Saturday, June 3, 2023

வீரபத்திரர் யார்...?

வீரபத்திரர் யார்...?
தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தினமும் ஈசனை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு 'வீரபத்திரர்' பற்றி தெரிந்து இருக்கும். என்றாலும் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் பற்றியும், அவரது அவதார சிறப்புப் பற்றியும் அறிந்து கொள்ளாமலே உள்ளனர். 'சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்' என்று ஒரே வரியில் வீரபத்திரர் பற்றி சொல்லி விடலாம். 

ஆனால் அந்த அவதார சிறப்பை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவான வீரபத்திரர், 'அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்' தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். இது பற்றிய விவரம் வருமாறு..

தீயவர்களையும், தீயச் செயல்களையும் அழிக்க சிவபெருமான் எட்டு தடவை போர்க்கோலம் பூண்டார். இந்த 8 போர்களும் 8 இடங்களில் நடந்தன. அந்த இடங்கள்தான் அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 8 நிகழ்வுகளில் 6 தலங்களில் ஈசனே நேரடியாக சென்று போரிட்டு அசுரர்களை அழித்தார். மீதமுள்ள இரண்டில் ஈசன் நேரடியாக பங்கேற்கவில்லை. 

அதற்கு பதில் தன் அருட்பார்வையால் உருவான வீரபத்திரர், பைரவர் ஆகிய இருவரையும் அனுப்பி தட்சன், பிரம்மன் ஆகியோரை வதம் செய்து அருள்புரிந்தார். இதில் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி, உன்னதமான வெற்றியாகக் கருதப்படுகிறது. அந்த வெற்றி வீரவரலாறாக புராணங்களில் இடம் பெற்றுள்ளது. 

அந்த வகையில் வீரபத்திரரின் அவதாரம் ஒப்பற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. அது மட்டுமின்றி, வீரபத்திரர் பெற்ற வெற்றி தனித்துவம் கொண்டது. ஏனெனில் அட்ட வீரட்டங்களில் 7 வீரட்ட தலங்களில் நடந்த போர்களில், தேவர்களுக்கு உதவி செய்யவே சிவபெருமான் போர் புரிந்தார். ஆனால் வீரபத்திரரை அனுப்பி ஈசன் நடத்திய போர், தேவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராகும். 

வீரபத்திரரின் ஆவேசத்தால் எல்லா தேவர்களும் நிலகுலைந்து போனார்கள். வீரபத்திரரால் தேவர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்பட்ட விதம், வீர பராக்கிரமமாகப் போற்றப்படுகிறது. இந்த பராக்கிரம கதை உங்களுக்குத் தெரிந்ததுதான். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த 'திருவிளையாடல்' படத்தில் இந்த கதை இடம் பெற்றுள்ளது. 

பிரம்மனின் மகன் தட்சன். இவனது மகள் தாட்சாயினி. இவளை உலகை ஆளும் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஈசனுக்கு தட்சன் மாமனார் ஆனான், இது தட்சனை கர்வம் கொள்ள வைத்தது. அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந்தை கொண்டான். ஒரு தடவை அவன் மிக பிரமாண்டமான யாகம் நடத்தினான். 

30 ஆயிரம் மகரிஷிகளைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த வேள்விக்கு ஈசனைத் தவிர தேவர் உலகத்தில் உள்ள அனைவரையும் அவன் அழைத்தான். சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்தினான். திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த யாகத்தில் பங்கேற்றனர். 

விதி வசமோ... அல்லது தந்தை பாசமோ தெரிய வில்லை. தட்சனின் மகளான தாட்சாயினியும், 'என் தந்தை நடத்தும் யாகத்தை காணச் செல்கிறேன். அனுமதி தாருங்கள்' என்று ஈசனிடம் வேண்டினாள். ஈசன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாட்சாயினி கேட்கவில்லை. 'சிவத்தை விட சக்திதான் பெரிது' என்று சொல்லி விட்டு தட்சன் நடத்தும் யாகப் பகுதிக்கு வந்தாள். 

அங்கு வந்த பிறகு தான், ஈசனுக்கு இழைக்கப்படும் அவமானங்களை உணர்ந்தாள். தந்தை தட்சனை திருத்த அவள் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. கணவர் பேச்சை கேட்காமல் வந்தததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டதாக வருத்தம் அடைந்த தாட்சாயினி, அங்கிருந்த யாகக் குண்டத்தில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டாள். 

தாட்சாயினி மறைவு செய்தி கேட்டதும் சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். தட்சனையும், அவன் நடந்தும் யாகத்தையும் அழிக்க முடிவு செய்தார். அது மட்டுமின்றி நீதி, நெறிதவறி தட்சனுக்கு துணைபோன எல்லா தேவர்களையும் தண்டிக்கவும் அவர் முடிவு செய்தார். இதற்கு தானே நேரில் சென்று போரிடுவதற்கு பதில், தன் பிரதிநிதியை அனுப்ப தீர்மானித்தார். 

அதன்படி அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெடித்துக் கிளம்பின. அதில் இருந்து வீரபத்திரர் தோன்றினார். சிவபெருமான் போலவே மூன்று கண்கள், அக்னி சடை, 8 கைகள், அந்த கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, நாகமாலை அணிந்து வீரபத்திரர் வெளிப்பட்டிருந்தார். 

தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற, சிவ நிந்தனை செய்த தட்சனின் யாகம் நடந்த இடத்துக்கு உடனடியாக வீரபத்திரர் விரைந்தார். முதலில் அவர் தட்சனின் தலையை வெட்டி வீசினார். இதை கண்டதும் யாக புருஷன், மான் வடிவம் கொண்டு ஓடினார். அவரையும் வீரபத்திரர் வதம் செய்தார். பிரம்மன் தலைகளும் வெட்டப்பட்டன. 

தோளில் வெட்டுப்பட்ட இந்திரன், குயிலாக மாறி மறைந்தான். கையில் வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான். சூரியனின் பற்கள் உடைந்தன. சரஸ்வதி மூக்கு அறுக்கப்பட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களும் சிதறி ஓட யாகசாலை அழிக்கப்பட்டது. அப்போது திருமால், வீரப்பத்திரரை எதிர்த்தார். 

அப்போது திருமாலின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் உள்ள ஒரு முகம் கவ்விக் கொண்டது. இதன் மூலம் தட்சனோடு சேர்ந்திருந்த எல்லா தேவர்களும் தண்டிக்கப்பட்டனர். வீரபத்திரரின் ஆவேசத்துக்கு முன்பு இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிந்தனர். 

தாங்கள் செய்த தவறை மன்னித்து பொறுத்து அருளும் படி வேண்டினார்கள். இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார். அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர். தலை இழந்த தட்சனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது. 

அப்போது தட்சன், யாகசாலை இருந்த இடத்தில் தோன்றிய ஈசன், அங்கு இருந்தபடியே மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இது தான் வீரபத்திரரின் அவதார கதை.

வீரபத்திரரை வழிபட்டால் விவேகம், வீரம் வெற்றிகள் தேடிவரும் ...
.

Friday, June 2, 2023

•கந்தப் பெருமானின் அறுபடைவீடுகள் வரிசையில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் 4-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது.

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுவாமிமலை
126.#அருள்மிகு_சுவாமிநாத_சுவாமி_திருக்கோயில்_வரலாறு

மூலவர் : சுவாமிநாதர், சுப்பையா

அம்மன் : வள்ளி, தெய்வானை

தல விருட்சம் : நெல்லிமரம்

புராண பெயர் : திருவேரகம்

ஊர் : சுவாமிமலை

மாவட்டம் : தஞ்சாவூர்

ஸ்தல வரலாறு :

மும்மூர்த்திகளில் ஒருவரான படைப்புக் கடவுள் பிரம்மாவிற்கு ஒரு சமயம், தான் என்ற கர்வம் தலைக்கேறியது. அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே முதல்வன் என எண்ணிக்கொண்டார். அதனால் கர்வம் தலைக்கேற ஆணவம் கொண்டார். அதனை அடக்க மனம் கொண்டார் முருகப்பெருமான். கைலாயத்தில் சிவனை தரிசிக்க பிரம்மன் வர நேர்ந்தது. அப்போது ஆணவம் தலைக்கேறிய பிரம்மன் முருகனை பாலன்தானே என அலட்சியமாக நினைத்தார். முருகன் பிரம்மனை அழைத்து பிரணவத்தின் பொருளையும், அதன் தத்துவத்தையும் கூறுமாறு கேட்டார். பிரம்மனால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் வெகுண்ட முருகன், பிரம்மன் தலையில் குட்டி சிறையில் அடைத்தார். இதனால் படைப்பு தொழில் பாதிப்படைந்தது. 

சிவபெருமான் பிரணவத்தின் பொருள் அறிந்தவரே, அறியாதவர் அல்ல. பிருகு முனிவர் ஈசனை வேண்டி தான் ஜீவன் முக்தனாக வேண்டிய கடுந்தவம் புரிந்து வந்தார். தனது தவத்திற்கு இடையூறு ஏற்படாது இருக்க தன் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க கடவது என சாபமிட்டு தவம் செய்யலானார். அவருடைய தவாக்னி தேவர்களை பீடிக்க அவர்கள் மகாவிஷ்ணுவுடன் பரமேஸ்வரனை அணுகி பிரார்த்திக்க சிவபெருமான் தன் திருக்கரத்தை முனிவரின் சிரசில் வைத்து அவருடைய தவாக்னியை அடக்குகிறார். பிருகு முனிவர் பிரக்ஞை அடைந்து கண்விழிக்கிறார். சிவபெருமானைக் கண்டு வணங்கி மகிழ்கிறார். சிவனும் உன் தவத்தை மெச்சி உன் விருப்பத்தை அருள்கிறேன் என ஆசீர்வதித்தார். பிருகு முனிவர் சிவன் தன் தவத்தை கலைத்ததால் தன்னுடைய சாபம் சிவனை பாதிக்குமே என வருந்தி சிவனிடம் மன்னித்தருளும்படி கேட்கிறார். சிவனும் உன் வாக்கிற்கு பழுது வராது. நான் உன் சாபத்தை மகிழ்வுடன் ஏற்கிறேன் என்று கூறுகிறார். ஆத்மாவை புத்திர நாமஸி என்கிறது வேதவாக்கு. அதன்படி தன் பிள்ளையான சுவாமிநாதனிடம் ரிஷியின் வாக்கை உண்மையாக்க சிவன் பிரம்மோபதேசம் செய்து கொள்கிறார். இதுவே சிவனுக்கு பிரணவப் பொருள் மறக்க காரணமாகும்.

தேவர்கள் அனைவரும் சென்று நடந்ததையும் நடக்க தேவைப்படுவதையும் சிவனிடம் எடுத்துக் கூறினார். எத்தனையோ திருவிளையாடல்களை நடத்திய எனக்கு இது முருகப்பெருமான் மூலம் வரும் புதிய திருவிளையாடல் என்பதை உணர்ந்தார். முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும் படிக்கூறினார். “பிரணவத்தின் பொருள் கூடத்தெரியாத பிரம்மனுக்கு படைப்பு தொழில் எதற்கு?” என எதிர் கேள்வி கேட்டார் முருகப்பெருமான்.

பிரம்மனுக்கும் தெரியாத பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என முருகனிடம் கேட்க, எனக்குத் தெரியும் என்றார் முருகப்பெருமான். அப்படியானால் சொல்! சிவன் கேட்க, தாம் குருவாகவும், தாங்கள் சிஷ்யனாகவும் இருந்து உபதேசம் பெற வேண்டும் (தத்துவ உபதேசம்) என கூறினார். 
முருகப்பெருமானின் திருவிளையாடலின் உச்ச கட்டம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார் சிவபெருமான்.

தென்கையிலாயம் என அழைக்கப்படும் திருவையாற்றில் இருந்துதான் சிவனின் உபதேசம் பயணம் தொடங்கியது. ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரம் கூடிய அற்புதமான நன்னாளில் சக்தி, கணபதி உட்பட தன் படைபரிவாரங்களுடன் புறப்பட்டு நந்தியெம்பெருமானை விட்ட இடம் நந்தி மதகு என்றும், கணபதியை அமர வைத்த இடம் கணபதி அக்கிரஹாரம் என்றும், சக்தியை அமரவைத்தது உமையாள்புரம் என்றும், சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையினை அமர வைத்த இடம் கங்காதரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அதன்பின்னர் சிவபெருமானும் முருகனும் தனியாக அருகில் உள்ள மண்குன்று (மலை) பகுதியில் ஓம் எனும் பிரணவ பொருள் உபதேசம் நிகழ்த்திய தலமானதால் சுவாமிக்கே நாதனாக இருந்தமையால் இப்பகுதி சுவாமிமலை என அழைக்கப்பெறுகிறது. பிற்காலத்தில் இம்மண்குன்றினை கட்டுமலையாக அமையப்பெற்றது. இத்தலத்தில் முருகப்பெருமானை தேவர்கள் புடைசூழ வழிபட்ட தேவேந்திரன் தனது நினைவாக ஐராவதுத்தினை (வெள்ளை யனை) முருகப்பெருமானுக்கு வழங்கியதால் மூலவருக்கு முன், இன்றும் ஐராவதம் உள்ளது. (முருகன் திருக்கோவில்களில் சன்னதி முன் மயில் காணப்படும்). தன்னுடன் வரப்பெற்ற தேவர்களில் தமிழ் வருட பெயர் கொண்ட தேவதைகள் அறுபது பேரை இத்தலத்தில் முருகப்பெருமானுக்கு சேவை செய்ய விட்டு சென்றார்.

கோயில் சிறப்புகள் :

•கந்தப் பெருமானின் அறுபடைவீடுகள் வரிசையில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் 4-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது.

•இக்கோயிலில் மீனாட்சி அம்பாளுடன் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளியுள்ளதால், மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமி கோயில் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

•தகப்பன் சுவாமி’ என்று அழைக்கப்படும் முருகப் பெருமான், இக்கோயிலில் பிரம்மதேவர், பூமாதேவி, இந்திரன் ஆகியோருக்கு குருவாக இருந்து அருளியதால், இத்தலம், குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், சுவாமிநாதனாக அருள்பாலிப்பதால், சுவாமிமலை என்ற பெயர் நிலைத்துவிட்டது.

•மூலவர் 6 அடி உயரத்துடன், தலையில் உச்சிக் குடுமி, மார்பில் பூணூல் ஆகிவற்றைக் கொண்டு அருள்பாலிக்கிறார். வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடதுகையை தொடையில் வைத்தபடியும் யோக நிலையில் உள்ள குருநாதராக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் கந்தப் பெருமான்.

•கருவறையில் மூலவர் நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. இதன் மூலம் சிவபெருமானும் முருகப் பெருமானும் வேறு வேறு அல்லர் என்பது புலனாகிறது.

•பீடம் சிவபீடமாகக் கருதப்படுகிறது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளை ஒருங்கே கொண்ட வஜ்ர வேலுடன் சுவாமிநாதன் காணப்படுகிறார். இந்த வேல்தான் கோயிலின் கீழ் வீதியில் உள்ள நேத்ர தீர்த்தத்தை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.

•கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின் மீது இக்கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் தெற்கு நோக்கி உள்ளது. 

•முருகப் பெருமான் சந்நிதிக்குச் செல்ல 60 தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். 

•மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், குன்றின் மீது அமைந்துள்ள கோயிலாக சுமாமி மலை கோயில் உள்ளது. 60 படிகள் ஏறி இத்தலத்துக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு படியும் ஒவ்வொரு தமிழ் வருடத்தைக் குறிக்கிறது. தமிழ் வருடங்களின் தேவதைகள் கந்தப் பெருமானை பிரார்த்தனை செய்து படிகளாக உள்ளதாக ஐதீகம்.

•இத்தலத்தில் சுப்பிரமணியர் சந்நிதிக்கு எதிராக, மயிலுக்கு பதில் யானை வாகனம் உள்ளது. சுவாமிநாத பெருமானை வேண்டி, ஹரிகேசன் என்ற அரக்கனை வென்றதால், இந்திரன் தன் காணிக்கையாக ஐராவத யானையை முருகப் பெருமானுக்குத் தந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

•பார்வதி தேவியின் சாபத்துக்கு ஆளான பூமாதேவி, இத்தலத்துக்கு வந்து சுவாமிநாதப் பெருமானை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். அதன்பின்னும் இத்தலத்தை விட்டுச் செல்ல விருப்பம் இல்லாததால், இங்கேயே தலவிருட்சமாக (நெல்லி மரம்) பூமாதேவி உள்ளார்.

•இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார்.

•காவிரி சுவாமிநாதனை வழிப்பட்டு இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் தீர்த்தத்தில் நீராடி தரிசிக்க வேண்டும் என பிரார்த்தித்து குமார தாரை என்கிற பெயரில் இவ்வூரில் தொடர்ந்து இருக்க அருள் பெற்றுள்ளார்.

•கங்காதேவி முருகனை தரிசித்து தனது பாபவிமோசனம் பெற்றதால் தானும் காவிரியுடன் இணைந்து இத்தலத்தில் இருக்க அருள் வேண்டினார். முருகப்பெருமானும் தனது தலத்தில் விருட்சமாக இருக்க அருள்பாலித்தார். கங்காதேவி இத்தலத்தில் தாத்தாத்ரி (நெல்லி மரம்) தலவிருட்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

•சுவாமிமலையின் பெருமைகள் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் பாடியுள்ளனர்.

திருவிழா:

திருக்கார்த்திகை திருவிழா – 10 நாட்கள் – 

சித்திரை – பிரம்மோற்சவம் – 10 நாட்கள்

வைகாசி – வைகாசி விசாகப்பெருவிழா

ஆவணி – பவித்ரோற்சவம் – 10 நாட்கள்

புரட்டாசி – நவராத்திரிபெருவிழா – 10 நாட்கள்

ஐப்பசி – கந்தசஷ்டிபெருவிழா – 10 நாட்கள்

மார்கழி – திருவாதிரைத் திருநாள் – 10 நாட்கள்

தை – பூசப்பெருவிழா

பங்குனி – வள்ளி திருக்கல்யாண விழா
இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை மாதங்களில் நடைபெறும் விழாக்கள் கொடிஏற்றத்துடன் நடைபெறும் பெருவிழாக்கள் ஆகும். ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில வருடப்பிறப்பு நாளில் திருப்படிதிருவிழா சிறப்பாக நடைபெறுகிறது

திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல்11 மணி வரை, 
மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: 
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் 
சுவாமிமலை - 612302 
தஞ்சாவூர் மாவட்டம்.

போன்: 
+91- 435- 245 4421

அமைவிடம் :
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கிமீ தொலைவில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இக்கோயில், கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்கு அடிக்கடி பேருந்து போக்குவரத்து வசதி உள்ளதால் கோயிலுக்கு பக்தர்கள் 

#முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்புரியும் கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற #திருமுதுகுன்றம் என்ற #விருத்தாசலம் அருகே உள்ள #மணவாளநல்லூர்#கொளஞ்சியப்பர் (சுயம்பு முருகன்

#முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்புரியும் 
கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற #திருமுதுகுன்றம் என்ற #விருத்தாசலம் அருகே உள்ள #மணவாளநல்லூர்
#கொளஞ்சியப்பர் (சுயம்பு முருகன்)
#சித்திவிநாயகர் 
திருக்கோயில் வரலாறு:

ஆண்டவனின் நீதிமன்றத்தில் தவறுகளுக்கு நிச்சயம் தண்டனை உண்டு, தவறு செய்து வருந்துபவர்களுக்கு மன்னிப்பும் உண்டு. அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற நீதியின் காவலனாகத் திருக்கோயில் கொண்டு உள்ளவரே கொளஞ்சியப்பர்.

மணவாள நல்லூர் விருத்தாசலம் - சேலம் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொளஞ்சியப்பர் அருள்பாலிக்கும் மணவாள நல்லூர் திருத்தலம். இங்கே கொளஞ்சியப்பர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்.

எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த இறைவன், தன்னை மனமுருகி மெய்யுருகி வேண்டுவோருக்கு வேண்டியதை அருள்பவன். அந்த அருளாளன் உருவமாகவும் அருவமாகவும் அருள்பாலிக்கும் ஆலயங்கள், நம்முடைய ஆன்மாவுக்கு சக்தி அளிக்கும் கேந்திரங்களாகும். இதை வலியுறுத்தும் விதமாகவே அவ்வை பிராட்டி ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று பாடினார். பண்டைய அரசர்கள் இத்தகைய ஆலயங்களை மையமாக வைத்தே ஆட்சி செய்தனர். இதனால் நாடும் சுபீட்சமாக இருந்தது; நல்லாட்சியும் நடந்தது. அதற்காக எந்த மன்னரும் தன்னிச்சையாக எந்த ஆலயத்தையும் உருவாக்கிவிடவில்லை. புராண வரலாறு அல்லது வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆலயத்தையும் உருவாக்கினர்.

இப்படிப்பட்ட வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றே ‘கொளஞ்சியப்பர் திருக்கோவில்.’ சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த காடாக இருந்த பகுதியில் உருவாக்கப்பட்ட இவ்வாலயம், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கொளஞ்சியப்பர் என்ற பெயரில் அருள்பாலிப்பவர் சாட்சாத் முருகப்பெருமானே ஆவார். 

மூலவர்: கொளஞ்சியப்பர் (சுயம்பு முருகன்), சித்தி விநாயகர்
தல 
விருட்சம்:கொளஞ்சிமரம்
தீர்த்தம்: மணிமுத்தாறு
ஊர்: மணவாளநல்லூர் (விருத்தாசலம்)
மாவட்டம்: கடலூர்
மாநிலம்: தமிழ்நாடு 

#தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு ஒன்று, கொளஞ்சி செடிகள் புதராய் மண்டிக் கிடந்த ஒரு இடத்தை தன் கால்களால் தேய்த்து, பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொரிந்தது. அனுதினமும் இதை வழக்கமாக மேற்கொள்ள இதை கண்ணுற்ற பொதுமக்கள், அந்த பலிபீடம் புனிதத்துக்குரியது என்று கருதி அதை வெளியே எடுத்து வழிபடத் தொடங்கினர். 
உருவ அடையாளம் இல்லாததால் அது என்ன தெய்வம் என்று தெரியாமல் வணங்கி வந்தனர். காலப்போக்கில் இதற்கான தேடல்களை மேற்கொண்டபோது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் இருந்து விடை கிடைத்தது.

ஒரு சமயம் தம்பிரான் தோழன் (இறைவனின் தோழன்) என்று போற்றப்படுகின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லைக்கு மேற்கேயுள்ள தலங்களை தரிசித்தவாறு விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்துக்கு வந்தார். அப்படி வந்தவர் ஊர் மற்றும் சுவாமியின் பெயரை கேள்விப்பட்டு முதுமையை எட்டியுள்ள இவ்வூரையும் இப்பெருமானையும் பாடினால் பொன்பொருள் கிடைக்காது என்று முடிவுசெய்து பண் பாடாது பயணத்தைத் தொடர்ந்தார். இதுபுரிந்த திருமுதுகுன்றீசுவரபெருமான், அவரோடு விளையாட விரும்பி தன் மைந்தன் முருகனிடம், ‘சுந்தரர் எம்மை மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச்செய்’ என்று வாய்மொழியாக வேண்டுகோள் வைத்தார். (இதை எழுத்து வடிவமாக தரும்போது அது ‘பிராது’ எனப்படும். பிராது என்பது முறையீடு செய்தல் அல்லது நியாயம் வேண்டி புகார் அளித்தலாகும்).

அதை ஏற்ற முருகப்பெருமான், கள்ளர் வடிவில் சென்று சுந்தரரின் கைவசம் இருந்த பொன் பொருளை அபகரித்தார். பதறிய சுந்தரரிடம், ‘நீ உன்பொருளை திரும்பப் பெறவேண்டுமானால் திருமுதுகுன்றீஸ்வரரிடம் சென்று முறையிடு’ என்று கூறி அனுப்பிவைத்தார். சுந்தரரும் அதை ஏற்று திரு முதுகுன்றீசுவரரிடம் வந்து நின்றார். அவரிடம் ஈசன், ‘எம்மை மதியாமல் சென்ற உமக்கு பாடம் புகட்டவே முருகனை விட்டு களவாடச்செய்தோம். இதோ உமது பொன்னும் பொருளும். எடுத்துக் கொள்’ என்று கூறி தந்தார். மனமகிழ்ந்த சுந்தரர் தன் தவறுக்கு மன்னிப்புக் வேண்டியதுடன், இத்தலப் பெருமானை பாடவும் செய்தார். அதற்காக ஈசன் பன்னிராயிரம் பொற்காசுகளைத் தர, ஏற்கனவே வழிப்பறிக்கு ஆளான அனுபவத்தில் ‘இவ்வளவு பொற்காசினை எப்படி எடுத்துச் செல்வேன்’ என்றார், சுந்தரர்.

அதற்கு சிவன் ‘இப்பொற்காசினை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு திருவாரூர் கமலாலயம் குளத்தில் சென்று எடுத்துக் கொள்’ என்று கூறினார். சுந்தரரும் அதன்படியே செய்தார். சுந்தரர் மீது ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரியவந்தது. அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கே பலிபீட உருவில் அமர்ந்திருப்பவர் சாட்சாத் முருகன் என்று உறுதி செய்யப்பட்டது. கொளஞ்சி செடியின் ஊடேயும், பசுவின் குளம்புகளின் மூலமும் வெளிப்பட்ட அவருக்கு ‘கொளஞ்சியப்பர்’ என்னும் திரு நாமத்தை சூட்டி வழிபடலாயினர்.
தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஒரே திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது. பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலமாகவும், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் ஜீவசமாதி (வாய்மொழிக் கூற்று) அடைந்த திருத்தலமாகவும் இது விளங்குகிறது.

ஸ்ரீ கொளஞ்சியப்பர் இங்கே சுயம்பு திருமேனியாகக் காட்சியளிக்கிறார். தங்களின் பிரார்த்தனைகள் கைகூட ஏராளமான பக்தர்கள் இங்கே வருகிறார்கள். வேண்டிக்கொண்டு குழந்தை பாக்கியம் வாய்ந்ததும் அந்த குழந்தையைப் பெருமானின் சன்னதியில் கொண்டு வந்து அவர் திருமுன் இட்டு நன்றி தெரிவிக்கிறார்கள்.

அவர் சன்னதியிலே காது குத்தும் வைபவத்தையும் நிறைவேற்றி மகிழ்கிறார்கள். திருமணம் கைகூடினால் அவர் சன்னிதிக்கு வந்து மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.

இவ்வாலயத்தில் முருகப்பெருமான் நீதி வழங்குபவராகவும், வைத்தியராகவும் இருந்து அருள்பாலித்து வரு கிறார். எனவே தீராத நோய் உள்ளவர்கள் இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம், அரை மண்டலம் என அவரவர்களுக்கு வசதிப்படும் நாட்கள் தங்கி கொளஞ்சியப்பரை தரிசிப்பதுடன், அவரது சன்னிதியில் பூஜித்து வழங்கப்படும் வேப்ப எண்ணையைப் பெற்று உடம்பில் பூசியும், அருந்தியும் பூரண குணமடைந்து செல்வதும் இத்திருக்கோவிலின் மகிமையாகக் கூறலாம். தங்களது குறை நீங்கப் பெற்றவர்கள் திருக் கோவிலுக்கு தங்கம், வெள்ளி, பித்தளை, ரொக்கப்பணம், தானியங்கள் கால்நடைகள் ஆகியவற்றை நேர்த்தி காணிக்கையாகச் செலுத்துவதும் வழக்கமாக உள்ளது.

#வேப்பெண்ணெய்:

இத்திருத்தலத்தில், பூசித்து விபூதியிடப்பட்ட வேப்பெண்ணெய் மருந்தாக வழங்கப்படுகின்றது.

#சூறை விடுதல்:

விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் கிடைக்க இக்கோயில் வேண்டிக்கொள்கிறார்கள். அறுவடைக்குப் பிறகு வரும் பங்குனி உத்தர திருவிழா அன்று தாங்கள் விளைவித்த பயிர் விளைச்சலில் ஒரு பங்கினை கோயிலுக்கு கொண்டு வந்து மக்கள் கூட்டத்தில் மேலே எறிவார்கள் இது சூறைவிடுதல் எனப்படுகிறது. பொதுவாக சூறைவிடுதலில் முந்திரிக் கொட்டைகள் முக்கிய இடம்பெறும்.

#கோயிலின் சிறப்பு:

முருகப் பெருமான் வேண்டுதல் கடவுளாக உள்ளார். பக்தர்களின் கோரிக்கைகள் பிரார்த்தனை சீட்டில் எழுதப்பட்டு இங்குள்ள தல விருட்சத்தில் வேண்டுதலாக கட்டப்படுகிறது.நியாயமான கோரிக்கைகள் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் முருகக் கடவுள் நிறை வேற்றி வைப்பார் என பக்தர்களால் நம்பப் படுகிறது.

பிரார்த்தனை சீட்டு விபரம்:

கோவில் நிர்வாகம் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொண்டு காணிக்கை சீட்டை விநியோகிக்கிறது. பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறியவுடன் திரும்ப காணிக்கை செலுத்தி பிரார்த்தனை சீட்டை எடுத்து விட வேண்டும் என்பது கோவில் ஜதீகம்.

#பிராது கட்டுதல்:

பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள். இயல்பு வாழ்க்கையில் மக்கள் தங்கள் புகாரினை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, மக்கள் தங்கள் புகார்களை, வேண்டுகோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்பிப்பார்கள். சமர்பித்த மூன்று நாட்களுக்குள்ளோ, மூன்று வாரங்களுக்குள்ளோ, மூன்று மாதங்களுக்குள்ளோ, மூன்று வருடங்களுக்குள்ளோ முறையிடப்பட்ட குறை, புகாரின் தன்மையைப் பொறுத்து கொளஞ்சியப்பரே ஆய்ந்து நல்ல முடிவை தந்து, குறையை தீர்த்து, வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதாக நம்பப்படுகிறது. வெளியூர்களில் இருந்தும் கூட பலரும் இங்கு வந்து இந்த பிராது பிராத்தனையை மேற்கொள்கின்றனர்.

பிராது கட்டுதலில் பின்பற்றப்படும் வழிமுறைகள்
மக்கள் காகிதத்தில் எழுதி கொடுக்கும் குறைகள் முதலில் மூலவரான கொளஞ்சியப்பர் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோயில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் முனியப்பர் சன்னிதானத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சூலம், ஈட்டி போன்றவற்றில் கட்டப்படும். தங்கள் வேண்டுதல், கோரிக்கை நிறைவேறிய பிறகு மக்கள் மீண்டும் இந்தக்கோயிலுக்கு வந்து தங்கள் பிராதினை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். பிராது கட்டும் வேண்டுதலுக்கு வசூலிக்கும் கட்டணத்திலும் ஒரு புதுமையான முறைமை கடைபிடிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் பொதுவான கட்டணத்திற்குப் பிறகு, பிராது கட்டும் நபர் எங்கிருந்து வருகிறாரோ அந்த இடத்திற்கும் கோயிலுக்கும் இடையே உள்ள தொலைவு கணக்கிடப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது.

#சிறப்பு_வழிபாட்டு முறை:

இங்கே முக்கியமாக நடைபெறும் அதிசயம் என்னவென்றால் மக்கள் ஆண்டவரிடமே பிராது கொடுக்கலாம். உடைமைகள் திருடு போனாலோ, மாட்டாரால் அபகரிக்கப்பட்டாலோ காவல் நிலையத்தில் எழுத்து மூலம் புகார் செய்வது போலவே கொளஞ்சியப்பரிடம் முறையிட வேண்டும்.

குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய்தான். தங்கள் ஊரிலிருந்து கோவில் வரை உள்ள தூரத்தைக் கிலோமீட்டருக்கு பத்து பைசா வீதம் கணக்கிடுகிறார்கள். கட்டணத்தைக் கணக்கிட்டு அலுவலகத்தில் செலுத்தி விட்டு ஒரு வெள்ளைத் தாளில் பிராதுகளை எழுதித் தர வேண்டும்.

#எப்படி எழுதுவது:

அருள்மிகு கொளஞ்சியப்பரின் திருப்பாத கமலங்களைப் பணிந்து என்னுடைய குறைகளைப் பிராது மூலம் திருவடிகளுக்கு விண்ணப்பிக்கிறேன் என்று துவங்கி முகவரியோடு தங்கள் குறையைக் கூற வேண்டும்.

இந்த கடிதத்தைக் கோவில் பூசாரி தட்டில் வைத்து கொளஞ்சியப்பரின் பாதங்களில் வைத்து வழிபட்டு அதனை மடித்து பக்தர்களிடம் தருவார். அதனை முனியப்பனின் சன்னதியில் உள்ள வேலில் கட்டி விடுவர்.

மணவாள நல்லூரில் கோவில் கொண்டுள்ள கொளஞ்சியப்பரை அற்புதம் நிகழ்த்தும் ஆனந்த மூர்த்தியை கண்ணாரக்கண்டு, மனமாரத் துதித்தால் இன்பங்களும் ஆறாகப் பெருகும் என்பது ஐதீகமாகும்.

திருக்கோயிலின் தென்மேற்கு பகுதியில் ஒரே கருவறையில் இடுபடும் கடம்பனும் நின்ற காலத்தில் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குரு அகப்பை சித்தர் இந்த திருத்தலத்தில் ஜீவசக்தி பெற்றுள்ளார். இக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது மட்டுமல்லாமல் நான்கு கால பூஜைகளும் சிறப்புடன் நடந்து வருகின்றது.

இந்த ஆலயத்தில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றது. பவுர்ணமி, கிருத்திகை போன்ற மாத பூஜைகள் தவிர, சித்திரை பவுர்ணமிஅன்று பால்குட அபிஷேக விழா, வைகாசி விசாகத்தன்று புஷ்பாஞ்சலி மற்றும் ஏக தின லட்சார்ச்சனை, கந்தசஷ்டி லட்சார்ச்சனை, ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ்புத்தாண்டு வழிபாடு, பங்குனி மாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் என வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தின் போது நேர்த்திகடன் செலுத்த இவ்வாலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் வடக்கு கோபுரம் என இரு கோபுரங்களுடன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் என அனைத்தும் சமீபகால கட்டிடமாக, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. மகாமண்டபத்தின் வலது பக்கத்தில் அலங்கார மண்டபம் இருக்கிறது. அதனுள் கொளஞ்சியப்பரின் உற்சவ திருமேனி இடம்பெற்றுள்ளது. இடதுபுறத்தில் குதிரை வாகனத்துடன் கூடிய சுதைவடிவ முனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அலங்கார மண்டபத்தின் பின்பகுதியில் காணிக்கை தானிய களஞ்சியமும், கிழக்குப் பகுதியில் அகப்பேய் சித்தரின் மண்டபமும் உள்ளது.

கருவறையில் விநாயகரும், மூன்றடி உயரத்தில் பலிபீட வடிவிலான முருகப்பெருமானும் தனித்தனி சன்னிதியில் காட்சிதந்து அருள்பாலிக்கின்றனர். வடக்குகோபுரம் அருகில் மகாமண்டபத்தை ஒட்டி பிராது கொடுக்கும் முனீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் பின்பகுதியில் ஏரழிஞ்சி மரங்களுக்கு இடையே இடும்பன் கடும்பனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சமான கொளஞ்சி செடி நந்தவனத்தில் வளர்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள இந்த ஆலயம், தினமும் காலை மணி 6.30 முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும்.

பிராது கொடுக்கும் வழிபாடு : 

பக்தர்கள் தங்களின் அனைத்து வித நியாயமான கோரிக்கைகளையும், எழுத்து மூலம் சுவாமியிடம் பிராது செலுத்தும் நடைமுறை இங்கு வழக்கத்தில் உள்ளது. அப்படி பிராது செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள், அந்த கோரிக்கை முழுவதுமாக நிவர்த்திப் பெறுவதும், வேண்டுதல் பலித்தவர்கள் சுவாமியிடம் செலுத்திய பிராதினை திரும்பப் பெற்றுக் கொள்வதும் நடைமுறை வழக்கமாகும். இதற்கு சுவாமி உள்ள இடமான மணவாளநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு கோரிக்கை உள்ள ஊரின் தொலைவினை கணக்கிட்டு, கிலோமீட்டர் ஒன்றுக்கு இருபத்தைந்து பைசா கட்டணமாகவும், சம்மன் மற்றும் தமுக்கு பணமாக இருபது ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோன்று கோரிக்கை நிறைவேறியவர்கள், பிராது வாபஸ் கட்டணமாக ஐம்பது ரூபாய் செலுத்தி பிராதினை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பிரார்த்தனையுடன் கூடிய இவ்வழிபாடு இவ்வாலயத்தின் பிரசித்திப் பெற்ற வழிபாடாகும்.

முருகா 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில் (அய்யர் மலை)

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில் (அய்யர் மலை)
1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ளநவத்துவாரங்களின் வழியேசிவலிங்கத்தின் மீது விழுகின்றது.  

இக்கோவிலில் சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடாது.

பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது.

இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 64வது தேவாரத்தலமாகும்.

இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரமாகும்.

சோதிலிங்க வடிவமானது. மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்கின்ற போது அங்குள்ள கொப்பரையில் காவேரி தீர்த்தம் ஊற்றப்பட்டது. ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை.

ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான்.

இதனால் சுயம்புவில்இருந்து ரத்தம் வந்தது, மன்னன் தன் தவறைஉணர்ந்துஇறைவனை வணங்கினான்.  

இதையடுத்து இறைவன் தோன்றிமன்னனுக்கு

அருளாசி வழங்கி

இரத்தினங்களை வழங்கினார் அந்த தழும்பு இன்னும் சுவாமியின் மீது உள்ளது.

இறைவன் 9 ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையை சுற்றி அமைந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் பூமிக்கடியில் பச்சை கற்கள், சிவப்பு கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன.  

சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாகஎழுந்தருளியுள்ளார்.. இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை.

Thursday, June 1, 2023

●மாமி நவகிரஹம் ஒன்பது உள்ளது. ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளத*ண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா?

*நாம் அறியாத தகவல்...*

*கண்டிப்பாக படிங்க நண்பர்களே....*
தோழி  வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது தோழியின்  9 வயது மகன்..

●மாமி நவகிரஹம் ஒன்பது உள்ளது. ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளத*ண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா? 

இது பாரபட்சம் இல்லையா? என கேட்டான். 

□அவனை ஆசீர்வதித்து மகனே நல்ல கேள்வி. பகவான் உனக்கு எல்லா நலனும் வழங்கட்டும் என கூறியவாரே,

எங்கே ஒன்பது கிரஹம் பெயர்களை கூறு என்றேன்.

●சூரியன், சந்திரன், அங்காரகன், புதன் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது. 

□வாரத்தின் நாட்கள் கூறு என்றேன்.

●ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, என்றான்.

□இப்போ உன் கேள்வி ராகு, கேதுவுக்கு ஏன் வாரத்தில் பங்கு இல்லை என்பதும், அது பாரபட்சம் என்பதும் தானே என்றேன்.

●ஆமாம்  மாமி என்றான். 

□மகனே பகவான் எந்த காரணத்தை கொண்டும் யாருக்கும் பாரபட்சம் செய்யமாட்டான். அதாவது அவன் பகவானை விரும்பினாலும்,  வெறுத்தாலும் பாரபட்சம் காட்டவே மாட்டான்.

ஹிரண்யனுக்கு பல சந்தர்ப்பங்களை கொடுத்தான். பிரஹலாதனுக்கு அவன் செய்த பல கொடுமைகளில் இருந்து 

காப்பாற்றி உணர்த்தினான். ஆனாலும் புரியாமல், தூணை காட்டி கேட்டு இங்கு இல்லையேல் உன் உயிரை எடுப்பேன் என கூறியதால் பகவான் தன் பக்தன் பிரஹலாதன் உயிரை காக்க தூணிலிருந்து தோன்றி அரக்கன் ஹிரண்யன் உயிரை எடுத்தான்.

இராமாயணத்தில் இராவணனுக்கு அவன் எல்லா நண்பர்களும், ஆயுதங்களும் இழந்து தனியாக நின்றபோதும், அவனுக்கு ஒரு நாள் சந்தர்ப்பம் கொடுத்தார். அதாவது 

இன்றுபோய் நாளை வா என, எதற்காக சண்டை போடுவதற்க்கா இல்லை. சீதையை கொண்டுவந்து ஒப்படைக்க அதன் மூலம் அவனுக்கு இரக்கம் காட்ட ஆனால் அதை இராவணன் செய்யாத்தால் பகவானால் கொல்லப்பட்டான்.

அது போல் தான் பகவான் தேவர்களுக்கும்*, கிரஹங்களுக்கும் பாற்கடலை கடைந்து வந்த அமுதத்தை பகிர்ந்து அளிக்கும் போது இடையில் புகுந்த அரக்கன் அதை பெற   சந்திரன் அதை காட்டி கொடுக்க பகவான் அசுரன் தலையை துண்டித்து விட அமுதம் பெற்ற அவனுக்கு அழிவு இல்லாததால், அவர்களை இரண்டு கிரஹமாக ஆக்கி இராகு, கேது எனப்பெயர் வைத்து அவர்களுக்கு உரியதாக ராகுகாலம், குளிகைகாலம் என இரண்டு காலத்தை கொடுத்துள்ளார்.

மனிதர்கள் இந்த இராகு காலத்தில் எந்த வேலையைச்செய்தாலும், அது சிரமத்தின் பேரில் தான் நடைபெறும். நற்காரியங்கள் கூடுமானவரை செய்யக்கூடாது. அதேபோல் குளிகனில் கெட்ட காரியங்கள்,  அபர காரியங்கள் செய்யக்கூடாது எனக்கூறி அருளினார்.

●மாமி  அது தெரியும், ஆனால் ஏன் மாமி வாரநாட்களில் அவர்களை சேர்க்கவில்லை என்றான்.

□அவனிடம் உன்னிடம் ஒரு பாக்கெட் பிஸ்கட் தான் உள்ளது, அந்த பாக்கெட் பிஸ்கட்டை நீயும் உன் தங்கையும் பிரித்து சாப்பிட எண்ணும் போது, இடையில் உங்கள் நண்பர் இருவர் வந்தால் என்ன செய்வாய் என்றேன்.

●அந்த பிஸ்கட் பாக்கெட்டில் உள்ளதை கூட வந்தவர்களுக்கும் பிரித்து கொடுத்து சாப்பிடுவோம் என்றான். 

□ஏன் அவங்களுக்கு தனியாக ஒன்றை கொடுக்கலாமே என்றதும், 

●எங்கிட்ட ஒரு பாக்கெட் தானே இருக்கு அப்போ அதிலிருந்து தானே கொடுப்பேன் என்றான். 

□சரியாக சொன்னாய், அதே போல்தான் வாரத்துக்கு நாள் ஏழு என ஏழு கிரகஹங்களுக்கும் ஒன்றாக பகவான் உண்டாக்கி, ஒவ்வொரு நாளுக்கும் இருபத்தினான்கு மணி நேரம் என ஏற்படுத்தி நடத்திவரும் போது இடையில் இரு கிரஹங்கள் வருவதால் என்ன செய்ய என யோசித்த பகவான்,

அனைத்து கிரஹங்களுக்கும் வேலை நேரம் சமமாக இருக்கவேண்டும் அதே நேரம் வார நாட்களையும் கூடுதலாக வருமாறு செய்ய கூடாது என்ற எண்ணத்தில்...

ஏழு கிரஹங்களையும் அழைத்து அவர்கள் ஒவ்வொருவர் நேரத்திலும் மூன்று மணிநேரத்தை எடுத்துக்கொண்டான்.

இப்போ சொல்லு ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம்.

●இருபத்திநான்கு மணி நேரம் மாமி.

□அதில் மூணு மணி நேரத்தை பகவானுக்கு கொடுத்தது போக மீதி எவ்வளவு உள்ளது.

●இருபத்து ஒரு மணி நேரம் மாமி.

□இப்போ ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் மாதிரி ஏழு நாட்களுக்கும் எடுத்தால் எவ்வளவு.

●இருப்பதொரு மணி நேரம் மாமி.

□இப்போ பெருமாள் கையில் எவ்வளவு மணி நேரம் உள்ளது. 

●ஏழு பெருக்கல் மூணு இருப்பத்தியோரு மணி நேரம்.

□இதைத்தான் தன்னால் தலை துண்டிக்கப்பட்டு உடலால் ஒரு கிரஹமாகவும், தலையால் ஒரு கிரஹமாகவும் ஆன ராகு கேதுவுக்கு பிரித்துக்கொடுத்தார்.

●அதுவும் எப்படி?..

□ஒவ்வொரு கிழமையிலும் ராகு காலமாக ஒன்றரை மணி நேரமும் குளிகை காலமாக ஒன்றரை மணி நேரமுமாக..இப்போ சொல்லு உன்னிடம் இருந்த ஒரு பாக்கெட் பிஸ்கட்டை இடையில் வந்தவருக்கு பகிர்ந்தளித்த மாதிரி,ஏற்கனவே இருந்த ஏழு நாட்களையும் இருபத்தி நான்கு மணி நேரத்தையும் சமமாக பகிர்ந்தார்.

ராகுவும், கேதுவும் ஒரே உடலின் இரண்டு அங்கம் ஆனதால், அந்த இருபத்தொரு மணி நேரத்தை இரண்டாக பிரித்து ஆளுக்கு பத்தரை மணிநேரம் அதாவது ஒவ்வொரு நாளிலும். ஒன்றரை மணி நேரம் ஏழு நாட்களில் ஏழு பெருக்கல் ஒன்றரை அதாவது பத்தரை மணிநேரமாக கொடுத்துள்ளார்.

இப்போ சொல்லு பகவான் பாரபட்சம் காட்டியுள்ளானா!!!!..

●இல்லை மாமி ஏழு நாட்களை கொண்ட வாரத்தில் ஒவ்வொருவரிடமும் இருந்து மூணு மணி நேரத்தை குறைத்து வேலை நேரத்தை 21 மணி நேரமாக குறைத்து, அதையே இரண்டு பங்கான அசுரனுக்கு பாதி பாதியாக அதாவது பத்தரை மணியாக, அந்த இருபத்தொரு மணி நேரத்தை பிரித்து கொடுத்துள்ளான் அப்படி தானே என்றான்.  

□அப்படிதான் மகனே, பகவான் யாரையும் எந்த காரணத்திற்காகவும் வஞ்சிக்கவோ, பாரபட்சம் காட்டவா மாட்டான். நல்லவர்களை அரவனைப்பதும், துஷ்டனுக்கு சந்தர்பம் கொடுத்து திருத்தவும், சில சோதனைகளை செய்வான். அப்போதும் செய்பவன் அவனே என அவனிடம் நாம் சரணடைந்து விட்டால் போதும் அவன் நம்மை ஆட்கொண்டுவிடுவான்.

பகவான் யாரையும் நம்மைபோல் பாரபட்சமாக நடத்த மாட்டான்.🙏

சிவனாரை வழிபட்டால் சிக்கல் வருகிறதே ஏன்?

சிவனாரை வழிபட்டால் சிக்கல் வருகிறதே ஏன்?
முதலில் சிவன் யார் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சிவனை பூவுலகில் வாழும் அனைத்து ஜீவன்களின் தந்தையாகவே பார்க்கப்படுகிறார்.

அவனின்றி அணுவும் அசையாது. அவன் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே.

தந்தையானவர் பல குழந்தைகளின் கண்களுக்கு தவறானவராகவே தென்படுவார். 

ஏனெனில் நாம் தவறு செய்யும் போது கண்டிப்பார். கேட்கும் பொருட்களை சரியா தவறா என்று ஆய்வு செய்த பிறகு தான் வாங்கி கொடுப்பார். 

பணத்தை கொடுத்து விட்டு அறிவுரை கூறி சலிப்பை ஏற்படுத்துவார். தந்தை இவ்வாறு செய்வதனால் அது நமக்கு பிடிக்காமல் போகிறது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு தான் நமக்கு புரியும் அவர் செய்தது அனைத்தும் நம் நன்மைக்காக என்று வாழ்வில் அனைத்து விஷயங்களும் எளிதில் கிடைத்து விட்டால் அதன் அருமையை ஒரு போதும் உணர மாட்டோம். 

எனவே சில படிப்பினைகளை கற்ற பிறகு அது கிடைக்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி ரகம்.

சிவனும் அப்படி தான். தன் பக்தன் படிக்க வேண்டிய பாடங்களை அவரே கற்று கொடுத்து அதன் பிறகு அவனுக்கு தர வேண்டிய நற்பலன்களை அள்ளி தருவார். 

பொறுமை கடலினும் பெரிது என்பதை உணர்த்துவார். எல்லாமே எளிது அல்ல என்பதை அடிக்கடி உணர்த்துவார்.

இன்பம் துன்பம் அனைத்தும் சமமானதே என்பதை உணர்ந்து தான் தவ கோலத்திலும் உருவமற்ற அருவமற்ற அருவுருவ லிங்கனாய் நமக்கு காட்சி தருகிறார். 

அவரை சிந்தித்தாலும் நிந்தித்தாலும் அமைதியுடன் தான் இருப்பார். அனைத்தும் அறிந்தவர். அதனால் தான் அத்துணை துன்பம் தந்தாலும் அவரை நோக்கி சிவனடியார்கள் சிவ பக்தர்கள் அனைவரும் அவரை சரணாகதி அடைகிறார்கள்.

துன்பம் அளித்தாலும் சரி இன்பம் கொடுத்தாலும் சரி என் அப்பன் சிவனை என்றென்றும் போற்றி வணங்குவதே நான் பெற்ற பாக்கியம் என்பதை மனதில் நிறுத்தும் போது அவர் திருவடியை அடைய முடியும்.

அதனால் தான் நம் கர்ம வினைகள் தீர சோதித்து அருள் புரிகிறார் ஈசன்.

சிவனை வணங்கினால் புண்ணியம் என்று நினைக்கக் கூடாது! எம்பெருமானை வணங்குவதே புண்ணியம் தான். நமசிவாய வாழ்க

அருள்மிகு சாட்சிநாத சுவாமி திருக்கோயில்,திருப்புறம்பியம்

அருள்மிகு சாட்சிநாத சுவாமி திருக்கோயில்,
திருப்புறம்பியம்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் - 612303     
 *நால்வரால் பாடல் பெற்றது இத்தலம்.       

*இது மதுரை ஆதினத்துக்குசொந்தமான திருக்கோயில்களில் ஒன்று.  

*மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தேனபிஷேக பெருமான், பிரளயம் காத்த பெருமான் என பெயர் கொண்டுள்ள தேனபிஷேக விநாயகர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

*ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயத்துக்கு புறம்பாய் இருந்தமையால் இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயரைப் பெற்றது. 

*பிரளயம் ஏற்பட்டபோது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

 *தேவாரப் பாடல் பெற்ற இக்கோயில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 46-ஆவது தலம்.

*பிற்கால சோழப் பேரரசு உருவாகக் காரணமான சிறப்புமிக்க போர் நடந்த ஊர் இது. இப்போரின் வெற்றியின் நினைவாக முதலாம் ஆதித்த சோழன் இங்கிருந்த செங்கற்கோயிலை அழகிய கருங்கல் கோயிலாக மாற்றிக் கட்டினார்.  

*சாட்சி சொன்ன பெருமான்: மதுரையில் வசித்த வணிகன் ஒருவன் உடல்நிலை சரியில்லாத தன் மாமனைப் பார்க்க திருப்புறம்பியம் வந்தான். மாமன் இறக்கும் தருணம், தன் மகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டுக் கண்ணை மூடினான். அவளையும் அழைத்துக் கொண்டு மதுரை செல்லும் முன் வணிகன் இத்தலத்துக்கு வந்தான். இரவு தங்கியிருந்தபோது அரவு கடித்து இறந்துவிட்டான். அப்பெண் சிவபெருமானிடம் முறையிட்டாள்.

*இறைவன் வணிகனை உயிர்ப்பித்து அவளுக்கு மணமுடித்தார். பெண்ணைக் கூட்டிக் கொண்டு மதுரை சென்ற வணிகன் அங்கிருந்த தன் முதல் மனைவியிடம் விவரம் கூறியபோது வணிகனின் முதல் மனைவி, இரண்டாவது பெண்ணுடன் தன் கணவனுக்கு திருமணமாகவில்லை என்றும், அவள் மானங்கெட்டவள் எனவும் பழிகூறினாள். இரண்டாம் மனைவி திருப்புறம்பியம் இறைவனை நோக்கி முறையிட வன்னிமரம், மடைப்பள்ளி, கிணறு இவற்றோடு மதுரை சென்று திருமணம் நடந்ததற்குச் சாட்சி பகன்றார் இறைவன். வணிகப் பெண்ணுக்காக மதுரைக்கு எழுந்தருளி சாட்சி கூறியதால், இத்தல இறைவனுக்குச் சாட்சிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

*இறைவன் சாட்சிநாதர்
சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடல் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. 

*மதுரை சுந்தரேசுவரர் திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் சாட்சி கூறிய படலத்துக்குச் சான்றாக இப்போதும் வன்னி மரமும், மடைப் பள்ளியும் இருப்பதைக் காணலாம். 

  *தலமரம் புன்னை மரம்.

*இப்புராணத்தை ஒட்டியே இறைவனான புன்னைவனநாதர், அருள்மிகு சாட்சிநாதர் எனப் போற்றப்படுகிறார். 

*நீதி சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற ஈசனை வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். 

*ஆயில்ய நட்சத்திரத்தின் பரிகாரத் தலம் இது.

*இத்தலத்தின் இறைவி கரும்படு சொல்லியம்மை என அழைக்கப்படுகிறார். கடுஞ்சொற்களைப் பேசுவோர் இவ்வம்மையை வழிபட இனிமையான சொற்களைப் பெறுவர். வாக்கு வன்மை பெறும். திக்குவாய், குழறிப் பேசும் குழந்தைகள் இவ்வம்மைக்கு அபிஷேகம் செய்த தேனை நாக்கில் தடவிவர சொல்லாற்றல் பெறுவர்.

கரும்படு சொல்லியம்மை
இசை வல்லுநர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அம்பாளின் சன்னதியில் தங்களது ஆற்றலைச் சமர்ப்பித்தால், அந்த ஆண்டு முழுவதும் நல்வாய்ப்புகள் அமையும் என்பது நம்பிக்கை. குரல் வளம் இல்லாத குழந்தைகளுக்கு அவர்களது நட்சத்திரத்தில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

*ராகு அந்தர கற்பத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் திருப்புறம்பியம் திருத்தலத்தைக் கருணையால் அழியாவண்ணம் காத்தவர் பிரளயம் காத்த விநாயகர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல் நுரை ஆகிய கடல்  பொருள்களாலான மேனியைக் கொண்டவராக பிரளயம் காத்த  விநாயகர் எனும் தேனை  உறிஞ்சும் தேனபிஷேக பெருமானாக விநாயகப் பெருமான் இக்கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

*வருண பகவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும்  இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே அபிஷேகம் நடைபெறும். மற்ற நாள்களில் அபிஷேகம் கிடையாது. விநாயகர் சதுர்த்தி திருநாளில் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் தேன் அபிஷேகம் விடிய விடிய நடக்கும். முழுக்க முழுக்கத் தேனால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.
*அபிஷேகம்  செய்யப்படும் தேனானது, விநாயகர் திருமேனியில்  உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் இப்போதும் கண்கூடாக நிகழ்ந்து வருகிறது.

*விநாயகர் சதுர்த்தியன்று பிரளயம் காத்த விநாயகரைத் தரிசனம் செய்தால் சர்வ சங்கடங்களும் நிவர்த்தியாகும்.

*ஸ்ரீகுகாம்பிகை

ஆறுமுகனாம் (குழந்தை வடிவ) குகப் பெருமானை அன்னை, தன் மகனை இடையில் ஏற்றியிருப்பது போல ஏற்றி அரவணைத்தவாறு அற்புதக் காட்சி தருகிறாள் அருள்மிகு குகாம்பிகை. இவ்வன்னைக்கு பெளர்னமி நாளன்று சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது.

*குகாம்பிகை
குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம், திருமணப் பிராப்தம் வழங்கி அருள் பாலிப்பவர் குகாம்பிகை.

*ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி
ராஜகோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக  குடிகொண்டுள்ளார்.   

*கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், தொழில் போன்றவற்றுக்கு அருள்பாலிக் கிறார் இத் தென்முகக் கடவுள்.

*இக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறது.    

சுவாமியின் கருவறைச் சுற்றுச்சுவர்களில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பங்களைக் காணலாம். (ஆனால் இச்சிற்பங்ளில்  பல சேதமடைந்துள்ளன.)

 *கோயிலுக்கு விறகு கொண்டு வந்த ஒரு ஏழைக்கு இறைவன், தட்சிணாமூர்த்தி ரூபமாகத் தரிசனம் கொடுத்த சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.  இதற்கு மேலே சாட்சிநாதர் சன்னதி உள்ளது. 

*தட்சிணாமூர்த்திக்கு உரிய முக்கிய தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.

*திருமண வரம் வேண்டியும் குழந்தைச் செல்வம் வேண்டியும் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனை வழிபடுகின்றனர். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் நீதிமன்ற வழக்குகளில் தீர்வு கிடைக்க வேண்டுவோர் பங்கேற்கும் பரிகாரம் பூஜைகள் நடைபெறுகின்றன.

*கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலையில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவிலுள்ள இன்னம்பூர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற  இத் திருத்தலம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள திருப்புறம்பியம் செல்ல   நகரப் பேருந்து வசதிகள் உண்டு. 

🙏 சிவாயநம

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...