Tuesday, July 23, 2024

பேச்சுத்திறன் அருளும் மணக்கால் அபிமுக்தேஸ்வரர்...

பேச்சுத்திறன் அருளும் அபிமுக்தேஸ்வரர்!!! 
மணக்கால் - அய்யம்பேட்டை
காவிரியின் தென்கரையில் உள்ளது ஒரு தேவாரத்தலம். அதன் தொன்மைப் பெயர், திருப்பெருவேளூர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது. தற்காலத்தில் இவ்வூரை ‘மணக்கால் அய்யம்பேட்டை’ என்றழைக்கின்றனர்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் இத்தலத்து இறைவனை வந்து தரிசித்து (ஏழாம் நூற்றாண்டில்) பதிகம் பாடிப் போற்றி வணங்கியுள்ளனர்.

வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ள தலம். சூரனை சம்ஹாரம் செய்த பின்னர், அந்த தோஷம் நீங்குவதற்காக, சங்காரமாடிய சிங்காரவேலனாகிய முருகன், சிவபிரானை சிவத்தலங்கள் பலவற்றுக்குச் சென்று வணங்கி வழிபட்டார்.

திருச்செந்தூர், கீழ்வேளூர், திருமுருகன்பூண்டி, புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) என்ற அந்தத் திருத்தலங்கள் வரிசையில் இந்த திருப்பெருவேளூரும் ஒன்று.
முருகப்பெருமான் நீராடிய சரவண தீர்த்தம் என்னும் தீர்த்தக்குளம் இவ்வாலயத்தின் பின்புறம் உள்ளது. 

வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே ஒரு முறை ‘யார் பெரியவன்?’ என்று போட்டி. அச்சண்டையின்போது மேரு மலையின் சிகரம் ஒன்று தூள் தூளாக உடைந்து, ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்ததாக ஐதீகம். 

அதுவே காலப்போக்கில் சுயம்பு லிங்கமாக வெளிப்பட்டதாம். எனவே, இத்தலத்து இறைவனை வழிபட்டால், கயிலை மலையையே வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு ஐந்து கலசங்களுடன் கூடிய மூன்று நிலை ராஜகோபுரம். கோபுர நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால், தரைதளத்தில் பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. நந்தி தேவரை வணங்கிவிட்டு, நிமிர்ந்தால் கட்டுமலை போன்ற பிரமாண்ட அமைப்பு. கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்று.

கட்டுமலையின் இடதுபுறம் அமைந்துள்ள 18 படிகளில் ஏறி மேலே சென்றால், முதலில் எதிர்படும் சந்நதி சோமாஸ்கந்த மூர்த்தியுடையது! 

அவரை வணங்கி விட்டு, வலதுபுற வாயில் வழியே நுழைந்தால் மகா மண்டபம். அதில் தெற்கு பார்த்த திருக்கோலத்தில் நடராஜர் சிவகாமி அம்மையுடன் திகழ்கிறார்.

மண்டபத்தின் உள்ளே நுழைந்தால்,  கருவறையில் கிழக்கு நோக்கி மூலவர் அபிமுக்தேஸ்வரர் சிவலிங்க வடிவில் காட்சி அருள்கிறார்.

இவருக்கு பிரிய ஈஸ்வரர் என்றும் பெயருண்டு.

கீழே பிராகாரம் வலம் வரும்போது கன்னி மூலையில் பிரதான விநாயகரை தரிசிக்கலாம். அவரை அடுத்து வைகுந்த நாராயணப் பெருமாள் சந்நதி உள்ளது. 

இந்தப் பெருமாள் தாருகா வனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அடக்கும் வகையில் ‘மோகினி அவதாரம்’ எடுத்தவர் என்றும், தன்னுடைய பெண் வடிவத்திலிருந்து மீண்டும் ஆண் உரு பெற இத்தலத்து இறைவனை வழிபட்டார் என்றும் தலபுராணம் கூறுகிறது. 

அடுத்து சுப்பிரமணியர் தனிச் சந்நதியில் வள்ளி தெய்வானையுடன் வீற்றுள்ளார். இவர் அருணகிரிநாதரால் பாடப் பெற்றவர்.

இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு, இங்கே இரண்டு சண்டிகேஸ்வரர்கள் சந்நதி இருப்பது. முருகப்பெருமான் சந்நதியை அடுத்து, கிழக்கு நோக்கிய நிலையில் யோக சண்டிகேஸ்வரர் சந்நதியும், வழக்கம் போல் கோமுகத்தின் அருகில் ஒரு சண்டிகேஸ்வரரும் கொலுவிருந்து அருட்பாலிக்கின்றனர். துர்க்கையும் தனக்கென தனியே சந்நதி கொண்டு விளங்குகிறார்.

இறைவியின் பெயர் ராஜராஜேஸ்வரி. பொதுவாக சிவாலயங்களில் அம்பிகை நின்ற கோலத்தில்தான் இருப்பார். ஆனால் மூன்று தலங்களில் மட்டும் அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகிறார். 

ஒன்று காஞ்சிபுரம் (காமாட்சி), மற்றொன்று திருமீயச்சூர் (பேரளத்தை அடுத்துள்ளது), மூன்றாவது இந்த மணக்கால்  அய்யம்பேட்டை. 

ஆலயத்துள் கிழக்கு கோஷ்டத்தில் உள்ள சரஸ்வதீஸ்வரர் (லிங்கத் திருமேனி) சரஸ்வதியால் பூஜிக்கப்பட்டவர். 

பேச்சுத் திறனுக்கு அருள்பாலிப்பவள் சரஸ்வதி அல்லவா? பூவிலும், நமது நாவிலும் இருப்பவளல்லவா? அதனால் இந்த சரஸ்வதீஸ்வரருக்கு ஒரு தனி சக்தி. 

இந்த லிங்கத்தை முன்னொரு காலத்தில் வாழ்ந்த பக்தர் ஒருவர் தினந்தோறும் பக்திப் பரவசத்துடன் வழிபட்டு வந்துள்ளார். அவரது ஒரே மகன் பேசும் திறனின்றி இருந்தான். அவர் அவனை இந்த சரஸ்வதீஸ்வரரை வழிபட அழைத்து வரலானார். 

அதன் பலனாக, மகனுக்கு பேசும் திறன் வந்தது. பேச்சு வராத பிள்ளைகள் மற்றும் திக்குவாய் குறைபாடு உள்ளவர்கள் இந்த சரஸ்வதீஸ்வரரை வந்து வழிபட்டால், விரைவில் அந்தக்குறை நீங்கப் பெறுவர் என்பது பல பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. 

அதன் நன்றிக்கடனாக, குறை தீர்ந்தவர்கள் இந்த லிங்கத் திருமேனிக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவதை வழக்கமாக் கொண்டுள்ளனர். 

கிழக்குப் பிராகாரத்தில் பைரவர், காலபைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் உள்ளனர். இத்தலம் சுக்கிர தோஷப் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. 

அசுர குரு சுக்கிராச்சாரியார் ஒருமுறை தனது சக்திகள் அனைத்தையும் இழந்தார். அதனால், இந்தத் தலத்திற்கு வந்து சரவணப் பொய்கையில் நீராடி, அம்பிகையை நோக்கித் தவம் செய்தார்.

அன்னையின் அருளால் சுக்கிராச்சாரியாருக்கு மீண்டும் அனைத்து சக்திகளும் பரிபூரணமாகக் கிடைத்தன.

மிருகண்டு மகரிஷி, பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். இத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர்,

‘இறப்பில்லார் பிணியில்லார் 
தமக்கென்றும் கேடிலார் 
பிறப்பில்லாப் பெருமானார்
பெருவேளூர்ப் பிரியாரே!’

- என்று போற்றிப் பாடுகின்றார். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமையிலும், பெளர்ணமி திதியிலும், இங்குவந்து அம்பாளை பிரார்த்தனை செய்கிறார்கள். 

காலை 8 முதல் 11 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 7.30 வரையும் கோயில் திறந்திருக்கும்.

நன்னிலத்திலிருந்தும், திருவாரூரிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்து வசதி உள்ளது. திருவாரூரிலிருந்து 10 கி.மீ. நன்னிலத்திலிருந்தும் 10 கி.மீ.  குடவாசலிலிருந்து 8 கி.மீ.

Monday, July 22, 2024

தென்காசி கோயில் கோபுரவாசல் காற்று ஓர் அதிசயம்.



வடக்கே காசிக்கு போனால் திரும்புவது சாத்தியமில்லை என எண்ணியே வயதான காலத்தில் காசிக்கு சென்று மரணித்தால் சொர்க்கம் என்ற மனநிலை இருந்த காலம் அது..  
     
வடக்கே காசிக்கு சென்று அடையும் புண்ணியத்தை தெற்கேயே பெறலாம் என்ற வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டதுதான் தெற்கிலும் காசி வேண்டும் என்ற இந்த விஸ்வநாதர் கோயில்.. தென்காசியாக நம்மை மகிழ்விக்கிறது
        
வெள்ளைகாரன் அதை கட்டினான் இதை கட்டினான் என அதிசயப்படும் நம்மாலே  கோபுரவாசலில் வீசும் அந்த காற்றுடன் கூடிய அதிசயம் எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் அமைத்திட முடியாது.
      
ஒவ்வொரு திருக்கோயிலும் ஒரு தனி சிறப்பு கொண்டிருப்பதைப்போல, இந்த தென்காசி கோயில் கோபுரவாசல் காற்று ஓர் அதிசயம்.
       
மன்னன் பராக்கிரம பாண்டியனால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமானதுதான் இந்த இராஜ கோபுரம்.
       
பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று, கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு எதிராக மேற்கிலிருந்து கிழக்காக வீசி வரவேற்கிறது. கோபுர வாசலை கடந்து உள்ளே போகும் போது, கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று உங்கள் பின் புறமாக கோவிலுக்குள் உங்களை உள்ளே தள்ளுவது போல, கிழக்கில் இருந்து மேற்காக காற்று வீசும் அதிசயத்தையும் உணரலாம்...
      
மேலும் எந்த தடுப்பும் இல்லாத ஒரே நேர்கோட்டில் காற்று இரண்டு எதிர் திசைகளில் வீசுவதை பக்தர்கள் அனுபவித்தும் மகிழலாம்....

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா எதற்காக நடத்தப்படுகிறது?


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி திருக்கோவிலில் நடக்கும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்றான ஆடித்தபசு விழாவில் பல வித்தியாசனமான சடங்குகள் நடைபெறுவதுண்டு. ஆடித்தபசு உண்டான கதை, ஆடித்தபசு விழா எதற்காக நடத்தப்படுகிறது என்ற காரணம் பலருக்கும் தெரியுமா. ஆனால் ஆடித்தபசு விழாவின் போது கோமதி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்படும். இந்த நிகழ்வு நள்ளிரவு 12 மணிக்கு தான் நடத்தப்படும் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது.

அம்மனுக்கு திருக்கல்யாணம் என்றால் பொதுவாக காலையில் தான் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் மட்டும் நள்ளிரவில் தான் நடத்தப்படும். இதற்கு என்ன காரணம்? ஆடித்தபசு முடித்த பிறகும் அம்மன் மீண்டும் தவக்கோலத்தில் தவம் செய்வது எதற்காக? இந்த விழாவில் வேறு என்னென்ன சடங்குகள் நடத்தப்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

*ஆடித்தபசு என்றால் என்ன ?*
சங்கரன்கோவில் சங்கரநாராயணர்- கோமதி அம்மன் கோவில் நடக்கும் மிக தனித்துவமான சிறப்பு வாய்ந்த திருவிழா ஆடித்தபசு. 'தபசு' என்றால் ‘தவம்’ என்று பெயர். தற்போது அமைந்திருக்கும் கோமதி அம்பாள் சன்னிதி முன்பு, நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர், சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள்.

*ஆடித்தபசு விழா வந்த காரணம் *

இருவரும் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று தங்களுக்குள் வாதம் செய்து கொண்டனர். அது பற்றி அறிந்து கொள்வதற்காக பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். அம்பாள் சிவபெருமானை வேண்ட, ஈசன் அம்பாளை பொதிகை மலை பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கரநாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்.

*சங்கர நாராயணர் திருக்கோலம் :*

அரியும் அரனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர். சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில், தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மாலை மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இவ்வாறு தவம் செய்த அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த மாதம் ஆடி மாதம் என்கிறது புராணம். இதைத்தான் ஆடித்தபசு என்று கொண்டாடுகிறோம்.

*உற்சவருக்கே அபிஷேகம் :*

சங்கரன்கோவில் ஆலயத்தில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது. இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்படிக லிங்கமாக வெள்ளிப் பேழையில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்குத் தான் அபிஷேகம் செய்கிறார்கள். இத்தல உற்சவருக்கே சிவராத்திரி மற்றும் ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆடித்தபசு நாளில், இந்த உற்சவரே அம்பாளுக்கு சங்கர நாராயணராக எழுந்தருளி காட்சி தருகிறார். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

*ஆடித் தபசு திருவிழா நிகழ்வுகள் :*

ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார். தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

*நள்ளிரவில் அம்மனுக்கு திருமணம் :*            ஆடித்தபசு முடித்த பிறகும், அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்? அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் உடலில் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவே தான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டுகிறாள். இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Sunday, July 21, 2024

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு,

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், 
செய்யாறு, 

திருவோத்தூர், 

திருவத்திபுரம், 

திருவண்ணாமலை 

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்   –     வேதபுரீசுவரர், வேதநாதர்
அம்மன்   –     இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை

தல விருட்சம்   –     பனைமரம்

தீர்த்தம்   –     மானச தீர்த்தம், கல்யாண கோடி தீர்த்தம்

பழமை   –     1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்   –     திருவோத்தூர், திருஓத்தூர்

ஊர்   –     செய்யாறு

மாவட்டம்   –     திருவண்ணாமலை

மாநிலம்   –     தமிழ்நாடு

பாடியவர்   –     சம்பந்தர், திருநாவுக்கரசர்

தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி. இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். “ஓத்து” என்றால் வேதம். மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை இங்கு இறைவன் ஓதுவித்தான். சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலால் “ஓத்தூர்” என அழைக்கப்படுகிறது. அதில் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் “திருவோத்தூர்” என்று வழங்கப்படுகிறது. தற்போது “திருவத்திபுரம்‘ என அழைக்கப்படுகிறது.
  
  

இத்தலத்தில் 9 வாயில்களை கடந்துதான் மூலவரை தரிசிக்க முடியும். சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேடம். இரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும். பஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சந்நிதிகள் இருப்பதால் பஞ்சபூத தலங்கள் அனைத்தையும் இத்தலத்தில் ஒரு சேரத் தரிசிக்க முடியும். 8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும்.

திருஞானசம்பந்தரால் 11 தேவாரப்பாடல்கள் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலம். அருணகிரி நாதரால் பாடல் பெற்ற தலம். அம்பாள் கையில் உருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரை மொட்டும், அபய அஸ்தம், வரத அஸ்தம் ஆகியவற்றோடு காட்சி தருகிறார்.

இத்தலம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு அதனால் கோயிலின் சுவர்கள் பாழானது. இதனால் வருத்தமடைந்த சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தி கரை கரைந்து போகாமல் இருக்க பனங்கொட்டைகளை நட்டு, பனைமரங்களை வளர்த்து வந்தார். பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனால் நுங்கு முதலிய பயன்கள் கிடைக்கவில்லை. இதைக்கண்ட சிலர், சிவனடியார்களிடம், “எல்லாம் ஆண் பனையாக இருக்கிறது. ஒரு பெண் பனை கூட இல்லை. உமது சிவனின் அருள் இது தானோ?” எனக் கேலி செய்தனர். இதனால் வருத்தமடைந்த சிவனடியார், சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது இதுபற்றி கூறினர். உடனே சம்பந்தர் பதிகம் பாடினார். இறுதிப்பாடலில், “குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்” என முடித்தார். அப்போது ஆண்பனைகள் பெண் பனைகளாக மாறி குலை தள்ளின. இந்த அதிசயத்தை கண்டவர்கள் சைவர்களாக மாறினர். தலவிருட்சமாகிய அப்பனைகள் இன்றும் காய்த்து கனிந்து குலுங்குகின்றன. அப்பனையின் இனிய கனிகளை உண்பார் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர்; பிணியுடைவர்கள் பிணி நீங்கப்பெறுவர் என்று பெரியோர்கள் கூறுவதாகத் தலபுராணம் கூறுகிறது.

தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தினால் இத்தலத்தில் பனை மரங்களாகப் பிறந்து சாப விடுதலைக்காக காத்திருந்தனர். அப்போது சம்பந்தர் இறையருளால் ஆண்பனையை பெண்பனையாக்கினார். இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் சிவபதம் பெற்றன எனத் தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக அம்மன் சன்னதிக்கு முன் கருங்கல் பனைமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

இத்திருக்கோயிலில் நந்தி மூலவரை நோக்கி நிற்காது. அதற்கு நேர் மாறாக வாயிலை பார்த்தபடி இருக்கும். ஈசன் தேவர்களுக்கு வேதம் ஓதிக்கொண்டிருந்தாராம். அப்போது, சிவன், “தக்கவர்களைத் (அதாவது பாடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது வேறு யாராவது வந்து இடைஞ்சல் செய்துவிடக்கூடாது என்பதுபோல்) தவிர வேறு யாரையும் உள்ளே நுழைய விடாது பார்த்துக் கொள்” என நந்தியை பணித்தார் என்று புராணம் சொல்லுகிறது.

இன்னொரு வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகிறது. அதாவது தொண்டைமான் எதிரிகளுடன் போர் புரியச் செல்லத் தயக்கம் காட்டி இறைவனை வேண்ட,”பயப்படாதே உனக்கு துணையாக நம் நந்தியை அனுப்புகிறேன்” என்று ஈசன் கூறியதால் நந்தி வாயில் நோக்கி செல்வது போல் அமைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 11 தலையுள்ள இதை சனிக்கிழமை இராகு காலத்தில் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தை சம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரப்பாடலில் பாடியுள்ளார்கள். இங்குள்ள முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார். விநாயகர், முருகன், வயிரவர், திருமால், பிரமன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். இங்கு சிவன் வீர நடனம் புரிந்துள்ளார். சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு, இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் “செய்யாறு” என அழைக்கப்படுகிறது.

இத்தலவிநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம். ஒரே இடத்தில் நின்று இவர்கள் எல்லாவற்றையும் தரிசிக்க முடியும் என்பது இத்தலத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. சிவபக்தனான தொண்டைமான் என்ற மன்னனுக்காக சிவனின் ஆணைப்படி நந்தி தேவர் படைத்துணையாக சென்றுள்ளார். இதற்காக இங்கு நந்தி சிவனுக்கு எதிர் திசையில் திரும்பியுள்ளார்.

தேவாரப்பதிகம்:

குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின்று ஆடுவர்
அழையா மேயருள் நல்குமே.

–திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 8வது தலம்.

திருவிழா:

தை மாதம் – பிரம்மோற்சவம் – 10 நாட்கள். அமாவாசைக்கு மறுநாள் கொடி ஏற்றி காமதேனு கற்பக விருட்சம் – வாகனங்கள் வீதி உலா – கடைசி நாளில் இராவணேசுவரன் கயிலாய காட்சி. ஆடி மாதம் – லட்ச தீபம்.

ஆடி விசாகம் – ஞானசம்பந்தர் விழா, சுந்தரர் மோட்சம்.

சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரம், மாசி மகம், அப்பாத்துரை தோப்பு திருவிழா. பிரதோசம் சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி, சங்கடகர சதுர்த்தி (வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிசேகம்).

நர்த்தன கணபதிக்கு சதுர்த்தி அபிசேகம் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் தலமரமான பனைமரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்கு சகஸ்ரநாமம் –விளக்கு பூஜை.

ஆடி, தை மாதங்களுக்கு 108 குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. வருடத்தின் விசேச நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தின் போது சுவாமிக்கு விசேச பூஜைகள் அபிசேகங்கள் செய்யப்படும்.

பிரார்த்தனை:

இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். தலத்தில் உள்ள நாகலிங்கத்தை அபிசேகம் செய்தால் திருமணத்தடை நீங்கும். இத்தலத்தில் தலமரமாக உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் குழந்தைபாக்கியம் கண்டிப்பாக கிடைக்கிறது. வெளிநாட்டிலிருக்கும் பக்தர்கள் எல்லாம் கூட இந்த மரத்தின் பனம் பழத்தை வேண்டிக் கேட்டுப் பெறுகின்றதால் பல வெளிநாடுகளுக்கும்கூட அனுப்பப்பட்டு வருகிறது.

கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை அதன்மேல் 11 சர்ப்பம், அதன்மேல் இலிங்கம் அதன்மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது.

சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் இராகு காலத்தில் பூஜை செய்து வழிபட்டால் நாக தோசம் நிவர்த்தி ஆகும். ஆமை தோசமும் நிவர்த்தி ஆகிறது.

இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

கல்யாண உற்சவம் செய்து வைத்தல், கவசம் சாத்துதல், நாகாபரணம் செய்து வைத்தல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள். நெய்விளக்கு ஏற்றவும் செய்கிறார்கள். பால், தயிர், இளநீர், குங்குமம், விபூதி, பன்னீர், சந்தனம், எண்ணெய் அபிசேகம் சுவாமிக்கு செய்யலாம். சுவாமிக்கு வேட்டி, அம்பாளுக்கு சேலை வழங்கல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்கிறார்கள். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்கிறார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

மகான்_பட்டினத்தார்_குரு_பூஜை இன்று ஆடி_உத்திராடம்)

இன்று 
#ஆடி_பெளர்ணமி நாளில் 
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" 
என்று உலகிற்கு உணர்த்தியவரான 
#திருவெண்காடர் என்று அழைக்கப்படும் 
#மகான்_பட்டினத்தார்_குரு_பூஜை இன்று (முக்தி நாள்)
 (#ஆடி_உத்திராடம்)
மனிதன் எவ்வளவுதான் பொருள் ஈட்டினாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூடக் கையில் கொண்டுசெல்ல முடியாது’ என்று உணர்ந்தவர் தமது செல்வம் அனைத்தையும் துறந்து துறவியானார்.பூம்புகார் எனப்படும் காவிரிப் பூம்பட்டினத்தில் தோன்றி சென்னை, திருவொற்றியூரில் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் முக்தியடைந்த மகான் பட்டினத்தார். இவரின் குருபூஜை இன்று  கொண்டாடப்படுகிறது.

சிவநேசர் - ஞானகலை தம்பதிக்கு மகனாக கி.பி 11-ம் நூற்றாண்டில் அவதரித்தவர் பட்டினத்தார். இவரது இயற்பெயர் திருவெண்காடர் என்பதாகும். இவருக்கு `சுவேதாரண்யன்' என்ற பெயரும் உண்டு. இவர் பூம்புகாரில் வணிகத்தொழில் செய்துவந்த பெருவணிகராவார்.
`மனிதன் எவ்வளவுதான் பொருள் ஈட்டினாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூடக் கையில் கொண்டுசெல்ல முடியாது’ என்று உணர்ந்தவர் தமது செல்வம் அனைத்தையும் துறந்து துறவியானார். இவரை மக்கள் பட்டினத்தார், பட்டினத்தடிகள் என்று அன்போடு அழைத்தனர்.

காசி மன்னனான பத்ரகிரியார் பட்டினத்தாரின் சீடராவார். சிவன் முதலில் பத்ரகிரியாருக்குக் காட்சி கொடுத்து முக்தி அளித்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டுமென்று சிவபெருமானிடம் வேண்டினார்.

சிவபெருமானோ கரும்பு ஒன்றைப் பட்டினத்தாரிடம் கொடுத்து, `இதன் நுனி எங்கு இனிக்கிறதோ, அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்’ என்றார். அதன்பிறகு பட்டினத்தார் சிதம்பரம், சீர்காழி என்று பல்வேறு தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார்.

திருவொற்றியூர் தலத்தில் கரும்பின் நுனி இனிக்க திருவொற்றியூரிலேயே ஜீவ சமாதி அடைந்தார், பட்டினத்தார். அவரது ஜீவ சமாதி திருவொற்றியூரில் கடலை பார்த்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. இவரது குருபூஜை தினத்தில் பட்டினத்தாரின் ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்துக்கு எண்ணெய், கரும்புச் சாறு, அரிசி மாவு, கதம்பப் பொடி உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். குருபூஜை தினத்தில் பட்டினத்தாரை நினைத்து வழிபடுவதன் மூலம் மகானின் அருளைப் பெறலாம்.

🙏🏻காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே -பட்டினத்தார் 

🙏🏻🕉️கோடி கோடியாக பணமும் பொருளும் சம்பாதித்தாலும் உலகத்தை விட்டு நீ போகும் போது உன்னுடன் காதற்ற ஊசி கூட வராது என்று உலகிற்கு உணர்த்தியவர் பட்டினத்து அடிகள்.

🕉️🙏🏻ஈசன் தனக்கு உணர்த்தியதை உலகிற்கு உணர்த்த செல்வங்களை துறந்து துறவியானவர். 

#பட்டினத்துஅடிகள்வரலாறு:

👉பதினொன்றாம் திருமுறையில் கோயில் நான்மணி மாலை முதலான ஐந்து பிரபந்தங்களை அருளியவர் பட்டினத்து அடிகள் ஆவார்.

👉திருவெண்காடர், திருவெண்காட்டு அடிகள், பட்டினத்துப் பிள்ளையார் எனவும் இவர் தம் பெயர் வழங்கப்பெறும்.

👉காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வச் செழுங்குடியில் தோன்றி மனைத்தக்க மாண்புடைய மனைவியை மணந்து இல்லறம் இயற்றி வந்த இவர் பிறவி நோய்க்குக் காரணமான ஆசையை அறவே விட்டொழித்துத் துறவறம் பூண்டு உயர்ந்தவர்

👉காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் இவர் அவதரித்தார். பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். திருவெண்காடர் வளர்ந்து சிறந்து வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபத்தியில் சிறந்தவராய், சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார். நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்து வந்த இவருக்கு மக்கட் செல்வம் வாய்த்திலது.

👉திருவிடைமருதூரில் சிவனடித் தொண்டு பூண்டொழுகிய சிவசருமர் என்னும் அந்தணர் வறுமையால் துயருறுவதைக்கண்டு மனம் பொறாத மகாலிங்கப் பெருமான் மருதவாணர் என்னும் திருப் பெயரோடு அவர்முன் தோன்றி காவிரிப்பூம்பட்டினத்தில் மகப் பேறின்றி வருந்தும் திருவெண்காடரிடம் தன்னை விற்றுப் பொருள் பெற்று வறுமை நீங்குமாறு கூறியருளினார். சிவசருமர் இறைவன் கட்டளைப்படி மருதவாணருடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று திருவெண்காடரிடம் மருதவாணரை அளித்துப் பொருள் பெற்றுத் திருவிடைமருதூர் மீண்டு வறுமை நீங்கி இன்புற்றார்.

👉திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார்.

👉வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர்.

👉வந்தடைந்த வணிகர்களில் சிலர் திருவெண்காடரிடம் மருத வாணர் பித்தராய் வீணே பொருளைச் செலவிட்டு தவிடும் வரட்டி யுமே வாங்கி வந்துள்ளார் என்று குறை கூறினார். திருவெண்காடர் மருதவாணர் வாங்கி வந்த வரட்டியைச் சோதித்துப் பார்த்தபோது அவற்றுள் மாணிக்கக் கற்கள் இருத்தலையும் தவிட்டைச் சோதித்த போது அதனுள் தங்கப்பொடி மறைத்து வைக்கப்பட்டிருத்ததையும் கண்டு தன் மகன் கடல் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க இவ்வாறு செய்துள்ளான் என வியந்து அதனை வணிகர்களிடம் கூறிப் பெருமையுற்றார்.

👉சில நாட்களில் சென்றபின் அனைத்து வரட்டிகளையும் தவிட்டையும் சோதித்தபோது அவற்றுள் ஒன்றும் இல்லாதிருத்தலைக் கண்டு தன் மகன்மீது சினம் கொண்டு அவரைத் தண்டிக்கும் கருத் துடன் தனி அறையில் பூட்டி வைக்கச் செய்து வாணிபத்தைத் தான் கவனித்து வரலானார். மருதவாணரின் தாயார் அவரைக்காண அறைக்குச் சென்றபோது சிவபிரான் மருகனோடும் உமையம்மை யோடும் அங்கிருத்தலைக் கண்டு தன் கணவர்க்கு அறிவிக்க அவரும் சென்று அவ்வருட் காட்சியைக் கண்டு அறையைத் திறக்குமாறு பணித்தார். மருதவாணரிடம் தன் செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். மருதவாணர் மெய்ந்நூற்பொருளை அவருக்கு உபதேசம் செய்தார். எனினும் பெருஞ்செல்வராகிய அவர்க்கு உலகப் பற்று ஒழியாமை கண்டு காதற்ற ஊசி ஒன்றையும் நூலையும் `காதற்ற ஊசியும் வாராது காண்நும் கடைவழிக்கே` என்றெழுதிய ஒலை நறுக்கினையும் ஒரு பெட்டியில் வைத்து மூடி வளர்ப்புத் தாயிடம் அளித்துத் திருவெண்காடரிடம் அதனைச் சேர்ப்பிக்குமாறு கூறி இல்லத்தை விட்டு மறைந்து சென்றார்.

👉திருவெண்காடர் மருதவாணர் அளித்ததாக மனைவி அளித்த பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தபோது காதற்ற ஊசி, நூல் ஆகியன வும் அறவுரை அடங்கிய ஓலை நறுக்கும் இருக்கக்கண்டு அவை உணர்த்தும் குறிப்பை உணர்ந்து இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டுத் துறவறமாகிய தூய நெறியை மேற்கொண்டு ஊர் அம்பலத்தை அடைந்து அங்கேயே வாழ்ந்து வரலானார். திருவெண்காடர் தூறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி `நீர் துறவறம் பூண்டதனால் அடைந்த பயன் யாது` என வினவிய போது `நீ நிற்கவும் யான் இருக்கவும் பெற்ற தன்மையே அது` என மறுமொழி புகன்றார். எல்லோரும் திருவெண்காடரைத் திருவெண்காட்டு அடிகள் என அழைத்தனர்.

👉பெருஞ்செல்வரான திருவெண்காடர் துறவு பூண்டு பலர் வீடுகளுக்கும் சென்று பிச்சை ஏற்று உண்ணுதலைக் கண்டு வெறுப்புற்ற உறவினர் சிலர் அவர்தம் தமக்கையாரைக் கொண்டு நஞ்சு கலந்த அப்பத்தை அளிக்கச் செய்தனர். அதனை உணர்ந்த அடிகள் அதனை வாங்கி `தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்` எனக் கூறி தமக்கையார் வீட்டின் இறப்பையிற் செருகிய அளவில் வீடு தீப்பற்றி எரிந்தது. அடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் சிலநாள் தங்கி யிருந்து தன் தாயார் இறந்தபோது அவருக்கு ஈமக்கடன் செய்து முடித்துத் திருவிடைமருதூர் சென்று அங்குச் சில காலம் தங்கி மருதப் பிரானை வழிப்பட்டுப் பின் திருவாரூர் முதலிய தலங்களை அடைந்து அங்கிருந்தபோது முன்பு தமக்குக் கணக்கராய் இருந்த சேந்தனாரை அரசன் சிறைப்படுத்திய செய்தி கேட்டு `மத்தளை தயிருண்டானும்` என்ற பாடலைப் பாடிய அளவில் சிவகணங்கள் சேந்தனாரைச் சிறை யிலிருந்து மீட்டு அவர் முன் கொணர்ந்து நிறுத்தின. சேந்தனாரும் திருவெண்காட்டு அடிகளைப் பணிந்து `பிறவிச் சிறையிலிருந்து விடுதலை பெறும்` உபதேச மொழிகளைக் கேட்டு உய்தி பெற்றார். பின்னர் சீகாழி சிதம்பரம் கச்சி ஏகம்பம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருஒற்றியூர் சென்றார்.

👉திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார்.

👉இனிப் பட்டினத்து அடிகள் வரலாற்றில் மேலும் சில செய்திகள் சேர்ந்து வழங்கக் காணலாம். மண்ணுலகில் உள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரனைச் சிவபெருமான் நிலவுலகில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலாம்பிகை ஆகியோர்க்கு மகனாகப் பிறக்குமாறு செய்தருளினார். பெற்றோர் திருவெண்காடு சென்று வேண்டிப் பெற்ற பிள்ளையாதலின் திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஐந்து வயதில் தந்தையாரை இழந்த திருவெண்காடர் கல்வி பயின்று இறை உணர்வோடு வாணிபம் புரிந்து வந்தார்.

👉ஒருநாள் சிவபிரான் இவர் கனவில் அந்தணராகத் தோன்றி திருவெண்காடு வருமாறு பணிக்க அவ்வாறே திருவெண்காடர் திருவெண்காடு சென்றபோது கனவிடைத் தோன்றிய அந்தணர் காட்சி தந்து சிவதீட்சை வழங்கி அவர் கையில் ஒரு சம்புடத்தைக் கொடுத்து மறைந்தருளினார். சம்புடம் இவர் கைக்குக் கிடைத்தவுடன் தானே திறந்து கொண்டது. அதில் விநாயகர் சிவலிங்கம் இருக்கக் கண்டு திருவெண்காடர் நாள்தோறும் அவற்றைப் பூசித்து வந்தார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் இயற்றினார். நெடுநாள் ஆகியும் மகப்பேறு வாய்க்காமையால் இறைவனை வேண்டி வந்தார்.

திருவிடைமருதூரில் தன்னை வழிபட்டுச் சிவதருமங்கள் பல செய்து வந்த அந்தணராகிய சிவசருமர் சுசீலை ஆகியோர் வறுமை நிலையில் இருப்பதை உணர்ந்து மகாலிங்கப் பெருமான் அவர்கள் கனவில் தோன்றி, நாளை தீர்த்தக் கரையில் மருத மரத்தடியில் நாமே ஒரு குழந்தையாய் இருப்போம். அக்குழந்தையைக் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழும் வணிகராகிய திருவெண்காடரிடம் கொடுத்து எடைக்கு எடை பொன் பெற்று வறுமையின்றி வாழ்க என அருள் புரிந்தார். விழித்தெழுந்த சிவசருமரும் சுசீலையும் அக்குழந்தையை எடுத்து அணைத்து அதனைக் கொடுக்க மனம் இன்றி முடிவில் இறைவன் கட்டளைப்படி காவிரிப்பூம்பட்டினம் வந்தடைந்து திருவெண்காடரிடம் அளித்து எடைக்கு எடை பொன் பெற்று மீண்டனர்.

👉திருவெண்காடர் அக்குழந்தைக்கு மருதப்பிரான் எனப் பெயர் சூட்டி அன்போடு வளர்த்து வந்தார்.

👉மருதப்பிரான் கல்வி கேள்விகளில் வல்லவராய் வாணிபத்தில் சிறந்து விளங்கினார். வணிகர் சிலரோடு கடல் வாணிபம் சென்று மீண்டார். தான் கொண்டு சென்ற கப்பலில் எரு மூட்டைகளையும் தவிட்டையும் கொண்டு வந்த தம் மைந்தரைத் தேடியபோது அவர் மனைவியார் மைந்தர் தம்மிடம் கொடுத்துத் தந்தையிடம் சேர்ப்பிக்குமாறு கூறிய பெட்டியில் நிலையாமை உணர்த்தும் பொருள்களும் அறவுரையும் இருக்கக்கண்டு உண்மை ஞானம் கைவரப் பெற்றுத் துறவறம் பூண்டார். தம் தலைமைக் கணக்கராகிய சேந்தனாரை அழைத்துத் தமது கருவூலத்தைத் திறந்து வைத்துப் பலரும் கொள்ளை கொள்ளுமாறு செய்தார். தன்னைக் கொல்லத் திட்டமிட்ட உறவினர்க்குத் தக்க பாடம் புகட்டினார். தாயார் இறந்தபோது வாழைப் பட்டைகளை அடுக்கித் தாயின் உடலை அதன் மீது வைத்துச் சில பாடல்களைப் பாடி ஞானத்தீயால் அவ்வுடலை எரித்து ஈமக்கடன்களை ஆற்றி முடித்துப் பலசிவ தலங்களையும் வழி பட்டுக் கொண்டு உஜ்ஜயினியை அடைந்து அவ்வூரின் புறத்தே இருந்த சிறு காட்டில் விநாயகர் ஆலயத்தில் தங்கித் தவ நிலையில் இருந்தார்.

👉இரவில் பத்ரகிரி மன்னன் அரண்மனையில் அணிகலன்களைத் திருடியவர்கள் தாம் வேண்டிச் சென்று வெற்றியோடு களவாடிய அணிகலன்களில் மணிமாலை ஒன்றை விநாயகர்மீது வீசி எறிந்து சென்றனர். அம்மாலை விநாயகர் கோயிலில் தவமிருந்த திருவெண்காடர் கழுத்தில் விழுந்திருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் திருடர்களைத் தேடி அரண்மனைக் காவலர்கள் வந்தனர். அடிகள் கழுத்தில் மணிமாலை இருத்தலைக் கண்டு அவரைக் கள்வர் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று கருதி பிடித்துச் சென்றனர். அரசனிடம் தெரிவித்து கழுமரத்தில் அவரை ஏற்றுதற் பொருட்டு கழுமரம் இருக்கு மிடத்துக்கு அழைத்து வந்தனர். அடிகள் தான் குற்றம் செய்யாமல் இருக்கவும் தன்னைத் தண்டித்த அரசன் செயலுக்கு வருந்தி `என் செயலாவது யாதொன்றுமில்லை` என்ற பாடலைப் பாடிய அளவில் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அதனை அறிந்த பத்திரகிரி மன்னன் அடி களை அடைந்து பிழை பொறுக்குமாறு வேண்டியதோடு தானும் அரசு துறந்து அடிகளைப் பணிய பத்திரகிரியாரைத் திருவிடைமருதூர் சென்று கோபுர வாயிலில் தங்கியிருக்குமாறு செய்து அங்கிருந்து புறப் பட்டுப் பல தலங்களுக்கும் யாத்திரை சென்றார். பத்திரகிரியார் கையில் திருவோடு ஒன்றை ஏந்தி இரந்துண்டு திருவிடைமருதூர்க் கோயிலில் தங்கியிருந்தார்.

👉பட்டினத்து அடிகள் பல தலங்களுக்கும் சென்று பின் திருவிடை மருதூரை அடைந்து பத்திரகிரியாரை மேலைக் கோபுர வாயிலில் இருக்கச் செய்து தான் கீழைக் கோபுர வாயிலில் இருந்தார். பத்திர கிரியார் பலர் இல்லங்கட்கும் சென்று இரந்து வந்து தன் குருநாதர்க்கு அமுதளித்து எஞ்சியதைத் தான் உண்டு மீதத்தைத் தன்னைத் தொடர்ந்து வந்த நாய் ஒன்றிற்கு அளித்து மேலைக் கோபுர வாயிலில் இருந்தார்.

👉🕉️ஒருநாள் சிவபெருமான் சித்தராக வந்து பட்டினத்து அடிகளிடம் உணவு வேண்ட அடிகள் `யான் கந்தையும் மிகை` என்னும் கருத்தோடு வாழும் துறவி, என்பால் ஏதுவும் இல்லை. மேலைக்கோபுர வாயிலில் ஒரு குடும்பி உள்ளான் அவனிடம் சென்று கேளும் எனக்கூற, சித்தர் அவ்வாறே சென்று அடிகள் கூறியன வற்றைத் தெரிவித்துக் கேட்ட அளவில் பத்திரகிரியார் நம்மோடு இணைந்துள்ள உணவேற்கும் ஓடும் பரிவு காட்டும் நாயும் அல்லவா நம்மைக் கும்பியாக்கின என அவ்வோட்டை கீழே எறிய ஓடு உடைந்து சிதறியது. நாயின்மீதுபட்டு நாயும் இறந்தது. சித்தர் மறைந்தார். நாய் அடியார் பரிகலம் உண்ட சிறப்பால் காசிராசன் மகளாகச் சென்று பிறந்தது.

👉சில ஆண்டுகளுக்குப்பின் அப்பெண் தந்தையோடு திருவிடைமருதூர் வந்து பத்திரகிரியாரைப் பணிந்து `அடிநாய் மீண்டும் திருவடிப்பேற்றுக்கு வந்துள்ளது` எனக் கூற பத்திரகிரியார் அப்பெண்ணைப் பட்டினத்து அடிகளிடம் அழைத்து வந்து ஞானிகளின் பரிகலம் உண்ட சிறப்பால் அரச மரபில் பிறந்து வளர்ந்துள்ள இப் பெண்ணுக்கு வீடுபேறு அருளுமாறு வேண்ட அங்கு ஒரு சிவசோதி தோன்றியது. அப்பெண் அச்சோதியில் கலந்து வீடு பெற்றார். பத்திரகிரியாரும் குருநாதர் ஆணைப்படி அச்சோதியில் கலந்து இறையடிப் பேற்றை எய்தினார்.

👉அடிகள் இறைவன் கருணையை வியந்து `என்னையும் என் வினையையும் இங்கு இருத்தி வைத்தனை போலும்` என இரங்கிக்கூற சிவபிரான் திருஒற்றியூருக்கு அவரை வருமாறு பணித்தருளினார். அடிகள் எப்போது தனக்கு முத்தி சித்திக்கும் எனக் கேட்க பெருமான் பேய்க்கரும்பு ஒன்றை அவர் கையில் தந்து இக்கரும்பு எங்கு தித்திக்கிறதோ அங்கே உனக்கு முத்தி சித்திக்கும் எனக் கூறியருளினார். அடிகள் இறைவன் அருளியவாறு திருவொற்றியூரை அடைந்தார். அங்குச் சில நாள் தங்கினார். கடற்கரையில் இடைச் சிறுவர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது கையில் கொண்ட கரும்பு இனிக்கத் தொடங்கியது. பட்டினத்து அடிகள் இறைவன் திருவருளை எண்ணிய நிலையில் அத்தலத்தில் மணலில் மறைந்து சிவலிங்கத் திருவுருவாய் வெளிப்பட்டருளினார்.

👉பட்டினத்து அடிகள் காலம் கி.பி. 10 - ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகும்.

பட்டினத்தார் பாடிய திருஅகவல்:

"நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க !.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 


108 திவ்யதேசங்கள் பட்டியலில் முதலில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர்....

திவ்யதேசங்கள் பட்டியல்
இந்தப் பட்டியலில் 108 திவ்யதேசங்கள் பட்டியலில் முதலில் திருத்தலத்தின் பெயரும், அடைப்புக் குறிக்குள் அத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாள் மற்றும் அவரது தேவியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதற்கடுத்து அந்தத் தலமிருக்கும் மாநிலம் அடைப்புக் குறிக்குள் ஊர்/மாவட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது...
1. ஸ்ரீரங்கம் (ஸ்ரீரங்கநாதர் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (திருச்சி)

2. திருஉறையூர் (அழகிய மணவாளன்-வாஸலக்ஷ்மி) தமிழ்நாடு (திருச்சி)

3. தஞ்சை (நீலமேகம் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)
4. சுந்தர்ராஜப்பெருமாள் (வடிவழகியநம்பி - அழகியவல்லி) தமிழ்நாடு (திருச்சி)

5. உத்தமர் கோயில் (புருஷோத்தமன் - பூர்ணவல்லி) - தமிழ்நாடு (திருச்சி)

6. திருவெள்ளரை (புண்டரீகாக்ஷன் - பங்கயச் செல்வி) - தமிழ்நாடு (திருச்சி)

7. புள்ளபூதங்குடி (வல்வில் ராமன் - பொற்றாமறையாள்) - தமிழ்நாடு (கும்பகோணம்)

8. கோயிலடி (அப்பக்குடத்தான் - இந்திராதேவி(கமலவல்லி)) - தமிழ்நாடு (திருச்சி)

9. ஆதனூர் (ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)
10. தேரழுந்தூர் (ஆமருவியப்பன் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)

11. சிறு புலியூர் (அருமாகடல் - திருமாமகள்) - தமிழ்நாடு (சீர்காழி)

12. திருச்சேரை (சாரநாதன் - சாரநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

13. தலைச்சங்காடு (நாண்மிதியப்பெருமாள் - தலைச்சங்கநாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)
14. கும்பகோணம் (சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி) - தமிழ்நாடு (குடந்தை)

15. கண்டியூர் (ஹரசாபவிமோசனர் - கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)

16. ஒப்பிலியப்பன் (ஒப்பிலியிப்பன் - பூமிதேவி) - தமிழ்நாடு (குமப்கோணம்)

17. திருக்கண்ணபுரம் (சௌரிராஜன் - கண்ணபுரநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

18. திருவாலி,திருநகரி (வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் - அமிர்தவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

19. நாகப்பட்டினம் (சௌந்தர்யராஜன் - சௌந்தர்யவல்லி) - தமிழ்நாடு (நாகப்பட்டினம்)

20. நாச்சியார்கோயில் (நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார்) - தமிழ்நாடு (குமபகோணம்)

21. நாதன் கோயில் (ஜகந்நாதர் - செண்பகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

22. மாயவரம் (பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)

23. சிதம்பரம் (கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

24. சீர்காழி (தாடாளன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

25. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) (ஜகத்ரட்சகன் - பத்மாசநவல்லி)- தமிழ்நாடு (கும்பகோணம்)
26. திருக்கண்ணங்குடி (லோகநாதன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

27. திருக்கண்ணமங்கை (பக்தவத்சலன் - அபிசேகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

28. கபிஸ்தலம் (கஜேந்த்ரவரதர் - ரமாமணிவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்) 

29. திருவெள்ளியங்குடி (கோலவில்லி ராமர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

30. மணிமாடக் கோயில் (சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

31. வைகுந்த விண்ணகரம் (வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

32. அரிமேய விண்ணகரம் (குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

33. தேவனார் தொகை (தேவநாயகர் - ஸமுத்ரதநயா) - தமிழ்நாடு (சீர்காழி)

34. வண்புருடோத்தமம் (புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

35. செம்பொன் செய்கோயில் (செம்பொன்னரங்கர் - சவேதபுஷ்பவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

36. திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால் - செங்கமலவல்லி) தமிழ்நாடு (சீர்காழி)

37. திருமணிக்கூடம் (மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)

38. திருக்காவளம்பாடி (கோபாலக்ருஷ்ணன் - செங்கமலநாச்சியார்)- தமிழ்நாடு (சீர்காழி)

39. திருவெள்ளக்குளம் (ஸ்ரீநிவாஸன் - பத்மாவதி) - தமிழ்நாடு (சீர்காழி)

40. திருபார்த்தன் பள்ளி (தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன்) - தமிழ்நாடு (சீர்காழி)

41. திருமாலிருஞ்சோலை (அழகர் - சுந்தரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

42. திருக்கோட்டியூர் (சௌம்யநாராயணர் - மஹாலக்ஷ்மி) - தமிழ்நாடு (மதுரை)

43. திருமெய்யம் (சத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார்) - தமிழ்நாடு (மதுரை)

44. திருப்புல்லாணி (கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி)- தமிழ்நாடு (மதுரை)

45. திருத்தண்கால் (தண்காலப்பன் - அன்னநாயகி) - தமிழ்நாடு (மதுரை)

46. திருமோகூர் (காளமேகம் - மோஹனவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

47. கூடல் அழகர் கோயில் (கூடலழகர் - மதுரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

48. ஸ்ரீவில்லிபுத்தூர் (வடபத்ரசாயி - ஆண்டாள்) - தமிழ்நாடு (ஸ்ரீவில்லிபுத்தூர்)

49. திருக்குருகூர் (நவதிருப்பதி) (ஆதிநாதர் - ஆதிநாதவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

50. தொலைவில்லிமங்கலம் (இரட்டைத் திருப்பதி, நவதிருப்பதி) (அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

51. வானமாமலை (நவதிருப்பதி) (தோத்தாத்ரி நாதர் - ஸ்ரீவரமங்கை) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

52. திருப்புளிங்குடி (நவதிருப்பதி) (காய்ச்சினவேந்தன் - மலர்மகள்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

53. திருப்பேரை (நவதிருப்பதி) (மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

54. ஸ்ரீவைகுண்டம் (நவதிருப்பதி) (கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

55. திருவரகுணமங்கை(நத்தம்)(நவதிருப்பதி) (விஜயாஸனர் - வரகுணவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

56. திருக்குளந்தை (நவதிருப்பதி) (மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

57. திருக்குறுங்குடி (வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

58. திருக்கோளூர் (நவதிருப்பதி) (வைத்தமாநிதி - கோளூர்வல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

59. திருவனந்தபுரம் (அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலக்ஷ்மி) - கேரளம் (கோவளம்)

60. திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) (திருக்குறளப்பன் - கமலவல்லி)- தமிழ்நாடு (கன்னியாகுமரி)

61. திருக்காட்கரை (காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி) - கேரளா (கோட்டயம்)

62. திருமூழிக்களம் (திருமூழிக்களத்தான் - மதுரவேணி) - கேரளா (கோட்டயம்)

63. திருப்புலியூர் (மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார்) - கேரளா (கோட்டயம்)

64. திருச்செங்குன்றுர் (இமையவரப்பன் - செங்கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)

65. திருநாவாய் (நாராயணன் - மலர்மங்கை நாச்சியார்) - கேரளா (திருச்சூர்)

66. திருவல்லவாழ் (கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து) - கேரளா (கோட்டயம்)

67. திருவண்வண்டுர் (பாம்பணையப்பன் - கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)

68. திருவட்டாறு (ஆதிகேசவன் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கன்னியாகுமரி)

69. திருவித்துவக்கோடு (உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி) - கேரளா (திருச்சூர்)

70. திருக்கடித்தானம் (அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார்) - கேரளா (கோட்டயம்)

71. திருவாரன்விளை (திருக்குறளப்பன் - பத்மாசனி) - கேரளா (கோட்டயம்)

72. திருவஹீந்திபுரம் (தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி) - தமிழ்நாடு (கடலூர்)

73. திருக்கோவலுர் (திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார்) - தமிழ்நாடு (கடலூர்)

74. திருக்கச்சி (வரதராஜன் - பெருந்தேவி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

75. அஷ்டபுஜகரம் (ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)
76. விளக்கொளி பெருமாள் (தூப்புல்) (தீபப்ரகாசர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

77. திருவேளுக்கை (முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

78. திருப்பாடகம் (பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

79. திருநீரகம் (ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

80. நிலாத்திங்கள் (நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

81. திரு ஊரகம் (உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

82. திருவெக்கா (யதோத்தகாரி - கோமளவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

83. திருக்காரகம் (கருணாகரர் - பத்மாமணி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

84. திருக்கார்வானம் (கள்வர்பெருமாள் - கமலவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

85. திருக்கள்வனூர் (ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

86. திருப்பவளவண் (பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார்)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

87. பரமேச்சுரவிண்ணகர் (பரமபதநாதன் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

88. திருப்புட்குழி (விஜயராகவன் - மரகதவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

89. திருநின்றவூர் (பத்தவத்ஸலர் - ஸுதாவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

90. திரு எவ்வுள் (வைத்ய வீரராகவர் - கனகவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

91. திருநீர்மலை (நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை) - தமிழ்நாடு (சென்னை)

92. திருவிடவெந்தை (நித்யகல்யாணர் - கோமளவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

93. திருக்கடல்மல்லை (ஸ்தலசயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார்) - தமிழ்நாடு (சென்னை)

94. திருவல்லிக்கேணி (பார்த்தசாரதி - ருக்மணி)- தமிழ்நாடு (சென்னை)

95. திருக்கடிகை (சோளிங்கர்) (யோகநரசிம்மர் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

96. திருவேங்கடம் (திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை) - ஆந்திரப் பிரதேசம்

97. அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) (லட்சுமிநரஸிம்ஹன் - செஞ்சுலக்ஷ்மி) - ஆந்திரப் பிரதேசம்

98. திருவயோத்தி (சக்ரவர்த்திதிருமகன் - சீதாபிராட்டி) - உத்தரப்பிரதேசம்

99. நைமிசாரண்யம் (தேவராஜன் - ஹரிலக்ஷ்மி) - உத்தரப்பிரதேசம்

100. சாளக்கிராமம் (ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி) - நேபாளம்

101. பத்ரிகாச்ரமம் (பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி) - உத்தராஞ்சல்

102. தேவப்ரயாகை (நீலமேகம் - புண்டரீகவல்லி) - உத்தராஞ்சல்

103. திருப்ரிதி (பரமபுருஷன் - பரிமளவல்லி) - உத்தராஞ்சல்

104. திரு த்வாரகை (கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார்) - குஜராத்

105. வடமதுரை (கோவர்தனகிரிதாரி - சத்யபாமா) - டெல்லி

106. திருவாய்ப்பாடி (நவமோஹன க்ருஷ்ணன் - ருக்மணி,சத்யபாமா) - டெல்லி

107. திருப்பாற்கடல் (க்ஷீராப்திநாதன் - கடலமகள் நாச்சியார்) - புவியில் இல்லை

108. பரமபதம் (பரமபதநாதன் - பெரியபிராட்டியார்) - நாதன் திருவடி
வைணவப் பெரியார்களான பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்ற சிறப்பு மிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் என்று அழைக்கப்படுகின்றன. அந்தப் பாடல்கள் மங்களாசாசனம் என அழைக்கப்படுகின்றன.

இப்படிப் புகழ்பெற்ற 108 திருத்தலங்கள் திவ்யதேசங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த 108 திருத்தலங்களில் கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இந்த இரு தலங்கள் தவிர மீதமுள்ள 106 தலங்களுக்கும் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் வைணவ சமய வழிபாடாக உள்ளது.
நாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள்
ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;

“ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு; ஓரிரண்டாம் - சீர்நாடு
ஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட நாடாறிரண்டு
கூறு திருநாடொன்றாக் கொள்”

அதாவது,

சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, திருநாடு (ஸ்ரீவைகுந்தம்) 1 ஆக மொத்தம் 108 திவ்யதேசங்கள் எனக் குறிப்பிடுகிறார்.

திவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம்
திவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம் கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன.

1. கிடந்த திருக்கோலம் - 27 திவ்ய தேசங்கள்
2. இருந்த திருக்கோலம் - 21 திவ்ய தேசங்கள்
3. நின்ற திருக்கோலம் - 60 திவ்ய தேசங்கள்
இறைவன் திருக்கோல திசைகள்
திவ்யதேசங்களில் இறைவன் திருக்கோலம் பார்க்கும் திசைகள் கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன.

1. கிழக்கு திசை நோக்கி - 79 திவ்ய தேசங்கள்
2. மேற்கு திசை நோக்கி - 19 திவ்ய தேசங்கள்
3. வடக்கு திசை நோக்கி - 3 திவ்ய தேசங்கள்
4. தெற்கு திசை நோக்கி - 7 திவ்ய தேசங்கள்.
"" வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதியே காவிரி. வைகுண்டமே ஸ்ரீரங்கம். வாசுதேவனே அரங்கன். 
பிரணவமே விமானம். விமானத்தின் நான்கு கலசங்களே வேதங்கள். உள்ளே பள்ளி கொண்டிருக்கும் அரங்கனே பிரணவத்தால் விவரிக்கப் படும் பரம்பொருள்'' என்றெல்லாம் ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஆலயங்களைத் திவ்யதேசங்கள் என்று புகழ்வர். திவ்யதேசங்கள் 108 என்கிறோம்.
 
ஒருமுறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், ""வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?'' என்று கேட்க, ""ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச'' என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். 

ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. இந்த திவ்ய தேசங்களை எல்லாம் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.... 

நீருக்கடியில் சிவன் ஹரிச்சந்திரேஷ்வர், மகாராஷ்டிரா


ஸ்ரீ ஹரிச்சந்திரேஷ்வர் கோயில், ஹரிச்சந்திரேஷ்வர், மகாராஷ்டிரா 

இறைவன் : ஹரிச்சந்திரேஷ்வர்

ஹரிச்சந்திரகாட் இந்தியாவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கோட்டை. அதன் வரலாறு மல்ஷேஜ்காட், கோத்தலே கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் சுற்றியுள்ள பிராந்தியத்தை பாதுகாப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது மல்ஷேஜ்காட்டில் அமைந்துள்ள அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கோட்டை. இது 4,670 அடி உயரத்தில் ஏறும். ஹரிச்சந்திரகாட் ஒரு பழங்கால கோட்டை. இதன் தோற்றம் 6 ஆம் நூற்றாண்டில் கல்கூரி வம்சத்தின் ஆட்சியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பண்டைய இந்தியாவில் நிலவிய கற்களிலிருந்து சிற்பங்களை செதுக்குவதற்கான சிறந்த கலைக்கு இந்த கோயில் அற்புதமான எடுத்துக்காட்டு. இது அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 16 மீ உயரம் கொண்டது. இந்த கோயிலைச் சுற்றி ஒரு சில குகைகள் மற்றும் பழங்கால நீர் தொட்டிகள் உள்ளன. மங்கல் கங்கை நதி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு தொட்டியிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. கோயிலின் மேற்பகுதி வட இந்திய கோயில்களுடன் கட்டுமானத்தை ஒத்திருக்கிறது. இதேபோன்ற கோயில் புத்த-கயாவிலும் அமைந்துள்ளது. இங்கே நாம் பல கல்லறைகளைக் காணலாம், அதில் ஒரு பொதுவான கட்டுமானம் காணப்படுகிறது. இவை நன்கு முடிக்கப்பட்ட கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அமைப்பதன் மூலம் கட்டப்பட்டுள்ளன. கோயிலுக்கு அருகில் மூன்று முக்கிய குகைகள் உள்ளன. கோயிலுக்கு அருகிலுள்ள கோட்டைகள் குடிநீரை வழங்குகின்றன. சிறிது தொலைவில், காஷிதிர்தா என்ற மற்றொரு கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கவர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இது ஒரு பெரிய பாறையிலிருந்து செதுக்கப்பட்டுள்ளது. நான்கு பக்கங்களிலிருந்தும் நுழைவாயில்கள் உள்ளன. பிரதான நுழைவாயிலில் முகங்களின் சிற்பங்கள் உள்ளன. இவை கோவிலின் காவலர்களின் முகங்கள். நுழைவாயிலின் இடது பக்கத்தில் தேவ்ஸ்நாக்ஸ்ரி கல்வெட்டு உள்ளது,

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

Followers

ஆட்கொண்டார் என்றால் என்ன?

திருவையாறு ஆட்கொண்டார்  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற ஐயாறப்பர் திருக்கோயிலின் தெற்கு கோபுர வாயிலில் அருள்ப...