Wednesday, February 14, 2024

தஞ்சாவூரில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைக்க காரணமானவர்.

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானியான, கைகள் வெட்டப்பட்ட நிலையிலும் நடந்த, தனது குருவை மிஞ்சிய யோகியான, அட்டாங்க யோக முறைகளை கற்றுத் தேர்ந்த 
#சதாசிவ_பிரம்மேந்திரர்  வரலாறு :
சதாசிவ பிரம்மேந்திரர் ஆற்றங்கரையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஆற்றில் மண் அள்ளியபோது அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டது. அப்போது கண்விழித்த அவர் எதுவும் நடக்காதது போல எழுந்து சென்றார். இனி...

மூன்று மாதங்கள் வரை மணலில் புதைந்திருந்த காலத்திலும் சமாதி நிலையில் இருந்து விடுபடாமல் சதாசிவ பிரம்மேந்திரர் இருந்த செய்தி அவருடைய குருவான பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகளை எட்டிய போது ‘அப்படியொரு நிலையை எப்போது என்னால் எட்ட முடியும்’ என்று வியந்தாராம்.

குருவையே அப்படி வியக்க வைத்த சதாசிவ பிரம்மேந்திரர் எத்தனையோ சக்திகளைப் பெற்றிருந்த போதும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, தன்னை ஒரு மகானாகக் காட்டிக் கொள்ளவோ எப்போதும் முயன்றதில்லை. அவருடைய அந்த சக்திகள் இயல்பாக தேவைப்பட்ட இடங்களில் வேலை செய்தன. அதற்கு சம்பந்தப்பட்டவர் போலவே அவர் காட்டிக் கொண்டதில்லை.

ஒரு முறை ஒரு தானியக் குவியலில் அமர்ந்தவர் அப்படியே சமாதி நிலையில் லயித்திருக்க ஆரம்பித்து விட்டார். அந்த விவசாயி அவரை தானியம் திருட வந்த கள்வன் என்று நினைத்து ஒரு கம்பால் அவரை அடிக்க ஓங்கினான். ஆனால் அவன் கை அப்படியே நின்று விட்டது. அவர் விழித்து அவனைப் பார்த்த போது தான் அவனால் கையைக் கீழே இறக்க முடிந்தது. அவன் அவரைத் திருடன் என நினைத்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்பதற்கு முன் அவர் அங்கிருந்து போயுமிருந்தார்.

ஒரு முறை திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் சிலர் வண்டியில் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நெடிய கட்டை போல் அவர் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களில் ஒருவன் அவரை அழைத்து கட்டைகளை எடுத்துத் தரச் சொன்னான். எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் அவரும் எடுத்துத்தந்து அந்த மரக்கட்டைகளை வண்டியில் ஏற்றுவதற்கு உதவினார். வேலை முடிந்த பின் அவர் மறுபடி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் கயவர்கள் தங்களுக்கு உதவிய ஒருவர் என்கிற நன்றியும் இல்லாமல் ‘இந்தக் கட்டை எங்கே போகிறது?’ என்று கூவி ஏளனமாகக் கேட்டார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வண்டியில் ஏற்றி இருந்த கட்டைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. அப்போது தான் அவர்களுக்கு அவர் ஒரு யோகி என்பது புரிந்தது.

இன்னொரு சமயம் ஒரு பண்டிதன் அவருடைய பூர்வாங்கம் தெரியாமல் அவருக்குக் கிடைக்கும் புகழைக் கண்டு பொறாமைப்பட்டான். பல சமஸ்கிருத நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அவன், அவர் வேத நூல்கள் பற்றிய பரிச்சயமே இல்லாதவர் என்றும், அவர் வாழும் வாழ்க்கை வேதங்களின் அங்கீகாரம் இல்லாதது என்றும் அவரிடம் நேரில் வந்து குற்றம் சாட்டினான்.

சதாசிவ பிரம்மேந்திரர் அப்போது அங்கே அருகில் இருந்த ஒரு சலவைத் தொழிலாளி நாக்கில் சில எழுத்துக்கள் எழுத, படிப்பறிவில்லாத அவர் வேத மந்திரங் களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

அந்த மந்திரங்கள் ஒரு ஞானியின் வாழ்க்கை முறையை விவரிப்பதாக இருந்தன. அவை அனைத்தும் சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கையை ஒத்ததாகவும் இருந்தன.

இப்படி அவருடைய சக்திகளை உணர்ந்தவர்கள் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, அரசர்களும் தான்.

ஒரு முறை அவர் பயணத்தின் போது வழியில்  ஆடைகள் இல்லாத ஒரு பித்தர் என்று அவரை எண்ணிய  பெண்மணிகள் அலறி அடித்துக் கொண்டு ஒதுங்கினார்கள். ஆனால் அவரோ சுற்றுப்புற சூழலே உணராமல்  கடந்து கொண்டு இருந்தார். இந்தத் தகவல் நவாபின் செவிகளை எட்டியது.

கோபம் கொண்ட நவாப் அந்தப் பித்தனின் கையை வெட்டிக் கொண்டு வரும்படி சிப்பாய்களிடம் ஆணை இட்டான். சிப்பாய்கள் விரைந்து வந்து சதாசிவ பிரம்மேந்திரரின் ஒரு கையை வெட்டினார்கள். கை வெட்டப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் சிறிதும் சலனப்படாத அவர் சென்று கொண்டே இருந்தார். அந்தச் செய்தியும் நவாபின் செவிகளை எட்டியது.

திகைத்துப் போன நவாப் அந்த வெட்டப்பட்ட கையை எடுத்துக் கொண்டு ஓடி அவரை அடைந்து மன்னிப்பு கேட்டான்.

அந்தக் கையை அவனிடம் இருந்து வாங்கி மீண்டும் பொருத்திக் கொண்டு அவர் போய்க் கொண்டே இருந்தார்.

கையை வெட்டியதற்குக் கோபம் கூடக் கொள்ளாத அந்த யோகி சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளை என்றோ கடந்திருந்தார் என்றல்லவா இதிலிருந்து நமக்குப் புரிகிறது.

கி.பி.1730 முதல் 1768–ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினார். தன் ஆட்சி எல்லைக்குள்ளே இருந்த அந்த யோகியைத் தானே நேரில் சென்று அழைக்கவும் செய்தார்.

மவுன விரதம் மேற்கொண்டிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் அப்படி அரண்மனைக்கு எல்லாம் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மன்னர் ஆன்மிகம் குறித்த கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டார். அதற்காவது அவரிடம் இருந்து பதில் வந்தால் அது தனக்கு அவரது ஆசீர்வாதமாக இருக்கும் என்று மன்னர் எண்ணினார்.

சதாசிவ பிரம்மேந்திரர் மணலில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தைப் பதிலாக எழுதி விட்டுச் சென்றார்.

விஜய ரகுநாத தொண்டைமான் தன் அங்கவஸ்திரத்தில் அந்த மணலைக் கட்டி எடுத்துக் கொண்டு சென்று அரண்மனையில் பூஜித்து வந்ததாகச் சொல் கிறார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரரின் அருளைப் பெற்ற இன்னொரு மன்னர் சரபோஜி மன்னர். அவரது அமைச்சராக இருந்த மல்லாரி பண்டிட் என்பவர் சதாசிவ பிரம்மேந்திரரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், அவரும் ஆசீர்வதித்து தனது ‘ஆத்மவித்யா விலாசம்’ என்ற நூலை அளித்ததாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வரலாற்று ஆவணமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு பிரம்ம ஞானியாகவே வாழ்ந்து வந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் வாழ்வு கடைசிக் கட்டத்தை நெருங்குவதை உணர்ந்தார். அருகில் இருந்த அவரது பக்தர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமைக்கும்படி எழுதிக் காட்டினார்.

அந்தப் பக்தர்கள் பெருந்துக்கம் அடைந்தனர். கண்களை மூடிக்கொண்டு கடைசி யாத்திரைக்குத் தயாராக இருந்த சதாசிவ பிரம்மேந்திரரிடம் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய அவர்கள் ‘இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு வழி காட்டுங்கள்’ என்று வேண்டினார்கள். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் கடைசி கீர்த்தனையை எழுதிக் காட்டினார்.

‘சர்வம் பிரம்ம மயம் ரே ரே  சர்வம் பிரம்ம மயம்...’ என்று தொடங்கும் அந்தக் கீர்த்தனையில் ‘எல்லாமே இறைமயம் தான். அப்படி இருக்கையில் கடவுளை எங்கே தேட வேண்டும். அந்தப் பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம்’ என்ற பொருள் இருக்கிறது.

#வாழ்க்கை:

சோமசுந்தர அவதானி - பார்வதி இணையருக்கு சிவராமகிருஷ்ணன் எனும் இயற்பெயருடன் கும்பகோணத்தில் பிறந்தவர். போதேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியவர்களுடன் ஒரே குருகுலத்தில் வேதம் பயின்றவர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியேறி, பிரம்ம ஞானம் பெற சந்நியாசம் மேற்கொண்டு உலகைச் சுற்றிவரலானார்.  பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு நூல் மூலம், சதாசிவ பிரமேந்திரரின் யோக சக்திகள் அறிய முடிகிறது. அட்டாங்க யோக சித்திகளை அடைந்தவர்.

சதாசிவபிரமேந்திரர் மதுரை மாநகரில் 17-18 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.இவரின் தந்தை சோமநாத அவதானியார், தாயார் பார்வதி அம்மையார். சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராமகிருட்டிணன் என்பதாகும். இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவர் பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாத்திரங்களை கற்று தேர்ந்தார். பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராசா இவரை சமத்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமத்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார். உடனே மைசூர் மகாராசா சமத்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து வந்தார். மேலும், மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின் விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி சுதிதப் பிரக்ஞன் ஆனார். அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை ஆசை, அபிலாசைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார்.

ஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ப்ரமேந்திரர். தூரத்தே இருந்து அவர் தவம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மகானை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள் கருதினர். பல நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்தது. அப்போது வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது,. உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவர், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று விட்டார்.

புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.

பின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீட்சை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தட்சிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அட்சரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூசை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூசை செய்யப்பட்டு வருகிறது.)

#கோயில் பணியில்:

புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு தட்சிணாமூர்த்தி மந்திரத்தை, மண்ணில் எழுதிக் கொடுத்தது, இன்றும் புதுக்கோட்டை அரண்மனையில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் உள்ளது.

தஞ்சாவூரில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைக்க காரணமானவர். தேவதானப்பட்டியில் காமாட்சி அம்மன் கோயிலை நிறுவியவர். கரூரில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலை நிர்மாணிப்பதில் பங்கு கொண்டவர். தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச கோயிலில் அனுமார் விக்கிரகத்தை நிர்மாணித்தவர்.

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலின் ராகு தலத்தில் கணபதி இயந்திர மந்திரத் தகட்டை எழுதிப் பதித்தவர்.

1755 –ம் ஆண்டு சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்து இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நெரூரில் அவரது ஜீவ சமாதியைக் கட்ட புதுக்கோட்டை மன்னர் உதவி இருக்கிறார். இன்றும் அவரது ஜீவசமாதிக்குப் பல ஆன்மிக அன்பர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். சென்றவர்கள் அங்கு அவரது ஆன்மிக அலைகளை உணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு (தான்தோன்றி) இலிங்கமும் அமைந்திருக்கிறது. இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு. இத்தலத்தில் பெளர்ணமி பூசை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூசை , சித்திரை மாத குரு வார பூசை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் மானச சஞ்சரரே, சர்வம் பிரம்ம மயம், பிபரே இராமரசம், பிரூகி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்திர விருத்தி, பிரம்ம தத்துவ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்திய விலாசம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

சதாசிவ பிரமேந்திரரின் சமாதி மூன்று இடங்களில் உள்ளது.

1.நெரூர் சமாதி, கரூர்
2.மானாமதுரை
3.கராச்சி, பாகிஸ்தான்

அவரது ஜீவசமாதிக்கு ‘ஒரு யோகியின் சுயசரிதை’யை எழுதிய பரமஹம்ச யோகானந்தரும் சென்று வழிபட்டிருக்கிறார்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...