Sunday, June 11, 2023

பிரான்மலை (திருக்கொடுங்குன்றம்) கொடுங்குன்றநாதர் ஆலயம்.எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன்

சிவாயநம
நமசிவாய
பிரான்மலை (திருக்கொடுங்குன்றம்) கொடுங்குன்றநாதர் ஆலயம்.

எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள்  திருக்கூட்ட சிவனடியார்களுடன் திருக்கொடுங்குன்றம் கொடுங்குன்றநாதர் சுவாமி ஆலயதரிசனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டம் திருப்புத்தூரில் இருந்து  20 கி.மீ தூரத்தில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகே உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,
பாண்டிநாட்டு தலங்களில் 5 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 276 தலங்களில் 195 வது  தலமாகவும் உள்ளது பிரான்மலை சிவாலயம்.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சி செய்த பகுதியில் இயற்கை சூழலில் அமைந்த தலம். 

இக்கோயில் மூன்றடுக்கு சிவன் கோவிலான இம்மலைக்கோவிலில் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் சிவபெருமான் காட்சி தருகிறார்.பாதாளத்தில் உள்ள கோவிலில் கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகி அருள் பாலிக்கிறார்கள். பூலோகம் என சொல்லப்படும் மத்தியில் உள்ள கோவிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதரும் அருள் பாலிக்கிறார்.
மேல்நிலை கோவிலாக கைலாயம் எனப்படும் இங்கு தேனம்மை என்ற அம்பிகையுடன் மங்கைபாகராக காட்சி தருகிறார்.

கைலாயம் எனப்படும் மேலடுக்கில் உள்ள சன்னதி குடவரைக் கோவிலாக அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மங்கைபாகர் அம்பிகையுடன் இணைந்து அகத்தியருக்கு திருமண காட்சியை அருளிய கோலத்தில் காட்சி தருகிறார். இதை சிவனின் அன்னியோன்ய கோலம் என்கிறார்கள்.

குறிஞ்சி நிலத்தில் அமைந்த கோயில் என்பதால் இத்திருக்கோயிலில் இந்த நிலத்திற்குரிய தேன், திணைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த பொருள்களை நெய்வேத்யமாக படைக்கின்றனர். மற்ற சிவன் கோவில்களில் போல் சன்னதியின் எதிரில் நந்தி இக்கோவிலில் கிடையாது. சிவன் அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்த போது நந்தி தேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார் என்ற அடிப்படையில் இங்கு நந்தி நிறுவப்படவில்லை. மேலும் இவ்வாலயத்தில் கொடிமரமும், பலிபீடமும் கிடையாது. மற்ற கோவில்களில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்யும் பொழுது சுவாமி சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் மூலிகை மருந்துகள் வைப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் சிவன் சிலைக்கு கீழே இவ்வாறு வைக்கப்படுவது இல்லை.

இவர் முதலும் முடிவும் இல்லாதவராக இருப்பதால் அஷ்டபந்தனம் சாத்தப்படுவதில்லை என்கிறார்கள். இவருக்கு ஒருமுறை அணிவித்த வஸ்திரத்தை மறுமுறை அணிவிப்பது இல்லை. ஒவ்வொரு முறையும் புத்தாடையே அணிவிக்கின்றனர். இத்திருத்தலத்தில் சிவன் கையில் நான்கு வேதங்களை வைத்தபடி காட்சி தருகிறார். எனவே இவருக்கு வேதசிவன் என்ற பெயரும் உண்டு. கல்வியில் சிறப்பிடம் பெற மாணவர்கள் இவருக்கு வெள்ளை நிற மலர்மாலை சாத்தி வெண்நிற வஸ்திரங்களை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.

அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடன காட்சி காட்டியதாக ஐதீகம். இக்கோவிலில் தனி சன்னதியில் இருக்கும் முருகன் வயோதிக கோலத்தில் காட்சி தருகிறார். வழக்கமாக முருகன் சன்னதிக்கு எதிரில் மயில்வாகனம் தான் இருக்கும். ஆனால் இங்கு முருகன் சன்னதிக்கு எதிரில் யானை இருக்கிறது. முருகன் பத்மாசுரனை சம்ஹாரம் செய்ததால் தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இத்தலத்தில் இரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றதாக ஐதீகமுண்டு.

இந்த இரு லிங்கங்களே கொடுங்குன்றநாதர் சன்னதி பிரகாரத்தில் சொக்கலிங்கம், இராமலிங்கம் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்கள். பெயரே தெரியாத மரம் ஒன்றின் கீழ் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி யோக நிலையில் சுமார் நாலேமுக்கால் அடி உயரம் கொண்ட திருவுருவச் சிலை இருக்கிறது. இப்பகுதியில் இது போன்ற திருவுருவச்சிலை வேறு எங்கும் காணக்கிடைப்பது இல்லை. இத்திருத்தலத்தின் தலவிருட்சமாக பல நூறாண்டு கண்ட உறங்காபுளி என அழைக்கப்படும் புளியமரம் உள்ளது. இம்மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இத்தலத்தில் பைரவருக்கென தனி சன்னதி உள்ளது.

இத்திருக்கோயில் தீர்த்தம் சிறப்பு மிக்கதாகும். இத்தீர்த்தத்தம் குஷ்டவிலக்கி சுனை என்று அழைக்கப்படுகிறது. இச்சுனையின் நீரில் நாள்பட்ட தோல்வியாதி உள்ளவர்கள் இச்சுனையில் குளித்து சிவனை வழிபட்டால் தோல்வியாதி நீங்கும் என்பது ஐதீகம். ஒரு ஏழை மூதாட்டி இத்திருத்தலம் கட்டுவதற்கு தன்னால் முடிந்த ஒரு அணா பணத்தை தந்ததாகவும் அதை வாங்க மறுத்ததால் அதன் பின் கட்டிய கோவிலின் சுவர்கள் நிலைபெறாமல் சரிந்தன. அதையடுத்து அந்த மூதாட்டி கொடுத்த பணத்திற்கேற்ப சிறு கல்துண்டு பதித்தவுடன் சுவர் நின்றதாக கூறுகின்றனர். அதற்கு சான்றாக பைரவர் ஆலயத்தில் பெரிய சுற்றுச்சுவர்களுக்கிடையே சிறு கல்துண்டு நிறுவப்பட்டுள்ளது.

இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் மலையை தூரத்தில் இருந்து கண்ட பொழுது இம்மலையே சிவனாக காட்சி தந்தது. இதையடுத்து அத்தலத்தில் தன் கால் படக்கூடாது எனக்கூறி ஐந்து மைல் தூரத்தில் நின்றே இத்தலம் பற்றி பதிகம் பாடியுள்ளார். எம் பிரான் மலை என சொல்லி பதிகம் பாடினார். எனவேதான் இத்தலம் எம்பிரான்மலை என பெயர் பெற்று பிற்காலத்தில் பிரான்மலை என மறுவியது.

இன்றும் இத்தலத்தில் பாரி உற்சவம் என்னும் ஒரு விழா எடுக்கிறார்கள். இவ்விழாவில் முல்லைக்கு தேர் கொடுத்த வைபவம் நடக்கும். பாரி மன்னனின் திருவுருவச் சிலையை ஒரு தேரில் வைத்து பறம்பு மலை அடிவாரத்திற்கு கொண்டு செல்கிறார்கள் அங்கு முல்லைக் கொடியின் அருகில் தேரை நிறுத்திவிட்டு திருவுருவச் சிலையை கோவிலுக்கு திருப்பி கொண்டுவந்து விடுவர். அதன் பின் அப்பகுதி மக்களுக்கு மன்னர் தானம் செய்யும் படி அரிசி அளப்பு வைபவம் நடக்கும். அப்போது பக்தர்களுக்கு அரிசியை தானமாக தருகின்றனர்.

இப்படி பல சிறப்புகளை கொண்ட திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பட்ட  இந்த அற்புதமான
ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன்  அடியேனுக்கு அளித்தார்.

மேலும் அடியார்பெருமக்கள் அனைவரும் இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டு இவரின் திருவருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறோம்.

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

Followers

சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்...

🌹ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  🌹உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்க ள...