Tuesday, December 3, 2024

அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி தந்த தலம் திருவேற்காடு...

சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ள தலம்...!!!
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்திருவேற்காடு!

இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 256 வது தேவாரத்தலம் ஆகும். 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். 

பாற்கடலை விநாயகர் பருகி விளையாடும் போது திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டார். 
பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்த போது, உடனிருந்து ஆதிசேஷனும் இங்கு வழிபட்டு, இத்தலத்தின் எல்லைவரைவாசம்செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியதாக வரலாறு.

அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்புகடித்துஇறந்தது கிடையது.இதனால்இத்தலத்திற்கு "விடந்தீண்டாப்பதி' என்ற பெயரும் உண்டு.
முருகப்பெருமான் பிரம்மனை சிறையிலிருந்து நீக்காத குற்றத்திற்காக, இங்கு தீர்த்தம் உண்டாக்கி வெள்வேல மரத்தடியில் வழிபட்டு பிழைநீங்கப்பட்டார். 

மேலும் பராசரர், அத்திரி, பிருகு, குச்சரர், ஆங்கீரசர், வசிட்டர், கவுதமர், காசிபர், திண்டி, முண்டி, வாலகில்லியர், விரதாக்னி முதலிய முனிவர்கள், பஞ்சபாண்டவர்கள், சிபி சோழன், வாணன், மற்றும் ஒன்பது கோள்கள், அஷ்டதிக்பாலகர்கள் வழிபாடு செய்துள்ளனர். இத்தல முருகனை அருணகிரி நாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.

சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்து கொண்ட காலத்தில் தேவர்முதலியோர் இமயமலை எல்லையை அடைந்ததால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சரிசெய்ய இறைவன் அகத்தியரை தென்திசைக்குஅனுப்பினார். 

அகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார்.பிருகு
முனிவரின்சாபத்தால்
பெருமாள் ஜமத்கனி
முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் என பெயர் பெற்றார்.

அவர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது அவருடன் ரேணுகையும் உடன் வந்தார். ரேணுகை கோயிலேபுகழ்பெற்ற,
"கருமாரியம்மன் கோயில்' என்ற பெயரில் விளங்குகிறது. 

பிரளய காலத்தில் இந்த உலகம் மூடப்பட்ட பின், சிவன் மீண்டும் இந்தஉலகைபடைக்கவிரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டிருந்தார். 

அதன் படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாகமாறிஇறைவனை வழிபட்டு வந்தன. இவ்வூரின் தல விருட்சம் வெள்வேல மரமாகும். இதனால் இத்தலம் "திருவேற்காடு' என அழைக்கப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Monday, December 2, 2024

வேதபுரீஸ்வரர் கோயில் ஏமாப்பூர் விழுப்புரம்...

வேதபுரீஸ்வரர் கோயில் | ஏமாப்பூர் | விழுப்புரம் 
🌺விழுப்புரத்திலிருந்து 17கிமீ  தொலைவில் இன்று ஏமாப்பூர் என்ற ஊரில் வேதபுரீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் சிவன் கோயிலானது, பராந்தகன் காலத்தில் இவ்வூரானது திருமுனைப்பாடி நாட்டின் கீழ் "ஏமப்பேறூர்" என்றும் இறைவன் திருவாலந்துறை   பரமஸ்வாமிகள் / திருவாலந்துறை   ஆழ்வார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் காலத்தில் இக்கோயில் மிக செழிப்பாய்  திருவிழாக்களோடு சீரும் சிறப்புமாய் இருந்துள்ளது.

🌺 இக்கோயில் பல்லவர்காலத்திலிருந்து பராந்தகனால் கற்றளியாக மாற்றப்பட்டிருக்கலாம், காஞ்சிபுரம் கோனார் கோயிலில் உள்ளது போன்ற மகிஷாசூர மர்த்தினி சிற்பம் தோரணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் அப்பர் வைப்பு தலமாக பாடிய "ஏமப் பேறூர்" இதுவாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

🌺முதலாம் பராந்தகன், ராஷ்டிரகூட அரசன் கன்னரதேவன், ராஜராஜன், ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன் என்று பல்வேறு அரசர்களின் காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட நிவந்தங்கள் இங்குள்ள கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

🌺கருவறை, அர்த்த மண்டபம், மஹா மண்டபம் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது, விமானம் தற்போது கட்டப்பட்டுள்ளது. பொதுவாக பராந்தகன் காலக் கோயில்களில் வேதிகையில் காணப்படும்  குறுஞ்சிற்பங்கள் இங்கில்லை, கருவறை பின் கோஷ்டத்திலும் லிங்கோத்பவர் /அர்த்தநாரி/விஷ்ணுவிற்கு பதில் இங்கு உமாசகிதர் ரிஷபத்துடன் உள்ளார்.  பிக்ஷடனார், தட்சிணாமுர்த்தி,. பிரம்மா, துர்கை ஆகியோர் உள்ளனர். கருவறையில் துவாரபாலர்கள்  பராந்தகன் கால கலை அமைதியில் உள்ளனர். அம்மனுக்கு தனி சன்னதியும், முருகர், சூரியன், விநாயகர், துர்கை என பல்வேறு சிற்பங்களும் உள்ளன. கருவறை லிங்கம் சுயம்பு ஆகும். முன் உள்ள ராஜகோபுரம் அடித்தளத்துடன் முடிக்கப்படாமல் உள்ளது.

🌺இங்கு பராந்தகன் 5 கல்வெட்டு, கன்னரதேவன் 2 கல்வெட்டு, சுந்தர சோழன் 1 கல்வெட்டு, ராஜராஜன்  11 கல்வெட்டு, ராஜேந்திரன் 2 கல்வெட்டு, இரண்டாம் குலோத்துங்கன் 1 கல்வெட்டு, பெயர் குறிப்பிடாத ராஜகேசரி கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

🌺 பராந்தகன்  காலத்தில் பசுக்கள்,நொந்தா விளக்கெரிக்க 9 கழஞ்சு பொன் மற்றும் 96 ஆடுகளும், இவ்விறைவனுக்கு பூமாலை க்கு  தோட்டம் அமைக்க நிலமும், அம்மாலை ஆறு சாண் நீளம் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.

🌺கன்னர தேவன் காலத்தில்  நொந்தா விளக்கெரிக்க 96 ஆடும்,45 ஆடும் கொடை அளிக்கப்பட்டுள்ளன.

🌺சுந்தர சோழன் காலத்தில் , கன்னர தேவனின் சிறப்பு பெயரான கீர்த்தி மார்த்தாண்ட மேனியன்  எனும் ஒருவன் தன் மகன் மல்லி நம்பி க்காக நொந்தா விளக்கெரிக்க கொடை அளித்துள்ளான்.

🌺ராஜராஜன் கல்வெட்டில்  நிலம் இறையிலியாக வழங்கப்பட்டு அதில் வரும் விளைச்சலை கொண்டு சித்திரை திருவிழா, மார்கழி திருவிழாக்கள், திருவேட்டைக்கு பெரும் திருவமுது, விளக்கெரிக்க எண்ணெய் மாலை போன்றவற்றிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

🌺அடுத்ததில், கரியமுது ,தயிரமுது , அடைக்காய் ,வெற்றிலை, திருவமுது படைக்க நிலமும்,விளக்கெரிக்க 96 ஆடும் , மற்றொண்டில் தாதியின் மகள் பரவை நங்கை என்பவள் 96 ஆடும், கார்த்திகை மாத  கார்த்திகையன்று விளக்கெரிக்க நாழி நெய் கொடையளித்துள்ளார். மேலும் பலரும் ஆடுகள், நிலம், பசுக்கள் போன்றவற்றை கொடையாக அளித்துள்ளனர்.
🌺ராஜேந்திரன்  காலத்தில் திருவாலம் மனைவி கம்பன் எட்டி நொந்தாவிளக்கெரிக்க 96 ஆடும் தானமளித்துள்ளார்.
🌺இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலத்திலிருந்து 12 வேலி நிலத்தை பிரித்து "அநபாய நல்லூர்" என்று பெயரிட்டு கொடுத்துள்ளான்.

🌺இவ்வாறு செழிப்பும் மதிப்புமாய் திருவிழாக்களோடு கலை கட்டியிருந்த இக்கோயில் தற்போது பக்தர்கள் வருகையின்று களை இழந்து போய்  உள்ளது. மேலும் இங்கு நடைபெறும்  திருப்பணிகளும் பொருளுதவி இன்றி தடைபட்டு சீரும் சிறப்புமாய் இருந்த இக்கோயிலை மீட்டெடுக்க, நிகழ்காலத்தில் ஒரு ராஜராஜனை எதிர் நோக்கி காத்து கொண்டுள்ளது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

அருள்மிகு திருமுருக நாதசுவாமி திருமுருகன்பூண்டி...


அருள்மிகு திருமுருக நாதசுவாமி திருக்கோயில், 
திருமுருகன்பூண்டி, 
கோயம்புத்தூர் மாவட்டம்.
+91- 4296- 273 507 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை5.30 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்  –    திருமுருகநாதர்

அம்மன்  –    ஆவுடை நாயகி, மங்களாம்பிகை
தீர்த்தம்  –    சண்முகதீர்த்தம், ஞானதீர்த்தம், பிரம்ம தீர்த்தம்

பழமை  –    1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்  –    திருமுருகன்பூண்டி

ஊர்  –    திருமுருகன்பூண்டி

மாவட்டம்  –    கோயம்புத்தூர்

மாநிலம்  –    தமிழ்நாடு

பாடியவர்  –    சுந்தரர்

ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி, துன்புறுத்தி வந்தான். அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகவே அவனை அழித்து தேவகுலத்தை காத்திட, முருகன் சம்காரத்திற்கு தயாரானார். ஆறுமுகங்கள் கொண்டு அல்லல் தந்த சூரனுடன் போர் கொண்டு அவனை தனது வேற்படையால் இரண்டாக வெட்டி, பின்னர் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். எப்படியிருப்பினும், சூரனைத் துன்புறுத்தியதன் விளைவாக ஆறுமுகனை பிரம்மகத்தி தோஷம் பீடித்தது. தோஷம் நீங்க, கயிலை மலையில் இறைவன் சிவபெருமான் கூறியபடி, மாதவி நாதரை வணங்க வந்தார். அப்போது பூஜைக்கு தீர்த்தம் தேவைப்பட, அவர் தனது வேலினால் அவ்விடத்தில் ஊன்ற தீர்த்தம் தோன்றியது. அந்நீரை எடுத்து, சிவனை மேற்கு நோக்கியபடி அமைத்து வணங்கினார். பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவ்வாறு நீங்கிய பிரம்மகத்தி, தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படி முருகன் சன்னதியின் அருகில் உள்ள சதுரக்கல்லாக இருப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.

சிவனின் சிறந்த பக்தரான சுந்தரர் தான் பெற்ற கவிப்புலமையின் பலனாக தனது நண்பனான மன்னன் சேரமானிடம் பொன்னும், பொருளுமாகப் பரிசுகள் பல பெற்று இவ்வழியே திரும்பிக்கொண்டிருந்தார். தற்போது கோயில் அமைந்துள்ள பகுதிக்கு அருகே வந்தபோது இருட்டியதால் அருகில் உள்ள கூப்பிடுவிநாயகர் கோயில் வாயிலில் ஓய்வெடுத்தார். அப்போது, தன்னை துதிக்காமல் சென்ற சுந்தரரைச் சோதிக்க எண்ணிய சிவன், தனது பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி அவரிடம் இருந்த பரிசுப் பொருட்களைக் கவரச்செய்தார். இதனால் மனக்கலக்கமுற்ற சுந்தரர் அங்கே இருந்த கூப்பிடுவிநாயகரிடம் தனது பொருட்களை மீட்க வழி கூறும்படி முறையிட்டார். தனது தகப்பனின்திருவிளையாடலை அறிந்த அவர் தும்பிக்கையால் கிழக்கு திசை நோக்கி காட்டினார். அவர் காட்டிய திசைக்கு வந்த சுந்தரர் அங்கு பதுங்கியிருந்த சிவனிடம் முறையிட்டு, அவரை உரிமையுடன் திட்டிப்பாடி, இழந்த பொருளை மீட்டுத் தரும்படி வேண்டினார். அவரது பாடலில் மயங்கிய சிவபெருமான் தான் பறித்த பொன்னையும், பொருளையும் அவருக்கே திருப்பி வழங்கி ஆசிபுரிந்தார். இவ்வாறு சுந்தரரின் பாடலைக் கேட்பதற்காகவே சிவன் தனியே திருவிளையாடல் நடத்திய தலம் எனும் பெருமையை உடையது.

இத்தலத்தின் முதன்மையானவரான சிவன், முருகனால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்டதால், “திருமுருகநாதர்” என்ற திருப்பெயரில் அழைக்கப் படுகிறார். அவர் வணங்கியதை விளக்கும் முகமாக இத்தலத்தில் தெற்கு நோக்கியபடி உள்ள முருகன் சன்னதியின் கருவறைக்கு உள்பகுதியில், தென்புறம், மேற்கு நோக்கியபடி லிங்கம் ஒன்று உள்ளது. முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு தனது வேலை, கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் கோயிலுக்குள் இருக்கும் முருகனின் கையில் வேல் இருக்காது. மயில் வாகனமும் இல்லாமல், தனித்து நிற்கிறார். சுந்தரர் தன் பொருள் காணாமல் போனது பற்றி முறையிட்டுப் பாடியபோதும், பின்னர் பொருளைத் திரும்பப்பெற்ற போதும் உள்ள முகபாவனைகளுடன் மூன்று சிலைகள் சிவனின் சன்னதியின் முன்புறம் உள்ளது. கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஆடல்வல்லான் சபை, சிவன் பிரம்மதாண்டவம் ஆடிய சிறப்பு பெற்றது. கோயிலின் மையத்தில் சண்முகதீர்த்தம், இடப்புறம் ஞானதீர்த்தம், வலப்புறம் பிரம்ம தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் மட்டுமேஉள்ளது. முற்காலத்தில் புத்திரப்பேறின்றி தவித்த மகாரதன் எனும் பாண்டிய மன்னன் ஒருவன், சண்முக தீர்த்தத்தில் நீராடி அதன் நீரைக் கொண்டு பாயசம் செய்து பசும்பால், கற்கண்டு சேர்த்து சுவாமிக்கு நைவேத்யம் படைத்து, அந்தணர்களுக்கு தானமும் செய்தான். அதன் பயனாக அவன் இரட்டைக் குழந்தைகளை பெற்ற சிறப்புடைய தலம். இத்தலத்தின் தென்கிழக்கில் வடக்கு நோக்கியபடி எட்டு கைகளுடன் இறைவனின் துணைவியார், “நீலகண்டி” என்ற திருநாமத்துடன், காவல் தெய்வமாகஅருள்பாலிக்கிறாள்.

சுயம்பு மூர்த்தி. கோயில் நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இதன் உள்ளே சென்றால், வலதுபுறம்

வேடுவர் உருவங்கள் இரண்டு(ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலைவிலும் மற்றறொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்)உள்ளன. சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சன்னதிகள். மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கியுள்ளது.

வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய(வேடுபறி நடந்த இடம்) கூப்பிடு விநாயகர் அவிநாசிக்குப் போகும் வழியில் 1.கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.

தேவாரப்பதிகம்:

வேதம் ஓதி வெண்ணீறு பூசிவெண் கோவணந் தற்றயலே ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்திர நீர்மகிழ்வீர் மோதி வேடுவர் கூறை கொள்ளும்முரு கன்பூண்டி மாநகர்வாய் ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கிருந்தீர் எம்பெருமானீரே.

– சுந்தரர்.

தேவாரப்பாடல் பெற்ற கொங்குநாட்டுத்தலங்களில் இது 2வது தலம்.

திருவிழா:

மாசியில் 13 நாட்கள் பிரதான திருவிழாவாகும். மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, தைப்பூசம், நவராத்திரி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

பிரார்த்தனை:

இங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி சுவாமியை மன முருகி வேண்டிக்கொள்ள மனநோய்(சித்தபிரம்மை) சாபங்கள், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தீர்த்தக்கரையில் நாகபிரதிஷ்டை செய்து வணங்குகின்றனர். சண்முகதீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என நம்பப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு பால்குடம், காவடி எடுத்து சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபடப்படுகிறது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில் திருக்கோவிலூர்..


அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், 
திருக்கோவிலூர் – 605757, 
விழுப்புரம் மாவட்டம்.
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்  –  திருவிக்கிரமர்
தாயார்  –  பூங்கோவல் நாச்சியார்
தல விருட்சம்  –  புன்னைமரம்
தீர்த்தம்  –  பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம்
பழமை  –  1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்  –  திருக்கோவலூர்
ஊர்  –  திருக்கோவிலூர்
மாவட்டம்  –  விழுப்புரம்
மாநிலம்  –  தமிழ்நாடு

மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து, யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தரவிடாது தடுக்கிறார். ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம்தர மகாபலி ஒப்புக் கொள்கிறான். அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியைப் பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை வைத்து அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொன்னார். மகாபலி கமண்டலத்தை எடுத்து நீரை ஊற்றித் தானத்தை தாரை வார்க்க முயல, சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கமண்டலத்தின் மூக்குப்பகுதியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க, விஷ்ணு தர்ப்பைப் புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார். மகாபலி கமண்டலத்தை எடுத்து மூன்றாவது அடியைத் தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.
அரசன் ஒருவனின் ஆணவத்தை அடக்க, குள்ளமாக வந்து பின் விசுவரூபமெடுத்து வலது காலில் ஆகாயத்தை அளந்த படியும், இடது காலில் பூமியில் நின்றபடியும் அருள்பாலிக்கிறார். வழக்கமாக அனைத்து பெருமாள் கோயிலிலும் விஷ்ணு வலக்கையில் சக்கரமும், இடக்கையில் சங்கும் வைத்திருப்பார். இங்குள்ள பகவான் மகாபலியை தன்னுடன் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்திக் காட்சி தருகிறார். இப்படி காட்சி தருவது பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குவதாக ஐதீகம். தனது வலது கையில் ஒன்று, மூன்றாவது அடி எங்கே என கேட்பது போல அமைந்திருக்கும். தூக்கியிருக்கும் விஷ்ணுவின் வலது காலை பிரம்மா ஆராதனை செய்கிறார். மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது. மகாபலி மன்னனை ஆட்கொள்ள குள்ள வடிவமுள்ள வாமனராக வந்த பெருமாள், விஸ்வரூபம் எடுத்தார். இந்த விஸ்வரூப காட்சியைக் காண மிருகண்டு என்னும் முனிவருக்கு விருப்பம் ஏற்பட்டது. அவர் பிரம்மாவிடம் இதுபற்றி ஆலோசனை கேட்டார். “பூவுலகில் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் உள்ள கிருஷ்ண க்ஷேத்திரத்தில்(தற்போதைய திருக்கோவிலூர்) தவம் செய்தால், அந்த விஸ்வரூப காட்சி கிடைக்கும்” என்றார் பிரம்மா. அதன்படி முனிவர் தன் மனைவி மித்ராவதியுடன் பல காலம் இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். அத்தலத்துக்கு வருவோருக்கு அன்னதானத்தையும் அந்த தம்பதியர் அளித்து வந்தனர். ஒருநாள் விஷ்ணு இவரை சோதிக்க வயோதிக அந்தணர் வடிவில் வந்து அன்னம் கேட்டார். அன்று அவர்களிடம் உணவு ஏதும் மிச்சமில்லை. மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம், வந்தவருக்கு இல்லை என சொல்லாமல், ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கூறினார். வீட்டிலோ ஒரு பொட்டு நெல்மணி கூட இல்லை. எனவே, கணவருக்குச் சேவை செய்வதைத் தவிர வேறு ஒன்றும் அறியாத, கற்பில் சிறந்த அப்பெண்மணி, நாராயணனை நினைத்து ஒரு பாத்திரத்தைக் கையில் எடுத்தாள். “நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால், இந்த பாத்திரம் நிரம்பட்டும்” என்றாள். உடனடியாக அதில் அன்னம் நிரம்பியது. அப்போது, அந்தணர் வடிவில் வந்த பெருமாள், அவர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தை காட்டியருளினார்.

பெருமாளை புகழ்ந்து பாடிய முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்து பெருமாளைத்தான் முதன் முதலாகப் பாடினர். ஒரு முறை இம்மூவரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருக்கோவிலூரை அடைந்தனர். இவர்களை ஒன்று சேர்க்க நினைத்த பெருமாள், பெரும் மழையை பெய்விக்கச் செய்தார். முதலில் இத்தலம் வந்த பொய்கையாழ்வார், மிருகண்டு மகரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்து, அங்கே தங்குவதற்கு இடமுண்டா என கேட்டார். அதற்கு முனிவர் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம் என கூறி சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த பூதத்தாழ்வார், தாம் தங்குவதற்கும் இடமுண்டா என வினவினார். அதற்கு பொய்கையாழ்வார் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம் என்று கூறி அழைத்துக் கொண்டார். இன்னும் சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கு வந்தார். தனக்கும் உள்ளே இடம் வேண்டும் என கேட்க, ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம் எனக் கூறி அவரையும் உள்ளே இழுத்துக் கொண்டனர். இப்படியாக மூவரும் நின்று கொண்டிருக்கையில், நாலாவதாக ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. “இதென்ன விந்தை” என அவர்கள் ஆச்சரியப்பட்ட போது, பேரொளியாகத் தோன்றிய பெருமாள் தன் திருமேனியை மூவருக்கும் காட்டியருளினார். மூன்று ஆழ்வார்களும் இத்தலத்தில் தான் முக்தி பெற்றனர்.

மூன்றடி மண் கேட்ட பெருமாள் என்பதால் இங்கு “உலகளந்த பெருமாள்” என்று போற்றப்படுகிறார். இங்கு ஷேத்திராபதி “வேணுகோபால்” ஆவார். மூலவர் திருமேனி தாருவால்(மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. 108 வைணவத் தலங்களில் இங்கு மட்டும் தான் சுயம்பு விஷ்ணு துர்க்கை உள்ளது. இது நடுநாட்டுத் திவ்ய தேசங்களில் முக்கியமானது ஆகும். 192 அடியில் அமைந்த தமிழ் நாட்டின் மூன்றாவது கோபுரம் இங்கு அமைந்துள்ளது. அசுர குரு சுக்கிராச்சாரியாருக்கு இங்கு உருவம் இருக்கிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலில் பாடப்பட்டது என்பது மிக குறிப்பிடத்தக்க சிறப்பு

பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம். பெருமாளை மட்டுமே பாடும் திருமங்கையாழ்வார், இத்தலத்தில் துர்க்கையையும்(மாயை) சேர்த்து “விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்” என்று புகழ்ந்து பாடுகிறார். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் என்பதும் நம்பிக்கை.

பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது முதலாவது தலம். கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரைத் தரிசித்த பின் தான் மூலவரைத் தரிசனம் செய்ய வேண்டும். மணவாள மாமுனிகளும் இத்தல பெருமாளை பாடியுள்ளார். பரசுராமர் இங்கு தவம் செய்ததாக புராணங்களும், அகத்தியர் தவம் செய்ததாக தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. புராண காலத்து கிருஷ்ணபத்ரா நதியே தற்போது “தென்பெண்ணை” என்ற பெயரில் ஓடுகிறது. “வெண்ணெய் உருகும் முன்பே பெண்ணை உருகும்” என்ற பழமொழி உண்டு.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. பெருமாள் ஸ்ரீசக்கரம் விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வேணுகோபாலன், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், இலட்சுமி இராகவன், இலட்சுமி நரசிம்மர், இராமர், ஆண்டாள், அசுரகுல குரு சுக்ராச்சாரியார் ஆகியோர் அருள் செய்கின்றனர்.

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் 5 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது. 11 நிலைகள் கொண்டது. இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் ஆகும். (முதல் இடம் ஸ்ரீரங்கம், இரண்டாம் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர்) கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்ற பின்னரும், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளைக் காணலாம். இத்தலத்தை நடு நாட்டு திருப்பதி என கூறுகிறார்கள். கேரளா திருக்காக்கரையில் வாமனருக்கென மிகப்பெரிய கோயில் உள்ளது. இத்தலத்தில் மூலவருக்கு பின்னால் வாமனர் அருளுகிறார்.

மங்களாசாஸனம்:

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்

மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின்மேல் ஓரிளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை துஞ்சாநீர்வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான்மறையாளர் சோமுச் செய்ய செஞ்சாலி விளைவயலுள் திகழந்து தோன்றும் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.

–திருமங்கையாழ்வார்

திருவிழா:

பங்குனி மாதம் – பிரம்மோற்ஸவம் -15 நாட்கள் நடைபெறும்.

பஞ்சபர்வ உற்ஸவமும் ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார் வெள்ளிக் கிழமை ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெறும். இத்திருவிழா இத்தலத்தின் மிக சிறப்பான விழா ஆகும்.

மாசி மாதம் – மாசி மக உற்சவம் – இவ்விழாவின் போது பெருமாள் கடலூருக்கு தோளிலேயே செல்வார் என்பது சிறப்பு.

புரட்டாசி – பவித்திர உற்சவம் – நவராத்திரி உற்சவம்.

சித்திரை – ஸ்ரீ ராமநவமி உற்சவம், ஸ்ரீ ராமனுஜர் ஜெயந்தி , வசந்த உற்சவம்.

வைகாசி – விசாக கருட சேவை, நம்மாழ்வார் சாற்றுமுறை.

ஆனி– பெரியாழ்வார் சாற்று முறை.

ஆடி– திருவாடிப்பூரம், ஆண்டாள் உற்சவம்.

ஆவணி – ஸ்ரீ ஜெயந்தி, உறியடி உற்சவம்.

ஐப்பசி – முதலாழ்வார் சாற்றுமுறை , ஸ்ரீமணவாள மாமுனிகள் 10 நாட்கள் உற்சவம்.

கார்த்திகை – கைசிக ஏகாதசி உற்சவம், திருக்கார்த்திகை தீப உற்சவம்.

மார்கழி – பகல் பத்து , இராப்பத்து (வைகுண்ட ஏகாதசி).

இவை தவிர வருடத்தின் விசேஷ நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின் போது கோயிலில் பெருமாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

பிரார்த்தனை:

நல்ல பதவிகளை அடைய விரும்புவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு.

கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் எதிரிகள் தொல்லை நீங்கும்.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பெருமாளுக்கு வஸ்திரம் சாத்தலாம். துளசி மாலை சாத்தலாம். நெய்விளக்கு ஏற்றலாம். தாயாருக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்யலாம். துர்க்கை அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செலுத்தலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Sunday, December 1, 2024

திருக்கடையூர் திருத்தலத்தில் கார்த்திகை சோமவாரம் 1008 சங்கா பிஷேகம்..

திருக்கடையூர் கோவில் பற்றி 
சிறப்பு தகவல்கள்.!
திருக்கடையூர் திருத்தலம் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் வழித் தடத்தில் சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 
கடவூர், திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில் வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாப விமோசன புண்ணிய வர்த்தம், பிஞ்சிலாரண்யம் என்பது உள் பட திருக்கடையூருக்கு பல புராதண பெயர்கள் உண்டு. 
மார்க்கண்டேயருக்காக இத்தலத்து ஈசன், எமனை உதைத்து தள்ளியதால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரம்மன் இத்தலத்தில் உபதேசம் பெற்றார். ஆதியில் இத்தலத்தின் தல விருட்சமாக வில்வம் இருந்தது. தற்போது மார்க்கண்டேயரால் நடப்பட்ட பிஞ்சில மரம் (ஜாதி மல்லிப் பூ மரம்) தல விருட்சமாக உள்ளது. இத்தலத்தில் அமிர்த தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. திருமால், பிரம்மன், மார்க்கண்டேயர், அகத்தியர், எமன், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, ஏழு கன்னிகள் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது. 
குங்குலியகலயநாயனார், காரி நாயனார் இருவரும் இத்தலத்தில் வாழ்ந்து பல அற்புதங்கள், சேவைகள், திருப்பணிகள் செய்தனர். அப்பர், சுந்தரர் இருவரும் ஒரு சேர எழுந்தருளி, இறைவனை தொழுது குங்கிலிய நாயனாரின் திருமடத்தில் தங்கி இருந்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. மார்க்கண்டேயர் இறையருள் பெற்ற 108 தலங்களில் இது 108வது தலமாகும். அமிர்தகடேசுவரரை கண்ட பிறகுஅவர்வேறுஎங்கும் செல்லவில்லை. 
பூமாதேவி இத்தலத்தில்தான் முழுமையான அனுக்ரகம் பெற்றுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது. 
சதாபிஷேகம், கனகாபிஷேகம், ஆயுள் ஹோமம், ம்ருத்யுஞ்ச ஹோமம், உக்ரக சாந்தி, பீமரத சாந்தி ஆகியவை செய்ய தமிழ்நாட்டில் இத்தலம் மட்டுமே 100 சதவீதம் ஏற்ற தலமாக உள்ளது. 
இத்தலத்தில்நடக்கும்பெரியவிழாக்களில் கார்த்திகைமாதம் நடக்கும் சோமவார விழா மிகவும் சிறப்பானது. சோமவாரத்தில் 1008 சங்கா பிஷேகம் நடப்பதை காண கண் கோடி வேண்டும் என்பார்கள். திருக்கடையூர் தலத்தையும், ஊரையும் சோழ, பாண்டிய மற்றும் விஜய நகர மன்னர்கள் செப்பணிட்டு சீரமைத்து ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். அது பற்றிய குறிப்புகள் ஆலயம் முழுவதும் உள்ள 54 கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. 
சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி வீடு திருக்கடையூரில் தேரோடும் வீதியில் அமைந் திருந்ததாக பாடல்கள் உள்ளன. ஆனால் இப்போது மாதவி வாழ்ந்த வீடு என்று எந்த ஒரு வீட்டையும் சுட்டிக்காட்ட இயலவில்லை. திருக்கடையூர் அமிர் தகடேசுவரர் ஆலயம் திரா விட கட்டிடக்கலையை பின் பற்றி கட்டப்பட்டுள்ளது. 
தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இந்த தலம் 47வது தலமாக போற்றப்படுகிறது. 
திருக்கடையூர் ஆலயம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும். 
மிகச் சிறந்த பரிகாரத் தலமான திருக்கடையூர் தலத்தை 04364-287429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்                                                                           
திருக்கடையூர் கோயிலில் வழிபடுவது எப்படி?பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பி கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, இத்தலம் வந்து சிவனை வணங்கினார். 
சிவன் அவருக்கு காட்சி தந்து, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆதி வில்வ வனநாதராக தனிசன்னதியில் அருளுகிறார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு அமிர்தகடம் வந்தது முதல் ஈசன் அமிர்தகடேசுவரர் என்றும் பெயர் பெற்றார்.திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. 
புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாகஅகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

முதலில் தட்சணாமூர்த்தியை வணங்கி விட்டு கடைசியில் விநாயகரை வணங்கும் கோயில்....

உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் கடைக்கோடியில் அமைந்துள்ள 
#கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 
பிரசித்திப் பெற்ற பழமையான தலங்களில் ஒன்றான,
மும்மூர்த்திகளும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்து ஒரே இடத்தில் காட்சி தரும் இடமான 
#சுசீந்திரம் 
#தாணுமாலய_சுவாமி
#அறம்வளர்த்த_நாயகி திருக்கோயிலைப் பற்றி காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻🙏🏻🙇🙇🙇

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள இந்துக்களால் போற்றப்படும் 108 சிவாலயங்களில் சுசீந்திரமும் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படுவதற்கு முன்பு, கோயிலும் சுற்றுப்புறமும் பழைய திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கோவில் வளாகம் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மற்றும் நுழைவாயில்கள் என்று அழைக்கப்படும் 'கோபுரங்கள்' என்று அழைக்கப்படும் இரண்டு கோபுரங்கள் உள்ளன. கிழக்கு கோபுரம் 11 மாடிகள் மற்றும் 44 மீட்டர் உயரம் கொண்டது. கோயிலுக்குள் 30 சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் உள்ள வழிபாட்டின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், இது சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது; இதனால் இந்துக்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். கட்டிடத்தின் அசல் அமைப்பு 9 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தால் கட்டப்பட்டது. பின்னர் திருமலை நாயக்கர் மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் விரிவாக்கங்கள் செய்யப்பட்டன.

இறைவன் : தாணுமாலயர்

தாயார் : அறம் வளர்த்த நாயகி

தல தீர்த்தம் : பிரபஞ்ச தீர்த்தம்

தல விருச்சகம் : கொன்றை

ஊர் : சுசீந்திரம்

மாவட்டம் : கன்னியாகுமரி ,தமிழ்நாடு

தாணு (சிவன் ),மால் (விஷ்ணு ),அயன் (பிரம்மா)ஆகியோர் இணைந்ததே தாணுமாலயர் என்ற பெயராகும் ,திருமாலை முடியிலும்,பிரம்மாவை அடியிலும் தன்னை நடுவிலும் வைத்து ஈசன் காட்சிதரும் இடமே சுசீந்திரம் ஆகும் . அகலியால் சாப விமோச்சனம் பெற்ற இந்திரன் இவ் தளத்திற்கு வந்து இறைவனை வணங்கிய பின்னரே சாப விமோச்சனம் பெற்றதாக சுசீந்திர ஸ்தல வரலாறு கூறுகிறது .

புராண வரலாறு:

இன்று சுசீந்திரம் என்று அழைக்கப்படும் பகுதியே முன்னொரு காலத்தில் ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இது அடர்ந்த வனம் நிறைந்த பகுதியாக இருந்தது . இந்த வனத்தில் ஒரு பகுதியில், ஆஸ்ரமம் அமைத்து அத்திரி மகரிஷி தன்னுடைய தர்மபத்தினியான, அனுசூயாதேவி உடன் வாழ்ந்து வந்தார்.

அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞானாரண்யம் எனும் பழம்பெயர்பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார். அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள். தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.

அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலில் இறைவியாகக் கருதப்படும் அறம்வளர்த்த அம்மன் கதை ஒன்று உண்டு. சுசீந்திரம் ஊரை அடுத்த தேரூர் என்ற ஊரில் வாழ்ந்த பள்ளியறை நாச்சியார் என்ற கன்னி தாணு கோயிலுக்கு வந்தாள். கோயிலைச் சுற்றி வந்தபோது அவள் மாயமாக மறைந்தாள். இறைவன் அவளை ஆட்கொண்டான். இந்த நிகழ்ச்சி 1444-ஆம் ஆண்டு நடந்தாக புராணக்கதை தெரிவிக்கிறது. இதன் நினைவாக மாசிமாதம் திருக்கல்யாணம் நடக்கிறது.
பாணாசுரனை அழிக்க தேவி கன்னியாகுமரியாகப் பிறந்தாள். அவள் கன்னியாக இருக்கும்போது மட்டுமே அசுரனை வெல்ல முடியும் என்பது வரம். தாணு குமரி கல்யாணம் சூரியன் தோன்றும் முன் நடக்காமல், குமரி அசுரனை அழித்தாள்.

இறைவன் மீது அளவற்ற பற்றுக்கொண்ட அறம்வளர்த்தாள் என்ற பெண்ணை இறைவன் உயிரோடு ஆட்கொண்ட இடம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் என்றும் தலப்புராணம் கூறுகிறது. அதன்காரணமாக அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது என்றும், இந்த சம்பவத்தின் நினைவாக ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.

பெயர்க் காரணம்:

தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது. அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.

அனுமன் சிலை:

மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது அனுமன் சிலை ஒன்று கிடைத்தது. 18 அடி உயரமுடைய இந்தச் சிலை 1929 ஆம் ஆண்டில் இராமபிரானின் கருவறைக்கு எதிரில் இருக்குமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

சிறப்புகள்:

இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது.
இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள்.
இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.

இங்குள்ள கோபுரம் நூற்றி முப்பத்தி நாலரை அடி உயரம் கொண்டது. ராஜ கோபுரம் ஏழு நிலைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது . கோபுரத்தை முதலில் வணங்கி விட்டு உள்ளே சென்றால் 12 அடி உயரம் உள்ள நந்தியின் சிலையைக் காணலாம். கைலாசநாதர், அய்யனார், சிதம்பரேஸ்வரர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். அலங்கார மண்டபத்தில் உள்ள தூணில் பெண் வடிவ விநாயகர் வீற்றிருக்கிறார். நீலகண்ட விநாயகர் முன்பு உள்ள வசந்த மண்டபத்தின் கூரையில் 12 ராசிகளும், நவ கிரகங்களும் உள்ளன. வசந்த மண்டபத்தின் ஒரு தூணில், காலபைரவர் சிற்பம் உள்ளது. வடக்கு பகுதியில் ராமர் சன்னதி உள்ளது. இதில் ராமரும் சீதையும் வீற்றிருக்கின்றனர். வாயிலில் லக்ஷ்மணரும் ஆஞ்சநேயரும் நிற்கின்றனர். இந்தப் பிரகாரத்தில் சங்கீத தூண்கள் உள்ளது. இதில் உள்ள தூண்களை ஒவ்வொன்றாக தட்டினால் இதிலிருந்து,( sa, re, ga, ma ,pa ,da ,ni ) ச,ரி,க,ம,ப,த,நி. என்ற ஓசை எழும்பும். இதன் அருகில் சுப்பிரமணியன், கால பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

தாணுமாலயன் சுவாமியின் கருவறையில், அர்த்த ஜாம பூஜைக்கான பூஜை பொருட்களை வைத்துவிடுவார்கள், மாலை நேர பூஜை செய்த அர்ச்சகர் மறுநாள் காலை பூஜை செய்ய வரக் கூடாது. என்னும் நியதி இங்கு உள்ளது. அர்த்த ஜாமத்தில் இந்திரனும் மற்ற தேவர்களும் இங்கு வந்து ஒவ்வொரு நாளும் தாணுமாலயனுக்கு பூஜை செய்வார்கள் முன்தினம் வைத்து பூஜை பொருள்கள் அனைத்தும் மாறுதல் அடைந்து இருக்கும். 'அகம் கண்டதை புறம் கூறேன்' என்று சத்தியம் செய்து கொண்டுதான் கோயிலின் வாசலை திறப்பார்கள். தாணுமாலய சுவாமியின், லிங்க வடிவில் கட்டப்பட்டுள்ள தங்க கவசத்தில், சுவாமியின் திருமுகம் அதன் மேல்புறம் 14 சந்திர பிறைகளும், அதன்மேல் ஆதிசேஷனும் காட்சியளிக்கின்றனர். கருவறைக்கு தென்புறம் விஷ்ணு சன்னதியும் ,செண்பகராமன் மண்டபமும் உள்ளன. இங்குள்ள 32 தூண்களிலும் கண்ணை கவரும் அழகு சிற்பங்களை காணலாம். விஷ்ணு சன்னதியில் எம்பெருமான் 8 அடி உயரத்தில் நின்றவாறு காட்சியளிக்கிறார். கருவறைக்குப் பின்னால் உள்ள பிரகாரத்தில் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி அளிக்கிறார் . அருகில் மூடு விநாயகர், துர்க்கை அம்மன் சங்கரநாராயணர் , சண்டிகேஸ்வரர், நடராஜர் சன்னதிகள் உள்ளன. இங்கு செப்பு சிலை வடிவாக அம்மன் காட்சி தருகிறாள் .

மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது கண்டெடுத்த அனுமன் சிலை 18 அடி உயரம் உடையது. வெற்றிலை, வட மாலை, வெண்ணெய் சாத்தி இவரை வேண்டி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இக்கோயில் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது , இக்கோயிலை முன்னர் நம்பூதிரிகள் நிர்வகித்துவந்தனர் அவர் குடும்பத்தை தேக்குமுன் மடம் என்று அழைத்தார்கள் , பின்பு திருமலை நாயக் மற்றும் திருவாங்கூர் மகாராஜ் ஆகியோர்கள் நிர்வகித்தனர் , கி.பி 1875 ஆம் ஆண்டு திருவாங்கூர் மஹாராஜாவால் லாட்டரி ஆரம்பிக்கப்பட்டது அப்போது 40000 ரூபாய் இக்கோயில் மறுசீரமைப்புக்காக லாட்டரி பணம் செலவிடப்பட்டது .

இக்கோயிலில் முதலில் தட்சணாமூர்த்தியை வணங்கி விட்டு கடைசியில் விநாயகரை வணங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது .
இக்கோயில் மண்டபங்கள் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டுள்ளது ,கலைநயத்துடன் கூடிய செண்பகராமன் மண்டபம் ,இசைத்தூண்களை கொண்ட குலசேகர மண்டபம் ஆகியவை புகழ்பெற்றவை .

இங்கு வேறு எங்கும் காணமுடியாத கணேசனி என்ற விநாயகரின் பெண் உருவத்தை காணலாம் . இறைவனின் வாகனமான நந்தி தேவர் 13 அடி உயரமும் 21 அடி நீளமும் உடைய இந்தியாவில் உள்ள மிக பெரிய நந்திகளில் ஒன்றாகும் .
ஆஞ்சநேயர் கோயில் : இங்குள்ள ஆஞ்சநேயர் இக்கோயிலின் மேலபிரகாரம் தோண்டும் போது கிடைத்தது ,சுமார் 18 அடி உயரம் கொண்ட நின்ற நிலையில் காட்சி தருகிறார் , இவரை 1930 ஆண்டு நிறுவினார்கள் ,1740 ஆம் ஆண்டு திப்புசுல்த்தான் படையெடுப்பின் போது இவ் சிலையானது சிதலமடைந்தது ,புனரமைத்து பின்பு நிறுவினார்கள் ,மிகவும் பிரசித்துப்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலாகும் .

முற்காலப் பாண்டியர், பிற்காலச் சோழர், பிற்காலப்பாண்டியர், வேணாட்டார், விஜயநகர நாயக்கர், திருவிதாங்கூர் ஆகிய அரசர்களின் காலத்தில் கட்டுமானம் நடந்திருக்கிறது.

 கல்வெட்டுக்கள்:
இக்கோயிலில் தமிழ் மொழியில் 130 கல்வெட்டுக்களும், வட்டெழுத்து வரிவடிவில் 15 கல்வெட்டுக்களும், கிரந்த எழுத்தில் 5 கல்வெட்டுக்களும் ஆக 150 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களில் பழையது 9-ஆம் நூற்றாண்டு, 17-18 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் அதிகம்.

இங்குள்ள சிற்பங்களில் காரைக்கால் அம்மையார் சிற்பம் முக்கியமானது. அம்மை வயது முதிர்ந்த பெண்ணாக காட்டப்பட்டுள்ளார். இவளது முதிர்ச்சி எலும்பு வடிவில் தெரிகிறது.

சுரதேவர் சிற்பம் அபூர்வமானது. இரண்டு தலைகள், ஆறு கண்கள், மூன்று கைகள், மூன்று கால்கள் என அமைந்தது.

ஆண்டுகளில் 8 தேவதாசிகளால் கட்டப்பட்டது. நம்பூதிரிப்பெண் ஒருத்தியும் கட்டுமானத்திற்கு உதவியிருக்கிறாள்.
இக்கோயிலின் இராஜகோபுரம் விஜயநகரப்பாணி. 7 நிலை, 41 மீட்டர் உயரம். விட்டலர் என்ற விஜயநகரப் படைத்தலைவர் 1544-ல் கோபுர அதிஷ்டானத்தைக் கட்டினார். திருவிதாங்கூர் அரசர் மூலந்திருநாள் கோபுரத்தைக் கட்டினார். கோபுர வேலை 1888-ல் முடிந்தது. கோபுரத்தின் 7 நிலைகளிலும் தாவரச்சாய ஓவியங்கள் உள்ளன.

கோபுரத்தை அடுத்த ஊஞ்சல் மண்டபம் 1584-ல் கட்டப்பட்டது. இங்கு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அறம்வளர்த்த அம்மன் திருமணம் இம்மண்டபத்தில் நடக்கும்.

வசந்த மண்டபம், தெற்கு வெளிப்பிரகாரத்தைத் தொட்டு இருப்பது. இங்கு மேற்கூரையில் நவக்கிரகச் சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபம் 1835-ல் கட்டப்பட்டது. இம்மண்டபத்தின் நடுவில் உள்ள சந்திரகாந்தக்கல்லில் செப்பு பஞ்சலோக படிமங்களை வைத்து குளிரூட்டப்படும் நிகழ்வு முந்தைய காலத்தில் நடந்தது.

அலங்கார மண்டபம். இங்கு இசைத்தூண்கள் உள்ளன. 1758-1798ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டடது.

வடக்கு பிரகாரமூலையில் இருப்பது சித்திர சபை. எட்டுதூண்கள் கொண்டது. எட்டிலும் அருமையான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபம் ஆரம்பத்தில் மரப்பணியால் ஆனது. 1835-ல் கல்லால் கட்டப்பட்டது.

கிழக்கு வெளிப்பிரகாரத்தில் இருப்பது ஆதித்ய மண்டபம். இங்கு பெருமாளின் கொடிமரமும், தாணுமூர்த்தியின் கொடிமரமும் பலிபீடங்களும் உள்ளன. இம்மண்டபம் 1479-1494 ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம். 

செண்பகராமன் மண்டபம் இக்கோயிலுக்குப் பெருமை சேர்ப்பது. இது கைமுக்கு மண்டபம் எனப்படும். 33 மீ நீளம் 26மீ அகலம் உடையது. 36 தூண்கள் கொண்ட இம்மண்டபத்தில் 500-க்கு மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இந்த மண்டப வேலை 1478-ல் முடிந்தது.

இக்கோயிலின் தெப்பக்குளம் 4 ஏக்கர் பரப்புடையது. இது கோயிலின் வடபுறம் உள்ளது. 13 தூண்களும், கோபுரமும் கொண்டது தெப்ப மண்டபம். இந்த குளத்தை முதலில் தோண்டி படிகள் கட்டியவன் வீரமார்த்தாண்டவர்மா குலசேகர பெருமாள். திருக்குளத்தின் படிக்கட்டு 1471-ல் கட்டப்பட்டது. தெப்பமண்டபத்தைக் கட்டியவர் திருமலை நாயக்கரின் தம்பி செவ்வந்தி நாயக்கர். இது 1622 - 1651 ஆம் ஆண்டிற்குள் கட்டப்பட்டிருக்கலாம்.

#பெண் தோற்றத்தில் காட்சி தரும் விநாயகர்:

பெண் தோற்றத்தில் காணப்படும் விநாயகரை விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி என்ற பெயர்களில் வழிபடுகிறார்கள்.

ஒரு தூணில் விநாயகியின் சிற்பமுள்ளது. விநாயகி, அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து, இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் இருக்கின்றார். தலையில் வேலைப்பாடுடன் கூடிய அழகிய மகுடம் விளங்குகிறது. மேற்கைகளில் அங்குச, பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய, வரத ஹஸ்தங்களாக விளங்குகின்றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம் கொண்ட இவர், கழுத்தணியும், கால்களில் சிலம்புகளும், இடையில் புடவை அணிந்தும் காட்சி தருகிறார்.

சன்னதிகள்:

இந்த கோவிலின் பிரதான சன்னதியாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் இணைந்த தாணுமாலய சாமி சன்னதி அமைந்துள்ளது. இதுதவிர கொன்றையடி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, அறம் வளர்த்த நாயகி சன்னதி, கால பைரவர் சன்னதி, கங்காளநாதர் சன்னதி, கைலாசநாதர் சன்னதி, சேரவாதல் சாஸ்தா சன்னதி, ராமர் சன்னதி, முருகன் சன்னதி, பஞ்சபாண்டவர் சன்னதி, நீலகண்ட விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது), இந்திர விநாயகர் சன்னதி, உதயமார்த்தாண்ட விநாயகர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி, துர்க்கை அம்மன் சன்னதி, ஸ்ரீசக்கரம் சன்னதி, விக்னேஸ்வரி (பெண் கணபதி- முகம் விநாயகர் உருவிலும், உடல் பெண் தோற்றத்திலும் காட்சி தரும்) சன்னதி, மன்னருக்கு தலைவலியை போக்கிய ஜூர தேவமூர்த்தி சன்னதி (3 தலை, 3 கால், 4 கைகளைக் கொண்ட சாமி சிலையுடன் கூடியது), நந்தீஸ்வர் சன்னதி போன்ற சன்னதிகள் இக்கோவிலில் அமைந்துள்ளன. இத்தகைய சிறப்புகள் மிகுந்த இந்த கோவிலுக்கு தினமும் குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும், பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

 விழாக்கள்:

சித்திரை, ஆவணி, மார்கழி, மாசித் திருவிழாக்கள்.சித்திரை விஷு, கார்த்திகை சொக்கப்பனை, ஆடி களப பூஜை, ஆஞ்சநேயர் ஜெயந்தி ஆகியன முக்கிய திருவிழாக்கள். மார்கழி திருவிழா பெரியது. 9-ஆம் நாள் தேரோட்டம். 6-ஆம் நாள் விழா சம்பந்தர் ஞானப்பால் உற்சவம், சித்திரை திருவிழாவில் 10-ஆம் நாள் தெப்பவிழா.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம் மடவிளாகம்...

*அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில்,*
*காங்கேயம்,*

*மடவிளாகம்,*

*ஈரோடு மாவட்டம்.*

*காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*மூலவர்  –    பச்சோட்டு ஆவுடையார்*

*அம்மன்  –    பச்சை நாயகி (பரியநாயகி)*

*தீர்த்தம்  –    நிகபுஷ்கரணி*

*பழமை  –    500-1000 வருடங்களுக்கு முன்*

*புராணப் பெயர்  –    பார்வதிபுரம்*

*ஊர்  –    காங்கேயம் – மடவிளாகம்*

*மாவட்டம்  –    ஈரோடு*

*மாநிலம்  –    தமிழ்நாடு
*முன்னொரு காலத்தில் அன்னை பார்வதி ஈசனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான், பச்சை மண்ணால் செய்யப்பட்ட திருவோட்டுடன், பிச்சையேற்பவராக (பிட்சாடனர்) அன்னைக்கு காட்சி கொடுத்தார். அடியவர்களுக்கு அன்னமிடுவதை தனது முதல் கடமையாக கொண்ட பார்வதி, சிவனுக்கு அன்னமிட்டார். இதனால் மகிழ்ந்த சிவன் பார்வதிக்கு காட்சி கொடுத்து, தன்னுடன் அழைத்து சென்றார் என்பது இத்தல புராண வரலாறாகும்.*

*பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் “பச்சோட்டு ஆவுடையார்” என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் “பச்சோட்டு ஆளுடையார்” எனக் காணப்படுகிறது. தலத்தின் நாயகி “பச்சை நாயகி, பெரியநாயகி.”*
*கோயிலின் பின்புறம் சிவன் தனது நகத்தால் கீரிய அற்புத சுனை உள்ளது. “நிகபுஷ்கரணி” என்ற பெயர் பெற்ற இத்தலம் கங்கையை போன்று பெருமை பெற்றது. 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் “குடம்” அளவுக்கு இருந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது “சிறிய செம்பு” அளவில் மிதந்து வருகிறது. இந்த மண் கலய விபூதி கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும், சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.*

*பார்வதி இங்கு தவமிருந்ததால், இப்பகுதி பார்வதிபுரம் என வழங்கப்படுகிறது. இந்தப் பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம் இது. கொடிமரம் வணங்கி, வாத்திய மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்தால் “ஆருத்ரா கபாலீஸ்வரர்” என்ற மற்றொரு சுயம்பு மூர்த்தியைக் காணலாம். இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள மிகப்பெரிய சிவத்தலம் இதுவாகும். ஸ்ரீதேவி பூதேவி உடனுறை இரகுபதி நாராயணப்பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் கன்னிமூலகணபதி, முருகன், சபாநாயகர் மண்டபம், தான்தோன்றீஸ்வரர் என்ற சுயம்புலிங்கத்திற்கு சன்னதிகள் உள்ளன

*திருவிழா:*

*மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.*

*நேர்த்திக்கடன்:*

*வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.*

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...