Wednesday, April 8, 2026

மூன்றாம் இராசராசன் சிவன் கோவில்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், சக்கர சாமந்தம் சிவன்கோயில் 

சக்கரசாமந்தம்; தஞ்சாவூரின்  மேற்கில் 6 கிமி தொலைவில் உள்ளது. தஞ்சையில் இருந்து பூதலுருக்கு ஒரு சாலை கள்ளப்பெரம்பூர் வழியாக போகிறது. மேற்கே செல்லும் புறவழிச்சாலையை தாண்டி உள்ள ஊர். சக்கரசாமந்தம்.  வெண்ணாற்றில் இருந்து பிரிந்து வரும் வடவாற்றின் கரையோர கிராமம்தான் இந்த ஊர். 

மாறவர்மன் சுந்தரபாண்டியனின் படையெடுப்பில் தோல்வி கண்டான்  மூன்றாம் இராசராசன். தஞ்சையும் உறையூரும் எரியூட்டப்பட்டது,  பல வருடங்களாக பாழ்பட்டுக் கிடந்த தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினான் பாண்டிய மன்னனின்  சேனாதிபதியாய் இருந்த "சாமந்தன்" என்பவன்.

சாமந்த நாராயண தொண்டைமானார் தம் பெயரால், தஞ்சாவூரை ஒட்டி அகரம்  ஒன்றை அமைத்து, அகரம் சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் என்று பெயரிடுகிறார். 

அங்கே சாமந்தனாராயன விண்ணகரம் என்ற விஷ்ணு கோயிலையும் எழுப்புகிறார். 106 பட்டர்களை குடியமர்த்துகிறார். 95 வேலி நிலத்தை இரு நிலக்கிழார்களிடம் இருந்து வாங்கி நிவந்தமாக அளிக்கிறார். நிலம் விற்ற ஒருவர் தென்னகங்கதேவன், இன்னொருவர் பெயர் சீனத்தரையர். 

சக்கர சாமந்தம் ஊருக்கு மேற்கில் தென்னகங்கதேவன் வாழ்ந்திருக்கிறார். அந்த ஊரும் அவர் பெயராலேயே தென்ன கங்க தேவன் குடி எனப்பட்டது. இந்த ஊர் இன்று தென்னங்குடி எனப்படுகிறது. நிலம் வழங்கிய சீனத்தரையன் ஊர். சீனத்தரையனூர் என அழைக்கப்பட்டு, சீனானூர் ஆகி, இன்று சீராளூர் ஆயிற்று. 

அகரம் சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம், என்ற பெயர் சிறிது சிறிதாக  சுருங்கி அகர சாமந்தம் ஆகி, இப்பொழுது சக்கரசாமந்தம் ஆயிற்று. 
அகரம் சாமந்த நாராயண விண்ணகர் பெருமாள் கோயில் இன்று தஞ்சை கொண்டிராஜாபாளையத்தில் யோக  நரசிங்க பெருமாள் எனும் கீழ நரசிம்மர் கோயில் என  உள்ளது. தஞ்சை மன்னர் சரபோஜி காலத்தில் புது ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

அந்த கோயிலுக்காக சாமந்த நாராயண குளம்  என்ற குளம் ஒன்றை வெட்டினார். பின்னர், அங்கு ஒரு புதுக்குடியிருப்பையும் தோற்றுவித்தார் சாமந்தன். 
சரி வாங்க நாம சக்கர சாமந்தம் சிவன்கோயிலை  பார்ப்போம். 

இந்த  ஊரின் வடகிழக்கு பகுதியில் ஒரு சிவாலயம் இருந்து அழிந்து போனது. இப்பகுதி லிங்கத்தடி என வழங்கப்பட்டு வந்துள்ளது. அதன் லிங்க பாணன் மட்டும் கிடைத்தது,  அதற்க்கு இவ்வூரை சேர்ந்த திரு. இளங்கோவன் அவர்கள் ஒரு சிமென்ட் சீட்  கொட்டகை ஒன்றை அமைத்து  எதிரில் ஒரு சிறிய நந்தியையும் வைத்து பிரதிஷ்டை செய்து உள்ளார். விரைவில் இதற்க்கு ஒரு அழகிய கோயில் ஒன்றையும் உருவாக்க  வேண்டும் என எண்ணியுள்ளார். 

“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து"
என்ற வள்ளுவரின் வாக்குப்படி, எண்ணுவ தெல்லாம் உயர்வானதாகவே இருக்கும் போது அவை விரைவிலே  ஈடேறும். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மூன்றாம் இராசராசன் சிவன் கோவில்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், சக்கர சாமந்தம் சிவன்கோயில்  சக்கரசாமந்தம்; தஞ்சாவூரின்  மேற்கில் 6 கிமி தொலைவில் உள்ளது. த...