து எல்லா சௌபாக்கியமும் கிடைக்கும். 

முருக புராணம்

நம் முன்னோர், வேல் உண்டு வினை இல்லை.. மயில் உண்டு பயம் இல்லை என சொல்லி, அதை நம்பி வழிப்பட்டும் வந்தவர்கள். இவை வெற்று வார்த்தைகள் இல்லை. இதனுள் பல அர்த்தங்களும் அனுபவமும் பெரிது. பக்தர்கள் கேட்கும் வரங்களை வாரி கொடுக்கும் கருணை ஊற்றாகவும், வேலை நம்பிக்கையோடு தொழுபவர்களுக்கு செய்த வினைகளை போக்கும் இறைவனாகவும் இருப்பவர் முருகபெருமான். இவரே கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யும் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் தெய்வம். 

சஷ்டி விரதம்..  

முருகபெருமானுக்குரிய விரதங்களிலே குறிப்பிடத்தகுந்தது சஷ்டி விரதம். இந்த விரதம் இருந்து வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும் என சுருக்கமாக பக்தர்கள் நினைக்கிறார்கள், ஆனால் சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும்; வேலை கிடைக்கும்; கடன் தொல்லை அகன்று வறுமை ஒழியும். வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளையும் நீக்க சஷ்டி விரதம் துணை செய்யும். 

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகியவை முறையே இரண்டு தடவை சஷ்டி திதி வரும். அப்போது முருகனை வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் உங்களைத்தேடி வரும். சஷ்டி திதி வரும்போது காலை, மாலை இரண்டு நேரங்களிலும் வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன்பு உட்காந்து, முருகனை மட்டும் மனதில் நினைந்து கந்த குரு கவசம், திருப்புகழ் பதிகம், கந்தசஷ்டி கவசம் ஆகியவற்றை முழுவதும் அல்லது ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்யுங்கள். 

குறிப்பாக உங்கள் மனதில் என்ன வேண்டுதல் இருக்கிறதோ அதற்கேற்ற திருப்புகழ் பதிகத்தை முருகனை நோக்கி பாராயணம் செய்து வழிபட வேண்டும். அப்படி செய்தால் உங்கள் வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும். வழிபாட்டில் செவ்வரளி பூக்களை முருகனுக்கு சூடி, சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சோறு போன்றவை முருகனுக்கு படைக்கலாம். அதை செய்ய இயலாவிட்டால் பால், பழம் ஆகியவை மட்டும் முருகனுக்கு படைத்து வழிபாட்டை தொடரலாம்.  

மாசி மாதம் சிறப்பானது..

பிற மாதங்களை விடவும் மாசியில் வரும் வளர்பிறை சஷ்டி ரொம்ப சிறப்பு கொண்டது. அப்போது பெரும்பாலானோர் விரதமிருக் கின்றனர். இந்த தினத்தில் விரதம் இருப்பவர்களின் வேண்டுதல் கூடுதல் பலன் பெறும். உங்களுக்கு எதிரான பகை நீங்கும், எதிர்ப்புக்கள் கூட குறையும். மாசி மாதம் சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு முருகனை அருளால் 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

முருகபெருமானின் பூரண அருள் கிடைப்பதற்கு அருணகிரிநாதர் கொடுத்த திருப்புகழ் மந்திரத்தை சொல்ல வேண்டும். அந்த பதிகத்தில் இருக்கும் 904 வது பதிகத்தை உச்சரிக்கலாம். அதை படிக்கும்போது உங்களுடைய மனம் மொத்தமாக முருகனை சரணடைந்து அவரின் பால் ஈடுபாடு கொள்ளும். அதனால் முருகப்பெருமானின் அருள் முழுவதும் கிடைக்கும். 

திருப்புகழ் 904 என்னால் பிறக்கவும் (வயலூர்)

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் ...... கண்களாலே

என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை

என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்

கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே

கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா

மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்

மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே

(என் செயலால் நான் இவ்வுலகில் பிறப்பதற்கும், என் திறத்தால் நான் இறப்பதற்கும், என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும், என் கண்கொண்டு மற்றவரை நான் அழைப்பதற்கும், என் செயலால் என் கால்கொண்டு நான் நடப்பதற்கும், என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் இருப்பதற்கும், மாதர், வீடு இவற்றை நான் இன்புற்று சுகிப்பதற்கும், வேண்டுதல் வேண்டாமை காரணமாக நான் நலிவுற்று மெலிவதற்கும், இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு அடைவதற்கும், வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்குவதற்கும், பல நினைவுகளையும் நான் இங்கு நினைப்பதற்கும், இன்ப துன்பங்களை நான் தாங்கிக் கொள்வதற்கும், இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம் உண்டு?) என் நெஞ்சக் கல்லிலிருந்து நார் உரிப்பது போலக் கசியச் செய்த அரசே, செவிக்கு நல்ல அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே, உன்னைக் கற்றறியா¡ர் மனத்தில் தங்காத மனத்தோனே, கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் கண்டவனே*, அரசனாக விளங்கிய தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள் அவனது கிரீடம் அணிந்த தலையை கொடிய அம்பால் கொய்த பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்கு குருராஜனே, குறத்தி வள்ளியின் தலைவனே, வயலூரின் அரசனே, பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே.)

எல்லோருக்கும் கந்தசஷ்டி கவசம் தெரிவதில்லை. அவர்கள் 'சரவண பவ' என்னும் மந்திரம் மட்டும் தங்கள் வாயால் உச்சரிப்பு செய்தால் நன்மைகள் பெருகும். மாசி மாத சஷ்டி விரத நாளான இன்று, முருகபெருமானின் புகழை சொல்லும், 'சரவண பவ' எனும் மந்திரத்தை உச்சரிக்கலாம். அதில் இருக்கும் எல்லா எழுத்தும் ஆற்றல் படைத்தது, அதை நம்பி சொன்னால் நலன்கள் பெருகும். இன்று இரவுக்குள் முருகபெருமான் முன்பு அமர்ந்து வேண்டிக் கொள்ளுங்கள். ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...