Thursday, November 17, 2022

மாடம்பாக்கம்#தேனுபுரீஸ்வரர்#தேனுகாம்பாள் திருக்கோயில் வரலாறு:

சுந்தர சோழனால் கட்டப்பட்ட அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட, கபில மகரிஷி முக்தி பெற்ற புகழ்பெற்ற புராதன தலமான சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள
#மாடம்பாக்கம்
#தேனுபுரீஸ்வரர்
#தேனுகாம்பாள் திருக்கோயில் வரலாறு:

தேனுபுரீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மாதம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் தேனுபுரீஸ்வரர், தாயார் தேனுகாம்பாள். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக கபில தீர்த்தமும் உள்ளன.

மூலவர்: தேனுபுரீஸ்வரர்
அம்மன்: தேனுகாம்பாள்
உற்சவர்: சோமஸ்கந்தர்
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்: கபில தீர்த்தம்
புராண 
பெயர்: மாடையம்பதி
ஊர்: மாடம்பாக்கம்
மாவட்டம்: செங்கல்பட்டு
மாநிலம்: தமிழ்நாடு

அருணகிரிநாதர் திருப்புகழில்:

இத்தலம் மற்றும் இங்குள்ள சிவசுப்பிரமணியர் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழில் (பாடல்கள்: 701, 702) பாடியுள்ளார். அப்பாடல்கள் கோயில் முன்மண்டப உட்சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.

திருப்புகழ்-பாடல் 701 :

தோடு றுங்குழை யாலே கோல்வளை
     சூடு செங்கைக ளாலே யாழ்தரு
          கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே
தூம மென்குழ லாலே யூறிய
     தேனி லங்கித ழாலே யாலவி
          லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே
பாட கம்புனை தாளா லேமிக
     வீசு தண்பனி நீரா லேவளர்
          பார கொங்கைக ளாலே கோலிய ...... விலைமாதர்
பாவ கங்களி னாலே யான்மயல்
     மூழ்கி நின்றய ராதே நூபுர
          பாத பங்கய மீதே யாள்வது ...... கருதாயோ
நாட ருஞ்சுடர் தானா வோதுசி
     வாக மங்களி னானா பேதவ
          நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி
நால்வி தந்தரு வேதா வேதமு
     நாடி நின்றதொர் மாயா தீதம
          னோல யந்தரு நாதா ஆறிரு ...... புயவேளே
வாட யங்கியவேலா லேபொரு
     சூர்த டிந்தருள் வீரா மாமயி
          லேறு கந்தவி நோதா கூறென ...... அரனார்முன்
வாச கம்பிற வாதோர் ஞானசு
     கோத யம்புகல் வாசா தேசிக
          மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

தல வரலாறு:

கபில மகரிஷி, சகரன் என்பவனின் மகனை சபித்து விட்டார். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது. வசிஷ்டரின் ஆலோசனைப்படி, சகரனின் குலத்தில் வந்த பகீரதன், கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து, சிவபூஜை செய்து சாபவிமோசனம் தேடிக்கொண்டான். தனது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருந்திய கபிலர், பிராயச்சித்தம் கிடைக்க சிவபூஜை செய்தார்.

கபில முனிவர் சிவபூசை செய்வதற்கு லிங்கத்தை இடது கையில் வைத்து வலது கையால் மலர்தூவி வழிபட்டதாகவும், கையில் லிங்கத்தை வைத்து வழிபட்ட முறை சரியல்ல எனக் கூறி சிவன் அவரை பசுவாகப் பிறக்கச் சாபம் அளித்ததாகவும், பசுவாகப் பிறந்த கபிலர் இத்தலத்தில் சிவனை வழிபட்டு முக்திபெற்றதாகவும் மரபு வரலாறு உள்ளது. பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, "தேனுபுரீஸ்வரர்' எனப்பட்டார். (தேனு-பசு). இவருக்கு "உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்' என்றும் பெயர் உண்டு.

சுந்தர சோழரின் அமைச்சரான அன்பில் அநிருத்தர் இக்கோயிலைக் கட்டியதாகவும் பின்னர் முதலாம் குலோத்துங்கனால் இது கற்றளியாக்கப்பட்டதாகவும், முன்மண்டபமும் அதிலுள்ள தூண்களும் பல்லவர்கள் காலத்தியது என்றும் விசய நகரப் பேரரசாலும் இக்கோயில் பராமரிக்கப்பட்டது என்றும் இக்கோயிலில் தற்காலத்திய கற்பலகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கற்பலகை கோயிலின் முன்புறம் திறந்து வைக்கப்பட்டுள்ள புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் இறைவனும் இறைவியும் `சிற்றேரி ஆளுடைய நாயனார்' என்றும் `நம்பிராட்டியார்' என்றும் கூறப்பட்டிருக்கிறார்கள்.

இந்த 18 தூண்களில் ஒரு தூணில், சரபேஸ்வரர் சிலை உள்ளது. தேனுபுரீஸ்வரர், தேனுகாம்பாளுக்கு அடுத்தபடியாக,இந்தக் கோயிலுக்கு சரபேஸ்வரரை தரிசிப்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நரசிம்மரின் கோபம் தணிப்பதற்காக, சரபேஸ்வரர் திருவுருவத்தை உண்டுபண்ணினார் சிவபெருமான் என்கிறது புராணம்.

கோயில் அமைப்பு:

கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த கோயில் இது.
மூலவர் தேனுபுரீஸ்வரர் கருவறையில் சதுர பீடத்தில், சுமார் ஒரு சாண் உயரத்தில் 3 விரற்கடை அகல லிங்க வடிவில் உள்ளார். பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் தெரிகிறது. அம்மன் தேனுகாம்பாளுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. சிவகாமி அம்மையுடனும் மாணிக்க வாசகருடனும் நடராசர் காணப்படுகிறார். கஜபிருஷ்ட விமானத்துடனமைந்த கருவறை (யானையின் பின்புறம்-மாடம் போன்ற அமைப்பு) இக்கோயிலின் சிறப்பும் பெயர்க்காரணமும் ஆகும்.

கோயில் முன்மண்டபத்திலுள்ள 18 தூண்களும் அவற்றில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் குறிப்பிடத் தக்கவை. ஒரு தூணில் வடிக்கப்பட்டுள்ள சரபேசுவரருக்கு ஒவ்வொரு ஞாயிறன்றும் (மாலை 3.30-6.30) சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சுவாமி சன்னிதியிலுள்ள தட்சிணாமூர்த்தி ஆலமரத்தடியில் இல்லை. துர்க்கை கையில் கிளி காணப்படுகிறது.

புராண வரலாறு:

புராண காலத்தில் இந்தப் பகுதியில் வசித்து வந்த ஒருவனுடைய பசு, தினமும் மேய்ச்சலுக்குச் சென்று வரும். ஆனாலும், மடி வற்றியே திரும்பி வரும். அந்தப் பசு தரும் பாலைக் கொண்டுதான் அவனுடைய ஜீவனம் நடைபெறவேண்டும். ஒருநாள், இரண்டு நாள் பொறுத்துப் பார்த்த பசுவின் உரிமையாளன், அடுத்த நாளும் மடி வற்றிய நிலையில் பசு திரும்பி வந்ததால், கோபம் கொண்டு பசுவை அடித்தான். அடி தாங்கமுடியாத பசு மிரண்டு ஓடியது. அவனும் விடாமல் துரத்திச் சென்றான். ஓடிக்கொண்டிருந்த அதன் குளம்பு ஓரிடத்தில் பட்டு ரத்தம் பீறிட்டது. அந்தக் கணத்தில் அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. பசு, கபில முனிவராக மாற, ரத்தம் பீறிட்ட இடத்தில் பசுவின் மடியிலிருந்து வழிந்த பால் காய்ந்திருக்கும் தடம் தெரிந்தது. 

பசு தினமும் இங்குதான் பாலைச் சொரிந்து இறைவனை வழிபட்டது என்பதைப் புரிந்துகொண்ட உரிமையாளன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தான். அப்பொழுது, பசுவின் குளம்படிபட்ட தழும்போடு சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. லிங்கத்தை வணங்கிய கபில முனிவரும், பசுவின் உரிமையாளனும் மோட்சம் பெற்றார்கள். முன் பிறப்பில் செய்த சிவ நிந்தையின் பலனால் சாபம் பெற்று பசுவாகப் பிறந்த கபில முனிவருக்குச் சாப விமோசனம் அளித்ததால், சிவபெருமான் `தேனுபுரீஸ்வரர்' என்ற திருப்பெயருடன் அந்தத் தலத்தில் கோயில்கொண்டார்.

கோரிக்கைகள்:

இங்கு வேண்டிக்கொள்ளும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. முருகன், வடுக பைரவர், சரபேஸ்வரர் ஆகியோர் பிரார்த்தனை மூர்த்திகளாக இருக்கின்றனர். கிரக, நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள சரபேஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஜாதகரீதியாக வக்கிர தோஷம் உள்ளவர்கள் மூலஸ்தானத்தில் உள்ள சிறிய லிங்கத்திற்கு மல்லிகைப்பூ மாலை அணிவித்து, வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவித்தும், வெள்ளைப்பூசணியில் நெய் விளக்கேற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். சுவாமிக்குப் புத்தாடை அணிவித்து, விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

திருவிழா:

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், பங்குனி உத்திரத்தில் தெப்பத்திருவிழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவராத்திரி.

அமைவிடம்:

தாம்பரத்திலிருந்து (கிழக்கு) சுமார் 10 கிமீ தொலைவில் மாடம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ளது. தாம்பரம்–வேளச்சேரி முக்கிய சாலையில் வடக்கு நோக்கிச் சென்று ராஜகீழ்ப்பாக்கம் அருகே மாடம்பாக்கம் முக்கிய சாலையில் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம். அஞ்சல் முகவரி: அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் மாடம்பாக்கம் - 600073, சென்னை.

ஓம் நமசிவாய 🙏
திருச்சிற்றம்பலம்🙇

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...