குளித்தலை சிவாலயம்...
இந்த ஊரின் மஹிமைகள்..
கடம்பை, கடம்பந்துறை, கடம்பவனம், தட்சிணகாசி, குழித்தண்டலை, பிரமபுரம், சதுர்வேதபுரி, கந்தபுரம்
மூலவர்:
கடம்பவனேஸ்வரர், கடம்பவனநாதர், சுந்தரேசர், ஸௌந்தரர்
உற்சவர்:
சோமாஸ்கந்தர்
தாயார்:
முற்றாமுலையம்மை, பாலகுசாம்பிகை
உற்சவர் தாயார்:
ஸ்ரீமீனாட்சி
தல விருட்சம்:
கடம்பமரம்
தீர்த்தம்:
காவிரி, பிரம்மதீர்த்தம்
ஆகமம்:
காமிகம்
சிறப்பு திருவிழாக்கள்:
மாசிமாதம் 13 நாட்கள் பிரம்மோற்சவம்
தைப்பூசம் வைகாசி விசாகம் கந்த சஷ்டி பங்குனி உத்திரம் பிரதோசம்
மஹாசிவராத்திரி
குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. இத்தலத்தில் கடம்பம் எனும் மரம் அதிகமிருந்தமையால் கடம்பை, கடம்பந்துறை, கடம்பவனம் என்று அழைக்கப்பட்டிருந்தது.
சேரமகாசுரனிடத்திலிருந்து திருமால் வேதங்களை மீட்டற்குக் காரணமாகிய திருவருளைப்பெற்ற இடமாதலிற் சதுர்வேதபுரியென்றும்,
முருகவேள் பூசித்துப் பேறுபெற்றமையிற் கந்தபுரமென்றும் இது பெயர்பெறுகிறது,
பிரமதேவரால் வழிபட்டுத் திருக் கோயில் முதலியன அமைத்துத் திருத்தேர்விழாவும் நடத்தினதால் பிரமபுரமென்றும் அழைக்ப்படுகிறது. தட்சிணகாசி, குழித்தண்டலை என்று பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
இறைவன் கடம்ப மரத்தில் காட்சியளித்தமையால் கடம்பவனநாதர், கடம்பேசுவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
சப்த கன்னியர்கள் தங்கள் பிரம்மஹத்தி தோஷத்தினை போக்க இத்தல மூலவரை வழிபட்டுள்ளனர்.
வேதசன்மா என்ற ஓர் அந்தணர், தவம் புரிந்து, மதுரையில் நிகழ்ந்த திருமணக்கோலத்தை இத்தலத்தில் தரிசித்தார்.
அகத்தியமுனிவர், கன்வ முனிவர், மகாவிஷ்ணு, பிரம்மதேவர், முருகப்பெருமான் ஆகியோர் ஈசனை வழிபட்டு பேறுபெற்றார்கள் என்றும், கடம்பர் உலா என்னும் நூல் தெரிவிக்கிறது.
இத்திருக்கோயிலில், பிரமதேவர், சப்தமாதர்கள், அகத்திய முனிவர் முதலியவர்களுடைய திருவுருவங்கள் தனித்தனியே உள்ளன.
இப்பொழுது குழித்தலை, குளித்தலை என வழங்குவதுமாகிய இந்த ஊரில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீசுந்தரேசுவரரென்றும்,
அம்பிகையின் திருநாமம் ஸ்ரீமீனாட்சியென்றும், திரிவேணி என்றும் வழங்கப்படுகிறது.
கடம்பர்கோயிலிற் சிவபெருமான் திருமணக்கோலம் காட்டியதன் அறிகுறியாக இவ்வாலயத்தில் சிவன் பார்வதி திருக்கல்யாணம் செய்வது மரபு.
*மூன்று ஸ்தலங்கள்*
இந்த பகுதியில் மூன்று சிவத்தலங்கள் உண்டு.
அவை
காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். *காலையில்* குளித்தலை கடம்பவனேசுவரர், *மதியம்* ஐயர்மலை,
*மாலையில்* ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும்
*ஒரே நாளில்* வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில் இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு நலமடைகின்றனர்.
#அப்பர் பாடிய #தேவாரப்பதிகம்
முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்
அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங்
கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்
பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே
ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே
மறைகொண் டமனத் தானை மனத்துளே
நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை தீரத் தொழுமினே.
பார ணங்கி வணங்கிப் பணிசெய
நார ணன்பிர மன்னறி யாததோர்
கார ணன்கடம் பந்துறை மேவிய
ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே!!
அனைவரும் வருக..
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்...
No comments:
Post a Comment