Monday, June 30, 2025

யார் இந்த நந்தனார்?

யார் இந்த நந்தனார்?
சைவ‌ சமயத்தின் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெரிதும் மதிக்கப்படுபவர் நந்தனார் நாயனார். இவருக்கு திருநாளைப் போவார் என்று வேறு பெயரும் உண்டு.

தமிழ்நாட்டில் கொள்ளிட நதி பாயும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, வைத்தீஸ்வரன் கோயிலை‌ அடுத்த‌‌ ஆதனூர் என்ற ஊரில் பிறந்தார். இவ்வூரில் உள்ள சேரியிலே புலைப்பாடி ஒன்று இருந்தது. சிவபெருமானின் திருவடி நினைத்து தினம்தோறும் போற்றி புகழ்வார். அக்காலத்தில் திருக்குலத்தைச் சார்ந்தவர்கள் எவரும் கோவிலுக்கு செல்ல இயலாது. திருக்குலத்தைச் சார்ந்த நாயனாரும் அதற்கு விதிவிலக்கல்ல. 

சிவபெருமான் மீது தீராத காதல் கொண்டிருந்த நந்தனாரால் கோவிலுக்கு நேரே சென்று சிவபெருமானை தரிசிக்க இயலவில்லை. சிவலாயங்களின் கோபுரத்தையும், கோவிலையும் தரிசிக்கும் இன்பத்தைத் தன் இயற்தொழிலோடு பிணைத்துக் கொண்டு வாழ்ந்தார் நந்தனார்.

இவர் கோயில் முரசுகளுக்கு தோல் தைத்துக் கொடுப்பது, யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது, கோரோசனை வழங்குவது, கைலாய வாத்தியத்திற்கு தோல் மற்றும் வார் செய்து சிவாலயத்திற்கு தருவது போன்ற வேலைகளை செய்து வந்தார். அதில் கிடைக்கும் பணத்தை தனக்காக இல்லாமல் சிவ தொண்டு திருப்பணிகளுக்கு செலவு செய்து வந்தார். 

நந்தனாருக்கு நீண்ட காலமாகவே ஈசனை காண வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. ஒருசமயம் நந்தனார் மயிலாடுதுறை அருகே உள்ள திருப்புன்கூரில் உள்ள சிவலோகநாதரை தரிசிக்க எண்ணி திருப்புன்கூரை அடைந்தார். அக்கோவிலின் உள்ளே செல்ல அக்கால கட்டுப்பாடுகள் தடுத்ததால் வெளியே நின்று கொண்டு சிவலோகநாதரை தரிசிக்க முயன்றார்.

சிவலோகநாதரின் முன்னால் இருந்த நந்தி பகவான் நந்தனாருக்கு இறை தரிசனத்தை மறைத்தார். இதனால் மனம் நொந்த நந்தனார் இறை தரிசனம் கிடைக்க அருள்புரியுமாறு இறைவனை மனம் உருகி வேண்டினார்.

இறைவன் தம் பக்தனின் மீது இரக்கம் கொண்டு சற்று வலதுபுறம் விலகி இருக்குமாறு நந்திக்கு ஆணையிட்டார். இறைவனின் ஆணைப்படி நந்திதேவர் விலகியதும் நந்தனாருக்கு சிவலோகநாதரின் தரிசனம் அற்புதமாகக் கிடைத்தது. அதனைக் கண்டதும் நந்தனார் இறைவனைப் போற்றிப் பாடி, ஆடி, குதித்து மகிழ்ந்தார். 

திருக்கோவிலை வலம் வந்தார். பின்னர் அவ்வூரைச் சுற்றி வருகையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டார். இவ்விடத்தில் குளத்தை வெட்டினால் திருக்கோவிலுக்கு வரும் அன்பர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணி தம்முடைய உடல் வலிமையால் அவ்விடத்தில் குளத்தை வெட்டினார். இதேபோன்று தன் ஊருக்கு அருகில் உள்ள பல ஊர்களுக்குச் சென்று திருத்தொண்டு புரிந்து வந்த நந்தனாருக்கு ஒரு நாள் தில்லை பெருமானை தரிசனம் செய்யும் ஆசை பெருகியது.

ஒருநாள் இரவு தில்லை தரிசனத்தை நினைத்துக் கொண்டிருந்த நந்தனாருக்கு, தன்னால் கோவிலின் உள்ளே சென்று ஆடலரசனை வழிபட இயலாத சூழ்நிலை நினைவுக்கு வர அவருக்கு சோர்வு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் தில்லை தரிசன ஆசை நந்தனாருக்கு உண்டானது. ‘நாளைப் போவேன்’ என்று எண்ணிக் கொண்டார்.

மறுநாளும் நந்தனாருக்கு தில்லை தரிசன ஆசையும், தில்லைக்குள் செல்லாத தன்னுடைய சூழ்நிலை சோர்வும் ஆட்கொண்டன. மீண்டும் நாளைப் போவேன் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது. இவ்வாறு நாளைப் போவேன், நாளைப் போவேன் என்று ஒவ்வொரு நாளாகக் கழிந்து கொண்டிருந்தது. 

நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் நந்தனாரிடம் ‘சிதம்பரம் செல்ல போகிறீர்களா?’ என்று கேட்டால் நாளைப் போவேன் என்று நந்தனார் கூறுவார். இதனால் எல்லோரும் திருநாளைப் போவார் என்று அழைத்தனர்.

ஒரு நாள் வானத்தில் மேகங்கள் ஒன்றாக கூடி சிவலிங்கமாக நந்தனாருக்கு காட்சியளித்தது. 'நந்தா... நீ சிதம்பரம் வா! என்று சிவபெருமான் அழைத்தார். அன்றிலிருந்து சிதம்பரம் செல்ல வேண்டும் என்ற ஆசை நந்தனாருக்கு கூடிக்கொண்டே சென்றது.

தில்லைக்குச் செல்ல போதிய பணம் இல்லாத காரணத்தினால், தன் முதலாளியிடம் சென்றார். நந்தனின் இந்த சிவபக்தியை சாதகமாக பயன்படுத்தி அவரை தன் பண்ணையிலும் வயலிலும் வீட்டிலும் நிறைய வேலைவாங்குவாரே தவிர நந்தனுக்கு பணம் ஏதும் தர மாட்டார். கேட்டால் 'நாளை தருகிறேன்' என்று கூறிவந்துள்ளார். 

ஒருநாள் பொறுமையிழந்து கோபம் அடைந்த நந்தனார், தன் முதலாளியிடம் சென்று பணம் கேட்டுள்ளார். முதலாளி நந்தனாரிடம், 'உனக்கு பணம் தர வேண்டுமென்றால், என்னுடைய நாற்பது ஏக்கர் நிலத்தையும் பயிர் செய்து அறுவடை செய்த பிறகு உனக்கு பணம் தருகிறேன்' என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நந்தனார் விவசாய நிலத்திலேயே அழுதபடி மயங்கி விழுந்தார். நந்தனாருக்காக இன்னொரு அற்புதத்தை நிகழ்த்தினார் பெருமான். விவசாய நிலம் அனைத்தும் பயிர் செய்து அறுவடைக்கு தயாராக இருந்தது. கண்விழித்து பார்த்த நந்தனார் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். இறைவனை எண்ணி போற்றி புகழ்ந்து பாடினார். இதை அறிந்த முதலாளி சிதம்பரம் செல்ல பண உதவி செய்து அனுப்பினார்.

தில்லை எல்லையை சென்று சேர்ந்தார் நந்தனார். எல்லையில் வணங்கி நின்று அங்கு எழும் வேள்விப் புகையையும் வேதம் ஓதும் ஒலியையும் கேட்டார். கோயிலுக்குள் செல்ல மனமில்லாமல் வெளியே பயந்து நின்றார். இரவு பகலாக தில்லையை வலம் வந்து 'இன்னல் தரும் இழிப்பிறப்பாகிய இது இறைவன் ஆடல் புரியும் பொன்னம்பலத்தை வழிபடுவதற்கு தடையாய் உள்ளதே..!' என்று வருந்தி உறங்கச் சென்றார். 

நந்தனாரது வருத்தத்தை நீக்கி தில்லைக் கூத்த பெருமான் அவரது கனவில் தோன்றினார். 'இப்பிறவி போய் நீங்க எறியனிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் முன்னணைவாய்' எனக்கு கூறி, அவ்வண்ணமே வேள்வித்தீ அமைக்கும் படி தில்லைவாழ் அந்தணருக்கு கனவில் தோன்றி அருள் புரிந்து மறைந்தருளினார்.

மறுநாள் திருக்கோயில் அந்தணர்கள் ஒன்று கூடி திரண்டு, பூரண கும்ப மரியாதையுடன் நந்தனாரை கோயிலுக்கு அழைத்து வருவதற்கு ஆயத்தமானார்கள். அவரை ஜோதி வடிவில் இறைவன் வரச் சொன்னதாகச் சொல்லினர். "என் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களை செய்தார் இறைவன். அவையெல்லாம் நானே எதிர்பாராதது. நான் வருவதற்கே ஒரு அற்புதம் செய்து அனுப்பினார். இறைவனின் விருப்பத்தை யாராலும் தடுக்க இயலாது" என்றார் நந்தனார்.

வேள்வி தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீயில் நந்தனார் கவலையின்றி "திருச்சிற்றம்பலம்" என ஈசனை நினைத்தவாரே இறங்கினார். இறைவனின் பல அதிசயங்களில் ஒன்று இங்கு நடந்தது. தீயில் இறங்கி தன் உடல் அழிய பெற்று அழகிய ஞான ஒளி வீசும் தெய்வீக தோற்றத்துடன் பொன்னொளி வீச வெளிப்பட்டார் நந்தனார். தில்லை அம்பலத்தாரின் திருவடிகளில் கலந்து மறைந்தார்.

இவ்வாறு தன் வாழ்வையே சிவபெருமானுக்கு அர்ப்பணித்த நந்தனாரை புகழ்ந்து, "செம்மையே திருநாளை போவார்க்கு அடியேன்" என சுந்தரர் பாடியுள்ளார். ஆண்டுதோறும் நந்தனாரின் குருபூஜை, புரட்டாசி மாத ரோகிணி அன்று விமரிசையாக நடைபெறுகிறது!!

ஓம் நமசிவாய 🙏🏻

உலகின் ஒரே அஷ்டம சனி பரிகார கோயில் எட்டியத்தளி அகதீஸ்வரர்

உலகின் ஒரே அஷ்டம சனி பரிகார கோயில்
திருநள்ளாறு சனி பகவான் திருக்கோயில் எல்லாவிதமான சனி தோஷங்களையும் போக்கும் பரிகாரத் தலமாக இருந்தாலும், அஷ்டம சனி தோஷத்துக்கென்று விசேஷ பரிகாரத் தலமாக விளங்குவது, புதுகோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அருகில் அமைந்துள்ள எட்டியத்தளி அகதீஸ்வரர் திருக்கோயிலாகும்.

மேலும், ஜாதகத்தை இக்கோயில் நவக்கிரகத்தின் அருகில் வைத்து பூஜை செய்யும் வழக்கம் இந்த ஒரு ஆலயத்தில் மட்டும்தான் உள்ளது. அகத்தியரால் பூஜிக்கப்பட்ட இந்தத் தலம் சனி தோஷத்திற்கு சக்தி வாய்ந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. களத்திர தோஷம் உள்ளவர்களும் வழிபட வேண்டிய கோயிலாக இது திகழ்கிறது.
அசல்பதிவேற்றியவருக்கு நன்றி.

ஒரு சமயம் அகத்தியர் ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தை அடைந்தார். மாலை நேரம் ஆகிவிட்டதால், நித்ய கர்மானுஷ்டங்களை முடிக்க எண்ணினார். அப்போது அங்கே ஒரு குளமும், சுயம்பு லிங்கமும் இருப்பதைக் கண்டார். அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து இரவு அங்கேயே தங்கி விட்டார். அச்சமயம் அஷ்டமத்து சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டலத்து மன்னன் காளிங்கராயன் ராமேஸ்வரம் சென்று நீராடி விட்டு திருநள்ளாறு செல்வதற்காக அவ்வழியாக வந்தான். அப்போது அவன் அகத்திய மாமுனிவரை சந்தித்தான்.

மன்னரிடம், அவனது அஷ்டம சனி தோஷம் நீங்க, ஆலயம் ஒன்றை எழுப்பி தான் வழிபட்ட இந்த லிங்க மூர்த்தத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினார் அகத்தியர். அதன்படியே காளிங்கராயன் ஆலயம் ஒன்றை எழுப்பி அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றான். அகத்தியர் வழிபட்டதால் இத்தல இறைவன் அகஸ்தீஸ்வரர் என்றும் அம்மன் அகிலாண்டேஸ்வரி என்றும் பெயர் பெற்றனர்.வேதசத்சங்கம்.வேதசத்சங்கம்.

இத்தலத்தில் சனி பகவான் சிறப்பு சக்திகளுடன் அருள்பாலிக்கிறார். கருவறையில் உள்ள இறைவன் ஈசான்யத்தை பார்ப்பது போல அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். மற்ற ஆலயங்களில் சனி பகவானுக்கு இடதுபுறம் ராகு பகவானும், வலதுபுறம் கேது பகவானும் அமைந்திருப்பார்கள். ஆனால், இங்கு வலப்பக்கத்தில் ராகு பகவானும், இடப்பக்கத்தில் கேது பகவானும் அருள்புரிகிறார்கள். ராகு பகவானின் பார்வை சனி பகவான் மீது படுவது மிகவும் சிறப்பாகும்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தியை, ‘கல்யாண தட்சிணாமூர்த்தி’ என்றே அழைக்கிறார்கள். அதாவது, திருமணம் தடைபடுபவர்கள் இவரை வழிபட, கூடிய சீக்கிரத்தில் திருமணம் நிகழும் என்று சொல்லப்படுகிறது.

பல ஆண்டுகளாக இக்கோயில் வழிபாட்டில் இருந்து வந்த அன்னை அகிலாண்டேஸ்வரி விக்ரஹத்தின் ஒரு கரம் சேதம் அடைந்ததால் அதற்கு பதில் புதிதாக ஒரு விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ய கோயிலுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால், அப்போது சில அமங்கலமான நிகழ்வுகள் ஏற்பட்டதால் பழைய விக்ரஹத்தை அப்புறப்படுத்தாமல் இரண்டு அம்பாள் விக்ரஹத்திற்கும் பூஜை செய்ய ஆரம்பித்தனர். பொதுவாக, இரண்டு அம்பாள் இருக்கும் கோயில் களத்திர தோஷ பரிகாரத் தலமாக விளங்கும். அந்த வகையில் இக்கோயிலும் களத்திர தோஷத்திற்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும், அம்மனின் பார்வை நவக்கிரகங்களின் மீது படுவது போல அமைந்திருப்பது இக்கோயிலுக்கு மேலும் சிறப்பைக் கூட்டுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

முருகனுக்கு “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திர விளக்கம்.

முருகனின் ஆறெழுத்து மந்திரம்
ஒவ்வொரு கடவுளுக்கும் சிறப்பான ஒரு மந்திரம் இருப்பது போல தமிழ் கடவுளான முருகனுக்கு “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரமே சிறப்பான மந்திரமாக கருதப்படுகிறது. இதில் வெறும் ஆறெழுத்துக்கள் தான் இருக்கிறது என்றாலும் கூட இதில் ஆறு மந்திரங்களும் ஆறு விதமான பலன்களும் ஒளிந்துள்ளன.

சரவணபவ மந்திரம் விளக்கம்

1. சரஹணபவ – என மனமுருகி ஜபித்து வந்தால் “சர்வ வசீகரம் உண்டாகும்”.

2. ரஹணபவச – என மனமுருகி ஜபித்து வந்தால் “செல்வமும் செல்வாக்கும் பெருகும்”.

3. ஹணபவசர – என மனமுருகி ஜபித்து வந்தால் “பகை,பிணி நோய்கள் பறந்தோடும்”.

4. ணபவசரஹ – என மனமுருகி ஜபித்து வந்தால் “எதிர்ப்புகள் நீங்கும், எதிரிகளாக உண்டாகும் தொல்லைகள் நீங்கும்”.

5. பவசரஹண – என மனமுருகி ஜபித்து வந்தால் “இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் நம்மை விரும்பும்”.

6. வசரஹணப – என மனமுருகி ஜபித்து வந்தால் “எதிரிகளின் சதி,அவர்களால் வரும் தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்”.

இந்த ஆறு மந்திரங்களில் உள்ள பலன்களில் எதை நீங்கள் பெற விரும்புகிறீர்களோ அதற்கான மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்றோ அல்லது செவ்வாய் கிழமை அன்றோ சொல்ல துவங்கி பின் தினமும் ஜபித்து வர வேண்டும். தினமும் இந்த மந்திரத்தை குறைந்தது 108 முறையாவது ஜெபிக்கவேண்டும். மந்திரத்தை ஜெபிக்கும்போது சிந்தையில் முருகனை தவிர வேறெதுவும் இருக்க கூடாது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, June 29, 2025

இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்த இத்திருத்தலம்..

தேவாரம் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்றான #திருநாவலூர் #திருநாமநல்லூர்
மூலவர் : #பக்தஜனேசுவரர் (ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்,
அம்மன்/தாயார் : #மனோன்மணி (நாவலாம்பிகை, சுந்தர நாயகி,
தல விருட்சம் : நாவல்மரம்
தீர்த்தம் : கோமுகி தீர்த்தம், கருட நதி
ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
புராண பெயர் : ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர்
ஊர் : திருநாவலூர்
மாவட்டம் : விழுப்புரம்
 மாநிலம் : தமிழ்நாடு
 
 #பாடியவர்கள்: சுந்தரர், அருணகிரிநாதர்

#தேவாரப்பதிகம்
அஞ்சுங் கொண்டு ஆடுவார் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார் தஞ்சங் கொண்டார் அடிச் சண்டியைத் தாமென வைத்துகந்தார் நெஞ்சங் கொண்டார் வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டு நஞ்சங் கொண்டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
                   - சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 8வது தலம். 
 
    
 #திருவிழா: 
      திருநாவலூர் சிவாலயத்தில் காமிக ஆகமத்திலுள்ள விதிமுறைகளுக்கேற்ப வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுந்தரர் ஜனன விழா - ஆவணி மாதம் - உத்ர நட்சத்திரம் நாளன்று - 1 நாள் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். சுந்தரரின் குருபூஜை விழா - ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா - 15 நாட்கள்- சித்திரைப் புத்தாண்டு நாளில் பஞ்சமூர்த்திகளுக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் உபயதாரர்களின் உதவியுடன் அபிசேக ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று மனோன்மணியம்மனுக்குச் சிறப்பு வழிபாடும் உற்சவருக்கு ஊஞ்சல் உற்சவமும் நிகழும். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் துர்க்கை , மனோன்மணியம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கைக்கு ராகுகால வழிபாடு நிகழும். இவ்வைபவங்களில் மகளிர் அதிக அளவில் பங்கேற்பர் வெள்ளி கிழமைகளில் சுக்கிரனுக்கும் அவர் தாபித்த லிங்கத்திற்கும் சிறப்பு பூஜைகள் நிகழும். வெண்ணெய் வெண்மை நிறமுடைய நெய், மொச்சை, வெண் பட்டாடை ஆகியவற்றுடன் வழிபாடு சிறப்பாக நடத்தப்படும். வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற ஆடை மஞ்சள் மலர்கள் மஞ்சள் நிறக் கடலை ஆகிய பொருட்களுக்களை ப் படைத்து சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுகின்றன. தவிர பிரதோச நாட்களின் போதும் ,விசேச நாட்களின் போதும் கோயிலில் பக்தர்கள் நிரம்ப அளவில் வருகின்றனர்.  
     
#தலசிறப்பு: 
     இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. சுந்தரர் அவதரித்த தலம் சுக்ரன் வழிபட்ட சிவதலம் இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.இவர் பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர். இவர் சுந்தரருக்கு காட்சியளித்தவர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 220 வது தேவாரத்தலம் ஆகும்.

#பொதுதகவல்: 
     இந்த பக்தஜனேசுவரர் ஆலயம் மிகவும் பழமையானது. சுந்தர மூர்த்தி சுவாமிகளை நமக்கு தந்த அரிய தலம். அம்பாள் விரிசடை கோலத்தில் தியான சொரூபமாக உள்ளார் என்பது சிறப்பு. பிரம்மா, விஷ்ணு, பார்வதி, சண்டிகேஸ்வரர், இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள், சூரியன், சுக்கிரன், கருடன், சப்தரிஷிகள் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.

ஐந்தடுக்கு ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் கொண்ட இக்கோயிலின், முதல் பிரகாரத்தின் வலது பக்கத்தில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் சுந்தரருக்கு தனி சன்னதி உள்ளது. பொதுவாக நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் கிழக்கு நோக்கி இருப்பார். ஆனால், இங்கு சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். இவர் இறைவனை தரிசிப்பதாக ஐதீகம்.

இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்த ஜனேசுவரரை வணங்கி தரிசித்த இறைவியாகிய மனோன்மணியை வணங்கி அம்பிகையின் சொல்படி சுக்ரபகவான் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோசம் நிவர்த்தி பெற்ற தலம்.கோயிலை அடுத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரம் செய்த இடத்தில் திருமடம் ஒன்றை எழுப்பி உள்ளனர்.

#தலபெருமை: 
     பிரம்மா, விஷ்ணு . சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர்,சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்ட தலம்.

ஈசனை மூலையில் நவகிரகங்களுக்கு அருகிலேயே சுக்கிரனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்மார்த்த பூஜை செய்த லிங்கமான பார்க்கவீசுவரர் லிங்கம் உள்ளது. பார்வதிதேவி இங்கு எழுந்தருளி சிவனை பூஜித்து, அவர் மனம் மகிழ மணம் புரிந்தார். இரணியனை கொல்வதற்காக மகாவிஷ்ணு இங்குள்ள சிவனை பூஜித்து நரசிம்ம அவதாரம் எடுக்கும் ஆற்றலை பெற்றார்.

சிவப்பிரியர் என்பவர் சிவனை பூஜித்து சண்டிகேஸ்வரர் பதவி பெற்றதும், ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சினால் கருநிறமடைந்த கருடன், சிவனை பூஜித்து விஷம் நீங்கியதுமான தலம். கிருதயுகத்தில் விஷ்ணு வழிபட்ட லிங்கம், திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரர் வழிபட்ட லிங்கம், துவாபரயுகத்தில் பிரம்மா வழிபட்ட லிங்கம், கலி யுகத்தில் சுந்தரர் வழிபட்ட லிங்கம் இங்குள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை பாடியுள்ளார்.

👉சுக்கிரன் வழிபட்ட லிங்கம் : சுக்கிரன் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை தாபித்து அதற்கு முறைப்படி பூஜைகள் நடத்தி இறையருள் பெற்றார்.சுக்கிரன் நிறுவிய லிங்கம் நவகிரகங்களுக்கருகே அமைந்துள்ளது. வெள்ளிக் கிழமைகளில் இந்த லிங்கத்துக்கு விசேச வழிபாடுகள் நடக்கின்றன.

நவகிரகங்களுள் சூரியன் மேற்கு நோக்கியவாறு இங்கு காட்சியளிக்கிறார்.

பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன.

இத்தலத்தின் சிறப்பை பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார்.

#தலவரலாறு: 
     அமிர்தத்தை கடைந்த காலத்தில் வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை இறைவன் சாப்பிட்டு நஞ்சு விந்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில் இறைவன் தானாக தோன்றப் பெற்று 4 யுகங்களுக்கு முன்பே இங்கு இறைவன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கர்ப்ப கிரகம் மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.இது மிகப் பழமையான கோயில் ஆகும்.ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில் சுந்தரர் ஜம்பு என்ற வடமொழி பெயரை நாவல் என்று அழைத்து திருநாவலீசன் என்று ஈசனையும் திருநாம நல்லூர் என்று ஊர்ப்பெயரையும் பாடலில் அழைத்துள்ளார்.

இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்த இத்திருத்தலம் ஒவ்வொரு சைவ சமய அன்பர்களும் சென்று தரிசிக்க வேண்டிய தலம். ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் "சஞ்சீவினி' மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவ, அசுர போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால், இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் "சஞ்சீவினி' மந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து, அவரை விழுங்கி விட்டார்.

சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள், இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரகம் தொடர்பான தோஷம் விலகி, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

#ஆலயகுருக்கள்

முத்துசாமி சிவம் (செல்பேசி 94433 82945)
செந்தில் குருக்கள் (செல்பேசி 94861 50809)

#திறக்கும்நேரம்

தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

#அமைவிடம்

 அ/மி. பக்தஜனேசுவரர் திருக்கோயில், 
 திருநாவலூர் & அஞ்சல், 
 உளுந்தூர்பேட்டை வட்டம், 
 விழுப்புரம் மாவட்டம் - 607 204.

மாநிலம் : தமிழ் நாடு 
சென்னை - திருச்சி டிரங்க் ரோடில் விழுப்புரம் தாண்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாக செல்லும் பண்ருட்டி சாலையில் 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

அமர்நீதியார் குருபூசைநாள் ஆனி பூரம்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்ற இந்த வரிகளுக்கு ஏற்ப.....
நாயன்மார்கள் வரிசை பட்டியலில் இவர் (3) அமர்நீதி நாயனார்
சைவ சமய 63 நாயன்மார்களில், 'வணிகர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார் பற்றி தெரிந்து கொள்வோம்....

பெயர்: அமர்நீதி நாயனார்
குலம்: வணிகர்
பூசை நாள்: ஆனி பூரம் 
அவதாரத் தலம்: பழையாறை
முக்தித் தலம்: திருநல்லூர்

அமர்நீதி நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.

அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 

7 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர்.
கோவணக் கள்வராக வந்த சிவபெருமானின் முன்பு துலைத்தட்டில் (தராசில்) தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, 
அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் இவர்.

இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தாமும் அதன் மேல் ஏறி அமர்ந்தார். 
அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன.

அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார்.

அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன் – திருத்தொண்டத்தொகை

இறைவனும் இறையடியாரும் ஒரே நிறை. அம்மையப்பரான இறைவனே நம் தலைவர்.

அவரைப் பூசித்தல் ஒன்றே தலையாய கருமம். அதன் பின்னாகவே இக்கருமத்தைச் செய்யும், தில்லைவாழந்தணரை நம் தலைவராகக் கொள்ளுதல் நன்று, அரன் நாமத்தை மந்திரமாக்கிக் கொள்ளுதலும் நன்று.

ஆயின் இறையடியாரையும் தலைவராகக் கொள்ளுதல் வேண்டுமோ? அவர்தம் உடைமையே அனைத்துமென்று அவர் வேண்டுவதெல்லம் இல்லையென்னாது கொடுப்பதும் (இயற்பகை) அவரை மகேசுவரராகப் பூசித்தலும் (இளையான் குடிமாறர்) அவர்தம் வேடத்தையே மெய்ப்பொருளாகக் கொள்வதும் (மெய்ப்பொருள் நாயனார்) இறைவனைத் தொழமுன் அவர்களைக் கும்பிடுவதும் (விறன்மிண்டர்) ஆகிய இவையெல்லாம் எதற்கு.

 என்பர்க்குரிய விடையாக அமர்நீதி நாயனார் புராணம் அமைந்திருக்கின்றது.

வேதப் பொருளான சிவனும் சிவனடியார்களும் ஒரே நிறை என்பதே அவ்விடை.

அமர்நீதியார் குருபூசைநாள் ஆனி பூரம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, June 27, 2025

ஞானபுரீஸ்வரர் திருவடிசூலம் காஞ்சிபுரம்.

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், திருஇடைச்சுரம்,
திருவடிசூலம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 
603 108.   
*திருஇடைச்சுரம் தற்போது திருவடிசூலம் என்று மக்கள் வழக்கில் அறியப்படுகிறது.

*இறைவன் பெயர்: ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர் 

*இறைவி பெயர்: கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை                   

*தல மரம் : வில்வம்

*தீர்த்தம்: சாட்சி தீர்த்தம்

*பாடல்பெற்ற தொண்டைநாட்டுத்தலம். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் உள்ளது. 

*வழிபட்டோர்:   அப்பர்,  சேக்கிழார், சனற்குமாரர், கெளதம ரிஷி, பிருங்கி ரிஷி ஆகியோர். 
*திருஇடைச்சுரம் பல குன்றுகளுக்கு நடுவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திருவடிசூலம் கிராமத்தில் அமைந்துள்ளது. 

இக்கோவிலுக்கு ராஜகோபுரம் உள்ளது. கோவிலுக்கு வெளியே இடதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால், விசாலமான தெற்கு வெளிப் பிராகாரத்தில் நேரே வலம்புரி விநாயகர் சந்நிதியைக் காணலாம். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது, கிழக்குப் பிராகாரத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இப்பிராகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. 

அருகில் வேப்பம், அரசு, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். 

மேலும் இந்தக் கிழக்குப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் உள்ள சந்நிதியும் உள்ளது. 

பிராகார வலம் முடிந்து மீண்டும் தெற்குப் பிராகாரம் வந்தால், தல விருட்சம் வில்வ மரம் உள்ளது. இந்த வில்வ மரத்துக்கு அருகில் ஒரு பாம்புப் புற்று உள்ளது. இது விநாயகர் வடிவில் காட்சி தருகிறது. 

தெற்குப் பிராகாரத்திலுள்ள மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால், அநேக தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து நேரே தெற்கு நோக்கிய இறைவி கோவர்த்தனாம்பிகை சந்நிதியைக் காணலாம். சந்நிதிக்குள் நுழைந்தால், இடதுபுறம் கிழக்கு நோக்கிய இறைவன் ஞானபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. ஒரே இடத்தில் நின்றபடி இறைவன், இறைவி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சி அளிக்கின்றனர். கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது. 

வலமாகச் சுற்றி வந்தால், முதலில் நால்வர் பிரதிஷ்டையும், அதையடுத்து விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. அதையடுத்து பைரவரும் காட்சி தருகிறார். 

*இத்தலத்தின் சிறப்பு, மூலவர் லிங்கத் திருமேனி. இந்த சுயம்பு லிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது தீப ஒளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது.  இத்தலத்தில் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வது ஒரு சிறப்பம்சம்.

தேன் அபிஷேகம் செய்து அந்த தேனை பிரசாதமாக வாங்கி தினமும் உட்கொண்டு வந்தால், சகலவிதமான நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். 

*திருஞானசம்பந்தரும் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில், இத்தல பதிகத்தைப் பாராயணம் செய்து இறைவனை வழிபடுவர்கள் பிணிகள் இன்றி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.   

*அம்பாள், பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம் ஆதலால், இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.             

*கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.         

*இது கருங்கல் கட்டமைப்புடைய பழமையான திருக்கோயில்.       

*தல வரலாறு:
திருஞானசம்பந்தர் தனது சிவத்தல யாத்திரையின்போது இவ்வழியே வந்துகொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட, ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள சம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரை பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி களைப்பு நீங்கிய சம்பந்தரைப் பார்த்து, இடையன் நீங்கள் யார் என்று வினவினான். தனது சிவத்தல யாத்திரை பற்றிக் கூறிய சம்பந்தரிடம், இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு சிவன் இருப்பதைப் பற்றிக் கூறினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தர், அவனது அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறைந்துவிட்டான். திகைப்படைந்த சம்பந்தர், சிவபெருமானை வேண்ட, சிவன் அவருக்கு காட்சியளித்து, தானே இடையன் வடிவில் வந்து அருள்புரிந்ததைக் கூறினார். 

இடையனாக வந்து, இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால், இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து சம்பந்தர் பதிகம் பாடினார். சிவன் மறைந்த குளக்கரை, காட்சிகுளம் என்ற பெயர் பெற்றது. 

*இத்தலத்தில் சனத்குமார முனிவர் இறைவனை வழிபட்டு உபதேசம் பெற்றதால், சனத்குமாரபுரி என்றும், அம்பிகை பசு வடிவில் இறைவனை வழிபட்டதால் கோவர்த்தனபுரி என்றும் இத்தலம் பெயர் பெற்றிருந்தது.  

*கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 8 முதல் 11.30 வரை, மாலை 4 முதல் - 6.30 வரை. 

*செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் இந்த சிவத்தலம் அமைந்துள்ளது. திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது. திருக்கோயில் வரை கார், தனிப் பேருந்து செல்லலாம். 
 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, June 26, 2025

இருபது_கைகளுடன் காட்சி தரும் துர்க்கை அம்மன் மகிஷாசுரமர்த்தினி..

 உலகப் புகழ்பெற்ற முதலாம் 
#இராஜேந்திர_சோழன் கட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க 
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்த தலமான 
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 
#கங்கைகொண்டசோழபுரம் என்ற #சோழீச்சரம் 
#பெருவுடையார் என்ற 
#பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் அமைந்துள்ள 
#இருபது_கைகளுடன் காட்சி தரும் 
 #துர்க்கை_அம்மன் 
(#மகிஷாசுரமர்த்தினி)
அம்மனை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

சிறுமி வடிவில் இருபது கைகளுடனும், சிரித்த முகத்துடனும்  காட்சியளிக்கும் அபூர்வ துர்க்கை அம்மன்:

இராஜராஜ சோழன் மகனான இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கிய தலம்தான் கங்கைகொண்ட சோழபுரம். இத்தலத்தில் அமைந்திருக்கிறது அவன் நிறுவிய பிரம்மாண்டமான பிரகதீஸ்வரர்  கோவில். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில், கும்பகோணத்திலிருந்து சுமார் 35 கி.மீ.  தொலைவில் இருக்கின்றது.

இராஜேந்திர சோழன், தான் வெற்றி பெற்ற தேசங்களில் இருந்து கொண்டு வந்த பல அற்புத சிற்பங்களை இக்கோவிலில் நிறுவியுள்ளான். சாளுக்கிய தேசத்தை வென்றதின்  நினைவுச் சின்னமாக கொண்டு வரப்பட்ட இருபது கைகள் கொண்ட துர்க்கை அம்மன், ஒரே கல்லிலான நவகிரக சிற்பங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். 

இந்த துர்க்கை அம்மன், சிரித்த முத்துடன் இருபது கரங்களில், பதினெட்டில்   ஆயுதங்களை ஏந்தியபடி, மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில், ஒன்பது வயது சிறுமியின் வடிவத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றாள்.  துர்க்கை அம்மன் என்றாலே நம் எல்லோருக்கும் உக்கிரமான தோற்றம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இத்தலத்தில் துர்க்கை அம்மன், சிறுமி வடிவில் சிரித்த முகத்துடன் அருள்பாலிப்பதால் இவளை பக்தர்கள், 'மங்கள சண்டி' என்று அழைக்கின்றனர். சண்டி என்பதற்கு துர்க்கை எனப் பொருள். துர்க்கை அம்மனின் இந்த தோற்றத்தை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது. 

துர்க்கை அம்மனுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது. ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர்தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில் இத்தேவிக்கு, காவடி எடுத்து விழாக் கொண்டாடப்படுகிறது. திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர்.

அதேபோல, ஒற்றைக் கல்லாலான நவக்கிரக வடிவமைப்பும்  சிறப்பானது. சூரியனை தாமரை வடிவில் சித்திரித்து, சுற்றிலும் மற்ற கிரகங்கள் எழுந்தருளியிருக்கும் வடிவ அமைப்பானது இந்தியாவில் வேறெங்கும் இல்லை. பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன். சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாதபடி மண்டப அமைப்பு உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பொன் கொடுக்கும் ஐஸ்வர்யேஸ்வரர் திருக் கோயில்கள்*.

பொன் கொடுக்கும் ஐஸ்வர்யேஸ்வரர் திருக் கோயில்கள்*.

*தலமும் பொன் பெற்ற பக்தரும்*.

சிதம்பரம்
திருவாரூர் 
திருச் சேறை   
திரு நின்றியூர் 
திரு நெல்வேலி 
மதுரை 
திருப் பூவணம் 
சித்தாய்மூர்
சீர்காழி 

திருக்கோலக்கா   
திருவாவடுதுறை 
திரு வீழி மிழலை
திருக்கடையூர் 
திரு முது குன்றம் 
நாகப் பட்டினம் 
திருப் புகலூர் 
திரு ஓணகாந்தன் தளி 
அரிசில் கரைப் புத்தூர்

மற்றும் பல கோயில்கள் வழிபட்டவர்களுக்குப் பொன் கொடுத்த கோயில்கள்.

*சிதம்பரம் நடராஜர் கோயில்*
         பூஜை முறை அந்தணர் நடை சார்த்தும் முன் திருச்சிற்றம்பலத்தில் சிவாய நம என்று ஐந்து எழுத்து ஓதி வைக்கும் தாமிரத் தகடு மறு நாள் முறை அந்தணர் சிவாய நம என்று ஓதித்  திறக்கும் போது   பொன் மேனி நடராஜர் திருவருளால் பொன்னாக மாறும்.

*செம்பு பொன்னாகும் சிவாய நம என்னில்*

*செம்பு பொன் ஆன திரு அம்பலமே*

என்று திருமூலர் போற்றுகிறார்.

*திருவாரூர் தியாக  ராஜர் கோயில்*
 . 
சீனிவாசப் பெருமாள்  குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்கப் பொன் வேண்டி சிவ பூஜை செய்த போது ஈசன் அவரைத் திருச்  சேறைக்கு வருமாறு பணித்தார்.
          பெருமாள்  பூஜித்த பெரிய   ருண விமோச்சன லிங்கம் உள்ள சந்நிதி  பிரகாரத்தில் உள்ளது. 

 *திருச்சேறையில்* வழிபட்ட   சீனிவாசனுக்குப் பரமேஸ்வரன் பெருமளவு பொன் அருளிச் செய்து கடன் தொல்லையைப் போக்கி அருளினார்.

செல்வம் அருளிய ஈசனுக்கு *செல்வர்* என்று திருநாமம். 
 
தேவாரப் பதிகம் முழுவதும்  *சேறைச் செந்நெறிச் செல்வனாரே* என்று    ஐஸ்வர்யேஸ்வரரைப் போற்றுகிறது .

*திரு நின்றியூர் மகா லட்சுமீஸ்வரர் கோயில்*
.
மகா லட்சுமி  பெரிய மகா லிங்கத்தைப் பூஜித்து சங்க நிதி பதும நிதி என்ற இரண்டு செல்வங்களுக்கு  அதிபதி  ஆகி  செல்வத்தின் தெய்வம் ஆனாள் .

*திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்*.

திருவண்ணாமலை திருவானைக்கா உள்ளிட்ட  பல தலங்களில் பூஜை செய்த குபேரன் நெல்லை சுயம்பு லிங்கத்தை வழிபட்டு செல்வத்தின் தேவன் ஆனான். 
           குபேரனை செல்வத்தின் தேவன் ஆக்கிய  நெல்லை யப்பருக்கு *செல்வர்*  என்று திருநாமம்.

*திரு நெல்வேலி உறையும் செல்வர் தாமே*  

என்று  ஒரு பதிகம்  முழுவதும் தெய்வ பாலகர் ஐஸ்வர்யேஸ்வரரைப்
போற்றுகிறார்.

*மதுரை சுந்தரேசர் கோயில்*

சொக்க லிங்கப் பரம் பொருள் அருளால்    முருகன் அவதாரமான உக்கிர குமார பாண்டியன்  வட நாடு சென்று
 சுந்தரேசர் அருளிய செண்டின் மூலம்  பொன் மலையாகிய மேரு மலைக் குகை யிலிருந்து   பெருமளவு பொன் பெற்றான்.

வேதம் ஓதும் வேதியர்களுக்கு 
சொக்க நாதர் எடுக்க எடுக்கக் குறையாத  பொன் கொண்ட உலவாக் கிழியை அருள் புரிந்தார் .

*மதுரை திருப் பூவணம் பூவணேஸ்வர் கோயில்*
 
மதுரைத் திருப் பூவணத்தில் வாழ்ந்த பொன்னனையாள் என்ற   தாயுமான சிவ நாமம் கொண்ட   பெண் அடியார்    மதுரை சுந்தரேசர் கோயில் போல் ஈசனது தங்கத்  திருமேனி  பிரதிட்டை செய்ய விரும்பி முயற்சித்த போது பரமேஸ்வரன் சித்தராக அவர் இல்லத்தில் எழுந்தருளித்   தங்கத் திருமேனி அருளினார்.
*பொன்னனையாள்*
 *திருவிளையாடல்  அன்பர்* .

திருவாரூர் அருகே *சித்தாய்மூர் எனப்படும் திருச்சிற்றேமத்தில்*  ஒரு பெண் அடியாருக்காக தினமும் பரமேஸ்வரன் பொற்காசு அருளினார்.

*சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோயில்*.

மூன்று வயது மழலை திருஞான சம்பந்தருக்கு பிரம்மபுரீசர் ஆண் பாதி பெண் பாதி யாகும் இருபால் அர்த நாரி ஈசனாய் அலிப் பெருமானாய் நந்தி மேல் வந்து  *பசும்பால் சாதம் உள்ள தங்கக் கிண்ணம்*  அருளினார்.

*சீர்காழியில்  திருக் கோலக்கா சப்த புரீஸ்வரர் கோயில்*

தெய்வ பாலகர்  பிஞ்சுக் கரங்களால் தாளம் இட்டுப் பாடிய போது ஓசை ஒலிப் பெருமான் அவருக்கு ஐந்தெழுத்து  பொறிக்கப்பட்ட  *தானே இசைக்கும் தங்கத் தாளங்களை* அருளினார்.

*திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில்*.
        
 சீர்காழி வேதியர்கள்  வேள்வி செய்வதற்காகத் தந்தை  சிவ பாத இருதயர் பொன் வேண்டிய  போது   திருஞான சம்பந்தருக்கு கோமுக்தீஸ்வரர் ஆயிரம் பொற்காசுகள்  அருளினார்.

*திரு வீழி மிழலை வீழி அழகர் திருக்கோயில்*

திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் தினமும் ஒரு தங்கக் காசு பெற்று  அன்ன தானம் செய்து அடியார் பசி போக்கினர்.

வீழி நாதர் திருஞான சம்பந்தருக்கு  எங்கும் இல்லாத புதிய சிறப்பான காசு அருளினார்.  
அதனால் கால தாமதம் ஆனதால்  ஞான பாலகர் 
 
*கறை கொள் காசினை முறைமை நல்குமே*

என்று   எல்லோருக்கும் புரியும் முறையில் புழக்கத்தில் உள்ள  கறை படிந்த  பழைய காசுகளை அருளுமாறு மாசிலா ஈசனை வேண்டிப் பாடிப்  பழங்காசு பெற்றார்.

*பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு*

என்று திருநாவுக்கரசர் போற்றுகிறார். 

சுந்தரர்  வீழி அழகரைப் பாடித்  தங்க ஆபரணங்கள் பெற்றார்.

*திருக் கடையூர் (திருக் கடவூர்) கால சம்ஹார வீரட்டேஸ்வரர் திருக் கோயில்*

வறுமையிலும் விடாமல் குங்கிலியப்  புகை அளித்துத் தொண்டு செய்த கலய நாயனாருக்கு அமிர்த லிங்கக் கால சம்ஹாரர்   குபேர நிதி அருளி  வாழ்க்கையை  அமிர்தமாக்கினார் 

*அரிசில் கரைப் புத்தூர் படிக்காசுப் பரமர் கோயில்* 

வறுமையில் வாடிய போதும் வெறும் வயிற்றுடன்  நீராட்டிப் பூஜை செய்த புகழ்த்  துணை சிவாச்சாரியார்  கையில் ஒரு தங்கக் காசு  வைத்த புத்தூர் அழகர் தினமும் ஒரு தங்கக் காசைப் படியில் வைத்து அருளினார்.   இந்த அற்புத வரலாற்றை சுந்தரர் போற்றுகிறார்.

 *விருத்தாச்சலம் ( திரு முது குன்றம்) விருத்த கிரீசர் கோயில்*

பரவையாருக்காக சுந்தரர் ஈசனிடம் பொன் வேண்டினார். 
        விருத்த கிரீசர் பெருமளவு பொன் அருளினார்.  

அவற்றை  விருத்தாச்சலம் மணி முத்தாற்றில் இட்டுத் திருவாரூர் திருக் குளத்தில் பெறுவதற்கும்  அருள் புரிந்தார்.

 *நாகப் பட்டினம் (திரு நாகை) காரோணம்  காரோணேஸ்வரர் திருக்கோயில்*  .

சுந்தரர்  சுந்தர விடங்கரைப் பாடிப் பெருமளவு  பொன் வைரம் ஆபரணம் ஆடை மற்றும் அனைத்தும் பெற்றார்.

 *திருப் புகலூர் கோணப் பிரான் கோயில்*

சுந்தரர் செங்கற்களை அடுக்கிப்  படுத்து உறங்கிய போது 
புகலூர்  புண்ணியன் செங்கற்களைப் பொன் கட்டிகளாக்கி அருளினார்.

: *திருக்கச்சி  ஓணகாந்தன் தளி ஓண காந்தனேஸ்வரர் கோயில்* .

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஞானசம்பந்தரரும் பதிகம் பாடி திருக்கதவு திறந்து அடைத்த தலமான வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர்..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மிகப் பழமையான 
தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலங்களில் ஒன்றானதும்,
நான்கு வேதங்கள் மனித உருவில் சிவனை பூஜித்த தலமானதும்,சப்த விடங்க தலங்களில் ஒன்றானதும்,
அப்பரும் ஞானசம்பந்தரரும் பதிகம் பாடி திருக்கதவு திறந்து அடைத்த தலமான #திருமறைக்காடு என்னும் #வேதாரண்யம்
#திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)
#யாழைபழித்த_மென்மொழியம்மை
(வேதநாயகி) திருக்கோயில்

திருமறைக்காடர் கோயில் சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 125ஆவது சிவத்தலமாகும். 

இத்தலம் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டுள்ளது.

ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றாக உள்ள தலமிது. கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலம்.

இத்தலத்தின் தியாகராஜர் புவனி விடங்கர் என்றும் அவரது நடனம் ஹம்சபாத நடனம் என்றும் இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என்றும் அறியப்படுகிறது. "வேதாரண்யம் விளக்கழகு" என்று இக்கோயிலுக்குப் பெருமை உண்டு.

மூலவர்:திருமறைக்காடர் (திருமணக் கோலம்) (வேதாரண்யேஸ்வரர்)
அம்மன்:வேதநாயகி
தல விருட்சம்:வன்னிமரம், புன்னைமரம்
தீர்த்தம்:வேததீர்த்தம், மணிகர்ணிகை
புராண பெயர்:திருமறைக்காடு
ஊர்:வேதாரண்யம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு

வழிபட்டோர்:

அகத்தியர், வசிஷ்டர், கௌதமர், விசுவாமித்திரர், நாரதர், மாந்தாதா, முசுகுந்த சக்கரவர்த்தி, ஸ்ரீராமர்

பாடியவர்கள்:

சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்:

யாழைப்பழித் தன்னமொழி மங்கைஒரு பாகன் பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இடம்பேணில் தாழைப்பொழில் ஊடேசென்று பூழைதலை நுழைந்த வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 125வது தலம்.

#தல_வரலாறு:

வடமொழி வேதங்கள் ரிக், யசூர்,சாம, அதர்வண என்ற நான்கும் மனித உருக் கொண்டு இத்தலத்தை இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனைப் போற்றி வழிபாடுகள் செய்தன. கலியுகம் பிறந்தவுடன் இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை ., இனி நாங்கள் இருப்பது நல்லதல்ல என்று இறைவனிடம் கூறிவிட்டு இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச் சென்று விட்டன. இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம், செடி, கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது.பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும் ,வேதங்களே இறைவனை வணங்கியதால் வேதாரண்யம் என்று பெயர் வந்தது என்பதும் தலவரலாற்றுச் செய்தி.

#தலபெருமை:

மூடியிருந்த திருக்கோயில் கதவு திறந்த கதை : 

சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான அப்பரும் ஞானசம்பந்தரும் சிவதலம் தோறும் சென்று எம்பெருமானை போற்றி பதிகம் பாடி வருகையில் இந்த திருமறைக்காட்டிற்கும் வந்தனர். அப்போது வேதங்களே வழிபட்ட இத்தலத்துமறைக்காட்டீசுவரரை வழிபட எண்ணி கோயிலுக்கு செல்கையில் கோயிலின் பிரதான வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. இறைவனை எல்லோரும் பக்கத்து வாயில் வழியாகவே சென்று வழிபட்டவண்ணம் இருந்தனர். இதைப்பார்த்த அப்பரும் சம்பந்தரும் இறைவனை வணங்க இப்படியொரு சிக்கல் இருப்பது ஏன் என்று வினவினர். வேதங்கள் பூஜித்து வந்து வரம்பெற்றுப் பின்னர் திருக்கதவைத் தாழிட்டுவிட்டுச் சென்ற விபரம் அறிந்தனர். உடனே ஞானசம்பந்தர் அப்பரிடம் மிக்க பழமை மிக்க வேதங்களே வழிபட்ட இத்திருக்கோயில் கதவை திறந்து இறைவனை நேராக தரிசிக்க திருப்பதிகம் பாடியருளுமாறு வேண்டிக் கொண்டார்.அதைக்கேட்ட அப்பர் மிகுந்த ஆராமையோடும் பண்ணினேர்மொழியென்று மொத்தம் 10 திருப்பாசுரம் பாடியவுடன் கதவு திறந்து கொண்டது. உள்ளே சென்று ஆனந்தப்பரவசத்துடன் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு வெளியே வந்தபோது அப்பர்., சம்பந்தரே இந்த கதவு எப்போதும் மூடவும் திறக்கவும் பதிகம் பாடும் என்று கேட்டுக்கொள்ள ஞானசம்பந்தர் சதுரம் மறை என்று ஒரே ஒரு திருப்பதிகம் பாடியவுடன் கதவு மூடிக் கொண்டது. இறைவனின் இந்த கருணையை எண்ணி இருவரும் பரவசம் எய்தினர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கதை நிகழ்ந்த கோயில் இது.

#வேதநாயகி

இத்தலத்து அம்பாளின் பெயர் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும் வடமொழியில் வீணாவாத விதூஷணி எனவும் வழங்கப்படுகிறது. அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர். இதன் நினைவாக சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம்.

#துர்க்கை

இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் முறுவல் காட்டி எழுந்தருளி உள்ள இக்காவல் தெய்வம் இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வம்.

#தியாகராஜர்

இத்தலம் சப்தவிடத்தலங்களில் ஒன்று. முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரன் அளித்த தியாகமூர்த்தங்களுள் ஒன்று. இவர் செய்யும் நடனம் அம்சநடனம் எனப்படும்.

திருமறைக்காடு என்று தமிழிலும், வேத ஆரண்யம் என்று வடமொழியிலும் வழங்கப்பெறும் மிகப்பழமை வாய்ந்த சிவதலம். சப்தவிடத்தலங்களுள் இது இரண்டாவது தலம். சக்தி பீடங்களில் மிக்க விசேசம் வாய்ந்த சுந்தரி பீடத்தைப் பெற்று விளங்கும் கோயில். மூலவருக்கு மறைக்காட்டுறையும் மணாளர் என்று சிறப்பு பெயரும் உண்டு. வீணை இல்லாத சரஸ்வதி இருக்கும் சிவதலம் இது.

63 நாயன்மார்களோடு சேர்ந்து தொகையறாக்கள் 10 பேர்., ஆக மொத்தம் 73 பேருக்கும் இங்கு சிலைகள் உள்ளன. ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் இறைவனை வழிபட்ட தலம். அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலம்.

மனு, மாந்தாதா, தசரதன், ராமன், பஞ்சபாண்டவர், மகாபலி முதலியோர் வழிபட்ட பேறு பெற்ற தலம். பதினாறு சபைகளில் 12 வது தேவ பக்த சபை என்ற திருநாமம் உடைய தலம். புகழ்பெற்ற கோளறு பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கேதான் பாடியருளினார். தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர். திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் இவ்வூரைச் சேர்ந்தவர். இக்கோயில் வளாகத்திற்கு வெளியில் உள்ள அத்தனை இடங்களிலும் உப்பு கரிக்கும் தண்ணீரே இருக்கும். இத்தலத்தில் மட்டுமே நல்லதண்ணீர் உள்ளது. இவ்வூருக்கு குடிதண்ணீர் இந்த கோயில் வளாகத்துக்குள் இருந்து எடுத்துதான் பயன்படுத்தப்படுகிறது.

#சிந்தாமணி விநாயகர்:

சிந்தாமணி விநாயகர் எனும் பெயர் சிந்தாமணி எனும் மணியைத் தரித்துக் கொண்டதால் ஏற்பட்டதாகும். அபிஜித் என்பவனுக்கும், குணவதி என்பவளுக்கும் பிறந்தவனான கணன் எனும் அசுரன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றபோது சிந்தாமணியின் உதவியால் கபிலர் தனக்களித்த விருந்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு கபிலரிடமிருந்து அம் மணியைப் பறித்துக் கொண்டு வந்துவிட, கபிலர் விநாயகரை நோக்கி யாகம் புரிந்து அம் மணியை மீட்டுத்தர வேண்டினார். சித்தி, புத்தி தேவிகளுடன் சிங்க வாகனத்தில் தோன்ற விநாயகர் தனது திருக்கைப் பாசத்தினால் கணனின் சிரசை அறுத்து சிந்தாமணியை கபிலரிடம் கொடுத்தார். இதனாலேயே இவருக்கு சிந்தாமணி விநாயகர் எனும் பெயர் ஏற்பட்டது. திருமறைக் காட்டில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் சிந்தாமணி விநாயகர் ஆவார்.

#தல_சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு. இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது. வன்னிமரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம். நவகிரகங்கள் ஒரே முகத்தோடு தனிதனி விக்ரகமாக சுவாமி – அம்பாள் திருமணக்கோலத்தை காண ஒரே திசையில் உள்ளது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 189 வது தேவாரத்தலம் ஆகும்.

#திருவிழா:

மாசி மகம் – பிரம்மோற்சவம் – 29 நாட்கள் திருவிழா – அடைக்கப்பட்டிருந்த கதவு திறந்ததை கொண்டாடும் வகையில் திருவிழா நடக்கும். இதில் மக தீர்த்தம் அன்று சுவாமி கடலுக்கு போய் தீர்த்தமாடி வருவது சிறப்பு – 73 மூவர் சுவாமி புறப்பாடும் கைலாச வாகனம் புறப்பாடும் நடக்கும். ஆடிப்பூரம் – 10 நாட்கள் – இது அம்மனுக்கு நடக்கும் பெரிய அளவிலான திருவிழா ஆகும். விநாயகர் சதுர்த்தி, கந்தர் சஷ்டி ஆகியன இத்தலத்தின் முக்கிய விழா நாட்கள் ஆகும்.. மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

#பொது தகவல்

இத்தலத்தில் மேற்குக் கோபுர வாயிலில் உள்ள விநாயகர், இராமபிரானைத் துரத்திவந்த வீரகத்தியை தமது ஒரு காலைத் தூக்கி விரட்டியதாக வரலாறு.

இங்கு சுவாமி அம்பாள் விநாயகர் மூவருக்கும் தனித்தனி கொடிமரம் உண்டு.

#பிரார்த்தனை

இத்தலத்தில் வழிபடுவோர்க்கு பாவங்கள் விலகும். நாக தோசம் நீங்கும். இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.

இதில் நீராடி தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம். பிரம்மகத்தி போன்ற பாவங்களும் நீங்கும்.பல ஆண்டுகள் யோகம் , தானம், தவம் செய்த பலன்களை அடையலாம். இத்தலத்திற்கு தெற்கே நேர் எதிரே கிழக்கே உள்ள கடல் ஆதி சேது என்னும் கடல் தீர்த்தம். இதில் ஒருமுறை நீராடுவது சேதுவில் நூறு தடவை நீராடுவதற்கு சமம்.

இத்தீர்த்தங்களில் ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும்.

இத்தலத்து திருமறைக்காடரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

#நேர்த்திக்கடன்

குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி வழிபடுகின்றனர். மிகப்புகழ்பெற்ற பரிகார தோச நிவர்த்தி தலம் என்பதால் பல்வேறு தோசங்களுக்கும் நிவர்த்தி பரிகாரங்கள் செய்து வழிபடுகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி , பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

#சிறப்பம்சம்
அதிசயத்தின் அடிப்படையில்: 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வன்னிமரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம்.

#அமைவிடம் 

மாநிலம் : தமிழ் நாடு 

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மி. தொலைவிலும் வேதாரண்யம் உள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Wednesday, June 25, 2025

வாராஹி தேவிக்கே உரிய விஷேசமே ஆஷாட நவராத்திரி.



நம்மில் பலரும் அரிந்த ஒன்று  நவராத்திரி அந்த நவராத்திரி முப்பெரும் தேவியரான #துர்கா_லஷ்மி_சரஸ்வதி தேவிகளையும் பல கொலுபொம்மைகளை வைத்து வழிபடக்கூடிய நவராத்திரி ஆனால் இது அந்த நவராத்திரி இல்லை.
இது #ஆஷாட நவராத்திரி என்று சொல்லக்கூடியது எதிரிகளை வீழ்த்தும் வாராஹி தேவிக்கே உரிய விஷேசமே ஆஷாட நவராத்திரி.

ஆனி ஆடி மாதத்தில் வரக்கூடியது இந்த வாராஹி அம்மன் வழிபாடான ஆஷாட நவராத்திரி.

#வாராஹி அம்மன் யார் என்றால்:
சப்த மாதாக்ககளில் ஒருவர்,
பாலாதிரிபு சுந்தரியின் போர் தளபதி,
தன்னுடைய பக்த்தர்களின் எதிரிகளை துவம்சம் செய்பவள்,
தஞ்சை ராஜ ராஜ சோழனின் முழுமுதற் கடவுள் மற்றும் இஷ்ட தெய்வம் ஆகையாலே இன்றும் தஞ்சை பெருவுடையார் பெரிய கோவிலில் தனி சன்னதியில்  உள்ளார் வாராஹித்தாய்.
மன்னர் ராஜ ராஜ சோழர் எந்த காரியத்தை தொடங்கினாலும் வாராஹி அம்மனை வேண்டியே தொடங்குவாராம்.
 
வாராஹி அம்மன் விவசாயத்திற்கும் விவசாய நிலங்களுக்கும் விவசாயிகளுக்குமான தெய்வமாய் விளங்குகிறாள்.
ஆகையாலே கையில் ஏர்கலப்பையை தாங்கி கொண்டு நமக்கு காட்ச்சிதருகிறாள்.


#பூஜை முறை:
ஆஷாட நவராத்திரியான ஒன்பது நாளும் வாராஹி அம்மனை பூஜிக்க வேண்டும்.

வாராஹி அம்மனின் சிலையோ அல்லது படமோ வாங்கிகொண்டு அதை பூஜை அறையில் ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
வாராஹி அம்மனுக்கு பிடித்த நீல நிற அல்லது சிகப்பு நிறத்தில் இருக்கும் வஸ்திரத்தை(துனி) சாற்றவேண்டும்.
இந்த ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களில் மாலை 6மணிக்கு மேல் வைக்கப்பட்ட வாராஹி தேவிக்கு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும் பின் அம்பாளுக்கு உகந்த செவ்வரளி அல்லது நீலநிற சங்குப்பூ அல்லது அனைத்து வாசனை பொருந்திய மலர்களை கொண்டு அர்ச்சிக்க வேண்டும். 

மஹா வராஹி மூல மந்திரம்:

ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா.

இந்த மந்திரத்தை நவராத்திரியின் ஒன்பது நாட்களும் 108முறை அல்லது 27முறை சவரின்றி உச்சரிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தை ஆஷாட நவராத்திரி இல்லாமல் சாதா நாட்களிலும் கூறலாம்.

மந்திரத்தால் அர்ச்சனை செய்த பிறகு நெய்வேத்தியமாக கிழங்கு வகைகள் குறிப்பாக சக்கரைவல்லி கிழங்கு அல்லது சுன்டல் அல்லது பழங்களில் கருப்பு திராட்சை,அன்னாசி,மாதுளை போன்ற ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக செய்ய வேண்டும்.
பின் தீப தூப ஆரத்தி காட்ட வேண்டும்.

இப்படி இந்த ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மாலை வேளையில் வாராஹி தேவியை பூஜிக்க நமக்கு ஒரு மாற்றம் ஏற்படும் விவசாயத்தில் முன்னேற்றம்,எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுதை,சகல செல்வம்,நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

#குறிப்பு:- இந்த ஒன்பது நாள் பூஜை செய்ய முடியாதவர்கள்  முதல்நாள்  மற்றும் கடைசிநாள் மட்டும் வழிபடலாம்.
பூஜை செய்து வரும் இந்த ஒன்பது நாட்களிலும்  வாராஹி அம்மனின் போட்டோ அல்லது விக்ரஹத்தை இடம் மாற்றம் செய்ய கூடாது.
முதல் நாள் வைத்த இடத்திலேயே ஒன்பது நாட்களும் இருக்க வேண்டும். 
ஆஷாட நவராத்திரி முடிந்த பிறகு அதை நாம் அன்றாடம் வழிபடும் தெய்வங்களுடன் வைத்து விடழாம்.

வாராஹி அம்மனை மேற்கு,கிழக்கு, வடக்கு திசைகளை பார்த்து வைக்க வேண்டும்.

வாராஹி அம்மனை வீட்டில் வைக்கலாமா என்றால் தாராளமாக வைக்கலாம் 
அவள் அம்பாள் பார்வதியின் அவதாரமே.
பார்ப்பதற்கு பன்றி முகத்துடன் இருந்தாலும் அவள் தாய்.
ராஜ ராஜ சோழனுக்கு வெற்றியை வழங்கும் அவள் நமக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைப்பாள்.

அவழுக்கே உறிய விழாவான இந்த ஆஷாட நவராத்திரியில் அவளை வழிபடுவோம்.
அன்னையின் அருளில் ஆர்வம் கொண்டு நாம் தினமும் அவளின் திருப்பாதங்களை பற்றி கொள்வோம்.

இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதை படித்ததோடு விட்டு விடாமள் நாளு பேருக்கு தெரியப்படுத்துங்கள் இந்த ஆஷாட நவராத்திரியை தவறாது வாராஹி அம்மனை வழிபடுங்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன

ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன?
திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. சிவன் கோவில்களில் முதன்மையான கோவிலான சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமஞ்சனம் என்றே அழைக்கப்படுகிறது.

சிவாலயங்களில் அருள்பாலிக்கும் நடராஜருக்கு, ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதாவது, ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி நாட்களில் மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும்தான். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கிறது. மற்ற நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெறும்.

பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமே ஆனி உத்திர தரிசனமாகும். ஆனித்திருமஞ்சனத்தை `மகா அபிஷேகம்' என்றும் அழைப்பர். ஆனி மாதம் சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழா. பங்குனியைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான விழாவாக, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றப்படுகிறது.

சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழா, 10 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதில், ஆனி திருமஞ்சனம் நிகழ்வையும், தேரோட்டத்தையும் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

வைகாசியில் அக்னி நட்சத்திர தருணம் எல்லாம் முடிந்து, வெப்பத்தில் தகிக்கும் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து, விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, June 23, 2025

வேலை கிடைக்க வேல் பூஜை செய்யலாம்.முருகன் வேலின் மகத்துவம்

_முருகன் வேலின் மகத்துவம்_
முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இகபர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்கவேண்டும்.

முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும். கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக் கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. 

அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன். மயில் மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம் தான். இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது.

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது. 

எனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது. 

வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன்,துங்கவடிவேலன், ப்ரசன்ன வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைத்தவர் அருணகிரியார்.

வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது. 

திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன.

வேலின் பெருமை:

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட

தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், – வாரி

குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்

துளைத்த வேல் உண்டே துணை

இது திருமுருகாற்றுப்படையை ஒட்டி எழுந்த பின்னாளைய வெண்பா !

வேல் வினைகளை வேரறுக்க வல்லது. வேலுண்டு வினையில்லை என்பது அருளாளர் வாக்கு. அச்சம் அகற்றும் அயில் வேல் எனச் சிறப்பிக்கிறார் குமரகுருபரர். வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன் என்று கந்தரநுபூதியும், வினை எறியும் வேல் என்று திருப்புகழும் போற்றுகின்றன.

சக்திவேல் வழிபாடு என்பது இராஜ அலங்கார முருகன் படத்துக்கு அருகே உருவேற்றப்பட்ட சக்திவேலை வைத்து நாள்தோறும் வணங்குவது. சக்திவேலை உருவேற்றுதல் என்பது சக்திவேலுக்கான சூட்சுமசக்தியை வழிபாட்டின் மூலமாக அதிகரித்துக் கொண்டே செல்வது.

செய்யும் காரியங்களில் தடைகள் விலக, நீண்ட நாட்களாய் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்க, கல்வியில் மேன்மை பெற, மன பயம் நீங்கி வலிமை உண்டாக, வியாபாரத்தில் லாபம் பன்மடங்காய்ப் பெருக, பில்லி சூனியம் அணுகாதிருக்க, நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்க, பூத பிரேத பிசாசுகளின் தொல்லைகளில் இருந்து விடுபட, சகல சம்பத்துகளும் கிடைக்க, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, அரசு மற்றும் தனியார் வேலை கிடைக்க வேல் பூஜை செய்யலாம்.

மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெற, விதியால் வரும் ஆபத்துகள் விலக, தடைபெற்று நிற்கும் திருமணம் நடைபெற, சொந்தமாய் வீடு வாங்க, கெட்ட கனவுகள் வராமல் இருக்க, நினைத்த காரியம் நினைத்தப்டியே நிறைவேற, பொன் வெள்ளி ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்க, தனதான்யங்கள் மேலும் பெருக, கலைகளில் தேர்ச்சி பெறவும் வேல் பூஜை செய்வது சிறப்பு.

எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்க, தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற, எதிர்மறைச் சக்திகளின் பாதிப்பிலிருந்து விலக, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருக, உயர்ந்த பதவிகள் பெற, வாக்கு வளம் பெற, விபத்துகள் ஏற்படாமல் இருக்க சக்திவேலை வணங்கலாம்.

ஒவ்வொரு நாள் காலையும் சூரிய உதயத்துக்கு முன்னதாக சக்திவேலை வழிபடுதல் சிறப்பு. சக்திவேலினை வீட்டிலோ, அலுவலகத்திலோ வைத்துக் கொள்ளலாம். அலுவலகத்தில் சக்திவேலை வைப்பதானால், அலுவலகம் சென்றவுடன் சக்திவேலை வணங்கிவிட்டே பணிகளைத் துவக்க வேண்டும். மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க எனச் சொல்லி வர மனம் இலேசாகி விடும்.

சக்திவேலைத் தொடர்ந்து வழிபட்டுக் கொண்டிருப்பதன் வழியாக அதன் சூட்சுமசக்தியை அதிகரித்துக் கொண்டே செல்லும். ஆக, சக்திவேலை வணங்க நாள்தோறும் ஐந்து நிமிடங்களாவது மறவாமல் ஒதுக்கிக்கொள்ளுங்கள். காலை, மாலை அல்லது இருவேளைகளிலும் சக்திவேலை வழிபடலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சிவபூத கணங்கள் யார்?

_சிவபூத கணங்கள்_
பூத கணங்களை நம் சிவாலயங்களிலும் ,தேர்களிலும் சிலைகளாக பார்த்திருப்போம்....

இவர்கள் யார்? 

இவர்களுடைய பணி என்ன? 

இவர்கள் எங்கே இருப்பார்கள்? 

இவர்கள் என்ன செய்வார்கள்? என்ற கேள்வி எனக்கு தோன்றியது...... 

அதனை சைவ நூல்களின் வழியே காண்போம்.....

கயிலையில் இருக்கும் பதினெண் வகை கணங்களில் ஒன்று தான் இந்த பூதகணங்கள்...

பூத கணங்களில் முப்பத்தி மூன்று வகை உண்டு என பழந்ததிழ் நூல்கள் பதிவு செய்கிறது... இந்த முப்பத்தி மூன்று வகை பூதகணங்களும் நம் ஈசரோடு கயிலையில் வாழும் வரம் பெற்றுள்ளது..

ஈசனார் கூத்தாடும் வேளையில் இசை கருவிகள் வாசிக்கவும், அவரோடு இணைந்து ஓலமிட்டபடி ஆடும் பெரும் பாக்கியத்தையும் இப்பூதங்கள் பெற்றிருக்கின்றன.....

இதனை சுந்தரமூர்த்தி சுவாமிகள்

"தென்னாத் தெனா தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் திசை திசையென"

என்று திருபரங்குன்றம் பதிகத்தில் பாடுவதின் மூலம் அறியலாம்......

இது தவிர இறைவரின் அனுக்க சேவர்களாக இப்பூதங்கள் பெரும் பணி செய்வதை நாயன்மார்கள் புராணத்தின் வழி காண்போம்....

ஒரு அரசன் தான் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்கு பல்வேறு நிலையிலுள்ள அரசவை ஊழியர்களை வைத்திருப்பார். அதுபோல இறைவனின் கட்டளையை ஏற்று அதை நிறைவேற்றுவதற்கும் சில  சக்திகள் உண்டு.

இவ்வாறு ஈசனின் கட்டளையை ஏற்று அவற்றை ஈசனின் அருளுடன் நொடிப் பொழுதில் நிறைவேற்றுபவை பூதகணங்களே. 

கயிலையில் இருக்கும் ஒரு பூதகணத்துக்கே  படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் செய்யும் ஆற்றல் உண்டென படித்துள்ளேன். 

ஒரு பூத கணத்துக்கே இவ்வோள ஆற்றல் உண்டென்றால் இவர்களை அடக்கி ஆளும் முக்கண் முதல்வர்க்கு உரிய ஆற்றலை பற்றி நம்மால் சொல்ல முடியுமா ? சிவசிவ...

ஒரு ஜீவன் கயிலைக்கு செல்லும்போது கூட உடன் வந்து  அழைத்துச் செல்பவை சிவகணங்களே.

அப்பர் பெருமான் சமண சமயத்தை விட்டு நீங்கி திருவதிகை பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சூளை நோய் நீங்கி
தற்போதைய திருபெண்ணாகடம் வந்து பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்னு பதிகம் பாட தூங்கானைமாடம் சுடர்கொழுந்துநாதரின் ஆணையின் படி சிவபூதகணம் ஒன்று கயிலையை விட்டு பூலோகம் இறங்கி வந்து பெண்ணாகடத்தில் அப்பர் சுவாமிக்கு இடபம் சூலம் முத்திரை பதித்ததும் இச் சிவபூதகணமே.

ஈசனின் கட்டளைப்படி சம்பந்தருக்கு திருவாவடுதுறை தலத்தில் உலவாப் பொற்கிழியையும், பட்டீஸ்வரம் எனும் தலத்தில் முத்துச் சிவிகையையும் கொண்டு  வந்து கொடுத்தவை பூத வேதாள கணங்களேயாம்.

 திருமுருகன்பூண்டியில் சிவபெருமானின் கட்டளைப்படி செல்வத்தை வேடர்களாக வந்து சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளிடம் திருவிளையாடல் நடத்தியதும், திருக்கோளிலியில் மலையென நிறைந்த நெல்லினை   ஓர் இரவில் திருவாரூர் சேர்த்ததும் இந்த பூத  வேதாளங்களே ஆகும். 

இதை சிவனார் 

"நம் கணங்கள் இவ்விரவே ஆரூர் சேர்க்கும் கவலையற்க"

என்று சுந்தரரிடம் சொன்ன அழகினை காண்க.

அப்படிப்பட்ட பூத வேதாள கணங்கள் வணங்கும் தலங்கள் மண்ணில் வந்து வழிபட்ட தலங்களும் உண்டு.

அதனில் ஒன்றுதான்  செய்யூர் எனும் முருகன் தலம் ஆகும்.

இதை கந்தர் அனுபூதியில்..

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்பும் அதோ?
கூதாள! கிராதகுலிக்கு இறைவா!
வேதாள கணம் புகழ் வேலவனே’

இப்பாடல் வழியே பூத வேதாளங்ள் வழிபட்டமையை காணலாம்...

பூதகணங்கள் சிவலிங்கம் தாபித்து வழிப்பட்ட ஊர் கன்னியாகுமரி அருகில் உள்ள பூதப்பாண்டி எனும் ஊர் ஆகும்.

பூதங்கள் வழிப்பட்ட காரணத்தால் இறைவர் திருநாமம்  பூதலிங்கசுவாமி என்பதாகும்...

இதுதவிர இறைவரின் ஏவலால் திருவையாறு கோயில் மகா மண்டபத்தை கட்டியதும் சிவகணங்களை எனும் ஐதீகம் உள்ளது.. இதை உணர்த்தும் ஏரளாமான சிற்பங்கள் இருப்பதையும் காணலாம்..

ஆவுடையார் கோயிலையும் இறைவன் ஏவலால் சிவபூத கணங்கள் தான் கட்டியதாக அப்பகுதி மக்கள் தீவிர நம்பிக்கையோடு பேசுகின்றனர்.

இந்த சிவனாரின் அனுக்க சேவர்களான பூதகணங்களை  எங்கே கண்டாளும் ஒரு வணக்கத்தை போட்டு வையுங்க.... 

எதுக்கு வம்பு நம் இறக்கும் தருவாயில் நம்மை கயிலைக்கு அழைத்து செல்ல ஈசனார் இவர்களை தான் அனுப்பி வைப்பார்...... என்பதை மறக்காதீங்க....

நால்வர் பொற்றாள் எம் உயிர்த் துணையே.

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி! 
ஆழிமிசைக் கண்மிதப்பில்! அணைந்த பிரான் அடிபோற்றி!! 
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!!! 
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!!!!
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, June 22, 2025

அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) காஞ்சிபுரம்.


அம்பாள் கட்டியணைத்த அடையாளம்.. 5008 ருத்ராட்சங்களால் பந்தல்..!!
                

அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில்...!!

 *இந்த கோயில் எங்கு உள்ளது?* 

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

 *இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?* 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலவர் ஆவார். இந்த லிங்கத்தில் அம்பாள் கட்டியணைத்ததற்கான அடையாளம் உள்ளது சிறப்பம்சமாகும்.

உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில், கண்ணாடி அறையில் 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தலில் காட்சியளிக்கிறார். இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம்.

 இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்பது நம்பிக்கைஹ.

ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு எதிரே உள்ள பிரகாரத்தில் ஸ்படிக லிங்கமும், அதற்கு எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் உள்ளது.

இக்கோயிலில் உள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 *வேறென்ன சிறப்பு?* 

பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும்.

ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ர லிங்கம் மற்றும் அஷ்டோத்திர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது.

இத்தலமானது அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும்.

கோயில் முன் மண்டபத்தில் திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்ட பெருமாள் சன்னதி உள்ளது.

இத்தல விநாயகர் விகடசக்ர விநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகர் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

 *என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

பங்குனி உத்திரம் பெருவிழா 13 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல், பௌர்ணமி, அமாவாசை, பிரதோசம் ஆகிய விஷேச நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

 *எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இது திருமணத்தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

 *இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?* 

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, June 20, 2025

குபேர சனீஸ்வரர் தலம் பற்றி தெரியுமா? நடுசத்திரம் ஸ்ரீகாசிவிஸ்வநாதர்.

தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் அருள்மிகு குபேர சனீஸ்வரர்  தலம் பற்றி தெரியுமா?
 *இன்னல்கள் நீக்கும் இரண்டாம் காசி!*

நடுசத்திரம் அருள்மிகு ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் 
திருக் கோயில்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை 
வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். 

இந்த ஊரில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- ஸ்ரீஅன்னபூரணி திருக் கோயிலை, ‘இந்தியாவின் இரண்டாவது காசி’ என்றே கொண்டாடுகிறார்கள் இங்குள்ள சிவ பக்தர்கள்.

சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் இது. 

தற்போது கோயில் அமைந்துள்ள இடம்,  
அப்போது வனமாக இருந்திருக்கிறது. 

இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து காசிக்குச் செல்லும் பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். 

கோயிலின் அருகிலேயே 
ஓர் அருமையான நீர்நிலை உள்ளது. 

இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு, காசிக்குச் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தை காசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்றனர். 

இந்த வழியாகக்  காசிக்குச் செல்பவர்கள் இந்த 
ஆலயத்தில் தங்கி, 
இங்குள்ள சிவபெருமானை தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கம். 

பாண்டிய மன்னர்கள், அப்போதிருந்த குறுநில மன்னர்களான எட்டையபுரம் ஜமீன்தார்களிடம்  ஆலய நிர்வாகத்தை ஒப்படைத்தனர். 

அவர்களது காலத்துக்குப் பின், ஏழாயிரம்பண்ணை ஜமீனிடம் பராமரிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. 

இவர்கள் சில தலைமுறைகளாக இந்தக் கோயிலைப் பாதுகாத்து வந்துள்ளனர்.

அதன்பின், இந்த ஆலயம் செவல்பட்டி ஜமீன் வசம் ஒப்படைக்கப் பட்டது. 

கடைசியாக, ஹரிச்சந்திர நாயுடு என்பவர் இந்தக் கோயிலின்  திருப்பணிகளைக் கவனித்து வந்ததாகச் சொல்கிறார்கள், இந்த ஊர்ப் பெரியவர்கள். 

தற்போது இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ளது.

இந்தத் திருத்தலத்தின் சந்நிதியில் மட்டுமே காசிக்கு அடுத்தபடியாக அன்னபூரணி அம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறார். 

இத்தலம் பாண்டியர்களால் கட்டப்பட்டது என்பதற்குச் சான்றாக, இங்குள்ள தூண்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கோயிலின் தலவிருட்சம் வில்வ மரம்.

இத்தலத்தின் மற்றொரு சிறப்பு... சிவனுக்கு எதிரே உள்ள நந்தீஸ்வரரின் 
ஒரு கண் சிவனைப் பார்த்தவாறும், மற்றொரு 
கண் அன்னபூரணியைப் பார்த்தவாறும் தலைசாய்த்து அமைந்திருக்கிறது. 

மேலும், இத்திருத்தலத்தின் கன்னி மூலையில் பிள்ளையாரும், வாயு மூலையில் வள்ளி- தெய்வானை சமேதராக முருகனும் அமைந்து உள்ளனர். 

மேலும், ஈசான்ய மூலையில் பைரவர் உள்ளார். 

அக்னி மூலையில் மடப்பள்ளி அமைந்திருக்கிறது. 

இந்தத் தலத்தில் அமைந்துள்ள கொடி மரத்தின் அடிப்பாகம் தாமரைப் பூ போன்ற வடிவமைப்புடன் உள்ளது.

எங்கும் இல்லாத வகையில் இத்திருத்தலத்தில்,குபேர சனீஸ்வரர் என்ற பெயரில் 
சனி பகவான்தனித்து அருள்பாலிக்கிறார்.

நந்திதேவரைப் போன்று இவரும்,  தன் தலையைச் 
சற்றே சாய்த்தவாறு அருட்கோலம் கொண்டிருக்கிறார். 

இவர் சந்நிதியின் அருகில், வற்றாத நூபுரகங்கை தீர்த்தக் கிணறும் உள்ளது. 

மேலும், சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து, காளை வாகனத்தில் அமர்ந் திருப்பது, வேறு சிவாலயங்களில் காண்பதற்கரிய சிறப்பம்சம்! 

ஆலயத்தைச் சுற்றியுள்ள கல்தூண்களில் பெருமாள், ஹனுமான், நாகம்மாள் 
எனப் பல தெய்வங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 

இங்கு தென் திசை நோக்கிய குருபகவானும், சிவனுக்கு நேர் எதிராக வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் சந்திரனும் அமைந்துள்ளார்கள்.

இத்திருத்தலத்தில் அன்னபூரணி அம்பிகை, காலபைரவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் மற்றும் குபேர சனீஸ்வர பகவான் அனைவரும் தென் திசை நோக்கி அமைந்திருப்பது மற்றொரு தனிச் சிறப்பாகும்.

தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், 
தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வெள்ளைப் பூசணிக்காய் ஒன்றை (தடியங்காய்) இரண்டாகப் பிளந்து, வெள்ளை மிளகு 108 எடுத்து பாதியாகப் பிரித்து பூசணிக்காயில் வைத்து, இலுப்பை எண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றினால், தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

இதுதவிர, திருமண வரம் வேண்டிவரும் பெண்கள், பிரதோஷ நாளில் 
எலுமிச்சை மாலையை அன்னபூரணியம்மாளுக்குச் சூடி, சுவாமியை தரிசித்துவிட்டுச் சென்றால், நல்ல வரன் அமையும். 

அதேபோன்று, ஆண்கள் தொடர்ந்து 
3பிரதோஷங்களுக்கு 
இங்கு வந்து, அன்னபூரணி அம்மைக்கு பூமாலை சமர்ப்பித்து வழிபட்டுச் சென்றால், விரைவில் திருமண மாலை தோள்சேரும். 

குழந்தை வரம் இல்லாதவர்கள் இளநீர் வாங்கி வந்து, அபிஷேகம் செய்தால் 
குழந்தை பாக்கியம் அமையும் என்பது நம்பிக்கை.

சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி பூஜை ஆகியவை இங்கு 
வெகு சிறப் பாகக் கொண்டாடப்படுகின்றன. 

இத்தலத்தில் ஒவ்வொரு நாளும் ஒருகால பூஜை நடைபெறுகிறது.

ஒவ்வொரு மாதமும் விசேஷ தினங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. 

ஸ்வாமி :ஸ்ரீகாசிவிஸ்வநாதர்

அம்பாள் :ஸ்ரீஅன்னபூரணி 
        
தலவிருட்சம் : வில்வமரம்

தலச் சிறப்பு: இரண்டாவது காசி எனச் சிறப்பிக்கப்படும் திருத்தலம்.

ஒரு கண்ணால் ஸ்வாமியையும், மற்றொரு  கண்ணால் அம்பாளையும் தரிசிக்கும் பாவனையில் நந்தி தலைசாய்த்து அமைந்த க்ஷேத்திரம். 

காளை மீது அமர்ந்த சண்டிகேஸ்வரரும், குபேர சனீஸ்வரரும் அருளும் திருக்கோயில் இது.

பிரார்த்தனைச் சிறப்பு: தொழில் நஷ்டம் நீங்க தேய்பிறை அஷ்டமி வழிபாடு, கல்யாண வரம் பெற அன்னபூரணிக்கு எலுமிச்சை மாலை சமர்ப்பித்து செய்யும் பிரார்த்தனை, பிரதோஷ தரிசனம், குழந்தை வரம் தரும் இளநீர் அபிஷேகம் ஆகியவை இந்தத் தலத்தில் நிகழும் சிறப்புப் பிரார்த்தனைகள். 

வழித்தடம்: சாத்தூரிலிருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம் பண்ணை வழியாகச் செல்லும் சாலையில் சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். 

சிவகாசியிலிருந்து சங்கரன்கோவிலுக்குச் செல்லும் சாலையில் 
20 கி.மீ தொலைவில் 
உள்ளது குகன்பாறை. 

அங்கிருந்து கிழக்குப்புறமாக 
3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:காலை  6 மணியிலிருந்து 12 மணி வரை; மாலை 4 மணியிலிருந்து 7.30 மணி வரை. விசேஷ நாட்களில் கூடுதலான நேரம் திறந்திருக்கும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தம்பதி ஒற்றுமைக்கு...கும்பகோணம் திருப்பனந்தாள் திருலோக்கி சிவன்



குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். வேலை கிடைக்க, திருமணம் நடக்க, குழந்தைப் பேறுக்கு, புகழ் கிடைக்க குரு பகவானின் அருள் வேண்டும். வாசகர்கள் அவரது அருளைப் பெறும் வகையில் இங்கு குரு கோயில்கள் இடம் பெற்றுள்ளன.

தம்பதி ஒற்றுமைக்கு...


கும்பகோணம் திருப்பனந்தாள் அருகிலுள்ள திருலோக்கி (ஏமநல்லுார்) சிவனை வழிபட்டால் தம்பதி ஒற்றுமை சிறக்கும். சிவலோகம், வைகுண்டம், சத்திய லோகம் என மூவுலகமும் வழிபட்டதால் இத்தலம் 'திருலோக்கி' எனப்பட்டது. குருபகவான்

தனக்கு ஏற்பட்ட சாபத்தால் பலத்தை இழந்தார். அதற்கு பரிகாரமாக இங்கு வழிபட்டு சிவனருளால் சாபம் நீங்கியது. குரு நன்மை அடைந்த தலம் என்பதால் 'ஏமநல்லுார்' எனப்பட்டது. 'ஏமம்' என்பது குருவின் பெயர்களில் ஒன்று.
இங்குள்ள சுவாமியின் பெயர் சுந்தரேஸ்வரர். அம்மனின் பெயர் அகிலாண்டேஸ்வரி. குடும்பத்தில் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் வியாழன் அன்று குருபகவானுக்கு தேனால் அபிேஷகம் செய்ய பிரச்னை மறையும். இங்கு வாழ்ந்த தர்மன் என்பவரின் மகன் பேசும் சக்தியற்று இருந்தான்.

குருபகவானுக்கு தேன் அபிஷேகம் செய்து பேசும் ஆற்றல் பெற்றான். பிருகு முனிவர் இங்கு வழிபட்டே நற்கதி அடைந்தார். ராஜேந்திரசோழனின் மனைவி திரிலோக்கியமாதா திருப்பணி செய்த தலம் இது.


நீங்கதான் நம்பர் 1


சிவனுக்கு முன் நந்தி இருக்கும். ஆனால் தட்சிணாமூர்த்திக்கு முன் நந்தி இருக்கும் தலம் மயிலாடுதுறை வள்ளலார் கோயில். இங்கு வழிபட்டால் நீங்கள் ஈடுபடும் துறையில் நம்பர் ஒன்னாக திகழ்வீர்கள். சகல பாக்கியங்களையும் வாரி வழங்குபவராக இங்கு சிவன் இருப்பதால் 'வள்ளலார்' என அழைக்கப்படுகிறார். அம்மனின் பெயர் ஞானாம்பிகை.

முன்பு சிவனை சுமக்கும் பேறு பெற்றதால் தானே உயர்ந்தவர் என கர்வம் கொண்டது நந்தி. பாடம் புகட்ட அதன் முதுகில் தன் சடை முடியை வைத்தார் சிவன். பாரம் தாங்க முடியாமல் தவித்த நந்தி தவறை உணர்ந்து இங்குள்ள மேதாகுருவை வழிபட்டு பலன் பெற்றது. தேவகுரு பிரகஸ்பதி, சாமுண்டீஸ்வரி, பிரம்மா, மகாவிஷ்ணு இங்கு வழிபாடு செய்துள்ளனர். தன் வளர்ப்பு மகளான சகுந்தலைக்கு ஏற்பட்ட குருதோஷம் தீர கண்வ முனிவர் வழிபட்டார். வியாழன், குரு ஓரைகளில் வழிபடுவது நல்லது.


அரசியலில் ஜொலிக்க...


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகிலுள்ள தலம் புலிவனம். இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடுவோர் மக்களுக்கு சேவை செய்வதோடு அரசியல் வாழ்வில் ஜொலிப்பார்கள். மத்யந்த முனிவரின் மகனான மழன், தன் தந்தையின் ஆலோசனையால் சிவனை வேண்டி தவமிருந்தார். தினமும் அதிகாலையிலேயே பூக்களை பறிப்பதற்காக புலியின் கால்களை வேண்டிப் பெற்றார்.

அதனால் புலிக்கால்முனிவர் (வியாக்ரபாதர்) எனப் பெயர் பெற்றார். இவர் வழிபட்டதால் இத்தலம் 'புலிவனம்' என்றும், சுவாமி 'வியாக்ரபுரீஸ்வரர்' என்றும் பெயர் பெற்றனர். அம்மனின் பெயர் அமிர்த குஜலாம்பாள். இங்கு தட்சிணாமூர்த்தியின் அருகில் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் உள்ளனர். முயலகன், புலியின் மீதும் சுவாமியின் திருவடி உள்ளது. தட்சிணாமூர்த்தி, சிவன், அம்மனுக்கு அபிேஷகம் செய்யும் அரசியல்வாதிகள் மக்கள் செல்வாக்குடன் பதவியை அடைவர். அரசு வகையில் நன்மை காண்பர்.


இழந்ததை பெற...

நாகப்பட்டினம் - திருத்துறை பூண்டி செல்லும் வழியில் உள்ள தேவூர் சிவனை தரிசித்தால் இழந்த பணம், பதவி, உபதேசம் திரும்ப கிடைக்கும். ராவணனிடம் செல்வத்தை இழந்த குபேரனும், விருத்தாசுரனால் பதவியை இழந்த இந்திரனும் இங்கு வழிபட்டே இழந்ததை பெற்றனர். இங்குள்ள சிவனிடம் உபதேசம் பெற வந்ததால் தட்சிணாமூர்த்தியின் திருவடியின் கீழ் முயலகன் இல்லை.

தேவர்களுக்கு அருள்புரிந்தவர் என்பதால் சுவாமிக்கு தேவபுரீஸ்வரர் என்று பெயர். அம்மனின் பெயர் மதுரபாஷினி. இக்கோயிலை தரிசிக்க வந்த தேவலோக வாழைமரம் (வெள்வாழை) இங்கேயே தங்கியது. தலவிருட்சமான இதற்கு தண்ணீர் ஊற்றுவதில்லை. தானாகவே வளர்கிறது. மூவரால் பாடல் பெற்ற இத்தலத்தில் சூரியன், கவுதம முனிவர், சேக்கிழார் வழிபாடு செய்துள்ளனர். பிற்கால பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். கோட்செங்கச் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று எனலாம். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, June 18, 2025

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் செங்கோட்டு வேலவர் ஆதிகேசவப்பெருமாள்.

தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றான #திருச்செங்கோடு எனப்படும் #திருக்கொடி #மாடச்செங்குன்றூர்
#அர்த்தநாரீசுவரர் #பாகம்பிரியாள்
#செங்கோட்டு_வேலவர்
#ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில்[209]

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது.

கோயில் அமைந்திருக்கும் மலை சிவந்த நிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. இந்த மலைக்கு நாகமலை, உரசகிரி, தெய்வத்திருமலை போன்ற மற்ற பெயர்களும் உள்ளன.
#மூலவர்: அர்த்தநாரீஸ்வரர்
#அம்மன்/தாயார்: பாகம்பிரியாள்
#தல விருட்சம் :இலுப்பை
#தீர்த்தம்: தேவதீர்த்தம்
#புராண பெயர்: திருக்கொடிமாடச் செங்குன்றூர்
#ஊர் :திருச்செங்கோடு
#மாவட்டம் :நாமக்கல்

அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல்மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது இத்தலம். சுமார் 1370 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், செடி, கொடிகள், மாடமாளிகைகள் நிறைந்ததாக இருந்ததால் கொடிமாடசெங்குன்றுர் என்றும், ரிஷிகள், தேவர்களின் இருப்பிடமாக இருந்ததால் திரு என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச்செங்குன்று}ர் என்று அழைக்கபட்டது. மேலும், ஆதிசேஷ பாம்பானது மேருமலையை பிடித்த போது காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தில் மலை செந்நிறம் ஆனதால் இப்பெயர் வந்ததாகவும் கூறுவர். இந்த திருக்கொடிமாடச்செங்குன்றுர் காலப்போக்கில் இது மறுவி திருச்செங்கோடு என்று அழைக்கபடுகிறது.

தல வரலாறு :
  
முன்னொரு காலத்தில் பிருங்கி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிவ பக்தர். அவர் எப்பொழுது கைலாயம் வந்தாலும் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். பார்வதி தேவியை வழிபடமாட்டார். சிவனும் பார்வதியும் ஒன்றாக இருந்தாலும் அவர் வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, சக்தியாகிய என்னை அவமதித்ததால் நீர் சக்தி இழந்து போவீர் என சாபமிட்டார். இதையறிந்த சிவன் பார்வதி தேவிக்கு தன் உடலின் இட பாகத்தை கொடுத்து சரி பாதியாக தேவியை தன்னுடன் இணைத்து சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்று அவருக்கு கூறினார். இதன் மூலமாக சிவனும் சக்தியும் ஒன்று தான் என்று உலகிற்கும் உணர்த்தினார். இவ்வாறு சிவனும் சக்தியும் இணைந்து உருவான வடிவம் தான் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கபட்டது.

புராண வரலாறு:

ஆதி காலத்திலே ஆதி சேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே உண்டான சண்டையில் யார் பெரியவன், வலியவன் என்ற வாக்குவாதத்தில், இருவரும் போர் புரிந்து கொண்டனர். இப்போரினால் உலகமெங்கும் பேரழிவுகள் உண்டாயின. இது போதாதென்று மேரு மலையின் உச்சியை பலம் கொண்ட மட்டும் ஆதிசேஷன் அழுத்திப் பிடிக்க, வாயுதேவன் அந்தப் பிடியினை தளர்த்திட வேண்டும் என்பற்கு இருவருக்கும் ஏற்படத் ஒப்பந்தம். அவ்வாறு நடந்த வேளையில், இவர்களது சண்டையால் உலகம் அழிந்து விடப்போகிறது எனும் பயத்தில் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து நாகரை வணங்கி இந்தப் போரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களது பேச்சிற்கிணங்க ஆதிசேஷனும் தன பிடியினை சற்று தளர்த்த, இதுதான் சமயம் என்று வாயு அடித்த வேகத்தில் மேரு மலையின் ஒரு சிகரப் பகுதியும், ஆதிசேஷனின் ஒரு தலையும் பெயர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு தென்திசைப் பக்கமாக வந்து விழுந்தன.

இவ்வாறு ஆதிசேஷனின் தலையுடன் மோதிய வேகத்தில் அதன் இரத்தம் தோய்ந்து செந்நிற மலையாக மாறியது. இதுவே திருச்செங்கோடு மலையாக உள்ளது. இவ்வாறு பறந்து வந்து தென் திசையில் விழுந்த மேரு மலையானது, மூன்று பாகங்களாக சிதறி ஒன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், இன்னொன்று திருசெங்கோடாகவும் உருமாறியது.

உமையவள் இடப்பாகம் பெற்ற வரலாறு: 

கைலாசபுரியில் இருந்து தங்களை பிரிந்து சென்ற முருகப் பெருமானை நினைத்து உள்ளம் வருந்திய நிலையில் இருந்த சிவபிரான், தன் மனைவி பார்வதி தேவியை அழைத்துக் கொண்டு இயற்கையைக் கண் குளிரக் கண்டு, தன் மனதை ஆறுதல் படுத்திக் கொள்ள எண்ணினார். அவ்வாறு சென்று கொண்டிருக்கையில், தன் கணவருடன் உடன் செல்லும் களிப்பின் மிகுதியால், தன் திருக்கரங்களால், பெருமானது இரு கண்களையும் விளையாட்டுத் தனமாய் மூடி விட்டார். இதனால் சூரியன் ஒரு கண்ணும், சந்திரன் மறு கண்ணுமாய் விளங்கும் சிவபெருமானது கண்களை மூடியதன் பலனாய் உலகமே இருளில் மூழ்கியது. இதனைக் கண்ட தேவர்கள், முக்கண்ணனை சந்தித்து இவ்வாறு பார்வதி தேவி தங்களது கண்களை மூடிய காரணத்தால் உலகில் பல்வேறு உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிய காரணத்தால், உனக்கு பாவம் சேர்ந்தது. அந்த பாவத்தை பூவுலகில் பிறந்து, கேதாரம், காசி, காஞ்சிபுரம் போன்ற க்ஷேத்திரங்களில் தவம் மேற்கொள்ள நான் உன்னை வந்து சந்தித்து என்னுடன் அழைத்துச் செல்வேன் என கூறியருளினார். இதனால் வருத்தமுற்ற பார்வதி தேவி தனித்தனி உருவாய் உள்ளதாலேயே இத்தனை கஷ்டங்களும், ஆகையால் இறைவன் சொல்லுக்கிணங்க கேதாரம், காசி, காஞ்சி சென்று எல்லா இடங்களிலும் தவம் புரிந்தார்.

இவ்வாறாக காஞ்சியில் மணலைக் கூட்டி சிவலிங்கள் செய்து அதையே சிவபிரானாக எண்ணி தவமியற்றும் வேளையில் பெரு வெள்ளம் வந்தது. எங்கே தன் மணல் லிங்கமும் தண்ணீரோடு சென்று விடுமோ என பயந்து அதனைக் கட்டி அணைத்துக் கொண்டார். இக்காட்சியைக் கண்ட சிவபிரான் மனமிரங்கி கருணையுடன் வேண்டும் வரம் கேள் என்றார் உமையிடம். உலக நாயகி, சிவபெருமானிடம் தங்களது திருமேனியில் இடப் பாகம் தந்தருள வேண்டும் என்று கேட்டார். அதற்கு, நீ எனது கண்களை மூடிய பாவத்தினை இந்த காஞ்சியில் தவம் புரிந்ததால் நீங்கப் பெற்றாய். திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு தவம் மேற்கொள்வாயாக எனக் கூறினார்.

அங்கு தவமிருந்த தேவியிடம், உனது எண்ணம் அறிந்தேன், ஆனாலும், நிறைவாக நீ செந்நிற மலையான திருச்செங்கோடு சென்று தவமியற்ற எனது இட பாகத்தை வழங்கி அருளுவேன் என்று கூறிச் சென்றார்.

🛕 இதனை நிறைவேற்ற திருச்செங்கோடு சென்று பல காய் கனிகளுடனும், பல்வேறு பூஜை பொருட்களுடனும் புரட்டாசி மாதம், வளர்பிறை, அஷ்டமி திதியில் கேதார கௌரி விரதம் தொடங்கினார் அன்னை. புரட்டாசி மாதம், தேய்பிறை சதுர்த்தியன்று தேவியின் முன்னே தோன்றி, அன்னையின் தவத்தை மெச்சி, தனது இடபாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்தருளினார். இத்திருத்தலத்தில் கேதார கௌரி விரதம் 21 நாட்கள்கொண்டாடப்பட்டு, புரட்டாசி அமாவாசையன்று எழுந்திருத்தும் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

பிருங்கி முனிவர் வழிபட்ட வரலாறு:

ஒரு சமயம் திருக் கைலாயத்தில் பிரம்மன், விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் புடை சூழ, பரமசிவன் பார்வதி ஒன்றாய் வீற்றிருந்தனர். அனைவரும் சக்தி சிவன் என இருவரையும் வணங்கிய வேளையில் பிருங்கி முனிவர் மட்டும் சக்தியை விடுத்து சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். இதனைக் கண்டு மனம் வருந்திய உமையவள், தன் பதியிடம் தன் மன வருத்தத்தைக் கூறினார். பார்வதி தேவியின் மன வேதனையை புரிந்து கொண்ட சிவபெருமான், பிருங்கி முனிவரிடம் சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தி இல்லை என்ற உண்மையை பிருங்கி மகரிஷிக்கு எடுத்துரைத்தார். தன் தவறை உணர்ந்த மகரிஷி, அங்கேயே தங்கி அம்மையப்பனுக்கு சேவை செய்து கொண்டுள்ளார்.

தேர்க்கால் இடர் தவிர்த்து ஊமை பேசிய வரலாறு:
 
பல காலங்கள் முன்பு கொங்கு நாட்டில் காடம்பாடி எனும் ஊரில் பாததூளி, சுந்தரம்தம்பதியர் சிவ பக்தகளாய் வாழ்ந்து வந்தனர். இவர்களிடத்தில் எல்லா செல்வங்களும் நிறைந்து காணப்பட்டாலும், பிள்ளைச் செல்வம் இல்லாத காரணத்தால் மிகவும் மன வருத்தத்துடன் இருந்தனர்.

 பெரியவர்களின் ஆலோசனைப் படி இந்த திருச்செங்கோடு திருத்தலம் வந்து இத்தல இறைவனை வேண்டி வணங்கிட, இத்தம்பதியினருக்கு சந்தான பாக்கியம் உண்டானது. அந்தக் குழந்தைக்கு மூன்று வயது ஆகியும் பேசும் திறனற்று இருந்தது. இதனைக் கண்டு மனம் வெதும்பிய பெற்றோர், ஈசன் அருளால் கிடைத்த பிள்ளையை ஈசனிடமே விட்டு விடுவோம் என்றெண்ணி திருச்செங்கோடு திருத்தலம் வந்தடைந்தனர். 

இதனிடையே ஏமப்பள்ளி என்னும் ஊரில், எல்லா நற்குணங்களுடன் கூடிய துறவின் மேல் விருப்பமுள்ள, சிவ பக்தன் வேலப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார். வேலப்பனது கனவில் வந்த நமசிவாயம், தம்முடனே வந்திருந்து தமக்குப் பணிசெய்து வாழப் பணித்தார் சிவபிரான். அதனை ஏற்று சிவனடியாராகவே வாழ்ந்து கொண்டிருந்தார் வேலப்பன். இவர் பல தொண்டுகள் புரிந்தும், இறைவனுக்கு சாமரம் வீசி திருத்தொண்டு புரிந்து வந்தபடியால் அவருக்கு சாமர வேலைப்ப பூபதி என்ற பெயரும் உண்டானது.

இந்நிலையில், இத்திருத்தலம் வந்தடைந்த காடம்பாடி தம்பதியினர், தம் குழந்தையை இறைவனிடமே ஒப்படைக்க எண்ணியபடி, வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடக்கும் போது தேர் காலில் குழந்தையை வைத்து விட்டனர். தேரை இழுத்து வந்து கொண்டிருந்த வேலப்பன், இந்த தம்பதியினரின் செயலைக் கண்டு அதிர்ச்சியுற்று இக்குழந்தை மாய்ந்தால் என் உயிரும் சேர்ந்து போகட்டும் என்று வேண்ட, அதிசயிக்கத் தக்க வகையில் ஓடி வந்து கொண்டிருந்த தேர் சக்கரம் பாலகனின் தலையைத் தாண்டிச் சென்றது. பேசாத குழந்தையும் இதழ் விரித்து பேசத் தொடங்கியது.

திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகம்: ஞானசம்பந்தர் பெருமான் திருச்செங்கோடு வந்து சில காலம் தங்கியிருந்து சிவதொண்டு புரிந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பருவ மாற்றத்தால், மக்களை குளிர் சுரம் பீடித்துக் கொண்டது. இதனைக் கண்டு மனம் வாடிய ஞான சம்பந்தர், இந்த சுரமென்னும் உடல் உபாதை நீங்கிட இத்தலத்திலேயே பெருமான் முன்பு பதிகம் பாடினார். இத்தலத்தில் ஞானசம்பந்தரால் பாடப்பட்ட இப்பதிகத்தை இறையன்புடன் ஓதி வந்தால் தீவினையால் வரும் நோய்கள் நம்மை பாதிக்காது என்பது தெய்வீக நம்பிக்கை.

"அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெனைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!!
                 __திருஞானசம்பந்தர்

மலை அமைப்பு :
  

திருச்செங்கோட்டில் அமைந்துள்ள மலை சிவலிங்க தோற்றத்துடனும், வடமேற்கில் இருந்து பார்க்கும்போது பசுவின் தோற்றத்துடனும், மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும் போது ஆண் உருவம் படுத்து இருப்பதுபோலவும், தென்மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும்போது பெண் படுத்திருக்கும் தோற்றமும் அமைந்துள்ளது. அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் இந்த மலையின் மீது ஆலயமாக அமைந்துள்ளது. தென்பகுதியில் கஜமுக பிள்ளையாரும், வடபகுதியில் ஆறுமுக சுவாமி ஆலயமும் அமைந்துள்ள இடத்திலிருந்து மலையின் முதல் படியானது தொடங்குகிறது.

கோவில் அமைப்பு :
  
1200 திருபடிகள் வழியாக சென்றால் முதலில் செங்குந்தர் மண்டபத்தையும், அதனை அடுத்து காளத்திசுவாமிகள் மண்டபம், திருமுடியார் மண்டபம் மற்றும் தைலி மண்டபத்தையையும் அடையலாம். தைலி மண்டபத்தில் மேற்குபுறத்தில் 7 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட நந்தி ஒன்று ராஜகோபுரத்தை பார்த்தவண்ணம் உள்ளது. இவ்விடத்தில் 60 அடி நீளத்தில் ஆதிசேடன் ஐந்து தலைகளுடன் மிக பிரமாண்டமாய் அமைந்துள்ளது.

  மலையின் உச்சிக்குக் சென்றவுடன் வடதிசையில் 5 நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோவிலின் மதில் சுவர் கிழக்கு மேற்காக 260 அடி நீளமும், வடக்கு தெற்காக 170 அடி நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. மேற்கு கோபுரம் 3 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. வடக்கு கோபுர வாயில் வழியாக நுழைந்து 20 படிகள் கீழிறங்கி வெளிப் பிரகாரத்தை அடையலாம்.

  அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி அமைந்த செங்கோட்டு வேலவர் சந்நிதி உள்ளது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது.

நாகர் சிலை :
  
மலை அடிவாரத்திலிருந்து மலைக்கு மேலே படி வழியாக செல்லும் போது நாம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமாய் ஐந்து தலைகளுடன் அமைந்துள்ள ஆதிசேஷன் உருவத்தை காணலாம். பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ள இந்த நாகர் உருவமே நாகர்மலையின் முதலிடம் ஆகும். இந்த நாகருக்கு மக்கள் குங்குமம் தூவி, தீப ஆராதணை செய்து வழிபடுகின்றனர். ராகுதோஷம், நாகதோஷம், காலசர்பதோஷம், களத்திரதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். முன்னர் மக்கள் படி வழியாக சென்று நாகதெய்வத்தை வழிபட்டனர்.

செங்கோட்டுவேலவர் சன்னதி :
  
முருகன் திருக்கைலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் கோபம் கொண்டு பழனிக்கு வந்தார். அதன்பின் அங்கிருந்து இத்தலத்திற்கு வந்து செங்கோட்டுவேலவர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். முருகன் இத்தலத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாதவண்ணம் வலது கரத்தில் சக்தி வேலாயுதத்தையும் இடது கரத்தில் சேவலையும் எடுத்து இடுப்பில் அனைத்த வண்ணம் கம்பீரமாக காட்சி தருகிறார். இங்கு செங்கோட்டுவேலவருக்கு தனி சன்னதியும் உள்ளது. இந்தக் கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி அமைந்த செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது.

அர்த்தநாரீஸ்வரர் சன்னதி :
  

மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது.

கோவில் சிற்ப கலைகள் :
 
 அர்த்தனாரீஸ்வரர் திருக்கோயில் சிறந்த சிற்ப்பகலைக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது. இங்குள்ள கற்சிலைகளும், சிற்ப்பங்களும், பெரும்பாலும் சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள மண்டபங்களிலும், தூண்களிலும் வடிக்கப்பட்டுள்ள அழகிய சிற்ப்ப வேலைபாடுகளும் மற்றும் கோயிலை சுற்றி அமைந்துள்ள அற்ப்புதமான கற்சிலைகளும் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும்வண்ணம் அமைந்துள்ளன.

  விமானத்தில் (மேற்கூறையில்) எட்டு கிளிகள் எட்டு திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லினால் கண்கொள்ளா காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும் வகையில் மிகவும் அழகிய கலைநுட்பத்துடனும், மிகுந்த அறிவுதிறனுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

  வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும். குறவர் நடனகலையும், சிலந்தியை தேள் கவ்வுவது போல் அமைந்துள்ள சிலை வடிவத்தையும் கலைக்கண்ணோட்டத்தோடு நோக்கின் அதன் பெருமையை அறியலாம். அர்த்தநாரீஸ்வரர் நேரெதிர் உள்ள நிறுத்த மண்டபத்தில் அமைந்த தூண்களில் காளி, ரதிமன்மதன், போன்ற சிற்ப்பங்கள் மிகவும் கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ளன.

  திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளி மீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்று}ண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை.

சிறப்பம்சங்கள் :
★ இங்கு சிவனும் பார்வதியும் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரராக நவபாஷனா சிலையாக உள்ளார்.
× மரகத லிங்கம் இங்கு மற்றொறு சிறப்பு...

அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர், சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள்.

மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இந்த மலைக் கோவிலுக்குச் செல்லும் பாதை, 1200 படிகளைக் கொண்டுள்ளது. கிழக்கு மேற்கில் 262 அடி நீளமும், தெற்கு வடக்காக 201 அடி நீளமும் கொண்டது இந்தக் கோவில். இதன் வடக்கு வாசல் ராஜகோபுரம் கிட்டத்தட்ட 84.5 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென் திசைகளிலும் இக்கோவிலுக்கு வாசல்கள் உண்டு. அவற்றுள் தென் திசை வாசலுக்கு மட்டும் சிறுகோபுரம் உள்ளது.

செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகள் கொண்டது இந்த ஆலயம். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் சன்னிதிக்கு முன் வாசல் இல்லை. மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணி இருக்கிறது.

அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது. இக்கோவிலின் தூண்கள், மண்டபச் சுவர்கள்என அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

கண் நோயை தீர்க்கும் முருகன் கோயில்

கண் நோயை தீர்க்கும் முருகன் கோயில் சிக்கல், எட்டுக்குடி ஆகிய இடங்களில் உள்ள உயிரோட்டமிக்க முருகன் சிலையை செதுக்கிய சிற்பியே எண்க...