தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் ஒன்றானதும், மூன்று லிங்கத் திருமேனிகள் ஒரே இடத்தில் அமைந்த பல வரலாற்று சிறப்புமிக்க தலமான #காளையார்கோவில் என்ற #திருக்கானப்பேர்
#சொர்ணகாளீஸ்வரர், #சோமேஸ்வரர், #சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
வரலாற்று சிறப்புமிக்க காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காளையார்கோவில். பெயருக்கு ஏற்றார் போல் இங்கு அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் ஆலயமானது வரலாற்று சிறப்புமிக்க சிவ ஆலயங்களில் ஒன்று.
சொர்ணகாளீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க பகுதியை,பாண்டியர்களும் பிறகு சிவகங்கை மன்னர்களும் ஆட்சி செய்தார். இக்கோயிலை தேவக்கோட்டை ஜமீன் குடும்பத்தாரின் அறகட்டளை நிர்வகித்து வருகிறது.
மூலவர்:சொர்ணகாளீஸ்வரர், சோமேசர், சுந்தரேசர்
அம்மன்:சொர்ணவல்லி, சவுந்தரவல்லி, மீனாட்சி
தல விருட்சம்:கொக்கு மந்தாரை
தீர்த்தம்:கஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம்
புராண பெயர்:திருக்கானப்பேர்
ஊர்:காளையார் கோவில்
மாவட்டம்:சிவகங்கை
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்
தேவாரப்பதிகம்:
"பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர் வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான் கள்ளமே செய்கிலர் கருதிய கானப்பேர் உள்ளமே கோயிலா வுள்குமென் உள்ளமே"
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 10வது தலம்.
பெயர் காரணம்:
சங்க காலத்தில், இந்த இடம் கானப்பேர் என்று அழைக்கப்பட்டது. இதற்கான சான்று, புறநானூற்றில், 21ஆம் பாடலில் ஐயூர் மூலங்கிழார், சங்க கால கவிஞ்ர், குறிப்பிட்டுள்ளார். கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் சுந்தர மூர்த்தி நாயனார், இக்கோயிலிள்ள் மூலவரை காளை என்று விவரித்துப் பாடினார். அன்று முதல், இத்திருக்கோயில் காளையார்கோயில் என்று அழைக்கப்பட்டது.
பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவரும், அம்பாளும் மட்டுமே இருப்பர். காஞ்சிபுரம் ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னதிகள் உள்ளன. அம்பாளுக்கு தனி சன்னதி கிடையாது.
ஆனால், இத்தலத்தில் மூன்று இறைவனும், மூன்று இறைவியும் எழுந்தருளுகின்றனர்.
சொர்ணகாளீஸ்வரர் - சொர்ணவல்லி
சோமேசர் - சவுந்தரநாயகி
சுந்தரேசுவரர் - மீனாட்சி
இதில் தேவாரப் பதிகம் பெற்றவர் சொர்ணகாளீஸ்வரர்.
சங்க காலத்தில், இந்த ஊரைத் தலை நகராகக் கொண்டு ஆண்டவர் வேங்கை மார்பன் என்னும் அரசர். அப்போது பாண்டிய மன்னராக இருந்த உக்கிரப் பெரு வழுதி, இவரைப் போரில் வென்று கானப்பேரைக் கைப்பற்றினார். இதனால், 'கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி' என்னும் பட்டமும் பெற்றார். ஐயூர் மூலங்கிழாரின் புறநானூற்றுப் பாடல் இந்தப் பெருமையைப் பற்றிக் கூறும். உக்கிரப் பெருவழுதி, கடைச் சங்க காலத்தில் வாழ்ந்தவர்; சங்கப் புலவர்களை ஆதரித்தவர்; அகநானூறு நூலைத் தொகுப்பித்தவர்; ஒளவையாரால் பாடப் பெற்றவர்; இவர் சபையில்தான் திருக்குறள் அரங்கேறியதாகவும் கருத்துண்டு. கானப்பேரின் மதில் பெருமைக்குரியது என்பதாலேயே, 'கானப்பேர் எயில்' என்னும் பெயர் வந்திருக்க வேண்டும்.
தல வரலாறு:
ஒருமுறை சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார். ஊர் எல்லைக்கு வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார். “இறைவா! உன்னைக் காண முடியவில்லையே,’ என வருந்திப் பாடினார்.
தன் நண்பரான சுந்தரர் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தனது காளையை அனுப்பினார். அது சுந்தரர் நின்ற இடம் வரை வந்து மீண்டும் திரும்பிச்சென்றது. அதன் கால் பதிந்த இடங்களில் லிங்கம் இல்லையென்றும், அவ்வழியே நடந்து வந்து தன்னைத் தரிசிக்கலாம் என அசரீரி ஒலிக்கவே, சுந்தரர் மகிழ்ச்சியுடன் அவ்வழியில் சென்றார். காளை வழிகாட்டிய தலம் என்பதால், இவ்வூர் “காளையார்கோவில்’ ஆயிற்று.
தலபெருமை:
யானை மடு: இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற அந்த யானை, சாப நிவர்த்திக்காக இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தது.
மனிதர்களின் பார்வை இந்த யானை மீது படக்கூடாது என்பது விதி. ஆனால், ஒருமுறை ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால், அந்த யானை தன் தலையால் பூமியை முட்டி பாதாளத்துக்குள் சென்றுவிட்டது.
யானை முட்டிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு “யானை மடு’ என்று பெயர். ராமபிரான் ராவணனை அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தீர்த்தத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது. கோயிலுக்குள் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. தல விருட்சம் கொக்கு மந்தாரை.
மூன்று சிவன் மூன்று அம்மன்: இங்குள்ள பெரிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், சிறிய கோபுரம் மருது பாண்டியர்களாலும் கட்டப்பட்டது. சோமேசர்- சவுந்தரநாயகி, சுவர்ணகாளீஸ்வரர் – சுவர்ணவல்லி, சுந்தரேஸ்வரர்- மீனாட்சி என மூன்று சிவனும், மூன்று அம்மனும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் மூன்று சிவன், மூன்று அம்மன் இங்கு மட்டுமே உள்ளனர்.
இதில் சுவர்ணகாளீஸ்வரர் தான் தேவாரப்பாடல் பெற்றவர். இவரை வழிபட்டால் செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை.
சண்டாசுரனைக் கொன்ற காளி, சுவர்ணகாளீஸ்வரரை வழிபட்டு, தன் பாவம் நீங்கி, சுவர்ணவல்லி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள்.
ஆயிரம் கோயிலை தரிசித்த பலன்: இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி. இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். சகஸ்ரலிங்கமும் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) இத்தலத்தில் உள்ளது.
இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க, பல சிவாலயங்களை தரிசித்து வந்தான். இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான்.
இதன் அடிப்படையிலேயே இங்கு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது. சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தலத்தை பாடியுள்ளனர்.
பொது தகவல்:
பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவரும், அம்பாளும் மட்டுமே இருப்பார்கள். காஞ்சிபுரம் ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னதிகள் உள்ளன. அம்மனுக்கு சன்னதி கிடையாது. ஆனால், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சுவர்ணகாளீஸ்வரர் கோயிலில் மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
சோமேசர் சன்னதிக்கு எதிரில் உள்ள பெரியகோபுரம் மருதுபாண்டியரால் கட்டப்பெற்றது. இக்கோபுரத்தின் மீதேறிப்பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியுமாம்.
நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய தெப்பக்குளம் – கஜபுஷ்கரணி தீர்த்தம் என்னும் யானை மடு. கோயிலின் எதிரில் மருதுபாண்டியர் சமாதி இருக்கிறது.
வரலாறு:
காளையார்கோயில், சங்கக் காலங்களிலிருந்து மன்னர்களின் கோட்டையாகவே செயல்ப்பட்டது. சுதந்திர போரட்ட வீரர்களாகிய முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் மற்றும் மருது சகோதரர்களின் கோட்டையாகவும் திகழ்ந்தது.
25 ஜூன் 1772, ஆங்கிலேயப் படைகள், கர்னல். ஜோசப் ஸ்மிட் மற்றும் கேப்டன். போஜூர் தலைமையில் காளையார் கோயிலை நோக்கி அணிவகுத்தனர். சிவகங்கையின் இரண்டாவது ராஜா , முத்துவடுகநாத தேவர் (1750–1772) மற்றும் மருது சகோதரர்கள் அவர்களை எதிர்த்து கோயிலை பாதுகாக்க முயன்றனர். இதில் ராஜா முத்துவடுகநாத தேவர் ம்ற்றும் பல வீரர்கள் உயிர்மாண்டனர். படையெடுத்த ஆங்கிலேயர்கள் 50,000 பகோடா மதிப்புள்ள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் சகஸ்ரலிங்கமும் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) இத்தலத்தில் உள்ளது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 200 வது தேவாரத்தலம் ஆகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மும்மை சிறப்புகளை கொண்டது. அருள்மிகு செளந்தரவல்லி அம்மாள் சோமேஷர், அருள்மிகு சொர்ணவல்லி அம்பாள் சமேத காளீஸ்வரர், அருள்மிகு மீனாட்சியம்மாள் சமேத சுந்தரேஸ்வரர் என்று மூன்று முக்கிய திருக்கோயில்களை ஒன்றாக்கி உள்ளடக்கியது. சொர்ண காளீஸ்வரர் கோயில்.
மூன்று லிங்கத் திருமேனிகளை தனித்தனி கருவறைகளாக கொண்டு மூன்று சிவாலயங்கள் ஆகம முறைப்படி கட்டப்பட்ட திருத்தலம் இது. பெரிய ராஜகோபுரத்தின் முன்னிலையில் காட்சி தரும் அருள்மிகு சோமேஷர், பிரம்மா, குபேரன் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இவரின் வலது புறம் சௌந்தர்ய வெள்ளமாக காட்சி தரும் அன்னை சௌந்தரவல்லி. இவ்வாலயத்தில் இந்திர நாள் வழிபட்ட சஹத்திர லிங்கமும் அருள் செய்கிறது. சன்னதிக்கு வலது புறம் இருபிரகாரங்களை உள்ளடக்கிய ஆன்மீக சொர்ணவள்ளி அம்மன் சமேத காளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் உள்ள ராஜகோபுரமானது 152 அடி உயரம் கொண்டதாகும். இந்த திருத்தலத்திற்கு வந்து தரிசனம் செய்தால் பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும் என்றும், மனநோய் நீங்கும் என்றும் இத்திருத்தலத்தில் பாதம் பட்டால் பாவ விமேசனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சிறப்பம்சம்
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சகஸ்ரலிங்கமும் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) இத்தலத்தில் உள்ளது.
திருவிழா:
தைப்பூசத்தில் சுவர்ண காளீஸ்வரருக்கும், வைகாசி விசாகத்தில் சோமேஸ்வரருக்கும், ஆடிப்பூரத்தில் சுவர்ணவல்லி அம்மனுக்கும் தேர்த்திருவிழா நடக்கிறது. 11ம் திருமுறையிலும் குறிப்பிடப்பட்ட தலம். மார்கழி பவுர்ணமி, நவராத்திரியில் சிறப்பு பூஜை உண்டு.
தெப்பக்குளம்:
காளையார் கோயில் தெப்பக்குளம் என்றும் ஆனைமடு குளம் என்றும் அழைக்கப்படும், இக்குளம் பல நூறு ஆண்டுக்கு முன்பு வெட்டப்பட்டது.
1900கள் தொடக்கத்தில் தேவகோட்டை ஜமீன்தார் அள. அரு. இராம. அருணாச்சலம் செட்டியார், இக்குளத்தை சதுர வடிவமாக சீர்படுத்தி கல்திருப்பணி செய்து, மேலும் அழகுற மதுரை வண்டியூர் தெப்பக்குளம் நீராழி மண்டபத்தை ஒத்து, இக்குளத்தின் நடுவே அற்புதமான நீராழி மண்டபம் ஒன்றை அமைத்துள்ளார்.
திருப்பணி:
பலநூறு ஆண்டுகட்கு முன் பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்ற இக்கோயில், பின்னர் பலராலும் திருப்பணிகள் செய்யப்பெற்றும் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது.
பாண்டியனால் கட்டப்பட்ட 5 நிலைகளைக் கொண்ட 90அடி உயர ராஜ கோபுரமும் அதன் அருகே 18ஆம் நூற்றாண்டில் மருது சகோதரர்களால் கட்டப்பட்ட 9 நிலைகளைக் கொண்ட 155 1/2அடி உயர இராஜகோபுரமும் உள்ளன.
இத்தலத்தில் உள்ள சுந்தரேசுவரர் - மீனாட்சி கோயில், நூறுகால் மண்டபம் நீங்கலாக ஏனைய சோமேசர்-சவுந்தரநாயகி கோவில், சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி கோவில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் மறுகட்டுமானம் செய்யப்பட்டும், புதிதாக மண்டபங்களும் சுற்று பிரகாரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.1800கள் மத்தியில் தொடங்கி 1900கள் தொடக்கம் வரை நகரத்தார் திருப்பணிகள் நடந்துள்ளது.
18-ம் நூற்றாண்டில் அதாவது 1780 முதல் 1801 வரை, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்த மருது பெருமக்கள், மிகச் சிறந்த ஆன்மிகவாதிகள். இவர்கள் பல்வேறு திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தனர். காளையார்கோவிலின் கோபுரத்தை, மதுரை மீனாட்சி அம்மன் ஆலய கோபுரம் போல் கட்ட வேண்டும் என்று விரும்பித் திருப்பணி செய்தனர்.
காளையார்கோவில் கோபுரத்திலிருந்து பார்த்தால், சுமார் 66 கி.மீ. தொலைவிலுள்ள மதுரை கோபுரம் தெரியும். அசப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோபுரம் போன்றே இருக்கும் இந்தக் கோபுரம் மிக உயரமாக எழுப்பப்பட்டுள்ளது.
காளையார்கோவில் கோபுரம் கட்டி முடித்தவுடன், கோயிலுக்கு எழிலார்ந்த தேர் ஒன்றையும் செய்ய வேண்டும் என்று மருது சகோதரர்கள் விரும்பினர். விருப்பம் நிறைவேறி, தேரும் செய்தார்கள். அழகான தேர். தேரோட்டத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றன. தேரோட்டத் திருநாளும் வந்தது.
காளையார்கோவிலில் நடைபெற்ற அந்தத் தேரோட்டமும் அதன்பின்னான நிகழ்வுகளும் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. அது மருதுசகோதரர்களின் வாக்குத் தவறாமையையும் கலைக்கும் ஆன்மிகத்துக்கும் தலைவணங்கிய தன்மையையும் விளக்கும்.
மேலும் நம் ஆன்மிக தர்மம் உயிரைவிட உயர்ந்தது என்பதை விளக்கும் நிகழ்வுகளும் மருது சகோதரர்கள் வாழ்வில் நிகழ்ந்தன.
புறநானூற்றுக் காலத்திலேயே, 'கானப் பேரெயில்' என்று அழைக்கப்பட்ட இந்தத் தலம், சம்பந்தராலும் சுந்தரராலும் பாடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அருணகிரிநாதரின் திருப்புகழ், வள்ளலாரின் அருட்பா, பதினோராம் திருமுறையில் கபில தேவர் மற்றும் பரணத்தேவர் பாடல்கள், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றிலும் இந்தத் தலம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
#திருவிழா:
தைப்பூசத்தில் சுவர்ண காளீஸ்வரருக்கும்,
வைகாசி விசாகத்தில் சோமேஸ்வரருக்கும்,
ஆடிப்பூரத்தில் சுவர்ணவல்லி அம்மனுக்கும் தேர்த்திருவிழா நடக்கிறது.
11ம் திருமுறையிலும் குறிப்பிடப்பட்ட தலம். மார்கழி பவுர்ணமி, நவராத்திரியில் சிறப்பு பூஜை உண்டு
#திறக்கும்_நேரம்:
காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
#அமைவிடம் :
சிவகங்கையில் இருந்து கிழக்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும், தேவகோட்டையில் இருந்து மேற்கே 35 கிலோமீட்டரிலும், மதுரையில் இருந்து தென்கிழக்கே 66 கிலோமீட்டரிலும் காளையார்கோவில் உள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment