Friday, February 28, 2025

இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர்.

கடவுளின் தேசமான 
இயற்கை எழில் கொஞ்சும் 
#கேரள மாநிலத்தில் உள்ள 
108 சிவாலயங்களில் ஒன்றானதும்,
ஒரேயொரு 
தேவாரப் பாடல் பெற்ற சேரநாட்டுத் (மலைநாட்டு)  தலமான,
நாயன்மார்களில்
சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் முக்தி பெற்ற தலமாகவும், சுந்தரமூர்த்தி நாயனார் 
கடைசி தேவாரப் பதிகம் பாடிய தலமாகவும், சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளைய யானையின் மீதும் மற்றும் சேரமான் பெருமான் குதிரை மீதும் இங்கிருந்து கைலாயம் சென்ற இடமாகவும்,
பரசுராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலமாகவும் அமைந்த 
உள்ள புகழ்பெற்ற 
*திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 
#திருஅஞ்சைக்களம் என்ற
#திருவஞ்சிக்குளம்
#அஞ்சைக்களத்தீஸ்வரர்
(#மகாதேவர்) 
#உமையம்மை (பார்வதி)
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ளது, திருவஞ்சைக்களம். இந்த திருத்தலத்தில் அமைந்துள்ளது மகாதேவர் கோவில். சிவபெருமானின் தேவார பாடல்கள் இடம்பெற்ற தலங்களில், கேரள மாநிலத்தில் அமைந்த ஒரே ஆலயம் இதுவாகும்.

திருவஞ்சைக்குளம் மகாதேவசுவாமி கோயில்  என்பது பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேரமான் பெருமான் ஆண்ட ஊரிலுள்ள தலமெனப்படுகிறது.

தென்னிந்தியாவின் மிக பழமையான சிவன் கோயில்களின் ஒன்றாக கருதப்படும் இந்த திருவஞ்சிக்குளம் மஹாதேவா கோயில் கொடுங்கல்லூர் நகரின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது.

மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது. 

மூலவர்:மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்,
அம்மன்:உமையம்மை
தல விருட்சம்:சரக்கொன்றை
தீர்த்தம்:சிவகங்கை
புராண பெயர்:திருவஞ்சிக்குளம்
ஊர்:திருவஞ்சிக்குளம்
மாவட்டம்:திருச்சூர்
மாநிலம்:கேரளா

*வழிபட்டோர்:

அப்பர், சேரமான், சுந்தரர், சேக்கிழார் முதலியோர் இத்தல இறைவனை வழிபட்டவர்கள் ஆவர். பரசுராமர், தாயைக்கொன்ற பாவம் நீங்க இங்கு வழிபட்டுள்ளார். கழற்றறிவார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித்தலமாகும். கழற்றறிவார் நாயனார், பெருமாக்கோதையார் என்றும், சேரமான் பெருமாள் நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். 

பாடியவர்கள்:

சுந்தரமூர்த்தி நாயனார் 

தேவாரப்பதிகம்:

"தலைக்குத்தலை மாலை அணிந்த தென்னே சடைமேற்கங்கை வெள்ளம் தரித்த தென்னே அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்த தென்னே அதன்மேற்கத நாகங்கச்சு ஆர்த்த தென்னே மலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு அலைக்கும்கடல் அங்கரை மேல் மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற மலைநாட்டுத்தலம்.

பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம்.
 
இங்குள்ள நடராசர், சேரமான் பெருமான் பூசித்தது.
 
வீதியின் நடுவில் உள்ள பெரிய மேடை "யானை வந்த மேடை" என்று வழங்கப்படுகிறது.
 
கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து இத்தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றது வரலாறு.

#தல வரலாறு:

சேரநாட்டை ஆண்டு வந்த பெருமாக் கோதையார் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன் திருவஞ்சிக்குளம் உமாமகேஸ்வரர் மேல் தீராக் காதல் உடையவன். அவன் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும்போதெல்லாம் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி கலீர் கலீரெனக் கேட்கும். சிலம்பொலி நாதம் கேட்டபின்பே மன்னன் அமுதுண்ணுவது வழக்கம்.

ஒருநாள் சேரமான் இறைவனை வழிபடும் போது சிலம்பொலி கேட்க வில்லை. மன்னன் திகைப்படைந்தான் தன் பக்தியில் குறை நேர்ந்துவிட்டதோ! அதனால்தான் சிலம்பொலி கேட்கவில்லையோ எனக் கருதி, தன் உடைவாளால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான். அப்போது சிலம்பொலி அதிரசேரமான் முன்பு ஈசன் தோன்றி, வருந்தாதே மன்னா! என் பக்தன் சுந்தரன் தேனினும் இனிய பாடல்களால் தினமும் என்னை அபிஷேகம் செய்வான். இன்று அதில் நான் மெய்மறந்து விட்டேன். எனவேதான் சிலம்பொலி கேட்க சற்று தாமதமாகிவிட்டது என்றார். ஈசனின் இதயத்தையே உருக்கும் பாடல்களைப் புனையும் இத்தகையதோர் சிறப்புமிக்க சிவனடியாரை அறியாது போனோமே என்றெண்ணிய சேரன், தில்லை சென்று அம்பலவாணரைத் தரிசித்தான். பின் திருவாரூர் சபாபதியைத் தரிசித்துவிட்டு சுந்தரரின் இல்லம் தேடிச் சென்றான். அவருடன் நட்பு கொண்டு அளவளாவி மகிழ்ந்தான். சேரன் தனது பூர்வீகமான திருவஞ்சிக்குளத்துக்கு வருமாறு சுந்தரருக்கு அழைப்பு விடுத்தான். அவரது அழைப்பையேற்று வஞ்சிக்குளம் சென்று, சிறிது காலம் அங்கு கோயில் கொண்டுள்ள ஈசனை ஆராதித்து மகிழ்ந்தார் சுந்தரர்.

பின் தன் நாடு திரும்பிய சுந்தரர் தொண்டை மண்டலம் பாண்டிநாடு என பல சிவத் தலங்களையும் தரிசித்து விட்டு மீண்டும் திருவஞ்சிக்குளம் சென்றார். சேரனின் நட்பு அவரை காந்தமென ஈர்த்தது. தன்னைக் காண வந்த சுந்தரரை மன்னன் மேளதாளங்களுடன் வரவேற்று. யானை மீது அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, அரியணையில் அமர்த்தி பாத பூஜை செய்து கவுரவித்தான். சுந்தரரும் அங்கேயே தங்கி மலைநாட்டுப் பதிகள் பல கண்டு வழிபட்டார். சுந்தரர் கயிலை செல்ல வேண்டிய நேரம் வந்தது. தலைக்குத் தலை மாலை என்ற பதிகம் பாடிக்கொண்டிருந்த அவரை, வெள்ளை யானையை அனுப்பி அழைத்துவரும்படி சிவகணங்களுக்கு உத்தரவிட்டார் ஈசன். அமரர்கள் சூழ யானையின்மீது கயிலாயம் சென்ற சுந்தரரின் நெஞ்சம் நண்பனையே நினைத்தபடி இருந்தது. தன் உள்ளுணர்வால் இதையறிந்த சேரமான், சுந்தரர் விண்ணிலேறி கயிலை செல்வதைக் கண்டான். உடனே இந்த தலத்தில் இருந்து தன் வெண்புரவியில் ஏறியமர்ந்து, அதன் காதில் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஓத, விண்ணில் சென்ற யானையைத் தொடர்ந்து சென்றது குதிரை. இருவரும் கயிலையை அடைந்தனர்.

#தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தனது 18வது வயதில் தன் நண்பர் சேரமானுடன் கேரளாவில் உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்குள்ள இறைவனிடம், இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி தலைக்கு தலை மாலை என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். உடனே சேரமான் குதிரையில் சுந்தரரை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன்னே கைலாயம் சென்று விட்டார். சுந்தரர் இறைவனின் பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போதும் இறைவனை நினைத்து பதிகம் பாடினார். தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே நானெனை பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 266 வது தேவாரத்தலம் ஆகும்.

#பொது தகவல்:

இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள்.

கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை.

கேரள பாணியில் அமைந்த கோயில்.
 

துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன.
 

கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுண்டாம்.

இங்குள்ள நடராசர் பஞ்சலோகச்சிலை; இதன் கீழ் "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்று எழுதப்பட்டுள்ளது
 

கிழக்கு ராஜகோபுர நுழைவாய் பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்கள் செப்புத் திருமேனிகளாக  உள்ளன.
 

சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது.
 

இங்குள்ள மரவேலைப்பாடுகள் காணத்தக்கவை.

கோபுரம் தேவர், தட்சிணாமூர்த்தி, பசுபதி, நட்டக்கால் சிவன், சந்தியாவேள சிவன், பள்ளியற சிவன், உண்ணி தேவர் மற்றும் கொன்னக்கால் சிவன் ஆகிய சிவபெருமானின் பல்வேறு ரூபங்களின் சித்தரிப்புகளை இந்தக்கோயிலில் காணலாம். 2000 வருடங்கள் பழமையான இந்த கோயில் சிவபெருமானின் பல்வேறு அவதார ரூப சித்தரிப்புகளுக்காகவே பிரசித்தி பெற்றுள்ளது.

தலபெருமை:

சமயக்குரவர்களில் சுந்தரர் பாடிய தலம் இது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். ஒரு முறை சேர மன்னன் திருவாரூர்க்கு வர, சுந்தரர் அவரை வரவேற்று உபசரித்தார். சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார்.

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார்.

*மூலவர், பிற சன்னதிகள்:

இத்தல மூலவர் மகாதேவர் என்றும் அஞ்சைக்களத்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் மூலவர் கருவறைக்குள் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள் பாலிக்கிறார்.  மூலவர் தரை மட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார். இங்கு கணபதி, ஐயப்பன், அனுமன், நாகராசா, பசுபதி, சப்தமாதர்கள், ரிஷபம், நந்திகேசன், பள்ளியறை சிவன், பிரதோச நிருத்யா, நாகயக்சி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோருக்கான இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சன்னிதிகள் உள்ளன. சுந்தரருக்கும், சேர மன்னனுக்கும் தனிச்சன்னிதி இருக்கிறது. 
 மலை நாட்டிலுள்ள ஒரே திருமுறைத்தலம் என்ற சிறப்பினை இத்தலம் பெறுகிறது. 

இவ்வாலயத்தில் தினமும் மாலை வேளையில் 'தம்பதி பூஜை' நடத்தப்படுகிறது. அதன் பிறகு, 'பள்ளியறை பூஜை' நடைபெறுகிறது. இந்தப் பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடும் தம்பதியர்களுக்கு, விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும். கணவன்- மனைவி இடையில் கருத்து வேறுபாடு இருந்தால் அவை நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை. பவுர்ணமி தினத்தில் இக்கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பது சிறப்புக்குரியது என்கிறார்கள். பரசுராமர் தன்னுடைய தாயைக் கொன்ற பாவம் நீங்க, இவ்வாலய இறைவனை வழிபட்டதாக சொல்லப்படுகிறது.

#ஒரே நாளில் சிவபதம் பெற்ற நால்வர்:

திருவஞ்சைக்களத்தில் இருந்து சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலாயம் சென்று, சிவபதம் அடைந்தது, ஒரு ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று ஆகும். இந்த நாளில் இவர்கள் மட்டுமல்லாது, இன்னும் இரண்டு பேரும் சிவதம் அடைந்தனர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவா், மிழலை நாட்டை ஆண்டு

வந்த குறுநில மன்னர் மிழலைக் குறும்பர். சிவனடியார்களுக்கு உணவு அளித்தும், செல்வங்களைக் கொடுத்தும் தொண்டு புரிந்து வந்தார். தினமும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தை விதிப்படி வணங்கியும், பாடியும் சுந்தரரை நினைத்து துதித்து வந்தவர். அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர். சுந்தரர் திருக்கயிலையை அடைந்ததை தனது இருப்பிடத்தில் இருந்தே உணர்ந்து கொண்ட மிழலைக் குறும்பர், 'சுந்தரர் போன பின்பு நான் அவரைப் பிரிந்து வாழமாட்டேன்; யோக நெறியின் மூலம் சிவனடியை அடைவேன்' என்று கூறி, அதன்படியே சிவபதம் அடைந்தார்.

வெள்ளை யானை மீது சுந்தரரும், குதிரையில் சேரமான் பெருமானும் கயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பூமியில் விநாயகரை பூஜித்துக் கொண்டிருந்தார், அவ்வையார். அவரிடம் "நீயும் எங்களுடன் கயிலை வா" என்று அழைத்தார், சுந்தரர். அவ்வையாருக்கும் கயிலை செல்ல வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதனால் விநாயகருக்கு செய்து கொண்டிருந்த பூஜையை விரைவாக முடிக்க எண்ணினார். அதை உணர்ந்து கொண்ட விநாயகப்பெருமான் அசரீரியாக, "அவ்வையே.. எனக்கு செய்ய வேண்டிய வழிபாட்டை வழக்கம் போல நிதானமாகவே செய்.. சுந்தரருக்கு முன்பாக நான் உன்னை கயிலையில் கொண்டு போய் சேர்ப்பேன்" என்றார். அதன்பின்னர் விநாயகரை துதித்து, 'சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச்...' என்ற பாடலைப் பாடினார். 72 அடிகளைக் கொண்ட இந்தப் பாடல் 'விநாயகர் அகவல்' என்று அழைக்கப்படுகிறது. அவ்வை வழிபாட்டை முடித்ததும், விநாயகர் தன்னுடைய துதிக்கையில் அவ்வையாரை தூக்கிக் கொண்டு போய் கயிலாயத்தில் விட்டு விட்டார். அதன்பிறகே சுந்தரரும், சேரமானும் கயிலாயம் வந்து சேர்ந்தனர்.

#திருச்செந்தூரில் வெள்ளை யானை உலா:

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் கயிலாயம் சென்று சிவபதம் அடைந்தார். அவர் கயிலாயம் செல்ல உதவியது, வெள்ளை யானை ஆகும். மேலும் அவர் கயிலாயம் சென்றதும், சிவபெருமான் சுந்தருக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானை வடிவில் காட்சி தந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில், ஆடி மாத சுவாமி நட்சத்திரம் அன்று, வெள்ளை யானை வீதி உலா நடத்தப்படுகிறது. அப்போது கோவில் யானைக்கு, திருநீறு கொண்டு உடல் முழுவதும் பூசி வெள்ளையாக மாற்றுகின்றனர். அந்த வெள்ளை யானையும், தங்கச் சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவிலில் இருந்து புறப்பட்டு, சன்னிதி தெரு, உள் மாடவீதி மற்றும் ரத வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் கோவிலை அடைவர்.

#கல்வெட்டுக்கள்:

கோயிலின் ஒரு பகுதியை கொடுங்கல்லூரை தலைநகராகக் கொண்டு இந்த இடத்தை ஆண்ட சேரமான் பெருமாளால் கட்டப்பட்டது.

கி.பி 1670 இல் டச்சுக்காரர்கள் கோயிலைத் தாக்கி இரண்டு கோபுரங்களை இடித்துத் தள்ளினர். பாரம்பரியக்  கதைகளின்படி, சேரமான் பெருமாள் கொடுத்ததாகக் கருதப்படும் சாமோரின் வாளும் அழிக்கப்பட்டது/எரிக்கப்பட்டது. 

மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தானும் இந்த இடத்தை ஆக்கிரமித்து தங்க நகைகள் மற்றும் சிறந்த செப்பு முலாம் பூசப்பட்ட பொருட்களை கொள்ளையடித்தார். தளவா கேசவதாஸ் பிள்ளையின் திருவிதாங்கூர் இராணுவத்தால் அவர்கள் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நமஸ்கார மண்டப கல்வெட்டு, "சாஸ்திர பாஹ்யா" என்பவரால் இந்த கோயில் அழிக்கப்பட்டதாக பதிவு செய்கிறது. இந்த கோயில்  கி.பி 1801 ஆம் ஆண்டில் கொச்சி இராச்சியத்தின் பாரம்பரிய முதலமைச்சர் பாலியத் அச்சன் / பெரும்படப்பு ஸ்வரூபம் என்பவரால் மீண்டும் கட்டப்பட்டது. சமஸ்கிருதத்தில் உள்ள கல்வெட்டு இவ்வாறு கூறுகிறது...

யாஹ்; கச்சித் சாஸ்த்ர பாஹ்யோயம் அதாஹ துஹிதை,
கரயத்வ ததாதா
காலே தேவாதிரம்யாம் த்ருவமிஹனிலயம்,
மடபூபஞ்சயம்தம்
கோவிந்দ பாலியேஸோ গிரிஸமாভிநவீ
கரயன் வஞ்சுலேசம்
ந்யக்ஷேநோந்நாগধா ஸௌயம் கலிதখদா
சஸ்ரபிக்ஷிக்தாக்ய தத்தா"

மேலே உள்ள கல்வெட்டு, மாட பூபதி (கொச்சி ஆட்சியாளர்) கட்டளையிட்ட ஒரு கோவிந்தரான பாலியேசா, வஞ்சுலேசா கோயிலை மீட்டெடுத்ததாகவும், சிறிது காலத்தில் ஒரு சாஸ்திர பாஹ்யா அல்லது மதவெறியரால் இழிவுபடுத்தப்பட்டதாகவும் பதிவு செய்கிறது. இந்த புனரமைப்பு கி.பி 1801 இல் நடந்தது, மேலும் மதவெறி இழிவு 18 ஆம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் படையெடுப்புகளைக் குறிக்கலாம் .

1831 ஆம் ஆண்டு சுத்ரு மண்டபத்தின் ஆதிஸ்தானத்தில் உள்ள மற்றொரு கல்வெட்டு, கொச்சி மன்னர் ராம வர்மா, தீப மண்டபத்தை தனது மந்திரியான வஞ்சுலேசன் என்றும் அழைக்கப்படும் சிவபெருமானுக்குக் கட்டியதாகக் கூறுகிறது. மற்றொரு வட்டெழுத்து கல்வெட்டு, ஒரு தோட்டம்/நந்தவனத்தின் பரிசைப் பதிவு செய்கிறது.

இந்த செப்புத் தகடு, கி.பி 345 ஆம் ஆண்டில் சேர மன்னரால் சிரிய கிறிஸ்தவ குடியேறிகளின் தலைவரான க்னை தோமாவுக்கு வழங்கப்பட்டதாக ரெவ். டாக்டர் ஹெர்மன் குண்டர்ட் பதிவு செய்துள்ளார், இது இந்தக் கோயிலின் வடக்கு நுழைவாயில் கோபுரத்தில் தோண்டப்பட்டது. இதன் நகல் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.

ஸ்ரீ காசி மடம் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசி வாசி அருள் நந்தி  தம்பிரான் "தேவர பரிசு அரகட்டளை" என்ற அறக்கட்டளையை நிறுவினார், அதற்காக ரூ.5000 நன்கொடையாக வழங்கினார். மேலும் மகேஸ்வர பூஜை நடத்துவதற்கான அறக்கட்டளையையும் நிறுவினார்,  அதற்காக ரூ.7000 இந்த கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்தக் கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது.

திருவிழா:

இந்த கோயிலில் நடத்தப்படும் ஆனயோட்டம் எனப்படும் யானைப்பந்தயமும் மிகப்பிரசித்தமான நிகழ்ச்சியாக அறியப்படுகிறது. வருடாந்திர கோயில் திருவிழாவின் அங்கமாக இந்த ஆனயோட்டம் நடத்தப்படுகிறது. 

மாசி மாதம் மகாசிவராத்திரி 8 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசையில் ஆறாட்டு நடக்கிறது.

சுந்தரர் கயிலாசம் சென்ற ஆடி சுவாதி நாளன்று ஆண்டுதோறும் சுந்தரருக்கும், சேரமானுக்கும் அபிஷேகம் செய்து விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூசை செய்யப்படுகிறது.

இத்தகைய சிறப்புகளைக்கொண்ட இந்த திருவஞ்சிக்குளம் மஹாதேவா கோயில் இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம்,கொடுங்கலூர்-680 664. திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

பெருமாள் 9 அவதாரங்களிலும் சிவனை பூஜித்த தலங்கள் தெரியுமா?

பெருமாள் 9 அவதாரங்களிலும் சிவனை பூஜித்த தலங்கள் தெரியுமா?

மச்சாவதாரம்...

சோமுகாசுரன் வேதங்களை  திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காண்கிறோம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் எனப்படுகிறார். கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம் முன்னாளில் சேலூர் (சேல் - மீன்) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

கூர்மாவதாரம்...

திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர் களும் கடைந்தபோது, மத்தாக இருந்த மந்திரமலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார் திருமால். ஆமை வடிவம் கொண்ட பெருமாள், மலையை தாங்கும் வல்லமையை தர சிவபெருமானை வேண்டினார். இதற்காக, காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சூர் சிவன் கோயிலில் ஆமைமடு என்ற தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள விநாயகர் சன்னதி விதானத்தில் திருமால் ஆமை வடிவில் சிவபூஜை செய்வது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. முருங்கை மரத்தின்கீழ் ஜோதி வடிவாக விளங்கும் சிவலிங்கத்தை பெருமாள் ஆமை வடிவத்தில் வழிபட்டதால் இந்த சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் (கச்சபம் - ஆமை) என்ற பெயர் ஏற்பட்டது.

வராக அவதாரம்...

இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாள லோகத்தில் இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த பெருமாள் வராக அவதாரமெடுத்து  பூமியை தோண்டி அங்கு சென்று அவனை அழித்தார். கோபம் நீங்காத அவரை சிவபெருமான் சாந்தப்படுத்தினார். சிவ தரிசனத்தால் சினம் தணிந்த பெருமாளுக்கு  சிவபெருமான் அருள் புரிந்த தலமே திருப்பன்றிக்கோடு (வராகம் - பன்றி) ஆகும்.  இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

நரசிம்ம அவதாரம்...

தன் பக்தனான பிரகலாதனை இரண்யனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள் வெளிப்பட்டார். இரண்யனைக் கொன்றார். அவரது உக்கிரத்தைத் தணிக்க, அதனினும் மேற்பட்ட உக்கிரத்துடன் சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவெடுத்தார். காஞ்சிபுரத்தில் தாமல் என்ற பகுதியில், நரசிம்மர் வழிபட்ட நரசிம்மேஸ்வர சிவாலயம் உள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் தலத்தில் நரசிம்மர் வழிபட்ட காமீஸ்வரர் என பெயர் கொண்ட சிவபெருமானை தரிசிக்கலாம்.
வாமன அவதாரம்...

மலை நாட்டை ஆண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க அவனை குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார். அவனை காலால் அழுத்தி பாதாள லோகம் அனுப்பிய பாவம் தீர பெருமாள் வழிபட்ட சிவத்தலம் கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியாகும்.

பரசுராம அவதாரம்...

ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த, தன் தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்ட அவதாரம் பரசுராம அவதாரம். இந்த அவதாரத்தில் மன்னர்களின் செருக்கையும் அடக்கினார் திருமால். திருமால் பரசுராமராய் பூஜித்த சிவத்தலங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள பழுவூர் மற்றும் மயிலாடுதுறை அருகே உள்ள திருநின்றியூர் ஆகும்.

ராமாவதாரம்...

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும், பெற்றவர் சொல் கேட்டு நடக்கவும், அநியாயத்தை எப்பாடுபட்டேனும் வேரறுக்கவும், சிவ பக்தனாயினும் காமத்திற்கு அடிமைப்பட்ட அரக்கனை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ராம நாமத்தை சிவனே  உச்சரிக்கிறார் என்பதும் வரலாறு. அவரே அனுமானாக உருவெடுத்து, ராவணனை அழிக்க திருமாலுக்கு உதவினார் என்பதும் செவிவழிச் செய்தி. திருமால், ராமாவதார காலத்தில் சிவனுக்காக சேதுக்கரையில் ஒரு தலமே உருவாக காரணமாக இருந்தார்.  மணலால் சிவலிங்கம் அமைத்து பூஜித்தார். அதுவே ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலாகும். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலுள்ள சிவனை ராமர் வழிபட்டதாக கூறப்படுவதால் அவர் ராமலிங்கேஸ்வரர் எனப்படுகிறார்.

 பலராம அவதாரம்...

திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக் கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு. காஞ்சிபுரத்தில் பலராமர் வழிபட்ட சிவன் கோயில்

பலபத்ர ராமேஸ்வரம் என பெயர் கொண்டதாகும். திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) அருகிலுள்ள கோடியக்கரை குழகர்கோயில் பலராமர் வழிபட்ட தலமாகும்.

கிருஷ்ண அவதாரம்...

கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்து, குருஷேத்திர யுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை செய்ததாக பாகவதம் கூறுகிறது. மேலும் கண்ணன் தன் வினைகள் தீர, திருவீழிமலை (திருவாரூர் மாவட்டம்) மற்றும் திருவிடை மருதூர் (தஞ்சாவூர் மாவட்டம்) சிவபெருமானை பூஜித்த தலங்களாக கூறப்படுகிறது.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்கள் விபரம்.

ஈசன் வீற்றிருக்கும் தலங்களை முழுமையாக கண்டவருமில்லை நம் வசிப்பிடத்தை சுற்றி உள்ள திருக்கோயில்களை காணாமல் போனால் இப்பிறவி எடுத்து பயனில்லை. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் உங்களுக்காக இதோ....  
 
கடலூர் வட்டம்
 
1வில்வராயநத்தம் 2புஷ்பகிரி 3கெடிலம்நதிக்கரை, 4முதுநகர்-ராமலிங்கேஸ்வரர், 5முதுநகர்-காசிவிஸ்வ, 6திருமாணிக்குழி 7திருப்பாதிரிபுலியூர் 8நடுவீரப்பட்டு 9CNபாளையம் 10திருச்சோபுரம் 11விலங்கல்பட்டு 12நல்லாற்றூர் 13தூக்கணாம்பாளையம், 14வெள்ளப்பாக்கம் 15ஆலப்பாக்கம் 16பள்ளிப்பட்டு 17கம்மியம்பேட்டை,  18.குமாரபுரம் 

காட்டுமன்னார்கோயில் வட்டம்

1.ஓமாம்புலியூர் 2ஓமாம்புலியூர்-வடதளி 3வடமூர் 4குமராட்சி 5T.மடப்புரம் 6ம.கொளக்குடி 7முட்டம் 8கலியமலை 9சிறகிழந்தநல்லூர் 10சிறுகாட்டூர் 11கீழஅதங்குடி, 12தெம்மூர், 13நாட்டார்மங்கலம், 14கொல்லமலை, 15திருமூலஸ்தானம்-கைலாச 16திருமூலஸ்தானம்-திருமூலநாதர், 17ரெட்டியூர் 18எள்ளேரி 19வீரசோழபுரம் 20கானாட்டுமுள்ளூர்
 
21திருநாரையூர் 22மேலக்கடம்பூர் 23tvபுத்தூர், 24கொத்தங்குடி 25மெய்யாத்தூர் 26கருப்பூர் 27மேலநெடும்பூர் 28நெய்வாசல் 29லால்பேட்டை 30காட்டுமன்னார்கோயில் 31இலங்குமூர் 32கீழக்கடம்பூர் 33எய்யலூர் 34ம.புளியங்குடி 35பூவிழந்தநல்லூர் 36ராயநல்லூர் 37திருச்சின்னபுரம் 38மானியம்ஆடூர் 39கொண்டாயிருப்பு 40சர்வராஜன்பேட்டை

 41திருமூலதானம் கைலாச 42.Tநெடுஞ்சேரி 43T.மணலூர் 44பூர்த்தங்குடி 45கந்தகுமாரன் 46.கொத்தங்குடி 47.மானியம்ஆடூர் 48.ராஜேந்திரசோழகன்  49.பரிவிளாகம்
 
குறிஞ்சிப்பாடி வட்டம்

1நெய்வேலி-காசி, 2மேலபுதுப்பேட்டை 3மீனாட்சிப்பேட்டை 4 S.புத்தூர் 5கருங்குழி 6குறிஞ்சிப்பாடி 7வேகாகொல்லை 8தீர்த்தனகிரி 9ஆபத்தாரனபுரம் 10கொளக்குடி 11வடலூர் 12குறிஞ்சிப்பாடி-மன்மதன், 13சிவநந்திபுரம், 14தொண்டமாநத்தம் 15சிறுதொண்டமாதேவி 16கல்குணம் 17ஊமங்கலம் 18கீழூர் நெய்வேலி-நடராஜர் 19.நெய்வேலி-அமிர்தகடேசர் 20.அரசடிகுப்பம் 

சிதம்பரம் வட்டம்

1திருக்களாஞ்சேரி 2சிதம்-ஆத்மநாதர் 3கீரப்பாளையம் 4விளாகம் 5முகையூர் 6கீழசெங்கல்மேடு 7சிதம்-இளமையாக்கினார் 8திருவேட்களம் 9சிவபுரி 10திருக்கழிப்பாலை 11பின்னத்தூர் 12ஓரத்தூர் 13பரதூர் 14மதுராந்தகநல்லூர்  15ஆடூர் 16கவரப்பட்டு 17உசுப்பூர் 18குமாரமங்கலம் 19துணிசிரமேடு 20பண்ணப்பட்டு 

21தெற்குவிருதாங்கநல்லூர் 22வசபுத்தூர் 23புதுவிளாகம் 24பெருங்காளூர் 25வையூர் 26தில்லைவிடங்கன் 27இளநாங்கூர் 28சி.சாத்தமங்கலம் 29சக்திவிளாகம் 30உமாபதிசிவன்குருமூர்த்தம்  31விபீஷ்ணபுரம்-புலிமடு 32பின்னத்தூர் 33சி.சாத்தமங்கலம் 34சிதம்-அனந்தீஸ்வரர் 35சிதம்-கமலீஸ்வரர் 36சிதம்-நந்தனார் 37சிதம்-திருக்களாஞ்சேரி 38சிதம்-நந்தனார்குடில் 39சிதம்-அழகேஸ்வரர் 40சிதம்-மாரியப்பநகர் 

41ஜெயம்கொண்டபட்டினம் 42பரங்கி-வண்ணாரபாளையம் 43பரங்கி-முத்துகுமாரசாமி 44பரங்கி-ஆணையாங்குப்பம் 45பரங்கி-மகாகைலாயம் 46சம்மந்தம் 47கீழநத்தம் 48சிதம்-முத்தையாநகர் 49கோவிலம்பூண்டி 50சிதம்- இந்திரலிங்கம் 51சிதம்-கபிலேஸ்வரர் 52சிதம்-நாகலிங்கேஸ்வரர் 53சிதம்-அக்னீஸ்வரர் 54சிதம்-ஈசான்யலிங்கேஸ்வரர் 55சிதம்- குபேரங்கேஸ்வரர் 56சிதம்-யோகபுரி 57சிதம்-வாரணேஸ்வரர் 58சென்னிநத்தம் 59சிதம்-நரமுக 60கீரப்பாளையம் 
61. பின்னலூர் 62. சிவபுரி  63. சிதம்-இரத்தினபுரீஸ்வரர் 
64.தவர்த்தாம்பட்டு 

திட்டக்குடி வட்டம் 

1வையங்குடி  2பெண்ணாடம் 3கீழ்செருவாய் 4அரங்கூர் 5போத்திராமங்கலம் 6t.அகரம் 7திட்டக்குடி 8தொழுதூர் 9பனையந்தூர் 10கொரக்கவாடி 11வடகராம்பூண்டி 12கீழகல்பூண்டி 13ம.புடையூர்  14தொளார் 15தச்சூர் 16எழுத்தூர் 17திருநெல்வாயில்அறத்துறை 18கூடலூர் 19குருக்கத்தஞ்சேரி 20கோழியூர் 

21இறையூர் 22தீவளுர் 23வெண்கரும்பூர் 24செவ்வேரி 25கீழ்ஆதனூர் 26நரசிங்கமங்கலம் 27திருமலைஅகரம் 28கிளிமங்கலம் 29புலிவலம் 30ஆதமங்கலம் 31ஆவினன்குடி 32ஏறப்பாவூர் 33எடையூர் 34கணபதிகுறிச்சி 35பெலாந்துறை 36மாளிகைகோட்டம் 37கொத்தட்டை 38பெண்ணா-மெய்கண்டார் 39பனையந்தூர் 40தொழுதூர் 

பண்ருட்டி வட்டம் 

 1உளுந்தாம்பட்டு 2கணிசம்பாக்கம் 3சிறுகிராமம் 4பேர்பெரியான்குப்பம் 5எலந்தம்பட்டு 6குணபரஈஸ்வரம்  7சின்னநரிமேடு 8திருவாமூர் 9சிறுவத்தூர் 10திருவதிகை 11வைடிபாக்கம்  12திருத்துறையூர் 13மேல்பட்டாம்பாக்கம் 14நெல்லிக்குப்பம்கைலாசநாதர் 15நெல்லிக்குப்பம்-பூலோகநாதர் 16கொங்கராயனூர் 17அவையானூர் 18பனப்பாக்கம் 19பூங்குணம் 20எய்தனூர்

21செம்மேடு 22மணம்தவிழ்ந்தபுத்தூர் 23கரும்பூர் 24புதுப்பேட்டை 25கயப்பாக்கம் 26விஸ்வநாதபுரம் 27எழுமேடுஅகரம் 28மேல்குமாரமங்கலம் 29திராசு  30வீரப்பெருமாள்நல்லூர் 31பண்ருட்டி -சோமேசர் 32சேமக்கோட்டை 33சேமங்கலம் 34திருக்கண்டீஸ்வரம் 35கொட்லாம்பாக்கம் 36கணிசம்பாக்கம் 37ஒறையூர் 38பெரியகள்ளிப்பட்டு 39.வாழப்பட்டு  40.நெல்லிக்குப்பம் ஈ ஐ டி-பாரி –குடியிருப்பு 

41.மேலப்பாதி 42.நெல்லிக்குப்பம்-வசந்தம் நகர் 43.தட்டாம்பாளையம் 44.அக்கடவல்லி 45.பண்ருட்டி –சோமேசர் 

புவனகிரி வட்டம்

1குமுடிமூலை 2சாத்தப்பாடி 3கீழமணக்குடி 4தலைகுளம் 5பு.உடையூர் 6புவனகிரி-வெள்ளியம்பலம் 7புவனகிரி-கைலாச 8பரங்கி-அகரம் 9சிவன்பேட்டை 10எறும்பூர் 11பரதூர் 12பின்னலூர் 13அம்பாபுரம் 14எறும்பூர்-தத்துவராயர் 15வானமாதேவி 16புவன-வேதபுரீஸ்வரர் 17புவனகிரி-கைலாச வத்தராயன்தெத்து 

விருத்தாசலம் வட்டம் 

1விருத்தாசலம் 2சாத்துகூடல் 3பூதாமூர் 4விளக்கப்பாடி 5வடக்கு வெள்ளூர் 6தே.கொபுராபுரம் 7முதனை 8வீராரெட்டிகுப்பம் 9தொரவலூர் 10பரவலூர் 11tv.புத்தூர் 12தர்மநல்லூர் 13இடைசித்தூர் 14கார்கூடல் 15சிறுவரப்பூர் 16தேவன்குடி 17முகாசாபரூர் 18வி.குமாரமங்கலம் 19சத்தியவாடி 20ராஜேந்திரபட்டினம் 

21கோமங்கலம் 22கர்ணத்தம் 23சின்னவடவாடி 24எருமனூர் 25ஆலிச்சிகுடி 26..... 27மணவாளநல்லூர் 28vrmஏகனாயகர் 29.பாலக்கொல்லை 30பூதாமூர்-அக்னி 31இருளக்குறிச்சி 32மோகாம்பரிகுப்பம் 33வயலூர்குபேரலிங்கம் 34வயலூர்-மாரி 35பெரியகண்டியான்குப்பம் 36vrmகுமாரதேவர்மடம் 37vrmபட்டீஸ்வரர் 38கோ.மாவிடந்தல் 39காவனூர் 40.ஆயியார்மடம்  
 
41.மங்கலம்பேட்டை-மாரி  பெரம்பலூர்  கோவிலூர் வேட்டகுடி 

வேப்பூர்வட்டம்

1.ரெட்டாகுறிச்சி 2.அடரி 3.ஓரங்கூர் 4.சிறுப்பாக்கம் 5.மங்களூர் 6.மலையனூர் 7.s.நறையூர் 8.சேப்பாக்கம் 9.நல்லூர் 10.காட்டுமயிலூர் 11.தே.புடையூர் 12.வலசை 13.பிஞ்சனூர் 14.வேப்பூர் 15.சேப்பாக்கம் –ஞானகூத்தர் 16.சாத்தியம் 17கோ.கொத்தனுர் 18.திருப்பயர் 19.மேலக்குறிச்சி 20தச்சூர் 21. ம.புடையூர் 

ஸ்ரீமுஷ்ணம் வட்டம் 

1.பாளையம்கோட்டை 2.குணமங்கலம் 3.புடையூர் 4.திருமுட்டம்  5.தே.பவழங்குடி  6.முடிகண்டநல்லூர் 7.வட்டத்தூர் 8.மழவராயநல்லூர் 9.கூடலையாத்தூர்


 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, February 27, 2025

சதுரங்க விளையாட்டில் நல்ல தேர்ச்சி கிடைக்க உதவும் சிவன் கோவில்...

அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் கோயில், பூவனூர்-613803,  திருவாரூர் மாவட்டம். 
*மூலவர்:
சதுரங்க வல்லபநாதர், சதுரங்க வல்லபேசுவரர், புஷ்பவன நாதர். 

*தாயார்:
கற்பகவல்லி,
ராஜ ராஜேஸ்வரி. 

*தல விருட்சம்:
பலா மரம்

*தீர்த்தம்:
க்ஷீரபுஷ்கரிணி.                        

* திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் பெற்றதலம்.  

*இத்தலத்தில் சுகப்பிரம்மரிசி மலர்வனம் வைத்து வழிபட்டார்.     

*நறுமணம் வீசும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் வனமாக இந்த ஊர் இருந்ததால் இதற்கு ‘புஷ்பவனம்’ என்ற பெயர் ஏற்பட்டு பிற்காலத்தில் அது பூவனூர் ஆனது.      இக்கோயில் உற்சவருக்கு புஷ்பவனேஸ்வரர் என்பது திருநாமம். 
*சதுரங்கம் இந்திய தேசத்தில் இருந்து தோன்றிய விளையாட்டு என்பது உலகறிந்த உண்மை. ஆனால் அதன் பூர்விகம் தமிழகம் என்கிறது நம் ஆன்மிகம். அதற்கு ஆதாரமாகத் திகழ்கிறது பூவனூர் திருத்தலம். 

*வசுசேனன் என்னும் மன்னனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. மன்னனும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள்.   அன்னை பார்வதி தேவியார், "உங்களை அனுதினமும்  பூஜிக்கும் பக்தர்களுக்கு   குழந்தை பாக்கியம் அருளக்கூடாதா?" என்று ஈசனிடம் கேட்டார். அதற்குச் சிவபெருமான், "இந்த ஜன்மத்தில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது விதி. அதனால், நீ பூலோகத்தில் பிறந்து, அவர்களுடைய குழந்தையாக வளர்வாயாக. உரிய நேரத்தில் யாம் வந்து உம்மைத் திருமணம் செய்துகொள்வோம்!" என்று அருள் வழங்கினார். 
ஒரு நாள் வசுசேனரும் காந்திமதியும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது, தாமரை மலர் மேல் ஒரு சங்கைக் கண்டெடுத்தார்கள். அவர்கள் கையில் எடுத்ததும் அது அழகிய பெண் குழந்தையாக மாறியது.  ‘இறைவனே அனுப்பிய குழந்தை’ என்றுணர்ந்து அதற்கு ‘ராஜராஜேஸ்வரி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். 

சக்தியே குழந்தை வடிவாக பூமியில் இருப்பதால், குழந்தையை கவனமாக வளர்ப்பதற்கென, சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டியையும் பூமிக்கு அனுப்பினார் இறைவன். குழந்தையின் வளர்ப்புத் தாயாக உருவெடுத்து வந்த சாமுண்டீஸ்வரி, ஆய கலைகள் அனைத்தையும் குழந்தை ராஜராஜேஸ்வரிக்குக் கற்றுக்கொடுத்தாள். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த இளவரசி, குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னிகரற்று விளங்கினாள். 

அவள் திருமண வயதை எட்டியபோது, "என் மகளை சதுரங்க விளையாட்டில் யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே அவளை மணம் முடித்துத் தருவேன்" என்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார் மன்னர். அனால் யாராலும் ராஜராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை. இதனால் கவலையுற்ற மன்னர், ‘யாருமே அவளை வெல்லமுடியவில்லையே! தம் மகளுக்குத் திருமணமே முடியாமல் போய்விடுமோ?’ என்று சஞ்சலமடைந்தார். ‘இனி சிவபெருமானிடமே முறையிடுவோம்’ என்று எண்ணியவராக, குடும்பத்தோடு  சிவாலயங்களை தரிசிக்க தல யாத்திரை கிளம்பினார். பல சிவாலயங்களைத் தரிசித்த பின்னர் திருபூவனூர் வந்தனர். புஷ்பவன நாதரை தரிசித்து,  குடும்பத்துடன் அந்த ஊரிலேயே தங்கினார் மன்னர். 

மறுநாள் காலையில், வயோதிகர் ஒருவர் மன்னரைச் சந்தித்து, ‘‘என்னுடன் உங்கள் மகளால் சதுரங்கம் ஆடமுடியுமா?’’ என்று கேட்டார். அரசன் சம்மதிக்க, ஆட்டம் தொடங்கியது. அதுவரை சதுரங்கத்தில் தோல்வியே கண்டிராத ராஜராஜேஸ்வரி, அந்த முதியவரிடம் தோற்றுவிட்டாள்.
"இப்படி வயதில் முதிர்ந்த ஒருவருக்கு தன் இளம் மகளை எப்படித் திருமணம் செய்து கொடுப்பது?" என்று மன்னருக்கு பெருங்கவலை ஏற்பட்டது. மீண்டும் அவர் சிவனாரைத் தியானிக்க, அங்கே முதியவர் மறைந்து சாட்சாத் சிவபெருமானே தோன்றினார். 

சதுரங்க ஆட்டத்தில் வென்று, ராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. 

*இங்கு வந்து சதுரங்க வல்லப நாதரை வேண்டிக்கொண்டால் சதுரங்க விளையாட்டில் நல்ல தேர்ச்சி கிடைக்கும் என்பது நம்பிக்கை.         

*இரு அம்மன் சன்னதிகள்-
கோயிலின் இடது புறத்தில் "ராஜராஜேஸ்வரி அம்மன்" சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. அந்த சன்னதியை ஒட்டி அடுத்ததாக "கற்பகவல்லி அம்மன்" சன்னதி உள்ளது.  இரு சன்னதிகளும் தனித்தனியாக கருவறை, விமானம் ஆகியவற்றோடு அமைந்துள்ளன.      

*இங்குள்ள வடக்கு நோக்கிய சாமுண்டீசுவரி சன்னதி சிறப்பானதாகக் கருதப்படுகிறது.    இச்சன்னதி, முன் மண்டபம், கருவறை விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. இங்கு கோயில் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி, மிகவும் சக்தி வாய்ந்தவள்.  சப்தமாதாக்களுள் ஒருவராக இருக்கும் சாமுண்டி, இங்கே தனிச் சந்நிதியில் வீற்றிருப்பது சிறப்பு. மைசூருக்கு அடுத்தபடியாக, சாமுண்டீஸ்வரிக்கென தனிச் சன்னதி அமைந்திருப்பது பூவனூரில் மட்டும்தான்.  

*ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் இருக்கும் ஒரு வைத்தியர், க்ஷீர புஷ்கரணியில் நீராடிவிட்டு வரும் எலிக்கடி மற்றும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மந்திரிக்கப்பட்ட ஒரு மூலிகை வேரைக் கையில் கட்டிவிடுகிறார்.   அவர்கள் சாமுண்டிக்கு அர்ச்சனை செய்தபின் வைத்தியர் கொடுக்கும் மந்திரித்த மிளகை வாங்கி சாப்பிடுவதன்  மூலம் அவர்களுடைய உடலில் இருக்கும் விஷம் முழுவதுமாக குணமாகிறது.         

*கும்பகோணத்திலிருந்தும் திருவாரூரிலிருந்தும் பூவனூருக்குச் செல்லலாம். மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில், மன்னார்குடியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் நீடாமங்கலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம் .                            

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சிவலிங்கங்கள்!!!

அற்புதமான சிவலிங்கங்கள்--- நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சிவலிங்கங்கள்!!!
உலகெங்கிலும் கணக்கில் அடங்காத சிவலிங்கங்கள் உள்ளன ஞான பூமியான பாரதத் திருநாட்டிலும் இலட்சக்  கணக்கில்   சிவாலயங்கள் உள்ளன. சிவப்பரம்பொருளின் அன்பர்கள் அவற்றின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளார்கள். உலகில் சில சிவலிங்கங்கள் வரலாற்றின் காரணமாக பிரபலமாக உள்ளன, மேலும் சில அவற்றுடன் தொடர்புடைய அற்புதங்கள் காரணமாக பிரபலமாக உள்ளன.   பல  சிவலிங்கங்கள் அற்புதத்துடன் சிறப்பு பெற்றுள்ளன.அந்த வகையில் நம் பாரதத் திருநாட்டில் நாள்தோறும் வளர்ந்து வரும் சிவலிங்கங்கள் ஐந்தினைப் பற்றி இப்பதிவில் காண்போம். ஒவ்வொரு வருடமும் அவைகள்  அதிசயமாக வளர்ந்து வருவதால், இந்த சிவலிங்கங்கள் சிறப்புப் பெற்றது. 

மத்திய  பிரதேஷ், கஜூராஹோவில் உள்ள மதங்கேஸ்வர் திருக்கோயிலில் உள்ள '' மதங்கேஸ்வர் '' ஆண்டுதோறும் வளர்ந்து வரும் சிவலிங்கமாகும்.எட்டடி நான்கங்குலம் உயரமும் மூன்றடி எட்டங்குலம் விட்டமும் உடைய சிவலிங்கம் இது.அயோத்தி இராமன் இங்குவந்து  மதங்கேஸ்வரரை வணங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.இச்சிவலிங்கம்  மிருத்துஞ்சய   மஹாதேவ் என்றும் அழைக்கப்படுகிறது.கஜூராஹோவில் உள்ள மிக முக்கியமான சிவாலயம் இது.உள்ளூர்   மக்கள் ,ஒவ்வொரு ஆண்டும் எள் அளவு இச்சிவலிங்கம் வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள். 


சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரிலிருந்து சுமார் ௯௦ [90] கி.மீ. தூரத்தில் காரியாபந்த் என்ற மாவட்டம் உள்ளது. அங்குள்ள மரோடா என்ற கிராம பகுதியில் உள்ள காட்டில் பூதேஸ்வர் மகாதேவ் என்னும் சிவலிங்கம் அமைந்துள்ளது. உலக அளவில் பெரிய அளவுள்ள சுயம்பு சிவலிங்கமாக இது சொல்லப்படுகிறது.

உலக அளவில் பிரபலமாகியுள்ள இந்த சிவலிங்கம் அதன் வளரும் சக்திக்காக அனைவராலும் பயபக்தியுடன் வணங்கப்படுகிறது. சுற்றுப்புற மக்களிடையே இந்த சிவலிங்கம் ‘பாகுரா மகாதேவ்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து வழிபட்டு செல்வதாக கோவில் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்த சிவலிங்கம் குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி அடைகிறது என்பது ஒரு அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது, உயரம் மற்றும் அகலம் ஆகிய இரண்டு பரிமாணங்களில் அதன் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி அதன் உயரம் ௮௫ [ 85 ] அடியாகவும், சுற்றளவு ௧௦௫  [ 105 ] அடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.[Size - 85 feet high and 105 feet circular]

இந்த சிவலிங்கத்தின் அளவானது ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய மகாசிவராத்திரி அன்று வருவாய்த் துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்படுவதாக கோவிலில் பூஜை செய்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ௬ [6] அங்குலம் முதல் ௮  [8]அங்குலம் வரையிலும் அந்த சிவலிங்கம் வளர்ச்சி பெற்று வருவது அறியப்பட்டுள்ளது என்று அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், சுற்றிலுமுள்ள ௧௭  கிராமத்தை சேர்ந்தவர்கள் ‘மக்கள் சபை’ அமைத்து கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள்.

பூதேஸ்வர் மகாதேவ் சிவலிங்கத்தின் அளவு முதன் முதலில் ௧௯௫௨[1952] ஆம்  ஆண்டு முதல் அளவிடப்பட்டு வருகிறது. அன்று முதல் இன்று வரை அதன் உயரமும், அகலமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கல்லால் தாமாக உருவான சுயம்பு சிவலிங்கம் ஒவ்வொரு வருடமும் எவ்வாறு வளர்கிறது என்பதற்கான விடை அறியப்படாமல் உள்ளது.

௩.மருதேஸ்வர் மஹாதேவ், சாஹிரா ,பஞ்சமஹால் ,குஜராத் .==[Mardeshwar Mahadev Mandir, Shahera, Panchmahal.GUJARAT]

குஜராத்,பஞ்சமஹால் மாவட்டம் ,கோத்ரா சாஹிராவில் அமைந்துள்ளது மருதேஸ்வர் மஹாதேவ் திருக்கோயில்.சத்யயுகம் என்னும் கிரேதா யுகத்தில் தோன்றிய இந்த சுயம்பு இலிங்கம்,வளர்ந்து விதானத்தைத் தொடும்போது மகாபிரளயம் வந்து அனைத்தும் அழியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.ஆண்டுக்கு அரிசியளவு வளர்கிறதாம்!சிவலிங்கத்தின் தோற்றம் அதன் பழமையை உணர்த்துகிறது.அதுமட்டுமன்று;கங்கை சிவலிங்கத்தின் உச்சியிலிருந்து பிரவாகம் செய்வதாகவும் நம்புகிறார்கள்;அதற்குச் சான்றாக,சிவலிங்கத்தின் உச்சியிலிருந்து நீரானது சதா ஊறிக்கொண்டிருக்கிறது.

[ இதனைக் குறிப்பிடும்பொழுது நமது திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் அடியேன் நினைவுக்கு வருகிறார் .பாறைகளால் அமைந்த மலையின் உச்சியில் அமைந்துள்ள கோயில் கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் திருவடியில் சதா நீரூறிக்கொண்டே உள்ளது!அதைத்தான் வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.மருதேஸ்வர் மஹாதேவ் சிவலிங்கத்தில் திருமுடியில் தீர்த்தம் ;திருச்செங்கோட்டில் திருவடியில் தீர்த்தம்;என்னே இறைவனின் கருணை!]

இந்த இடத்தில்  பாரதத் திருநாட்டின்  காலமுறைப்பற்றிய குறிப்பைப் பார்ப்போம்.

யுகம் என்பது நமது சனாதன தர்மத்தின் படி  கால கணிப்பு முறையில் காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்று. யுகங்கள்  நான்கு.கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்;திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்;துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
கலியுகம் - 432,000 வருடங்கள் [ கலியுகம்  கி மு  3102  இல் தொடங்கியதாக நம்பப்படுகிறது.  இப்பொழுது   கலி     5120   ]
இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம். 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம். 14 மன்வந்திரங்கைளக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.தற்போது நடந்து கொண்டிருப்பது ஸ்வேத வராக கல்பம் ஆகும்.

௪.திலபந்தேஸ்வர்  மஹாதேவ்  மந்திர் ,வாரணாசி,உத்தரப்பிரதேஷ்.===[Shri Tilbhandeshwar Mahadev Mandir , also known as Tilbhandeshwar Mahadev Mandir and Tilbhandeshwar Mandir, is one of the oldest and most famous temples in the holy city of Varanasi. This temple has great religious importance in Hinduism and is dedicated to the Lord Shiva.]

காசிமாநகரம்,பாரத மணித்திருநாட்டின் புண்ணிய இடங்களிலே தலைமைப் பீடம்.விஸ்வநாதர் திருக்கோயில் மட்டுமன்று எண்ணற்ற சிவாலயங்களைக் கொண்டுள்ள புனித இடம்.காசியில் பாண்டே  ஹவேலி என்னும் இடத்தில் அமைந்துள்ள பாபா தில்பந்தேஸ்வரர் திருக்கோயில் சிவலிங்கம் சுயம்பு இலிங்கமாகும்..சத்யயுகம் என்னும் கிரேதா யுகத்தில் தோன்றிய இந்த சுயம்பு இலிங்கம்,நாளுக்கு நாள் எள் அளவு வளர்ந்துகொண்டே வருகிறது.ஆண்டுதோறும் மகரசங்கராந்தியன்று இதனைக் கண்கூடாகக் காணலாம் என்கிறார்கள் .

௫. பௌரிவாலா ஷிவ்  மந்திர், நாகன்,ஹிமாச்சல் பிரதேஷ்.==[Shiv Mandir Pauri Wala- Doosri Swarg Ki Seedhi
-Made by Ravan (Nahan, Distt Sirmaur, Himachal Pradesh)]

 பௌரிவாலா ஷிவ்  மந்திர்,இராவணனின் வரலாற்றோடு சம்பந்தப்பட்டுள்ளது.இராவணன் சிவப்பரம்பொருளிடம் என்றும் இறவா சிரஞ்சீவி பதவியைக் கேட்டானாம்.சிவப்பரம்பொருள்,ஒரு நாளுக்குள் ஐந்து பௌரிகளை [படித்துறைகளை]அமைக்க வேண்டும் அப்படி அமைத்தால் சிரஞ்சீவிப் பதவி கிடைக்கும் என்று கூற,இராவணன் முதலில் அமைத்தது ஹரித்துவாரில் உள்ள ஹர் கி பௌரி.[ ஹர் கி பௌரி [ Har ki Pauri] = சிவபெருமானின் பாதங்கள்].இரண்டாவதாக இந்த தலத்து பௌரிவாலா;மூன்றாவதாக சித்தேஸ்வர்  மஹாதேவ் [Chudeshwar Mahadev];நான்காவதாக  கின்னர்  கைலாஷ் [Kinnar Kailash]; அதன்பிறகு உறங்கிவிட்டானாம் .விழித்தெழுந்து பார்த்தபொழுது விடிந்துவிட்டதாம் .சிவப்பரம்பொருள் முன்பு நாணி நின்றானாம்.இராவணன் வணங்கிய இந்த சுயம்பு   இலிங்கம் இன்று நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள்;ஆண்டுக்கு பார்லி அரிசி அளவு வளர்கிறதாம் !

மற்றுமொரு  வரலாற்றையும் இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்;மகரிஷி மார்கண்டேயரை யமதர்மனிடமிருந்து காப்பாற்றி,சிவப்பரம்பொருள்சி ரஞ்சீவியாக்கியது இந்த தலத்தில் தான் என்று கூறுகிறார்கள்.மகரிஷி மார்கண்டேயர் மகா மிருதுஞ்சய மந்திரத்தைக் கூறியதும் இங்குதான் என்றும் சிவப்பரம்பொருளின் திருமுகம் உண்மையான பக்தர்களுக்குத்  தெளிவாகத் தெரியும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

தமிழ்நாடு இராகு கேது தோஷ நிவர்த்தி ஸ்தலங்கள்.

தமிழ்நாட்டின் பிரபலமான இராகு கேது தோஷ நிவர்த்தி ஸ்தலங்கள் பற்றிய பதிவுகள் :*
• காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்குப் பின்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாஹாளேஸ்வரர் திருக்கோயிலில் இராகுவும் கேதுவும் மனித உருவில் காட்சிதருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் இராகு காலத்தில் இத்தலத்தில் தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன.

• புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பேரையூர் எனும் ஊரில் மூலவர் நாகநாதர் அம்பாள் பிரகதாம்பாள் எழுந்தருளியுள்ளார்கள். பேரையூர் சென்று அருள்மிகு நாகநாத சுவாமியை தரிசித்தால் இரண்டு கிரகங்களின் தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.

• சென்னை திருப்பதி மார்க்கத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தி. இது புகழ்பெற்ற இராகு கேது தலமாகும். இத்தலத்தில் இராகு கேது பரிகார பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

• மயிலாடுதுறை திருவாரூர் மார்க்கத்தில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கில் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பாம்புரம். இங்கு வண்டார்பூங்குழலி சமேத பாம்புரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இராகுவும் கேதுவும் ஓருடலாக அமைந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்ட காரணத்தினால் இத்தலம் இராகு கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது.

• திருவாரூர் நாகை மார்க்கத்தில் கீழ்வேளுருக்கு 3 கிலோமீட்டர் தொலைவில் திருக்கண்ணங்குடி என்ற தலத்தில் ஸ்ரீகாளத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இது ஒரு இராகு கேது பரிகாரத் தலமாகும்.

• திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த மன்னார்குடிக்கு வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாமணி தலத்தில் சுயம்புலிங்கமாக அருள்கிறார் நாகநாதர். இறைவி அமிர்தநாயகி. மனிதமுகம் பாம்பு உடலுடன் ஆதிசேஷனுக்குத் தனி சன்னிதி உள்ளது. இத்தலத்தில் ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நாகதோஷம், இராகு கேது தோஷம் அகலும் என்பது ஐதீகம்.

• கும்பகோணம் நகரத்தில் மையப்பகுதியில் நாகேஸ்வரம் சன்னிதி தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரர் திருக்கோயில். இத்தலம் இராகு தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இத்தலத்து நாகேஸ்வர சுவாமியை வழிபட்டால் இராகு தோஷம் நீங்கப்பெறலாம்.

• நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்களாச்சேரி என்ற ஊரில் அமைந்துள்ளது நாகநாத சுவாமி திருக்கோயில். இத்தலம் திருக்கடையூருக்கு தென்மேற்கில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக நாகநாதர் திகழ்கிறார்.

• நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது அருள்மிகு நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் ஆலயம். அஷ்டநாகங்களில் ஒருவரான ஆதிசேஷன் மஹாசிவராத்திரி அன்று இத்தலத்தின் ஈசனை வழிபட்டு பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. நாகதோஷங்கள் அகல இத்தலத்தில் வழிபாடு நடத்தப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, February 25, 2025

மஹா சிவராத்திரியும் வில்வ இலை அர்ச்சனையும்..

ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் வில்வ இலை அர்ச்சனை பற்றிய பகிர்வுகள் :
உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது தான் வில்வ மரம். இதுவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும். இவ்விருட்சத்தைப் பூஜிப்பவர்கள் சகல நன்மைகளும் பெறுவார்கள். வில்வத்தின் பெருமையை பற்றி சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

வில்வ இலைகள் சிவனின் திரிசூல வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும், திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யுமாறு அருளினார்.

அதன்படி வேதங்களும் வில்வமரங்கள் அடியில் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வாரண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.

இவையல்லாமல் ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும். தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனை பூஜித்தால், நம்முடைய ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு
சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய நாட்களில் பறிக்கக் கூடாது. மேலும் இந்நாட்களில் பூஜைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைத்து கொள்ள வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்திருந்து பூஜை செய்யலாம். உலர்ந்த வில்வம் மற்றும் பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யலாம். சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

நாம் வீட்டில் வில்வமரம் வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

108 சிவ தலங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும். வீட்டில் வில்வமரம் வைத்து வளர்த்து வழிபடுபவர்களுக்கு ஒரு போதும் நரகமில்லை. மேலும் எமபயம் எப்போதும் வாராது. ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஷ்பங்களால் இறைவனை பூஜை செய்வதற்கு சமமானதாகும். வில்வ மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

சிவனின் நட்சத்திரம் திருவாதிரை. அது ஒரு எரி நட்சத்திரமாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் தணிக்க நம் முன்னோர்கள் குளிர்ச்சி நிறைந்த வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்.  வில்வ இலையை பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக நினைத்துக் கொண்டு கீழ்காணும் இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

“நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே

ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே

ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே

அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே”

*பொருள்:*

போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலான சிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும். இந்த அர்ச்சனை ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்குமாம்.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில்
=====================================

🍁 திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 48வது சிவத்தலமாகும். மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மகாசிவராத்திரி விழா மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

🌿 தலச் சிறப்பு :

🍁 சோழர் காலப் பாணியில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலின் முகப்பில் வவ்வாலத்தி மண்டபம் உள்ளது. அதனுள் நுழைந்தால் மிகவும் விசாலமான பிரகாரச் சுற்று, உயர்ந்து நீண்ட மதில் சுவர், அதனையடுத்து மிகச் சிறிய ஆனால் கலையழகுடன் கூடிய கோபுரம் உள்ளது.

🍁 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மகாசிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு காரணமான தலம். இத்தலத்தில் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

🍁 நந்திகேசுவரர் எதிர்புறமாக திரும்பி இருக்கிறது. நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.

🌿 தல பெருமை :

🍁 முன்பு தவநிதி என்ற முனிவர் திருவைகாவூர் ஆலயத்தில் தங்கி வழிபாடுகளை நடத்திக் கொண்டிருந்தார். ஆலயத்தை சுற்றி பெரும் காடாக இருந்தது. அந்த காட்டில் ஒரு வேடன் குடும்பம், வசித்து வந்தார்கள். அவன் உணவுக்காக வேட்டைக்கு சென்றபோது இருட்டும் நேரத்தில் ஒரு மானைக் கண்டான். அதைத் துரத்தினான். மான் பயந்து ஓடி ஆலயத்திற்குள் அமர்ந்திருந்த தவநிதி முனிவரை தஞ்சமடைந்தது. முனிவர் மானுக்கு அபயமளித்தார். அதனால் கோபம் கொண்ட வேடன் முனிவரைத் தாக்க முயன்றான். முனிவர் இறைவனை வேண்ட இறைவன் புலி உருக்கொண்டு வேடனைத் துரத்த பயம் கொண்ட வேடன் ஆலய பிரகாரத்தில் இருந்த வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் வேடன் இறங்கட்டும் என்று மரத்தடியிலேயே காத்திருந்தது. புலி போகட்டும் என்று காத்திருந்த வேடனுக்கு பசியும், பயமும் வாட்ட, புலிக்கு அஞ்சிய வேடன் தான் ஏறி இருந்த வில்வமரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக பிய்த்து கீழே போட அது புலி உருவில் இருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தது. 

🍁 விதிப்படி அன்று இரவு வேடனின் ஆயுள் முடியவேண்டும். எனவே எமன் வேடனின் உயிரைப் பறிக்க ஆலயத்தினுள் நுழைந்தார். அன்றைய தினம் மகாசிவராத்திரி நாள். உண்ணாமல், உறங்காமல் இரவு நான்கு காலமும் இருந்த வேடன் அறியாமல் அவன் கிள்ளிப்போட்ட வில்வ இலைகளால் அவனுக்கு மகா சிவபூஜை செய்த பலன் கிடைத்தது. அதனால் வேடனை சிவபெருமான் தன் அடியாராக ஏற்றுக்கொண்டார். எனவே எமனை தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோலுடன் தோன்றி வெளியே விரட்டினார். அதன்பின் விழித்துக்கொண்ட நந்தி தேவர் வாசற்படி நோக்கி ஓடி வந்த எமனை தன் சுவாசத்தால் கட்டி நிறுத்திவிட்டார். சிவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக எமன் சிவனிடம் மன்னிப்பு வேண்டினார். இறைவனும் எமனை மன்னித்தருளினார். அதன்பின் எமன் தன் பெயரில் குளம் அமைத்து அதில் மூழ்கி இறைவனை வழிபட்டு சென்றார்.

🌿 பிரார்த்தனை :

🍁 குழந்தை இல்லாத தம்பதிகள் இத்தல இறைவனை வேண்டி வணங்குவதால் மழலைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

🍁 கல்யாண வரம் வேண்டுவோர், தொழில் விருத்தியடைய, வேலை கிடைக்க, உத்யோகத்தில் உயர்வு பெற இத்தலத்து இறைவனை வேண்டினால் நிச்சயம் நிறைவேற்றுவார். 

மஹா சிவராத்திரி நலமுடன் வாழ நான்கு கால சிவ பூஜை சிறப்புகள்...

 மஹா சிவராத்திரி நலமுடன் வாழ நான்கு கால சிவ பூஜை சிறப்புகள்... 
முதல் காலம்
**************
மு தல் காலத்தில் சிவபெருமானுக்கு அனைத்து விதமான திரவியங்களாலும் அபிஷேகம் செய்யவேண்டும். பொதுவாக, சிவராத்திரி புண்ணிய தினத்தன்று நான்குகால பூஜை வேளையிலும், அனைத்துவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யவேண்டும் என்பது சாஸ்திரம். 

ஆனாலும், ஒவ்வொரு காலத்துக்கும் ஓர் அபிஷேகம் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் முதல் காலத்தில் விசேஷமான திரவியமாக சொல்லப்பட்டு இருப்பது பஞ்சகவ்யம். 

இந்த பஞ்சகவ்யத்தை தயாரிப்பது பற்றியும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
‘பஞ்சகவ்யம்’ என்பது பசுவிலிருந்து பெறப்பட்ட ஐந்து பொருட்களைக் குறிப்பது ஆகும். பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்தையும் முறைப்படி ஒவ்வொரு படி எடுத்துக்கொள்ளவும். பிறகு நடுவில் பசுவின் பாலையும், அதன் கிழக்கே தயிரையும், தெற்கே நெய்யையும், வடக்கே கோமியத்தையும், மேற்கே பசுவின் சாணத்தையும் வைத்து, முறைப்படி நடுவே ஈசானன், கிழக்கே தத்புருஷன், தெற்கே அகோரன், வடக்கே வாமதேவன், மேற்கே ஸத்யோஜாதன் என்பதாக இறைவனின் ஐந்து நாமாக்களையும் கூறி பூஜிக்கவேண்டும். 

பின்னர் பசுவின் சாணத்தை எடுத்து, கோமியத்தில் இட வேண்டும். அடுத்து இந்தக் கலவையை பசுநெய்யில் சேர்க்கவேண்டும். பிறகு, இந்த மூன்றும் சேர்ந்த கலவையை பசுந் தயிருடனும் கலந்தபிறகு, நிறைவாக அனைத்தையும் பசும்பாலில் கலந்துகொள்ளவேண்டும். இப்படி பஞ்சகவ்யம் தயாரிக்கும்போது, ஒவ்வொன்றுக்கும் உரிய மந்திரம் சொல்லி கலக்கவேண்டும். தெரியாதவர்கள், ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி பஞ்சகவ்யம் தயார் செய்யலாம்.

பஞ்சகவ்யம் தயாரானதும், அதில் சிவபெருமானை ஆவாகனம் செய்து, அந்த பொருளை பூஜிக்கப்பட்ட ஒரு விசேஷத் திரவியமாகக் கொள்ள வேண்டும். இந்த பஞ்சகவ்யம் அபிஷேக திரவியங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.
இந்த பஞ்சகவ்யத்தை நாம் வெவ்வேறு வண்ண பசுக்களிடமிருந்து பெற வேண்டும். பால் சிவப்புநிற பசுவிலிருந்தும், தயிரானது வெண்மை நிற பசுவிலிருந்தும், நெய்யானது சாம்பல் நிற பசுவிலிருந்தும், கோமியம் கறுப்பு நிற பசுவிலிருந்தும், பசுஞ்சாணம் பலவர்ணமுடைய பசுவிலிருந்தும் பெறப்பட வேண்டும். ஒருவேளை அப்படி கிடைக்காவிடில், அனைத்தையும் கறுப்பு வண்ண பசுமாட்டிலிருந்து இவற்றைப் பெறலாம்.

முதல் கால அபிஷேகம் முடிந்ததும் ஸ்வாமியின் திருமேனியில் சந்தனம், தேன் கலந்து தடவவேண்டும்.
முதல் காலத்துக்கு உரிய விசேஷ அபிஷேகப் பொருளாக பஞ்சகவ்யம் திகழ்வதுபோன்று, விசேஷ பூக்கள், வஸ்திரம், நைவேத்தியம் முதலானவை குறித்தும் ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

அவை: வஸ்திரம்: சிவப்பு வண்ண பட்டு
மாலை: வில்வம்
தூபம்: சந்தனக் கட்டைளைத் தூள் செய்து தூபம் போடவேண்டும்.
தீபம்: விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.
நைவேத்தியம்: பருப்பும் நெய்யும் சேர்த்த அன்னம்.
பாராயணம்: ரிக்வேதம் மற்றும் சிவபுராணம்
--------------------------------------------------------------------.
இரண்டாவது காலம்
***********************
இ ரண்டாவது யாமத்தில் அனைத்துவித திரவியங்களால் அபிஷேகம் செய்வதுடன், விசேஷ திரவியமாக பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யவேண்டும்.
இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ரச பஞ்சாமிர்தம், மற்றொன்று பழ பஞ்சாமிர்தம். நாம் பார்க்கின்ற இந்த சிவராத்திரியிலே இரண்டாவது காலத்திலே சொல்லப்படுகிற பஞ்சாமிர்தம் ரச பஞ்சாமிர்தம். ரசம் என்றால் திரவநிலை.
சிவப்பு பசுவிலிருந்து பெறப்பட்ட பாலை நடுவில் வைக்கவேண்டும். 

பின்னர், வெள்ளை பசுவின் பாலில் உருவான தயிரை கிழக்கிலும், சாம்பல் பசுவின் பாலில் பெறப்பட்ட நெய்யை தெற்கிலும், அச்சுவெல்லம் அல்லது தூள்சர்க்கரையை வடக்கிலும், தேனை மேற்கிலும் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு முன்னர் சொன்னதுபோன்று சிவமந்திரம் அல்லது சிவநாமம் சொல்லி பூஜித்து அவற்றை கலந்துகொள்ளவேண்டும். இந்தக் கலவைக்கே ரச பஞ்சாமிர்தம் என்று பெயர். இயலாவிடின், ஐவகை பழங்களைக் கொண்டு பழ பஞ்சாமிர்தத்தால் அபிஷேகித்தும் வழிபடலாம்.

இரண்டாம் கால அபிஷேகம் முடிந்ததும், பச்சைக் கற்பூரம் அரைத்து சுவாமியின் திருமேனியில் பூசவேண்டும்.
வஸ்திரம்: மஞ்சள் வண்ண வஸ்திரம்.
மாலை: குருந்த மர இலைகளால் ஆன மாலை. துளசியால் அர்ச்சனை செய்யலாம்.
தூபம்: சாம்பிராணியும் குங்கிலியமும் கலந்து தூபம் இடவேண்டும்.

தீபம்: இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.
நைவேத்தியம்: பாயசம்.
பாராயணம்: யஜுர் வேத பாராயணமும் எட்டாம் திருமுறையில் கீர்த்தித் திருவகவலும் பாராயணம் செய்யவேண்டும்.
--------------------------------------------------------------------
மூன்றாம் காலம்
*******************
மூ ன்றாம் யாமத்தில் அதாவது காலத்தில், சிவபெருமானுக்கு அனைத்துவிதமான திரவியங்களுடன், விசேஷமாக தேனபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் முடிந்ததும், கஸ்தூரி சேர்த்த சந்தனத்தை ஸ்வாமிக்குப் பூசவேண்டும்.

வஸ்திரம்: வெள்ளை வஸ்திரம்.
மாலை: கிலுவை இலை மற்றும் விளா இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையும் ஜாதிமுல்லை மாலையும் மூன்றுதள வில்வத்தால் அர்ச்சிக்க வேண்டும்.
தூபம்: குங்கிலிக பூவினால் தூபம் போடவேண்டும்
தீபம்: நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
நைவேத்தியம்: மாதுளை, எள் அன்னம்.
பாராயணம்: சாம வேதம் பாராயணம் செய்வதுடன், எட்டாவது திருமுறையில் திருவண்டகப் பகுதி பாராயணம் செய்யவேண்டும்.
--------------------------------------------------------------------
நான்காம் காலம்
******************
நா ன்காம் கால பூஜையின்போது, கரும்புச்சாறு அபிஷேகம் செய்யவேண்டும். புனுகு, சந்தனம் சேர்த்துப் பூசவேண்டும்.
வஸ்திரம்: பச்சை அல்லது நீலவண்ண வஸ்திரம்.

மாலை: கருநொச்சியினால் அலங்காரம் செய்து, வெள்ளை நந்தியாவட்டையால் ஆன மாலையை அணிவிக்கவேண்டும். மேலும் நிறைய புஷ்பங்களால் அலங்கரிக்கவேண்டும்.
தூபம்: கற்பூரம் மற்றும் லவங்கப்பட்டையைப் பொடி செய்து தூபம் போடவேண்டும்.
தீபம்: நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

நைவேத்தியம்: வாழை முதலான அனைத்துவகைப் பழங்களும், சர்க்கரைப்பொங்கலும் படைக்கலாம்.
பாராயணம்: அதர்வண வேதம் பாராயணம் செய்வதுடன், எட்டாம் திருமுறையில் போற்றித் திருவகவல் பாராயணம் செய்யவேண்டும்.


ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

மஹா சிவராத்திரி விரதம் பற்றிய பதிவுகள்.

மஹா சிவராத்திரி விரதம் பற்றிய பதிவுகள்
நாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டு விரதம் இருப்பது நல்லது. அந்த வகையில் சிவராத்திரி தினத்தில் எப்படி விரதம் இருந்தால் சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். 

ஆண்களுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி, அம்பாளுக்கு 9 ராத்திரி நவராத்திரி. சிவராத்திரி தினத்தில் முழு விரதம் இருந்து வழிபடக் கூடிய உன்னதமான நாள் மஹாசிவராத்திரி அன்றைய தினம் நாம் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, பஞ்சாட்சரம் என சொல்லக்கூடிய ’ஓம் நமசிவாய’ எனும் நாமத்தை கூறி, நாம் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றோம் என்றால், சிவலிங்க பூஜை செய்ய வேண்டும்.

நித்திய பூஜை செய்பவர்கள் அதை செய்யலாம், சாதாரணமாக கடவுள் படங்கள் வைத்து வழிபடுபவர்கள் அந்த வழிபாட்டை செய்யலாம்.

காலையில் நாம் பூஜை அறையில் விளக்கேற்றி இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, ஒரு டம்ளர் பால் நைவேத்தியமாக வைத்து வழிபட்டு, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சிவன் பாடல்கள் என்னவெல்லாம் தெரியுமோ அதை எல்லாம் படிக்கலாம். அதோடு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்கலாம்.

அன்றைய தினம் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிடாமல் இருந்து இரவில் கண் விழிக்க வேண்டும்.

அப்படி முழு நாளும் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது, உடல்நல பிரச்னை உள்ளது, கர்ப்பிணிகள் பழத்தைச் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

உணவு எடுக்காமல் இருக்க முடியாது என்பவர்கள் முடிந்த வரை அன்றைய ஒருநாளாவது நாம் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், பழங்கள், அவல் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. தண்ணீர், பழச்சாறு அருந்தலாம்.

சிவ ராத்திரி தினத்தில் நாம் வீட்டில் பூஜை செய்வதோடு இரவில் வீட்டில் சிவலிங்கத்திற்கு நான்கு ஜாம பூஜை செய்து வழிபடலாம். அல்லது கோயிலுக்கு சென்று அங்கு சிவலிங்க செய்யப்படும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.

மஹா சிவராத்திரி தினத்தில் குறைந்தபட்சம் ஒரு வில்வ இலையாவது சிவனுக்கு நாம் அர்ச்சித்து வழிபடுவது நல்லது. இது முன் வினையையும், இந்த பிறப்பின் வினையையும் அறுக்கும் வல்லமை வாய்ந்தது. சிவனின் துதியும், சிவ ஆராதனையும் அனைத்து நன்மைகளையும் தடக் கூடியது.

சிவராத்திரி தினத்தில் இரவில் தான் மிகுந்த விஷேசம். மாலை நாம் நம் பூஜை அறையில் உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம். அப்படி இல்லாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.

அங்கு சிவனின் நாமத்தை சொல்லி வழிபடுவது அவசியம். குறைந்தபட்சம் அன்று இரவு 1 மணி வரையாவது நாம் கண் விழித்து சிவனை வழிபட வேண்டியது அவசியம்.

சிவராத்திரி அன்று அதிகாலை 4 மணிக்கு தான் கால பூஜைகள் நிறைவு பெறும். அதன் பின்னர் அங்கு கொடுக்கப்படும் பிரசாதத்தை நாம் வாங்கிக் கொண்டு நாம் நம் விரதத்தை நிறைவு செய்யலாம்.

அதுவரை கோயிலுக்கு வெளியில் சிலர் அன்னதானமாக கொடுக்கும் உணவை எடுத்துக்கொண்டால் உங்களின் விரதம் கலைந்துவிடும். அதனால் அதிகாலை 4 மணிக்கு கால பூஜை நிறைவு பெற்ற பின்னரே பிரசாதத்தை சாப்பிட வேண்டும். அல்லது வீட்டிற்கு வந்து ஏதேனும் ஒரு சாதத்தை செய்து அதை கோயிலுக்கு சென்று, அங்கு சிவனை தரிசித்து வரும் சிவ பக்தர்களுக்கு வழங்கலாம். நாமும் சாப்பிடலாம். இப்படி செய்ய சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

*செய்யக் கூடாத முக்கிய விஷயம்*

சிவ ராத்திரிக்கு மறுநாள் பொழுதிலும் நாம் உறங்கக் கூடாது. நாம் உணவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உறங்குவது தவறு. அன்று மாலை நாம் பூஜை அறையில் தீபமேற்றி வழிபட்டு, இரவு 8 மணிக்கு உறங்கலாம்.

சிவ ராத்திரி தினத்தில் கோயிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே கண் விழித்திருக்கத் திரைப்படம் பார்த்தல், விளையாடுவதாக இருந்தால், நாம் சிவராத்திரி விரதம் இருப்பதற்கு பதிலாக சும்மாவே இருந்துவிடலாம்.

*சிவராத்திரியில் படிக்க வேண்டியவை*

நாம் இரவில் வீட்டிலேயே இருக்க விரும்பினால், சிவலிங்கத்திற்கு நான்கு ஜாம பூஜை அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் செய்து வழிபாடு செய்து, தேவாரம், திருவாசகம், சிவ புராணம், பெரிய புராணம், உள்ளிட்ட சிவன் பாடல்கள் படிக்கலாம். எதுவுமே தெரியாது என்றால் நாம் ஓம் நமச்சிவாய, சிவாய நமஹ என்ற சிவ மந்திரத்தையாவது நாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

படித்தாலும் தூக்கம் வருகிறது என்றால், சிவாய நமஹ,ஓம் நமச்சிவாய என எழுதுங்கள்.

*மஹா சிவராத்திரி விரத பலன்கள்*

மேற்கூறியவாறு சிவராத்திரி விரதம் மேற்கொண்டு சிவனை வழிபட்டால், வாழ்வில் செல்வ, ஞானம், புகழ், நாம் எண்ணிய உயர்ந்த வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை, குழந்தைகளின் சிறப்பான வளர்ச்சி என அனைத்து வகையான செல்வங்களையும் நாம் பெறலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சிவராத்திரி சிவாலயம் வில்வனேஸ்வரர் திருக்கோவில் திருவைகாவூர்.

சிவராத்திரி சிவாலயம் வில்வனேஸ்வரர் திருக்கோவில் திருவைகாவூர்
அந்த தலம் கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்கு செல்லும் சாலையில் திருவைகாவூர் எனும் ஊரில் வில்வனேஸ்வரர் தலமாக விளங்குகின்றது

திருகாளகத்தி, திருசைலம், திருகோகர்ணம் வரிசையில் இந்த திருவைகாவூர் முக்கியமான தலம்
"கோழைமிட றாககவி கோளுமில   வாகஇசை கூடும்வகையால்    
ஏழையடி யாரவர்கள் யாவைசொன   சொல்மகிழும் ஈசனிடமாம்    
தாழையிள நீர்முதிய காய்கமுகின்   வீழநிரை தாறுசிதறி    
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல்   சேறுசெயும் வைகாவிலே"

என சம்பந்த பெருமாரும்

"தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
 தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
 வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
 முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்
 கயிலாய நாதனையே காண லாமே"

என அப்பர் பெருமானும் பாடிய பாடிய தேவார பாடல் தலம் இது.

இந்த ஆலய வரலாறு ம்கா தொன்மையானது

பிரளய காலம் எனும் கொடும்காலம் முடிந்து மீண்டும் உலகம் படைக்கபட தொடங்கும் போது திருமாலுக்கும் பிரம்மனுக்கும் வேதங்களுக்கும் ஒரு சந்தேகம் உண்டாயிற்று, அது மறுபடியும் ஊழிகாலம் வந்தால் நமது நிலை என்னாகும் என்பது

பிரம்மனுக்கு இந்த சந்தேகம் முதலில் வந்து அவன் இந்த இடத்தில் தவம் செய்ய தொடங்கினான், அவனை தொடர்ந்து திருமால் வந்தார் அப்படியே வேதங்களும் வந்தன‌
அவர்கள் நடுவில் தோன்றிய எம்பெருமான் வேதங்களுக்கு முதலில் ஒரு உறுதிமொழி கொடுத்தார் அதன்படி வில்வமரங்கள் எந்த காலத்திலும் எந்த ஊழியிலும் அழியாது என்பதால் அவை மீண்டும் மீண்டும் வரும் என்பதால் வேதங்களை வில்வமரங்களாக நிற்கும்படி உத்தரவு கொடுத்தார்

வேதங்கள் அங்கே வில்வமரமாக நின்று சிவனை வணங்கின, அந்த வனமே வில்வவனம் என்றாயிற்று

அந்த வில்வவனத்தில் பிரம்மனுக்கும் திருமாலுக்கும் சிவன் உறுதிமொழிகளை கொடுத்ததால் அவர்களும் சிவனை போற்றி நின்றார்கள்

இப்படி சிவனை வேதங்களும், திருமாலும் பிரம்மனும் வணங்கினார்கள், இன்னும் உத்தால முனிவரால் சபிக்கபட்ட சப்தகன்னியர் வணங்கி நலம் பெற்றார்கள்

வில்வவனத்தில் ஒரு வில்வ மரத்தடியில் அந்த சிவன் சுயம்புவாய் வீற்றிருந்தார், காலங்கள் கடந்தன தேவர்களும் இதர உலகத்தாரும் வந்து வணங்கி சென்றனர், ரிஷிகளும் வந்து அந்த வனத்தில் வில்வனேஸ்வரரை வணங்கி தவமிருந்தனர் 

அப்படி தவமிருந்தவர்களில் நவநிதி என்பவரும் ஒருவர், அவர் பெரும் தவம் இயற்றி கொண்டிருந்தார். அந்நேரம் அருகில் இருந்த காட்டில் நாளெல்லாம் வேட்டையாடியும் ஒன்றும் கிடைக்காத வேடன் அந்திபொழுதில் ஒரு மானை கண்டான், அதை விரட்டினான்

மான் இந்த வில்வவனத்துக்குள் வந்து முனிவரிடம் அடைக்கலாமனது, வேடனோ விரட்டி வந்தவன் மானை கண்டு வில்லை வளைத்தான்

அந்நேரம் கண்விழித்த முனிவர் மானை கண்டு இரக்கம் கொண்டு அதனை அருகில் அழைத்தார் மான் அஞ்சி நடுங்கி அவரிடம் ஒட்டி கொண்டது, அன்பான அவரிடம் சரணடைந்தது

வேடனோ முன்னேறி ஓடிவந்தான்

அதே நேரம் எமன் அவனை நோக்கி புன்னகைத்தான், காரணம் வேடனின் விதி அதிகாலை முடிவதாக இருந்தது, அவன் உயிரை பறித்து தன் கடமை செய்ய எமன் தயாரானான்

எல்லா மானுடரை போலவே இதை அறியாத வேடன் மானின் உயிர் பறிக்க முனிவர் முன் வந்து வாதிட்டான்

அக்காலத்தில் வேடுவர்க்கும் விதி இருந்தது, தவம் செய் முனிவர்கள் இருக்கும் இடத்துக்கு வரகூடாது அவர்கள் பராமரிப்பில் இருக்கும் விலங்குகளை தொட கூடாது என்பது பொது விதியாய் இருந்தது

முனிவர் அதை சொல்லி மானை காக்க முற்பட்டார் அவனோ இது ஓடிவந்த காட்டுமான் அவர் மான் அல்ல அது தனக்கு சொந்தம் என வாதிட்டான்

முனிவர் அதனை கொடுக்க மறுத்தார், அறம் மறந்து பசியிலும் வேட்டை வெறியிலும் இருந்த வேடனோ மானுக்காக அவரை கொல்லவும் துணிந்தான் மிரட்டினான்

முனிவர் கண்ணை மூடி சிவனை தியானித்தார்

அந்நேரம் ஒரு புலி உறுமிகொண்டு வந்தது, உருவிலும் வலுவிலும் மிக மிக பெரிதாக இருந்த புலியினை தன்னால் கொல்லமுடியாது என உணர்ந்த வேடன் தப்பி ஓடினான், புலி அவனை விரட்ட ஒரு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான்

புலிக்கு மரம் ஏற தெரியாது என்பதால் புலி மரத்தில் ஏறவில்லை மாறாக மரத்தடியில் படுத்து கொண்டது

வேடனுக்கோ கொடும் பசி பெரும் தளர்ச்சி , மரத்தின் மேல் இருந்து புலியினை நோக்கினான் அது அங்கே பழிக்காவல் கிடந்தது

ஒருவேளை உறங்கினால் கீழே விழலாம் அப்போது புலிக்கு உணவாக வேண்டும் என கருதியவன், தூக்கம் வரமால் இருக்க ஒவ்வொரு மர இலையாக பறித்து கீழே போட ஆரம்பித்தான்

இலைவிழும் மரத்தடியில் புலி படுக்காது என்பது அவனுக்கு தெரியும், அது அவ்வளவுக்கு மிக உணர்வான விலங்கு சிறு பொருளும் தன் மேல் விழ அது அனுமதிக்காது அதன் இயல்பு அப்படி

வேடன் அதனால் இலைகளை பறிந்த்து போட ஆரம்பித்தான், புலியோ அசரவில்லை, அவன் ஆச்சரியபட்டாலும் தூக்கம் வராமல் இருக்க அதை தொடர்ந்து செய்தான்

அது வில்வமரம் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை

அந்த இரவு முழுக்க அவன் இலையினை பறித்து கீழே வீசிகொண்டிருந்தான், அது மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாளாக இருந்தது

அவன் இரவு முழுக்க அப்படி வில்வ இலைகளை வீசினான், அதிகாலையில் அவன் விதிமுடியும் நேரம் எமன் அப்பக்கம் வந்தான்

ஆனால் தட்சனாமூர்த்தி வடிவில் சிவன் தோன்றினார் கையில் கம்புடன் அவனை விரட்டினார், நந்தியானவர் சீறி சென்று தன் கொம்பால் அவனை தூக்கி எறிந்தார்

எமன் அரண்டே போனான், தன் கடமையினை செய்யவந்த போது சிவன் தன்னை தடுப்பது சரியல்ல என வாதிட்டான்

அப்போதுதான் சிவன் உரைத்தார் "இவன் இரவெல்லாம் சிவராத்திரி வழிபாடு செய்ததால் அவன் கர்மா தீர்க்கபட்டு ஆயுள் அதிகரித்தாயிற்று இனி அவன் மேல் எமனுக்கு அதிகாரமில்லை" என உத்தரவிட்டார்

எமன் அந்த சிவனை பணிந்து ஒரு தீர்த்தம் உருவாக்கி கொடுத்தான் அதுவே "எம தீர்த்தம்" ஆயிற்று

நடந்ததை அறியாமல் மரத்தில் இருந்து அஞ்சியபடியே இறங்கிய வேடன் புலியினை தேடினான், அதை காணவில்லை ஆனால் அவன் பறித்துபோட்ட இலை குவிந்து கிடந்தது

ஒருவேளை புலி அதனுள் பதுங்கி இருக்கலாம் என் அஞ்சியவன் தன் கத்தியினை உருவியபடியே அந்த இலைகளை மெதுவாக ஒதுக்கினான்

உள்ளே சிவலிங்கம் இருந்தது, வேடனுக்கு கை கால் எல்லாம் ஆடிற்று அப்படியே கத்தியினை விட்டுவிட்டு கதறினான்

நவநிதி முனிவர் அவனுக்கு நடந்ததை எடுத்துரைத்தார்,  சிவராத்திரியின் பெருமையினை சிறப்பை எடுத்துரைத்தார், இரவெல்லாம் வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் கொடிய விதி மாறும் என போதித்தார்

அங்கே  கொடிய வேடன் சிவனால் ஆட்கொள்ளபட்டு முனிவரின் சீடரானான், மானிடரின் முதல் சிவராத்திரி இங்கிருந்துதான் தொடங்கிற்று

அவ்வகையில் மானிட இனம் சிவராத்திரியினை இந்த தலத்தில் இருந்துதான் தொடங்கிற்று

பின்னாளில் இங்கு கோவில் எழுந்தது, அந்த வில்வனேஸ்வரர் பெரும் ஆலயம் கொண்டார், தலபுராணபடி திருமாலும் பிரம்மனும் துவாரபாலகர்கள் என்றாகி இன்றும் நிற்கின்றார்கள்

வில்வம் அங்கே தலவிருட்சமாயிற்று

சோழர்கள் இந்த ஆலயத்தை மிக சிறப்பாக தலைமுறை தலைமுறையாக பெரிது படுத்தி கொண்டாடினார்கள், குலோதுங்க சோழன் இதனை கொண்டாடினான் அவன் பற்றிய கல்வெட்டு நிரம்ப உண்டு

தேவாரம் பாடபெற்ற 48ம் ஆலயம் இது

இங்கு இரு முருகன் சன்னதிகள் உண்டு, ஒருவர் மயில்மேல் வள்ளி தெய்வானவுடன் அமர்ந்திருப்பார், இச்சிலை எட்டுகுடி முருகனை வடிவமைத்த அந்த தெய்வீக சிற்பியால் அழகுற செதுக்கபட்டது

இன்னொரு முருகன் மயில்மேல் கால்வைத்த முத்துகுமாரசாமியாக நிற்கின்றார், இவர் சம்ஹார மூர்த்தி, அருணகிரியாரால் பாடபட்டவர் இவர்

அப்படியே சண்டிகேஸ்வரர்கள் இங்கு இருவர் உண்டு,  பஞ்ச பைரவர் சன்னதி விஷேஷமானது

இந்த ஆலயத்தில் நந்தி சிவனை பார்க்காமல் வாசலை நோக்கி அமர்ந்திருப்பார், எமனை அவர் விரட்டி அடித்து மேற்கொண்டு வேடனுக்கு காவல் இருந்ததை சொல்லும் காட்சி இது

தட்சினாமூர்த்தி இங்கு கையில் கம்பு , மான் கொண்டு காட்சியளிப்பார். இது மானை தேடி வந்த வேடனை சிவன், எமனை விரட்டி ஆட்கொண்ட காட்சியினை சொல்லும்

இத்திருத்தலத்திற்கு இராஜ கோபுரம் இல்லை. அதாவது அவ்வளவுக்கு முந்தைய காலம்

கோயிலின் வெளிப்புறம் மிக நீண்ட உயரமான மதில் சுவரும், முகப்பில் வவ்வாலத்தி மண்டபமும் உண்டு

மண்டபத்தில் அந்த தலபுராணமான  வேடனை, புலி விரட்டிய திருவிளையாடல் சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.

தென்புற வாயிலில் கிழக்கு நோக்கிய சித்தி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.

பிரகாரத்தில், சுந்தரமூர்த்திவிநாயகர் சன்னதி, சூரிய, சந்திர பகவான், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சப்தகன்னியர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, முத்துக்குமார் சன்னதி, பஞ்ச பைரவர் சன்னதி, இரண்டு சண்டிகேஷ்வரர்கள் சன்னதி மற்றும் சனீஸ்வரன் தனிச்சன்னதியும் அமைந்துள்ளது. 

மகா மண்டபத்தில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, நாராயணி, அகத்தியர் திரு உருவங்களும், கோஷ்டத்தில் கணபதி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

பிரகார வலம் வந்து கருவறைக்குள் நுழைந்தால் இத்தல மூலவர் அருள்மிகு வில்வவனநாதர் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருணைக்கடலான சிவபெருமானை தரிசித்து விட்டு வெளியேறினால்,

கருணைக்கடலான சிவபெருமானை தரிசித்து விட்டு வெளியேறினால், இடதுபுறம் வளைக்கை நாயகி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் தனிச்சன்னதியில் அருள்புரிகிறார். அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது.

 இந்த சக்கரத்திற்கு அருகே நின்று வேண்டிக் கொண்டால் அம்பாளே நம்முடன் பேசுவது உணர முடியும் என்பதும் , பக்தர்களின் வேண்டுதல் இத்தனை நாளில் நடக்கும் என அங்கேயே அம்பாளால் சொல்லபடும் என்பதும் அவளிடம் வேண்டி பலன் பெற்ற எல்லா பக்தர்களின் சாட்சி, மெய்சிலிர்க்க வைக்கும் சாட்சி

தன்னிடம்  வேண்டுவோர் குறை அனைத்தும் தீர்க்கும் தாய் என்பதால் அம்பாளுக்கு "சர்வஜன ரட்சகி" எனும் திருநாமம் உண்டு

இந்த ஆலயத்தில் அம்பாள் சன்னதியும் சுவாமி சன்னதியும் நேர்கோட்டில் ஒரே திசையில் அமைந்துள்ளது. இந்த அமைப்பினை கல்யாணத்திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.

 ஈசன் கயிலாயத்தில் நடந்த கல்யாணக் காட்சியை அகத்தியர்ருக்கு காட்சிதந்து அருளிய ஆலயங்களில் ஒன்று என்பதால் இந்த அமைப்பு உண்டு

சிவராத்திரியில் நான்காம் சாமத்தில் வழிபட வேண்டிய ஆலயம் இது

இந்த ஆலயத்தின் தாத்பரியமும் போதனையும் எளிதானது, வேடன் ஒருவன் அறியாமல் தன்னை அறியாமலே என்ன செய்கின்றோம்  என தெரியாமலே சிவராத்திரியில் விழித்திருந்து வில்வ இலையால் சிவனை அர்சித்து மோட்சம் பெற்ற சம்பவத்தை சொல்லும் தத்துவம் இது

ஆம், பெரிய ஞானம் வேண்டாம் , ஆத்ம தத்துவ அறிவு வேண்டாம், வேத ஞானமோ சிவனின் தாத்பரியமோ எதுவும் அறிந்திருக்க வேண்டாம்

சிவராத்திரியில் விழித்திருந்து வில்வ இலையால் சிவனை அர்சித்தாலே, சூரியன் அதிகாலையில் தானாக எழுவது போல் சிவனருள் தானாக வந்து மனதில் உதிக்கும் ஞானம் கொடுக்கும் என்பதை இந்த தலம் சொல்லி சிவராத்திரி வழிபாட்டின் நான்காம் சாம முக்கியத்துவத்தை சொல்கின்றது

சிவராத்திரியின் நான்காம் சாமத்தில் தேவர்கள் சிவனை வழிபடும் நேரம், இந்த ஆலயத்தில் திருமால், பிரம்மன் இன்னும் சூரிய சந்திரர் உள்ளிட்ட தேவர்கள், சப்த கன்னியர் என எல்லா தேவர்களும் வந்து வணங்கினார்கள்

வேதங்கள் வணங்கிற்று

இன்னும் மானிடரில் இருந்து தேவர் நிலைக்கு உயர்ந்த அகத்தியர், நவமுனி போன்றோரும் வணங்கினார்கள்

இதனால் இந்த தலம் தேவர்கள் வழிபடும் நான்காம் சாமத்தின் தலமாயிற்று, புது யுக தொடக்கத்தில் அவர்கள் அச்சமெல்லாம் போக்கி புது படைப்பாய் புது சக்தியாய் இயங்கும் வரத்தை இந்த ஆலயமே கொடுத்தது

சிவராத்திரியின் நான்கு பொழுதுகளின் தத்துவமும் அருமையானவை பெரும் ஞானம் போதிப்பவை

முதல் சாமம் மனிதன், இரண்டாம் சாமம் யட்சர்கள் நாகர்கள் , மூன்றாம் சாமம் அசுரர்கள், நான்காம் சாமம் தேவர்கள் என்பது ஒரு படிநிலை தத்துவம்

மனிதன் தன் ஞான தேடலால்  குண்டலி எனும் நாகத்தால் சக்தி பெற்று யட்சன் போல் பரம்பொருளை நெருங்கி, அசுர குணத்தை ஒழித்து தேவர் நிலைக்கு உயர்தல் வேண்டும் என்பதே சிவராத்திரி தத்துவம்

முழு விழிப்பு நிலையில் ஆத்ம விழிப்பு நிலையில் அவன் மானிடரில் இருந்து தேவராக உயர்தல் வேண்டும் என்பதே அந்த அற்புதமான ஏற்பாட்டின் போதனை

மாசிமாத சுக்லபட்ச 14ம் நாள் இரவு அதற்கான பலனை வானியல் ரீதியாக தரும், நல்ல அலைகளை தரும்

அந்த இரவில் இந்த நான்கு தலங்களையும் நான்கு சாமத்தில் தரிசித்தல் நன்று சோழநாட்டு தஞ்சை கும்பகோணம் பக்கம் உள்ளவர்கள் அந்த இரவில் இதனை எளிதில் தரிக்கலாம்

முடியாதவர்கள் ஒவ்வொரு சாம வழிபாட்டிலும் இந்த ஆலயங்களையும் அந்த சிவனையும் அந்த ஆலய தத்துவத்தையும் மனதார வணங்கி வழிபடலாம், வில்வம் சாற்றி வழிபடலாம், அதை முறையே செய்தால் உங்கள் மனமும் வீடும் செழிக்கும், அந்த வீடும் குடியும் செழித்து வாழும் இது சத்தியம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Monday, February 24, 2025

திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் சிவாலயம் கருவறைக்கு எதிரில் இங்கு நந்தி இல்லை

எல்லாச் சிவாலயங்களும் சிவராத்திரி அன்று வழிபட வேண்டியவை  என்றாலும் ருத்திர கோல சிவனை, ருத்திர அம்ச சிவனை வழிபட்டால் பலன் அதிகம் .
 அந்த ஆலயங்களில் தலையானது திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் சிவாலயம்.

காஞ்சிபுரம் அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிக மிக தொன்மையான‌ சிவாலயம் இது.

நான்கு வேதங்களும் நான்கு மலைகளாக வீற்றிருக்கும் தலம் இது. வேதங்களே சிவனை நோக்கித் தவம் செய்யும் இடம் இது. இதனால் "வேத்கிரி" என அவைகளுக்குப் பெயர், காலத்தால் மூத்த தலம் இதுதான்.

 ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது.

காசி, தில்லை, திருவாரூர், திருவண்ணாமலை, காஞ்சி, காளகஸ்தி, மதுரை என மகா முக்கிய ஆலயங்கள் இறையனாரின் உடலாகவும்,  இந்த ருத்திரகோடீஸ்வரர் கோவில் இதயமாகவும் அமைந்துள்ளது.

சிவன் வாழும் இமயம் என்பது இமயவானுடையது. கயிலாயம் குபேரன் சிவனுக்காய் உருவாக்கியது. சிவனே தானே தேர்ந்து வேதங்கள் நடுவில் வாழும் ஆலயம் இந்த ருத்திரகோட்டீஸ்வர ஆலயம்.

இந்தத் தல வரலாறு மிக மிக  தொன்மையானது. பாற்கடலை கடைந்த காலத்தினுடையது.

பாற்கடலை கடைய முதலில் மந்தார மலையினை வேகமாக முதலில் இட்டார்கள். அது கடலின் அடித்தளத்தில் மோதி பாதாளத்தில் விரிசல்களை உண்டாக்கிற்று.

பின் பகவான் விஷ்ணு மத்தாகி பாற்கடல் கடைப்பட்டாலும் இந்தப் பிளவுகள் வழியே பாதாளத்தில் அடைபட்ட அசுரர் கோடிக்கணக்கில் வெளிவந்தனர்.

இவர்கள் அந்நேரம் தேவர்களும் இன்னொருபாதி அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது காலியாக இருந்த தேவர்களின் ஆசனங்களில் அமர்ந்து அட்டகாசம் செய்தனர்.

இவர்களை அடக்க சிவன் ருத்திர கோலத்தில் மாறி ஒரு கோடி ருத்திரர்களை தோற்றுவித்தார். அவர்கள் 32 வகை ஆயுதங்கள் ஏந்தி அந்த அசுரர்களுடன் போரிட்டு அவர்களை ஒழித்து நின்றனர். பின் அவர்கள் தாங்கள் என்ன செய்வது? எனக் கேட்டனர்.

சிவன் அவர்களைத் தங்களுக்குள் அழைக்க திருவுளம் கொண்டார். அவர்களை இந்தத் தலத்தில் வந்து தன்னில் கலக்கும்படி அருள்புரிந்தார். அப்போது அந்த ஒரு கோடி ருத்திரர்களும் அவரிடம் ஒரு வரம் கேட்டார்கள்.

"எம்பெருமானே, எங்களுக்குத் இத்தலத்தில் முக்தி தந்தது போல, இங்கு வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் வரம் அருளி உம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இங்கு ஒருமுறை வைக்கப்படும் வில்வம் கோடிவில்வமாகவும், ஒரு முறை சொல்லும் மந்திரம் கோடி முறை சொன்னதாகவும் உங்களால்  ஏற்றுக்கொள்ளபடும். கோடி ருத்திரர்களாகிய எங்கள் பொருட்டு அவ்வரம் அருள வேண்டும்.

வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் எங்கள் கோடிபேரின் அருளையும் பெறவேண்டும்" என்றார்கள்.

சிவன் அவர்களுக்கு அந்த வரத்தை அருளினார்.

சிவன் அங்கு ருத்திர அம்சமாய் நிற்க ருத்திரர்கள் கோடி பேரும் அவரில் கலந்துவிட்டார்கள். இதனால் அந்தச் சிவன் ருத்திரர்கோடி ஈஸ்வரர் என்றானார்.

சிவராத்திரி அன்று அக்னிப்பிழம்பாக அங்கு நின்ற சிவனிடம் ருத்திரர்கள் கோடிப் பேரும் அடைக்கலாமானர்கள். அதனால் இங்கு சிவராத்திரி விசேஷம்.

இங்கு  இன்னும் இரு தலபுராணம் உண்டு.

ஒருமுறை சிவனை சந்திக்க வந்தார் திருமால். அங்கே அவர் வாகனமான கருடனுக்கும் நந்திக்கும் சண்டை வந்து கருடனை அவர் சிதைத்துப் போட்டார்.

கருடனை உயிர்பித்து அதனை மீள உயிர்கொடுத்த சிவன் ஆணவத்தால் நந்தி செய்த காரியத்தை நினைத்து தண்டனை அளித்தார்

அந்தத் தண்டனை தீர நந்தி வந்து தவமிருந்த இடம் இது. அதனால் பிரதோஷம் எக்காலமும் விசேஷம். நந்திக்கும் கருடனுக்கும் நடந்த சண்டையினைச் சொல்ல கழுத்தில்லா கருடன் இன்றும் உண்டு.

இன்னொரு தலபுராணம் சிவன் பார்வதி திருமணம். இமவான் மகளைச் சிவன் திருமணம் செய்தபோது தன் மாமனார் இடத்தில் வசிக்க விரும்பாச் சிவன், பார்வதியின் தெய்வத் திருமேனியுடன் இந்த தலத்துக்கு வந்தார், சிவனுக்கு மிக மிக பிடித்த சொந்த இடமான இங்கு வந்தாள்.

அந்தத் திரிபுர சுந்தரிதான் பக்தவச்சலலேஸ்வரர் ஆலயத்தில் குடியிருக்கின்றாள்.

இதுதான் ஆதிகால ஆலயம், இந்த ஆலயத்தில் இருந்துதான் வேதபுரி என்றும், ருத்ரகோட்டீஸ்வரம் எனும் இந்தத் தலத்தின் வரலாறு தொடங்குகின்றது, இந்த ருத்திர கோடீஸ்வரர்தான் காலத்தால் மூத்த ஆலயம்.

பின்னாளில் அங்கு வேதபுரீஸ்வரர் ஆலயம், பக்தவச்சலம் ஆலயம் என இரு ஆலயங்கள் வந்தன. பின்னாளில் தீர்த்தகிரி சிவன் ஆலயங்கள் வந்தன, அவை தொன்மையானவை எனச் சொல்லபட்டாலும் காலத்தால் பிந்தியவையே.

இந்த ருத்திரகோடீஸ்வரர்தான் வேதநாதன், வேதபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார், அது இன்றும் தொடர்கின்றது.

இந்த ஆலயத்தின் சிறப்புக்கள் பல உண்டு. முதல் அதிசயம் நம்பமுடியாத ஆனால் சிலிர்ப்பூட்டும் அதிசயம் 12 ஆண்டுக்கு ஒருமுறை தீர்த்தத்தில் விளையும் சங்கு.

பொதுவாக சங்கு அதுவும் வலம்புரி சங்கு கடலில்தான் உப்புநீரில் விளையும். இங்கு 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தானே உருவாகி கரைக்கு வரும். அந்தச் சங்கை கொண்டுதான் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும். பழைய சங்குகள் அறையில் பத்திரமாக வைக்கப்படும்.

12 ஆண்டுகொரு முறை சங்கு தீர்த்தம் எனும் தீர்த்தத்தில் இது தவறாமல் நடக்கும். இது "சங்கு புஷ்கர விழா" என அழைக்கப்படும்.

சங்கு உருவாகும் நாளுக்கு முன் நுறை பொங்கும். தீர்த்தம் ஆர்ப்பரிக்கும். அதன் பின் ஓங்கார சத்ததுடன்  சங்கு கரை ஒதுங்கும்.

இந்த அதிசயத்தை தொடங்கி வைத்தவர் மிருகண்டு முனிவரின் மகனும் சிவனால் சாகாவரம் பெற்றவருமான மார்கண்டேய மகரிஷி.

மார்கண்டேயன் 16 வயதில் சாக வேண்டும் என்பது விதி, அந்த விதியினை வெல்ல பல சிவாலயங்களில் அவர் வழிபட்டார். அப்போது இந்த ஆலயத்துக்கும் வந்தார். அங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்ய நினைத்த போது பாத்திரம் ஏதுமில்லை.

அந்நேரம் குருபகவான் கன்னி லக்னத்தில்  வரும் நாளாய் இருந்தது.  அந்நாளில் இங்கு பெரிய விழா கொண்டாடப்படும், லட்ச தீபம் ஏற்றி பிர்சித்தியாகக் கொண்டாடப்படும்.

இந்த ஏற்பாட்டின் படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சுழற்சி வரும். அந்தச் சுழற்சியில் சங்கும் ஓங்காரச் சத்தத்துடன் வரும்.

இந்த அதிசயம் காலம் காலமாக உண்டு. இப்போதுவரை 12 ஆண்டுக்கு ஒருமுறை உண்டு. கடந்த ஆண்டும் சங்கு வந்தது.

இந்த மலை வேதமலை, வேதகிரி என்றே அழைக்கப்பட்டது. வேதங்கள் அழியாத் தவமிருக்கும் மலை என்பதால் அப்படிப்பெயர் பெற்றது. இது கழுங்குன்றம் திருகழுங்குன்றம் என்றானது கழுகு வடிவில் வந்த ஞானியரால்.

மறுபிறப்பு என்பதில் யார் என்ன வடிவம் எடுப்பார் என்பது தெரியாது. கழுகு வடிவம் பெற்ற சில ரிஷிகள் இங்கு வந்து பணிந்து முக்தி பெற்றதால் இது கழுங்குன்றமாகி திருக்கழுக்குன்றம் என்றுமானது.

பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனர். அது அழிவற்ற நிலைக்கான ஆனால் தவத்தின்  முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனர் என்பது புராணம்.

எனவே நான்கு யுகத்திற்கு இருவர், என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். கழுகு சர்க்கரைப் பொங்கல் உண்ணும் அதிசயம் இங்குதான் நடைபெறும்.

ஆம். கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுகுன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்தில் சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன.

இப்போதும் பூஷா, விதாதா எனும் இரு கழுகுகள் இந்த யுகத்திலும் உண்டு. அவை  இக்காலத்தில் உண்டு. அவை இங்கு உணவு பெற்று காசிக்கு சென்று வழிபட்டு திரும்பும். இந்த அதிசயம் இன்றும் உண்டு.

கழுகு வடிவில் சிவனடியார்களின் ஆன்மாக்கள் கர்மம் கழிக்கும் தலம் இது.

இந்த மலையில்தான் மாணிக்கவாசகருக்கு சிவன் குருவடிவாக காட்சியளித்தார்.

இந்த மலை வேதங்கள் வாழும் மலை என்பதால் சைவ குறவர்கள் மூவரும் இம்மலையினை மிதிக்கத் தயங்கினார்கள். ருத்திரகோடீஸ்வரரை வெளியில் இருந்தே பாடினார்கள். அவ்வகையில் இந்த ஆலயம் தேவாரம் வைப்பு தலம்.

" தோடுடை யானொரு காதில் தூய குழைதாழ    
ஏடுடை யான்த லைகல னாக இரந்துண்ணும்    
 நாடு டையான் நள்ளிருள் ஏம நடமாடும்    
 காடு டையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே"

என்பது சம்பந்த பெருமான் பாடிய பதிகத்தின் வரி.

"கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே 
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே 
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்
கன்றினோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே"

என்பது சுந்தரர் வரி.

"மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
  முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
    ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
    புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே"

என்பது அப்பர் சுவாமிகளின் இத்தலம் பற்றிய‌ பாடல் .

மாணிக்க வாசகர் தன் திருக்கழுக்குன்ற பதிகத்தில் பாடுகின்றார்

"பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்
கிணக்கிலாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே"

இந்திரன் தன் சாபம் தீர்ந்து வழிபட்ட இடம் இது. தேவர்கள் வந்து வழிபடும் இடமும் இது. இன்றும் இந்திரன் இன்றும் அங்கு  பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறி இன்றும் உண்டு. அவ்வப்போது இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து, சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடும்.

மறுநாள் அங்கு வெப்பத்தை  கருவறை திறக்கும்போது காணலாம். அவ்வப்போது இந்த அபூர்வம் நடக்கும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறுபட்டதாகும்.

சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம் இதுதான்.
 
"என்உடல் வீழும்போதும் நீதான் எனக்குத் துணை" என்று ஈசனைப் பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம்.
 
தேவர்கள் எல்லோரும் வழிபடுவதால் இது அமராவதிக்கு நிகரான தலம் என்பது அருணகிரியார் வாக்கு.
 
சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் சுவாமி காட்சி தந்த தலம் இது. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று அறுபத்து மூவருடன் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி கிரிவலம் வரும் திருவிழா சிறப்பாக நடைபெறும் தலம் இது. கிரிவலம் வரும் வழக்கம் வேதங்கள் மலையாக இருக்கும் இங்கிருந்துதான் வந்தது.

இங்கு 12 தீர்த்தங்கள் உண்டு.
 
இந்திர தீர்ததம, சம்பு தீர்த்தம், உருத்திர தீர்த்தம், சிட்ட தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம்,  மார்க்கண்ட தீர்த்தம்,  கோசிக தீர்த்தம், நந்தி தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், பட்சி தீர்த்தம் என உண்டு.

இத்தலத்திற்கு அந்தகக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.

இங்குள்ள திரிபுர  அன்னை, இந்த அன்னை சக்திவாய்ந்தவள். ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள். அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ள அன்னை என்பதால் இங்கு அவள் அருள் அதிகம்.

(பார்வதி தெய்வமேனியுடன் குடியேறி நிற்கும் இடம் இதுதான். அதனாலே மிகுந்த அச்சத்துடன் அவளுக்கு பாத பூஜை மட்டும் செய்வார்கள். அன்னை திரிபுர சுந்தரியாக சிவனின் இல்லத்தில் ஆட்சி செய்யும் தலம் இது)
 
மகாகமம் இங்கு சிறப்பு. கும்பமேளா, கும்பகோணம் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்னும் விழா நடைபெறுகிறது.

இந்த ஆலயம் காலத்தால் மூத்தது. இதை அடுத்தே வேதபுரீஸ்வரர் ஆலயம், பக்தவத்சலம் ஆலயமெல்லாம் வந்தது.

சிவராத்திரி அன்று ருத்திர மந்திரம் சொல்லி வழிபடுவது பெரும் பலன் தரும். மகா முக்கிய கடமை அது.

அந்நாளில் ருத்திர அம்சமாக, கோடி ருத்திரர்களை தன்னில் ஏற்று நின்ற சிவனை வழிபடுதல் கோடி பலன் தரும்.

அதுவும் ஒரு வில்வம் வைத்தால் கோடி வில்வம் வைத்த பலன் அங்கே உண்டு. ஒருமுறை மந்திரம் சொன்னால் ஒருகோடி முறை மந்திரம் சொன்ன பலன் உண்டு.

அங்கே சிவனை தரிசித்தால் கோடிமுறை தரிசித்த பலன் உண்டு. சிவனருளை பெற்றால் அது கோடி மடங்குக்குச் சமம்.

அங்கே எதனை நீங்கள் செலுத்துகின்றீர்களோ அது கோடி மடங்கு திரும்ப உங்களுக்கே கிடைக்கும்.

சிவராத்திரியில் வாய்ப்பு கிடைத்தவர்கள் அந்த ருத்ரகோடீஸ்வரர் கோவிலுக்குச் செல்லுங்கள். எல்லா நலமும் உங்களை வந்தடையும்.

இந்த ஆலயத்தின் தாத்பரியம் எளிதானது. கடலலுக்கு அடியில் பாதாளத்தில் இருந்து வந்த அசுரர்கள் என்பது மானுட அடிமனதில் இருந்து எழும் ஆசைகளைக் குறிப்பது.

அடிமனதின் ஆசைகள் ஆபத்தானவை. அடக்கி வைக்கப்பட்டாலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது வெடித்தெழுந்து வந்து மானிடரை வீழ்த்தக் கூடியவை.

சிவன் கோடி ருத்திரரை தன்னில் இருந்து வெளிப்படுத்தி அவர்களை அழித்தார் என்பது சிவனை வழிபட்டால் நம் அடிமனதின் ஆசைகளெல்லாம் அழிந்துவிடும், சிவனருளால் அடிமனதில் பதுங்கியிருக்கும் ஆசைகளெல்லாம் ஒழிக்கப்படும் என்பது.

கழுகு என்பது பேராசைகான ஒரு தத்துவம். ஒவ்வொருவர் மனமும் கழுகைப் போல் சிறகை விரித்து உயர உயர செல்ல ஆசைப்படும். பெரும் ஆசைப்படும் இயல்புடையது.

இந்தத் தலம் அதனை ஒழித்து மாய ஆசைகளை ஒழித்து மனதை கட்டுப்படுத்தி முக்தியினைத் தரும் என்பதைச் சொல்லும் தத்துவம் இவை.

மனதில் பதுங்கிய மாயைகள் என்றாலும் உயர பறக்கும் மாய ஆசைகளின் போராட்டம் என்றாலும் சிவனருளால் அது அழியும். அந்த மாயைகள் அழியுமிடம் ஞானம் கிடைக்கும். ஞானம் கிடைக்குமிடம் முக்தி கிடைக்கும் என்பதுதான் இந்தத் தலத்தின் தாத்பரியம்.

சிவராத்திரி அன்று ருத்ரவழிபாடு பிரசித்தி. ருத்திரம் என்பது எதெல்லாம் இந்த வாழ்வில் நம்மை தடுக்குமோ? எதெல்லாம் நம்மை முடக்குமோ அதையெல்லாம் லௌகீகமகாவும் ஆன்மீகமாகவும் எரித்து ப் போடும் சிவனருளின் வடிவம்.

வேண்டாததை சிவன் எரித்துப் போடும் அம்சம்.

அந்த ருத்திரரை, கோடி ருத்திரர்கள் வழிபட்ட மகா ருத்திரரை இங்கு வழிபடுதல் கோடிப் பலன்களைத் தரும்.

கோடி என்றால் எண்ணிக்கையில் மட்டுமல்ல, கோடி என்றால் துவக்கம், கோடி என்றால் புதிது, கோடி என்றால் புதிய தொடக்கம் என்றெல்லாம் பொருள் உண்டு. இந்தச் சிவனை சிவராத்திரி அன்று ஒரு வில்வமிட்டு, ஒரு ரூபாய் தட்சணை வைத்து, ஒரு பூ இட்டு, ஒருமுறை ஓம்நமசிவாய எனச் சொன்னால் போதும்.

அது கோடி வில்வமிட்டு, கோடி ரூபாய் வைத்து, கோடி பூக்கள் கொட்டி, கோடி முறை 'ஓம் நமசிவாய' எனச் சொன்ன பலனைத் தரும். கோடிப் புண்ணியம் உங்களைச் சேரும்.

சிவராத்திரியின் முழுப்பலனும் உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த ருத்திரகோடீஸ்வரை வணங்கிவிட்டு வேதபுரீஸ்வரர், பக்தவச்சலேஸ்வரர், தீர்த்தநாத சிவன் சன்னதிகளை வணங்கி வருதல் சிவராத்திரி அன்று பெரும் பலனைக் கொடுக்கும்.

ஆனால், இந்த ருத்திரகோடீஸ்வரரை எல்லோரும் நினைத்த மாத்திரத்தில் சந்திக்கமுடியாது, யாருக்கு அவரின் அனுக்கிரஹமும் அருளும் அழைப்பும் உண்டோ அவர்களே அங்குச் செல்லமுடியும். அப்படிச் செல்பவர்கள் நிச்சயம் வரம்பெற்றவர்கள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

கடலூர் தேவனாம்பட்டினம் தீர்த்தவாரி மாசி மகம்,....

கடலூர் தேவனாம்பட்டினம் தீர்த்தவாரி மாசி மகம்,.... மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்...