Friday, February 6, 2026

பஞ்சவர்ணேஸ்வரர் உறையூர் திருச்சிராப்பள்ளி.

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர்திருக்கோயில், உறையூர்- 620003.  திருச்சிராப்பள்ளி. 
*மூலவர்        :     பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்,

*அம்மன்            :     காந்திமதியம்மை.

தல விருட்சம்   :     வில்வம்.

தீர்த்தம்         :     சிவதீர்த்தம், நாக தீர்த்தம்.

புராண பெயர்    :     முக்கீச்சுரம்

பாடல்பெற்ற தலம்: ஞானசம்பந்தர் பாடியுள்ளார்

*இறைவன் பஞ்சவர்னேஸ்வரர்  இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்".      

*சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்தது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது. கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது.

*உதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவியை இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் அவருக்கு காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

*உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும்.     

*பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள்புரியும் சிவபெருமான் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது  உண்மை.

*உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது.        

*சோழ மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டது.     

*இறைவி காந்திமதி அம்மை தெற்கு நோக்கி தனி சந்நிதியில் கைகளில் அங்குசமும், தாமரை மலரும் வைத்துக் கொண்டு அருள் புரிகிறாள்.  இந்த அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 

*யானை ஏற முடியாதபடி  மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன், 
மற்றும் 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.              

*புகழ்ச் சோழன் என்ற சோழ மன்னன் உறையூரில் ஆட்சி புரிந்து வந்தான். சிற்றரசன் ஒருவனுடன் போரிட்டு வெற்றி கண்ட புகழ்ச் சோழன் மடிந்து கிடந்த படை வீரர்களுள் ஜடாமுடியுடன் திருநீறு பூசிய ஒரு தலையைக் கண்டு மிகவும் மனம் நொந்தான். சிவனடியார்க்கு அநீதி இழைத்தோமே என்று கலங்கினான். தன்னுடைய மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு தீமூட்டி அதனுள் அந்த சிவனடியார் தலையுடன் தானும் வீழ்ந்து முக்தி பெற்றான். அவர் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் ஆனார்.      

*உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை வழிபாடு தடைபட்டுவிட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். 

*ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோவிலில் கொடுத்த திருநீறை அணியாமல் அலட்சியம் செய்ததால் மறுபிறவியில் அவன் பன்றியாகப் பிறந்து சேற்றில் உழன்றானாம். தன் முந்தைய பிறவித் தவறை நினைத்து வருந்தி சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடிப் பாவ விமோசனம் பெற்றான் என்கிறது புராணம்.

*இது தமிழ்நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபட்ட கோயில்.

*இக்கோயிலில் சிற்பங்களுக்குக் குறைவில்லை. உள் மண்டபத்தில் இடப்பக்கம் “யானைமீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, அவானையைக் கோழி குத்தித் தாக்கும் சிற்பம்” உள்ளது.
*திருமாலுக்கு எதிரில் உள்ள தூணில் பிட்சாடனர் உருவம் உள்ளது. இதற்கு எதிர்க் கம்பத்தில் தாருகாவனத்து ரிஷிபத்தினிகளின் உருவங்கள் உள்ளன.   கருவறை வெளிச் சுவரில் மேற்புறத்தில் நான்கு பக்கங்களிலும், வரிசையாக இறைவனின் பல்வகையான தாண்டவங்களின் சிற்பங்கள் மிக்க கலையழகுடன் காணப்படுகின்றன.  

*திருச்சி ஜங்ஷன் மற்றும் சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து உறையூர் செல்ல பஸ்கள் உள்ளன. கடைவீதி பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.            

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பஞ்சவர்ணேஸ்வரர் உறையூர் திருச்சிராப்பள்ளி.

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர்திருக்கோயில், உறையூர்- 620003.  திருச்சிராப்பள்ளி.  *மூலவர்        :     பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்...