Tuesday, September 2, 2025

தஞ்சை ஈச்சங்குடி காசிக்கு நிகரான வைரவன் கோயில்

*பைரவர் ஆலயங்கள்*

*காசிக்கு நிகரான*
*வைரவன் கோயில்* *காலபைரவர் தலம்*!
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5 கி.மீ. தொலைவில் வைரவன்கோயிலில் அமைந்துள்ள காலபைரவர் கோவில், காசி காலபைரவருக்கு இணையான தலமாகப் போற்றப்படுகின்றது. 

இத்தலத்தில் காலபைரவர் எழுந்தருளி இருப்பதின் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.

தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவது திருவையாறு. 

இங்கிருந்து சுவாமி மலைக்கு சிவபெருமான் புறப்பட்டார்.

‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசமாக பெறுவதற்காகத் தான், சிவபெருமான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். 

அவரோடு மற்ற தெய்வங்களும் புறப்பட்டார்கள். 

வழியில் வைரவன் கோவில் என்னும் இத்தலத்திற்கு வந்த போது, பைரவரிடம் அங்கேயே தங்கியிருந்து அருள்புரியும் படி சிவபெருமான் கட்டளையிட்டார். 

அதன்படி பைரவர், வைரவன் கோவில் தலத்தில் காவிரி நதியின் வடகரையில் தெற்கு நோக்கி அமர்ந்தார். 

பழமையான இந்த ஆலயத்தின் வலதுபுறம் ஒரு வாய்க்கால் உத்திரவாகினியாக ஓடுகிறது. 

பைரவர் நோக்கிய தெற்கு முகத்தில் மயானம் உள்ளது. 

இது காசிக்கு சமமான பெருமையைப் பெற்ற இடமாகும்.

காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை அம்சங்களையும் இவரும் கொண்டிருக்கிறார். 

இங்கு பைரவரை பிரதிஷ்டை செய்த ஈசன் தங்கிய இடம் ஈசன் குடியாகி, அதுவே ஈச்சங்குடியானது. 

தேவர்கள் நின்று வழிபட்ட இடம் தேவன்குடியானது. 

கணபதி பூஜித்த இடம் கணபதி அக்ரஹாரம் ஆனது. 

தேவி உமையாள் புரத்திலும், நந்தி மதகிலும், கங்கை கங்காபுரத்திலும் நின்று பைரவரை வழிபட்டார்கள் என்கிறது தலபுராணம்.

ஆலய அமைப்பு:

முன் முகப்பைத் தாண்டியதும் விசாலமான மகா மண்டபம் உள்ளது. 

நடுவே நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார். 

அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது. 

காசியில் உள்ள கால பைரவரின் அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக இங்குள்ள பைரவர் அருள்கிறார். 

இத்தனை பெருமைகள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை. 

சிவபெருமானால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட இத்தல கால பைரவருக்கு, ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் அர்த்த ஜாமத்தில் உலக நலன் கருதி சுவர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. 

அத்துடன் அன்று 
108 வலம்புரி சங்காபிஷேகமும் கலசாபிஷேகமும் நடக்கிறது. 

இந்த ஹோமத்தில் 
கலந்து கொண்டு அர்த்த ஜாமத்தில் காலபைரவரை வழிபட அஷ்டலட்சுமிகளின் ஆசியும், கால பைரவரின் வரங்களும் ஒருங்கே கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை.

மேலும் அஷ்டமி நாளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். 

மேலும், அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, வியாழக்கிழமை நாள்களில் உச்சிக்காலத்தில் வணங்குவது நல்ல பலனைத் தரும். 

ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தருகிறது. 

இந்தத் தலத்தில் நவகிரகங்களையும் தன் நெஞ்சுப் பகுதியில் தாங்கி இருக்கும் ஶ்ரீகாலபைரவரை பூஜிப்பது நவகிரக தோஷங்களின் நிவர்த்திக்காக தனித்தனியே நவகிரகங்களை பூஜிப்பதற்கு நிகரானது. 

இங்கு ஶ்ரீகாலபைரவரை பூஜை செய்து வணங்கினால், நவகிரகங்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படும்.

ராகுகால நேரத்தில் பைரவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, அவரை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். 

வர வேண்டிய பணம் வந்து சேரும். தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை உருவாகும். 

சனியின் தாக்கம் தீரும். கடுமையான கர்மவினைகள் தீர்ந்து விடும். 

திருமண தடைகள் விலகும். 

புத்திரபாக்கியம் கிட்டும். பைரவரை பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் தீரும்.

பஞ்சதீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பசு- நெய் ஆகியவை ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். 

ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். 

இந்த ஆலயம் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், ஞாயிறு மட்டும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய அமைவிடம் 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு- கும்பகோணம் சாலையில் திருவையாறில் இருந்து 
5 கி.மீ. தொலைவில் உள்ளது வைரவன் கோவில். 

இந்த சிற்றூரில் சாலை ஓரத்திலேயே ஆலயம் இருக்கிறது. 


திருமால்பூர் மணிகண்டீசுவரர்

*திருமால்பூர் மணிகண்டீசுவரர் திருக்கோவில்*
*வேறு எங்குமே காண இயலாத ....ஈசனை திருமால் வணங்கி வழிபட்டு நிற்கும் அபூர்வ காட்சி*

*பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம் *

காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி. 

திருமால் வழிபட்டு பேறு பெற்ற தலம் என்பதால், இத்தலம் 'திருமாற்பேறு' என்றானது. அதுவே மருவி நாளடைவில் திருமால்பூர் என்றானது.

திருமால், சிவபெருமானிடமிருந்து சக்கராயுதம் பெறுவதற்காக இத்தலத்திற்கு வந்து, சக்கர தீர்த்தம் ஏற்படுத்தி, பாசுபத விரதம் பூண்டு, திருநீற்றை உடல் முழுவதும் பூசி ருத்ராட்சம் அணிந்து, அம்பிகை பூஜித்த ஈசனை முறைப்படி பூஜை செய்து வந்தார்.

தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு, ஆயிரம் நாமங்கள் சொல்லி ஈசனை அர்ச்சித்து வந்தார். ஒருநாள் பூஜையின்போது, ஈசனின் திருவிளையாடலால் ஒரு மலர் குறைந்தது..வழிபாட்டில் குறையேற்படலாகாது என்றெண்ணி, தன் கண்ணைப் பறித்து, கண் மலரால் ஈசனை வழிபாடு செய்தார். 

திருமாலின் ஆழ்ந்த பக்திக்கு ஈசன் உளம் மகிழ்ந்து காட்சி கொடுத்தார். தனக்கு காட்சி தந்த சிவபெருமானை மும்முறை வலம்வந்து வணங்கினார் திருமால். 

பின்னர் ஈசன் திருமாலைப் பார்த்து, 'நாராயணரே! தாமரை மலருக்காக உம் கண்ணை எடுத்து அர்ச்சித்தமையால், உள்ளம் மகிழ்ந்து உமக்கு தேன் மருவிய தாமரை மலர்க்கண்ணை அளித்தோம். 

இனி நீ தாமரைக்கண்ணன், பதுமாஷன் என்று பெயர்பெற்று விளங்குவாய். நீ பேறு பெற்றதால், இத்தலம் உன் திருப்பெயரால் 'திருமாற்பேறு' என விளங்கப் பெறும். இச்சக்கரத்தால் வெல்லற்கரிய பகைவரையும் வெல்க' என்று கூறி சுதர்சன சக்கரம் வழங்கி ஆசீர்வதித்தார்.

பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம் 

மூவருக்கு தீபாராதனை காட்டியபின், எதிரில் இருக்கும் திருமாலுக்கும் தீபாராதனை காட்டப்படுவது சிறப்பாகும்.

 திருமால் பூஜித்த காரணத்தால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி, சடாரி சாற்றப்படுகிறது. இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

 சிவன் கோவில் என்றாலும், பெருமாள் அருள் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்சவ காலத்தில் கருடசேவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம் என்பது வியப்புக்குரியதாகும். 

இத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியவர்களுக்கும் முக்தியளிக்க வேண்டும் எனவும், 

இங்கு வழிபட்டால் அனைத்துக் கோயில்களிலுள்ள லிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டும் எனவும் வரம் பெற்றார். சிவன் மகிழ்ந்து திருமால் கேட்ட வரம் தந்தருளியதாக வரலாறு.

பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் சுயம்புவாக அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பிராது கட்டினால் வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்.

*பிராது கட்டினால் வேண்டுதலை நிறைவேற்றும் முருகப்பெருமான்*
விருத்தாச்சலம் அருகே மணவாளநல்லூரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் கோவில். இத்தலத்தின் நாதன் முருகப்பெருமான் தனது பக்தர்களுக்கு, மகா நீதிபதியாய் இருந்து நல்ல தீர்ப்பும் நல்வாழ்வும் வழங்கி அருள்வதாக ஐதீகம். இதற்காக இத்தலத்தில் பிராது கட்டுதல் என்ற ஒரு வழிபாடு இருக்கிறது. பிராது கட்டுவதற்காக கோவில் பிரகாரத்தில் முனீஸ்வரன் சன்னதி அருகே ஒரு இடமும் இருக்கிறது.

அதாவது மேலதிகாரிகளுக்கு நாம் எழுதும் ஒரு முறையீட்டு மனுவின் நடைமுறை போன்று இந்த நேர்த்திக்கடன் அமைந்துள்ளது. கோவில் அலுவலகத்தில் கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.... நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன், என் பெயர் இது... என்பன போன்ற முழுமையான விவரங்களை எழுதி, தனது குறை, கோரிக்கைகள் என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். பின்பு அதை கொளஞ்சியப்பர் சன்னிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் கொடுக்க வேண்டும்.

பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சன்னிதியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள வேல் அல்லது சூலத்தில் கட்டவேண்டும். நியாயமான கோரிக்கைகளை முருகப்பெருமான் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. நாம் எந்த ஊரில் இருந்து வருகிறோமோ அந்த இடத்திற்கும், கோவிலுக்கும் இடையே உள்ள தூரத்தை கணக்கிட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பக்தர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு, மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து, ‘‘இந்த தேதியில் நான் வைத்த பிராது கட்டுதல் வேண்டுதல் நிறைவேறியதால், அதை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்’’ என கூறி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

குழந்தை வரம் கிடைக்க, கடன் தொல்லை தீர, திருடு போன பொருள் மற்றும் ஏமாற்றப்பட்ட பணம் கிடைக்க, வேலை மாறுதல் கிடைக்க, குடும்ப கஷ்டம் தீர, பிரிந்திருக்கும் கணவன் - மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் விலக என பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து பிராது கட்டுகின்றனர்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, September 1, 2025

நரசிம்மரும், சுவாதி நட்சத்திரமும்

நரசிம்மரும், சுவாதி நட்சத்திரமும்
நரசிம்மரை வழிபட்டால் பரமேஸ்வரன்-பார்வதியை வழிபட்டது போன்ற உயர்ந்த பலன் கிடைக்கிறது.

சுவாதி நட்சத்திரம் வாயுவின் நட்சத்திரம். வாயுதேவர் எவ்வளவு வேகத்தில் வருகிறாரோ அதே வாயுவேகத்தில் வந்து நம்மைப் பாதுகாத்து அருள் புரிவார் இந்த நரசிம்மர்.

சுவாதி நட்சத்திரத்திற்கு தோஷம் கிடையாது.

நரசிம்மரை வழிபடுவதினால் ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்சினைகள் நீங்கி நன்மை உண்டாகும். மேலும் பில்லி, சூனியம், எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை தொடர்ந்து வழிபாடு செய்தால் “ருண விமோசனம்’ என்னும் கடன் தொல்லைகள் நீங்கும் பேறு ஏற்படும்; செல்வச் செழிப்பு உண்டாகும். வியாபாரம் அபிவிருத்தியாகும்.

நரசிம்மர் அவதாரம் எடுத்தது மாலை வேளையில் (பிரதோஷ காலம்). ஆதலால் சுவாதி நட்சத்திரத்தில், மாலை வேளையில் நரசிம்மரை வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

தஞ்சை ஈச்சங்குடி காசிக்கு நிகரான வைரவன் கோயில்

*பைரவர் ஆலயங்கள்* *காசிக்கு நிகரான* *வைரவன் கோயில்* *காலபைரவர் தலம்*! தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5...