Wednesday, March 5, 2025

குலதெய்வ வழிபாடு தோன்றிய விதம்

குல தெய்வ வழிபாடு


குல தெய்வ வழிபாடு என்பது இந்துக்களிடம் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். இவ்வழிபாடானது அவரவர் முன்னோரைப் பின்பற்றி வழிவழியாக ஒரு தெய்வத்தை வணங்கி வருதல் ஆகும்.

குல தெய்வம் என்பதனை குலத்தினை காக்கின்ற தெய்வம் என்று பொருள் கொள்ளலாம். இவ்வழிபாடானது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழ் நாட்டில் முறையாக பெரும்பாலோரால் பின்பற்றப்படுகிறது.

நோய்கள் நீங்கவும், பிள்ளை வரம் வேண்டியும், மழை பெய்யவும் மற்றும் சுபிட்ச வாழ்வு வேண்டியும் மக்கள் இவ்வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.

 

குலதெய்வ வழிபாடு தோன்றிய விதம்

குலம் என்பது பல குடும்பங்களின் தொகுப்பு ஆகும். குலத்தின் உறுப்பினர்கள் யாவரும் ஒரு குறிப்பிட்ட மூதாதையரின் வழித் தோன்றல்கள் ஆவர். குலத்தின் தெய்வங்கள் பெரும்பாலும் அந்த குலத்தில் தோன்றி நல்ல செயல்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களாக இருப்பர்.

பெண்களை குல தெய்வங்களாகக் கொண்டாடுவோரும் உண்டு. இப்பெண்கள் தங்கள் வாழ்வை சமுதாயம் மற்றும் குலத்திற்கு அர்ப்பணித்தவர்களாக இருப்பர். இவ்வாறு சமுதாயத்திற்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களை நினைவுகூறும் விதமாக கற்களை ஊன்றி வழிபாடு செய்தனர். இதற்கு நடுகல் வழிபாடு முறை என்று பெயர்.

இந்த நடுகல் வழிபாடே பின்னாளில் குல தெய்வ வழிபாட்டு முறையாக மாறியிருக்கலாம் மேலும் மறைந்த முன்னோர் வழிபாடே குல தெய்வ வழிபாடாய் காலப்போக்கில் மாறியிருக்கும்.

 

குலதெய்வம் அமைந்துள்ள விதம்

பெரும்பாலும் எல்லா குல தெய்வ வழிபாட்டிலும் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு முக்கிய தெய்வங்களும் அதனைச் சுற்றிலும் 5-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்களும் இடம் பெற்றிருக்கும்.

குல தெய்வங்கள் பொதுவாக காடு, மலை, வயல் மற்றும் சாலை வசதி இல்லாத இடங்களில்தான் அமைந்திருக்கும். பெரும்பாலும் கிராமங்களை ஒட்டியே இவ்வகைத் தெய்வங்களின் வழிபாட்டிடம் இருக்கும்.

மேலும் குலதெய்வ கோயில்கள் பெரிய அளவில் கோபுரங்களை கொண்டிருப்பதில்லை. சிறிய கோயில் அமைப்பாகத் தான் இருக்கும். இவ்வகை கோவில்கள் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டிருக்காது. அந்த அந்த இடத்திற்கு ஏற்றாற் போல் இருக்கும்.

இவை பெரும்பாலும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியே அமைந்திருக்கும். பெரும்பாலும் வேம்பு அல்லது வில்வ வகை மரங்கள் குல தெய்வக் கோவில்களில் இடம் பெற்றிருக்கும்.

 

குலதெய்வ வழிபாட்டு முறை

குல தெய்வ வழிபாட்டில் பூஜைகள் முறைப்படி நடத்தப்படுவதில்லை. பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் விருப்பப்படி நடக்கும். அல்லது குடும்பத் தலைவர் தன் தந்தையிடம் இருந்து கற்ற முறைப்படி நடக்கும்.

இக்கோவில்களில் அந்தக் குலத்தினைச் சார்ந்தோரே பூஜாரியாகச் செயல்படுவர். ஒரு சிலர் குலதெய்வ வழிபாட்டினை ஆண்டிற்கு ஒருமுறையே நடத்துகின்றனர். நீர் வளம் தரும் அய்யனாரையும், மழைவேண்டி மற்றும் நோயிலிருந்து காப்பாற்ற மாரியம்மனையும் பலர் குல தெய்வமாக வழிபடுகினறனர்.

குல தெய்வத்தனைப் பற்றிய அறிய வரலாறோ அல்லது கல்வெட்டுக்களோ கிடையாது. இவற்றினை பெரும்பாலும் செவி வழிக் கதைகள் மூலம் அறியலாம்.

திருமணம், வீடு கட்டுதல் போன்ற விசேஷங்களின் போது முதலில் குல தெய்வத்தை வழிபட்ட பின் வேலைகளை ஆரம்பிக்கின்றனர். பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் குல தெய்வக் கோயில்களிலே நடைபெறுகின்றன.

திருமணம், புதுமனை புகுவிழா, தொழில் துவங்கும் விழா போன்றவற்றின் அழைப்பிதழ்களை குல தெய்வத்திடம் வைத்து முதலில் வழிபாடு நடத்திய பின்பே பின் எல்லோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படுகின்றன.

சுப நிகழ்ச்சிகளின் போது குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வைத்து குலதெய்வக் கோயிலுக்கு செல்லும் போது செலுத்திவிடுகின்றனர்.

பெரும்பாலான குல தெய்வ வழிபாடுகள் சூலம், பீடம், மரம், கல், பெட்டி போன்ற அடையாளக் குறியீடுகளைக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. குல தெய்வ வழிபாட்டில் மற்ற தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு போன்றே நடத்தப்பட்டாலும் பொங்கலிட்டு படைத்து வழிபாடு நடத்தும் வழக்கம் இதன் தனிச் சிறப்பாகும்.

காணிக்கை அளித்தல், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளும் குல தெய்வ கோயில்களில் நடத்தப்படுகின்றன.

குல தெய்வ வழிபாட்டில் சைவ வழிபாட்டு முறை, அசைவ வழிபாட்டு முறை என்று இரு வகைகள் உள்ளன. சைவ வழிபாட்டு முறையில் பொங்கலிட்டு படையலிடும் வழக்கமும், அசைவ வழிபாட்டு முறையில் ஆடு, கோழி, சேவல், பன்றி போன்றவற்றை பலியிடும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. சில இடங்களில் சுருட்டு, சாராயம், கருவாடு போன்றவற்றை படையல் செய்து வழிபாடு நடத்துவது நடைபெறுகின்றது.

வழிபாட்டின் போது கரகாட்டம், தெருக்கூத்து ஆகியவற்றின் மூலம் குல தெய்வ வரலாறு விளக்கப்படுகிறது. குல தெய்வ வழிபாட்டினை மேற்கொள்வது பற்றி குறி கேட்டல், உத்தரவு கேட்டல், போன்ற நிகழ்ச்சிகள் உள்ளன.

 

குலதெய்வ வழிபாட்டின் நம்பிக்கைகள்

இவ்வழிபாட்டினை மேற்கொள்வதால் தங்கள் குடும்பத்துக்கும், உறுப்பினர்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது வளமையான வாழ்க்கை கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர். குல தெய்வ வழிபாடில்லாமல் தொடங்கும் எந்த ஒரு செயலும் நன்றாக முடிவதில்லை. எனவே இவ்வழிபாடு எல்லாவற்றிலும் முதன்மையானது என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகின்றது.

வருடத்திற்கு ஒருமுறையாவது குல தெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்கின்றனர். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் முதல் வழிபாடு குல தெய்வத்திற்கு நடைபெறும். அதன் பிறகு தான் மற்ற நிகழ்ச்சிகளை துவக்குவதும் நாம் கூப்பிடாமல் உதவி செய்யும் தெய்வம் குல தெய்வம் என்கின்ற கருத்தும் மக்களிடம் நிலவுகிறது.

குல தெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது. மேலும் குல தெய்வ சாபம் வம்சத்தை சீரழிக்கும் போன்றவற்றை மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர். குல தெய்வ வழிபாடு பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

தொல்காப்பியத்தில் நடுகல் நடும் முறை பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே குல தெய்வ வழிபாடு பழங்காலம் தொட்டே நடைபெற்று வந்துள்ளது என்பதை அறியலாம்.

குலம் தெரியாமல் போனாலும் குல தெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக் கூடாது ஆகியவை குலதெய்வம் குறித்த பழமொழிகள் ஆகும்.

குலதெய்வ வழிபாடு பெரும்பாலும் மாட்டுப் பொங்கல் அன்று கொண்டாடுவது சிறப்பாக இருக்கும். 

தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து குழுவாக வழிபடும் விழாவாக குல தெய்வ வழிபாடு உள்ளது. இவ்வழிபாடானது மக்களை நெறிப்படுத்துவதோடு அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது. இந்த‌ பாரம்பரிய பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப் பட்டு வருவது போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

செவ்வாய் தோஷம் நீங்க திண்டிவனம் திந்திரிணீஸ்வரர்.



செவ்வாய் தோஷம் நீக்கும் *அருள்மிகு திந்திரிணீஸ்வரர் கோயில்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது திந்திரிணீஸ்வரர் கோயில் கிபி 1015 ஆம் ஆண்டு குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது. 

ஊரின் நடு நாயகமாக உள்ள கோயிலின் சிறப்பினை திருநாவுக்கரசு சுவாமிகள் திரு தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறது புராணம்.

ஏழு ராஜநிலைக் கோபுரங்கள் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இக்கோயிலுக்குள் சென்றால் லிங்கமாகக் காட்சி தருகிறார் திந்திரிணீஸ்வரர். 

கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், நவகிரகங்கள், சனிபகவான், துர்கை அருள் பாலிக்கின்றனர். சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக வைணவம் சார்ந்த சிற்பங்கள் இத்திருத்தலத்தில் உள்ளது.

இக்கோயிலில் உள்ள தட்சணாமூர்த்தியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மரகதாம்பிகை அம்மனுக்குப் பச்சை புடவை சாத்தி மனம் உருகி வேண்டினால் குடும்ப வாழ்வு செழிக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டால் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். 

இக்கோயிலில் மகாசிவராத்திரி அன்று நான்காவது கால பூஜைகள் கருவறையில் சிவபெருமானின் தலையிலிருந்து பாதம் வரை சூரிய கதிர்கள் விழும் அதிசயத்தைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

கோயிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இதே போல் ஆனித்திருமஞ்சனம், மாசி மகம், ஆகிய நாட்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, March 4, 2025

மூன்று தீர்த்தம், மூன்று மூர்த்திகள், மூன்று தலமரம்!

மூன்று  தீர்த்தம், மூன்று மூர்த்திகள், மூன்று தலமரம்!
நாகை மாவட்டத்தில், கிழக்குக் கடற் கரையோரம் அமைந்த திருத்தலம், திருவெண்காடு. இத்தலத்திற்கும் மூன்று என்ற எண்ணிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 

இத்தலத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்கள் உள்ளன. இந்த மூன்று தீர்த்தங்களில் நீராடி முறையே இத்தலத்து மூர்த்திகளை வழிபடுபவர்களுக்குப் பிள்ளைப் பேறு கிட்டும். 

திருஞானசம்பந்தப் பெருமான், இந்த திருவெண்காட்டு முக்குள நீர், தோய் வினையார் (மூழ்கி வழிபடுவோர்) அவர் தம்மைத் தோயாவாம் தீவினை, பேய் அடையாது. (பிடித்திருந்தால் விலகியோடும்) பிள்ளையினோடு, உள்ள நினைவு (வேண்டிய) வரங்களைப் பெறுவர் என்கின்றனர். 

இத்தலத்தில், மூன்று மரங்கள் தலமரமாக உள்ளன. அவை ஆலமரம், கொன்றை, வில்வம் என்பனவாகும். இங்குள்ள ஆலமரம் அட்சய வடம் என்று அழைக்கப்படுகிறது. 

வடநாட்டுக் கயாவில் அட்சயவடத்திற்கு இணையாக இது போற்றப்படுகிறது. கயாவில் அட்சய வடத்தின் கீழ் விஷ்ணு பாதம் இருப்பதைப் போல், இங்கு ருத்ர பாதம் உள்ளது. இதில் பிதுர்களுக்குத் தர்ப்பணம் செய்தால் அவர்கள் சிவலோகம் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாகும்.இத்தலத்தில், வெண்காட்டீசர் என்னும் சிவலிங்கமூர்த்தி, அகோரர் என்னும் உக்ர மூர்த்தி, ஆதி சிதம்பரேசர் என்னும் ஆனந்தத் தாண்டவ நடராசர் ஆகிய மூன்று மூர்த்திகள் உள்ளனர். அம்பிகை, அகோர காளி, துர்க்கை, பிரம்மவித்யா ஆகிய மூன்று கோலங்களில் காட்சி தருகிறாள். மூன்று தீர்த்தம், மூன்று மூர்த்தி, மூன்று தலமரம் என மும்மையால் பொலியும் திருத்தலமாக திருவெண்காடு திகழ்கிறது.மும்முகலிங்கம்சிவபெருமான், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை ஓயாது இயற்றும் காலகாலனாக இருக்கின்றார். அவர் அந்தச் செயல்களைச் செய்வதைக் குறிக்கும் வகையில், மும்முகலிங்கமாகக் காட்சியளிக்கின்றார். இத்தகைய மும்முகலிங்கத்தைத் திருவக்கரை என்னும் தலத்தில் காண்கிறோம். பொதுவாக, லிங்கங்களை முகலிங்கங்களாக அமைப்பவர்கள், லிங்கத்தின் பாணப்பகுதியில் ஒற்றை முகம் அல்லது நான்கு திசைகளை நோக்கிய நான்கு முகங்களைக் கொண்டவை களாகவே அமைத்துள்ளனர். ஆகமங்கள் கூறியிருந்த போதிலும், மூன்று முகங்களை அமைக்கும் வழக்கம் இல்லை. அதனால் திருவக் கரையிலுள்ள மூன்றுமுகலிங்கம், சமய உலகின் அரியப் படைப்பாகத் திகழ்கிறது. மூன்றுமுகங்களும் சிவபெருமானின் சத்யோஜாதம், அகோரம், வாமதேவர் ஆகிய முகங்களைக் குறிக்கின்றன.திருவக்கரை தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலம். திருப்புகழில் அருணகிரிநாதர் பாடிப் பரவிய தலம். திண்டிவனத்திலிருந்து – வானூர், மயிலம் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் சாலையில் பயணித்துப் பெரும்பாக்கம் என்னும் ஊரை அடைந்து, அங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பாதையில் 5 கி.மீ. பயணித்தால் திருவக்கரையை அடையலாம். சங்காரபரணி ஆற்றின் தென்கரையில் ஊரும், அந்த ஊருக்கு நடுவே கோயிலும் அமைந்துள்ளன.கருவறையில், மும்முகலிங்கமாகப் பெருமான் விளங்குகிறார். சந்திரன் வழிபட்டால் இந்நாளில், சந்திரசேகரேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். நடைமுறையில் சந்திர மௌலீசுவரர் என்னும் பெயர் வழங்குகிறது. அம்பிகையின் பெயர் வடிவாம்பிகை என்பதாகும்.சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரும் வழிபட்ட தலம். இந்த மூவர் பெயராலும் அமைந்த தீர்த்தங்கள் இங்கே உள்ளன. இந்த முச்சுடர் தேவர்களுக்கும் அருளும் மும்முக லிங்கமாய்ப் பெருமான்
எழுந்தருளியுள்ளார். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில்..

இந்தியாவில் உள்ள ஏழு புண்ணிய நகரங்களில் ஒன்றாக விளங்கும்
#காஞ்சிபுரம் என்ற திருக்கச்சியில் உள்ள 
108 வைணவத் திவ்ய தேசங்களில் தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான 
#திருக்கச்சி (#காஞ்சிபுரம்)
(ஹஸ்திகிரி, வேழமலை,அத்திகிரி)
#வரதராஜப்பெருமாள் 
(தேவராஜ பெருமாள்,
பேரருளாளன் தேவராஜன்)
திருக்கோயிலில் உள்ள 
#பெரியபிராட்டியார் 
#பெருந்தேவிதாயார்
திருக்கோயிலில் #வேதாந்த_தேசிகருக்கு #பொன்_மழை பொழிந்து அருளிய புராண நிகழ்வு:

யாசகம் பெற வந்தவரை நேரடியாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். தாயார் சன்னத்திக்கு சென்ற தேசிகர், மனம் உருகி ஸ்ரீஸ்துதியை பாடினார். அதாவது ஸ்ரீ ஆன மகாலட்சுமியை போற்றி பாடினார். இதை கேட்டு மனம் உருகிய மகாலட்சுமி தேவி, தங்கத்தை மழையாக பொழிந்தார். அதில் தர்மநெறிகளின் படி தனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை வேண்டாம் என மறுத்து விட்டார் யாசகம் பெற வந்தவர். தேசிகர், அப்போதும் பிரகலாதனைப் போல் எனக்கு எதுவும் வேண்டாம் என்ற நின்றார். இதை பார்த்த அந்த ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
தனது பரம பக்தர் ஒருவர் பாடிய பாடலை கேட்டு, அவருக்காக மகாலட்சுமி தங்க மழை பொழிய வைத்தார் என்றால், நம்ப முடிகிறதா ? அது மட்டுமல்ல திருமலை திருப்பதியில் நடக்கும் பூஜைகளில் தற்போதும் இந்த ஸ்லோகத்திற்கு முக்கிய பங்கு உண்டு என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. அந்த பக்தர் வேறு யாரும் இல்லை வேதாந்த தேசிகர் தான்.

ஆச்சார்யா நிலையில் தோன்றி, அஞ்ஞானம் அகற்றி ஞான விளக்கேற்றியவர் வேதாந்த தேசிகர். காஞ்சிபுரத்தில் தூப்பல் என்னும் இடத்தில் அவதரித்த ஞான தேசிகர், 20 வது வயதிலேயே வேதாந்த ரகசியங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தார். தேசிகர் நாவன்மை மிக்கவர். இது அவரை சிறந்த பேச்சாளராக்கிறது. அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆன்மிக சொற்பொழிகவுகளை நிகழ்த்தக் கூடியவர்.

`அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பது வள்ளுவர் வாக்கு. 

செல்வத்தின் பிறப்பிடமாக விளங்கித் தன்னைத் துதிக்கும் அனைவருக்கும் வாரி வழங்குபவள் அன்னை மகாலட்சுமி. 

தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்குச் செல்வச் செழிப்பை அருள்வதற்காகவே ஶ்ரீநிவாசப் பெருமாள் தன் மார்பில் அன்னை மகாலட்சுமியைத் தாங்கி தரிசனம் கொடுக்கிறார். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருமகளின் அருள் வேண்டாதவர்கள் இல்லை. அன்னையின் அருளை எளியவர்களுக்கும் சொந்தமாக்கவே ஆசார்யர்கள் தோன்றி பல தோத்திரங்களை அருளிச் செய்திருக்கின்றனர்.

தன் வீட்டு வாசலில் துவாதசி நாளில் பிட்சை கேட்டு வந்து நின்ற ஆதிசங்கரருக்கு, தன் வசம் இருந்த ஒரே நெல்லிக்கனியையும் தானமாகக் கொடுத்தாள் ஓர் ஏழைப் பெண். தனக்கில்லாத நிலையிலும் பிறருக்கு உதவும் அவளின் நிலை கண்டு வருந்திய ஆசார்யர், அந்த கணத்திலேயே அன்னை மகாலட்சுமியைத் துதித்து போற்ற ஆரம்பித்தார். அன்னை மனம் இரங்கி பொன்மழை பொழிந்தாள். பொன்னே மழையாகப் பொழிந்ததால், `கனக தாரா ஸ்தோத்திரம் ' என்று அந்த துதி பெயர் பெற்றது.

அதேபோல அன்னை மனமிரங்கிய மற்றுமொரு நிகழ்வு, காஞ்சிமாநகரிலும் நிகழ்ந்தது. நமது நாட்டிலுள்ள முக்கிய புண்ணியத்தலங்களான அயோத்தி, மதுரா, மாயா, காசி, அவந்தி, காஞ்சி, துவாரகா ஆகிய 7 நகர்களில் காஞ்சியே முக்கியமான சிறப்பினை உடையது. இதையே `முக்திதரும் நகர் ஏழில் முக்கியமாம் காஞ்சிதனில்' என்று காஞ்சிமாநகரின் பெருமையைப் புகழ்வார் தேசிகர். திரும்பும் திசையெங்கும் திருக்கோயில்களே காட்சியளிக்கும் காஞ்சிமாநகரில் முக்கியமான ஒரு தலம் வரதராஜனாக எழுந்தருளி தரிசனம் கொடுக்கும் `பேரருளாளன்' திருக்கோயிலும் ஒன்று. இந்தத் தலத்தில் அன்னை புரிந்த அற்புதங்கள் அநேகம். அவற்றுள் வேதாந்த தேசிகரின் வேண்டுதலை ஏற்றுப் பொன்மழை பொழிந்த நிகழ்வும் ஒன்று.

வேதாந்த தேசிகர், 1268 - ம் ஆண்டு தூப்புல் என்னும் கிராமத்தில் அவதரித்தவர். பெருமாளின் மீது பெரும் பக்தி கொண்டவர். தன் வாழ்வில் செல்வத்தின் பின்னே செல்வதில்லை என்னும் பெரும் வைராக்கியம் கொண்டவர். வேதாந்த தேசிகரை அறிந்தவர்கள் அவரின் வறுமைபோக்க விரும்பி, அவருக்கு பிட்சை இடும்போது, அரிசியோடு சேர்த்து சில பொற்காசுகளையும் இடுவர். பிட்சை முடிந்து வீடு திரும்பிய தேசிகர் அரிசியில் பொற்காசுகள் இருப்பதைக் கண்டதும், முகம் சுளித்து அதைத் தொடக்கூட விரும்பாமல் குச்சி ஒன்றை எடுத்து அக்காசுகளைத் தள்ளிவிடுவாராம். அந்த அளவுக்குச் செல்வத்தின்மீது ஆசையில்லாமல் இருந்தவர் தேசிகர். அவருக்கு அருள் செய்ய வேண்டும் என்று தாயுள்ளத்துடன் காத்திருந்தார் பெருந்தேவித் தாயார். அதற்கான தருணமும் கனிந்தது.

ஓர் அந்தண இளைஞன், தன் திருமணத்துக்குச் செல்வம் இல்லாமல் தவித்துவந்தான். காஞ்சிமாநகர் வீதிகளில் அவன் தனக்குத் தானமிடும் அளவுக்குச் செல்வந்தர் யார் என்று விசாரித்துக்கொண்டிருந்தான். செல்வத்தின்மீது பற்று இல்லாமலும் அதே நேரம் வைராக்கிய பக்தியோடும் வாழும் தேசிகரைக் கண்டு உள்ளூரில் இருந்த சிலர் பொறாமை கொண்டனர். அவர்கள், அந்த இளைஞனை அழைத்து, `உனக்கு தானம் செய்யும் தகுதி தேசிகருக்கே உள்ளது. அவரைச் சென்று பிடித்துக்கொள்' என்று சொல்லியனுப்பினர். தேசிகர் கேட்பவருக்கு `இல்லை' என்று சொன்னால் அவரை அவமானப்படுத்தியதாக இருக்கும் என்பதுதான் அவர்களது திட்டமாக இருந்தது.

அந்த இளைஞன் தேசிகரை நாடித் தன் தேவையைச் சொன்னான். உடனே அன்னையை மனதில் தியானித்த தேசிகர், `நாளை காலை பெருந்தேவித் தாயார் சந்நிதிக்கு வா' என்று சொல்லி அனுப்பிவைத்தார். மறுநாள் அந்த இளைஞனும் அங்கு வந்தான். தேசிகர், அன்னை பெருந்தேவி மீது பாடியிருந்த `ஶ்ரீஸ்துதி'யை அவனிடம் தந்து இதைப் பாடியபடியே தாயாரின் சந்நிதியை வலம் வரச் சொன்னார்.

  ஆசார்யரின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்த இளைஞன், `மானாதீத ப்ரதித...' என்று தொடங்கும் ஶ்ரீஸ்துதியினைப் பாடத் தொடங்கினான். 25 பாடல்களைக் கொண்ட அந்த ஸ்துதியினைப் பாடிக்கொண்டே அந்த இளைஞன் வலம் வந்தான். ஶ்ரீஸ்துதியின் 16 வது பாடலான,

`யோகாரம்பம் ...' என்று தொடங்கும் பாடலைப் பாடத் தொடங்கியதும் அன்னை பொன் மழை பொழிய  தொடங்கினாள். இதைக் கண்டு சிலிர்த்த தேசிகர் அந்த இளைஞனிடம், ` அன்னையின் அருள்கருணையே மழையாகப் பொழிகிறது. வேண்டுமட்டும் சிந்தாமல் சிதறாமல் பிடித்துக்கொள்' என்று சொன்னார். அந்த இளைஞனும் தன் மேல் துண்டினை விரித்து வீழ்ந்த பொற்காசுகளைப் பிடித்துக்கொண்டான். அதன் பின் தேசிகரையும் அன்னையையும் வழிபட்டு தன் வீடு திரும்பினான்.

இந்த ஸ்ரீஸ்துதி இப்போதும் திருமலையில் ஒலிக்கிறது. வேதாந்த தேசிகருக்கு பூஜையும் நடக்கிறது. இந்த ஸ்ரீஸ்துதியானது 25 ஸ்தோத்திரங்களைக் கொண்டது. இவற்றில் முதல் 24 ஸ்தோத்திரங்கள் மந்தாகிராந்தா விருத்தம் என்ற முறையிலும், 25 வது ஸ்தோத்திரம் மாலினி விருத்தம் என்ற முறையிலும் பாடப்பட்டுள்ளது. ஸ்தோத்திரம் என்பது இருப்பதை அப்படியே சொல்வது. இந்த ஸ்ரீ ஸ்துதியில் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் பற்றியும் வேதாந்த தேசிகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஸ்ரீஸ்துதியின் மகிமையாலேயே திருமலை திருப்பதி உண்டியலில் காணிக்கை கோடிக்கணக்கில் குவிந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் மகாலட்சுமி மற்றும் பெருமாளின் மனதை உருகச் செய்யவும், வற்றாத செல்வ வளம் பெருகவும் ஸ்ரீ ஸ்துதியை பாராயணம் செய்வது உத்தமம்.

இன்றும் அன்னை பெருந்தேவியின் சந்நிதியில், `ஶ்ரீஸ்துதி' பாடி வேண்டிக்கொள்ள வறுமை விலகுகிறது என்று பக்தர்கள் சொல்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலும் விளக்கேற்றி ஶ்ரீஸ்துதி பாடிவர செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை. திருமணம் தொடர்பான அத்தனை சிக்கல்களும் இங்கு வேண்டிக்கொள்ள தீர்ந்து விரைவில் திருமணப் பேறு கிடைக்கும். பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் எல்லாம்  இங்கு பெருந்தேவித் தாயாரை வேண்டிக்கொள்ளத் தீரும் என்று நம்பப்படுகிறது. இன்னும் 10 நாள்களில் அத்திவரதர் எழுந்தருளி அருள்பாலிக்க இருக்கிறார். அந்தத் தருணத்தில் அத்திவரதரை தரிசித்து பெருந்தேவித் தாயாரையும் வணங்கி சகல நன்மைகளையும் பெறலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, March 3, 2025

கண் நோய்கள் தீர 🌺🌺🌺 🙏🙏பார்வை குறைபாடு நீங்க வணங்க வேண்டிய சிவபெருமான்

 திருக்காரவாசல்
கண்ணாயிரநாதர் திருவடிகளை வணங்கி மகிழ்வோம் 

சிவஸ்தலம் பெயர் : திருக்காறாயில் (தற்போது திருக்காரவாசல் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்: கண்ணாயிரநாதர் இறைவி பெயர் கைலாயநாயகி
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1.

தல வரலாறு:

கார் அகில் மரக்காடு நிறைந்து இத்தலம் இருந்ததால் காறாயில் என்று பெயர் பெற்றது. பிரம்மாவிற்கு ஒருமுறை தான் எல்லோரையும் விட பெரியவன் என்ற கர்வம் வந்தது. அதனால் சிவபெருமானைக்கூட வழிபடாமல் அவரை அலட்சியம் செய்தார். சிவபெருமான் அவரது அகத்தையை அகற்றிட திருவுளம் கொண்டு அவரது படைக்கும் தொழில் பதவியை அவரிடமிருந்து பறித்து விட்டார். பதவி பறிபோன பிரம்மா கர்வம் அடங்கி பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால் காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காராயில் (திருக்காரவாசல்) வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி நமக்கு அருட்காடசி தருகிறார். கண்ணாயிரநாதருக்குச் சமமாக, பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தியாகராஜர் சந்நிதி முன்னுள்ள நந்தி நான்கு கால்களுடன் நின்று கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம். கிழக்கு நோக்கிய இக்கோவிலுக்கு ராஜகோபுரமில்லை. முதல வாயிலைக் கடந்து உள் சென்றவுடன் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் உள்ள நந்தி ஆகியவற்றைக் காணலாம். இரண்டாவது நுழைவாயிலில் மூன்று நிலைகளையுடைய கோபுரம் உள்ளது. கோபுர வாயிலைத் தாண்டி உட்சென்று வலமாக வரும்போது, சுந்தரர், (உற்சவர்) சந்நிதி, தியாகராஜசபை, விநாயகர், பல சிவலிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு, ஆறுமுகசுவாமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சந்நிதிகள் உள்ளன.
இத்தலத்தில் இறைவியாரது திருப்பெயர். கைலாசநாயகி. நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்கமாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசித்து மகிழத்தக்க அமைப்புடைய சந்நிதிகள். மூலவருக்கு முன்னால் பக்கத்தில் நடராஜசபை உள்ளது. உற்சவத் திருமேனிகளுள் காட்சி தந்த நாயனார் திருமேனி தரிசிக்கத்தக்கது. இவர் பின்னால் நந்தியுடனும், அருகில் உமையும் கூடியவாறு காட்சி தருகிறார். மகாவிஷ்ணு, பிட்சாடனர், அகஸ்தீஸ்வரர், கைலாசமேஸ்வரர், இந்திரபுரீஸ்வரர், விஸ்வநாதர், எல்லையம்மன், சுப்ரமண்யர், கஜலட்சுமி, நாகர், சரஸ்வதி, துர்க்கை, பைரவர், நால்வர் ஆகியோரும் இந்த ஆலயத்தில் தரிசனம் தருகிறார்கள். இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இங்குள்ள மூன்று பைரவர்கள் சந்நிதியாகும். காலை,மதியம், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள் அருகருகே இங்கே தரிசனம் செய்வதைக் காணலாம். இவர்கள் முறையே காலை பைரவர், உச்சிகால பைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் என்று அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

சப்த விடங்கத் தலம்:
முசுகுந்த சக்கரவர்த்தி தேவேந்திரனிடம் இருந்து பெற்றுக் கொண்டு வந்த தியாகேசர் திருமேனிகள் ஏழில் ஒன்றை எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் திருக்காறாயில் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் ஆதிவிடங்கர் எனப்படுகிறார். இந்த திருக்காரவாசலில் தியாகராஜர் வீர சிங்காதனத்தில் குக்குட நடனக் காட்சியுடன் அருள்புரிகிறார். திருவாரூரில் வீதிவிடங்க தியாகேசரின் அஜபா நடனத்தைக் கண்டுகளித்த பதஞ்சலி முனிவர், எல்லா வகை நடனங்களையும் தனக்குக் காட்டியருள வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினார். திருக்காராயில் வந்தால் காணலாம் என்று தியாகராஜர் கூறி, அதன்படி பதஞ்சலி முனிவருக்கு 7 வகை தாண்டவங்களை ஆடிக் காட்டிய தலம்தான் இந்த திருக்காரவாசல். தியாகேசருக்கு நேர் எதிரில் சுந்தரர் சந்நிதி அமைந்துள்ளது. இத்தலத்தில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் உள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறு. ஆதிசேஷன் இந்த கிணற்றின் வழியாக கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டதால், சேஷ தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. இது இந்திர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. சேஷ தீர்த்தம் என்னும் கிணற்று நீர், மருத்துவ குணம் மிக்கது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு அந்த நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, வேண்டுவோர்க்கு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்த சேஷ தீர்த்தத்து நீரைப் பருகி வந்தால் தீராத நோய்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில் இந்திரன் சேஷ தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையாரை பூஜிப்பதாக ஐதீகம். இன்னொரு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்னும் திருக்குளம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது. இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்று பெயர் பெற ஒரு தலபுராண வரலாறு உண்டு. வணிகன் ஒருவன் இத்தலத்து வழியே வர்த்தக நிமித்தமாக வரும் போது இங்குள்ள சேஷ தீர்த்தக்கரையில் இளைப்பாறினான். அவனுடன் வந்த வண்டியில் ஜாதிக்காய் மூட்டைகள் இருந்தன. அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்து விநாயகர் ஒரு சிறுவனாக வணிகன் முன்வந்து மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டார். வணிகன் வேண்டுமென்றே கடுக்காய் இருக்கிறது என்று பதில் கூறினான். விநாயகர் புன்னகை புரிந்தார். வணிகன் தான் சேர வேண்டிய இடம் வந்ததும் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க அவைகளில் கடுக்காய் இருக்கக் கண்டு திடுக்கிட்டான். ஏதோ தெய்வ குற்றம் செய்து விட்டோம் என்று உணர்ந்த அவன் இறைவனிடம் முறையிட்டு பிழை பொறுத்தருள வேண்டினான். விநாயகப் பெருமான் அவன் முன் காட்சி கொடுத்து கடுக்காயை ஜாதிக்காய்களாக மாற்றி அருள் புரிந்தார். அது முதல் இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்ற பெயருடன் இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இவர் சந்நிதி பிரம்ம தீர்த்தக்கரையில் உள்ளது.

சிறப்புக்கள் :

சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார்.

சப்த விடங்கத் தலம். திருக்காறாயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலமாகும்.

போன்:  +91- 4366-247 824, +91- 94424 03391.

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருவாரூர் . திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து தெற்கே சுமார் 13 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. பிரதான சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் திருநெல்லிக்கா, திருகைச்சினம், திருக்கொள்ளிக்காடு ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் உள்ளன.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சப்த விடங்கத் தலம். திருக்காறாயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலமாகும்.

தியாகராஜர் சந்நிதி முன்னுள்ள நந்தி நான்கு கால்களுடன் நின்று கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம்.

ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசித்து மகிழத்தக்க அமைப்புடைய சந்நிதிகள். மூலவருக்கு முன்னால் பக்கத்தில் நடராஜசபை உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...