*ரத சப்தமி திருநாள்*
ரத சப்தமி என்றால் என்ன?
தை மாதம் வளர்பிறை சப்தமி.
காலபுருஷ கணிதத்தின்படி சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்தை நோக்கி பயணிக்கிறார். சூரியன் தனது ரதத்தை வடதிசை நோக்கி செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாள்தான் 'ரத சப்தமி'. இன்று சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது.
சூரிய நாராயண பெருமாளை வழிபடும் விதமாக பெருமாள் கோயில்களில் சிறப்பாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் இந்த நாளில் சூரியனை வணங்குவதற்கு முன் காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக் கொண்டு குளிப்பது ஐதீகம். இதற்குக் காரணமான நிகழ்ச்சி
முன்பொரு காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் எனும் முனிவர் வசித்து வந்தார். அவர் மூன்று காலத்தையும் உணர்ந்தவர். அவரிடம் பலரும் சென்று தங்கள் எதிர்காலத்தைக் கணித்து சொல்லும்படி கேட்பார்கள்.
அவரும் கணித்துச் சொல்வார். அவர் சொல்வது அப்படியே நடப்பதால், அவருடைய புகழ் பல இடங்களுக்கும் பரவியது. ஒருமுறை, சந்நியாசி ஒருவர் காலவ முனிவரைப் பார்க்க வந்தார். அவர் காலவ முனிவரிடம், 'எல்லோருடைய எதிர்காலத்தைப் பற்றியும் சொல்லும் நீங்கள், உங்கள் எதிர்காலம் பற்றி அறிந்ததுண்டா?' என்று கேட்டார். காலவ முனிவருக்குத் தூக்கி வாரிப்போட்டது.
காலவ முனிவரும் கண்களை மூடியபடியே தியானிக்கிறார். அவருக்கு எதிர்காலத்தில் தொழுநோய் ஏற்படும் என்பது அப்போதுதான் புலப்பட்டது. கண் திறந்து பார்த்தபோது எதிரே இருந்த அந்த சந்நியாசியைக் காணவில்லை. சந்நியாசியாக வந்தவர் யமதர்மராஜன்.
நாட்கள் செல்லச்செல்ல காலவ முனிவருக்கு என்னவோ போலிருந்தது. அவர் நவகிரகங்களை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினார். காட்சி தந்த நவகிரகங்களிடம் தமக்குத் தொழுநோய் வராமல் இருக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அவர்களும் அவருக்கு வரம் கொடுத்தனர். ஆனால் பிரச்னை வேறு விதமாக திசை மாறியது. நவகிரகங்கள் என்பவை இறைவனின் ஏவலுக்குக் கட்டுப்படும் கருவிகள் மட்டுமே. வரம் அளிக்கும் அளவு வல்லமை பெற்றவர்கள் அல்ல. இவர்களது இந்தச் செயல், படைப்புக் கடவுளான பிரம்மாவுக்குத் தெரியவந்தது.
நவகிரகங்களின் செயலில் கோபம் கொண்ட பிரம்மதேவர், 'காலச் சக்கரத்தை இப்படி ஆளாளுக்கு இயக்கினால் எப்படி?
காலவ முனிவருக்கு வரவேண்டிய தொழுநோய் உங்களுக்கு வரட்டும்' என்று சாபம் கொடுத்து விட்டார். அழுது அரற்றிய நவகிரகங்களிடம் 'இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலாது' எனவும் கூறிச் சென்றார். ஆனால் ஓர் உபாயத்தை நவகிரகங்களுக்குக் கூறியருளினார்.
'நீங்கள் பூமிக்குச் சென்று, அங்கே அர்க்கவனம் என்னும் இடத்தில் தங்கி, கார்த்திகை மாதம் தொடங்கி 78 நாள்கள் விரதம் இருங்கள்'' என்று கூறினார். நவகிரகங்களும் அவர் சொல்லியபடியே அர்க்கவனத்துக்கு வரும் வழியில், அகத்திய முனிவரைச் சந்தித்தனர். அவர் நவகிரகங்களுக்கு சில வழிபாட்டு முறைகளைக் கூறினார்.
'திங்கள்கிழமைதோறும் எருக்க இலையில் தயிர் அன்னத்தை வைத்து விடிவதற்கு முன்பு புசியுங்கள். மற்ற நாள்களில் விரதமிருங்கள். இப்படிச் செய்தால் சாப விமோசனம் பெறுவீர்கள்.
எருக்க இலையின் சாரத்தில் ஒரு சிறு துளி அந்த தயிரன்னத்தில் சேரும். தொடர்ந்து 78 நாட்களுக்கு இப்படி புசித்து வந்தால் தொழுநோய் குணமாகும்' என்றார் அவர். அவரே தொடர்ந்து,
'ரத ஸப்தமி (தை மாதம்) நாளில் ஏழு எருக்க இலைகள், எள், மஞ்சள் அட்சதை ஆகியவற்றைத் தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் நவகிரக தோஷம் விலகும்'என்றும் கூறினார்
இன்றும் நம்மைப் பாதுகாத்து கொள்ளவும், நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறவும், ரத சப்தமி அன்று எருக்க இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்வது நல்லது'' என்று கூறினார்.
சூரிய பகவானை ஆராதிக்கும் ரதசப்தமி திருநாளில், அவரது அதிதேவனான நாராயணனும் கொண்டாடப்படுகிறார்.
அதனால்தான் திருமலை திருப்பதியில், இந்த நாளில் 'ஒரு நாள் பிரமோற்சவ விழா' நடத்தப்படுகிறது.
"ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா' என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.
ரத சப்தமி (RathaSapthami)
தாத்பர்யம்
பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் அப்புண்ணிய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. தான் விரும்பியது போல் ஏன் இன்னும் மரணம் ஏற்படவில்லை, நான் என்ன பாவம் செய்தேன் என்று வேத வியாசரிடம் கேட்டார்.
அதற்கு வியாசர் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்கு அநீதி செய்வது மட்டும் பாவமில்லை, அதர்மம் செய்பவர்களை கண்டும் கண்டிக்காமல் இருப்பதும் பாவம். துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோதும், அவள் காப்பாற்றுங்கள் என்று கதறியபோதும் உன் அங்கங்கள் சும்மா இருந்தன என்றார்.
*செயல்படாத தர்மம் அதர்மத்தை விட மோசமானது*. அந்த பாவத்தினால் தான் நீ விரும்பியபடி மரணம் ஏற்படவில்லை என்று கூறினார். நான் செய்திருக்கும் மாபெரும் பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் என்று பீஷ்மர் கேட்டார். அதற்கு வியாசர் யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே அந்தப் பாவம் அவரை விட்டு அகன்றுவிடும் என்று வேதம் கூறுகிறது.
இருந்தாலும் அநீதியை எதிர்க்காத உன் கண்கள், காதுகள், வாய், தோள்கள், கைகள், கால்கள் அனைத்திற்கும் மேலாக தர்மத்தை சிந்தனை செய்யாத உன் தலை என அங்கங்கள் அனைத்தும் தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்றார்.
அதற்கு பீஷ்மர், என் அங்கங்களை பொசுக்க சாதாரண அக்னி போதாது சூரிய பகவானின் வெப்பத்தை பிழிந்து என் அங்கங்களை பொசுக்க உதவுங்கள் என்றார். அப்போது தான் என் பாவம் தொலையும் என்று வேண்டினார்.
உடனே வேத வியாசர் *சூரியனின் முழு சக்தியும் உள்ள எருக்கன் இலைகளால்* பீஷ்மரின் அங்கங்களை மூடினார்.
இந்த எருக்கன் இலைகள் சூரிய சக்தியை உன் உடலில் பாய்ச்சும், நீ புனிதம் அடைவாய் என்றார். பின் பீஷ்மர் தியானத்தில் அமர்ந்து அந்நிலையிலேயே முக்தி அடைந்தார். 🙏
அந்தப் புனித நாளே *ரதசப்தமி RathaSapthami*
பீஷ்மர் நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்துவிட்டாரே அவருக்கு யார் பித்ரு கடன் செய்வது என்று தருமர் வருந்தினார்.
அதற்கு வியாசர், ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும் பரிபூர்ண தூய்மை உள்ள துறவிக்கும் நீத்தார் கடன் என்பது அவசியமே இல்லை, அவர்கள் நற்கதியையே அடைவார்கள் என்று கூறினார்.
வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர் கடன் அளிக்கும் என்றும் கூறினார்.
ரத சப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்து நீராடுபவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவர், பீஷ்மருக்கு நீர் கடன் அளித்ததால் புண்ணியமும் அடைவர் என்று கூறினார்.
எனவே ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு 7 எருக்கன் இலைகளை அட்சதை சேர்த்து தலை, கண்கள், தோள்பட்டைகள், கால்களில் வைத்துக் கொண்டு நீராடினால் பாவத்தில் இருந்து விடுபடலாம். அன்று சூரிய பகவானுக்கும் பீஷ்மருக்கும் தூய்மையான நீரினை உள்ளங்கையில் ஏந்தி அர்க்யம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment