Sunday, April 30, 2023

சித்திரையில் வரும் பௌர்ணமியை சிறப்பாக கொண்டாட வேண்டும்

மாதங்களில் முதல் மாதமாக வருவது சித்திரை.நமது வாழ்க்கையை நித்திரையிலேயே

கழிக்காமல் முத்திரை பதித்த வாழ வேண்டுமானால் சித்திரையில் வரும் பௌர்ணமியை சிறப்பாக கொண்டாட வேண்டும். அது மட்டுமல்ல நாம் செய்யும் பாவ புண்ணியங்களை பதிந்து வைக்கும் சித்திரகுப்தனையும் சிந்தையில் நினைத்து வழிபட்டால் அத்தனை காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். திதி பார்த்து வழிபட்டால் விதிமாறும் என்று சொல்வார்கள் நமக்கு விதிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாவிட்டாலும் விதியின் வலிமையை கொஞ்சம் குறைக்க வழிகாட்டுவது திதியின் அடிப்படையில் நாம் செய்கின்ற வழிபாடுகள் தான்.

சதுர்த்தி திதியில் ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். சஷ்டி திதியில் முருகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் விலகும். ஏகாதசி திதியில் பெருமாளை வழிபட்டால் பெருமைகள் வந்து சேரும். அஷ்டமி திதியில் கிருஷ்ணரை வழிபட்டால் கீர்த்திகள் உண்டாகும். நவமி திதியில் ராமபிரானை வழிபட்டால் நல்ல இல்லறம் அமையும் .அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் கூடும். பௌர்ணமி திதியில் மலைவலம் வந்து சிவன் உமையவள் மால்மருகன் ஆகியோரை வழிபட்டால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.

மாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியை மட்டும் சித்ரா பௌர்ணமி என்று சிறப்பு பெயரிட்டு நாம் அழைப்பது வழக்கம். அந்த நாள் சித்திரை 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை வருகிறது .அன்றைய தினம் நாம் மலை அளவு செய்த பாவத்தை கடுகளவு குறைத்து எழுது என்றும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாக உயர்த்தி எழுது என்றும் சித்தரகுப்தனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். அதோடு சித்திரகுப்தனுக்கு பொங்கல் படைத்து இனிமேல் நான் செய்யும் செயல்கள் அனைத்தும் புண்ணியம் தருவதாக அமைய வழிகாட்டு. வாழ்க்கை பாதையை சீராகவும் நேராகவும் ஆக்கிக் கொடு. ஆயுள் வளரவும் ஆற்றல் பெருகவும் செல்வம் பெருகவும் வழிகாட்டு என்று வேண்டிக் கொண்டால் வாழ்க்கை பயணம் சிறப்பாக அமையும்.

ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் பலம் பெறும் மாதம் என்பதால் சித்திரை மாத பௌர்ணமி *சித்ரா பௌர்ணமி* என புகழப்படுகிறது.

🌕 சித்ரா பௌர்ணமி...


🌺 சித்ரகுப்தன் !!

ஆயுள் விருத்தி தரும் சித்ரகுப்தனை மனதார வழிபடுங்கள்..!!

சூரியன் உச்சம் பெறும் மாதமாக சித்திரை மாதம் உள்ளது. அந்த மாதத்தில் வரும் பௌர்ணமியில் சந்திரன் முழு மதியாக பலம் பெறுகிறார். இப்படி ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் பலம் பெறும் மாதம் என்பதால் சித்திரை மாத பௌர்ணமி *சித்ரா பௌர்ணமி* என புகழப்படுகிறது.

சித்ரகுப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்ரகுப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது மக்களின் நம்பிக்கை.

சித்ரகுப்தரின் பிறப்பு :

பார்வதி அம்பாள் சித்ரம் எழுதி உயிர் கொடுத்தார். சித்ரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்ரகுப்தா என பெயர் பெற்றார் என்று சிலர் கூறுகின்றனர்.

காமதேனுவின் வயிற்றில் உதித்தார் என்றும், அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம், நைவேத்தியம் செய்யக்கூடாது. எருமைப்பால், எருமைத்தயிர்தான் அபிஷேகம், நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர்.

சித்ரகுப்தன் கதைச் சுருக்கம் :

தனியொரு நபராக கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருப்பதாக ஈசனிடம் எமதர்மன் வேண்டிக்கொண்டார். அதன் பொருட்டு அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது உமது பொறுப்பு என்றார்.

இதனை எமனின் தந்தையான சூரியபகவானுக்கு தெரிவித்தார் பிரம்மதேவர். அதன்பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிரில் பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீனாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார். அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்ர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார்.

சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றலும், எல்லா சித்திகளும் கிடைத்தன. ஆகவே தனது சக்தியினை சோதிக்க விரும்பி படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். பிரம்மா உட்பட அனைவரும் அதிர்ந்தனர். இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு, பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல் நீயும் மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத்தொழில் உனக்கன்று. அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார்.

தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

சித்ரகுப்தருக்கான கோயில்கள் :

தென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள் உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சித்ரகுப்தர், எமன், பிரம்மா உடன் கடம்பூர் தல இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் இடம் பெற்றுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்ர புத்திர நாயனார் என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கைகள் :

உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துக் கணக்குகளையும் எழுதிப் பராமரித்து வருபவர் சித்ர புத்திர நாயனார்தான் என்பது நம்பிக்கை. மேலும் ஒருவருடைய இறப்புக்குப் பின் இவருடைய கணக்கைப் பார்த்துத்தான் சொர்க்கம் அல்லது நரகம் போன்றவற்றில் இடமளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகள் சித்ரகுப்தனால் எழுதப்படுகிறது. எனவே, சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

கதை சொல்வதன் முக்கிய நோக்கம் :

மக்கள் பாவச்செயல் செய்யும் எண்ணத்தை விட்டு, புண்ணியச்செயலில் ஈடுபட வேண்டும் என்ற நல்ல எண்ணம் மேலோங்கவே. எனவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து நற்பலன்களை பெறுவோமாக.

Saturday, April 29, 2023

தேபெருமாநல்லூர் சிவன் கோவில் மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம்

தேபெருமாநல்லூர் சிவன் கோவில் மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் 
மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம்.

மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும்.
மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..செல்ல முடியாத அளவுக்கு
அவ்வளவு தடைகள் வரும்.வருடத்தின் 365 நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது.மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வருடத்திறக்கு ஒருமுறை நல்லபாம்பு இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று..இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும்.

ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம் ருத்ராஷ்வரர் திருக்கோவில்.

இடம்:- தேப்பெருமாநல்லூர்.கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம்.

ஓம் நமச்சிவாயா.

“”புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் ”

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது ; ஆயினும் இந்த அறிய பிறவியை விடுத்து பிறவாமை என்னும் பெரும் பேறையே நாடும் இறையடிகலார்களின் உள்ளம . அத்தகைய பேரின் நிலையை அருளும் திருத்தலமாக விளங்குகிறது கும்பகோணத்தில் இருந்து திருநாகேஸ்வரம் வழியாக 7 கி மீ தொலைவில் உள்ள தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இத் திருத்தலத்திற்கு சென்று இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று ஐதிகம்.

இத திருக்கோவில் மிகவும் பழமையானது. மற்ற கோவில்களுக்கும் இந்த கோவிலுக்கும் பல விதிகள் மாறுபட்டு காணப்படுகிறது. ஆம் இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

இக் கோவிலுக்கு அவ்வளவு எளிதாக வந்து விட முடியாது விதிப்பயனே இந்த கோவிலுக்கு அழைத்து வரப்படும் ஆமாம் யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர் கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்” என்று சொல்கிறார் .

பக்தர்களுக்குள் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமியைத் தரிசித்ததும் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

#வேதாந்தநாயகிஅம்பாள்:

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அம்பாள் வேறெங்கும் காணக்கிட்டாத காட்சியாக வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வந்து நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் அம்பாள் தோற்றத்தில் அருள்புரிகிறாள். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சன்னதியில் நான்குவருடங்களுக்கு முன் தீபம் காலை 7 மணிமுதல் 9 மணி வரையில் அணைவதும் மீண்டும் தானாக எரிவதுமாக இருந்தது பெரும் அதிசய நிகழ்வாக இருந்தது தேப்பெருமானல்லூர் பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து அந்த காட்சியையும் அம்பாளையும் வழிபட்டு சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#பைரவர்:

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர். ஒரே கோவிலில் இரண்டு பைரவர் இருப்பதும் இங்கேதான் . இந்த இரண்டு பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவன் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார்.

சனிபகவான் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார் என்பதற்கு விளக்கமும் கொடுக்கிறார்கள். இறைவன் ஈசனை சனி பகவான் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் இப்படி ஒய்யாரமாய் காட்சியளிக்கிறார்.

சனிபகவான் அம்பாளிடம், என் பணி சரியாக செய்வேன் “”நாளை காலை ஏழேகால் நாழிகைப் பொழுதில் ஈசனைப் பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னாராம் . அதன் படி அடுத்தநாள் ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் வந்தாராம் . அப்போது அம்பாள் , ஈஸ்வரனை காப்பாற்ற பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.

சனி பகவான் அங்கு வந்து மரத்திற்கு அருகில் இருக்கும் அம்பாளைப் பார்த்ததும் ஈஸ்வரன் எங்கேதான் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டாராம் அதன் பிறகு அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அம்பாள் சனி பகவானைப் பார்த்து,

“என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?” என்று கேட்டாள். சனி பகவான், “நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. என் பார்வையில் ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க ஏழேகால் நாழிகை நேரமே நான் அவரைப் பிடித்திருந்த நேரம்” அதுவும் உங்களுடைய ஒத்துழைப்பில் என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, “ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பதும் இங்கு ஐதீகம்.

மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத் தைத் தணித்தாள் அம்பிகை. அம்பா ளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபி யானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். “”ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம் நீங்கும்” என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.

இதனைக் கண்ட நாரதர், “இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!” என்று போற்றிப் புகழ்ந்தார்.

“பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்” என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர் களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, “”மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்” என்றார்.

மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், “பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்” என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, “மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது” என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், “மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கி றார்கள்.

இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணி களைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள்.

நந்தி :

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்எபெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.

பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், “”நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்” என்று ஆறுதல் கூறினார்.

அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி :

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.

ராகு / கேது :

இத்திருக்கோவிலில் ராகு பகவானும் கேது பகவானும் ஒரே இடத்தில் அருள் புரிகின்றார்கள் . வேறு எங்கேயும் இப்படி இருவரும் ஒன்றாக இணைந்து காட்சி தருவது இல்லை. ஒரே இடத்தில் இருவரையும் வணங்கும் படி ஒற்றுமையோடு அருள் கின்றனர்.

நவக்கிரகம் :

நவகிரகங்கள் ஒவ்வொன்று மாறு திசையில் இருப்பதும் இங்கு தான்.

கர்ப்பகிரகம் :

இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.

தீர்த்தம்:

இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது.

தினமும் சூரிய பகவான் வழிபடுகிறார்:

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.

நாகம் வந்து வழிபடுகிறது :

சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.

கோவில்  முகவரி –  
தேப்பெருமாநல்லூர் சிவன் ஆலயம் 
1/15,அக்ரஹாரம் ,
தேபெருமாநல்லூர் – (po)
தேபெருமாநல்லூர் – (Tk),
கும்பகோணம் – 612 206

_அபிஷேக பலன்கள்:_

_அபிஷேக பலன்கள்:_


1) அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் 
திரும்ப கிடைக்கும்.

2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.

3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.

4) தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்
.
5) பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.

6) கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்
.
7) மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும்.

8) தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும்.

9) புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.

10) இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.

11) உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

12) பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.

13) கந்தத்தினால் (அரைத்தெடுத்த சந்தனம்) அபிஷேகம் செய்தால் புத்திர 
ப்ராப்தி கிட்டும்.

14) ஸ்வர்ண (தங்கம்) ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் கோரமான
தாரித்ரியம் நசிக்கும்.

15) ஸுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப 
கிடைக்கும்.

16) வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.

17) அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோக்ஷம் மற்றும் 
தீர்க்காயுள் கிட்டும்.

18) திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் ஜயம் 
உண்டாகும்.

19) கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள் 
இல்லாமல் போவர்.

20) நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய ஸித்தி 
கிட்டும்.

21) கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.

22) நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தான்யம், க்ருஹம்,
கோவ்ருத்தி கிட்டும்.

23) மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

24) மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும், .

ஓம் சிவாய நம..

Friday, April 28, 2023

திருபூவனூர் சதுரங்க வல்லபநாதர்

திருபூவனூர் சதுரங்க வல்லபநாதர் ...!
          சதுரங்க விளையாட்டு  தோன்றிய  நமது தமிழகத்திலேயே என்கிறது  புராணம்.   திருப்புவனூர் சதுரங்க வல்லபநாதர் ஆலய தலவரலாற்றை இங்கே காண்போம்.  

        தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரையோரமாக அமைந்துள்ள 103 வது  திருத்தலமே  பூவனூர். இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  சைவ  திருத்தலமாகும்.

நறுமணம் வீசும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் வனமாக இந்த ஊர் முற்காலத்தில்  இருந்ததால் இதற்கு ‘புஷ்பவனம்’ என்ற பெயர் ஏற்பட்டது.   பிற்காலத்தில் அது பூவனூர் என்றானது.

    இத்தலத்து  சிவபெருமானுக்கு ஶ்ரீசதுரங்க வல்லபநாதர் என்பது பெயர். உற்சவர் புஷ்பவனேஸ்வரர்   இங்கு  சிவபெருமானுடன் கற்பகவல்லி,  இராஜராஜேஸ்வரி ஆகிய இரு அம்பிகையர்  உண்டு. 

இந்த ஆலயத்தில் அன்னை சாமுண்டீஸ்வரியும் கோயில் கொண்டுள்ளார்.
தலவிருட்சம் __ பலா
தீர்த்தம்__க்ஷீரபுஷ்கரிணி   

தலவரலாறு

இங்கு அருளும் ஈசனுக்கு 
சதுரங்கவல்லபர் என்று திருநாமம் ஏற்பட்ட தலவரலாறு__

      முற்காலத்தில்  தென்பாண்டி நாட்டை வசுசேனன் என்னும் மன்னர்  ஆண்டுவந்தார். அவருக்கு  நீண்ட காலமாக வாரிசு இல்லை.  மன்னரும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்தப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த அன்னை  உமாதேவியார்,     அவர்களுக்கு அருளும்படி வேண்டினார்.

நம்மை  அனுதினமும்   பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாடவிடலாமா?  என பார்வதி தேவி, மகேஸ்வரனை வேண்ட,  அதற்குச் சிவபெருமானும்,   இநதப் பிறவியில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது விதி. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து, அவர்களுடைய குழந்தையாக வளர்ந்து வா. உரிய நேரத்தில்  நான்  வந்து உன்னை மணப்பேன்!  என்றார்.

      வசுசேனரும் காந்திமதியும்,  வாரிசு  வேண்டி ஒவ்வொரு சிவாலயங்களாக வழிபட்டு வந்தார்கள் .  ஒருநாள்  அவர்கள்  தாமிரபரணி ஆற்றில் நீராடும் போது, தாமரை மலரின் மீது  ஒரு அழகிய சங்கு  இருப்பதைக் கண்டு, அதையெடுக்க,   அது  ஓர் அழகிய பெண் குழந்தையாக மாறியது. 

இது  அந்தச் சிவனாரே  தங்களுக்கு அனுப்பிய குழந்தை; இது உமா தேவியின் அவதாரம்!  என எண்ணி அக் குழந்தைக்கு  இராஜராஜேஸ்வரி  என்று பெயரிட்டு பேரன்புடன் வளர்த்து வந்தனர்.

            .சக்தியே குழந்தை வடிவாக பூமியில் இருப்பதால், குழந்தையை கவனிப்பததற்கென சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டிதேவியையும் பூமிக்கு அனுப்பினார் சிவபெருமான்.  .

குழந்தையின் வளர்ப்புத்தாயாக உருவெடுத்து வந்த சாமுண்டீஸ்வரி, ஆய கலைகள் அனைத்தையும் குழந்தை இராஜராஜேஸ்வரிக்குக் கற்றுக்கொடுத்தாள்.

எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தள் இளவரசி   இராஜராஜேஸ்வரி   ஆனால் சநாதனதர்மம் ( =இந்து சமயம்) கூறும் 64 ஆயக்கலைகளில் சதுரங்க விளையாட்டில் தன்னிகரற்று விளங்கினாள்அம்பிகை
இராஜராஜேஸ்வரி.

       இளவரசி  திருமண வயதை எட்டியபோது, "என் மகளை சதுரங்க விளையாட்டில் யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே அவளை மணம் முடித்துத் தருவேன்" என்று  முரசறைந்து தெரிவித்தார்    மன்னர் வசுசேனர்.

பல நாட்டு இளவரசர்களும் போட்டிக்கு  வந்தபோதிலும், யாராலும்  இராஜராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை.  அனைவரும் தோற்றுப் போய்விட, வருந்திய மன்னர்,   தனது அறிவிப்பினாலேயே  தன் மகளுக்கு திருமணமாகாதோ ? என்று கவலையடைந்து சிவபெருமானே இதற்கு ஒரு வழியைக்  கூற வேண்டுமென வேண்டினாராம் .

          தன் குடும்பத்தோடு காவிரியின் தென்கரையிலுள்ள சிவாலயங்களையெல்லாம்   தரிசிக்க தல யாத்திரை கிளம்பினார் மன்னர். பல சிவாலயங்களைத் தரிசித்தப்  பின்னர் திருபூவனூர் வந்தனர். புஷ்பவன நாதரைத் தரிசித்து, தன் மனக்குறையை,  சிவபெருமானிடம் முறையிட்டு,  புலம்பி விட்டு அங்கேயே சிறிது காலம் குடும்பத்துடன் தங்கினார் மன்னர். 

        மறுநாள் காலையில், ஒரு  வயோதிகர்  மன்னரைச் சந்தித்து, ‘‘என்னுடன் உங்கள் மகளால் சதுரங்கம் ஆடமுடியுமா?’’ என்று கேட்டக. அரசனும்  சம்மதிக்க,  சதுரங்க ஆட்டம் இராஜராஜேஸ்வரி யுடன்  தொடங்கியது. அதுவரை சதுரங்கத்தில் தோல்வியே கண்டிராத  இளவரசி_
இராஜராஜேஸ்வரி, அந்த முதியவரிடம் சதுரங்கத்தில்  தோற்றுவிட்டாள்.

       இந்நிலையில் மன்னருக்கு தனது அறிவிப்பு நினைவுக்கு வந்தது.  என் மகளை சதுரங்க ஆட்டத்தில் வெல்பவர்களுக்கு அவளை மணம் புரிந்து தருவேன்!   என்று கூறினோமே ?  இப்பொழுது எப்படி இந்த வயதானவருக்கு  தன்னருமை மகளை  மணம் முடித்துக் கொடுப்பது?  என்று பெரும் கவலையுடன் சிவபெருமானை நோக்கி மன்றாடினார்  மன்னர்.

      மறுகணமே   அங்கே முதியவர் மறைந்து செம்மேனி முக்கண்ணனான சிவபெருமானாக  இளமையோடு காட்சியளித்தார்.  உடனே மன்னரும் அவர் மனைவி காந்திமதியும் மகிழ்ந்து சிவபெருமானை   வணங்கித்  தன் மகள் அம்பிகையின் அவதாரம்!  என்றுணர்ந்து அம்பிகையைச்  சிவபெருமானுக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.

           சதுரங்க ஆட்டத்தில் வென்று,  இராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் இங்குள்ள இறைவனுக்கு அது முதல் ஏற்பட்டது

(சதுரங்க_வல்லீஸ்வரர் என்றும் கூறுவர்).   அன்னை  இராஜராஜேஸ்வரிக்கு  வளர்ப்புத் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கும் தனியே  சந்நிதி உண்டு. இங்கே சாமுண்டீஸ்வரி தேவி மிகவும் சக்தி உடையவராக விளங்குகிறார் .  

        சதுரங்க விளையாட்டில் நல்ல தேர்ச்சியடைய  விரும்புவோர்  திருபூவனூர்  வந்து சதுரங்க வல்லப நாதரை வேண்டி வணங்கினால்   சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்கலாம் என்பது  ஐதீகம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானது  திருபூவனூர் ஆலயம். 

         ஆஸ்துமா தொந்தரவு,  பூச்சிக்கடி, விஷக்கடி,பிற  விலங்குகள் கடித்த விஷம்   போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. 

கோயிலின் அகன்ற திறந்தவெளிப் பிராகாரத்தில், அருள்மிகு கற்பகவல்லி அம்பாளும் அருள்மிகு இராஜராஜேஸ்வரி அம்பாளும் தெற்கு நோக்கி அருள்கிறார்கள். 

அதே பிராகாரத்தில், தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது.  இங்கு கோயில் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி, மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லாக் கோயில்களிலும் சப்தமாதாக்களுள் ஒருவராக இருக்கும் சாமுண்டி, இங்கே தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறாள்.

          மைசூருக்கு அடுத்தபடியாக, சாமுண்டீஸ்வரிக்கென தனிச் சந்நிதி அமைந்திருப்பது பூவனூரில் மட்டும்தான். விஷ ஜந்துக்களின் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து பலனடைகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் இருக்கும் ஒரு வைத்தியர், எலிக்கடி மற்றும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு, மந்திரிக்கப்பட்ட ஒரு மூலிகை வேரைக் கையில் கட்டிவிடுகிறார். 

               அதற்கு முன்பாக பக்தர்கள் க்ஷீரபுஷ்கரணியில் நீராடி,  சாமுண்டீஸ்வரி சந்நிதிக்கு வந்து, வைத்தியர் கொடுக்கும் மூலிகை வேரைக் கையில் கட்டிக்கொண்டு, சாமுண்டிக்கு அர்ச்சனை செய்யகிறார்கள். அதன் பிறகு வைத்தியர் கொடுக்கும் மந்திரித்த மிளகை வாங்கி  உண்கிறார்கள். 

அதன் மூலம் அவர்களுடைய உடலில் இருக்கும் விஷம் முழுவதுமாக குணமாகிவிடுகிறது  என்பதற்கு இங்கு கூடும் பக்தர்களே சாட்சி 

            பிரபஞ்சத்திற்கே நாயகியான அம்பிகைக்கு வளர்ப்புத் தாயாக விளங்கியவள் அல்லவா இந்தச்  சாமுண்டீஸ்வரி.   எனவே அவரை வணங்கி மந்திரித்த மூலிகைவேரைக் கையில் கட்டிக்கொண்டு மந்திரித்த மிளகை உண்டு பக்தியோடு சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கிவர, அனைத்து விஷகடிகளும் முறிந்து, அனைத்து   நோய்கள் விலகி பக்தரகள் நலமோடு திரும்பிச்
செல்கின்றனர். 

         முதன்முதலில்  இவ்வுலகிற்கே சதுரங்க_ஆட்டம் என்றொரு  விளையாட்டுக் கலையை தோற்றுவித்தவர்  நம்  தென்னாடுடைய
சிவபெருமானே. அதை அம்பிகையோடு அவர் விளையாடி சதுரங்கவல்லபநாதர்    என்ற திருநாமத்தையும் பெற்று,  இங்கே விளங்குகிறார் ஈஸ்வரனார். எனவே அனைத்து கலைகளிலும் வெற்றி அடைய இச் சிவனாரை வேண்டி வழிபடுவது அவசியம்.

ஓம் நமசிவாய 🙏

திருவண்ணாமலை கோவிலுக்குள் மொத்தம் 8 நந்திகள் இருக்கின்றன.

♥  திருவண்ணாமலை கோவிலுக்குள் மொத்தம் 8 நந்திகள் இருக்கின்றன.  இந்த 8 நந்திகளில்   திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரத்தை கடந்ததும்  ஐந்தாவது பிரகாரத்தில்  கால் மாற்றி அமர்ந்து   தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி   ஒரு   நந்தி  உள்ளது.   இந்த நந்தி சுமார் 12 அடி உயரம் கொண்டது.  பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலையில் உள்ள பெரிய நந்தி அப்படி இல்லை. அந்த நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இந்த வித்தியாசமான வடிவமைப்பிற்கு   காரணம்   ஒரு முகலாய மன்னன்.
               ♥  முகலாயர்கள் ஆட்சி காலத்தில் திருவண்ணாமலை கோவிலை ஒரு முகலாய மன்னன் கைப்பற்றினான். அவன் கோவிலுக்குள் நின்று கொண்டிருந்தபோது 5 சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், ‘‘எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள்?’’ என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், “இது எங்களது ஈசனை சுமக்கும் வாகனம். ஈசனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்” என்று கூறினார்கள்.
               ♥  இதை கேட்டதும் முகலாய மன்னனுக்கு கோபம் வந்தது. “நான் இந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டுகிறேன். உங்கள் ஈசன் வந்து அதை ஒன்றாக சேர்க்க முடியுமா?” என்று ஏளனமாக சொன்னான். அதோடு மாட்டை இரண்டு துண்டாகவும் வெட்டினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். 
               ♥  அப்போது அசரீரி ஒலித்தது.  “வடக்கு திசை நோக்கி செல்லுங்கள். அங்கே என் பக்தன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி அமர்ந்து இருப்பான். அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்று அசரீரியில் அண்ணாமலையார் கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான்.
               ♥  அவனைப் பார்த்ததும் சிவ பக்தர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. “இந்த சிறுவனா வந்து காளை மாட்டுக்கு உயிர் கொடுக்க போகிறான்” என்று நினைத்தனர். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் சிவ பக்தர்களுக்கு அந்த சிறுவன் மீது நம்பிக்கை வந்தது.
               ♥  அண்ணாமலையார் ஆலயத்துக்குள் நடந்ததை கூறினார்கள். உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.
               ♥  இதை கண்ட  முகலாய மன்னன்   சிவ பக்தர்களை பார்த்து, “இந்த வாலிபன் ஏதோ சித்து விளையாட்டு விளையாடுகிறான். இதை நான் நம்ப மாட்டேன். இன்னொரு போட்டி வைக்கிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன்” என்றான்.
               ♥  அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலே  அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுபடி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிசங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.
               ♥  இதையும் முகலாய மன்னனால் நம்ப முடியவில்லை. ராஜகோபுரம் அருகில் உள்ள நந்தி அருகில் வந்தான். அந்த நந்தியை பார்த்தவன், “இந்த நந்திக்கு உன்னால் உயிர் கொடுக்க முடியுமா? அப்படியே கொடுத்தாலும் அதன் கால்களை மாற்றி அமர வைக்க முடியுமா?” என்று சவால் விட்டான்.
               ♥  இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. 
               ♥  இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது.  அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான். 
               ♥  அவனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்   பிற்காலத்தில் வீரேகிய முனிவராக    திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது.
               ♥  அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி   தனது தலையை    வீரேகிய முனிவர்   இருக்கும்  வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. 
               ♥  ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள இந்த நந்தியை வல்லாள மகாராஜன் அமைத்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. இந்த நந்தியை சுற்றி நான்கு தூண்கள் கொண்ட மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது.
               ♥  மாட்டுப் பொங்கல் அன்று இந்த நந்திக்கு 108 பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். பழம், காய்கறிகள், இனிப்பு வகைகள், ரூபாய் நோட்டுகள் என்று 108 வகையான பொருட்களால் அலங்காரம் செய்வார்கள். அதன் பிறகு தீபாராதனை நடத்தப்படும். இந்த அபிஷேக, அலங்காரத்தை கண்டுகளித்தால் சர்ப்பதோஷம் உள்பட அனைத்து தோஷங்களும் விலகும்.
               ♥  பொதுவாக பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு அபிஷேகம் செய்ய பசும்பால் கொடுத்தாலும் அலங்காரம் செய்ய தும்பை பூ வாங்கி கொடுத்தாலும் செல்வம் சேரும், பதவி உயர்வு கிடைக்கும்.

பாமணி நாகநாத சுவாமி கோவில்சிவபெருமானுக்கு மாம்பழ சாறில் அபிஷேகம் செய்யப்படும் தேவாரத்தலம்

பாமணி நாகநாத சுவாமி கோவில்
சிவபெருமானுக்கு  மாம்பழ சாறில் அபிஷேகம் செய்யப்படும் தேவாரத்தலம்
மன்னார்குடிக்கு  வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி, திருப்பாதாளேஸ்வரர்.  இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.
இறைவன் புற்று மண்ணாலான சுயம்பு திருமேனி உடையவர். பொதுவாக சிவாலயங்களில் சுயம்பு லிங்கத்துக்கு வெள்ளிக்கவசம் சாற்றியே அபிஷேகம் நடக்கும். ஆனால் புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு, நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தினமும் இருவேளை அபிஷேகம் நடைபெற்று வருவது இத்தலத்தின் தனிப்பெரும் மகிமையாகும்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் முசுகுந்த சக்கரவர்த்தி தேவர்களுக்கு ஆதரவாக சென்று அசுரர்களை போரிட்டு வென்றார். அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரியையும் (திராட்சை) அவருக்கு பரிசாக வழங்கினான். அவர் அந்த லிங்கத்துடனும், திராட்சையுடனும் திருவாரூர் தியாகேசர் சன்னிதிக்கு வந்தார். அப்போது திருப்பாதாளேசுவரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று நிவேதனம் செய்வாயாக என்று அசரீரி கேட்டது. இதையடுத்து அவர் இங்கு வந்து திருப்பாதாளேஸ்வரரை பணிந்து திராட்சையை நிவேதனம் செய்தார். அதுமுதல் இங்கு கொடி முந்திரி எனப்படும் பச்சை திராட்சை சிறப்பு நிவேதனம் செய்யப்படுகிறது.
இத்தலத்தில்  இறைவனுக்கு மாம்பழ சாறில் அபிஷேகம் செய்யப்படுவதும்  ஒரு தனிச் சிறப்பாகும். திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது நான்கு மாங்கனிகள் தோன்றின. அதை எடுத்த பிரம்மன் ஒன்றை விநாயகருக்கும், மற்றொன்றை ஆறுமுகனுக்கும் கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு, நான்காவது கனியை இத்தலத்திற்கு கொண்டு வந்து நாகநாதசுவாமிக்கு சாறு பிழிந்து அபிஷேகம் செய்தார். பிறகு அதன் விதையை பிரம்ம தீர்த்தத்தின் வட கரையில் ஊன்றினார். இதனால் மாமரம் இத்தல விருட்சமாகிறது. இன்றும் நாகநாதருக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் நடப்பது விசேஷம். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், நதி என ஐந்து வகையாலும் சிறப்பு பெற்றது இத்தலம் ஆகும்.
இக்கோவில் விசேஷ அமைப்பின்படி சுவாமியை தரிசனம் செய்து நவக்கிரகங்களை வலம் வந்தால் 'ஓம்' என்ற ஓங்கார வடிவில் பக்தர்களின் தரிசன சுற்று முடிவடையும். பொதுவாக சிவாலயங்களில் அம்பாள் சன்னிதியை தாண்டிய பிறகே நவக்கிரகங்கள் அமைந்திருக்கும். இக்கோவிலின் விசேஷ அமைப்பின்படி இத்தலத்தில் அம்பாள் சன்னிதி தனியாக பலிபீடம் கொடி மரத்தின் அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

இக்கோவில் விசேஷ அமைப்பின்படி சுவாமியை தரிசனம் செய்து நவக்கிரகங்களை வலம் வந்தால் ‘ஓம்’ என்ற ஓங்கார வடிவில் பக்தர்களின் தரிசன சுற்று முடிவடையும். பொதுவாக சிவாலயங்களில் அம்பாள் சன்னிதியை தாண்டிய பிறகே நவக்கிரகங்கள் அமைந்திருக்கும். இக்கோவிலின் விசேஷ அமைப்பின்படி இத்தலத்தில் அம்பாள் சன்னிதி தனியாக பலிபீடம் கொடி மரத்தின் அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
சுகல முனிவர் என்பவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர் வளர்த்த காமதேனு தரும் பாலைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வந்தார். ஒரு சமயம் அவர் வளர்த்த காமதேனு பால் சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக் கண்டு, முனிவர் தமக்குப் பால் குறைந்து விடுமே என்று கோபித்து காமதேனுவை அடித்தார். அதுகண்டு வருந்திய காமதேனு ஓடிச்சென்று, வழிபட்டதனால் தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவது போலச் சிவலிங்கத்தின்மீது முட்டி ஓடி வடக்கு வீதியில் உள்ள பசுபதி தீர்த்தத்தில் விழுந்து இறந்தது. அப்போது இறைவன் காட்சி தந்து பசுவை உயிர்ப்பித்தார். காமதேனு முட்டியபோது சுயம்பு லிங்க மூலத்திருமேனி முப்பிரிவாகப் பிளந்தது. சுயம்பு லிங்கமாதலால் மேற்புறம் சொர சொரப்பாகவுள்ளது. முப்பிரிவாகப் பிளந்த லிங்கம் செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு விளங்குகிறது.
? பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டு, தனஞ்சய முனிவராய் இத்தல இறைவனை வழிபட்டார். ஆகவே பாதாளீச்சுரம் என்று பெயர் பெற்றது. பாம்பணி, சர்ப்பபுரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். பாம்பணி என்பதே மருவி பாமணி ஆயிற்று. இறைவன் கருவறையில் மூலவருக்கு இடதுபுறம் தனஞ்சய முனிவர் உருவமுள்ளது. நாகலிங்கப் பிரதிஷ்டையும் காணப்படுகிறது.
நாகநாதசுவாமி கோவில் அமைப்பு
முகப்பு வாயிலைக் கடந்து உள் புகுந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. உட்கோபுர வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். உள்பிராகாரத்தில் சூரியன், தலவிநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்வாசர், சாஸ்தா, காலபைரவர், சனிபகவான், நவக்கிரகம், நால்வர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.உள்மண்டபத்தில் வலப்பால் நடராஜ சபை உள்ளது.
மனித முகம், பாம்பு உடலுடன் ஆதிசேஷனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது. அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவிற்கும் தலைவன் ஆதிசேஷன். வேறு எங்கும் காணமுடியாத இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவாரணமடைவர் என்பது நம்பிக்கை. மண்ணால் அமைக்கப்பட்ட லிங்கங்களுக்கு பிற கோவில்களில் அபிஷேகம் செய்ய மாட்டார்கள். ஆனால் இங்கு ஆதிசேஷன் புற்றுமண்ணால் அமைத்த நாகநாதசுவாமிக்கு அபிஷேகம் உண்டு என்பது தனி சிறப்பாகும். இங்கு பைரவரும் சனிபகவானும் சேர்ந்து அருள்பாலிப்பதால் இது சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது.
இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள் இவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர். சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.
ஒரு காலத்தில் சுகல முனிவர் தன் தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக காசியை நோக்கி தன் சீடனுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது மாலை நேரத்தில் முனிவர் இளைப்பாறும் பொருட்டு சீடனிடம் அஸ்தி கலசத்தை கொடுத்து விட்டு சென்றார். சீடன் அதை திறந்து பார்த்தபோது அஸ்தி கலசத்தில் தங்க பூக்களாக இருந்தது. உடனே பயந்து அதை மூடி வைத்து விட்டான். சுகல முனிவர் வந்து மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்து காசிக்கு சென்றார்.
அங்கு கலசத்தில் அஸ்தியின் சாம்பலை பார்த்த சீடன் முன்பு நீங்கள் இளைப்பாறிய இடத்தில் கலசத்தில் தங்க பூக்கள்இருந்த விவரத்தை கூறினான். உடனே அவர் அதுவே காசியை விட புனிதமான இடம் என்று கூறி மீண்டும் அங்கு வந்து ருத்ர தீர்த்தம் என்று அழைக்கப்பட்ட தற்போது வெட்டு குளம் என்று அழைக்கப்படுகிற குளத்தின் கரையில் காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி ஆலயம் அமைத்து அக்குளத்திலேயே தனது தாயாரின் அஸ்தியையும் கரைத்து இங்கேயே தங்கிவிட்டார்.
அப்போது அவர் தனது குடிலில் ஒரு பசுவை வளர்த்து வந்தார். ஒரு நாள் மேயச் சென்ற பசு தன்னை அறியாமலேயே புற்றின் மீது பாலை சுரந்தது. தினமும் அவ்வாறே செய்து வந்தது. மேயச் சென்ற பசு ஏன் பாலை கொடுக்கவில்லை என்று எண்ணி ஒன்றும் புரியாமல் திகைத்தார். முனிவர் ஒருநாள் மேய்ச்சலுக்கு சென்ற பசுவை பின் தொடர்ந்து சென்றார். பசு புற்றின் மீது பால் சுரப்பதை கண்ட அவர், ஒரு தடியால் பசுவை அடித்தார்.
பசு உடனே கோபமுற்று புற்றை முட்டியது. புற்று மூன்று பிளவாக பிளந்து உள்ளே இருந்த லிங்கம் வெளிப்பட்டது. பின்னர் பசு ஓடிச்சென்று தெற்கு திசையில் இருந்த குளத்தில் விழுந்து இறந்தது. உடனே சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் கயிலாய காட்சி கொடுத்து பசுவை உயிர்த்தெழ செய்தார். பின்னர் பசுவின் பால் அபிஷேகத்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று பசுவிடம் கேட்டார். அதற்கு பசு, தன்னிடம் இருந்து கிடைக்கும் பொருட்கள் எல்லாம் சிவனுக்கே அர்ப்பணம் ஆக வேண்டும் என்று கேட்டது. பரமேஸ்வரனும் மிகவும் மகிழ்ந்து பசு கேட்ட வரத்தை கொடுத்தார். அன்று முதல் பசுவிடம் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவை பஞ்ச கவ்யம் என்றழைக்கப்பட்டு புனிதமான பொருட்களாக ஈசனுக்கு இன்றும் அபிஷேகத்துக்கு உகந்ததாக ஆனது. சுகல முனிவரும் தன் தவறை உணர்ந்து ஈசனை வணங்கி பெரும்பேறு பெற்றார்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் முசுகுந்த சக்கரவர்த்தி தேவர்களுக்கு ஆதரவாக சென்று அசுரர்களை போரிட்டு வென்றார். அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரியையும் (திராட்சை) அவருக்கு பரிசாக வழங்கினான். அவர் அந்த லிங்கத்துடனும், திராட்சையுடனும் திருவாரூர் தியாகேசர் சன்னிதிக்கு வந்தார்.
அப்போது திருப்பாதாளேசுவரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று நிவேதனம் செய்வாயாக என்று அசரீரி கேட்டது. இதையடுத்து அவர் இங்கு வந்து திருப்பாதாளேஸ்வரரை பணிந்து திராட்சையை நிவேதனம் செய்தார். அதுமுதல் இங்கு கொடி முந்திரி எனப்படும் பச்சை திராட்சை சிறப்பு நிவேதனம் செய்யப்படுகிறது.
திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது 4 மாங்கனிகள் தோன்றின. அதை எடுத்த பிரம்மன் ஒன்றை விநாயகருக்கும், மற்றொன்றை ஆறுமுகனுக்கும் கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு, நான்காவது கனியை இத்தலத்திற்கு கொண்டு வந்து நாகநாதசுவாமிக்கு சாறு பிழிந்து அபிஷேகம் செய்தார். பிறகு அதன் விதையை பிரம்ம தீர்த்தத்தின் வட கரையில் ஊன்றினார். இதனால் மாமரம் இத்தல விருட்சமாகிறது. இன்றும் நாகநாதருக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் நடப்பது விசேஷம். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், நதி என ஐந்து வகையாலும் சிறப்பு பெற்றது இத்தலம் ஆகும்.

Thursday, April 27, 2023

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.

_கோயில்...!_


1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.

2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.

4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.

5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும்.

7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.

8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.

10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது.

12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.

13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்தப் படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.

16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.

17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.

18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும்.

20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம்...

குழந்தைகளையும் பழக்குவோம்…

அது அறிவியல் ஆகட்டும்..

எதுவாகட்டும்….

இறை சக்தி நம்மை காக்கட்டும்…

22 தீர்த்தங்களும் அவற்றின் சிறப்புகளும்...!இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் சிவனுக்குரிய கோவிலாகும்

#ஓம்_சிவாய_நமஹ 
#சிவ_சிவாய_நமஹ ..

#இன்றைய_தரிசனம் ....

#பர்வதவர்த்தினி உடனமர்
#ராமநாத_சுவாமி....
#இராமேஸ்வரம்; ...

22 தீர்த்தங்களும் அவற்றின் சிறப்புகளும்...!

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் சிவனுக்குரிய கோவிலாகும். இராமர் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகின்றது. இக்கோவில் இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் இரு சமயத்தினருக்கும் முதன்மையாக உள்ளது.

ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை போக்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து  பிரதிஷ்டை செய்தார். எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது...

#ராமன்_கண்ட_ஈஸ்வரம்
#பாவ_நாசம்_செய்திடும்....

 மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி  இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.
 
22 தீர்த்தங்களும் அவற்றின் சிறப்புகளும்:
 
1. மகாலெட்சுமி தீர்த்தம்: இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் நீராடுவதால் சகல  ஐஸ்வர்யமும் பெறலாம்.
 
2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம்: இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று நீராடுவதால்  மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

 
5. சேது மாதவ தீர்த்தம்: இதில் நீராடுவதால் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.
 
6. நள தீர்த்தம்: இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.
 
7. நீல தீர்த்தம்: இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.
 
8. கவாய தீர்த்தம்: இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

 
9. கவாட்ச தீர்த்தம்: இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.
 
10. கந்நமாதன தீர்த்தம்: இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.
 
11. சங்கு தீர்த்தம்: இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

12. சக்கர தீர்த்தம்: இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.
 
13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்: இதில் நீராடுவதால்பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும் நீங்கும்.
 
14. சூர்ய தீர்த்தம்: இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.
 
15. சந்திர தீர்த்தம்: இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.
 
16. கங்கா தீர்த்தம் 17. யமுனா தீர்த்தம் 18. காயத்ரி தீர்த்தம்: இம்மூன்று தீர்தத்தங்களும் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும்  நீங்கி முக்தி அடையலாம்.
 
19. சாத்யாம்ருத தீர்த்தம்: இதில் நீராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.
 
20. சிவ தீர்த்தம்: இதில் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
 
21. சர்வ தீர்த்தம்: இதில் நீராடினால் பிறவிக்குருடு, நோயும் நரை திரையும் நீங்கி வளமடையலாம்.
 
22. கோடி தீர்த்தம்: இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. கோடி திர்த்தத்தில் நீராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்...

#சரணம்_சரணம் 
#மகேஷ்வரா ..

Wednesday, April 26, 2023

பெயரை கேட்டதும் நினைக்க செய்வது சிவபெருமான் இருக்கும் மலை என்று.

💢💢💢💢💢பதினெட்டாம்படி சடைச்சி:-
     சிவன்மலை சென்று வரும் நம்மில் எத்தனை பேரூக்கு இந்த சடைச்சியை தெரியும்??

    சிவபக்தியால் பேயாய் சிவபிரான் காலடியில் இருக்கும் வரம் பெற்ற காரைக்கால் அம்மையாரை போல முருக பக்தியால் சிவமலை ஆண்டவர் பாதத்தில் இருக்கும் வரம் பெற்ற சடைச்சியை யாருக்கு தெரியும்??
 
💢💢🙌சிவன்மலை:-

          பெயரை கேட்டதும் நினைக்க செய்வது சிவபெருமான் இருக்கும் மலை என்று. ஆனால் இருப்பதோ குமார கடவுள். சிவகிரி, சிவமலை , சக்தி சிவமலை, சிவாத்ரிநயினம், சிவசைலம், சேமலை என்று எத்தனை பெயர்கள் இம்மலைக்கு!!

    பதினான்கு பழமையான ஊர்களை கொண்ட காங்கேய நாட்டின் பொதுத்தலம் சிவமலை. இந்த பதினான்கு ஊர்காரர்களும் சிவமலை தேர் திருவிழாவை நடத்துவதும், அவர்கள் பரிவட்டம் கட்டி சிறப்பிக்க படுவதும் இன்றும் உண்டு.

  சிவமலையின் செல்வாக்கினை மடவளாகம் இலட்சுமணபாரதி இயற்றிய சிவமலை குறவஞ்சி இலக்கியம் புகழ்கிறது. அருணகிரிநாதர் சிவமலை ஆண்டவரை வணங்கி சந்தப்பாடல் பாடினார். சிவ வாக்கியர் என்னும் சித்தர் இங்கு வாழ்ந்தவர்.

   சிவமலை அதனை சுற்றி எட்டு திசையிலும் சக்தியை காவலாக கொண்டது ( மடவளாகம் அங்காள பரமேஸ்வரி அதில் ஒன்று). சிவமலை அடிவாரத்தில் முன்பு ஊர் கிடையாது. சிவமலைக்கு உரிய ஊர் பாட்டாலி. சிலமலை நாதனை பாட்டாலி பால் வெண்ணீசுவரர் பாலன் என்று இலக்கியங்களில் கூறுவதை காணலாம்.

   இத்தல முருகனுக்கு காரணாமூர்த்தி என்றும் பெயர். தன் பக்தர் கனவில் தோன்றி தனக்கு இன்ன பொருள் வேண்டும் என சொல்வது சிறப்பு. அப்படி உத்தரவு ஆகும் பொருள் கண்ணாடி கதவு கொண்ட ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கபடும். அப்பொருளால் உலகில் மாற்றம் வரும் என்பது நியதி.

💢💢💢சடைச்சி:-

      பாட்டாலி நகரிலே கொங்கு வெள்ளாளர் குடியில் கன்னந்தை கோத்திரத்தில் அரசப்ப கவுண்டர் என்பாருக்கு வள்ளி என்னும் பெண் குழந்தை பிறந்தது. வள்ளி என்னும் பெயருக்கேற்ப சிவமலை முருகன் மீது அதீத பக்தி. தினமும் சிவமலை நாதன் பாதத்தை தொழாமல் வேலைகள் செய்வதில்லை.

   திருமண வயது வந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இறை பக்தியால் சடை விழுந்தது. சடாமுடியோடு இருந்தவளை சடைச்சி என்று அழைத்தனர். தன் தோட்டத்து எருதுகள் மீது கோணிப்பைகளை இருபுறமும் கட்டி பக்கத்து ஊர்களுக்கு சென்று தானியங்கள் மக்களிடம் வாங்கி வந்து இறைவனுக்கு படைத்தாள்.

  மலைக்கு படிகளை அமைத்தாள். இளைப்பாற்று மண்டபம், தண்ணீர் பந்தல் என தொண்டுகள் ஏராளம். சடைச்சி மடமும், நந்தவனமும் அமைத்து தினமும் ஆண்டவனுக்கு பூமாலை அளிக்க செய்தாள்.

   சிவனும் பார்வதி தேவியும் இருக்கும் கையிலையை காண விரும்பினாள். அக்கணமே அசரீரியாக " அம்மா! சடைச்சி! சிவமலையிலேயே உமக்கு காட்சி தருகிறோம்" என சொல்லி, காட்சியும் தந்தார் சிவபிரான்.

  பின்னர் உலக வாழ்க்கையை வெறுத்து எந்நேரமும் சிவமலையாண்டவரை சேருகிறேன் என்று சொல்லிகொண்டே இருந்தாள். 

   ஒருநாள் முழுநீறு பூசிய மேனியாக, மஞ்சள் உடையாய் மாலையுடன் சிவன்மலை ஆண்டவன் சந்நிதி நுழைந்த சடைச்சி திரும்பவில்லை!! எங்கே போனாள் என்று தேடியவர்க்கு அசரீரியாய் " நான் இங்கேயே சிவமலையாண்டவன் பாதத்தில் சேர்ந்தேன்" என்று வாக்கு கிடைத்தது.

   மக்களின் மனதில் நீங்காத சடைச்சி, சிலையாய் சிவன்மலை நாதன் பாதத்தருகில் நீண்டகாலமாய் இருந்தாள்.

    "பக்தி பிடித்த சடைச்சியம்மாளை-தன் 
     பாதங்களில் வைத்திருக்கும் சிவமலையாண்டவர்"

       என்று சிவமலை குறவஞ்சி கூறுகிறது. இன்று சிவமலையில் சடைச்சி சிலை இல்லை. வெளியேறிவிட்டது. பின்னாளில் வந்தவர்களுக்கு சடைச்சியின் பக்தி புரியவில்லை. 

    மலைக்கோவில்களில் 18வது படி சிறப்புடையது. சிவமலையில் 18வது படியை புராண படி என்பர். அது சடைச்சி கட்டியது. அங்கே சடைச்சி இருப்பதாக நம்பிக்கை.

   " பத்தினி பெண் சடைச்சியம்மாள் பதினெட்டென்னும் புராணபடியில் குடியிருப்பாள்", சிவமலை குறவஞ்சியில்.

சக்தி சிவமலை நாதன் பாதமே துணை!!

பேரூர் பெரியநாயகி அம்மன் துணை!!.. நற்பவி 💕 நற்பவி 💕 நற்பவி 💕💕sv....

Tuesday, April 25, 2023

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் வரலாறு...

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் வரலாறு...!
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் வரலாறு...
ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது இந்த மலைக்கோட்டையாகும். இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது. இம்மலைக் கோட்டையுள் அமைந்துள்ள கோயில்கள் உச்சிப் பிள்ளையார் கோயில், சிவன் கோயில்கள் ஆகும். இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது. 

இதற்குள் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன. இக்கோட்டை, நாயக்கர்களுக்கும் பிஜாப்பூர், கர்நாடகம், மராத்திய ஆகிய அரசுகளுக்கும் இடையே இடம்பெற்ற பல போர்களைக் கண்டுள்ளது. இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த கர்நாடகப் போர்களில் இக்கோட்டை முக்கிய பங்கு வகித்துள்ளது.

வரலாறு

இவ்விடம் முதன் முதலில் விசயநகரப் பேரரசால் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கர்நாடகப் போர்களின் போது பிரித்தானியரால் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கோட்டைப் பகுதிக்குள் இருக்கும் அமைப்புக்களுள் காலத்தால் முந்தியது கி.பி 580ல் உருவாக்கப்பட்ட பல்லவர் காலக் குகைக் கோயில் ஆகும்.

பல்லவர்கள் இப்பகுதியைப் பாண்டியர்களிடம் இழந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இப்பகுதியில் தமது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினர். சோழப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை இப்பகுதி அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதன் பின்னர் இவ்விடம் விசயநகரப் பேரரசின் கீழ் வந்தது. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் பின்னர் இப்பகுதி தில்லி சுல்தானகத்தின் கீழ் வந்தது. இவர்களைத் துரத்திவிட்டு விசயநகரப் பேரரசு இப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தியது. விசயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, அதன் சார்பில் இப்பகுதியில் ஆளுனர்களாகச் செயற்பட்ட மதுரை நாயக்கர்கள் இப்பகுதியைத் தமது நேரடி ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர். 

இவர்கள் காலத்திலேயே திருச்சி செழித்திருந்ததுடன் இன்றைய நிலைக்கு வளர்ந்ததற்கான அடிப்படைகளும் உருவாயின. நாயக்கர்களே மலைக்கோட்டைக் கோயிற் குளத்தையும் முக்கியமான சுவர்களையும் கட்டினர். 

பின்னர் திருச்சியே அவர்களின் தலைநகரமுமானது. இக்கோட்டை மாளிகையிலேயே இராணி மீனாட்சி, சந்தா சாகிப்பிடம் ஆட்சியைக் கையளித்தார். சந்தா சாகிப் பிரான்சியர் துணையுடன் ஆட்சி நடத்தினார்.

 கர்நாடகப் போரின் பின்னர் சந்தா சாகிப்பின் மாமனான ஆற்காடு நவாப் பிரித்தானியரின் துணையோடு திருச்சிராப்பள்ளிக் கோட்டையைக் கைப்பற்றினார். 

இதுவே பிரித்தானியர் தமிழ்நாட்டிலும் பின்னர் முழுத் தென்னிந்தியாவிலும் காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது. தற்போது இக்கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வுப்பிரிவின் சென்னை வட்டத்தின் மேலாண்மையின் கீழ் பேணப்பட்டு வருகின்றது.

இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.

பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.

இக்குன்றின் மீதுள்ள மூன்று சிகரங்களில் சிவன், பார்வதி மற்றும் விநாயகர் வீற்றிருந்ததாகவும், ஆதிசேஷனுக்கும் வாயுவிற்கும் இடையில் ஏற்பட்ட பெரும்போரின் விளைவாக, இமயமலைத் தொடரிலிருந்து இந்தியாவின் பல பாகங்களுக்கும் பறந்து சென்ற மலைத் தொகுதிகளில் இது ஒன்று எனவும் கூறுவர்.

இம்மலையின் இடைக்கோயிலின் மூலவரான செவ்வந்திநாதர் தாயுமானவர் என்றழைக்கப்படுவதற்கு ஒரு கதை கூறப்படுவதுண்டு. அந்நாளில் திருவரங்கத்திற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியாறு புரண்டோடிக் கொண்டிருக்கையில், நிறைமாத கர்ப்பிணியான தன் மகளை திருவரங்கத்தில் விட்டு விட்டுத் திருச்சிக்கு வந்த ஒரு தாயால், காவிரியின் வெள்ளம் காரணமாக திரும்பச் செல்ல இயலாதபோது, இறைவனே அத்தாய் வடிவில் அவள் மகளுக்கு மகப்பேறு செய்வித்து, அதன் காரணமாகத் தாயும் ஆனவன் எனப் பெயர் பெற்றான் எனக் கூறுவர்.

உச்சிப் பிள்ளையார் புராணம்

இராமாயணப் போருக்குப் பின்னர், இராமேஸ்வரம் துவங்கி இந்தியாவின் பல கோயில்களையும் தரிசித்த விபீஷணர், பள்ளி கொண்ட பெருமானை இலங்கைக்கு எடுத்து செல்ல விரும்பினாராம். அவ்வாறு அவர் செல்கையில், வழியில் காவிரியாறும் கொள்ளிடமும் குறுக்கிட்டன. 

அப்போது அங்கு வந்த சிறுவன் ஒருவனிடம் பள்ளி கொண்ட நாதர் சிலையைக் கொடுத்து, தமது காலைக் கடன்களைக் கழிக்கச் சென்றார் விபீஷணர். சிறுவனாக வந்தவனோ விநாயகன். அவன், பள்ளி கொண்ட நாதர் அங்கிருந்து செல்வதை விரும்பாதவனாகச் சிலையை கீழே வைத்து விட, அச்சிலை அங்கேயே நிலை பெற்று விட்டது. 

திரும்பி வந்த விபீஷணர் அதனைப் பெயர்க்க இயலாது கோபமுற்று சிறுவனின் தலையில் குட்டியதாகவும், அவ்வாறு குட்டியதன் வடு இன்றும் உச்சிப் பிள்ளையாரின் பின் தலையில் காணலாம் என்றும் கூறுவர். அவ்வாறு பள்ளி கொண்ட நாதர் நிலைபெற்று விட்ட இடமே திருவரங்கமாகப் போற்றப்படுகிறது. பள்ளி கொண்ட நாதர் அரங்க நாதராகத் திகழ்கிறார்.

நூற்றுக்கால் மண்டபம்

வரலாற்றுச் சிறப்புகள்

பல்லவர்களால் சிறு குகைக் கோயிலாக எழுப்பப்பட்ட மலைக்கோட்டைக் கோயிலைப், பின்னர், இதன் இயற்கையாகவே அமைந்த அரண்களைச் சாதகமாக்கிக் கொண்ட நாயக்க மன்னர்கள் பெருமளவில் மேம்படுத்தினர். இக்கோயில் தற்சமயம் கொண்டிருக்கும் அமைப்பிற்கு விஜய நகர அரசர்களும் மற்றும் மதுரை நாயக்கர்களும் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கது.

மதுரை நாயக்க வம்ச அரசர்களின் தலைநகரமாக இந்த மலை இருந்தமையால், இது பல பெரும்போர்களைக் கண்ணுற்றது. விஜய நகரப் பேரரசர்களுக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போர் அவற்றில் ஒன்றாகும். நாயக்கர்களின் வடமேற்கு அரணாக இக்கோட்டை விளங்கியது. அவர்களது அரசாட்சியின் இறுதி நூற்றாண்டுகளில் தஞ்சை மாயக்கர்கள், பின்னாளில் தஞ்சை மராட்டியர்கள் மற்றும் படையெடுத்து வந்த பிஜாப்புர், மைசூர் மற்றும் மராத்திய அரசர்களிடமிருந்து இக்கோட்டை அரணாகக் காத்து வந்தது.

கர்நாடக நவாப் காலம்

திருச்சி மலைக்கோட்டை சந்தா சாகிப் மற்றும் ஆற்காட்டு அலி ஆகியோரிடையே நிகழ்ந்ததான போருக்காக மிகவும் நினைவு கூறப்படுகிறது. ஆங்கிலப் படைகளிடமிருந்து தப்பி இக்கோட்டையில் ஒரு குகையினுள் சந்தா சாஹிப் ஒளிந்து கொண்டதாகக் கூறுவர்.

ஆங்கிலேயர் ஆளுகையின் கீழ்-

இப்போருக்குப் பிறகு, 18ஆம் நூற்றாண்டில், திருச்சி அநேகமாக ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் வந்து விட்டது. மலைக்கோட்டையின் கதவு முதன்மை அரண் கதவு (Main Guard Gate) எனப்படலானது. இன்றும் அது அப்பெயரிலேயே வழங்கப்படுகிறது. இதனருகிலேயே ராபர்ட் கிளைவ் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடமும் உள்ளது. மலைக் கோயிலை ஒட்டிய மேற்கு வீதியில் உள்ள தெப்பக்குளத்தின் அருகில் இது உள்ளது...!

#இராஜராஜசோழனின் சகோதரி #குந்தவை_பிராட்டியார் கட்டிய #திருச்சி மாவட்டத்தில்1400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான #திண்ணியம்#சுப்ரமண்யசுவாமி (ஷண்முகர்) திருக்கோயில் வரலாறு:

#இராஜராஜசோழனின் சகோதரி 
#குந்தவை_பிராட்டியார் கட்டிய 
#திருச்சி மாவட்டத்தில்
1400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 
#திண்ணியம்
#சுப்ரமண்யசுவாமி (ஷண்முகர்) திருக்கோயில் வரலாறு:
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திண்ணியத்திலுள்ள அருள்மிகு சுப்ரமணிய (சண்முக) சுவாமி திருக்கோயில்.

திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோயில் பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மற்ற சிவன் கோயில்களில் முருகப்பெருமான் சன்னதியில் வள்ளி-தேவசேனா சமேதராய் ஒரே மயில் வாகனத்தில் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளியிருக்கும் நிலையில், இக்கோயிலில் மூவரும் தனித்தனி மயில் வாகனத்தில் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் எண்ணியதைத் தருவார் திண்ணியம் முருகன் என்றும் கூறுவர்.

மூலவர்: சுப்ரமண்ய சுவாமி,கோடீசுவரர்
அம்மன்: பிருகந்த நாயகி,வள்ளி தெய்வானை
தல விருட்சம்: வில்வம்
ஊர்: திண்ணியம், லால்குடி
மாவட்டம்: திருச்சி 
மாநிலம்: தமிழ்நாடு

ராஜ ராஜ சோழனின் சகோதரி குந்தவை, முருகப் பெருமானுக்கு கோயில் கட்ட ஆசைப்பட்டு, மாட்டு வண்டியில் சிலைகளை எடுத்துச் செல்லும் போது, ​​அந்த வண்டி சேற்றில் சிக்கி நகராமல் போனதாக நம்பப்படுகிறது. இந்த இடத்தில் கோவில் கட்ட அவள் முடிவு எடுத்தாள். 

#தல வரலாறு:

தேவர்களின் காலை சந்தியாகாலமாகிய மார்கழி; மாலை சந்தியாகாலமாகிய ஆடி; இந்த இரண்டு மாதங்களைத் தவிர, மற்ற மாதங்களில் எல்லாம் கும்பாபிஷேகம், பிரம்மோத்ஸவம் என சோழவள நாட்டில் கோலாகலம் மிகுந்திருக்கும் என்று சொல்வார்கள்.

அப்படி ஓர் ஊரில் சோழ தேசத்தில் புதிதாக ஒரு சிவாலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. நல்லதொரு நாளில் திருப்பணிகளும் ஆரம்பமாயின. வெகு தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பாறைகள் எல்லாம் சோழச் சிற்பிகளின் கைவண்ணத்தில் தூண்களாகவும், மண்டப விதானங்களாகவும் மாறின.
கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டிய தெய்வத் திருமேனிகளை வெளியூரில் செய்து கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார்கள்.

அதன்படி, அழகிய சிவலிங்கமும் வள்ளி- தெய்வானை உடனான முருகப் பெருமானின் திருவிக்கிரகமும் செதுக்கப்பட்டு, வண்டியில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டது. வழியில் ஓரிடத்தில் அச்சாணி முறிந்து, வண்டி குடைசாய்ந்தது.
தெய்வ விக்கிரகங்கள் தரையில் விழுந்தன. வண்டியுடன் வந்தவர்கள் பதறிப்போனார்கள். அந்த விக்கிரகங்களைத் தூக்க முயற்சிக்க, அவை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.
தங்கள் ஊர் கோயிலில் குடியிருத்தி, நித்தம் நித்தம் ஆடை- ஆபரணங்கள் பூட்டி, தினம் ஒரு வகை நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும். வருடம் தவறாமல் விழா எடுத்துக் கொண்டாட வேண்டும். அதன் பலனால் பிணியும் வறுமையும் அகன்று தங்கள் ஊர் செழிக்கும்.

தேசமும் வளம் பெறும்... இப்படியான கனவுகளோடு ஆசை ஆசையாக அல்லவா அந்த தெய்வ விக்கிரகங்களை அவர்கள் எடுத்துவந்தார்கள்.

அதுமட்டுமா? ஓர் ஊரில் கோயில் கட்டுகிறார்கள் என்றால், அங்கே அதன் காரணம் விளக்கப்படும். ‘இதுவொரு புண்ணிய பூமி. தெய்வ சங்கல்பத்தால் இப்படியானதொரு அனுக்கிரகம் இங்கே விளைந்தது என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

பெரியோர்களும் கதை கதையாய்ச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதன் காரணம்தொட்டு ஆதிகாலத்தில் இங்கே சின்னதாக ஒரு கோயிலும் இருந்தது; இப்போது இல்லை. நாங்கள் கட்டுகிறோம்.

அதன் மூலம், காலம்காலமாக எங்கள் முன்னோரும் நாங்களும் வசித்து வரும் எங்கள் ஊரின் பெருமையை, வெளியே எடுத்துச் சொல்ல முடியும். அதையறிந்து வெளியூர்வாசிகளும் தேசாந்திரிகளும் அதிகம் வருவார்கள்.

கூட்டம் கூடும். உள்ளூர்க் காரர்களுக்கு வணிகம் பெருகும்...’ இப்படி, வழிபாட்டின் அடிப்படையாக மட்டுமின்றி, வாழ்க்கையின் ஆதாரமாகவும் அமைந்திருந்தன ஆலயங்கள்.

அந்த அன்பர்களும் தங்கள் ஊரின் பெருமையை வெளிக்காட்ட, தங்களின் வாழ்க்கை வளப்பட ஓர் ஆலயம் வேண்டும் என விரும்பினார்கள். அதற்காகவே அழகழகாய் தெய்வத் திருமேனிகளைச் செய்து, வண்டியில் ஏற்றி வந்தார்கள். ஆனால், இறை சித்தம் வேறுவிதமாக அமைந்திருந்தது.

கீழே விழுந்த விக்கிரகங்களை அசைக்க முடியாமல் போகவே, அந்த அன்பர்கள், அங்கேயே அழகாக ஓர் ஆலயம் எழுப்பிவிட்டனர். அதாவது, தெய்வமே விரும்பி ஓரிடத்தில் குடியேறியது. அந்த இடம். இன்றைக்கும் அன்பர்கள் எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றித் தரும் மிகப் புண்ணியம் வாய்ந்த திருத்தலமாகத் திகழ்கிறது! அந்த ஊர்
.... திண்ணியம்.

அதேபோல் சிவனாரையும் முருகனையும் ஒரே இடத்தில் நின்று, ஒரே நேரத்தில் தரிசிக்கமுடியும் என்பது இத்தலத்தின் சிறப்பம்சம். உத்ஸவர் முருகன் வள்ளி- தெய்வானையுடன் மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். இவரின் திருமேனியும் வெகு அழகு.

#வரலாற்றுச்சிறப்பு:

இந்த கோயில் ஏற்பட்டு ஏறக்குறை 1400 ஆண்டுகள் ஆகிறது. சோழர்கள் காலத்தில் கோயில்கள் அனைத்தும் புத்துயிர் பெற்றன. அகண்டு விரிந்த நதியாக, கிளை ஆறுகளாக, சிறு ஓடைகளாக விவசாயத்தைப் பெருக்க ஊடறுத்தது காவிரி நதி. அந்தக் காலத்தில் ஊருக்கு ஊர் திருக்கோயில்கள் கட்டப்பட்டன. அந்த கோயில்களில் பிரதிஷ்டை செய்வதற்காக சிவலிங்கம், முருகன், வள்ளி-தேவசேனா போன்ற சிலைகளை உருவாக்கி, எடுத்துச் செல்வது வழக்கம்.

அந்த வகையில் ஒரு ஊரில் புதிதாக சிவன் கோயில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கான திருப்பணிகளும் தொடங்கின. வெகு தொலைவிலிருந்து கொண்டு வரப்பட்ட பாறைகள் எல்லாம் சோழ சிற்பிகளின் கைவண்ணத்தில் தூண்களாகவும், மண்டப விதானங்களாகவும் மாறின. கோயிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய தெய்வத் திருமேனிகளை வெளியூர்களிலிருந்து செய்து கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார்கள்.

அதன்படி ஒரு அழகிய சிவலிங்கமும்,  வள்ளி-தேவசேனா தேவியருடன் முருகப்பெருமானின் திருவிக்கிரகமும் செதுக்கப்பட்டு, வண்டியில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டது. அவர்கள் சிலைகளைக் கொண்டு செல்லும் வழியிலேயே, வண்டியின் அச்சாணி முறிந்து வண்டியின் குடை சாய்ந்தது. தெய்வ விக்கிரகங்கள் தரையில் விழுந்தன. இதனால் வண்டியுடன் வந்த தொழிலாளர்களும், அடியார்களும் பதறிப்போய், அந்த விக்கிரகங்களைத் தூக்க முயன்றும் அவை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. அவற்றை அசைக்கவும் முடியவில்லை. சிறிதும் நகர்த்தக்கூட முடியவில்லை.

தங்கள் ஊர் கோயிலில் இறைவனை குடியிருத்தி தினமும் ஆடை-ஆபரணங்கள் பூட்டி நைவேத்தியம் படைத்துப் பூஜிக்க வேண்டும். ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாட வேண்டும். அதன் பலனால் பிணியும், வறுமையும் அகன்று தங்கள் ஊர் செழிக்கும், தங்கள் தேசமும் வளம் பெறும் என்ற கனவுகளோடு ஆசை-ஆசையாய் தெய்வ விக்கிரகங்களை எடுத்து வந்தபோது, இறைச் சித்தம் வேறுவிதமாக அமைந்தது.

குறிப்பிட்ட அந்த இடத்தில் ஏதோ இறை சாந்நித்தியம் இருப்பதை அனைவரும் உணர்ந்தனர். எனவே அந்த இடத்தில் அந்தச் சிலைகளை வைத்து ஒரு கோயிலை நிர்மாணிப்பது என்று தீர்மானித்தனர். அவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட கோயில்தான்  எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றித் தரும் மிகப் புண்ணியம் வாய்ந்த திருத்தலமாக விளங்கும் திண்ணியம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். 

#இறைவன்_கோடீசுவரர் :

கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் இறைவன் கோடீசுவரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.  இந்த திருக்கோயில் இறைவனை ஒருமுறைத் தரிசிக்க கோடி மடங்கு புண்ணியத்தை வழங்கும் பேரருளாளன். தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவையை அளிக்கும் இறைவனாக கோடீசுவரர் திகழ்கிறார். தேவேந்திரன் பூஜித்த தலமாகும் இது விளங்குகிறது.

#இறைவி_பிருகந்தநாயகி

இத்திருக்கோயிலின் இறைவி பிருகந்தநாயகி என்றழைக்கப்படுகிறார். சாந்த சொரூபியாக நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு வரத்தை வாரி வழங்கும் அம்மனாகத் திகழ்கிறார்.

சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய சுவாமி :

இக்கோயிலில் ஈசுவரன் எழுந்தருளியிருந்தாலும், பிரதான வாயிலில் முதன்மையாக சுப்ரமணிய சுவாமிதான் காட்சியளிக்கிறார். பொதுவாக சிவன் கோயில்களில் முருகன் சன்னதி அமைந்திருந்தாலும், சிவபெருமானைத் தரிசனம் செய்த பிறகே முருகப் பெருமானை தரிசிக்கும் வகையில் அமைப்பிருக்கும். ஆனால், இங்கு ஒரே இடத்தில் நின்று இருவரையும் தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.

மற்ற சிவன் கோயில்களில் மயில் வாகனத்தில் வள்ளி-சேவசேனா சமேதராய் அல்லது  தனியாகவோ முருகப்பெருமான் எழுந்தருளியிருப்பார். ஆனால், திண்ணியம் திருக்கோயிலில் மூவரும் தனித்தனியே மயில் வாகனத்தில் எழுந்தருளியிருப்பதும் தனிச் சிறப்பாகக் கருதப்படுகிறது. இதனால் எண்ணியதைத் தருவார் திண்ணியம் முருகன், குருவாக இருந்து அருளும் குமரன் எனப் பக்தர்களால் போற்றப்படுகிறார்.

மேலும் சிவன் கோயில்களில் குரு தட்சிணாமூர்த்திதான் தென்திசை நோக்கி வீற்றிருந்து, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால், இக்கோயிலில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி குரு அம்சத்துடன் தெற்குத் திசைநோக்கி எழுந்தருளி குருவாகத் தரிசனம் அளிக்கிறார். ஆதலால் இவரை வணங்கும் பக்தர்கள் சிறந்த கல்வி ஞானம் பெருகும் என்பது ஐதீகம்.

ஓராறு முகமும், ஈராறு கரங்களுமாகத் திகழும் திண்ணியம் அருள்மிகு சுப்ரமணியசுவாமிக்கு செவ்வரளி மற்றும் விருட்சிப்பூ மாலை சாத்தி வழிபட்டால், திருமணத் தடை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகமாகும்.

இக்கோயிலில் சுப்ரமணிய சுவாமியின் வலது கரம் அபயம் காட்டுகிறது. பக்தர்களைக் காக்கும் கரமாக விளங்குகிறது. அதேசமயம்  இடது கரம் ஹஸ்தமாக இல்லாமல், அரிச ஹஸ்தமாக உள்ளது.  அதாவது பக்தர்களின் கஷ்டங்களைத் தான்  உள் வாங்கிக்கொள்ளும் கையாக உள்பக்கமாக அணைந்தபடி உள்ளது. பிற பத்துக் கரங்களும் பக்கத்துக்கு ஐந்தாக அமைந்து, பக்தர்களின் துயர்களையெல்லாம் களைகின்றன. திண்ணியம் திருக்கோயிலுக்கு வந்து கந்தனையும், அவரது தாய், தந்தையையும் வழிபட்டால் தோஷங்கள் அகலும். விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

#பிற சன்னதிகள் :

கோயிலின் உள்நுழைந்தால் கொடிமரம், மயில் வாகனம், இடும்பன் சன்னதி, பிரகாரத்தின் தென்மேற்கில்  ஸ்ரீ சித்தி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. மேலும் நவக்கிரக நாயகர்கள் சன்னதியும் அமைந்துள்ளன. கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் உள்ளது.

எப்படிச் செல்வது? 

மதுரை போன்ற தென் மாவட்டங்களிலிருந்தும், டெல்டா மாவட்டங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து நகரப் பேருந்துகள் மூலமாக லால்குடி, அன்பில் வழியாகவோ அல்லது லால்குடி, காட்டூர், செம்பரை வழியாகவோ திண்ணியம் கோயிலுக்குச் செல்லாம்.

கோவை, கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி, லால்குடி வழியாக செல்லும் நகரப் பேருந்துகள் மூலமாக திண்ணியம் செல்லலாம்.

நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலிருந்தும், சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற வடமாவட்டங்களிலிருந்து  பேருந்துகளில் வருபவர்கள் நெ.1.டோல்கேட்டில் இறங்கி, லால்குடி வழியாக திண்ணியம் செல்லும் பேருந்துகளில் கோயிலுக்குச் செல்லலாம்.

லால்குடியிலிருந்து திண்ணியம் கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதிகளும் உள்ளன. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், விமான நிலையத்திலிருந்து லால்குடி வழியாக திண்ணியம் செல்ல கார், வேன் போன்ற வாகனங்கள் வசதியும் உள்ளது.

தொடர்புக்கு: 

திண்ணியம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருபவர்கள் 99439 46086 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

திருச்சிற்றம்பலம் 🙏
முருகா 🙏

Monday, April 24, 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற மாநகரின் பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில்

#நாகர்கோயில் எனும்  பெயர் வரக் காரணமாய் அமைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாக தலமான
#ஸ்ரீநாகராஜா திருக்கோயில் வரலாறு:
மனிதர்களுக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தை பிறப்பதில் தடை ஏற்படுகிறது. எனவேதான் ஜோதிடர்கள் நாகதோஷம் நீங்க பரிகாரம் கூறுவார்கள். நாகதோஷம் சருமவியாதியைத் தருகிறது. நாகரை நினைத்து வழிபட்டால் சருமவியாதி தீரும் என்பது நம்பிக்கை.

நம் நாட்டில் நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்தக் கோவில் இதுவேயாகும். திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திரு நாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும்பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களைப் போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும்.

நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் ஆகும். இங்கே கருவறையில் நாகமே மூலவராக உள்ளது. இன்றையதினம்  நாகர்கோவில் நாகராஜா ஆலயம் பற்றி அறிந்து கொள்வோம்.

நாகர்கோவில் நாகராஜா :

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற மாநகரின் பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில். நாகராஜா திருக்கோயில் நாகர்கோவில் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து இருந்தாலும் தெற்கு திசையில் உள்ள கோபுரவாசல் வழியே பக்தர்கள் தரிசனத்துக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது.

சுவாமி : நாகராஜர்.

மூர்த்தி : அனந்த கிருஷ்ணன், சுப்ரமணிய சுவாமி, துர்க்கையம்மன், ஸ்ரீ தர்ம சாஸ்தா.

தீர்த்தம்: நாகதீர்த்தம்.

தலவிருட்சம் : ஓடவள்ளி.

தலச்சிறப்பு : 

இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம்.  இங்கு மாதக் கார்த்திகைகள் விசேஷம்  தருவதாக கருதப்படுகிறது.  இக்கோவிலுக்கு வெளியில் உள்ள தல விருட்சத்தை சுற்றி நாக சிலைகள் உள்ளன.  இதில் மஞ்சள் மற்றும் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும்.  இந்த  தலத்தில் மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது.   கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது.  வயல் இருந்த இடம் என்பதால்  எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது.  இந்த நீருடன் சேர்ந்த மணலையே,  கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்த மணலானது ஆடி மாதம் முதல்  மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல்  ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருக்கிறது.  இந்த தலத்தில் உள்ள  துர்க்கை சிலை, இங்கு உள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது.  அதனால் அன்னை "தீர்த்த துர்க்கை"  என்று அழைக்கப்படுகிறாள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை  அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம்  ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள்  உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

தல வரலாறு : 

இங்கு நாகராஜர் கோவில் ஏற்பட்டதற்கு பல காரணக் கதைகள் கூறப்படுகின்றன.  இதோ! அவைகளில் சில : புல், புதர், செடி, கொடிகள் என்று இருந்த இந்தக்காட்டில் புல் அறுக்கும்  பெண் ஒருத்தி, மாட்டிற்குப் புல் அறுக்கும் போது, அவள் கையில் இருந்த அரிவாள் ஐந்து  தலைநாகம் ஒன்றின் தலையில் பட்டு ரத்தம் பீறிட்டது.  இதைக்கண்டு பயந்து நடுங்கிய அப்பெண்,  பக்கத்தில் உள்ள கிராம மக்களை அழைத்து வந்தாள்.  அவர்கள் கூட்டமாக வந்து பார்க்கும்போது,  அந்த ஐந்து தலைநாகம் சிலையாக காணப்பட்டது.  கிராம மக்கள், ஒரு சிறிய தென்னங்கீற்றால்  வேயப்பட்ட கூரைக்கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.  நாளடைவில் அக்கம் பக்கத்து கிராம மக்கள்  கூட்டம் கூட்டமாக வந்து, நாகராஜரை தரிசித்துச் சென்றதில், ஆலயம் மிகப் பிரபலமாயிற்று.   தமிழகத்துக் கோவில்களில் வேறு எங்கும் காணப்படாத தனிச்சிறப்பு, ஆலயத்தின்  மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டதாகும்.

உதய மார்த்தாண்டவர்மா மன்னர், இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் மன்னர் கனவில் நாகராஜர் தோன்றி, "ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் மிகவும்  விரும்புகிறேன். முதன் முதலில் அக்கூரையினடியில் தான் வாசம் செய்தேன்.  ஆதலால் அதை  மாற்ற வேண்டாம்'' என்று கூறியதால் இன்றும் மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டு உள்ளது. 

நடைதிறப்பு : காலை 4.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை. மாலை 5.00 மணிமுதல்இரவு 8.30 மணிவரை.

பூஜைவிவரம் : ஆறுகாலபூஜைகள்.

திருவிழாக்கள் :

ஆவணித் திருவிழா – நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் உற்சவம்.

தைஉற்சவம் – தேர் திருவிழா 10 - நாட்கள் 9 –ம்நாள் திருத்தேர்.

அருகிலுள்ள நகரம் : நாகர்கோயில் .

இருக்குமிடம் : கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ.

கோயில்முகவரி : அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில்,

நாகர்கோவில் - 629 001, கன்னியாகுமரி மாவட்டம்.

சரித்திர வரலாறு :

இத்திருக்கோயில் கட்டுமானம் தொடர்பாக ஒருகதை வழங்கி வருகிறது. கி.பி.1516 முதல் 1535 வரை நெல்லை மாவட்டம் களக்காட்டை தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்த மன்னர் பூதலவீர உதயமார்த்தாண்டன். இவர் தீராத சரும வியாதியால் அவதிப்பட்டு வந்தார். ஜோதிடர்கள் அவரது ஜாதகத்தை ஆராய்ந்து இந்த நோய் நாகதோஷத்தால் உண்டானது என்றும் நாஞ்சில் நாட்டு நாகராஜா கோயிலில் வழிபடால் இந்த வியாதி தீரும் என கூறினர். அப்போது நாகர்கோவில் நாகராஜா கோவிலின் சிறப்பு பற்றி அறிந்து ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து கோவிலுக்கு நேர்ச்சை செய்து வழிபட்டதால் அந்த மன்னரின் சருமநோய் தீர்ந்தது. இதற்கு பிரதியுபகாரமாக கோவிலின் சில பகுதிகளை அவர் கட்டிக்கொடுத்துள்ளார்.

ஆதிஷேசன் :

அனந்தன் ஆதிசேஷனின் பெயர் ஆயிரம் தலைகளை கொண்டவர் பார்சுவநாதர் புராணத்தில் இடம்பெறும் ஆயிரம் தலையுடைய நாகராஜனுக்கு இணையான தெய்வம் திருமாலை தாங்கும் ஆதிசேஷன். இதனால் இக்கோயில் வைணவக் கோயில் ஆனது. திருக்கோயிலின் வாயிலில் இரண்டு பெரிய 5 தலை நாகங்களின் சிலை நம்மை வரவேற்கின்றன. இத்திருத்தலத்தின் கருவறையில் 5 தலை நாகத்தின் உருவச் சிலையே மூலவரான நாகராஜ தெய்வமாக வழிப்படப்படுகிறது. நாகராஜாவிற்கு வழிபாடுகள் நடத்தியப் பிறகு புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஆவணி ஞாயிறு வழிபாடு :

இதன் காரணமாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு, மேலும் சிறப்பு பெற்றது. அன்றுமுதல் இன்றுவரை ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, வழிபட்டு செல்கிறார்கள். இத்திருக்கோயிலில் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கும் நாகதோஷம் இங்கு வழிபடுவதன் மூலமாக தோஷம் நீங்குகிறது என்பது ஐதீகம். இறைவன் - அனந்தகிருஷ்ணன், நகராஜா, தீர்த்தம் - நாகதீர்த்தம், தலவிருட்சம் - ஓடவள்ளி, ஆகமம் - தாந்திரீகம்

சைவம், வைணவம், பௌத்தம் :

நாகராஜாவை வழிபட்டப் பின்னர், அவருடைய வலப் பக்கத்திலுள்ள சன்னிதானத்தில் வாயு ரூபியாக எழுந்தருளியுள்ள சிவனை தரிசிக்கின்றனர்.

அனந்தக்கிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலின் தூண்களில் சமண சமயத்தின் தீர்த்தங்கர்களான பார்சுவ நாதரும், மகா வீரரும் தவக்கோலத்திலுள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவாயில் நேபாள பெளத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர். எனவே இத்திருக்கோயில் சைவ, சமண, வைணவ, பெளத்த மார்க்கங்களின் சங்கமமாக கருதப்படுகிறது.

கொடிமரமும் தல விருட்சமும் :

ஓடவள்ளி என்று கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. இந்தக் கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னிதிக்கு எதிரேயே கொடி மரம் இருக்கிறது. தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது. அப்போது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடைபெறும்.

ஆமைக் கொடி : 

பெருமாள் கோவில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னிதியின் கொடி மரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது.

நாக வழிபாட்டின் நன்மை :

நல்லவை அனைத்தையும் தந்தருளும் மகாசக்தி கொண்டது நாக வழிபாடு. இத வழிபடும் முறையை அறிந்துகொண்டு, அதன்படியே வழிபட்டு வணங்கினால், எல்லா வளமும் நலமும் பெறலாம்!. புற்றை மூன்று முறை வலம் வந்து அம்மனை வழிபடுவது போல் வேண்டினால் எண்ணியவை நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

நாகதோஷம் நீங்கும் : 

குடும்பம் நலமாக இருக்க வேண்டி வழிபடுதல். மகப்பேறு வேண்டியும், பிரசவம் இடையூறு இன்றி நடைபெற வேண்டியும் வழிபடுகின்றனர்.

கேது திசை நடப்பவர்கள் புற்று வழிபாடு செய்து நோய் வராமல் தடுக்க வேண்டுவார்கள்.

நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கப் புற்று வழிபாடு செய்வார்கள். தொழு நோய் நீங்கவும் புற்று வழிபாடு செய்யப்படுகிறது.

குழந்தைகள் தோஷங்கள் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் நலமுடன் வாழவும் புற்று வழிபாடு நடைபெறுகிறது.

சருமவியதிகள் தீரும் :

பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது. ஆவணி மாத ஞாயிறு நாக வழிபாட்டுக்கு மிகவும் சிறப்பானது. ஆவணி ஞாயிறு விரதமிருந்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டால் நாகதோஷம் நீங்கும், சருமவியாதிகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருச்சிற்றம்பலம் 🙏

*ஆசியாவிலே இரண்டாவது மிகப்பெரிய சிவன் கோவில்...*

*ஆசியாவிலே இரண்டாவது மிகப்பெரிய சிவன் கோவில்...*
திருநெல்வேலி
*நெல்லையப்பர் கோவில்*🙏

கோவிலின் வாசலில்...

இரண்டு தலைமுறையாய் பூக்கடை வைத்திருக்கும் கடைக்காரரிடம்... 

கோவிலின் எதிரில் மூன்று தலைமுறையாய் ஹல்வா கடை வைத்திருக்கும் கடைகாரரிடம்... 

கோவிலின் அருகில் அவரது தாத்தாவின் காலத்திலிருந்தேப் பழக்கடை வைத்திருக்கும் கடைக்காரரிடம்... 

மேலும் கோவிலின் வாசலில் கடை வைத்திருக்கும் சில வியாபாரிகளிடமும்...

கோவிலின் உள்ளே வேலைசெய்யும் அறநிலைத்துறை அதிகாரியிடமும்...

பூஜாரிகளிடமும்...

நாம் கேட்ட ஒரே ஒரு கேள்வி... 
*'இந்த கோவிலைக் கட்டியது யார்?'*

எவரிடமும்  பதிலில்லை. 

இது தான் இன்றைய கசப்பான  உண்மை.

*'ஆக, கோவிலின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவில்லை'*
என்பது மிக தெளிவாக தெரிகிறது.

'சரி, வரலாறு தான் இந்த லெட்சணத்தில் இருக்கிறது...' 
என்று நினைத்தால்... 

*கோவிலுக்கான மதிப்பு அதைவிட மோசமாக காணப்படுகிறது...*

*கோவிலை சுற்றிலும் ஆக்கிரமிப்பு...*❗

ஆச்சரியப்பட வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள் 
மற்றும் 
பல கட்டுமான அதிசயங்களை கொண்ட ஒரு கோவிலின் வெளித்தோற்றம்... 

ஏன், கோவிலின் கோபுரம் கூட ஒழுங்காக தெரியாதபடி... 

ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது.
 
கிபி ஏழாம் நூற்றாண்டில்... 

பல்லவ மன்னர்களால் கட்டுமானம் தொடங்கப்பட்டு... 

கடைசியாக
*'நின்ற சீர் நெடுமாறப் பாண்டிய மன்னனால்...'*
 கட்டி முடிக்கப்பட்டது. 

இந்தியாவிலே... 
*சிறந்த நீர் மேலாண்மை* கொண்ட ஒரு மாவட்டம் என்றால்... 
அது திருநெல்வேலி மாவட்டம் தான்... 

மூன்று கிராமத்திற்கு ஒரு *'குளம்'* இருப்பது திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் தான்.

நெல்லையப்பர் கோவிலைக் கட்டிய,
நின்ற சீர் நெடுமாறப் பாண்டிய மன்னனின் ஆட்சிகாலத்தில் தான்... 

*ஆறுகள் பல்வேறு கிளை நதிகளாகப் பிரிக்கப்பட்டு...*

*பாசனப்பகுதி பெருகி காணப்பட்டது.*

அப்படி திருநெல்வேலி மாவட்டத்தையே செழிப்படைய செய்த மன்னன் தான்... 
*நின்ற சீர் நெடுமாறப்பாண்டியன்.*

அவர் கட்டி வைத்த அந்த நெல்லயப்பர் கோவிலை கூட... 
இன்று, அவர் பெயரை‌ சொல்லும்படியாக நாம் பாதுகாக்கவில்லை.

அந்த 'நின்ற சீர் நெடுமாறப் பாண்டியனுக்கு *'நாம் செய்த மரியாதை என்ன...?'*

*பாடப்புத்தகத்திலாவது அவரது பெயரை பதிவிட்டோமா?*

 இல்லை.😔

*ஒரு பேருந்து நிலையத்திற்காவது அவரது பெயரை வைத்தோமா?*

 இல்லை.😔

*அவருக்கு ஒரு சிலை தான் வைத்தோமா.. ?*

இல்லை.😔

இங்கு சிலையாக நிற்பதெல்லாம்... 
*ஈ வெ ரா , அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ...*
*மற்றும் பலர்...*

*கோவலனுக்குத் தவறான நீதியை  வழங்கிவிட்டதால்...*

*தன் உயிரையே மாய்த்துக் கொண்டவன்...*
*நெடுஞ்செழியப் பாண்டியன்...*

எப்பேர்ப்பட்ட உத்தமனாக இருந்தால், 
'தான் வழங்கிய தவறான நீதிக்காக தன் உயிரையே விட்டிருப்பான்..?' 

*அந்த நெடுஞ்செழியப் பாண்டியனுக்கு ஒரு அடையாளமோ,*

*பாடப்புத்தகத்தில், அவரின் சாதனைகளை பற்றியோ ஒன்றுமே கிடையாது.*

நாம் அனைவரும் மத்சசார்பின்மை பேசி,

நடுநிலை பேசி... 

ஆளுக்கு ஒரு ஊழல் அரசியல் கட்சிகளில் இருந்து கொண்டு... 

நம் அடையாளங்களை நாமே அழித்து கொண்டு இருக்கிறோம்.

அதாவது, 

*நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டு வருகிறோம்.*

ஒரு இனம் அழிந்து போவதற்கு... 
முதலில் செய்யப்படும் காரியம் *'அடையாள அழிப்பு'* தான்.

அதற்க்காக உருவாக்கப் பட்டது தான்... 
*'திராவிடம்'*👊

இனிமேலாவது, ஆபத்தை உணர்ந்து விழிப்புணர்வு பெறுங்கள். 

அரசியல் கட்சிகளை கடந்து... 
ஜாதி பிரிவுகளை கடந்து... 

தமிழர்களாய்... 
ஹிந்துக்களாய்... ஒன்றிணையுங்கள்.🤝

முதலில், 
உங்கள் பகுதியில் உள்ள... 

*உங்கள் கோயிலை காப்பாற்றுங்கள்*

நமது முதல் அடையாளமே... 
நமது கோவில்கள் தான்.

உலகின் தலைசிறந்த... 
நமது பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் அறங்களை காத்து...

உலகின் வழிகாட்டியாக நாம் விளங்க...
நமது கோவில்கள் தான் அனைத்திற்கும் *மூலாதாரம்.*

ஆகவே,
*காப்போம் நமது கோவில்களை...*🙏
*வாழ்வோம் சீரும் சிறப்புமாக...*🎯

🙏 கு பண்பரசு

சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் திகழும் சங்கமேஸ்வரர் கோவில் ,திருநணா (பவானி) .

சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் திகழும் சங்கமேஸ்வரர் கோவில்  ,
திருநணா (பவானி) .
திருநணா (பவானி)
என்னும் ஊரில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். பவானி சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது.

இறைவன் பெயர் சங்கமேஸ்வரர், இறைவி பெயர் வேதநாயகி அல்லது வேதாம்பிகைபவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 

மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். (சங்கமம்-கூடுதல்).

பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.

வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. 

சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது.இது ஒரு சோமாஸ்கந்த வடிவுடைய தலமாக கூறலாம்.

இறைவன் இங்கு  சுயம்பு லிங்கம்.

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது.

கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன. அவர்களது பாடல்களில் இவ்விடம் ’திருநாணா’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் பல முறை பலரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. 1640-1741வரை இக்கோயில் மூன்று முறை திருப்பணி கண்டுள்ளது, அதில் சிலரின் கல்வெட்டுக்கள் அம்பிகை கோயில் மகாமண்டப விதானத்தில் எழுத்துக்கள் வெட்டப்பட்டு உள்ளது. 

இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக மரபு. இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.

வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் 'திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்) எனப்படுகிறது. 

இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், 'தென்திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்...

பவானி கூடுதுறை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடுதுறையில் அமைந்துள்ளது, பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

கோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள். ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயிலின் பிரதான கோபுரம், வடக்குத் திசையில் ஐந்து நிலை கொண்டது.

பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம். இதனால், பித்ரு தோஷம் நீங்கும் என்பார்கள்.

இந்தக் கோயிலில் ஸ்ரீசங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளுக்கும் ஸ்ரீசௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. இது, சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தலங்களில் ஒன்று.

ஸ்ரீவேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கியது. இந்தச் சந்நிதியின் வலப்பக்கம் ஸ்ரீசுப்ரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. அதையடுத்து, மூலவரான சங்கமேஸ்வரரைக் கண்ணாரத் தரிசிக்க லாம். அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் நடுவே ஸ்ரீசுப்ரமணியர் அமைந்திருப்பது சோமாஸ்கந்த அமைப்பு. இது ரொம்பவே விசேஷம் என்பார்கள்.

இங்கு வந்து முருகப்பெருமானைத் தரிசித்து, மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரிநாதர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட ஆலயம் இது. 

ஆண்டுதோறும் மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாவது நாள், சூரியனின் ஒளி ஸ்ரீசங்கமேஸ்வரர், ஸ்ரீவேதநாயகி, ஸ்ரீசுப்ரமணியர் மீது பட்டு, சூரிய பூஜை நடப்பது சிறப்புக்கு உரிய ஒன்றுபூலோகத்தில் உள்ள புனிதத் தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரன், இந்தத் தலத்துக்கும் வந்தான். இந்தத் தலத்தில் ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் அனைவரும் தவம் செய்வதைக் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்களும் சண்டையின்றி, ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்து ஆச்சரியமடைந்தான்.

அதில் நெக்குருகிப் போன குபேரன், தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இது. அவனது தவத்தில் மகிழ்ந்து, ஹரியும் சிவனுமாக வந்து, அவனுக்குக் காட்சி தந்தருளினர்.

''குபேரனே! என்ன வரம் வேண்டும், கேள்'' என இறைவன் கேட்க, ''அளகேசன் எனும் உன் பெயரால் இந்தத் தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்'' என வேண்டினான் குபேரன். அன்றிலிருந்து இந்தத் தலம் 'தட்சிண அளகை’ எனும் பெயர் பெற்றதாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வில்லியம் காரோ என்பவர் இங்கே கலெக்டராக இருந்தார். அம்பாளின் சக்தியை அனைவரும் சொல்லக் கேட்டு, வியந்து போனார். 

அந்த அனுபவம் தனக்கே ஒரு நாள் கிடைக்கப்பெற்றார், கடுமையான மழைக்காலம், இடியும் மின்னலுமாய் இருக்க கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வந்த கலக்டரை ஒரு சிறுமி உடனே வெளியில் வாருங்கள் ஆபத்து என கூறி அழைத்து செல்ல சில நிமிடங்களில் அந்த பங்களா இடிந்து விழுந்தது, .

1804 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் கலெக்டராக இருந்த வில்லியம் காரோ ஆபத்து வேளையில் தன்னுயிரைக் காப்பாற்றியதற்காக, இக்கோவில் அம்மனுக்குக் காணிக்கையாக அளித்த தந்தக் கட்டில் ஒன்று இங்கு உள்ளது. அதில் அவரது கையொப்பமும் உள்ளது. இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...