1. அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர்

அம்மன்         :     பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி

தல விருட்சம்   :     வன்னி

தீர்த்தம்         :     ஆதிசேஷ தீர்த்தம்

புராண பெயர்    :     சேஷபுரி, திருப்பாம்புரம்

ஊர்            :     திருப்பாம்புரம்

மாவட்டம்       :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு:

கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர். ஆதிசேஷனுடைய மூலவிக்கிரகமும் உற்சவ விக்கிரகமும் கோவிலில் உள்ளன.

 

கோயில் சிறப்புகள்:

  • சர்ப்பங்கள் தாங்கள் பாவ விமோசனம் பெறும் பொருட்டு, ஆல மர விழுதை நாராகக் கிழித்து, அகத்திப் பூ மாலை தொடுத்து இறைவனுக்குச் சாற்றி சிவனருள் பெற்ற தலம்.

 

  • இன்று வரை இத்தலத்தில் எவரையும் பாம்புகள் தீண்டியதில்லை; இங்கே ஆலம் விழுதுகள் தரையைத் தொடுவது இல்லை; அகத்தி பூப்பதில்லை எனும் நம்பிகை மொழிகள் வழக்கிலுள்ள தலம்.

 

  • சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.

 

  • இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது.

 

  • மூலவர் பாம்புரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.

 

  • இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும்.

 

  • திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.

 

  • திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய், செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்று தனது பதிகத்தில் கடைசிப் பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

 

  • சோழர்கள் எழுப்பிய தேவாரத் திருத்தலங்களில் 59 வதாக இருக்கிறது திருப்பாம்புரம் கோவில்.

 

 

திருவிழா: 

சிவனுக்குரிய அனைத்து திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:.

அருள்மிகு பாம்பு புரேஸ்வரர் திருக்கோயில்

திருபாம்புரம். 



ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 

இரா இளங்கோவன் 

நெல்லிக்குப்பம்..