Wednesday, March 13, 2024

அபிஷேக நீரின் மகிமைகள்



அபிஷேக நீரின் மகிமைகள்
தமிழ்நாட்டில் இன்றைக்கு 45,000 ஆலயங்கள் இருக்கின்றன;கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான ஆலயங்களை மட்டுமே இப்படிப்பட்ட பட்டியலில் சேர்த்திருக்கின்றோம்;மற்ற புதிய கோவில்களை சேர்த்தால் 10,00,000 க்கும் மேலாக இருக்கும்;

தினமும் இந்த ஆலயங்களில் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;அபிஷேகம் மூலஸ்தானமாகிய கருவறையில் இருந்து வெளிவரும் பாதைக்கு கோமுகம் என்று பெயர்/ கோமுகம் வழியாக வெளிவரும் இடத்தில் பிரம்மா கோஷ்டமாக (பக்கவாட்டு தெய்வம்) அருள்புரிந்து வருகின்றார்;

சைவத்தின் தலைநகரமாக விளங்கும் திருவண்ணாமலை (விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கின்றது)யில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இங்கே உள்பிரகாரத்தில் உள்ள கோமுகத் தொட்டியில் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் இடைக்காட்டு சித்தரும்,மலப்புழு சித்தரும் தோன்றினார்கள்;

இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீரில் சந்தனம்,இளநீர்,பால்,தண்ணீர் என்று எது வந்தாலும் அதை நமது தலையில் தெளிக்கும் பழக்கம் இன்றும் இருக்கின்றது;இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீர் தொட்டிக்குள் விழும் முன்பாக நமது கைகளால் பிடித்து நமது தலையில் தெளித்தால் 200% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த 90 நிமிடங்களுக்குள் எடுத்து அதை நமது தலையில் தெளித்தால் 100% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த ஒரு நாளுக்குள் தெளித்தால் 50% பலனையும் பெறலாம்;(ஏனெனில்,இந்த அபிஷேக நீரானது கங்கை நீரை விடவும் 100 கோடி மடங்கு உயர்வானது)

ஒரு வேளை இன்று அனுஷம் நட்சத்திர நேரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை சிறிது பயன்படுத்தினாலும், பயன்படுத்தாமல் விட்டுவிட்டாலும் மீதி நீரை வீட்டில்/வீட்டுக்கு அருகில் இருக்கும் துளசிச் செடி மீது ஊற்றி விட வேண்டும்;அல்லது வில்வ மரத்தின் மீது ஊற்ற வேண்டும்; அல்லது வேறு ஏதாவது ஒரு செடியின் மீது ஊற்றிவிடலாம்;

ஒவ்வொரு நட்சத்திரம் நிற்கும் அன்றும் இந்த அபிஷேகத் தண்ணீரை எப்படி,எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை அகத்திய மகரிஷி 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துவிட்டார்;அவரது வம்சாவழியைச் சேர்ந்த இடியாப்ப சித்தர், தமது சீடராகிய சத்குரு வேங்கடராம சுவாமிகளுக்கு 1950 களில் தமிழ்நாட்டில் அண்ணாமலையில் நேரடியாக உபதேசம் செய்திருக்கின்றார்;

நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகள் நமக்கு உபதேசம் செய்ததை இங்கே உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளுக்கு இக்கணத்தில் நாம் நன்றிகள் தெரிவித்துவிட்டு இந்த ஆன்மீக உபதேசத்தை பின்பற்றிட ஆரம்பிப்பதுதான் முறை!

பரணி நட்சத்திரம்,மகம் நட்சத்திரம் வரும் நாட்களில் பிடிக்கும் அபிஷேகத்தண்ணீர் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,அதன் தெய்வீகத் தன்மையை இழக்காமல் இருக்கும்;

வீட்டில் வயதானவர்கள் இறக்கும் தருவாயில் அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடுவதன் மூலமாக அவர்கள் இப்பிறவியில் எவ்வளவு பெரும் பாவம் செய்திருந்தாலும் அது இந்த ஒரு சிறு செயலால் மன்னிக்கப்பட்டு,அவர்கள் புண்ணிய ஆத்மாவாகி விடுகின்றார்கள்;ஒருவேளை,வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இறந்துவிட்டால்,இறந்த 6 மணி நேரத்திற்குள் இவ்வாறு செய்யலாம்;அப்படி இறந்த பின்னர் கூட,அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடலாம்;

இவை அனைத்தும் சித்தர் பெருமக்களால் ஆராய்ந்து நமக்கு உபதேசிக்கப்பட்ட தெய்வீக ரகசியம் ஆகும்;

அசுபதி நட்சத்திரம்; கடுமையான கண்திருஷ்டி விலகிவிடும்;கெட்ட கனவுகள் வராது;கனவில் புலம்புபவர்கள் இனிமேல் புலம்பமாட்டார்கள்;தூக்கத்தில் உளறுபவர்களின் உளறல்கள் நின்று விடும்;

பரணி நட்சத்திரம்: மரண பயம் நீங்கும்;

கார்த்திகை நட்சத்திரம்:பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேருவர்;பிரிந்திருக்கும் ரத்த உறவுகள் ஒன்றாக வாழ வழிமுறை கிடைக்கும்;

ரோகிணி;குழந்தைகளின் பயம் நீங்கும்;அனுசுயா தேவி இந்த நட்சத்திரத்தில் பிடித்த அபிஷேக நீரைக் கொண்டு பல யுகங்கள் முறைப்படி பூஜை செய்து வந்தாள்;அதனாலேயே,மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீதத்தாத்தரேயரை மகனாகப் பெற்றாள்;

மிருகசீரிடம்:பேய்/கருப்பு சேஷ்டைகள் நீங்கும்;

திருவாதிரை:இறப்பதற்கு முன்பு இந்த நட்சத்திரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை அருந்தினால் சிவப்பதவி நிச்சயமாக கிடைக்கும்;

புனர்பூசம்:திருமணத் தடங்கல் விலகிவிடும் ;மாங்கல்ய பலம் மேம்படும்;திருமணம் செய்யும் போது(தாலி கட்டும் சுபவேளையில்) தம்பதி மீது தெளிப்பது மிகவும் நன்று;

பூசம்:பசுவின் மீது தெளித்தால் தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும்;

ஆயில்யம்:ஆயுதங்கள்,பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;

மகம்:இயற்கையான முறையில் உயிர் பிரியும்;விபத்தினால் உயிர் பிரியாது;ஆக,வாழும் போது ஒவ்வொரு மகம் நட்சத்திர தினத்தன்றும் நம் மீது தெளிக்க விபத்தில் இருந்து தப்பிவிடுவோம்;

பூரம்:வைத்தியர்கள் செய்யும் தொழில் இடையூறு வராமல் இருக்க உதவும்;நாக தோஷம் விலகிவிடும்;

உத்திரம்:கடன்கார்களின் தொல்லை படிப்படியாக நீங்கும்;

அஸ்தம்;ருது தோஷங்கள் விலகிவிடும்;எதிர்பாராத உதவி,சிக்கலான நேரத்தில் கிடைக்கும்;

சித்திரை:அறுவடைக்கு முன்பு,இந்த நட்சத்திர நாளன்று பிடித்த அபிஷேக நீரை வயல்களில் தெளிக்க வேண்டும்;

சுவாதி:புதிய புடவை,ஆடைகள் மீது தெளித்துவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்;உறவுகளுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு வாங்கி வைத்திருக்கும் பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;அதன் பிறகு,எப்போது வேண்டுமானாலும் அன்பளிப்பாக தரலாம்;

விசாகம்;கடைகள்,நிறுவனங்களில் இருக்கும் கஜானாவில் தெளிக்க வேண்டும்;தொழில் அமோகமாக இருக்கும்;

அனுஷம்:திருமணத் தடை நீங்கும்;நிச்சயித்தவர்கள் திருமணத்திற்கு முன்பு தமது தலையில் தெளிக்க வேண்டும்;

கேட்டை:பரிட்சை காய்ச்சல்,போட்டி காய்ச்சல் என்று அவதிப்படும் குழந்தைகளுக்கு தெளிக்க அவர்கள் அளவற்ற மனோதைரியம் பெறுவார்கள்;

மூலம் :வாகனங்களின் சாவி மீது தெளிக்க விபத்தை தடுக்கலாம்;

பூராடம்:கஜானாக்களிலும்,எழுதுகோல்களிலும் தெளிக்க நன்மை உண்டாகும்;பேனா,பென்சில் மீது தெளிக்க துன்பம் இல்லாத வாழ்க்கை உண்டு;

உத்திராடம்:விஷகடிகள் இராது;தூக்கத்தில் பயந்து அலறவோ,கீழே விழவோ மாட்டார்கள்;

திருவோணம்;உணவுப்பஞ்சம் வராது;

அவிட்டம்:கல்லூரி/அலுவலகம் போன்ற இடங்களில் அவர்களுக்கு விருப்பமான இடம் கிடைக்கும்;பதவிக்கு ஆபத்து வராது;

சதயம்:எதிரிகளின் கூட்டத்தில் சிக்கவே மாட்டோம்;எதிரிகளின் துன்பம் குறையும்;

பூரட்டாதி:விமானப் பயணமோ,வெளியூர்/தொலைதூரப்பயணமோ துன்பம் தராது;விமானப் பயணம் செல்வோர் இதை தம்முடன் கொண்டு செல்லலாம்;

உத்திரட்டாதி:சிவில்,ஆர்கிடெக்,சிவில் காண்டிராக்டர்கள் தெளிக்க நல்ல வருமானத்தைப் பெறுவார்கள்;

ரேவதி;தினசரி வாழ்க்கையில் தீ விபத்தில் சிக்க மாட்டார்கள்;

குறிப்பு:விநாயர் ஆலயமாக இருந்தாலும் சரி;
முருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவிஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹா பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;
சிவபெருமானின் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;
அங்காள பரமேஸ்வரி ஆலயமாக இருந்தாலும் சரி;
பழமையான ஆலயமாக இருந்தால் உடனடியான பலனைப் பெறலாம்;புதிய (100 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஆலயமாக இருந்தால்) சிறிது மெதுவான பலனைப் பெறலாம்;

உங்களுக்கு பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்து,உங்களுக்கு தேவையான நட்சத்திரம் வரும் நாளன்று அபிஷேக நீரை ஒரு பாட்டிலில் பிடித்து வந்து,அந்த நட்சத்திரம் மறையும் முன்பு (நட்சத்திர நேரம் முடியும் முன்பு) வீட்டில் உள்ள அனைவரும் தமது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்;பிறகு,சிறிது அருந்தலாம்;

இது முடியாதவர்கள்,தினமும் காலையில் குளித்துவிட்டு,அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அபிஷேகத் தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு,வீட்டில் இருப்பவர்களுக்காக ஒரு பாட்டிலில் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம்;

கோமுகத்தின் முன்பாக நின்றாலே அவரது உடலுக்குள் ஈசன் புகுந்துவிடுகின்றார்;பிறகு,ஒரு போதும் பிரிவதில்லை;இதையே,ஸ்ரீமாணிக்க வாசகர்,திருவெம்பாவையில் ‘புகுந்து கலந்து பிரியாமல் இருக்கும் ரகசியம்’ என்று பாடியிருக்கின்றார்;
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...