வீட்டில் சுவாமி படங்கள் வைத்திருப்பது போது சுவாமி சிலைகளும் வைத்து வழிபடும் வழக்கம் பலருக்கும் உள்ளது. இப்படி நாம் வாங்கி வந்து வைக்கும் சிலைகள் மற்றும் படங்களுக்கு தொடர்ந்து நாம் பூஜை செய்வதால் தெய்வீக தன்மையானது வருகிறது. உரு ஏற திரு ஏறும் என்பார்கள். ஆனால் இப்படி நாம் பூஜை செய்வதால் அந்த சிலைக்கு தெய்வீக தன்மை நிறைந்திருக்கிறதா இல்லையா என்பதை ஒரு சிலரால் மட்டுமே உணர முடியும். தெய்வீக சக்தியை அனைவராலும் உணர முடியாது.
வீட்டில் இருக்கும் சுவாமி சிலைகளுக்கு சக்தி வர வைப்பது எப்படி ?
நாம் உணராவிட்டாலும் வீட்டில் உள்ள சுவாமி சிலைகளுக்கு எப்படி தெய்வீக தன்மையை கொண்டு வருவது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். சில எளிய முறைகளை பயன்படுத்தி சுவாமி சிலையில் உள்ள தெய்வ தன்மையை எப்போதும் நிலைத்து இருக்க செய்ய முடியும். இதோடு நாம் செய்யும் பூஜைகள், உச்சரிக்கும் மந்திரங்களின் தன்மை நிறையும் போது வீட்டில் எப்போதும் தெய்வ சக்தி நிறைந்து, நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்.
வீட்டிலுள்ள சுவாமி சிலைகள் :
கோவிலில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு முன் யந்திரங்கள், பூஜைகள், ஹோமங்கள் செய்வதுண்டு. அபிஷேகங்கள், மந்திர ஜபம், பூஜைகள் ஆகியவற்றால் கோவிலில் உள்ள சிலைகள் தெய்வ சக்தியுடன், உயிரோட்டம் நிறைந்ததாக இருக்கின்றன. ஆனால் இது போன்ற யாகங்கள், பூஜைகள், மந்திர ஜபம் ஆகியவற்றை நாம் வீட்டில் தொடர்ந்து செய்வது கிடையாது.
சுவாமி சிலைகளில் தெய்வ தன்மை :
கோவிலில் இருக்கும் சிலைகளில் தெய்வ சக்தியானது எப்போதும் நிறைந்திருக்கும். ஆனால் நம்முடைய வீட்டில் வைத்துள்ள சிலைகள், சுவாமி படங்களில் தெய்வ சக்தியை எப்போதும் நிலைத்து இருப்பது கிடையாது. வீட்டில் உள்ள சிலைகள், படங்களை சுத்தம் செய்வதற்காக நாம் தண்ணீரால் கழுவும் போதும், துடைக்கும் போதும் அதிலுள்ள தெய்வ சக்திகள் நீங்கி விடுகிறது. மீண்டும் அந்த சிலை அல்லது படத்திற்கு நாம் பூஜைகள் செய்து, மந்திரங்கள் உச்சிரப்பதால் அவற்றிற்கு தெய்வ தன்மை வருகிறது. மீண்டும் சுத்தம் செய்யும் போது தெய்வத் தன்மை மீண்டும் குறைகிறது.
தர்ப்பை புல் :
கோவிலில் உள்ள சுவாமி சிலைகளை தண்ணீரில் மூழ்க வைத்து கழுவுவது கிடையாது. ஆனால் வீட்டின் பூஜை அறையில் நாம் வைத்திருக்கும் சுவாமி சிலைகளை தனியாக எடுத்து, தண்ணீரில் மூழ்க வைத்து எடுப்பதால் அதில் உள்ள தெய்வ தன்மையானது முற்றிலும் நீங்கி விடும். ஆனால் வீட்டில் உள்ள சிலைகள், படங்களிலும் உள்ள தெய்வ சக்தி குறையாமல், எப்போதும் நிலையான சக்தியுடன், உயிர்ப்புடன் இருக்க சில எளிய வழி முறைகள் உள்ளது.
இதற்கு புற்களில் மிகவும் உயர்ந்ததாக, புனிதத்தன்மையும் தெய்வத் தன்மையும் நிறைந்ததாக கருதப்படும் தர்ப்பை புல்லினை பயன்படுத்தலாம். கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யும் போது கலசங்களிலும், பூஜைகள், யாகங்கள் செய்யும் போதும் தர்ப்பை புல்லினை பயன்படுத்துகிறார்கள். தர்ப்பை என்பது மனிதனுக்கும், பிரபஞ்சத்தில் உள்ள இறைசக்திக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
வீட்டில் தெய்வ சக்தி :
தர்ப்பை புல்லுக்கு எதிர்மறை சக்திகளை அழித்து, நேர்மறை சக்திகளை வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு. இதனாலேயே இதனை பூஜைகளில், வீடுகளில் வைத்து பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தர்ப்பை புல்லினை வீட்டிலுள்ள சுவாமி சிலைகளில் தெய்வ தன்மை நிறைந்திருக்க பயன்படுத்தலாம். தர்ப்பை புல் எந்த நிலையில் இருந்தாலும் அதன் தன்மை மாறாது. அதனால் சுவாமி சிலைகளை சுத்தம் செய்து போது தர்ப்பை புல்லினை எரித்த சாம்பலைக் கொண்டு தேய்த்து, சுத்தம் செய்வதால் சுவாமி சிலைகளில் உள்ள தெய்வத் தன்மையானது குறையாமல் இருக்கும்.
சுவாமி படங்களுக்கு உரு ஏற்றும் முறை :
தர்ப்பை புல்லினை எரித்த சாம்பலைக் கொண்டு சுவாமி படங்களுக்கு பொட்டு வைத்து வழிபட்டு வந்தால் சுவாமி படங்கள் எப்போது உயிரோட்டம் உள்ளதாக இருக்கும். வீட்டின் பூஜை அறையிலும் தர்ப்பை புல்லினை வைத்து வரலாம். இதனால் வீட்டில் தீயசக்திகள் எப்போதும் அண்டாமல் இருக்கும். தர்ப்பை புல் மீது வைக்கப்பட்ட சுவாமி படங்களுக்கு நாம் பூஜை செய்து, மந்திரங்கள் சொல்லும் போது அதன் சக்தி இரட்டிப்பாகும். அந்த மந்திரங்களின் சக்தி, சுவாமி படங்களுக்கு தொடர்ந்து உயிர்ப்பை ஏற்படுத்தி வைக்கும்.
No comments:
Post a Comment