Thursday, March 2, 2023

திருவண்ணமலைக்கு அடுத்தபடியாக சக்திவாய்ந்த கஞ்சமலை கிரிவலம் !!!

திருவண்ணமலைக்கு அடுத்தபடியாக சக்திவாய்ந்த கஞ்சமலை  கிரிவலம் !!!
போகர் சித்தரின் குரு காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை. சேலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமலை. 

சித்தர் கோவிலில் கிரிவலம் நடப்பது இங்குதான். திருவண்ணமலைக்கு அடுத்தபடியாக இங்குதான் கிரிவலம். இங்கு பௌர்ணமி மாலை 7.30 அடிவார கோவிலில் தொடங்கி 19 கிமீ சுற்றி அடுத்தநாள் காலை 5 மணிக்கு கிரிவலம் முடிவடைகிறது.

கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது.

இத்திருக்கோயிலில் சித்ராபவுர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர்.

மலை முழுவதும் இரும்புத்தாது மட்டுமே உள்ளது. அதனாலேயே இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள்ளது. ஆனால் இந்த மலையில் அரசாங்கத்தால் கனிமவள திட்டப்பணி 1சதவிகிதம் கூட நடத்த முடியவில்லை.

இக் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன.

அடிவார கோயிலுக்குள் பத்து தீர்த்தங்கள் உள்ளது. முக்கியமானவை நந்தி தீர்த்தம் மற்றும் காந்த தீர்த்தம் ,

காந்த தீர்த்தத்தை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் உப்பு, மிளகு வாங்கிப் போடுகிறார்கள் இதில்.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட "ஞானசற்குரு பால முருகன்" கோயில் உள்ளது.
எங்கும் இல்லாத நாரதர் உருவ சிலை, சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் உருவ சிலைகள் உள்ளது. இது "அமாவாசை கோயில்” ஆகும்.

காலங்கி சித்தர்:

காலங்கி சித்தர் கூடுவிட்டு கூடு பாய்வது மற்றும் அஷ்டமாசித்திகளை அறிந்தவர். காற்றையே உடலாகக் கொண்டவர். இவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலை செய்த போகரின் குரு. திருமந்திரம் எழுதிய திருமூலரின் சீடர்.

இவர் இங்குள்ள மூலிகை உண்டு முதுமையில் இருந்து இளமை தோற்றத்திற்கு திரும்பினார். 

அதனால் இந்த மலைக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு "இளம்பிள்ளை"
என்று பெயர் உள்ளது. 

திருமூலரின் உத்தரவின்படி இங்கேயே இருந்து அருள்பாவிக்கிறார்.

இங்கு உள்ள மூலிகைகளை வைத்து சித்தர்களால் இரும்பை தங்கம் ஆக்க முடியும்.
இப்படிபட்ட மூலிகை யார் கண்ணுக்கும் தென்படாது. மந்திரம் சொல்லியே அணுகவேண்டும்.

இங்குள்ள ஒரு பாஷாணத்தை போகர் பழனி மலை முருகன் சிலை செய்ய பயன் படுத்தி உள்ளார்.

பார்க்க வேண்டிய இடங்கள் :

அடிவாரக் கோயில்:

1.கணபதி, ஞானசற்குருபாலமுருகன் கோவில்
2.முனீஸ்வரர் ஆலயம்
3.சித்தேஸ்வரர் கோவில்
4.பத்து தீர்த்தங்கள் (பெரிய நந்தி கிணறு, ராகு கேது தீர்த்தம், காந்த தீர்த்தம் …)
5.காளி அம்மன் கோவில்
6.நவகிரகம் , நாகதேவதை கோவில், மடம்

மலைக்கோயில்:

7.சித்தி விநாயகர்
8.வேட்டைக்கார சாமி
9.அன்னதான குடில் (சிவ லிங்கம்)
10.காவல் ஆஞ்சநேயர்
11.பிள்ளையார் பாறை
12.காலங்கி பாதம்
13.நாகர் புற்று
14.மேல் சித்தர் கோவில் (18 சித்தர்கள்)
15.மேல் கிழ் பாலமலைசித்தர் நேர் கோட்டில்
16. கிணறு, இரட்டைலிங்கம் (சிவசக்தி)
17.ஐயப்பன் கோவில்
18.கன்னிமார் கோவில்
19.பெருமாள் கோவில்
20.புலித்தோல் பாறை
21.தியான மலை (சித்தர்கள் கூடும் பாறை)
22.ஆதி சிவன் பாறை (ஆத்மா லிங்கம்)
23.கரிய பெருமாள் கோவில்
24.77அடி ஆஞ்சநேயர்
25.நாகதேவி சிலை அரியானுர் வழி
26.சுயம்பு லிங்கம்
27.சுழுமுனை ஊத்து, சுழுமுனை குகை
28.அகஸ்தியர் குகை, காலங்கி குகை
29.மணல் ஊற்று / காளி கானல் / மூங்கில்வனம்
30.ரோம விருச்சம், சந்தன மரம்
31.மதிமயக்கி வனம்
32.சிற்றாறு, பொன்னி நதி !!!

மாசி மகத்தில் புனித நீராடுங்கள்..!!பித்ரு தோஷத்தை நீக்கும் மாசி மகம்...!!

🌹 மாசி மகம்... 

பித்ரு தோஷம் உங்களை ஆட்டி படைக்கிறதா?
மாசி மகத்தில் புனித நீராடுங்கள்..!!

பித்ரு தோஷத்தை நீக்கும் மாசி மகம்...!!

☀ மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளே மாசிமகம் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது. காரணம் அன்று மாசி பௌர்ணமி திதி நாளாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர்களாக புவி ஆள்வார்கள். மிகுந்த சக்தியும், திறனும் படைத்தவர்கள். மகம் பித்ருக்களுக்கான நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது.

இப்படி பல சிறப்புகள் பெற்ற நட்சத்திரம் மகம் ஆகும். பௌர்ணமி அன்று நிலவு முழுமையான தோற்றம் பெற்று சந்திரனின் முழு சக்தியும் உடையதாய் திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும், நலனும் அளிக்கக்கூடிய நாளாகும். மகமும், பௌர்ணமியும் இணையும் மாசிமகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. இதனால் இந்நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. 

☀ மேலும் இந்நாள் மகத்துவம் மிக்கது. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன. 

☀ அந்த வகையில், வரும் (06.03.2023) திங்கட்க்கிழமை அதாவது, மாசி 22ஆம் தேதி மாசிமகம் வருகிறது. இந்நாளில் இறைவனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

பித்ரு தோஷம் நீங்கும் :

🙏 பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள்.

🙏 இந்த தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். அன்றைய தினம் கும்பகோணம் மகா மக குளத்தில் பிதுர் தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். 

பிரசித்திப்பெற்ற புண்ணிய தலங்கள் :

🏰 மாசிமகத்தன்று பிரசித்திப்பெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

🏰 குறிப்பாக ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் மற்றும் பிதுர்க்கடன் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும்.

புத்திர பாக்கியம் கிடைக்கும் : 

👶 மாசிமகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

👶 ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

மாசிமக நட்சத்திரத்தில் எந்த தெய்வத்தை வழிபடலாம்?

சிவபெருமான் வருணனிற்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளிலேயாகும். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசிமகம்.

உமா தேவியார் மாசிமாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. 

மாசிமகம் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. மேலும் சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகிறது.

தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசிமகம் தான். இதனால் முருகனை வழிபடுவதற்கும் சிறப்பான நாளாக மாசிமகம் அமைகிறது.

பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசிமகத்தன்றுதான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளும் ஆகிறது.

எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக அமைகிறது மாசிமகம். இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. 

பலன்கள் :

மாசிமகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

மாசிமகம் அன்று முறைப்படி விரதமிருந்து வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெறுவோம்.

🙏 கு பண்பரசு

_திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக் கரையில் நவகைலாயம் என்னும் ஒன்பது சிவாலயங்கள் அமைந்துள்ளது. அவை,_

_திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக் கரையில் நவகைலாயம் என்னும் ஒன்பது சிவாலயங்கள் அமைந்துள்ளது. அவை,_


1. பாபநாசம் – சூரியன்
2. சேரன் மகாதேவி – சந்திரன்
3. கோடக நல்லூர் – செவ்வாய்
4. குன்னத்தூர் – ராகு
5. முறப்ப நாடு – குரு
6. ஸ்ரீவைகுண்டம் – சனி
7. தென்திருப்பேரை – புதன் 
8. ராஜாபதி – கேது
9. சேர்ந்தபூமங்கலம் –சுக்கிரன் 


*நவகைலாயங்கள் உருவான வரலாறு :*

பொதிகை மலையில் இருந்து தவம் செய்த அகத்திய முனிவருக்கு முதல் சீடராக உரோமச முனிவர் என்பவர் பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்தார். 

அவருக்கு சிவபெருமானைக் கண்டு அருள்பெற்று முக்தி அடைய வேண்டுமென்று விருப்பம். 

அவர் தவ வலிமை மிக்கவர். அவர் சிவபெருமானையே நினைந்து வழிபட்டு வருபவர்.

சிவபெருமான் இவர் எண்ணத்தை கண்டு முனிவரது பெருமையை உலகிற்கு வெளிக்கொண்டுவர அகத்தியர் மூலம் திருவுளம் கொள்கிறார். 

அதன்படி தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் நீ விரும்பியது கிடைக்கும் என்றும், நீ தாமிரபரணி ஆற்றங்கரையோரமாகவே செல்ல வேண்டும் ,உன்னுடன் ஒன்பது மலர்களை தண்ணீரில் அனுப்புகிறேன். இம்மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு ஒதுங்கி நிற்கிறதோ அங்கு சங்கு மூலம் நீராடி சிவனை வழிபட வேண்டும். நீவிர் வழிபடுகின்ற சிவபெருமான் அருள்மிகு கைலாசநாதர் என்றும் அம்மை சிவகாமி என்றும் அழைக்கப்படுவர். பின்னர் தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் உமது எண்ணம் ஈடேறும் என்று அகத்தியர் கூறி உரோமேசரை அனுப்புகிறார். 

அகத்தியர் கூறியவாறு அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும்  மலர்கள் ஒதுங்கிய இடங்களில் தனது குரு கூறியபடி சங்கு மூலம் நீராடி சிவபெருமானை நவ கிரகங்களாக நினைந்து வழிபட்டு கடைசியாக தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி முக்தி அடைந்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

அப்படி அகத்தியரால் தாமிரபரணி ஆற்றில் விடப்பட்ட ஒன்பது மலர்களும் ஒதுங்கிய அந்த ஒன்பது இடங்களிலும் உரோமச மகரிஷி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து ஒன்பது கோயில்களை கட்டி நவகிரஹப் ப்ரீதி ஸ்தலங்களாக ஆக்கினார். 

அந்த ஒன்பது கோயில்களே தற்சமயம் நவகைலாசங்கள் என அழைக்கப்படுகின்றன. 

அகத்தியர் தாமிரபரணியில் விட்ட ஒன்பது மலர்களில் கடைசி மலர் சேர்ந்த இடமே சேர்ந்த பூமங்கலம் என அழைக்கப்படுகிறது. 

தாமிர பரணி நதி கடலில் கலக்குமிடத்திற்கு அருகே சேர்ந்தபூமங்கலம் அமைந்துள்ளது.

*நவ கைலாயங்களைப் பற்றிய ஜோதிட ரகசியம்*

ஜாதகத்தில் சர்ப்ப தோச நிவாரணத்திற்கு இந்த ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் பலன் கிடைக்கும்.

மேலும் இந்த கோயில்கள் அமைந்துள்ள வரிசை முறையை கவனித்து பார்த்தால் ஒரு சூட்சும ரகசியம் புலப்படுகிறது. 

அதாவது கிரகங்களின் விம்சோத்தரி தசா வரிசை முறை எப்படி அமைந்துள்ளதோ, அதே வரிசைமுறையில் இந்த கோயில்கள் அமைந்துள்ளன. 

விம்சோத்தரி தசா வரிசை முறையில் கிரக வரிசை கேதுவில் தொடங்கி சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் என அமையும். 

ஆனால் இந்த நவ கைலாயகோயில்கள் சூரியனில் தொடங்கி சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது, சுக்கிரன் என வரிசையாக அமைந்துள்ளன. 

கோட்சார கிரகங்களால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து விடுபட கும்பகோணத்தில் அமைக்கப்பட்டுள்ள 9 நவகிரக ஆலையங்களிலும்  தனித்தனியாக பரிகாரங்கள் செய்ய வேண்டும்.

தசா – புக்திகளால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து விடுபட திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ள நவகைலாசங்களிலேயே பரிகாரம் செய்ய வேண்டும்.

*🤘ஓம் நமசிவாய🙏*

Wednesday, March 1, 2023

ஊர் - திருச்சோற்றுத்துறைமாவட்டம் - தஞ்சாவூர்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 14வது சிவத்தலமாகும்.

சோற்றுத்துறை நாதர் திருக்கோவில்.
இறைவன் - சோற்றுத்தறைநாதர்
இறைவி  -  அன்னபூரணி.

ஊர் - திருச்சோற்றுத்துறை
மாவட்டம் - தஞ்சாவூர்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 14வது சிவத்தலமாகும்.

வழிபடும் அடியவர்களின் பசிப் பிணி தீர, இறைவன் உணவு வழங்குபவன்; ஆதலின் இத்தலம் சோற்றுத்துறை எனப்பட்டது.

அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்சய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று.

இத் தலம் சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று.

ஊர்ப்பெயருக்கேற்ப சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்ன தானம் நடைபெறுகிறது.

இத்தலத்தில் சமயக்குரவர்கள் பாடிய பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.
இத்தலத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் மூர்த்தியாக அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.

தனிக்கோயிலில் அம்பாள் திருமணக்கோலமாக காட்சி தருகிறாள்.

முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். 

சோழர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும், நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.

திருவையாற்றிலிருந்தும் திருக்கண்டியூரிலிருந்தும் இத்தலத்திற்குச் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் கும்பகோணத்திலிருந்து அய்யம்பேட்டை வழியாக கல்லணை மற்றும் திருவையாற்றுக்குச் செல்லும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம்.

#விஷ்ணு_சக்தி பீடம் என்னும் மந்திர பீடமான #கும்பகோணம் என்ற #திருக்குடந்தை (திருக்குடமூக்கு) #மங்களாம்பிகை என்னும் #மந்திரபீடேஸ்வரி திருக்கோயில் வரலாறு:

புகழ்பெற்ற 
மாசி மாதம் மகாமக தீர்த்தவாரி நடைபெறும் தலமான, 51 சக்தி பீடங்களில் ஒன்றான 
#விஷ்ணு_சக்தி பீடம் என்னும் மந்திர பீடமான #கும்பகோணம் என்ற #திருக்குடந்தை (திருக்குடமூக்கு) 
#மங்களாம்பிகை என்னும் #மந்திரபீடேஸ்வரி திருக்கோயில் வரலாறு:
அம்மனின் சக்தி பீட வரிசையில், குடந்தை கும்பேஸ்வரர் கோயிலில் கோயில் கொண்டுள்ள மங்களாம்பிகை, விஷ்ணு சக்தி பீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மந்திரிணி சக்தி பீடமாகவும் அழைக்கப்படும் இத்தலம், சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 89-வது தலம் ஆகும்.

கும்பேஸ்வரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர் மற்றும் அப்பரால் பாடல் பெற்ற சிவாலயம். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தலத்தில் மகாமகம் சிறப்பாக நடைபெறுகிறது. 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற இத்தலம் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் அருள்பாலிக்கும் இக்கோயிலில் லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்லச் செல்ல ஊசி வடிவிலும் காணப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் கல் நாகஸ்வரம் உள்ளது.

இந்திரன் முதலான திக் பாலகர்கள், காமதேனு, கார்த்தவீரியன், வீரவன்மன், மாந்தாதா, ஏமவாகுவின் மனைவி, கர்மசன்மா, சுவர்ணரோமன், காசிப முனிவர் உள்ளிட்ட பலர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

தல வரலாறு:

முன்பொரு காலத்தில் உலகம் தண்ணீரால் அழிய இருந்தது. அப்போது பிரம்மதேவர், சிவபெருமானிடம், தான் படைப்புத் தொழிலை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டார். சிவபெருமான், பிரம்மதேவரிடம், “புண்ணிய தலங்களில் இருந்து மணலைச் சேகரித்து, அமுதத்தோடு சேர்த்து மாயகும்பத்தை செய்ய வேண்டும். பிறகு கும்பத்தில் அமுதத்தை நிரப்பி, படைப்புக் கலன்களை அதனுள் வைத்து, நீரில் மிதக்க விடவும்” என்று கூறினார். அதன்படி பிரம்மதேவரும் கும்பத்தை செய்து, வெள்ளத்தில் மிதக்க விட்டார்.

கும்பம் ஓரிடத்தில் தங்கியதும், சிவபெருமான், அதன் மீது பாணத்தை எய்தார். அப்போது கும்பம் சிதைந்து, அதிலிருந்த அமுதம் அனைத்துப் பகுதியிலும் பரவியது. வெண்மணலுடன் கலந்த அமுதம் ஒரு லிங்கமாக உருவானது. அந்த லிங்கமே ‘கும்பேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறது. கும்பத்தை அலங்கரித்த மாவிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய் முதலான பொருட்கள், காற்றால் சிதைக்கப்பட்டு, அவை விழுந்த இடங்களில் தனித்தனி லிங்கங்கள் தோன்றின. அவை தற்போது தனிக்கோயில்களாக விளங்குகின்றன.

பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுத கலசம் தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றது.கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோயிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர். பிரளய காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் உருவானது.

அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருட்களான மாவிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல் முதலிய பொருட்கள் காற்றினால் சிதறடிக்கப்பட்டு, தாம் விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாகவும் விளங்குகின்றன. இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். சுயம்பு மூர்த்தியாக அருட்பாலிக்கிறார். லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படுகிறது.

#மங்களாம்பிகை:

கும்பேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள், மங்களாம்பிகை ஆகிய திருநாமங்கள் உண்டு. திருஞானசம்பந்தர் தனது பாடலில் மங்களாம்பிகையை ‘வளர் மங்கை’ என்று அழைக்கிறார். சிவபெருமான் பார்வதி தேவிக்கு தனது திருமேனியில் பாதியை வழங்கினார். அதே போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை மங்களாம்பிகைக்கு வழங்கியுள்ளார். அதனால் மங்களாம்பிகை ‘மந்திரபீடேஸ்வரி’ என்றும் அழைக்கப்படுகிறார். மஞ்சள் பட்டுடுத்தி, மஞ்சள் பூசி, குங்குமத் திலகமிட்டு, அம்பாள் அருள்பாலிப்பதைக் காண பக்தர்கள் எப்போதும் இந்த கோயிலில் குவிவது வழக்கம்.

கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் நான்கு கரங்களுடன் மங்களாம்பிகை அருள்பாலிக்கிறார். வலது மேல்கரத்தில் அமுதக் கலசத்தையும், இடது மேல்கரத்தில் அட்சமாலையையும் தாங்கி அருள்பாலிக்கிறார். வலது கீழ் கரம் அபயகரமாகவும், இடது கீழ்க்கரம் ஊர்வ அஸ்தமாகவும் அமைந்துள்ளன.

கல்வியில் சிறந்து விளங்க, தொழிலில் மேம்பட, திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, செல்வம் பெருக இத்தலத்தில் பக்தர்கள் கூடி மங்களநாயகிக்கு வழிபாடு செய்வது வழக்கம். விநாயகப் பெருமான் அம்மையும் அப்பனுமே உலகம் என்று கூறுவதைப் போன்று, இக்கோயிலில் கும்பேஸ்வரர், மங்களாம்பிகை இருவரையும் சேர்த்தே வலம் வருவது போன்ற பிரகார அமைப்பு உள்ளது.

#ஆவணி ஞாயிறு:

கும்பேஸ்வரர் கோயிலில் ஆவணி ஞாயிறு தினத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. மலையாள ஆண்டின் (கொல்லம்) தொடக்க மாதமாக ஆவணி (சிம்மம்) மாதம் உள்ளது. சூரியனின் நிலையைப் பொறுத்தே அந்த ஆண்டின் தட்ப வெட்ப நிலை அமையும் என்பதால் சூரிய பகவானை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக ஆவணி மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது.
மேலும், பயிர்களை அழிக்கும் எலி போன்ற பிராணிகளிடம் இருந்து பாதுகாக்க நாகராஜாவுக்கும் இங்கு வழிபாடு நடைபெறுகிறது. உலகை மீண்டும் படைக்க கும்பேஸ்வரர் தோன்றியதால், இத்தலத்திலும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் செம்பருத்தி மலர்களால் சுவாமிக்கு அர்ச்சனை செய்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

#கோயில் அமைப்பு:

ராஜகோபுரம் தவிர மொட்டை கோபுரம் ஒன்றும் உள்ளது, தாராசுரம் பகுதியில் இருந்து வருபவர்கள், மொட்டை கோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழையலாம். ராஜகோபுரம் வழியாக நுழைந்து நீண்ட மண்டபத்தை கடந்தால், பலிபீடம், கொடிமரம், பெரிய நந்திதேவரைக் காணலாம். கும்பேஸ்வரரை வணங்கிய பின், பிரகார வலத்தில் 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், காமதேனு, பவலிங்கம், சர்வ லிங்கம், ருத்ர லிங்கம், உக்ர லிங்கம் முதலான தெய்வங்களை வழிபடலாம். அங்கிருந்து மங்களாம்பிகை சந்நிதியை அடையலாம். பின்னர் அஷ்டபுஜ துர்கை, நவநீத விநாயகர், கிராத மூர்த்தி, பைரவர், ஜுரகேஸ்வரர், கோவிந்த தீட்சிதர், நாகாம்பாளை தரிசித்து, நவகிரக மண்டபத்தை அடையலாம்.

சிவபெருமானும் மங்களாம்பிகையும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இத்தல விநாயகர் ‘ஆதி விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார், இங்குள்ள கார்த்திகேயர் ஆறு முகம், ஆறு கரங்களுடன் உள்ளார். சூரசம்ஹாரத்துக்குச் செல்லும் முன், முருகப் பெருமான் இங்கு வந்து மந்திரபீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இத்தல கார்த்திகேயரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

வேடர் (கிராதர்) வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த கும்பத்தை, சிவபெருமான் உதைத்ததால், இத்தலத்தில் கிராத மூர்த்திக்கு சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. மகம் நட்சத்திர நாளில் இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம் விரும்பியது கிடைக்கும் என்பது ஐதீகம். நவராத்திர மண்டபத்தில் அமைந்துள்ள சிற்பங்கள், சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. கோயில் முன்பு பொற்றாமரை குளமும் அமைந்துள்ளது. மகாமக திருவிழாவின்போது குடந்தை வரும் பக்தர்கள், பொற்றாமரைக் குளம், மகாமகக் குளம், காவிரி ஆகியவற்றில் நீராடுவது வழக்கம்.

மகாமக தீர்த்தம்

குடந்தை நகரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமகக் குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தில் அமிர்தம் நிறைந்த கும்பத்தில் இருந்து அமிர்தம் பொங்கியபோது, ‘பூமி குழிந்து தாங்குக’ என்று சிவபெருமான் நினைத்ததால், அமிர்தம் திரண்டு மகாமகக் குளத்தில் தங்கியது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு பகவான் சிம்ம ராசியிலும், சூரிய பகவான் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பௌர்ணமி நாளில் கும்பகோணத்தில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோஷிணி, சரயு ஆகிய நதிகள் இங்கு வந்திருந்து நீராடி, தங்களது பாவங்களை போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

மகாமகக் குளத்தில், மகாமக தினத்தில் நீராடினால், நீராடுபவருக்கும் அவரைச் சேர்ந்த 7 தலைமுறையினருக்கும் புண்ணியம் உண்டு என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடந்தை சப்தஸ்தானம்

குடந்தையை மையமாகக் கொண்டு குடந்தை சப்தஸ்தான விழா நடைபெறும். கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில், சாக்கோட்டை திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி, கபர்தீஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில், சுவாமிமலை சுந்தரரேஸ்வர சுவாமி கோயில் ஆகியன சப்தஸ்தான கோயில்கள் ஆகும். சித்திரை மாதம் மகாமகக் குளத்தில் நடைபெறும் சப்தஸ்தான நிகழ்ச்சியில், தீர்த்தவாரிக்குப் பிறகு, கும்பேஸ்வரரும், மங்களாம்பிகையும் இந்த ஏழு தலங்களுக்கும் பல்லக்கில் எழுந்தருள்வர்.

ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்

பொன்னூஞ்சல், நீராடல், அம்மானை, அம்புலி, வாரானை, முத்தம், சப்பாணி, தாலம், செங்கீரை, காப்பு ஆகிய பருவங்களை விளக்கி, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திருக்குடந்தை மங்களாம்பிகை மீது பிள்ளைத் தமிழ் இலக்கியத்தை அருளியுள்ளார்.

தளர்நடை பயிலும் குழந்தையாக மங்களாம்பிகையை பாவித்துப் பாடும்போது, “கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி” என்கிறார். மங்களாம்பிகையைக் கண்டாலே, பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரம் அனைத்தும் பறந்தோடும் என்கிறார். பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல் ஆராவரிக்கும் என்று கூறி மகிழ்கிறார்.

சிவபெருமானின் பெருமைகள் அனைத்தும் அன்னை பார்வதியாம் மங்களவல்லிக்கே உரித்தாக்கப்படுகின்றன. வராக வடிவம் கொண்டு, சிவபெருமானின் அடியைத் தேடிச் சென்ற திருமால், அதைக் காணாது சோர்ந்து மீன்கள் நிறைந்த கடலுக்கு (பாற்கடல்) வந்து இளைப்பாறுகிறார். அன்னப் பறவை வடிவம் கொண்டு, உயர உயரப் பறந்து, சிவபெருமானின் முடியைக் காணாது, களைத்த பிரம்மதேவர், நிறைவாக அன்னையின் நடையால் கவரப்பட்டு, அன்னையைப் பின் தொடர்கிறார். மங்களாம்பிகையை வேண்டி, அவர்வழியில் செயல்பட்டால், அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்ற பொருள்பட, பிள்ளைத் தமிழ் அமைந்துள்ளது.

திருவிழாக்கள்

மாசி மகத்தில் தீர்த்தவாரி, பங்குனி மாதத்தில் தெப்பத் திருவிழா, சித்திரையில் சப்தஸ்தான நிகழ்ச்சி, வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கும் இங்கு விமரிசையாக இருக்கும். ஆடிப்பூர தினங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மாசி மக திருவிழாவில் அசுவதி தினத்தில் கொடியேற்றம் நடைபெற்று, எட்டாம் நாளில் வெண்ணெய்த் தாழி உற்சவம், ஒன்பதாம் நாளில் தேரோட்டம், பத்தாம் நாளில் மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷ தினங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். நவராத்திரி தினங்களில் கோயில் முழுவதும், கொலுவைக்கப்படுவதும் அதைக் காண பல ஊர்களிலிருந்து பக்தர்கள் இங்கு வருவதும் வழக்கம்.

த்தர் அருட்பாலிக்கிறார். இவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும். இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேஸ்வரி, மந்திரபீட நலத்தாள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறாள்.

தம்மை அன்போடு வணங்குவார்க்கு திவ்ய மங்களத்தை அருளும் மாட்சிமையால் மங்களநாயகி என்றும், 51 சக்திபீடங்களுள் ஒன்றான விஷ்ணுசக்தி பீடம் எனும் மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேஸ்வரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தாள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்வதால் நோயறுக்கும் பரை என்ற பெயரிலும் இந்த அம்பிகை வணங்கப்படுகிறாள். திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார்.

இறைவன் திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திரபீடேஸ்வரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருட்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது.

அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருட்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்திப் பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. மனிதர்கள் தங்களது பாபங்களைப் புண்ணிய நதிகளில் தலைமூழ்கி விட்டுச் சென்றதால் பாபத்தின் சுமை தாங்க முடியவில்லை என கங்கா, பிரம்மபுத்ரா, யமுனா, குபேர, கோதாவரி, நர்மதை, காவேரி, சரயூ, கன்யா ஆகிய நதிகள் மங்களாம்பிகையிடம் முறையிட்டன.

அவை மகாமகக் குளத்தில் கலந்தால், பாவங்கள் தொலையும் என மங்களாம்பிகை திருவாய் மலர்ந்தருளினாள். காசியில் புரியும் பாவம், ராமேஸ்வரத்திலும், ராமேஸ்வரத்தில் புரியும் பாவம் காசி கங்கையிலும் தீரும். கும்பகோணத்தில் புரியும் பாவம் மகாமக குளத்தில் மூழ்கினாலே தீரும் என்கிறது புராணம். சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் மங்களாம்பிகை அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோயிலிலிருந்து ரோஜா, அரளி, மல்லிகை, மரிக்கொழுந்து, கதிர்பச்சை, செண்பகப்பூ, தாழம்பூ, செவ்வந்தி, விருட்சிப்பூ போன்ற மலர்களை கூடைகளில் எடுத்துக்கொண்டு யானை முன்னே செல்ல ஊர்வலமாக செல்வர். கோயில் பிராகாரத்தை வலம் வந்து, கொடிமரம் அருகே சென்று பூக்களை வைப்பர்.அதன் பிறகு மங்களாம்பிகைக்கு சிறப்பு புஷ்பாபிஷேகமும், தொடர்ந்து ஆராதனையும், தீபாராதனையும் நடைபெறும். மந்த்ரபீடேஸ்வரியாய் மங்களங்கள் அருளும் மங்களாம்பிகையை  சரணடைவோம்.

ஓம் சக்தி 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏

திருநெல்வேலி மாவட்டம் அருகேயுள்ளது தோரண மலை. உலகிலேயே முதல் முதலில் அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலை.

#தோரணமலை_முருகன் 
உலகிலேயே முதன்முதலில் அறுவை சிகிச்சை நடந்த இடமான
#அகத்தியர் மற்றும் #தேரையர்_சித்தர் வழிபட்ட தலமான
புகழ்பெற்ற 
குகையில் உள்ள
#தோரணமலை
#பாலமுருகன் திருக்கோயில் வரலாறு:

திருநெல்வேலி மாவட்டம்  அருகேயுள்ளது தோரண மலை. உலகிலேயே முதல் முதலில் அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலை.  அகத்தியர் தலைமையில் தேரையர் உள்பட பல சித்தர்கள் அமர்ந்து  அந்த அற்புத  நிகழ்வை  செய்துள்ளனர். தோரணை என்றால் கம்பீரம் என்று பொருள். அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இம்மலைப்பகுதி தோரணமலை என பெயர் பெற்றது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது யானை படுத்திருப்பது போல தெரியும். தென்காசி - பாபநாசம் சாலையில் மாதாபுரத்தில் இருந்து இந்த அபூர்வ காட்சியை நாம் காணலாம்.

மூலவர்: தோரணமலை முருகன்
தீர்த்தம்: ராம,ஜம்பு நதி
புராண 
பெயர்: வாரண மலை
ஊர்:தோரணமலை
மாவட்டம்: திருநெல்வேலி
மாநிலம்: தமிழ்நாடு 

#அகத்தியர்:

கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா? அப்போது உலகை சமன் செய்ய தென்திசைநோக்கி சிவபெருமானால் அனுப்பப்பட்டவர்தான் குறுமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர். தென்திசை புறப்பட்ட அகத்தியருக்கு ஆதி மொழியாம் தமிழ் மொழியை உபதேசித்தார் சிவபெருமான்.

தென்தமிழகத்தில் உள்ள பொதிகை மலை வந்ததும் உலகம் சமநிலை அடைந்தது. அதன்பின் அகத்தியர் தமிழ் கடவுளான முருகப்பெருமானிடமும் தமிழை கற்று அகத்தியம் என்ற இலக்கண நூலை எழுதினார். தமிழுக்கு இலக்கணம் வகுத்தபின் அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மருத்துவம் என்றால் இந்த காலத்தைப்போல உடல்கூறுகளையும் மருந்துகளை மட்டும் படிப்பது அல்ல. இந்த மண் முதல் விண் வரை உலக இயக்கத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான் அவன் முழு மருத்துவன் ஆக முடியும். இதற்காக அகத்தியர் மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிராந்தங்கள் வகுத்துள்ளார். தான் கண்டறிந்த சித்த மருத்துவ குறிப்புகளை கொண்டு அகத்திய வைத்திய சேகரம் என்ற நூல் படைத்துள்ளார்.

அகத்தியருக்கு பல சீடர்கள் உண்டு. ஒவ்வொருவரையும் வானவியல், வேதியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின் படி பாடத்திட்டங்களை அகத்தியர் வகுத்தார். அந்த பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பதே முதல் பாடமாக இருந்தது. தொடர்ந்து கணிதமும், மருத்துவ ஆய்வு வகைகளும், வானசாஸ்திரங்கள், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாடகம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், இரசாயன ஆய்வு- அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்திமுறை, அனுபான முறைகள், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோகபற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரிநிலையில் தாவர சமூகங்கள், பாடான பற்பங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், இரணவாடகம், உடல்தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை போன்ற படிப்புகளும் உண்டு. இதுதவிர ஆறு ஆதாரநிலைகள், சரியை, கிரியை, ஞானம் என அனைத்து கலைகளும் கற்று கொடுக்கப்பட்டது.

இப்படி முழுமையான பாடத்திட்டம் வகுத்தப் பின்னர் அகத்தியர் தோரணமலை பகுதியில் பாடசாலையை தொடங்கினார். தோரணமலை பயிற்சி கூடத்தில் சீனா உள்பட உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பயில சித்தர்கள் பலர் வந்தனர். பின்னர் சிவபெருமான் நடனம் புரிந்த ஐந்து சபைகளில் அதாவது திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப்பட்டன. இதில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி(பழனி), கொள்ளிமலை, சித்தர்குகை, அவன் அவளாய் நின்ற மலை போன்றவை முக்கியமானதாகும்.

இந்த பாடசாலையில் ஆறு ஆறு ஆண்டுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் தனித்தனியே பட்டங்கள் வழங்கப்பட்டன. 

இந்த காலக்கட்டத்தில்தான் மன்னன் காசிவர்மனுக்கு தீராத தலைவலிக்காக அகத்தியர் கபால அறுவை சிகிச்சை செய்தார். அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்த சீடர் தேரையரை மூலிகை ஆராய்ச்சிக்காக பணித்தார். அவரும் தோரணமலையில் தங்கி இருந்து மூலிகைகள் மூலம் மருத்துவ சேவை செய்து வந்தார். அகத்தியரும் தேரையரும் தோரணமலையில் இருக்கும்போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர். அவர் இங்கேயே சமாதி நிலையை அடைந்தார்.

#சித்தர்_தேரையர்:

தோரண மலையை பற்றிய வரலாறு மிகச் சிறப்பானதாகும். சித்தர் தேரையர் மிகவும் சிறப்பு பெற்றவர். இவருடைய இயற்பெயர் தேரையர் அல்ல. ராமதேவன். அந்தணர் குலத்தில் பிறந்த இவருக்கு, பிறவியிலேயே பேச  இயலாது. ஆனாலும் ஆன்மிக ஞானத்தில் தான், திளைக்க விரும்பினார். இதையறிந்த ஔவையார் அகத்தியரிடம் இவரை  அழைத்துச்சென்றார்.அகத்தியர், தனக்கு சீடராக  அவரை ஏற்றுக்கொண்டார். அகத்தியர் எங்கு சென்றாலும் தேரையரை தன்னுடனே அழைத்துச் சென்றார்.

ஒருசமயம். கூன் விழுந்த பாண்டிய மன்னருக்கு அரண்மனை வைத்தியர்கள் பல மருத்துவங்கள் செய்தும் பலன் இல்லை.  எனவே அகத்தியரை தஞ்சம் அடைந்தார்.  “அய்யனே... என் கூனை தாங்கள் தான் நீக்கித் தர வேண்டும்” என்று கரம் பற்றி கதறினார்.  அகத்தியர், “கவலைப் படாதே மன்னா... உன் கூனை நான் நிமிர்த்தி விடுவேன்” என்று  அவரை தேற்றினார். அரசன் வைத்தியத்திற்காக தக்க தருணத்தினைத் தேடி காத்திருந்தார். குளிர் காலம் வந்தது. அகத்தியர், தனது சீடர்களை அனுப்பி தனக்கு தேவையான மூலிகைகளை சேகரித்தார். பின் அந்த மூலிகைகளை பக்குவப்படுத்தினார். அதை இடித்து சாறெடுத்தார். நெருப்பில் வைத்து  பதப்படுத்தினார். அவருக்கு உதவியாக தேரையரும் உடன் இருந்தார். அந்த சமயத்தில்  அகத்தியப் பெருமானை தேடி சிலர் வந்திருந்தனர். அவர்களைக் காண தனது குடிலை விட்டு வெளியே வந்தார் அகத்தியர். அந்த சமயத்தில் அடுப்பில் கொதித்து கொண்டிருந்தது மூலிகைச் சாறு.

அதை கண்ணும் கருத்துமாக  பாதுகாத்துக் கொண்டிருந்தார் தேரையர். திடீரென்று மேற்கூரையில் இருந்த, வளைந்த மூங்கில் சடசடவென்று நிமிர்ந்தது.
கொதிக்கும், மூலிகை சாற்றின் ஆவிதான் இந்த மூங்கிலை நிமிர்த்த காரணம் என்று நினைத்தார் தேரையர். இதுதான் தக்க தருணமென, கொதிக்கும் சாற்றை  அப்படியே இறக்கி வைத்தார். அகத்தியர், “ஏன் இப்படிசெய்தாய்?” என்று கேட்டார்.  “அடுப்பில் இருந்து சரியான பதத்தில் தான் இறக்கினேன்” என்று மூங்கிலை காட்டி சைகையில் விளக்கினார் தேரையர். மனம் மகிழ்ந்த அகத்தியர் அவரை கட்டி அணைத்துப் பாராட்டினார்.  அந்த காய்ச்சிய தைலத்தினை கூன் பாண்டியனுக்கு முதுகில் தடவி வர, அவன் கூன், இருந்த இடமே தெரியாமல் மறைந்து விட்டது. அதன்பிறகு அகத்தியரின் பிரதான சீடராகி விட்டார் தேரையர். அவருக்கு தேரையர் என்று ஏன் பெயர் வந்தது? அந்தச் சம்பவம் நடந்த இடம் தான் தோரண மலை.

காசி வர்மன் என்ற மன்னன் தென் தமிழகத்தினை ஆண்டு வந்தான். இவனுக்கு தீராத தலைவலி. தன்னுடைய அரண்மனை மட்டுமல்லாமல் பல இடத்தில் இருந்து ராஜ வைத்தியர்கள் எல்லாம் கூட்டி வந்து வைத்தியம்  பார்த்தார். ஆனால் தலைவலி தீர வில்லை. எனவே அகத்தியரை நாடினார். அகத்திய பெருமான், அவரை நன்கு சோதித்தார். தலைவலிக்கு காரணம்  கபாலத்தின் உள்ளே நுழைந்த தேரை என்று கண்டுபிடித்தார். அதாவது. அரசன் தூங்கும் போது ஒரு தேரைக் குஞ்சு மூக்கு  வழியாக, காற்றை சுவாசிக்கும் போது தலைக்குள் நுழைந்து விட்டது.  “மன்னா உன் தலைக்குள் தேரை வளர்ந்து கொண்டே இருக்கிறது. தேரை வளர வளர உனக்கு தலைவலி அதிகரிக்கிறது. எனவே அந்த தலைவலி தீர தேரையை வெளியே எடுக்கவேண்டும்”. என்றார் அகத்தியர்.

மன்னர் அப்படியே அதிர்ந்து விட்டார். தலைக்குள் இருக்கும் தேரையை வெளியே எடுக்க முடியுமா..? என்று குழப்பத்தினை தெரிந்து கொண்ட அகத்தியர்.  “பயப்படாதே மன்னா, உனக்கு நான் கபாலத்தை அறுத்து வைத்தியம் செய்வேன். தேரையை வெளியே எடுப்பேன்” என்றார்.  அகத்திய பெருமான் மீது நம்பிக்கை வைத்து, இந்த அபாய வைத்தியத்துக்கு ஒத்துக் கொண்டார்  மன்னர். மயக்கம் தரும் மூலிகை மூலம் மன்னரை மயக்கத்தில் ஆழ்த்தினார் அகத்தியர். ஐந்து நிமிடத்தில் தலையின் மேலே உள்ள கபால ஓட்டை திறந்தார். அங்கே.. மூளை மீது தேரை ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டிருந்தது. தேரையை எடுக்க வேண்டும். எடுக்கும்போது, மூளை மீது பட்டுவிட்டால்,  சேதமடைந்து மன்னன் பைத்தியம் ஆகி விடுவான். எனவே, எந்த பிரச்னையும் இல்லாமல் தேரையை எடுக்கவேண்டும். எப்படி என்று யோசித்தார். குருநாதர் திகைத்து நிற்பதை கண்ட ராமதேவன், வேகமாக சென்று வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். அந்த தண்ணீரை  தேரை கண்ணில் படும் படி அலசிக் காட்டினார்.

அதிகமான தண்ணீரை கண்ட தேரை சந்தோஷத்துடன் பாத்திரத்துக்குள் குதித்தது.  இது தான் சமயம் என்று அகத்தியர் கபாலத்தினை மூடினார். பின் சந்தானகரணி என்னும் மூலிகை கொண்டு கபாலத்தினை அடைத்துவிட்டார். குணமடைந்த அரசன் அரண்மனை சென்று பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் நாட்டை ஆண்டார். சீடன் ராமதேவனின் அறிவுத்திறனைக் கண்ட அகத்தியர் அவரைப் பார்த்து,  “தேரையை அகற்றிய காரணத்தினால் இன்றிலிந்து நீ...தேரையன் என்று அழைக்கப்படுவாய்” என கூறினார். அதுவே அவரது பெயராக மாறியது. உலகத்தில் முதல் முதலில் நடந்த அறுவை சிகிச்சையும் இதுவாகத்தான் இருக்க முடியும். இந்த மலையில் 64 சுனைகள் உள்ளன. இவை அனைத்துமே நோய் தீர்க்கும் அற்புத  சுனைகளாகும். தோரணமலைக்கு ராமபிரான் வந்துள்ளார். ராமபிரான் இப்பகுதியில் வாழ்ந்தார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. மாய மானை துரத்திக் கொண்டு ராமர் தென் பகுதிக்கு வந்த போது ஓரிடத்தில் மான் மாயமாக மறைந்ததாம்.  நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அந்த இடம் உள்ளது.

அதை “மாயமான் குறிச்சி” என்றழைக்கிறார்கள். மற்றொரு இடத்தில் மான் தலை கீழாக (குத்தரை)பாய்ந்தது. அந்த இடம் “குத்தரை பாய்ஞ்சான்” என்று அழைக்கப்படுகிறது. ஆலங்குளம் - தென்காசி ரோட்டில் ராமர்கோயில் இருக்கும் மலைக்கு “ஒக்கநின்றான் பொத்தை” என்று பெயர். ராமர்  மானை தேடி வந்தபோது ஒரு சாய்வாக நின்று பார்த்த இடம். அதாவது அவர் ஒரு பக்கமாக சரிந்து நின்ற பொத்தை  ஒக்கநின்றான் பொத்தை என்றழைக்கப்படுகிறது. அந்த மலைக்கு கீழே உள்ள ஓடைக்கு பெயர் மூக்கறுத்தான் ஓடை. ராவணனின் தங்கை சூர்ப்பணகை மூக்கை லட்சுமணர் அறுத்த இடம் தான் மூக்கறுத்தான் ஓடை. இந்த சம்பவங்கள் எல்லாம் நடக்கும் முன்பே அத்ரி முனிவர் ஆசிரமத்தில் அனுசுயா தேவியோடு தங்கியிருந்தார்கள். சீதாதேவி வனவாசம் வரும் போது, தன்னோடு நகை எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் ராவணன் சிறையெடுத்துச் சென்றபோது,  வழி நெடுக்க முத்து மாலையை  சீதாதேவி போட்டுச் சென்றுள்ளார். எப்படி சீதாதேவிக்கு முத்து மாலை கிடைத்தது.

முத்து, தூத்துக்குடியில் கடலில் கிடைக்கும் பொருள். அயோத்திக்கும்  முத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  மேலும், வனவாசம் வரும் பெண் நகை அணிகலன் அணிந்து வர சாத்தியம் இல்லை. எனவே, அந்த முத்துகளை அவர் அயோத்தியில் இருந்து கொண்டு வரவில்லை. ஆனால், முத்தால் உருவான மாலைகளை அனுசுயா தேவி  அன்போடு, சீதாதேவிக்கு  கொடுத்தார். ராவணன் சீதாதேவியை சிறையெடுத்துக்கொண்டு சென்றபோது, அவர் தனது கழுத்தில் உள்ள முத்துமாலையை வழியெங்கும்  போட்டுக்கொண்டே சென்றார். இந்த முத்து மாலைகளை எடுத்துக்கொண்டு தான்  அனுமன் இலங்கையில் சீதாதேவி இருப்பதை கண்டு பிடித்தார். முத்து மாலை விழுந்த இடங்கள் எல்லாம் புராண புகழ் பெற்றவையானது. தூத்துக்குடி மாவட்டம்  குரங்கணி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள முத்துமாலையம்மன்  உருவாக காரணமும் சீதாதேவியின் முத்துமாலை அங்கு விழுந்த காரணமே.  ராவணன் சிறையெடுத்துச் சென்றபோது ஜடாயு அவனை எதிர்த்துப் போராடித் தோற்ற இடம் தற்போதும் தாமிரபரணி கரையில்  அருகன் குளம் என்னும் இடத்தில் “ஜடாயு தீர்த்தம்” என்றழைக்கப்படுகிறது.

குரங்குகள் தட்டு தட்டாக நின்ற இடம் குரங்கன் தட்டு.  குரங்கு அணிஅணியாக நின்ற இடம் குரங்கணி. அனுமன் லட்சுமணரை காப்பாற்ற சஞ்சீவி மலையுடன் தாவிய இடம் மகேந்திர கிரிமலை. இது போன்ற ஒருசுவடுதான் தோரண மலையில் உள்ள ராமர் பாதம். சீதையை தேடி வந்த போது அவர்  பாதம் தோரணமலையில்உருவாகியுள்ளது. இத்தகைய சிறப்புகள் கொண்ட தோரண மலையில் தான் தேரையர் சித்தரின்  சமாதி உள்ளது. இந்த தோரண மலையில் முருகன் ஆலயம் உள்ளது. மலையின் அடிவாரத்தில் வல்லப விநாயகர், கன்னிமார் அம்மன், குரு பகவான் ஆகியோருக்கான சந்நதிகள் உள்ளன. நவகிரகங்களுக்கு தனிச் சந்நதி அமைந்துள்ளது. சிவபெருமான், கிருஷ்ணண், சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோரின் சுதைச் சிற்பங்களும் உள்ளன. மலைக்குச் செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சந்நதியில் சுதையாலான பால முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்க முடியாதவர்கள் கீழே இவரை தரிசித்து அருள் பெறலாம். மலை உச்சியை அடைய 926 படிக்கட்டுகள் ஏற வேண்டும்.

உச்சியில் உள்ள குகையில் கையில் வேல் ஏந்தி, மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் மூலவரான தோரணமலை முருகப்பெருமான் அருட் பாலிக்கிறார். அவருக்கு இடது புறம் சற்று உயரமான இடத்தில் சுனை ஒன்று உள்ளது. வலது புறத்தில்  மற்றொரு சுனை உள்ளது. அந்த சுனைக்குள் தான் பல காலமாக இங்கே பிரதிஷ்டை செய்துள்ள முருகன் சிலை இருந்துள்ளது. எதிரே ராமர் பாதம். அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு ஒரு கோயில். 1000 வருடங்களுக்கு முன்பு அகத்தியரின் மருத்துவமனையாக விளங்கிய இந்த தோரணமலை நாளடைவில் அப்படியே  தூர்ந்து விட்டது. இங்கு முருகனுக்கு அமைக்கப்பட்டிருந்த கோயிலும் காணமல் போய் விட்டது. இதற்கிடையில் இந்த  பகுதியில் உள்ள ஒரு ஊர் பெரியவர் கனவில் தோன்றி, நான் அருகில் உள்ள சுனையில் கிடக்கிறேன். என்னை எடுத்து வணங்குங்கள் என்று முருகப்பெருமான் கூறினார். அதன் படி சுனையில் தேடியபோது, அங்கே முருகன் சிலை கிடைத்தது. அதை எடுத்து தற்போது உள்ள இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்தனர்.

அந்த சமயத்தில் ஆசிரியர் ஆதிநாராயணன் என்பவர் இந்த கோயிலை மக்களுக்கு அறிமுகப் படுத்த முயற்சி செய்தார்.  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் தோரணமலை குறித்த விளம்பரப் பலகையை காட்டினர். ஒரு கோயிலுக்கு விளம்பரமாக இது போல் சினிமா தியேட்டரில்  ஸ்லைடாக  காட்டிய வரலாறு வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை. அதை பார்த்து பக்தர்கள் தோரணமலை  வர ஆரம்பித்தனர்.
தற்போதும் கூட இங்கே தீராத நோயால் அவதியுறுபவர்கள் வந்து பாறையில் அமர்ந்து தியானம் செய்தால், நோய் தீருகிறது. மருத்துவ படிப்புக்கு மனு செய்து விட்டு, இங்கே அமர்ந்து தியானம் செய்தால், இடம் கிடைக்கிறது. 

#கோயில்_திருப்பணி 
#ஆதி_நாராயணன்:

காலப்போக்கில் அங்கு வழிபாடு நின்றுபோனதோடு முருகன் சிலையும் காணாமல் போனது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் ஆதிநாராயணன் அவர்களது மூதாதையர் ஒருவர் கனவில் முருகப்பெருமான் வந்து தான் தோரணமலையில் இருப்பதாகவும் அங்கு சுனையில் மறைந்து கிடக்கும் சிலையை குகையில் நிறுவி வணங்கும்படியும் கூறினார். அதன்படி அவர் அங்கு வந்து சுனையில் மறைந்திருந்த முருகனை மீட்டு குகையில் ஸ்தாபித்து வணங்கி வந்தார். சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது ஐதீகமாகும்.

இந்த நிலையில்தான் 1970 ஆம் ஆண்டு ஆதிநாராயணன் அவர்கள் கோயில் பொறுப்புகளை ஏற்றார். பள்ளிக்கூட ஆசிரிய ரான அவர் வேலைநேரம் தவிர மற்ற நேரங்களை தோரணமலையிலேயே கழித்தார். கடையம் சுற்றுவட்டாரத்திற்கு மட்டும் தெரிந்த அந்த கோயிலை பிரபல படுத்த எண்ணினார். அதற்கு என்னவழி என்று சிந்தித்தார். அப்போதெல்லாம் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே சினிமா தியேட்டர்களில் தோரணமலை முருகன் பற்றிய சிலேடுகளை போட ஏற்பாடு செய்தார். அப்படித்தான் தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. இந்த நிலையில் தோரணமலையின் வனப்பை கண்ட சினிமா கலைஞர்கள் அங்கு சினிமா படம் எடுக்க வந்தனர். அவர்களுக்கு ஆதிநாராயணன் அவர்கள் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தவுடன் தங்களுக்கு இடம் கொடுத்து உதவியும் செய்ததற்காக ஒரு கணிசமான தொகையை ஆதிநாராயணனன் அவர்களிடம் கொடுத்தனர்.

ஆனால் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். மாறாக, எனக்கு நீங்கள் நன்றிக்கடன் செலுத்த வேண்டுமானால் படத்தில் எழுத்துப்போடும் போது தோரணமலை என்ற பெயரை போடும்படி கேட்டுக்கொண்டார். அதனை புனிதமாக கருதிய படக்குழுவினர் தோரணைமலை என்ற பெயரை படத்தில் சேர்த்தனர். மறைந்த இயக்குனர் பரதனின் சாவித்திரி என்ற சினிமாப்படம் (இந்த படத்தில் கதாநாயகியாக நடத்தவர் பிரபல நடிகை கீர்த்திசுரேசின் தாயார் மேனகாதான்) இங்கு அதிக அளவில் படமாக்கப்பட்டது. அந்த படத்தின் வசனத்தில் தோரணமலை என்று குறிப்பிட்டு பேசுவார்கள். அதேபோல் டெலிவிஷன் தொடர்களும் இங்கே படமாக்கப்பட்டன. அதிலும் தோரணமலை பெயர் இடம்பெறும்.

இப்படி தோரணமலையில் பெயர் நாலாபுறமும் பரவியதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் வரத்தொடங்கினர். கிராமவாசிகள் மட்டும் வந்தகாலம் போய் நகரவாசிகளும் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களால் மலையில் எளிதாக ஏறமுடியவில்லை. அப்போதுதான் ஆதிநாராயணன் அவர்கள் பக்தர்கள் எளிதாக மலைமீது ஏற படிக்கட்டுக்கள் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்காக பலரை சந்தித்து உதவி கேட்டார். அப்போதும் பணத்தை தாருங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை. உங்களால் இயன்ற படிக்கட்டுகளை கட்டித்தாருங்கள் என்றுதான் வேண்டினார். இந்த நிலையில்தான் ஆவுடையானூர் டாக்டர் முருகனின் அருளால் ஈர்க்கப்பட்டார். அவர் அடிக்கடி தோரணமலைக்கு வருவார். அவரது திருப்பணி மிகவும் மகத்தானது. அவரது முயற்சியால் பல படிக்கட்டுகள் முழுமை அடைந்தன. அதோடு வழியில் உள்ள லட்சுமி தீர்த்தத்தை புதுப்பித்து அங்கே பக்தர்கள் நீராட வசதி செய்து கொடுத்தார். இதற்காக அந்த டாக்டரே தன் தலையில் செங்கற்களை சுமந்த சம்பவங்களும் உண்டு. அதோடு பண உதவி செய்ய இயலாத பாமர ஏழை பக்தர்களும் திருப்பணி செங்கற்களை கொண்டு சென்றனர்.

ஆதிநாராயணன் அவர்கள் இந்த திருப்பணியை தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது. இந்த வயதிலும் அவருடைய எண்ணங்கள் அனைத்தும் தோரணமலை முருகனையே வலம் வந்து கொண்டிருக்கிறது. மோட்டார் சைக்கிள்களும், கார்களும் பெருகி விட்ட இந்த காலத்திலும் தனது திருப்பணிக்கு உதவிய மிதிவண்டியை அவர் இன்றும் மறக்கவில்லை. இயக்குவார் யாரும் இல்லை என்றாலும் அந்த மிதிவண்டி முருகனின் பெயரை சொல்லும் காட்சி பொருளாக அவரது வீட்டில் நின்று கொண்டிருக்கிறது. வயது முதுமை காரணமாக ஆதி நாராயணன் அவர்களுக்கு அவரது மூத்த மகன் செண்பகராமன் உதவியாக இருக்கிறார். சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தோரணமலையின் பெருமையை பறைசாற்றி வருகிறார். 

64 சுனைகள்:

தோரணமலை முழுவதிலும் சுமார் 64 சுனைகள் இருக்கின்றன. அடிவாரத்திலேயே இரண்டு சுனைகள் காணப்படுகின்றன. இந்தச் சுனைகளில் நீராடினால் சரும நோய்கள் நீங்குவதுடன், பல வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்ல, கடும் கோடைகாலத்திலும் வற்றாத இந்த ஜீவ சுனைகளில், ஒவ்வொரு சுனையின் நீரும் ஒவ்வொரு சுவையுடன், மருத்துவக்குணமும் கொண்டிருப்பது இயற்கையின் அற்புதம்.

பாரதியார் பாடல் பெற்ற தலம்:

கடையத்தில் சிறிது காலம் வாழ்ந்த மகாகவி பாரதியார் ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.

இக்கோயிலில் தைப் பூசம், கார்த்திகை திருவிழா, பங்குனி உத்திரம், உள்பட பல விழாக்கள் நடைபெறுகிறது. 

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி - அம்பாசமுத்திரம் ரோட்டில்  மாதாபுரம் என்னும் இடத்தில் இறங்கி ஆட்டோவில் தோரணமலைக்கு செல்லலாம். மாதாபுரம் விலக்கிலிருந்து மினி பஸ் வசதி உண்டு. தினமும் காலை 9 மணியிலிருந்து 3 மணி வரை நடை திறந்து இருக்கும். 

தொடர்புக்கு 
99657 62002, 7695962002 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

ஓம் முருகா 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

சிவனுக்காக தன் கண்ணையே அர்ப்பணித்த சிவபக்தர் அல்லது நாயனார் ஆகியதால், அன்று முதல் அவர் கண்ணப்ப நாயனார் என்ற பெயரைப் பெற்றார்.

63 நாயன்மார்கள் 9

கண்ணப்ப நாயனார்.
ஒருநாள், திண்ணன் என்ற கைதேர்ந்த வில்லாளன் வேட்டையாடச் சென்றபோது, கானகத்தில் சிவனிற்கு கட்டப்பட்டிருந்த ஒரு சிறிய கோயிலில் இருந்த சிவலிங்கத்தைக் கண்டான். திண்ணனுக்கு சிவன் மீது இருந்த ஆழமான பக்தியால் ஏதோவொன்றை அர்ப்பணிக்க விரும்பினான். ஆனால் முறையாக அர்ப்பணிப்புகள் செய்யும் வழிமுறைகளை அறியாததால், வெள்ளந்தியாக தன்னிடம் இருந்த மாமிசத்தை லிங்கத்திற்கு அர்ப்பணித்து, சிவன் அதை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன் சென்றான்.
தன் இன்னொரு கண்ணை எடுத்திட கத்தியைக் கண்ணில் வைத்தான், ஆனால் இரண்டு கண்களும் இல்லாமல் எங்கு பொருத்துவது என்று தெரியாமல் போகுமென்பதை உணர்ந்தான். அதனால் லிங்கத்தின்மீது ஒரு காலை வைத்து மற்றொரு கண்ணையும் பெயர்த்தெடுத்தான்.

தொலைதூரத்தில் வாழ்ந்த ஒரு பிராமணனால் அந்தக் கோயில் பராமரிக்கப்பட்டு வந்தது. அவன் சிவபக்தனாக இருந்த போதிலும், தினமும் நீண்ட தூரம் பயணம் செய்து கோயிலுக்குச் செல்ல முடியாததால், மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே வந்து சென்றான். அடுத்தநாள் பிராமணன் வந்தபோது, லிங்கத்திற்கு அருகில் மாமிசம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். இதை ஏதோ விலங்குதான் செய்திருக்கும் என்று எண்ணி கோயிலை சுத்தம் செய்து தன் பூஜைகளை முடித்துவிட்டுச் சென்றான். அடுத்தநாள் திண்ணன் இன்னும் அதிகமாக மாமிசத்தைக் கொண்டுவந்து படைத்துவிட்டு, பூஜையோ சடங்கோ எதுவும் தெரியாததால் அங்கே உட்கார்ந்து சிவனிடம் மனமாரப் பேசிவிட்டுச் சென்றான். தான் வேட்டையாடிய மாமிசத்தைப் படைப்பதற்காக தினமும் அக்கோயிலுக்கு வரத் துவங்கினான். ஒருநாள் லிங்கத்தை சுத்தம் செய்யத் தேவையாக இருக்கிறது என்று நினைத்த திண்ணன், தண்ணீர் இறைக்க பாத்திரங்கள் இல்லாததால் நீரோடைக்குச் சென்று வாயில் தண்ணீரை நிறைத்துக் கொண்டு வந்து லிங்கத்தின்மீது வாயாலே ஊற்றினார்.
பிராமணன் திரும்பியபோது, கோயிலில் இருந்த மாமிசத்தையும், லிங்கத்தின் மீது இருந்த எச்சிலையும் கண்டு தாங்கமுடியாத அருவருப்படைந்தான். இதை எந்தவொரு விலங்காலும் செய்திருக்க முடியாது, இதைச் செய்தது ஒரு மனிதனாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்தான். உடனே கோயிலை சுத்தம் செய்து, பூஜை செய்வதற்கு முன்பு லிங்கத்தைத் தூய்மைப்படுத்த மந்திரங்கள் உச்சாடனம் செய்து, அர்ப்பணிப்புகள் செய்துவிட்டுக் கிளம்பினான். ஆனால் ஒவ்வொரு முறை அவன் திரும்பி வந்தபோதும், லிங்கம் அதே "அசுத்தமான" நிலையில் இருப்பதைக் கண்டு வெகுண்டான். ஒருநாள் கண்களில் கண்ணீர் மல்க சிவனிடம் வந்து, "தேவர்களுக்கு தேவனான மஹாதேவனே, இப்படிப்பட்ட அசிங்கம் உனக்கு நிகழ்வதை நீ எப்படி அனுமதிக்கலாம்?" என்று கேட்டான். அப்போது சிவன் பதில் சொல்லலானான், "எதை நீ அசிங்கம் என்று சொல்கிறாயோ, அது எனக்கு இன்னொரு பக்தன் செய்த அர்ப்பணிப்பு. நான் அவன் பக்திக்குக் கட்டுப்பட்டு அவன் அர்ப்பணிக்கும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன். அவன் பக்தியின் ஆழத்தை நீ பார்க்க விரும்பினால், அருகில் எங்காவது ஒளிந்துகொண்டு கவனித்துப்பார். அவன் சீக்கிரமே இங்கு வருவான்."

பிராமணன் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். அப்போது திண்ணன் மாமிசத்துடனும் தண்ணீருடனும் வந்தான். எப்போதும் போல் சிவன் தன் அர்ப்பணிப்பை ஏற்காததைக் கண்டு குழம்பிப்போனான். தான் என்ன தவறு செய்தோம் என்று யோசித்துக்கொண்டே லிங்கத்தை உற்று கவனித்தபோது, லிங்கத்தின் வலது கண்ணிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டான். அதை குணமாக்க பச்சிலைகளை வைத்துப் பார்த்தான், குணமாகவில்லை, இரத்தம் இன்னும் அதிகமாகத்தான் வந்தது. இறுதியில் தன்னுடைய கண்ணை அர்ப்பணிக்க முடிவுசெய்தான். தன் கத்திகளில் ஒன்றை எடுத்து, தன் கண்ணைப் பெயர்த்தெடுத்து லிங்கத்தில் பொருத்தினான். இரத்தம் வடிவது நின்றதைக் கண்டு திண்ணன் நிம்மதியடைந்தான். ஆனால் இப்போது லிங்கத்தின் இடது கண்ணிலிருந்து இரத்தம் வடிவதை கவனித்தான். தன் இன்னொரு கண்ணை எடுத்திட கத்தியைக் கண்ணில் வைத்தான், ஆனால் இரண்டு கண்களும் இல்லாமல் எங்கு பொருத்துவது என்று தெரியாமல் போகுமென்பதை உணர்ந்தான். அதனால் லிங்கத்தின்மீது ஒரு காலை வைத்து மற்றொரு கண்ணையும் பெயர்த்தெடுத்தான். திண்ணனுடைய பரிபூரண பக்தியைக் கண்டு அவன் முன்னால் சிவபெருமான் தோன்றினார், அப்போது அவனுக்குப் பார்வை திரும்பி சாஷ்டாங்கமாக சிவனின் காலடியில் விழுந்தான். சிவனுக்காக தன் கண்ணையே அர்ப்பணித்த சிவபக்தர் அல்லது நாயனார் ஆகியதால், அன்று முதல் அவர் கண்ணப்ப நாயனார் என்ற பெயரைப் பெற்றார்.

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...