Friday, October 3, 2025

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசன் தரிசனம்.

சனி பிரதோஷம் 
விரதம் இருந்தால் பாவங்கள் விலகி 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புண்ணியம் சேரும்.
~~~~~~~~~~~~~

சனிப்பிரதோஷ நாளில் விரதம் இருந்தால் சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். 

அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும்.

சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. 

அன்றுதான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.

இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வருவதால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. 

பிரதோஷ தரிசனம் காணும் வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும்.

சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும். 

சிவ தாண்டவம் ஏகாதசி யன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார்.

பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார்.

பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள்.

புண்ணியம் சேரும் நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும். 

சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை.

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். 

சகல செளபாக்கியங்களும் உண்டாகும். 

இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். 

அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். 

பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

பிரதோஷ வழிபாடு பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். 

சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. 

இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப் பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.

எப்படி வழிபடுவது
சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும். 

அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம்.

சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.

நன்மைகள் நடைபெறும் எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. 

ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.  

கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். 

பஞ்சமா பாவங்களும் நீங்கும். 

சிவ அருள் கிட்டும்.

இன்றய தினம் சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் சிவாலயம் சென்று இறைவன் அருள் பெறலாம்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Thursday, October 2, 2025

திருநெல்வாயில் திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர்



   
*அடியார் இடர்நீக்கும் திருநெல்வாயில் திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்.*
பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது திருநெல்வாயில் அரத்துறை எனும் திருவட்டத்துறை திருத்தலம்.
திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துச்சிவிகை, முத்துக்குடை, பொற்சின்னங்கள் அருளிய தலம், மூவரால் பாடல் பெற்ற நடுநாட்டின் முதலாவது திருத்தலம், மகாவிஷ்ணு, ஆதிசேஷன், வான்மீகி முனிவர், செவ்வாய், சனி பகவான், ஜனக மன்னர் முதலானவர்கள் வழிபட்டுப் பேறு பெற்ற கோவில், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பெயரில் லிங்க மூர்த்தங்கள் அமைந்த தலம், நீவா நதிக்கரையோரம் அமைந்த தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருநெல்வாயில் அரத்துறை எனும் திருவட்டத்துறை திருத்தலம்.

புராண வரலாறு :

 
ஆற்றங்கரையோரம் அமைந்த தலம் என்பதாலும், அரம் எனும் நாகம் வழிபட்டதாலும், அரத்துறை என வழங்கப்படுகிறது. இத்திருக்கோவிலின் அருகே ஓடும் வெள்ளாறு நதியில், பிரளய காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இறைவனின் ஆணைக்கிணங்க, நந்திதேவர் ஆற்றினை திரும்பிப் பார்க்க, வெள்ளத்தின் வேகம் கட்டுப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் ஐதீகமாகவே இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் நந்தி சிலை, ஆற்றின் திசைநோக்கி பார்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இதேபோல், இப்பகுதியில் சப்தரிஷிகள் ஏழு துறைகளில் தவம் இயற்றினர். அவை ஆதித்துறை, திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவதிட்டத்துறை, திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருவட்டத்துறை, திருச்சந்துறை. இந்த ஏழு துறைகளில் அரத்துறைநாதர் ஆலயம் ஆறாவது துறையாக அமைந்துள்ளது.

திட்டக்குடியில் ஓடிய வெள்ளாற்றை, திருஞானசம்பந்தர் இத்தலம் நோக்கி ‘நீ வா’ என்று அழைக்க, வெள்ளாறு, திட்டக்குடியில் இருந்து அருகில் வந்ததாக தல வரலாறு சொல்கிறது. இதனால் இந்நதி ‘நீவா நதி’ என்று பெயர் பெற்றது.

இத்தலத்தை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவரும் பாடி மகிழ்ந்துள்ளனர். இது தவிர, சேக்கிழாரின் பெரியபுராணம், வள்ளலாரின் திருவருட்பாவிலும் இத்தலம் குறித்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

தீர்த்தபுரீஸ்வரர் :

மூலவர் திருப்பெயர் தீர்த்தபுரீஸ்வரர். இவரே ஆனந்தீஸ்வரர், அரத்துறைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் கிழக்கு முகமாய் வட்ட வடிவ ஆவுடையாரில் ஒளிவீசும் திருமுகத்துடன் காட்சி அளிக்கின்றார். திருவட்டத்துறை உடைய மகாதேவர், திருவட்டத்துறை மகாவேதர், திருவட்டத்துறை உடைய நாயணார் என கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னை திரிபுரசுந்தரிக்கு, ஆனந்தநாயகி, அரத்துறை நாயகி என்ற திருப்பெயரும் உண்டு. அன்னை அரத்துறை நாயகி, மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் தாங்கியும், கீழ் இரு கரங்களில், அபய வரத முத்திரை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.

மகம் வாசல் :

இக்கோவிலில் கருவறைக்கு இடதுபுறம் மகம் வாசல் அமைந்துள்ளது. கணவனை இழந்த பெண்கள், ஓராண்டு முடிந்த பிறகு, இத்தல ஆற்றிற்கு சென்று குளித்து விட்டு, மகம் வாசல் வழியே ஆலயத்திற்குள் சென்று இறைவனை தரிசிப்பார்கள். பின்னர் அந்த வாசல் வழியாகவே மீண்டும் வெளியில் செல்வது ஐதீகமாக உள்ளது. இப்படிச் செய்வதால், இறந்த தன்னுடைய கணவர் நற்கதி பெறுவார் என்று அவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் எளிமையாக நடத்தப்படுகின்றன. பிற சிவாலய விழாக்களும் எளிய முறையில் நடைபெறுகின்றது.

நீவா நதியின் கரையோரம், கிழக்கு முகமாய் ஐந்துநிலை ராஜகோபுரத்தைக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது. எதிரே, தலமரமான ஆலமரம், பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும், விநாயகர், சமயக்குரவர்கள், வான்மீகி முனிவர், சப்தமாதர்கள், லிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு, ஜோதிர்லிங்கம் உள்ளிட்ட சன்னிதிகள் அமைந்துள்ளன.

இதனையடுத்து, அண்ணாமலையார், ஆதிசேஷன், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தண்டாயுதபாணி சுவாமி சன்னிதி, சரஸ்வதி, சேரலிங்கம், சோழலிங்கம், பாண்டியலிங்கம் என மூவேந்தர்களுக்கும் லிங்கத் திருமேனிகள் அமைந்துள்ளன. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, சந்தானக் குரவர்கள், பைரவர், சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

அமைவிடம் :

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில், கடலூர்- திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில், கடலூருக்கு மேற்கே 90 கி.மீ., திட்டக்குடிக்கு கிழக்கே 5 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஆவினன்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, தென்கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வாயில் அரத்துறை என்ற பெயர் இன்று, திருவட்டத்துறை என அழைக்கப்படும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, October 1, 2025

சந்திரன் சிவனை வழிபட்ட தலம் வாசீஸ்வரர்



சென்னைக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற 
சமயக் குரவர்கள் மூவரால் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான, திருமால் மச்ச அவதாரத்தில் ஏற்பட்ட தோஷம் நீங்க வழிபட்ட தலமான, அம்பாள் பூலோகத்தில் சிவபூசை செய்த இடமான,
சந்திரன் சிவனை வழிபட்ட தலமான #திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 
#திருப்பாசூர் #வாசீஸ்வரர் (பாசூர்நாதர்) (பசுபதீசுவரர்)
#தங்காதலி(தம்காதலி)
திருக்கோயில் வரலாறு:

தமிழகத்தில் மிகவும் சக்தி கொண்ட அற்புதமான கோயில்கள் பல உள்ளன. அதில் மிக முக்கியமான கோயில்களில் ஒன்று
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 
திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

சென்னையை அடுத்து திருவள்ளூர் அருகே உள்ளது இந்தத் திருத்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், தவம் ஆகிய ஐம்பெரும் சிறப்பம்சங்களோடு, மூவரால் பாடல் பெற்ற புராணப் பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்டது இந்த ஆலயம். தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.

 மூங்கில் புற்றில் பால் சொரிந்ததைக் கண்ட வேடர்கள் வெட்டிப்பார்த்தபோது சிவலிங்கம் வெளிப்பட்டதாக தலவரலாறு.

இத்தலத்தில் சிவபெருமானை லிங்கமாகத் திருமால் வழிபட்டு மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்களைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார். இத்தலத்து சிவபெருமானுக்கு எண்ணெய்க்காப்பு மட்டும் செய்யப்படுவதில்லை.

மிக மிக பழமையான கோயில் இது. இக்கோயிலில் ஆதிசங்கரர் கையால் கல்லல் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோயில் அடிக்கல் நாட்டப்பட்டதாம்.

இக்கோயிலில் 5000 வருடப் பழமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளேதான் சிவபெருமான் சுயம்புவாக உருவானார். மேலும் இக்கோயில் சிவபெருமான் வாசி என்ற கோடாரியால் உங்களுக்குக் கீழே எடுக்கும் போது அவர் மீது இரத்தம் வந்துவிட்டது. அதனால் இந்த சிவலிங்கத்தைத் தொடாமல் தான் பூஜை செய்கிறார்கள்.

பசு ஒன்று யாருக்கும் தெரியாமல் சிவபெருமானுக்குப் பால் சுரத்து கொடுக்குமாம். அப்போது மூங்கில் தானாக விலகி சிவலிங்கத்தைப் பசுவுக்குக் காட்டுமாம். இந்த ஊரின் மன்னன் ஒழுங்காக வரி கட்ட தவறியதால் கரிகால அரசர் பெரும்படை எடுத்தான். ஆனால் போரில் வெற்றி பெறுவதற்காகக் காளி உருவில் வானிலிருந்து அன்பு மழை பொழிந்ததால் அவனுடைய பெரும்படைகள் அழிந்தது.

*மூலவர்: வாசீஸ்வரர், பாசூர்நாதர், பசுபதிஸ்வரர்
*அம்மன் :மோகனாம்பாள், பசுபதி நாயகி,தங்காதளி அம்மன்
*தல மரம் : - மூங்கில்
*தீர்த்தம் : - சோம, மங்கள தீர்த்தம்
*வழிபட்டோர் : மகாவிஷ்ணு, கரிகாற் சோழன், அம்பிகை, சந்திரன்.

*தேவாரப் பாடல்கள் :-அப்பர், சுந்தரர், சம்பந்தர்

#திருஞானசம்பந்தர் பாடிய திருப்பாசூர் தேவாரம்:

"பேரும் பொழுதும் பெயரும்
  பொழுதும் பெம்மானென்
றாருந் தனையும் அடியா
  ரேத்த அருள்செய்வார்
ஊரும் அரவம் உடையார்
  வாழும் ஊர்போலும்.
பாரின் மிசையார் பாட
  லோவாப் பாசூரே.

#புராண வரலாறு:

புராண காலத்தின் போது, திரிபுராந்தர்களை அழிக்கச்சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டு விட்டார். இதனால் வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்து விட்டது. அத்தோடு ஒரு சபையை அமைத்த விநாயகர், ‘தம்மை வணங்காமல் சென்றது ஏன்?’ என்று சிவபெருமானிடம் விசாரணை செய்தார். அதனடிப்படையில் இவ்வாலயத்தில் 11 விநாயகர்கள் வீற்றிருக்கும் ‘விநாயகர் சபை’ இருக்கிறது. இந்த ஏகாதச விநாயகர் சபை வழிபாடு மிகுந்த பலனளிக்கக்கூடியது.

திருப்பதி வெங்கடாஜலபதி தம் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க, இந்த விநாயகர் சபை வழிபாட்டை மேற்கொண்ட பிறகுதான் வழிபிறந்தது என்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தம் திருமணத்தின்போது குபேரனிடம், வெங்கடாஜலபதி கடன் வாங்கினார். எவ்வளவு முயற்சித்தும் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக, வெங்கடாஜலபதி சிவபெருமானை வழிபட்டார். அதற்கு ஈசன், “திருமணத்தின்போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவார்கள். 16 என்பது பதினாறு வகை செல்வங்களைக் குறிக்கும். நீங்கள் மச்ச அவதாரத்தின்போது அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் காரணமாக, 11 வகை செல்வங்களை இழந்துவிட்டீர்கள். இப்போது ஐந்து வகை செல்வங்களே தங்களிடம் உள்ளன. இழந்த செல்வங்களைப் பெற விநாயகர் சபையிலுள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, ஒரு அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம். அதன் மூலம் கடனை அடைக்க வழிபிறக்கும்” என்று அறிவுறுத்தினார்.

அதன்படி இந்த விநாயகர் சபையில் வழிபாடுகளை மேற்கொண்டாராம், வெங்கடாஜலபதி. அதன்பிறகே, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிகள் ஏற்பட்டனவாம். பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் கிட்டும், வியாபாரம் பெருகும் என்று நம்புகிறார்கள். புராணப் பின்னணியைக் கொண்ட இந்த சேத்திரத்தில் ஆலயம் நிர்மாணித்தது கரிகாற் பெருவளத்தான். குறும்பன் என்ற சிற்றரசன், கரிகாற் பெருவளத்தானுக்குக் கப்பம் கட்டி ஆட்சிசெய்து வந்தான். திடீரென கப்பம் செலுத்த மறுத்தான். இதனால் சிற்றரசன் மீது போர் தொடுத்தான் கரிகாற் சோழன். குறும்பனும் தம் குலதெய்வமான காளி தேவியை வணங்கி போர் புரியத் தொடங்கினான். அவனுக்கு உதவியாக காளிதேவி விண்ணிலிருந்து அம்புகளை எய்து சோழர்படை வீரர்களை அழித்தாள். விண்ணிலிருந்து பாய்ந்து வந்த அம்புகளும், அவற்றை எய்யும் காளிதேவியும் சோழர்படை வீரர்கள் கண்களுக்குப் புலப்படவேயில்லை.

இதனால், அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து சோழர்படை வீரர்களும் போரில் கொல்லப்பட்டனர். சோழர் படைத்தளபதி மட்டும் உயிருடன் இருந்தார். அவரை வரவழைத்த குறும்பன், ‘உன் மன்னன் போருக்கு வந்தாலும் கொல்லப்படுவது உறுதி. இந்தத் தகவலை சொல்வதற்குத்தான் உன்னை உயிரோடு விட்டுள்ளேன். இதை கரிகாலனிடம் போய்ச் சொல்!’ என்று திருப்பி அனுப்பினான். நடந்ததை கரிகாலனிடம் கூறினார் தளபதி. தம் படை வீரர்கள் மாண்டதையறிந்து வேதனையுற்ற கரிகாலன், படை திரட்டிக் கொண்டு போருக்கு விரைந்தான். கல்மூங்கில் புதர்கள் நிறைந்த இப்பகுதிக்கு வந்தபோது, சிற்றரசனுக்கு தம்முடைய படையை தோற்கடிக்கும் பெரிய ஆற்றல் எப்படி வந்தது என்ற வியப்புடன், சிவபெருமானை நினைத்து வேண்டினான்.

அப்போது சிவபெருமான் அசரீரியாய் தன் பக்தனுக்கு ஆறுதல் கூறினார். ‘‘கவலைகொள்ள வேண்டாம் மன்னா! நான் உன் அருகிலேயே இருக்கிறேன். சிற்றரசனுக்கு அவன் குலதெய்வம் காளிதேவி உதவிபுரிகிறாள். உன்னை இங்கு வரவழைக்கவே இந்த நிகழ்வுகள் நடந்தேறின. குறும்பனுக்கு இந்த தகவல் தெரியாது. நான் சொன்ன பிறகு போரைத் தொடங்கு! நீ வெற்றி கொள்வாய்!” என்றார். பின்னர் ஆவேசமாகவுள்ள காளிதேவியை சாந்தப்படுத்த இரண்டு தங்கச் சங்கிலிகளுடன் நந்தியை அனுப்பினார் சிவ பெருமான். தங்கச் சங்கிலியைக் கண்டதும் சினம் தணிந்து சிரித்தாள் காளி. அவளை தங்கச் சங்கிலியால் கட்டி அழைத்து வந்து, ஓரிடத்தில் உட்கார வைத்தார் நந்தி.

இதைத் தொடர்ந்து சிவபெருமான் கரிகாலனிடம், ‘இப்போது நீ போரைத் தொடங்கு!” என்றார். மூங்கில் புதர்கள் மத்தியில் மறைந்திருந்தபடியே ஒற்றன் மூலம் போருக்கு தகவல் அனுப்பினான் கரிகாலன். குறும்பனும் போர்புரிய சம்மதித்தான். கடும் போரில் கரிகாலன் வெற்றிபெற்றான். போரில் தோற்ற குறும்பனின் சொத்துகள் அனைத்தையும் ஈசனுக்குரியதாக ஆக்கினான் கரிகாலன். தமக்கருகில் இருப்பதாய்ச்சொன்ன ஈசனை மூங்கில் காட்டுக்குள் தேடியலைந்தான். எங்கு தேடியும் ஈசன் தென்படவில்லை. அங்கிருந்த மூங்கில் புதருக்குள் வசித்த காட்டுவாசி களிடம் கேட்டான். அவர்கள், ‘சிவலிங்கம் இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு புதருக்குள் பசு மாடு செல்லும். அப்போது மூங்கில் மரங்கள் விலகி நிற்கும். மாடு திரும்பிச் சென்றதும் மூங்கில் மரங்கள் தானாக மூடிவிடும்’ என்றுகூறி அந்த புதரைக் காட்டினர்.

அங்கு சென்று மூங்கில் வெட்ட பயன்படுத்தப்படும் ‘வாசி’ என்ற அரிவாளால் வெட்டிக்கொண்டே இருந்தான் மன்னன். அப்போதும் லிங்கத்தைக் காணாது சலிப்படைந்த கரிகாலன் ஆவேசமாக ஒரு மூங்கில் மரத்தை வெட்டினான். திடீரென ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. திடுக்கிட்டு அருகில் சென்று பார்த்தான். சுயம்புலிங்கம் நெற்றியில் வெட்டுப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உள்ளம் உருக ஈசனிடம் மன்னிப்புக் கேட்டதும் ரத்தம் வடிவது நின்றது. இறைவனின் கருணைக்கு தாம் முற்றிலும் ஆட்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த கரிகாலன், அவ்விடத்திலேயே ஈசனுக்கு ஆலயம் நிர்மாணிக்க உறுதிபூண்டான்.

ஆலயப் பணி தொடங்கிவிட்டது. ஆனால் போரில் தோற்றவர்கள் கோவில் எழுப்ப இடையூறு கொடுக்கத் தொடங்கினர். இதனால் திருப்பணி மந்தமானது. கரிகாலன் அடிக்கடி வருகை புரிந்து தொல்லை கொடுத்தவர்களை விரட்டியடித்து, மேற்பார்வையிட்டு கோவில் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்தினான். திருப்பணி நிறைவு பெற்று கம்பீரமாக ஆலயம் உருப்பெற்றது. புராணப்பெருமையும், சரித்திரப் பின்னணியும் கொண்ட ஒப்பற்ற தலம் இது. 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் இறைவன் திருநாமம் வாசீஸ்வரர் ஆகும். இத்திருத்தலத்தில் அம்பாள் தினமும் ஈசனுக்கு அபிஷேகம்செய்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே பிரதோஷத்தின் போதும், இதர உற்சவங்களின்போதும் முதலில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறும். அம்பாள் சிவனுக்கு வலப்புறம் உள்ளதால், இத்திருக்கோவில் திருமணத்தடை நீக்கும் சேத்திரமாக விளங்குகிறது.

இதையடுத்து 11 விநாயகர் கம்பீரமாக வீற்றிருக்கும் ‘விநாயகர் சபை’ உள்ளது. அருகில் பெருமாளின் வினைதீர்த்த ஈஸ்வரனும் எழுந்தருளியுள்ளார். மூன்று சன்னிதிகளையும் கடந்து சென்று சுயம்புவாய் வீற்றிருக்கும் திருப்பாசீஸ்வரரை வழிபடலாம். கஜ பிருஷ்ட விமானம் கொண்ட கருவறையில், சதுரவடிவ பீடத்திலுள்ள சுயம்புலிங்கத்தின் தலையில் வெட்டுப்பட்ட தடம் உள்ளதைக் காணலாம். சிவலிங்கத்தின் மேற்பகுதி சற்று இடப்புறத்தில் நகர்ந்த நிலையில் உள்ளது. காயம்பட்ட லிங்கம் என்பதால் தொட்டுப் பூஜை செய்வதில்லை. அலங்காரங்கள் பாவனையாகத்தான் நடக்கின்றன. இம்மூர்த்தியைத் ‘தீண்டாத் திருமேனி’ என்றும் அழைக்கிறார்கள்.

இவ்வாலயத்தில் ஐயாயிரம் வருட பழமையான மூங்கில் மரம், தல விருட்சமாக உள்ளது. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. வெளிப்பிரகாரத்தில், வடமேற்கில் சொர்ண காளி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அருகே வசந்த மண்டபம் செல்லும்வழியில் இரட்டைக் காளியும், மண்டபத்தினுள் மிகப்பெரிய குபேரலிங்கமும் உள்ளது.

கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். இவர், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை.

அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.

மூங்கில் வனத்தின் அடியில் தோன்றிய சிவன் என்பதால் இவருக்கு பாசுரநாதர் என்றொரு பெயரும் உண்டு. பாசு என்றால் மூங்கில் என்று பொருள்.

சிவன் இங்கு லிங்க வடிவில், பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன் என்ற பெயரில் தனியாகவும் இருக்கிறார்.

சந்திரன் தக்கன் கொடுத்த சாபம் தீர இங்கு சோம தீர்த்தம் எற்படுத்தி இறைவனை வழிபட்டு தம் கலைகளை மீண்டும் பெற்றுள்ளதாகவும். திருமால் தன் வினை தீர, வினை தீர்த்த ஈஸ்வர திருமேனியை அமைத்து வழிபட்டதாகவும் தலவரலாறு தெரிவிக்கிறது.

மேலும் பிருகு முனிவர், பரத்துவாசர், விஸ்வாமித்திரர், சாலிகோத்திர முனிவர், வசிஷ்ட்டர், நாரதர், ததீசி, காசிபர் முதலானோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளார்கள்.

#கரிகாற் சோழன்:

சமணர்கள் கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் பெரிய நாகத்தை ஒரு குடத்தில் இட்டு அனுப்ப இத்தல சிவபெருமான் பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம். இக்கோயிலை அமைக்க கரிகாலன் விரும்ப, அவன் மீது குறுநில மன்னன் பகைமை கொண்டு தான் உபாசனை செய்த காளிதேவியை கரிகாற் சோழ மன்னன் மீது ஏவ சிவபெருமான் நந்தியை அனுப்பி காளிதேவியை அடக்கியதை நினைவூட்டுவதற்காக காளியின் சிற்பம் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் உள்ளது.

கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார்.

முன்பொரு காலத்தில் இத்தலம் மூங்கில் காடாக இருந்தது. பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட இடத்தில் நாள் தோறும் பால் சொரிந்தது. இதனைக் கண்ட இடையன் மன்னனிடம் கூற, மன்னன் அவ்விடத்தை தோண்டிப்பார்க்க ஆணையிட்டான். உடனே வேடுவர்களும் வாசி என்னும் கருவியால் அவ்விடத்தை தோண்டிப் பார்க்க அங்கே இலிங்கம் இருப்பதைக் கண்டனர். மன்னனும் ஒன்றுமுணராது சென்றுவிட்டான்.

மறுநாள் மன்னனின் எதிரிகள் அவனை பழி தீர்ப்பதற்காக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு அவனிடம் கொடுத்து விட்டனர். மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பு அங்கு வந்த ஒரு பாம்பாட்டி குடத்தில் இருந்த பாம்பை பிடித்துவிட்டு ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார். அன்றிரவில் தானே பாம்பாட்டியாக வந்ததையும், மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளதையும் மன்னனுக்கு உணர்த்தினார் சிவன், கனவில் தோன்றிய இறைவன் அவ்விடத்தில் தனக்கொரு ஆலயம் எழுப்புமாறு பணித்தார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் எழுப்பினான்.

மன்னனும் அவ்வாறே செய்தான். வாசி என்னும் கருவியால் வெட்டுப்பட்டதால் இறைவன் வாசீஸ்வரர் எனப்படுகிறார். பாசு என்பது மூங்கிலைக் குறிக்கும். இவ்விடம் பண்டு மூங்கில் மரமாக இருந்த படியால் திருப்பாசூர் என அழைக்கப்படுகிறது.

#தங்காதலி அம்பாள் : 

தட்சனின் யாகத்திற்கு தன்னை மதியாது சென்ற பார்வதி தேவியை பெண்ணாக பூமியில் பிறக்குமாறு சபித்த சிவபெருமான் திருப்பாசூர் தலத்தில் தங்காதலியே என அன்போடு அழைத்ததால், இறைவி இங்கு தங்காதலி என பெயர் பெற்றாள். இவ்வூரும் தங்காதலிபுரம் என அழைக்கப்படுகிறது.

மது, கைடபர் எனும் இரு அசுரர்கள் பிரம்மாவின் வேதத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். இதனால் பிரம்மாவால் படைப்புத் தொழிலைசெய்யமுடியவில்லை. எனவே,  மகாவிஷ்ணு மத்ஸ்ய (மீன்) அவதாரம் எடுத்துச் சென்று அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார். இதனால் அவரை தோஷம் பிடித்தது. இத்தோஷம் விலக சிவனிடம் வேண்டினார். அவர் பூலோகத்தில் இத்தலத்தை சுட்டிக்காட்டி தன்னை வழிபட்டுவர தோஷம் நீங்கும் என்றார். அதன்படி மகாவிஷ்ணு இங்கு வந்தார். இங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். சிவனும் சுயம்புவாக எழுந்தருளினார்.

#தாழம்பூ பூஜை : 

தனது தலை முடியைக் கண்டதாக பொய் சொன்ன (பிரம்மனுக்காக பொய் சொன்னதால்) தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவன். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவன் வரம் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் இக்கோயிலில் சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர்.

#விநாயகர் சபை : 

விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தாராம். அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார். அவரது ஆலோசனையின்படி இத்தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார் என்றொரு வரலாறு உண்டு. இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். இதனை, "விநாயகர் சபை' என்கின்றனர். அருகிலேயே கேது பகவான் தனியே இருக்கிறார்.

#சொர்ண காளி : 

இப்பகுதியை ஆட்சி செய்து வந்த குறும்பன் எனும் சிற்றரசன் ஒருவன் மன்னனுக்கு சரியாக வரி கட்டாமல் இருந்தான். எனவே அவனுடன் போரிட்டு வரியை வாங்க சோழ மன்னன் ஒருவன் குறும்பன் மீது படையெடுத்தான். காளி பக்தனான குறும்பன் அவளை ஏவி விட்டு சோழ படைகளை விரட்டியடித்தான். சோழ மன்னன் சிவனிடம் தனக்கு உதவும்படி வேண்டினான். அவனுக்காக சிவன் காளியை அடக்க நந்தியை அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நந்தி காளியுடன் போரிட்டு அதனை வெற்றி பெற்றது. மேலும் காளியின் இரண்டு கால்களிலும் பொன் விலங்கை பூட்டியும் அதனைக் கட்டுப்படுத்தினார். நந்தியால் அடக்கப்பட்ட சொர்ணகாளி இக்கோயில் பிரகாரத்தில் நான்கு கைகளுடன் தனியே நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கால்களில் விலங்கு போடப்பட்டிருக்கிறது. பவுர்ணமி தோறும் மாலை வேளைகளில் இவளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

பழைமை வாய்ந்த இக்கோயிலின் கிழக்கு வாயிலின் உள்ளே கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் சந்நிதி அமைந்துள்ளன. தென்புற வாயிலின்மீது மூன்று நிலை ராஜகோபுரம் காலத்தைக் கடந்து கம்பீரமாக நிற்பதைக் காணமுடிகிறது.

தென்புற வாயிலின் வழியாக உள்பிரகாரத்தில் நுழைந்தால் நாம் முதலில் காண்பது அம்மன் சந்நிதி. தங்காதலி அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் பாசாங்குசம் ஏந்தி அபயவரத முத்திரை காட்டி கிழக்கு நோக்கி எழுந்தருளிய கோலம்! ஈசனுக்கு வலப்புறத்தில் அம்பிகை எழுந்தருளியிருப்பது மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

அடுத்து கிழக்கு நோக்கிய வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் சந்நிதி. அதன் எதிரில் தலவிருட்சமான மூங்கில் செழித்து வளர்ந்து உள்பிரகாரத்திலேயே அமைந்திருப்பது எங்கும் காணமுடியாத சிறப்பாகும். அடுத்ததாக நவக்கிரகங்கள், ஏகாதசி கணபதி, 11 கணபதிகள் தரிசனம் தரும் கணபதி சபையையும் காணலாம். மேலும் விநாயகர் மண்டபத்தில் திருமால் வழிபட்ட வினை தீர்த்த ஈஸ்வரர் திருமேனியும் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் வாசீஸ்வரர் லிங்கத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு முன்பாக, ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவன் அண்டிவரும் பக்தர்களின் துயர் துடைக்கும் அருளாளர்.

விமானம் கஜப்பிருஷ்ட அமைப்பைக் கொண்டது. கருவறையின் வெளிபிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணுதுர்க்கை, வீரபத்திரர், சொர்ணபைரவர் ஆகிய தெய்வத்திருமேனிகள் பாங்குற அமைக்கப்பட்டு அருளாசி வழங்குகின்றனர்.

#கோவில் அமைப்பு:

தெற்கு திசையில் 3 நிலை இராஜகோபுரமும், கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. இவ்வாலயத்தில் 2 பிரகாரங்கள் உள்ளன. முதல் வெளிப் பிரகாரம் நல்ல அகலமான வெளிச்சுற்றாகும். வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. இச்சுற்றில் சொர்ணகாளிக்கு தனி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சுற்றில் தலவிருட்கம் மூங்கில் ஓங்கி வளர்ந்துள்ளது. தெற்கு வெளிச் சுற்றிலிருந்து உட்பிராகாரம் செல்ல வழி உள்ளது.

2வது பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகள் இருக்கின்றன. மூலவர் வாசீஸ்வரர் சந்நிதியும், இறைவி தங்காதளி அம்மன் சந்நிதியும் தனித்தனி விமானங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

இறைவன் கருவறை விமானம் கஜப்பிரஷ்ட அமைப்பைக் கொண்டது. அம்மன் சந்நிதி சிவபெருமான் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இவ்வாறு சுவாமி சந்நிதியின் வலதுபுறம் அம்மன் சந்நிதி உள்ள சிவஸ்தலங்களுக்கு ஆக்க சக்தி அதிகம் உண்டு என்று சாத்திரங்கள் கூறுகின்றன. இங்குள்ள ஈஸ்வரர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. அலங்காரங்கள் கூட பாவனையாகத்தான் நடைபெறுகிறது. சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார்.

#பிரச்னைகள் தீர்க்கும் மாலைப் பிரார்த்தனை:

இங்கு சிறப்பு அம்சமாக ஒரு சந்நிதியில் 11 விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும், விநாயகர் சபை ஒன்றும் உள்ளது. இதுவே மகா விஷ்ணு பூஜை செய்த இடம் என்கிறார்கள் பக்தர்கள். இந்த விநாயகர்களுக்குத் தேங்காய் மாலை , வாழைப்பழம், அருகம்புல் மாலை ஆகியன சமர்ப்பித்துப் பிரார்த்தனை செய்தால் வாழ்வில் எந்தத் துன்பமும் இல்லாமல் மகிழ்வுடன் வாழ வழி செய்வார் என்பது நம்பிக்கை.

கல்யாண தடை, குழந்தையின்மை, குடும்பச் சிக்கல்கள் முதலிய பிரச்னைகளுக்கு 11 நெய் தீபம் ஏற்றி 11 தேங்காயை மாலை, 11 வாழைப்பழ மாலை, அருகம்புல் மாலை ஆகியனவற்றை இங்குள்ள விநாயகருக்கு சாத்தி வழிபட்டால் அனைத்து பிரச்னைகளும் மூன்று மாதத்தில் தீரும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலின் தல விருட்சமாக மூங்கில் மரம் உள்ளது. இந்த மரமானது கோயிலின் உள்ளேயே அமைந்துள்ளது. மகா சிவராத்திரி, பஞ்சபூத உற்சவம் மற்றும் வைகாசி மாத 10 நாள்கள் பிரம்மோசோற்சவம், தீர்த்தவாரி போன்ற விழாக்கள் இங்கு வெகு விமர்சையாக நடைபெறும்.

ஆலயத்தில், அமாவாசை, பௌர்ணமி, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம். நவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை நாள்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் நினைத்த காரியங்கள் கைகூடவும் எதிரிகளின் தொல்லை நீங்கவும் பாசூர்நாதரை வழிபடுகின்றனர்.

இத்தலம், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைத்து நிர்வாகம் செய்யப்படுகிறது.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும்.அமைவிடம் திருவள்ளூர் மாவட்டம், சென்னை- அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ., திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்பாசூர் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தமிழகத்தில் ஐந்து இடங்களில் அர்த்தநாரீஸ்வரர்

அருள் வழங்கும் அர்த்தநாரீஸ்வரர்...!
தமிழகத்தில் ஐந்து இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் காண முடியும்!
உமையொருபாகனாக ஈசன் தரிசனம் தரும் இந்தத் திருவுருவை (விக்கிரகங்களை) திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரில் உள்ள சிந்தாமணிநாதர் கோயிலிலும், திருச்செங்கோட்டிலுள்ள கோயிலிலும், திருக்கண்டியூரிலும், திருமழப்பாடியிலும், காஞ்சிபுரத்திலும் தரிசிக்க முடியும்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கையில் ஒரு கோல் வைத்திருக்கிறார்.

இந்த அமைப்பு, தமிழகத்தில் வேறெங்கும் காண்பதற்கரிய ஒன்று!

திருக்கண்டியூரில் அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த நிலையில் உள்ளார்.

திருமழப்பாடியில் இடப்பகுதிக்குப் பதிலாக வலப்பகுதியில் உமாதேவியின் (பெண்) உருவம் உள்ளது.

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயிலில் அபயமுத்திரை இல்லாமல் காட்சி தருகிறார் அர்த்தநாரீஸ்வரர்!

ஓம் நமச்சிவாய
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசன் தரிசனம்.

சனி பிரதோஷம்  விரதம் இருந்தால் பாவங்கள் விலகி  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ புண்ணியம் சேரும். ~~~~~~~~~~~~~ சனிப்பிரதோஷ நாளில் விரத...