Friday, January 30, 2026

உஜ்ஜீவநாத சுவாமி திருக்கோயில்,திருகற்குடி,உய்யக்கொண்டான் மலை,

அருள்மிகு உஜ்ஜீவநாத சுவாமி திருக்கோயில்,
திருகற்குடி,
உய்யக்கொண்டான் மலை,
PIN-620 102.  
திருச்சி மாவட்டம்.      
*இறைவர்:   உஜ்ஜீவநாதஸ்வாமி,  முக்தீசர்.  

*இறைவியார்:  அஞ்சனாக்ஷி (மைவிழியம்மை), பாலாம்பிகை.         

*தல மரம்:  வில்வமரம்.   

*தீர்த்தம் :  பொன்னொளி ஓடை, குடமுருட்டி (தஞ்சை மாவட்டத்தில்     ஓடும் ஆறு அல்ல), ஞானவாவி, எண்கோண தீர்த்தம், நாற்கோணதீர்த்தம் என்பன.  

*வழிபட்டோர்: கரன், நாரதர், உபமன்யு முனிவர், மார்க்கண்டேயர்.  

*இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர்  திருஞானசம்பந்தர் , சுந்தரர் பாடிய  மூன்று பதிகங்கள் உள்ளன.   
*இறைவன் கல்லில் - மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது.  தற்போது மக்கள் வழக்கில் உய்யக்கொண்டான்மலை என்று வழங்குகிறது.    

 *மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையாரில் அழகாக காட்சித் தருகிறார்.        

*மிருகண்டு முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும்படி சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்.  சிவபெருமான் அவர் முன் தோன்றி, உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா என்று கேட்டபோது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும்போது, மிருகண்டுமுனிவர் அவனுடைய ஆயுள் விவரத்தைக் கூறி, இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார்.

 மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தார்.  மார்க்கண்டேயரின் பக்தியை மெச்சி, ஆடி பவுர்ணமி நாளில் ஈசன் இத்தல கருவறையை விட்டு வெளியே வந்து மார்க்கண்டேயருக்கு காட்சி கொடுத்து அவரது உயிரைக் காப்பதாகவும் வரம் கொடுத்தார். 

*மார்க்கண்டேயருக்காக ஈசன் கருவறையை விட்டு வெளியே வந்ததற்கு அடையாளமாக, சுவாமியின் திருப்பாதம்  கருவறைக்கு இடது புறம் உள்ள கொடிக்கம்பத்தின் கீழே அமைந்திருக்கிறது.  

*மார்க்கண்டேயருக்கு, ஆடி பவுர்ணமி இரவில் சிவபெருமான் காட்சி கொடுத்ததால், அந்த நாளில் இங்கு சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெறும். பின்பு மார்க்கண்டேயருக்கு, ஈசன் காட்சி கொடுக்கும் நிகழ்வு நடத்தப்படும். மேலும் ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும், இத்தல ஈசனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.  

* இத்தல இறைவனை  வழிபடுவோருக்கு எமபயம் இல்லை.   

*உஜ்ஜீவ நாதருக்கு பாலாபிஷேகமும், அவரது திருப்பாதத்திற்கு பானகமும் படைத்து வேண்டிக்கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.    
ஈசனுக்கு நெய், மிளகு, சீரகம் சேர்க்கப்பட்ட அன்னம் படைத்து வழிபட்டால், தீராத நோய்களும் குணமாவதுடன், தீர்க்காயுள் கிடைக்கும். 
 *பிள்ளைகளை நல்வழியில் கட்டுப்படுத்தவும், குறைந்த அறிவுத்திறன், மெதுவாக புரிந்து கொள்ளும் திறன் போன்ற பாதிப்பு உள்ள குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து, பவுர்ணமி நாளில் அன்னைக்கும், சுவாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் குறைகள் அகலும் என்பது ஐதீகம்.  

*குன்றின் படிகள் ஏறி உட்சென்றால், முதலில் மேற்கு நோக்கிய அஞ்சனாட்சி அம்பாள் சந்நிதி உள்ளது.  இவள் பழைய அம்பாள். இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்துபோய் உள்ளது. எனினும், அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு, இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இதனால், புதிய அம்பாள் பாலாம்பிகை பிரதிஷ்டை செய்துள்ளனர். புதிய அம்பாள் பாலாம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 
இரு அம்பாளுக்கும் நித்திய பூஜை நடைபெற்று வருகிறது.     

*இத்தல அஞ்சனாட்சி அம்மனை வழிபட சகல விதமான கண் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.  

*அருணகிரிநாதர் அருளிய     திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன.  முருகப்பெருமானுக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வழிபட்டால், தந்தை- மகன் உறவு பலப்படும்.       

*கோவிலில் சோழ மன்னர்கள் உத்தம சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் அளித்த தானங்கள் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன.        

*பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் இக்கோவிலுக்குப் பல தானங்களும், திருப்பணிகளும் செய்திருக்கிறான்.  

*நந்திவர்ம பல்லவனுக்கு இத்தலத்திலுள்ள ஜ்யேஷ்டாதேவியே குலதெய்வம். இந்த ஜ்யேஷ்டாதேவியை தரிசித்தால், விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். 

*ராவணனுடைய சகோதரர்களில் ஒருவனான கரன், இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான். இங்கே கரன் வழிபட்ட சிவலிங்கம் 'இடர்காத்தார் ' என்னும் பெயருடன் திகழ்கிறது.  

*தருமபுரம் ஆதீனத்தின் கீழ் இந்தக் கோயில் இருக்கிறது.               

*கி. பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது  பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் மைசூர்க்காரரும் மாறிமாறித் தங்கியிருந்த யுத்த அரணாக இக்கோயில் விளங்கியது.  

*திருச்சியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவில்  இத்தலம் அமைந்திருக்கிறது.     
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

கும்பகோணம் நாகேஸ்வரர், நாகநாதர்.

குடந்தைக் கீழ்க்கோட்டம்  (நாகேசுவரசுவாமி திருக்கோயில்)இறைவர் திருப்பெயர்:   நாகேஸ்வரர், நாகநாதர்.  இறைவியார் திருப்பெயர்: பிருக...