மச்சபுரீசுவரர் கோயில்
ஊர் தேவராயன்பேட்டை
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
கும்பகோணம் அருகேயுள்ள கோயில் தேவராயன்பேட்டையில் உள்ள திருக்கோயில் மச்சபுரீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. பெரிய புராணத்தில் இத்தலம் திருச்சேலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை மீன் ஒன்று வழிபட்டதால் இறைவனுக்கு மச்சபுரீசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இப்புராண நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில் கோயிலின் முன்மண்டபத்தில் சிவலிங்க வடிவிலான இறைவனை மீன் வழிபடுவது போன்ற சிற்பம் காணப்படுகிறது. இத்திருத்தலம் தேவார வைப்புத்தலமாகும். இங்குள்ள இறைவன் மச்சபுரீசுவரர் ஆவார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை ஆவார்
காலம் : கி.பி.9-ஆம் நூற்றாண்டு
ஆட்சியாளர் : முதலாம் ஆதித்த சோழன்
கல்வெட்டு: இக்கோயிலில் 55 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு இக்கோயிலைச் சார்ந்து ஒரு ஆதுலர் சாலை (மருத்துவமனை) இயங்கியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
சிற்பங்கள் : மச்சபுரீஸ்வரர் கோவிலில் முருகனுக்கு தனி சன்னிதி உள்ளது. முருகன் ஆறுமுகத்தினராய், 12 கரங்களுடன் விளங்குகிறார். வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தியுள்ளார். திருமாலுக்கு உள்ளதைப்போல இங்கு முருகனுக்கும் சங்கு, சக்கரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகனுடன், வள்ளி தெய்வானையும் உடன் உள்ளனர். கருவறை விமானத்தின் தென்புறக் கோட்டத்தில் தென்முகக் கடவுள், மேற்கில் விஷ்ணு, வடக்கில் நான்முகன் காட்டப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் துர்க்கை, தெற்கில் கணபதி உள்ளனர்.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது.
கோயிலின் அமைப்பு : இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட, முற்காலச்சோழர் கலைப்பாணியைச் சேர்ந்தது. கருவறை தொடங்கி, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், எனவும், நந்தி, பலிபீடம், கொடி மரம் என ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இரு நுழைவாயிலைக் கொண்ட இக்கோயிலின் உள், வெளித் திருச்சுற்றுகள் உயர்ந்த செங்கற்சுவற்றினால் அமைக்கப்பட்டுள்ளது. வெளித்திருச்சுற்றில் இறைவி சன்னதியான திருகாமக்கோட்டம் அமைந்துள்ளது. மேலும் நிலைவாயிலுக்கு எதிரில் நந்தியுடன் சிறு மண்டபம் உள்ளது. முன் மண்டபத்தில் இடது புறத்தில் தர்ம விநாயகர், நவக்கிரகம், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன.
அருகில் உள்ள கோவில்கள்: திருப்பாலைவனம்
செல்லும் வழி : பாபநாசம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில் பண்டாரவாடையை அடுத்து கோயில் தேவராயன்பேட்டை உள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment