Monday, January 5, 2026

ஸ்ரீபஞ்சநதபாவா ஸ்வாமிகளின் நிர்விகல்ப ஜீவ சமாதி



ஸ்ரீஅமிர்தவல்லி  சமேத ஸ்ரீசிதானந்தேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் .

திருக்கோயிலை நோக்கிக் கைகூப்பி - கண்களை மூடித்தொழுதார் அமைச்சர். 

சில நொடிகள் நகர்ந்தன. கண் விழித்த அமைச்சருக்கு பெரும் அதிர்ச்சி.

காண்பது கனவா!.. இதுவரைக்கும் காணப்படாத இவர் - இப்போது எப்படித் தோன்றினார்?.. எங்கிருந்து வந்தார்?..

மழை நீர் தழுவிச் செல்லும் வடவாற்றின் தென்கரைப் படித்துறையில், மழையில் நனைந்தபடி தவக்கோலத்தில் - சிவயோகத்தில் அமர்ந்திருந்த பெருந்துறவி ஒருவரைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.

வடவாறு வற்றினாலும் - வற்றாத கருணை வெள்ளத்தினை அவருடைய திருமுகத்தில் கண்டனர்.

அமைச்சரின் முகக்குறிப்பினை உணர்ந்த பணியாளர்கள் -  பெரிய குடை ஒன்றினை மழையில் நனையும் துறவிக்கு ஆதரவாகப் பிடித்தனர். தவநிலை தடைப்பட்டது. 

துறவியார் மெல்ல கண் விழித்தார். அமைச்சரும் மற்றவர்களும் அவருடைய பாதம் தொட்டு வணங்கினார்கள். துறவியார் திருவாய் மலர்ந்தருளினார்.

''...அஞ்ச வேண்டாம்!... எந்தத் தீங்கும் நேராது. சிவம் துணைக்கு வரும்!... உனக்கும் மாலை வரும்!...'' - மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார்.

துறவியாரின் - திருவாக்கினால், அமைச்சரின் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.

ஓடக்கோலுடன் தயாராக நின்ற ஓடக்காரர்கள் கட்டுத் தறியிலிருந்து கயிறை அவிழ்த்தனர். ஓடங்கள் பயணித்தன.

வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி - என  வெள்ளப் பெருக்கில் ததும்பிய ஆறுகளைப் பரிசலில் கடந்து,

பள்ளிஅக்ரஹாரம், சக்ர சாமந்தம், ராஜேந்திரம் ஆர்க்காடு, வேலூர், அம்மன் பேட்டை, அரசூர், கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, திருவையாறு, விளாங்குடி, திருமானூர் - என,


ஊர் மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆதரவாக ஆறுதல் கூறி - ஆங்காங்கே  அவர்களைக் கொண்டே ஆற்றின் கரைகளை சீர்படுத்தி -

அவசர காலத்தில், உணவு, உறையுள், மருத்துவம், பாதுகாப்பு -  என , மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயிர் விளைந்து செழித்த நிலங்களுக்குமாக, எல்லா ஏற்பாடுகளும் செம்மையாகச் செய்யப்பட்டன. 

அரசருக்கு செய்தி அறிவிக்க அவ்வப்போது -  ஓலைதாங்கிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சில தினங்களாயின. இதற்குள் மழையும் ஓய்ந்தது. கரு மேகங்களைக் கடந்து கதிரவன் முகங்காட்டினான். சொன்னார் - '' அதையும் செம்மையாய் செய்தீர்கள் அல்லவா!...''

பெருமதிப்புடைய நவரத்ன மாலையினை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

''செய்ததெல்லாம் குருநாதர்!..''

அன்று வடவாற்றங்கரையில் நடந்ததை அமைச்சர் விவரித்தார்.

அரசரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். வடவாற்றின் படித்துறையில் அதே நிலையில் குருநாதரைக் கண்டு தொழுது வணங்கினர்
அனைவரையும் வாழ்த்தியருளினார் குருநாதர். மக்கள் வெள்ளமென வந்து அடி பணிந்தனர். அந்த மகானின் பார்வையினால் அனைவருக்கும் நலம் விளைந்தது.

மக்கள் அந்த மகானை '' பாவா '' என்று அன்புடன் அழைத்து அகமகிழ்ந்தனர்.

பின்னர் '' பஞ்சநத பாவா '' என்று அறியப்பட்டு,   பலகாலம் வீற்றிருந்தார்.

கலக்கமுற்றோருக்கும் கவலையுற்றோருக்கும் கதியற்றோருக்கும் - கரை காட்டும்  கலங்கரை விளக்காக, கருணையின் விளக்காகத் திகழ்ந்தார் மகான் பஞ்சநத பாவா.

அவரை அண்டினோர் எல்லாரும் அல்லல் தீர்ந்து - ஆனந்த வசப்பட்டனர்.

அனைவருக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்த - அந்த ஞானஒளியும் தன்னை ஒளித்துக் கொள்ளும் நாள் வந்தது. கண்ணீர் வெள்ளத்தில் மக்கள் வெள்ளம்.

அனைவருக்கும் நல்லாசி சுரந்த கருணையின் ஊற்று நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்தது.

அப்படி ஆழ்ந்த நாள் - மாசி மாதத்தின் அமாவாசை தினம். 

மகாசிவராத்திரியன்று தவநிலையில் -  சிவமாகப் பொலிந்த தவம், பொழுது விடிந்த வேளையில்,  விடிந்தது பொழுது என்று சிவநிலையினை எய்தியது.

நிர்விகல்ப சமாதியை நிலைப்படுத்தி சிவலிங்கம்  நிறுவினர்.பூமிக்குக் கீழ் 15 அடி ஆழத்தில் உள்ள நிர்விகல்ப நிலை
மாசி அமாவாசை தினம். நம் குருநாதருக்கு ஆராதனை நாள்.

தஞ்சை மாநகரின்  ஒருபகுதியாக விளங்குவது வசிஷ்ட மகரிஷி சிவபூஜை நிகழ்த்திய  கரந்தை எனும் கரந்தட்டாங்குடி.

பெருமை மிகு கரந்தையில் பழைய திருவையாறு சாலையில் வடவாற்றின் கரையில் அமைந்துள்ளது - ஸ்ரீ பஞ்சநதபாவா ஸ்வாமிகளின்  அதிஷ்டானம்.

ஸ்ரீபஞ்சநதபாவா ஸ்வாமிகளின் நிர்விகல்ப சமாதி - பூமிக்குக் கீழ் பதினைந்தடி ஆழத்தில் சிறு குகை போல அமைந்துள்ளது.

தரை தளத்தில் இருந்து கீழே செல்ல படிக்கட்டுகள் உள்ளன.

கீழே இறங்கியதும்  - அங்கே நிற்கலாம்.

சற்று முன்னே செல்ல வேண்டுமாயின் - தலை குனிந்தபடி செல்லவேண்டும்.

இன்னும் சற்று முன் செல்ல வேண்டுமாயின் - உடலை வளைத்து குனிந்தபடி செல்லவேண்டும்.

மூல லிங்கத்தின் அருகின் செல்ல வேண்டுமாயின் - மண்டியிட்டவாறு தான்  செல்லமுடியும்.

மூலலிங்கத்தின் முன்பாக சற்று நேரம் அமர்ந்திருந்தாலே போதும். மனம் தானாகவே அமைதி அடையும்.  நிஷ்டையும் கை கூடும்.

அதிஷ்டான வளாகத்தில் - ''குருவே சரணம்!..'' என்று தஞ்சம் அடைந்த அணுக்கத் தொண்டர்களும் சிவகதியடைந்து நிலை கொண்டுள்ளனர்.மேத ஸ்ரீ சிதானந்தேஸ்வரர் திருக்கோயிலும் உள்ளன.

அதிஷ்டானத்தில் -   குருபூஜை  மாசி அமாவாசை அன்று வெகுசிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது.

மடத்தின் நிர்வாகிகளாலும் கோரக்கர் வழிபாட்டு மன்றம், குருவார வழிபாட்டு மன்ற அன்பர்களாலும் மற்றும் இறையன்பர்களாலும் - சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகளும் மதியம் விரிவான அன்னதானமும் நிகழ்கின்றது.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தைக்கு நகர பேருந்துகள்  இயங்குகின்றன. கரந்தைத் தமிழ்ச் சங்கம் அருகே இறங்கி - பாவாசாமி மடம் என்று கேட்டால் - குரு அருளால் - யாரும் வழிகாட்டுவார்கள்.

ஸ்ரீபாவாசாமி மடம் , கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தின்  - பின்புறம் பழைய திருவையாறு பூக்குளம் சாலையில், வடவாற்றின் தென்கரையில் உள்ளது. கரந்தையிலிருந்து ஆட்டோவில் எளிதாக சென்றடையலாம்.


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, January 4, 2026

சிவக்கொழுந்தீசர் திருச்சத்தி முற்றம் தஞ்சாவூர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான
#திருச்சத்திமுற்றம் என்ற 
#திருச்சத்திமுத்தம்
#தழுவக்குழைந்தநாதர்
(சிவக்கொழுந்தீசர்) திருக்கோயில் வரலாறு:

இறைவனை உமை வழிபட்டுத் தழுவி முத்தமிட்டதால் 'சத்தி முத்தம்' என்று வழங்குகிறது.

திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீசர். இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற வேறு பெயரும் இருக்கிறது. தாயார் பெரியநாயகி.இச்சிவத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சத்தி முற்றம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 22ஆவது சிவத்தலமாகும்.

மூலவர்:சிவக்கொழுந்தீசர், தழுவக்குழைந்த நாதர்
அம்மன்:பெரியநாயகி
தீர்த்தம்:சூல தீர்த்தம்
புராண பெயர்:சத்திமுத்தம், திருச்சத்திமுத்தம்
ஊர்:திருச்சத்தி முற்றம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்:
வெம்மை நமன்தமர் மிக்குவிரவி விழுப்பதன்முன் இம்மைஉன் தாள்என்றன் நெஞ்சத்து எழுதிவை யீங்கிகழில் அம்மை அடியேற்கு அருளுதி என்பதிங்கு யாரறிவார் செம்மை தருசத்தி முற்றத்து உறையுஞ் சிவக்கொழுந்தே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 22வது தலம்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 85 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:

பெரிய கோயில், கிழக்கு நோக்கியது. வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடைது. வெளிப் பிராகாரம் பெரியது. இரண்டாங் கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சன்னதிகள் உள்ளன. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியுள்ளது. நடராச சபை உள்ளது. மூல வாயிலின் முன்னால் ஒருபுறம் சோமாஸ்கந்தரும், மருபுறம் சத்தி, முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தியும் உள்ளனர். உட்பிராகாரத்தில் தல விநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகம், கஜலட்சுமி சன்னதிகளும் உள்ளன.

தலபெருமை:

இவ்வாலயத்தில் உள்ள சிவனை பார்வதிதேவி

பூஜை செய்து தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் “திருச்சத்திமுத்தம்’ என பெயர் பெற்றது. மூலஸ்தானத்திற்கு அருகில் அம்மன் சிவலிங்கத்தை கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலத்தை இன்றும் தரிசிக்கலாம். சுவாமி சன்னதியின் வாசலின் வட புறத்தில் சக்தி முத்தமளிக்கும் தல ஐதிக மூர்த்தியும் உள்ளனர். இவ்வைதீகச் சிற்பத்தின் பின்புறம் அம்மன் ஒரு காலில் நின்று தவம் செய்யும் காட்சியையும் காணலாம். காஞ்சியில் அம்பிகை இறைவனைத் தழுவியிருப்பது போலவே இத்தலத்திலும் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

இங்கு பார்வதி, அகத்தியர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசருக்கு இறைவன் தன் திருவடி தரிசனம் தந்த தலம். இத்தலத்தில் அமாவாசை, பவுர்ணமி வழிபாடு மிகவும் சிறப்பாகும்.

தல வரலாறு:

பக்தியே முக்திக்கு வித்து’ என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட சிவ, பார்வதி விரும்பினர். இதற்காக சக்தி, காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணி சூல தீர்த்தத்தின் அருகே அமைந்துள்ள சக்திமுற்றத்தில் இறைவனை பூஜை செய்து வந்தாள். சிவன் காட்சி தர நீண்ட நாட்கள் ஆனது. ஆனால் பார்வதி உறுதி கலையாமல், தன் பக்தி நிலையானது என்று உறுதி செய்யும் வகையில் ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் மேற்கொண்டாள்.

சக்தியை சோதிக்க விரும்பி ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்தார் சிவன். தீப்பிழம்பாக காட்சி தந்தாலும், அதில் ஈசன் இருப்பதை உணர்ந்த பார்வதி அந்த நெருப்பை கட்டித்தழுவினாள். சிவன் குளிர்ந்து போனார். குடும்பத்தில் பிரச்னைகள் நெருப்பென தாக்கினாலும், அதை தம்பதியர் தங்கள் பரஸ்பர அன்பினால் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே இத்தல வரலாறு தம்பதிகளுக்கு காட்டுகிறது. 

அப்பர், தனக்குத் தருவடி தீட்சையருளுமாறு வேண்டிப்பாட, இறைவன் திருநல்லூருக்கு வருமாறு அருளிய சிறப்புடைய பதி. இவ்வாறு அருளிய மூர்த்தியே இங்கு மூலவராக உள்ளார்.

மூலவர் பக்கத்தில் தலவரலாற்றுச் சிறப்புடைய - இறைவி சிவலிங்கத்தைக் கட்டித் தழுவி முத்தமிட்ட திருக்கோல உருவத்தைக் கண்டுத் தரிசிக்கலாம்.

 மூல வாயிலின் முன்னால் ஒருபுறத்தில், சத்தி முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தி உள்ளார்.

 சம்பந்தர் இத்தலத்திலிருந்து இறைவன் அருளிய முத்துப்பந்தர் நிழலில் திருப்பட்டீச்சுரம் சென்று வணங்கிப் பதிகம் பாடினார்.

 கல்வெட்டில் இறைவன் "திருச்சத்தி முற்றம் உடையர், திருச்சத்திவனப் பெருமாள்" எனக் குறிக்கப்படுகிறார்.

 அக்காலத்தில் கோயில் நிலங்களில் வரிகளை வசூலிக்கும் விதிமுறைகளைப் பற்றியும், விளக்கெரிக்க காசும், ஆடும் அளித்ததையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

மூலவர் திருமேனியில் தீச்சுடர்கள் தெரிகின்றன.
தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன.

செங்கற்களால் கட்டபட்டிருந்த இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியவர் சோழ ராஜ வம்சத்தைச் சேர்ந்த செம்பியம் மாதேவி ஆவார். முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

கோவில் அமைப்பு: 

இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது. கோபுர வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். முதல் கோபுர வாயிலைக் கடந்தால் பெரிய வெளிப் பிரகாரத்தைக் காணலாம். அடுத்துள்ள இரண்டாங் கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள்ளன. மூலவர் சிவக்கொழுந்தீசர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி கருவறையில் காட்சி கொடுக்கிறார். சுவாமி சன்னதிப் பிரகாரத்தில் உள்ள பைரவர் சந்நிதியில் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். அன்னை பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். நடராஜர் மற்றும் சரபேஸ்வரர் சந்நிதிகளும் பார்க்க வேண்டியவை. உட் பிராகாரத்தில் தலவிநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன.

முருகப் பெருமான் ஆறு திருமுகமும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. 

நாரைவிடு தூது ' பாடிய சத்திமுற்றுப்புலவர் இவ்வூரினரே.)

அமைவிடம் மாநிலம் : 

தமிழ் நாடு கும்பகோணம் - ஆவூர் நகரப் பேருந்துகளில் எளிதில் இத்தலத்திற்கு சொல்லலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, January 3, 2026

அருள்மிகு பாலாம்பிகை உடனுறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில்,மாந்துறை,லால்குடி வட்டம்,திருச்சி மாவட்டம் - 621703.

அருள்மிகு பாலாம்பிகை உடனுறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில்,
மாந்துறை,
லால்குடி வட்டம்,
திருச்சி மாவட்டம் - 621703.                    

*மூலவர்:
ஆம்ரவனேஸ்வரர்/மிருகண்டீஸ்வரர்

*தாயார்:
வாலாம்பிகை/அழகம்மை

*தல விருட்சம்:
மாமரம்

*தீர்த்தம்:
காவேரி, காயத்ரி தீர்த்தம்     

*தேவாரப்பாடல் பெற்ற தலம். 
பாடியவர்:திருஞானசம்பந்தர்.  

*நாம் காணும் இத்தலம் திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியிலுள்ள பாடல் பெற்ற வடகரை மாந்துறை. (தென்கரை மாந்துறை, கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில்  உள்ள ஒரு தேவார வைப்புத் தலமாகும்.)                 
*தல வரலாறு
முனிவர் ஒருவர் தாம் சிவனுக்குச் செய்த தவறால், இத்தலத்தில் மான்களாகப் பிறந்து வந்த ஒரு அசுர தம்பதியினருக்கு மகனாக அவதரித்தார். ஒரு முறை இரை தேடச் சென்ற மான்கள் தமக்கு சாப விமோசனம் வேண்டவே, சிவன் அம்பால் அவற்றை வீழ்த்தி முக்தி அளித்தார். தாய் தந்தையரைக் காணாத பிஞ்சு மான் கலங்கி நிற்க, அம்மையப்பனே தாய்-தந்தை மான்களாக வடிவெடுத்து சிறு மானை ஆற்றுப்படுத்த, அன்னையின் பாலாம் அமுதுண்ட பிஞ்சு மான் ஞானம் அடைந்தது.  

*மான்களுக்கு முக்தி அளித்தமையால், மான்- உறை என்பதே மாந்துறையானது என்றும், முன்னர் மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்பட்டமையாலேயே "மா-உறை" இடம் எனக் கூறப்பட்டுப் பின்னர் மாந்துறை என வழக்கில் மாறியது என்பர். இந்தக் கோயிலின் தல மரம் மாமரமே என்பது குறிப்பிடத்தக்கது. 

*இக்கோயிலின் மூலவர் ஆம்ரனேஸ்வரர் எனப்படுகிறார் (ஆம்- என்பது வடமொழியில் மாங்கனியைக் குறிப்பது). 

*மிருகண்டு முனிவர் இங்கு வந்து வழிபட்டமையால் மூலவருக்குவருக்கு மிருகண்டீஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. 

*அம்மனின் பெயர் வாலாம்பிகா (தமிழில் அழகம்மை) 

*சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளி,வெப்பம் ஆகியவற்றை அவனது மனைவி சமிக்ஞையால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இதனால்  சமிக்ஞை தனது நிழலுக்கு ஒரு வடிவம் கொடுத்து, அதற்கு சாயாதேவி எனப்பெயரிட்டாள். தனக்குப் பதிலாக சூரியனுக்குப் பணிவிடை செய்யுமாறு கூறிவிட்டு, சமிக்ஞை வேறு இடம் சென்றாள்.  ஆள்மாறாட்டம் குறித்த உண்மையை அறிந்த சூரியன்,
சமிக்ஞை  பெண் குதிரை வடிவெடுத்து, ஆம்ரவனப் பகுதியில் சிவவழிபாடு செய்வதாக அறிந்து   தானும் குதிரை வடிவம் பூண்டு சமிக்ஞையை சந்தித்து அவளை
ஏற்று, ஆம்ரவன நாதரைப் பூஜித்தான்.  
உக்கிரம் குறைந்த சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பத்தைத்தாங்கும் சக்தியை சமிக்ஞைக்கு ஆம்ரவனேசுவரர் வழங்கினார். 

*பங்குனி மாதத்தின் முதல் 3 நாட்களில் சூரிய ஒளி சுவாமி மீது படும் அரிய நிகழ்வு சூரியபூஜையாக நடத்தப்பட்டு வருகிறது.    

*நவக்கிரகங்களிலுள்ள சூரியன்,  சமுக்ஞை (சமுக்யாதேவி), சாயா தேவியுடன் தம்பதி சமேதராய் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.மேலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தவாறும் அமைந்துள்ளன. 

 *திருவண்ணாமலையில் சிவனது முடியினைக் கண்டுவிட்டதாக பொய்கூறி சாபம் பெற்ற பிரம்மன் தன் சாபம் நீங்க வழிபட்ட தலமிது.       

*மிருகண்டு முனிவர் தவமிருந்து மார்க்கண்டேயனைப் பெற்றது இங்குதான்.  

*முனிவர் ககோளரின் மகன் மருதாந்தகன் சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தவன். அவனுக்குத் அந்நாட்டு அரசன்  தனது அவையில் மந்திரி பதவி அளித்தார் . அப்போது மன்னிக்க முடியாத தோஷத்தை செய்த மருதாந்தகன் தனது தவறுக்குப் பரிகாரம் செய்ய முற்பட்டான்.  
இரும்பால் உருவான கருப்பு மணிகளை மாலையாக கோர்த்து,  கழுத்தில் கட்டியவாறு பல திருத்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரையாகச் சென்று, 
எந்த இடத்தில்  இரும்பு மணிகள் இரத்தினக் கற்களாக மாறுகின்றனவோ, அந்தப் பகுதியில் சாமவிமோசனம் கிடைக்கும் என முனிவர்கள் தெரிவித்தனர்.  
அவன் ஆம்ரவனம் சென்ற போது இரும்புமணிகள் இரத்தினங்களாக மாறின.
இங்கு அவனக்கு சாபவிமோசனம் கிடைத்தது.      

*நெறி தவறித் தவறான வழியில் சென்ற ககோளரின் மனைவி லீலாவதியைக் கருப்பு ஆடை தரித்து, தலங்களில் புனித நீராடிவழிபடுமாறு தவசிகள் அறிவுரை வழங்கினர். முடிவில் ஆம்ரவனத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நீராடி, ஈசனை வழிபட்டாள் லீலாவதி. 
அங்காரக சதுர்த்தி நாளில் ஜைமினி என்ற முனிவர் தனது கரத்திலுள்ள கலசத்தில் பிரம்மதீர்த்ததிலிருந்து நீர் எடுத்து அபிஷேகம் செய்ய முற்பட்ட போது, லீலாவதியின்  கருப்பு ஆடை வெண்பட்டாக மாறியது. இங்கு
லீலாவதி  சாப விமோசனம் அடைந்தாள். 

*கௌதமர் வடிவில் அகலிகையை இந்திரன் தீண்டியதால் கௌதமர் விட்ட சாபதோஷம் நீங்கியது இங்குதான். 

*ஆதிசங்கரர் வழிபட்டது இந்தத்தலமாகும்.    

*புத்திரபாக்கியம் அருளும் கோயில்:
ஸ்வேதகேது என்ற அரசன் சிறந்த சிவபக்தன் ஆவான்.  அவனுக்கு புத்திரப் பாக்கியம் ஏற்படவில்லை. அரசனின் கனவில் இறைவன் காட்சியளித்து ஆம்ரவனத்தில் பெரிய திருக்கோயிலை உருவாக்குமாறு  கட்டளையிட்டார். அவ்வாறே ஸ்வேதகேதுவும்   பிரம்மாண்டமான கோயிலை எழுப்பி குடமுழுக்கு விழாவையும் நடத்தினான். இறையருளால் அவனக்கு ஒரு புத்திரன் பிறந்தான். எனவே குழந்தைபேறு இல்லாதவர்கள்  இக்கோயிலில் வணங்க குழந்தை பேறு ஏற்படும்.                   

*இது மூலம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பரிகாரத் தலமாதலால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இத்திருக்கோயிலில்  ஆம்ரவனேசுவரரை வணங்கியும்,  மூலம் நட்சத்திரத்தன்று பரிகார ஹோமம் செய்வதும் உரிய பலன்களைப் பெறலாம்.

 *குழந்தைகளுக்கான பாலதோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இத்திருக்கோயில் விளங்குகிறது. பாலதோஷத்தில் கஷ்டப்படும் குழந்தைகள் இக்கோயிலில் பாலாம்பிகை அம்மனுக்கு அர்ச்சனை செய்து, அபிஷேக தீர்த்தத்தை பருகி வர பாலதோஷம் விலகும். 

*இக்கோயிலை ஒட்டி கிராமத்துத் காவல் தெய்வமான கருப்பண்ணசாமியின் பூசையிடமும் அமைந்துள்ளது.    

*மாந்துறை திருச்சிராப்பள்ளி - லால்குடி பேருந்துத் தடத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். இது லால்குடியிலிருந்து மேற்காக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சி, லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் இருந்து பேருந்து மூலம் செல்ல வசதி கொண்டுள்ளது.                

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

ஆருத்ரா நாயகனின் அற்புதப்பஞ்ச சபைகள்..

#ஆருத்ரா_நாயகனின்_அற்புதப்_பஞ்ச #சபைகள் - நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்
#சிவபெருமானின் திருநடனம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிதம்பரம். ஆனால், ஈசன் தில்லையில் மட்டுமன்றி ஐந்து வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு உலோக சபைகளில், வெவ்வேறு தாண்டவங்களை ஆடி அருள்பாலிக்கிறார்.

அந்த "பஞ்ச சபைகளின்" சிறப்புகளைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்! 

1️⃣ #பொற்சபை - #சிதம்பரம் (ஆனந்த தாண்டவம்) 
தலம்: சிதம்பரம் நடராஜர் கோயில்.

வித்தியாசம்: இங்கு ஈசன் இடது காலைத் தூக்கி "ஆனந்த தாண்டவம்" ஆடுகிறார்.

சிறப்பு: பஞ்சபூதங்களில் இது ஆகாயத் தலம். பொற்கூரையில் உள்ள 21,600 தங்கத் தகடுகள் மனிதனின் ஒரு நாள் சுவாசத்தைக் குறிக்கின்றன. இங்குள்ள 'சிதம்பர ரகசியம்' பிரபஞ்சத்தின் சூட்சுமத்தை விளக்குகிறது.

2️⃣ #வெள்ளி_சபை - மதுரை (கால் மாறி ஆடிய தாண்டவம்) 👣
தலம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.

வித்தியாசம்: மற்ற இடங்களில் இடது காலைத் தூக்கி ஆடும் ஈசன், பக்தன் ராஜசேகர பாண்டியனின் வேண்டுதலுக்காக இங்கே வலது காலைத் தூக்கி ஆடுகிறார்.

சிறப்பு: உலகிலேயே வலது காலைத் தூக்கி ஆடும் நடராஜரை இங்கே மட்டுமே தரிசிக்க முடியும்.

3️⃣ #ரத்தின_சபை - திருவாலங்காடு (ஊர்த்துவத் தாண்டவம்) 💎
தலம்: திருவள்ளூர் அருகே உள்ள வடாரண்யேஸ்வரர் கோயில்.

வித்தியாசம்: காளியுடன் போட்டியிட்டு ஆடும்போது, தன் காதணியைக் கீழே விழச் செய்து, அதைத் தன் இடது காலால் எடுத்து மீண்டும் காதில் மாட்டும் "ஊர்த்துவத் தாண்டவம்" (காலை செங்குத்தாக உயர்த்தி ஆடுதல்) ஆடுகிறார்.

சிறப்பு: #காரைக்கால்_அம்மையார் தலையால் நடந்து வந்து ஈசனின் திருவடி நிழலை அடைந்த புண்ணிய பூமி இது.

4️⃣ #தாமிர_சபை - திருநெல்வேலி (முனி தாண்டவம்) 
தலம்: திருநெல்வேலி நெெல்லையப்பர் கோயில்.

வித்தியாசம்: இங்கே இறைவன் "முனி தாண்டவம்" புரிகிறார். தாமிர தகடுகளால் வேயப்பட்ட இந்த சபை சிற்பக் கலையின் உச்சம்.

சிறப்பு: இந்த சபையில் உள்ள மரவேலைப்பாடுகள் கண்கொள்ளாக் காட்சி. இசைத் தூண்கள் கொண்ட அற்புதமான தலம் இது.

5️⃣ #சித்திர_சபை - குற்றாலம் (திரிபுர தாண்டவம்) 
தலம்: குற்றாலம் குற்றாலநாதர் கோயில்.

வித்தியாசம்: இங்கு இறைவன் சிலையாக இல்லை! மாறாக, மூலிகைகளால் வரையப்பட்ட பிரம்மாண்டமான ஓவியமாக (Fresco Paintings) காட்சியளிக்கிறார்.

சிறப்பு: இது திரிபுர தாண்டவம் புரிந்த இடமாகும். இயற்கை எழில் சூழ்ந்த அருவிக்கரையில் அமைந்த இந்த சபை மனதிற்குப் பேரமைதியைத் தரும்.

ஏன் இந்த பஞ்ச சபைகளைத் தரிசிக்க வேண்டும்? சிவபெருமானின் இந்த ஐந்து சபைகளும் நம் உடலின் ஆதாரங்களையும், பிரபஞ்சத்தின் பஞ்ச பூத தத்துவங்களையும் உள்ளடக்கியவை. #மார்கழி_ஆருத்ரா_தரிசனம் பார்ப்பதே கோடி புண்ணியம் தரும்.

மற்றும்  சிவபுண்ணியம் பல பெறுங்கள்!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, January 2, 2026

மங்கலம் தரும் மார்கழி திருவாதிரை விழா

*திருவாதிரை களி: வெறும் பிரசாதம் மட்டுமல்ல; 'ஆனந்தத்தின்' அடையாளம்!* 
அனைத்து சிவாலயங்களிலும் திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கடவுளும் அவதரித்த நாளில் அந்தந்த கடவுளுக்கு ஜயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். பிறப்பில்லாத ஆதி கடவுளான சிவனின் ஜன்ம நட்சத்திரம் என்று தனியாக இல்லாத குறையைப் போக்கவே, ‘திருவாதிரை நட்சத்திரமாக நான் இருப்பேன்’ என்று சிவன் சொன்னதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, ‘நட்சத்திரங்களில் நான் திருவாதிரை’ என்று கூறியிருப்பதில் இருந்தே, அந்த நட்சத்திரத்திற்கான சிறப்பை அறியலாம். ‘ஆதிரை’ என்பது அக்னியை போன்ற ஒளியை வெளிப்படுத்தும் ஒரு நட்சத்திரமாகும். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும்தான் ‘திரு’ என்னும் அடைமொழி வழங்கப்பட்டுள்ளது. திருவாதிரையை வடமொழியில் ‘ஆருத்ரா’ என்று கூறுவார்கள்.

சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாதவர் என்றாலும், இந்த ஆதிரை நட்சத்திரத்தின் ஒளிப்பிழம்பு தன்மையை சிவபெருமானின் அம்சமாகக் கருதி  இத்தினத்தை திருவாதிரையாகக் கொண்டாடுகின்றனர். சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர். இந்த தினத்தில் சிவபெருமானை தரிசிப்பது ‘ஆருத்திரா தரிசனம்’ என்றழைக்கப்படுகிறது. சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.

சிதம்பரம் மற்றும் திருவாரூரில் நடராஜப் பெருமானை மற்றும் தியாகராஜர் பெருமானை தரிசக்க தேவர்கள் ஒன்று கூடுவதாக ஐதீகம் உண்டு. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடியது ஆனந்தத் தாண்டவ நடனம். இந்த ஆனந்தத் தாண்டவ தரிசனத்தைக் காண்பது பெரும் பேறாகும். மார்கழி திருவாதிரை தினத்தில்தான் பதஞ்சலி முனிவருக்கும், ஆதிசேஷனுக்கும் தனது திருநடன தரிசனத்தைக் காட்டினார் தில்லை நடராஜ பெருமான். திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழி திருவாதிரை அமைகின்றது.

தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து பெரும் வேள்வி ஒன்றை நடத்தினர். அதாவது, அவர்களின் கோட்பாட்டின்படி, கர்மத்தை மட்டும் செய்தால் போதுமானது. கடவுள் என்பவர் கிடையாது என்பதுதான். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டி கயிலைநாதன், பிட்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனி பத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினர். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித் தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர்.

சிவனார் மத யானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவற்றைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்ரா தரிசன நாள் ஆகும். ‘திருவாதிரைக்கு ஒருவாய் களி’ என்றொரு புகழ் பெற்ற வாசகம் உண்டு. களி என்பது ஆனந்தம் என்றும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித், ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த பட்டினத்தாரிடம் கணக்குபிள்ளையாக வேலை பார்த்து வந்தவர் சேந்தனார். பட்டினத்தார் துறவறம் மேற்கொண்ட உடன், அவரிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் சூறை விட்டார். இதைக் கேள்விப்பட்ட சோழ மன்னர், சேந்தனாரை சிறையிலடைத்தார். அதையறிந்த பட்டினத்தார் சேந்தனாரை சிறையிலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் வேண்டினார். உடனே சிறைக் கதவுகள் திறந்து சேந்தனார் விடுதலை பெற்றார். சிறையிலிருந்து வெளியில் வந்த சேந்தனார், சிதம்பரத்திற்கு வந்து அங்கு விறகு வெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தானும் சாப்பிடுவார்.

பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின. அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே, அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால், சோதனையாக யாரும் அன்று வரவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி, நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார்.உடனே மகிழ்ச்சியடைந்த சேந்தனார் சமைத்த களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் சாப்பிட்டதோடு மிச்சமிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தபோது நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள் இருந்தன. உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டுபிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்கு வந்திருந்தார்.

சிவனை தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழை காரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனம் வருந்தினார். அப்போது அசரீரியாக ‘சேந்தா நீ பல்லாண்டு பாடு’ என்று கேட்டது. சேந்தனார் இறைவன் அருளால் ‘மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல’ என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே’ என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. இதைப்பார்த்த அரசனும் அமைச்சர்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினர். அரசர் தாம் கண்ட கனவை சேந்தனாருக்குத் தெரிவித்தார். அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்று அறியப்படுகிறது.

திருவாதிரை தினத்தில் அரிசி மாவு, வெல்லம் மற்றும் பருப்புகளை கொண்டு செய்யப்படும் திருவாதிரை களியை சுவாமிக்கு படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Thursday, January 1, 2026

இருதயத்தைக் காக்கும்அருள்மிகு மனத்துணை நாதர் திருவலிவலம்.

இருதயத்தைக் காக்கும்
அருள்மிகு மனத்துணை நாதர்(இருதய கமலநாதேஸ்வரர்) திருக்கோயில்...!
மூலவர்  –    மனத்துணைநாதர் ( இருதய கமலநாதர்)

அம்மன்  –    மாழையொண்கண்ணி (மத்யாயதாட்சி)

தல விருட்சம்  –    புன்னை

தீர்த்தம்  –    சக்கர தீர்த்தம்

பழமை  –    1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்  –    திருவலிவலம்

ஊர்  –    வலிவலம்
மாவட்டம்  –    நாகப்பட்டினம்
மாநிலம்  –    தமிழ்நாடு
பாடியவர்கள்  –    அப்பர், சம்பந்தர், சுந்தரர்

முன்னொரு காலத்தில் ஒழுக்க சீலனாக விளங்கிய ஒருவன், முன் வினைப்பயனால் சில பாவங்கள் செய்தான். 

இதனால் அவன் அடுத்த பிறவியில் கரிக்குருவியாக பிறக்க நேரிட்டது.

 மிகச்சிறியதான இப்பறவையை பெரிய பறவை ஒன்று தாக்கியதால் இரத்தம் வந்தது.

 இரத்த காயமடைந்த குருவி அருகிலிருந்த மரத்தில் தஞ்சம் அடைந்தது. 

அந்த மரத்தின் கீழ் முதிய சிவயோகி ஒருவர் அடியார்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த உபதேசங்களை தற்செயலாக கரிக்குருவியும் கேட்டது.

 “அன்பர்களே! சிவத்தலங்களில் சிறந்தது மதுரை. தீர்த்தங்களில் சிறந்தது அங்கிருக்கும் பொற்றாமரை. மூர்த்திகளில் சிறந்தவர் மதுரை சொக்கநாதர். மதுரைக்கு சமமான தலம் உலகில் வேறொன்றும் இல்லை.

 சோமசுந்தரக்கடவுள் தன்னை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டும் வரங்களை அள்ளித்தருபவர்” என்று யோகி சொல்லிக்கொடுத்ததை கரிக்குருவி கேட்டது. 

ஞானம் பெற்றது. பின்னர் தனது முன்பிறப்பையும், தான் ஏன் கரிக்குருவியாக பிறந்தோம் என்பதை அறிந்து மதுரையை நோக்கி பறந்தது. 

மதுரையை அடைந்த குருவி சோமசுந்தரர் கோயிலை வலம் வந்து பொற்றாமரைக்குளத்தில் மூழ்கியது. 

சிவனை உருகி வழிபட்டது. மூன்று நாட்கள் இவ்வாறு தொடர்ந்து செய்தது. 

குருவியின் பூஜைக்கு இறைவன் மகிழ்ந்தார். குருவியை அழைத்து அதற்கு “மிருத்தியுஞ்சய” மந்திரத்தை உபதேசித்தார்.

 கரிக்குருவியின் சிற்றறிவு நீங்கி பேரறிவு பெற்றது. மேலும் குருவி சிவனிடம்,”இறைவா! நான் உனது கருணையால் நான் ஞானம் பெற்றேன். 

இருந்தாலும் ஒரு குறை உள்ளது. மிகச்சிறிய பறவையாகிய நான் மற்ற பெரிய பறவைகளால் துன்புறுத்தப்படுகின்றேன்.

 பார்ப்பவர்கள் கேலி செய்யும் நிலையில் உள்ளேன்” என முறையிட்டது. 

அதற்கு சிவபெருமான்,
”எல்லாப் பறவைகளை விட நீ வலிமை அடைவாய்” எனக் கூறினார்.

 மீண்டும் குருவி,
”சிவபெருமானே! எனக்கு மட்டுமின்றி, எனது மரபில் வரும் அனைவருக்கும் வலிமையை தந்தருள வேண்டும்” என வேண்டியது. 

இறைவனும் அவ்வாறே அருளினார். இவ்வாறு வரம்பெற்ற கரிக்குருவி “வலியான்” என்னும் பெயரையும் பெற்றது.

 இக்குருவியின் மரபில் தோன்றிய ஒரு குருவி இத்தலம் வந்து மனத்துணை நாதரை வழிபட்டு முக்தி அடைந்தது. 

இதனால் இத்தலத்திற்கு “வலிவலம்” என்ற பெயர் ஏற்பட்டது. இத்தல விநாயகர் வலம்புரி விநாயகராக அருள்பாலிக்கிறார்.

“பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர் கடி கண பதிவுர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே” என்ற பாடலில் இந்த வலம்புரி விநாயகரை போற்றி சம்பந்தர் பாடியுள்ளார்.

சிவாலயங்களில் தேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப்பாடல் பாடும் முன் இத்திருப்பாடலை பாடிய பின்னரே அடுத்த தேவாரப்பாடல் பாட வேண்டும் என முறை செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து இத்தல விநாயகரின் சிறப்பை அறியலாம்.

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயிலில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதர் இத்தல முருகனைகுறித்து திருப்புகழ் பாடியுள்ளார். 

இத்தல இறைவனை சூரியன், வலியன், காரணமாமுனிவர், பாண்டவர்கள், கோச்செங்கட்சோழன், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

தேவாரப்பதிகம்:

பிடியதன் உருவுமை கொளமிக கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வள வலமுறை இறையே.
–திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 121வது தலம்.

ஆண்டு தோறும் சித்திரையில் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.

 தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆவணி ஞாயிறு, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை.

இருதயம் சம்பந்தப்பட்ட நோய், மனக்கலக்கம், புத்திசுவாதீனம் இல்லாதவர்கள், மன சஞ்சலம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறந்தது.

பிரார்த்தனை நிறைவேறியதும் பரிகாரமாக உருத்ர அபிஷேகம் செய்யப்படுகிறது.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி
அருள்மிகு மனத்துணை நாதர்(இருதய கமலநாதேஸ்வரர்) திருக்கோயில், 
வலிவலம், 
திருக்குவளை தாலுகா, 
நாகப்பட்டினம் மாவட்டம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் குணமடைய தென்திருவாலவாய் கோயில்...

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயக்கோவில்...!
தென்திருவாலவாய் என்று பெயர் வரக்காரணம் : 
பண்டைய காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வழிகாட்டிய படலம் உண்டு. 

ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமே எல்லைகள் எல்லாம் தெரியாமல் குறுகிப்போய், மதுரை நகரின் எல்லை எதுவென்ற‌ே தெரியாமல் போனது. 

அப்படி கடல் பொங்கி குறுகிய மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க விரும்பிய சேகர பாண்டிய மன்னன் சிவ பெருமானிடம் வேண்டினான்

அப்போது சிவபெருமான் ஆலவாய் என்றழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசி போட்டிருக்கின்றார்.
 போடப்பட்ட அந்த பாம்பு மதுரை ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டியிருக்கிறது. 

அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய வாயும், வாலும் ஒன்று சேர்ந்துள்ளது.இந்த கோயிலும் தெற்கு திசையில் அமைந்ததால்   தென்திருவாலவாய் என்று பொருள்படுகிறது.

 ஆலவாய் என்ற பாம்பு, தெற்கு திசை எல்லாம் சேர்ந்து தென் திரு ஆலவாய் என்று பெயர் வந்தது.

தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில்இது.

மனிதனுக்கு மரணத்தை விடக் கொடிய பகைவனும் இல்லை. அந்த மரணத் துயரை மாற்றும் வைத்தியனை விடச் சிறந்த நண்பனும் இல்லை.

இத்தகைய வைத்தியநாதப்

பெருமான் எழுந்தருளிக் காலன் வருங்கால் காட்சி கொடுக்கக் காத்திருக்கும் திருத்த‌லமே தென் திருவாலவாய் ஆகும். 

தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோர் உயிரையும் எடுக்கும் எமனுக்கே வந்து விடுகிறது. சிவபெருமானை வணங்க அவரும் காட்சி தருகிறார். 

அப்போது தென்திருவாலவாய் க‌ோயிலுக்கு சென்று வழிபட்டு அந்த திருநீற்றை பூசு., இனி உனக்கு மரணபயமே கிடையாது என்கிறார். 

எமனும் வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான். அத்தகையை சிறப்பு வாய்ந்த தலம் இது.

திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம் இது.

 இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.

இங்குள்ள தென் திருவாலவாய் சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வரு‌கை தருகின்றனர்.

 மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை

விலகுகிறது.

இத்தலத்து இறைவனை வணங்குவோர்க்கு மன நிம்மதி கிடைக்கிறது. 

இத்தலத்து அம்பாளை வழிபட்டால் திருமணவரம், குழந்தை வரம் ஆகி‌யன கிடைக்கின்றன.

 சுவாமிக்கு வஸ்திரம் வழங்கினால் பெரிய அளவில் புண்ணியம் கிடைக்கிறது. கல்வியில் சிறக்கவும், எடுத்தகாரியம் நல்ல முறையில் நடைபெறவும் இத்தலத்தில் வழிபடலாம்.

 

அஸ்வத்தபிரதட்சணம் : இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது.

மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர்.

இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது. அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.

மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும்.

இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் பதவி கிடைக்கும்.

தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

தவிர இந்த நான்கு ‌‌கோயில்களுக்கும் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும். இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர்.

முகவரி

அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை- 

Followers

ஸ்ரீபஞ்சநதபாவா ஸ்வாமிகளின் நிர்விகல்ப ஜீவ சமாதி

ஸ்ரீஅமிர்தவல்லி  சமேத ஸ்ரீசிதானந்தேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் . திருக்கோயிலை நோக்கிக் கைகூப்பி - கண்களை மூடித்தொழுதார் அமைச்சர்.  ...