Wednesday, October 25, 2023

ஐப்பசி சதயவிழா:சோழ சக்கரவர்த்தி மாமன்னர் ராஜராஜ சோழர் பிறந்த நாள் இன்று

#மும்முடிச்சோழன் என்று அழைக்கப்படும் #திருமுறை_கண்ட சோழன்,
#சிவபாத_சேகரன் என்று புகழப்படும், உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டிய,
எமது பெரும்பாட்டன் #மாமன்னர் #இராசகேசரி_வர்மன் 
#முதலாம்_இராஜராஜசோழன் என்ற #அருண்மொழிவர்மன்
(அருள்மொழி வர்மன்)1038 வது
ஐப்பசி சதய விழா இன்று :🙏🙇

அருண்மொழிவர்மன் அல்லது அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 985 முதல் பொ.ஊ. 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

#மற்ற_பெயர்கள்:

இராசகேசரி வர்மன்
மும்முடிச்சோழன், சிவபாதரசேகரன், சோழ நாராயணன், கேரளாந்தகன், சிங்களாந்தகன், பாண்டிய குலசனி, அழகிய சோழன், தெலுங்கு குல காலன், தைல குல காலன், செயங்கொண்டான், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி

#துணைவியார்கள்:

*திருபுவன மாதேவியார்
*லோகமாதேவி
*சோழமாதேவி
*திரிலோகியமாதேவி, *பஞ்சவன்மாதேவி
*அபிமானவல்லி
*லதாமாதேவி
*பிருத்திவிமாதேவி

#குழந்தைகளின்
பெயர்கள் :

*இராசேந்திர சோழன்
*அரையன் 
*ராஜராஜன்
*கங்காமாதேவி என்கிற அருள்மொழி சந்திரமல்லி
*மாதேவடிகள் 

இவர் பொ.ஊ. 957 முதல் பொ.ஊ. 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராசகேசரி அருண்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் செத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சத்திரிய சிகாமணி) என்று புனைபெயர் கொண்டு வாழ்ந்தார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

புகழ் பெற்ற இளவரசன்:

முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராசராச சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன.

இரண்டாம் ஆதித்தன் கொலை:

இராசகேசரி இரண்டாம் ஆண்டு கல்வெட்டு மூலம், இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் இப்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் தற்போது மேலக்கடம்பூர் என்று அழைக்கப்படும் ஊரில் கொலை செய்யப்பட்டான் என்பது தெரியவருகிறது. இக்கல்வெட்டு 'பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, விற்கும் பணியினை மன்னனின் கட்டளைப்படி சதுர் வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக தெரிவிக்கிறது. இந்த இராசகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராசராச சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5 ஆம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராசராச சோழனுடையது என்பது தெளிவாகிறது. உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தர சோழன் தன் இறுதி நாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். மகனை இழந்த சுந்தர சோழன், தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

உத்தம சோழனுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லையென்று சொல்வதற்கில்லை, உத்தமச் சோழனுக்கு அரியணை ஏறவேண்டும் என்ற ஆசையிருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை. அரச குடும்பத்தின் மூத்த கிளையினன் என்ற காரணத்தால் அரியணை தனக்கே என்று அவன் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு சம்மதித்தான் என்றும் திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்குடிக் கல்வெட்டிலும் உள்ள குறிப்புகளை இணைத்துப் பார்க்கும் பொழுது புலனாகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்:

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் செத்திரிய தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசப்பதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரசப் பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி வர்மன் அரசப்பதவியை மறுத்துவிட்டான்.

இதை, அருண்மொழி வர்மனின் அடக்கத்தால், உத்தம சோழனின் பேராசை வெற்றிகண்டது. அருண்மொழியை, கோழை, அரசியல் திறமை இல்லாதவன், சட்டப்படி உரிமை இல்லாதவன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, அவன் உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக் கொடுத்து, அவன் காலத்திற்குப் பிறகு, தான் பட்டத்திற்கு வருவதற்காக பொறுமையுடன் இசைந்தான் என்று கொள்ளலாம். மேலும், அருண்மொழியின் உடலில் காணப்பட்ட சில அடையாளங்களைப் பார்த்த பொழுது, மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூஉலகுக்கு வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை ஆளும் பொறுப்பைத் தானே மேற்கொண்டான் என்றும் தெரிவிக்கின்றன.

#சோழர்களின் மெய்க்கீர்த்திகள்:

பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவ்வறச் செயல்களை, தரும சாத்திரங்களைத் தழுவி செப்பேடுகளில் பொறித்து உரியவர்க்கு அளித்து வந்தனர். இச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்தனர். தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவன் இராசராச சோழனே. இவருக்குப் பிறகு இவர் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். இவர் மகன் முதலாம் இராசேந்திரனின் ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவிளான மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன.

#இராசராசனின் மெய்க்கீர்த்திகள்:

சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். முதலாம் இராசராசன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவரது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.

கீழ்வருவது இராசராச சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.

"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."

இரண்டாம் வகையான மெய்க்கீர்த்தியிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவரது 20ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராசராசன் மதுரையை அழித்தார் என்றும். கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டார் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவருடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றும் கூறுகிறது.

மேலும் இவன் காலத்திலேயே வட்டெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றியமைக்கப்பட்டன.

#போர்கள்:

#கேரளப் போர்:

இராசராசன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராசராசனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும், பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.

இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமர புயங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, 'சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய, கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராசராசன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாசுகர ரவிவர்மன் திருவடி (பொ.ஊ. 978–1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

#மலைநாடு:

பொ.ஊ. 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.

இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராசராசனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும் மேலும் இது இராசராச சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார்.

உதகை கோட்டை எனப்படுவது இப்போது தென்குமரி நாட்டில் உள்ள உதயகிரி கோட்டை. இங்கே சோழர் தளபதியாக இருந்த இராசேந்திரசோழன் இரணியசிங்கநல்லூர் தலைமையாக்கி வேணாட்டை ஆண்ட பாசுகர ரவிவர்மனால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தான். இதனால் கோபம்கொண்ட இராசராசசோழன் பெரும்படையுடன் வந்து வேணாட்டை வென்றான். உதயகிரியை அழித்தான். சேரநாட்டு அதர்வ வேதபாடசாலைகளை அழித்தான். இதையே காந்தளூர்சாலை கலமறுத்தல் என்று தன் மெய்கீர்த்திகளிலில் குறிப்பிடுகிறான். இத்தகவல்களை கே கே பிள்ளை அவர்கள் அவரது தென்னிந்திய வரலாறு நூலில் சொல்கிறார். கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை காந்தளூர்ச்சாலை பற்றி எழுதிய விரிவான ஆய்வுக்கட்டுரையும் இதைப்பற்றி பேசுகிறது.

#ஈழம்

இராசராசனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் பொ.ஊ. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராசராச சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், பொ.ஊ. 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராசேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராசராசனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு (பொ.ஊ. 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரர்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராசராசன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

#ஈழப் படையெடுப்பின் விளைவுகள்:

சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளங்கிய பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராசராச சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் அரசர்களில் தாட்டியன் என்னும் பாண்டிய வேந்தன் தவிர மற்றவர்கள் அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராசராச சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான். ஆனால் இவனின் மகனான இராசேந்திரச் சோழன் காலத்திலேயே ஈழத்தின் தென்பகுதி தாட்டியனுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தமிழர்களுக்குக் கீழ் வந்தது. பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விசயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.

#ஈழத்தில் சோழக் கோயில்கள்:

இராசராசனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராசராசன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது பொ.ஊ. 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே (தஞ்சைப் பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.

பிற வெற்றிகள்:

கங்கர்களின் கங்கபாடியும், நுளம்பர்களின் நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராசராச சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராசராசனின் காந்தளூர்ச் சாலை வெற்றியைத் தொடர்ந்து, கீழைச் சாளுக்கியரை எதிர்த்து வேங்கி நாட்டிற்குள் படையெடுப்பதற்கு முன்னர் மைசூர் நாடு கைப்பற்றப்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்தியில் இருந்து அறிய முடிகிறது. பின்னர் கொங்கு நாட்டிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து தடிகைபாடியையும் தலைக்காட்டையும் முதலில் தாக்கிய பொழுது சோழருக்கு பெரும் வெற்றி கிட்டியது. மேலும் அடுத்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கங்க நாட்டின் மீதான ஆதிக்கமும் சோழருக்குக் கிடைத்தது.

மேலைச் சாளுக்கியர்:

மேலைச் சாளுக்கியர் இராசராசன் தலைமையில் ஏற்பட்ட சோழப்படையெடுப்பை உதாசீனம் செய்யவில்லை. பொ.ஊ. 922ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் இரண்டாம் தைலப்பன் சோழ மன்னனுக்கு எதிராக ஒரு வெற்றி பெற்றதாகவும் அவனிடமிருந்து 150 யானைகளைக் கைப்பற்றியதாகவும் கூறுகிறான். (சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி பொ.ஊ. 922ல் இந்தப் போர் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது ஆனால் இதை உண்மையென்று நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை. இராசராச சோழனின் கல்வெட்டுக்களின் படி சாளுக்கியர் மீதான படையெடுப்புக்கள் எதுவும் பொ.ஊ. 994 ஆண்டிற்கு முன் எதுவும் நடக்கவில்லை என்று தெரியவருகிறது.)

சத்தியாசிரயனுடன் போர் :

922ம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளில் இரண்டாம் தைலப்பன் இறந்தான். அதன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராசராசன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய பொ.ஊ. 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராசராச சோழனின் கல்வெட்டுகள் இச்சோழமன்னன் 'இரட்டப்பாடி' ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன. ஆனால் இக்கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். சத்தியாசிரயன் இராசராசனது கடல் போன்ற பெரும்படையைக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்வது நம்பக்கூடியதாயுள்ளது.

இராசேந்திரன் தலைமை:

தார்வார் மாவட்டம் ஒட்டூரில் பொ.ஊ. 1007ம் ஆண்டைச் சேர்ந்த(929) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராசராச நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராசேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது நூறாயிரம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீச்சப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் பொருள் வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது. பகைவனின் கல்வெட்டுகளில் காணப்படும் நாச வேலைகளையும் கற்பழிப்புக்களையும் சோழ இளவரசன் செய்திருக்கக்கூடுமா என்ற வினா எழுந்தாலும் இராசேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது.

சாளுக்கியப் போரின் விளைவுகள்:

சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. இராசராசனின் கல்வெட்டோ அல்லது இக்காலச் சாளுக்கிய மன்னரது கல்வெட்டுக்களோ பெல்லாரியில் இதுவரை அகப்படவில்லை. ஆனால் பொதுவாக, சோழ நாட்டின் தூரப் பகுதிகளில் அவர்களுடைய கல்வெட்டுகள் பெரிதும் காணப்படுவதில்லை. கங்கை, வேங்கி மண்டலங்களுக்கென்றே ஒரு மாதண்ட நாயகனை இராசராசன் தன் ஆட்சியின் இறுதியில் அமர்த்தியிருந்தான் என்பதே இவ்விரு மண்டலங்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்ததோடு சோழநாட்டுடன் சேர்ந்திருந்தன என்பதற்கும் போதுமான சான்றாகும்.

வடக்கில் சோழர் ஆட்சி பரவுதல்:

முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே நெல்லூர் வரையில் பரவியிருந்தது. இராட்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. இவர்கள் காலத்தில் சென்னைக்கு அருகேயுள்ள திருவொற்றியூர் உட்பட்டிருந்த வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராசராசன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.

மாலத் தீவுகளைக் கைப்பற்றல்:

இராசராசனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் இராசேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராசராசன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்:

இராசராச சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராசராசேச்சரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தென்னிந்திய கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராசராசனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது. இராசராசன் காலத்தில் இராசராசேச்சரம் என்று அழைக்கப்பட்ட இக்கோவிலின் பெயரானது பெருவுடையார் கோவில் என்ற தமிழ்ப் பெயரின் வடமொழி வடிவமாகும்.

இராசராச சோழன் தன் ஆட்சி முடிவில் தன் மகன் இராசேந்திரனை அரசாங்க அலுவல்களில் தன்னுடன் கலந்து கொள்ளச் செய்தான். இராசராசனின் நான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் இராசேந்திரனை இளம் அரசகுமாரன் என்று குறிப்பிடுவதால், இளவரசுப் பட்டம் பெற்ற பொழுது இவன் குறைந்தது இருபத்தைந்து வயதினனாக இருந்திருக்க வேண்டும். இராசராச சோழனின் 29-ம் ஆண்டுக் கல்வெட்டுகள் தஞ்சையில் ஏராளமாகக் கிடைப்பதால், இம்மன்னனின் சிறந்த ஆட்சி பொ.ஊ. 1014ல் முடிவுற்றது என்று தெரியவருகிறது.

பட்டங்கள்:

இராசராசனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன.

அழகிய சோழன்
மும்முடிச்சோழன்
காந்தளூர் கொண்டான்.
சோழநாராயணன்.
அபயகுலசேகரன்
அரித்துர்க்கலங்கன்.
அருள்மொழி
இரணமுக பீமன்
ரவி வம்ச சிகாமணி
ராச பாண்டியன்.
ராச சர்வக்ஞன்.
இராசராசன்
இராச கேசரிவர்மன்
சோழேந்திர சிம்மன்.
இராச மார்த்தாண்டன்.
இராசேந்திர சிம்மன்.
இராச விநோதன்.
உத்தம சோழன்.
உத்துக துங்கன்.
உய்யக் கொண்டான்.
உலகளந்தான்.
கேரளாந்தகன்.
சண்ட பராக்கிரமன்
சத்ருபுசங்கன்.
சிங்கனாந்தகன்
சிவபாத சேகரன்.
சோழகுல சுந்தரன்.
சோழ மார்த்தாண்டன்.
திருமுறை கண்ட சோழன்.
தெலிங்க குலகாலன்.
நித்ய விநோதன்.
பண்டித சோழன்.
பாண்டிய குலாசனி
பெரிய பெருமாள்.
மூர்த்தி விக்கிரமா பரணன்
சென நாதன்.
செயங்கொண்ட சோழன்.
சத்திரிய சிகாமணி.
கீர்த்தி பராக்கிரமன்.
தைல குலகாலன்.
மேற்கண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் இராசராச சோழன் அழைக்கப்பட்டுள்ளார்.

#இராச இராசன் சமாதி:

முதலாம் இராச இராச சோழனின் நினைவிடம் (பள்ளிப்படை) தஞ்சாவூர் மாவட்டம், பட்டீச்சரம் அருகே உள்ள உடையாளூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

#பஞ்சவன்மாதேவீச்சரம் :
முதலாம் இராசராச சோழனின் தேவியும், பழுவேட்டரையரின் திருமகளுமாகிய பஞ்சவன்மாதேவியார் சிவனடி சேர்ந்தபின்பு அவ்அம்மையாரை பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே பஞ்சவன்மாதேவீச்சரமாகும். இராசேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.

ஐப்பசி சதயவிழா:

சோழ சக்கரவர்த்தி மாமன்னர் ராஜராஜ சோழர் பிறந்த வருடம் நாள் இவற்றை உறுதிப்படுத்திட சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அவர் பிறந்த மாதம் ஐப்பசி என்றும் பிறந்த நட்சத்திரம் சதயம் என்றும் தஞ்சைத் தவிர வேறுசில கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

ஐப்பசி சதய விழாவில் எடுப்பிக்க பின் வந்த சோழ மன்னர்கள் அரசிகள், அதிகாரிகள், போன்றவர்களால் நிவந்தம் அளிக்கப்பட்ட செய்திகளும் கல்வெட்டு சாசனமாக உள்ளன.

இராஜராஜ சோழனின் வாழ்நாள் சாதனை தஞ்சைப் பெரியக் கோயில் இராஜராஜனின் அமைச்சர் பொய்கைநாட்டுடைய கிழவன் ஆதித்த சூர்யனான தென்னவன் மூவேந்த வேளான் ராஜராஜர் இருக்கும் காலத்திலேயே அவருக்கும் அவரது பட்டதரசி லோகமாதேவிக்கும் செப்புத் திருமேனிகள் செய்து இக்கோயிலில் வைத்துள்ளனர் என்பதற்கும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
“மாமன்னன் இராஜராஜசோழன் மறைவுக்குப் பின் அவரது மைந்தன் முதலாம் இராஜேந்திர சோழன் பாபநாசம் திரு அரபுரம் 108 சிவாலயத்தில் தன் தந்தைக்குப் பஞ்சலோக திருமேனி எடுப்பித்து அவர் பிறந்த ஐப்பசி சதய நாளன்று திருமேனி முன்பாக விழா கொண்டவும் ராஜராஜர் சிலைக்கு பரிவட்ட மரியாதைகள் செய்யவும் நிரந்தர வைப்புத் தொகை வைத்தும், அதன் வட்டியிலிருந்து ஆண்டுதோறும் சதய விழா நடைபெற்றதும் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டியத் தகவல்களாகும்.” என்று அறிஞர் அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்கள் தெரிவிக்கின்றார்.

திருச்சிற்றம்பலம் 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...