Sunday, April 19, 2026

திருவென்பபேறுடைய நாயனார் அரியலூர் தூத்தூர் சிவன் கோயில்

அரியலூர் மாவட்டம் , அரியலூர் வட்டம்,  தூத்தூர் சிவன் கோயில் 
திருமானூரின் கிழக்கில் கொள்ளிடத்தினை ஒட்டி செல்லும் சாலையில் 20கிமி தூரம் சென்றால் தூத்தூர் அடையலாம். பழமையான சிவாலயம், பெருமாள் கோயில், கணபதி கோயில் செல்லியம்மன் கோயில் நாச்சியாரம்மன் கோயில் ஆகியவற்றினை உள்ளடக்கிய பெரிய கிராமம். ஊரின் தெற்கில் பிரம்மாண்ட கொள்ளிடம், ஊரின் கிழக்கில் மருதையாறு அதில் கலக்கிறது. 
இன்றைக்கு 800 ஆண்டுகட்கு மேல் பழமையான சிவாலயம் ஒன்று காலத்தை வென்று நிற்கிறது இவ்வூரில்,  பல ஆண்டு காலமாக பழுதடைந்த நிலையில் இருந்த திருக்கோயில் சில மாதங்களின் முன்னர் குடமுழுக்கு கண்டுள்ளது. 
அக்காலத்தில் இவ்வூர் தூற்றூர் என வழங்கப்பட்டு வந்தது, திருக்கோயில் திருவென்பபேறுடைய நாயனார் கோயில் என வழங்கப்பட்டு வந்துள்ளது. இக்கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் 1180ம் ஆண்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது. 
இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. 
1.மூன்றாம்‌ இராஜராஜன்‌ காலம், கி.பி. 1237. 

ஸ்ரீ பராந்தகச்‌ சதுர்வேதிமங்கலத்தின்‌ மேற்குப்‌ பிடாகையான 
தூற்றூரில்‌ உள்ள இருவென்பபேறுடையார்‌ கோயில்‌ தேவகன்மிகள்‌ 
இக்கோயிலில்‌ இருக்கும்‌ சைவத்‌ துறவி (ஆண்டார்‌) கூடாகுடையார்‌  அம்மையப்பரான ஈசான தேவர்‌ முதலியாருக்கு மடமாகக்‌ கொடுத்த பரிவத்தனை நிலம்‌ பற்றி குறிப்பிடுகிறது. 
இவர்‌ அமைத்த மடத்தின் பெயர்‌ திருஞானசம்பந்தன்‌ திருமடம்‌ என அழைக்கப்பட்டது. 

2.கோயில்‌ மகாமண்டப தெற்குச்‌ சுவர்‌ குமுதப்படை. 
மூன்றாம்‌ இராஜேந்திரன்‌ கி.பி. 1254. 

பராந்தகச்‌ சதுர்வேதிமங்கலத்து கிராம காரியம்‌ செய்கின்ற கூட்டப்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ இவ்வூர்‌ குடிமைக்‌ கணக்கு எழுதுகின்ற நாலாயிரப்பிரியன்‌ ஆகியோர்‌ வழங்கிய வரிச்சலுகை பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 
இச்சதுர்வேதிமங்கலத்தின்‌ பிடாகையான தூத்தூர்‌ கட்டளை, அழகிய மணவாளநல்லூர்‌ கட்டளை ஆகிய ஊர்களில்‌ ஆண்டார்‌ ஈசான தேவர்‌ திருஞானசம்பந்தர்‌ என்பவர்‌ தூற்றூரில்‌ இருந்த மடத்திற்கு நிலங்கள்‌ வாங்கி மடப்புறமாக கொடுத்துள்ளார்‌. அந்நிலத்திற்கு 
சபா விநியோகமாக வசூலிக்கப்படும்‌ வரியை விதிப்பதில்லை என பராந்தக சதுர்வேதிமங்கலத்து சபையார்‌ முடிவு செய்தனர்‌. 

3.கோயில்‌ மகாமண்டப தெற்குச்‌ சுவர்‌ ஜகதிப்பீடம்‌. 
மூன்றாம்‌ இராஜேந்திரன்‌, 1279. 

குலோத்துங்க சோழ வளநாட்டு திருநறையூர்‌ நாட்டு அகரம்‌ 
ஸ்ரீஇராஜராஜ சதுர்வேதிமங்கலத்து சபையாரும்‌, மகா சபையாரும்‌ தூற்றூர்‌ திருவென்பபேறுடையார்‌ திருக்கோயிலில்‌ உள்ள எதிரிலி சோழன்‌ மண்டபத்தில்‌ கூட்டம்‌ கூடி கிராமத்துக்கு நன்றாக வேண்டுமென்று அச்சதுர்வேதிமங்கலத்துப்‌ பிடாகை கருப்பூரில்‌ 
நிலம்‌ தானமாக வழங்கியுள்ளனர்‌. திருவென்பபேறுடையார்‌ 
கோயிலில்‌ திருப்பள்ளி எழுச்சியின்‌ போது ஐந்நூற்றுவன்‌ சந்தி என்ற பெயரில்‌ பூஜை நடத்தி இறைவனுக்கு திருவமுது படைக்க அந்நிலம்‌ கொடுக்கப்பட்டது என அறிகிறோம்‌. 
4.கோயில்‌ கிழக்கு வாயிலில்‌ நடப்பட்டுள்ள கற்பலகை, 
ஸ்ரீகருஷ்ணதேவராயர்‌ காலத்தியது, கிபி 1514, 

கிருஷ்ணதேவராயரின்‌ பிரதிநிதியான வீரநரசிங்கராய நாயக்கர்‌ திக்கு விஜயம்‌ செய்து வெற்றி பெற லேண்டும்‌ என வேண்டிக்‌ கொண்டு வீரநரசிங்கராய நாயக்க முதலியாரும்‌ ஸ்ரீ பராந்தக நாட்டு பிரதிநிதிகள்‌ தூற்றூர்‌ திருவென்பபேறுடைய நாயனார்‌ கோயிலில்‌ பூஜை திருப்பணிக்காக கொற்றிலக்கை கூலவரி ஆகிய வரிகளின்‌ வருமானத்தைச்‌ சர்வமானியமாக வழங்கியுள்ளனர்‌. 
கிழக்கு நோக்கிய திருக்கோயில் கிழக்கில் சிறிய வாயில் மட்டுமே உள்ளது. தற்போது தெற்கு பக்கமே பிரதான வாயில் உள்ளது. கருவறை இடைநாழி அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது. அக்காலத்தில் இரண்டு பிரகாரங்களுடன் திருக்கோயில் விளங்கி உள்ளது. பிரகார மூர்த்திகள் மற்றும் அதில் இருந்த பிற சிலைகள் முகப்பு மண்டபத்தில் உள்ளன. 
 தற்போது இறைவன் வராகமுக்தீஸ்வரர் எனவும் இறைவி வாலாம்பிகை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர். 
இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார். அம்பிகை மிகப்பெரிய சிலாரூபத்தில் பார்க்க பிரமிப்பை ஊட்டும் வண்ணம் ஆளுயர அம்பிகையாக உள்ளார். இவர் தெற்கு நோக்கிய தனி திருக்கோயில் ஒன்றில் உள்ளார். இந்த சன்னதி முகப்பு மண்டபத்தில் சேர்க்கிறது.  திருக்கோயில் முற்றிலும் கருங்கல் பணியாக உள்ளது சிறப்பு. கருவறை வாயிலில் அழகிய பெரிய துவாரபாலகர்கள் இருவரும் இருபுறமும் விநாயகர் மற்றும் தண்டாயுதபாணி முருகனும் உள்ளனர். முன்பு பிரகாரத்தில் இருந்த இரு லிங்கமூர்த்திகள் இதே இடத்தில் உள்ளனர். முகப்பு மண்டபம் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்களுடன் உள்ளது. அதில் மிருகங்கள் பட்சிகள் முனிவர்கள் என பலர் இறைவனை வணங்கும் காட்சிகள் சிற்பமாக ஆக்கப்பட்டுள்ளன. 
கருவறை கோட்டத்தில் விநாயகர் தக்ஷணமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். அர்த்தமண்டபத்தில் ஒரு மாடத்தில் இன்னொரு துர்க்கையும் உள்ளார். இதே போல் இரு சண்டேசர்கள் சன்னதியில் உள்ளனர். ஒன்று சண்டேஸ்வரியாக இருக்கலாம். 
 பிரகார சிற்றாலயங்களில் விநாயகர் மற்றும் முருகன் லட்சுமி உள்ளனர். இதில் முருகன் பார்க்க கம்பீரமான காலத்தில் வள்ளி தெய்வானையுடன் உள்ளது அழகு. வடக்கில் நவக்கிரக மண்டபம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. வடகிழக்கில் பைரவர் சூரியன் சனி உள்ளனர். சில பழுதுற்ற சிலைகளும் ஒரு மூலையில் வைக்கப்பட்டு உள்ளன.   
வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு வழிபட்டு முக்தி பெற்றதால் இங்கு இறைவனுக்கு வராக முக்தி ஈஸ்வரர் என பெயராகியதாம். 

வாலாம்பிகை (வாலை) ; சித்தர்களால் வழிபடப்படும் மூல சக்தியும், ஞானத்தின் வடிவுமான தேவி ஆவாள். இவர், 64 கலைகளையும் அருளும் 'பாலா திரிபுரசுந்தரி' என்றும், சித்தர்களின் தாயென்றும் போற்றப்படுகிறார். வாலாம்பிகை என்ற வாலை, நம்முள் இருக்கும் ஞானத்தைத் தூண்டி, யோக நிலையை அடைய அருளும் பேராற்றல் மிக்க தேவி. 

இன்பப்பேறு என்பது "serendipity" என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் ஆகும். இது எதிர்பாராமல் கிடைக்கும், அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. 
தேடாத ஒன்று நம்மை தேடி வரும்போது ஏற்படும் மகிழ்ச்சி தான் இந்த இன்பபேறு. தரிசனம் செய்ய வரும் ஒவ்வொருவருக்கும் கிடைக்காத ஒன்றை கிடைக்க செய்து வாழ்வில் மகிழ்ச்சியை அளிக்கும் இறைவன் தான் இந்த தூத்தூர் இறைவன்  திரு இன்ப பேறு உடையார். என அக்காலத்தில் அழைக்கப்பட்டார். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவென்பபேறுடைய நாயனார் அரியலூர் தூத்தூர் சிவன் கோயில்

அரியலூர் மாவட்டம் , அரியலூர் வட்டம்,  தூத்தூர் சிவன் கோயில்  திருமானூரின் கிழக்கில் கொள்ளிடத்தினை ஒட்டி செல்லும் சாலையில் 20கிமி...