அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையைப் போற்றித் துதிக்கும் அற்புதப் பாடல்களுள் ஒன்று ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது . நவரத்தினங்களான, வைரம், நீலம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், பத்மராகம் (புஷ்பராகம்), வைடூரியம் முதலியவற்றைக் குறிக்கும் சொற்களின் மூலம் அம்பிகையைத் துதிப்பதாக அமைந்துள்ள பாடல் இது. இதைப் பாடுவோர், அம்பிகையின் கருணையால் சிவரத்தினமாய்த் திகழ்வார் என்று நூற்பயன் கூறுகிறது.
காப்பு
ஆக்கும் தொழில் ஐந்து அரன் ஆற்ற நலம்பூக்கும்
நகையாள் புவனேஸ்வரி போல் சேர்க்கும் நவரத்தின
மாலையினைக் காக்கும் கண நாயக வாரணமே!
கற்றும் தெளியார் காடே கதியாய்கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நிலை எண்ணில் அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருள் கணையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (1)
நீலம்
மூலக் கனலே சரணம் சரணம்முடியா முதலே சரணம் சரணம்
கோல கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக் குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்று எளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரீ வருவாய் வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (2)
முத்து
முத்தேவரும் முத்தொழில் ஆற்றிடவே முன்னின்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸினியே சரணம்
தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்
மத்தே றுததிக் கிணை வாழ்வு உடையேன் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (3)
பவளம்
அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர் தேன் பொழிலாம் இது செய்தவள் யாரோ
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவருக்கு அருள் எண்ணம் மிகுந்தாள்
மந்திர வேதமயப் பொருள் ஆனாள் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (4)
மாணிக்கம்
காணக் கிடையாக் கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாக் பொலிவானவளே புனையக் கிடையாப் புதுமைத் தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (5)
மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ச்ருதி ஜதி லயமே இசையே சரணம்
அர ஹர சிவ என்று அடியவர் குழும் அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (6)
கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாப் பயனும் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே குழல் யாழ் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (7)
பத்மராகம்(புஷ்பராகம்)
ரஞ்சினி நந்தினி அங்கணி பதும ராகவி காஸவி யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்திர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்கிருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
வைடூர்யம்
வலை ஒத்த வினை கலை ஒத்த மனம் மருளப் பறையாறு ஒலி ஒத்த விதால்
நிலையற்று எளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்று அசைவற்று அநுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (9)
நூற்பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எலாம் அடைவார் சிவரத்தினமாய்த் திகழ்வார் அவரே (10)
*🔥🔥🔥திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில்🔥🔥🔥*
அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில்,
*லலிதாம்பிகை திருக்கோயில் குறிப்பு:*
தல மூர்த்தி : அருள்மிகு மேகநாத சுவாமி
தல இறைவி : அருள்மிகு லலிதாம்பிகை (சாந்த நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி
திருமீயச்சூர் பெருங்கோயில் *கஜப்பிரஷ்ட விமான அமைப்பினை* உடையது. இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும், கோயிலின் இரண்டாவது உள் கோபுரம் மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடனும் காணப் படுகின்றன. முதலில் அன்னை லலிதாம்பிகை குடிகொண்டுள்ள சன்னதி தனி கோபுரத்தின் கீழ் உள்ளது. அதனை அடுத்து, பெருங்கோயிலின் இரண்டாவது உள் கோபுரத்தில் நுழையும்போது ரத விநாயகர் நம்மை வரவேற்கிறார். முதலில் மேகநாத சுவாமி சன்னதி அமைந்துள்ளது. உட் பிரகாரத்தின் தென் பகுதியில் நாக பிரதிஷ்டைகள், சேக்கிழார், போன்றோரது திருவுருவங்களும், சப்த மாதாக்கள் பூஜித்த லிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில், அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட லிங்கங்கள், வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், ஈசான லிங்கங்களும் உள்ளனர்.
இக்கோயில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக, சுவாமி அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தின் *க்ஷேத்திர புராணேஸ்வரர்* திருவுருவம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தில் என்ன *ஒரு விசேஷம்* என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் ஒரு புறத்தில் இருந்து பார்க்கும்போது *சிரித்த முகமாகவும்,* மற்றொரு புறத்தில் இருந்து காணும் போது *கோபமாகவும்* தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்த சிற்பத்தை காணும்போது நம் தினப்படி வாழ்வில் நடக்கும் விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. வீட்டில் கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சினைகள் நடந்து, சண்டை சச்சரவுகள் நடந்தாலும், வெளியில் இருந்து ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அப்படியே கோபமான முகத்தை, சாந்தமான முகமாக மாற்றிக்கொண்டு விருந்தோம்பல் புரிவது நமது பண்பாடு. இவ்வாறு இறைவன் கூட அவர்களைக் காணச் சென்ற பக்தர்களாகிய நம்மை விருந்தினர்களாக நினைத்து தன் மனைவியை சிரித்த முகத்துடன் இருக்குமாறு சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
ஈஸ்வரனக்குத்தான் அவரது பக்தர்கள் மேல் எத்தனை பிரியம்.
இப்பெருமானைப் பார்த்துவிட்டு அப்படியே சுற்றி வரும்போது தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர், ஆகியோரது திருவுருவங்களையும் கடந்து செல்கின்றோம். இந்த பெருங்கோயிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், போதிகை தூண்களும் அழகு சேர்க்கின்றன. இக்கோயிலின் வடப் பக்கத்திலே இளங்கோயிலை தரிசனம் செய்யலாம்.
இத்திருக்கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுரங்களின் தரிசனம் கோடானு கோடி புண்ணியம்.
அமைவிடம்:
அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோயில், திருமீயச்சூர் என்னும் ஒரு சிற்றூரில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள *பேரளம்* என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 km தொலைவிலும், திருவாரூரில் இருந்து 22 km தொலைவிலும் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து சுமார் 20 km தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது..
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment