Thursday, November 14, 2024

உய்யக்கொண்டான்மலை திருக்கற்குடி உஜ்ஜீவநாதர்..(உச்சிநாதர்)


#உய்யக்கொண்டான்மலை என்னும் #திருக்கற்குடி
#உஜ்ஜீவநாதர் (உச்சிநாதர்) 
#அஞ்சனாட்சி_அம்மன் திருக்கோயில் #மகாகும்பாபிஷேக_பெருவிழா இன்று சிறப்புடன் நடைபெற்றது 🙏🏻 

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது. நந்திவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட இது திருச்சி மாநகரில் அமைந்துள்ளது. இறைவன் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நான்காவது சிவத்தலமாகும்.

மூலவர்:உஜ்ஜீவநாதர்
அம்மன்:அஞ்சனாட்சி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:பொன்னொளிர் ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக்கிணறு, நாற்கோணக்கிணறு என ஐந்து தீர்த்தங்கள்.
புராண பெயர்:கற்குடி, உய்யக்கொண்டான் திருமலை
ஊர்:உய்யக்கொண்டான் மலை
மாவட்டம்:திருச்சி
மாநிலம்:தமிழ்நாடு
வழிபட்டோர் : 

மார்க்கண்டேயன், அருணகிரிநாதர், இராவணனுடைய சகோதரன் கரன்

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

தேவாரப்பதிகம்:

தண்டமர் தாமரை யானும் தாவியிம் மண்ணை யளந்து கொண்டவனும் மறிவொண்ணாக் கொள்கையர் வெள்விடை ஊர்வர் வண்டிசை யாயினபாட நீடிய வார்பொழில் நீழல் கண்டமர் மாமயில் ஆடும் கற்குடி மாமலை யாரே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 4வது தலம்.

மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி "உஜ்ஜீவநாதர்' எனப்படுகிறார்.

இங்குள்ள சுப்ரமணியரிடம் அருணகிரிநாதர், "திருப்புகழ் பாடும் அறிவைக்கொடு!' என வேண்டிப் பாடியுள்ளார்.

இங்குள்ள நடராஜர் சிலை பாதத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு, விசேஷமாக வடிக்கப்பட்டுள்ளது.

50 அடி உயர மலைக்கோயில் - ஓம் வடிவில் அமைந்துள்ளது.

பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது.

இத்தலத்தில் வசிப்போர் நீண்ட ஆயுளையும், நிறைந்த செலவங்களையும் பெறுவர். வழிபடுவோர்க்கு எம பயமில்லை என்று தலபுராணம் கூறுகிறது.

தல வரலாறு:

மிருகண்டு முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும் படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் அவர் முன் தோன்றி "உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா" என்று கேட்ட போது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும் போது மிருகண்டு முனிவர் அவனுடைய ஆயுள் விபரத்தைக் கூறி இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். தன்னை எமன் துரத்துவதை சொன்னார். இறைவன் அந்தச்சிறுவனை பாதுகாத்தார். இதன்பிறகே அவர் திருவேற்காடு தலத்தில் சிரஞ்சீவி என்னும் பட்டம் தந்தார்.மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தான். இத்தலத்தில் தான் இறைவன் உஜ்ஜீவனேஸ்வரர் மார்க்கண்டேயனுக்குக் காட்சி கொடுத்து அவன் என்றும் 16 வயதுடன் சிரஞ்ஜீவியாக வாழ வரம் கொடுத்தார்.

மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி "உஜ்ஜீவநாதர்' எனப்படுகிறார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் "கற்பகநாதர்' என்றும் இவருக்கு பெயர் உண்டு. சுவாமி சுயம்பு வடிவில் உள்ளார். 50 அடி உயர மலையில் பாறையில் மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது. 

பொது தகவல்:

விசேஷ நடராஜர்
மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதாக வரம் கொடுத்ததால் சிவனுக்கு, “உயிர்கொண்டார்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவரே ஜீவன்களுக்கு ஆதாரமாக இருப்பதால் உஜ்ஜீவனநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆடி பவுர்ணமியன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். தவிர, பவுர்ணமிதோறும் இரவில் சிவனுக்கு தேன், பாலபிஷேகம் நடக்கும்.

சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னன் இங்கு சிவதரிசனம் செய்தபோது, சிவன் அவனுக்கு ஆனந்த தாண்டவ தரிசனம் காட்டியருளினார். பாதத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு, இந்த நடராஜர் சிலை விசேஷமாக வடிக்கப்பட்டுள்ளது.

சூரியபூஜை விசேஷம்:

மலைக்கோயில் ஓம் வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர், அஞ்சனாட்சி அம்பாள் இருவரும் மேற்கு நேக்கியுள்ளனர். இவர்களது சன்னதிக்கு நடுவே கிழக்கு நோக்கி பாலாம்பிகை இருக்கிறாள். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தை மாதத்தில் ஓர்நாள் மாலையில் சிவலிங்கம், அஞ்சனாட்சி அம்பிகை மீது சூரிய ஒளி விழும். அந்நாளில் இருந்து 90 நாட்களுக்கு ஒருமுறை என, வருடத்தில் 4 முறை இங்கு சூரியபூஜை நடக்கும். பிரகாரத்தில் இடர்காத்தவர் என்ற பெயரில் சிவலிங்கம் இருக்கிறது. திருநாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலத்து சிவனை, இப்பெயரில் குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள சுப்ரமணியரிடம் அருணகிரிநாதர், “திருப்புகழ் பாடும் அறிவைக்கொடு!’ என வேண்டிப் பாடியுள்ளார். வைகாசி விசாகத்தன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று சுவாமி புறப்பாடும் உண்டு. கந்தசஷ்டியின்போது தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன், ஊருக்குள் சென்று ஐந்து கோயில் சுவாமிகள் சந்திக்கும் வைபவம் நடக்கும். சக்தி கணபதி, நால்வர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, நவக்கிரகம், பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். ஞானவாவி தீர்த்தம் பிரகாரத்தில் உள்ளது. இக்கோயிலில் இருந்து கி.மீ., தூரத்தில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாட முருகன் அருள் பெற்ற வயலூர் கோயில் உள்ளது.

தலபெருமை:

இக்கோயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. இவளை “மூதேவி’ என்பார்கள். லட்சுமியின் சகோதரி இவள். இவளைப் பார்த்தாலே காரியங்கள் நடக்காது என்பார்கள்.

இது தவறான கருத்தாகும் என சொல்லப்படுகிறது. இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். மேரு (மலை) வைத்து பூஜை செய்பவர்கள் ஒன்பது படிக்கட்டுகளை அமைப்பார்கள். இந்த மலைகளை நவாபரணம் என சொல்வதுண்டு.

இதில் இரண்டாவது ஆபரணமாக ஜேஷ்டாதேவி விளங்குகிறாள். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. அதுபோல, உய்யக்கொண்டான் திருமலையிலும் ஜேஷ்டாதேவி இருக்கிறாள். ஆனால் இரு புறமும் இரண்டு குழந்தைகளை வைத்திருக்கிறாள்.

ஒரு குழந்தை நந்திகேஸ்வரர் குழந்தை வடிவத்தில் இருப்பதுபோல உள்ளது. இவரை “மாடன்’ என்கிறார்கள். மாடு போன்ற வடிவத்தில் உள்ளதால் மாடன் என்ற பெயர் ஏற்பட்டதாம். மறுபுறத்தில் அழகிய பெண் இருக்கிறாள். இவளை வாக்தேவதை (சேடி) என்கிறார்கள். ஆதிபராசக்தியே இங்கு ஜேஷ்டாதேவியாக இருக்கிறாள். அவள் தனது சேடியான (பணிப்பெண்) வாக்தேவதையையும் அழைத்து வந்திருக்கிறாள். மாறுபட்ட இந்த அம்பிகையை வழிபட்டு வாழ்வில் நிகழ இருக்கும் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

பிரார்த்தனை:

பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது. இத்தலத்தை வழிபடுவோர் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

ஜேஷ்டாதேவிக்கு புது வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள்.

சிறப்பம்சம்: 

50 அடி உயர மலையில் இந்த கோயில் இருக்கிறது. கோயிலைச் சுற்றி பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோண கிணறு, நாற்கோண கிணறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. தேவி அஞ்சனாட்சி என வழங்கப்பெறுகிறாள். இவள் மை தீட்டப்பெற்ற கண்களைக் கொண்டவள். மற்றொரு அம்பிகை பாலாம்பிகை எனப்படுகிறாள். இரண்டு அம்மன்களுக்கும் தனித்தனி வழிபாடு நடக்கிறது.

மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி “உஜ்ஜீவநாதர்’ எனப்படுகிறார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் “கற்பகநாதர்’ என்றும் இவருக்கு பெயர் உண்டு. சுவாமி சுயம்பு வடிவில் உள்ளார். 50 அடி உயர மலையில் பாறையில் மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது இந்த கோயில் இராவணனுடைய சகோதரர்களில் ஒருவன் கரன். இவன் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான். இக்கோயிலுக்கு மூன்று வாசல்கள் உள்ளன. இரண்டு தெற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.

கல்வெட்டு:

இத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் குடமுருட்டி என்பது, (தஞ்சை மாவட்டத்தில் ஓடும் ஆறு அல்ல. இது வேறு) சர்ப்பநதி, உய்யக்கொண்டான் நதி என்றும், கல்வெட்டில் வைரமேகவாய்க்கால் என்றும் உள்ளது.
இத்திருக்கோவில் கல்வெட்டில் 'நந்திவர்ம மங்கலம்','ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம்' இவ்வூர் என்றும்; இறைவன் 'உய்யக்கொண்டநாதர் ' என்றும் குறிக்கப்படுகிறது.
கி. பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது இக்கோயில் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் மைசூர்க்காரரும் மாறிமாறித் தங்கியிருப்பதற்குரிய யுத்த அரணாக விளங்கியதாக அறியப்படுகிறது.

கோவில் அமைப்பு:

50 அடி உயரமுள்ள ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. குன்றின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் இடதுபுறம் ஞானவாவி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்திற்கு எதிரே ஒரு முகப்பு வாயிலுடன் குன்றின் மேலே ஏற படிகள் தொடங்குகின்றன.

குன்றின் பாறைகளில் நன்கு அமைந்துள்ள சுமார் 65 படிகள் ஏறி ஆலயத்தை அடையலாம். படிகள் செல்லும்போது இடதுபுறம் விநாயகர் உள்ளார். குன்றின் மீது ஒரு 3 நிலை கோபுரம், 5 பிராகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். குன்றின் மீது சுற்றிலும் உயர்ந்த மதிற்சுவருடன் கூடிய ஆலயம் அழகுற அமைந்திருக்கிறது. 

கொடிமரம் முன்பு மார்க்கண்டனைக் காப்பதற்காக, எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற சுவாமியின் பாதம் உள்ளது. படிகளேறி உட்சென்றால் முதலில் அஞ்சனாட்சி அம்பாள் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தரும் இவள் பழைய அம்பாள். இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்து போய் உள்ளது. எனினும் அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இதனால் புதிய அம்பாள் பாலாம்பிகை பிரதிஷ்டை செய்துள்ளனர். புதிய அம்பாள் பாலாம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரு அம்பாளுக்கும் நித்திய பூசை நடைபெற்று வருகின்றது. அம்பிகை சந்நிதிக்கு அருகில் சண்முகர் தனி சந்நிதி அழகானது.

உள் நுழைந்ததும் நேரே கோஷ்ட தட்சிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். வலமாக வரும்போது நால்வர் பிரதிஷ்டையும், அம்பாளுடன் காட்சி தரும் விநாயகர் சந்நிதியும், மறுபுறம் வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. கஜலட்சுமி, ஜ்யேஷ்டாதேவி, பைரவர், சூரியன், சனிபகவான் சந்நிதிகளும் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியுடன் துர்க்கையும், பிரம்மாவும், அர்த்தநாரீஸ்வரரும் உள்ளனர். மூலவர் உஜ்ஜீவனேஸ்வரர் மேற்குப் பார்த்த சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருகில் இறைவி அஞ்சனாட்சி சந்நிதி உள்ளது. இறைவன், இறைவி சந்நிதி தவிர பைரவர், மஹாலக்ஷ்மி, சக்திகணபதி, சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.

கோவிலின் உட்புறச் சுவர்களில் சோழ மன்னர்கள் உத்தம சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் அளித்த தானங்கள் பற்றிய விபரங்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் இக்கோவி்லுக்கு பல தானங்களும், திருப்பணிகளும் செய்திருக்கிறான். இத்தலம் நந்திவர்ம மங்கலம் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடி பவுர்ணமியன்று இரவில், மார்க்கண்டேயருக்கு சிவன் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். தவிர, பவுர்ணமிதோறும் இரவில் சிவனுக்கு தேன், பாலபிஷேகம் நடக்கும்.

சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னன் இங்கு சிவதரிசனம் செய்தபோது, சிவன் அவனுக்கு ஆனந்த தாண்டவ தரிசனம் காட்டியருளினார். பாதத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்டு, இந்த நடராஜர் சிலை விசேஷமாக வடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க பாலாம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

திருத்தலப் பாடல்கள்:

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞான சம்பந்தர் பாடிய பதிகம்:

வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்
தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்
கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்:

மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி
முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவம் ஆர மாக
அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்
கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

சுந்தரர் பாடிய பதிகம்:

விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடியேனை.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...