_*நந்தி குறித்த சிறப்புத் தகவல்கள்*_
* நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
* நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.
* நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
* `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.
* நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும்.
* சிவாலயங்களில் துவாரபாலகர்கள் இருவரின் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.
* பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது தொன்ம நம்பிக்கை.
* ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்.
* தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.
* நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.
* நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.
* நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.
* சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
* நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.
* நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
* நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.
* எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.
* சிவபெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
* முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.
* மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.
* திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் ஒன்பது வகையான த ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
* சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரம்மாவுக்கு கற்றுக் கொடுக்க, அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.
* காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.
* பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.
* நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.
* நாகப்பட்டிணம் மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி உள்ளது.
* மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
* கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
* ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.
* தஞ்சை பெரிய கோவில் நந்தி ஒரே கல்லால் ஆனது.
* மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் கோயில்களிலும் காணலாம்.
* திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
* திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.
* சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.
🌷🌷
No comments:
Post a Comment