Sunday, August 2, 2026

சபரிமலையில் உள்ள படிகள் 18 ஆடி18க்கும் சம்மந்தம் என்ன❓

*நீர்நிலைகளை 
போற்றி வழிபடும் ஆடிப்பெருக்கு விழா* .. ஆடி 18-
 *ஆடிப்பெருக்கு* 
சுப தினம்....

விவசாயம் செழிக்கவும், நாடு வளம்பெறவும் முக்கிய ஆதாரமான நீர்நிலைகளை போற்றி வழிபடும் ‘ஆடிப்பெருக்கு விழா’, ஆகஸ்ட் 3-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

ஆடி ’18’
அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் விசேஷமானவை. பொதுவாக இந்து சமயத்தில் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளும் நட்சத்திரம், திதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே வரும். ஆனால் நாளின் அடிப்படையில் கொண்டாடப்படும் விழாதான், ஆடிப்பெருக்கு.

ஆன்மிகத்தில் 18 என்ற எண்ணிற்கு தனிச் சிறப்புண்டு. புராணங்கள் 18, மகாபாரத பருவங்கள் 18, பகவத்கீதையில் உள்ள பிரிவுகள் 18, பாரதப் போர் நடைபெற்ற நாட்கள் 18, சபரிமலையில் உள்ள படிகள் 18 என ஏராளமான சிறப்புகள் உள்ளன. அந்த வகையில், ஆடி மாதத்தில் வரும் 18-வது நாளை ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறோம். இதை ‘ஆடி 18-ம் பெருக்கு’ என்றும் சொல்வதுண்டு.
நதியை போற்றும் நாள்
ஆடி மாதம் என்பது பருவ மழைகள் பெய்யும் காலமாகும். இதனால் நீர்நிலைகள் நிரம்பி, விவசாயத்திற்கு உயிர்கொடுக்கின்றன. பஞ்சபூதங்களில் மிகவும் முக்கியமானது நீர். அந்த நீரில் இருந்தே உலக உயிர்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. மற்ற நாட்களில் வறண்டு இருக்கும் ஆறுகள், ஆடிப்பெருக்கின்போது பொங்கி பெருகி வரும். இவ்வாறு நீர் வளம் பெருகுவதை கொண்டாடும் நாளாக, நீர்நிலைகளை போற்றி வழிபடும் நாளாக ஆடிப்பெருக்கு உள்ளது.

ஆடிப்பெருக்கு, தமிழ் மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி. ஆடி மாதத்தில் விவசாயிகள் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அன்றைய தினம் நதிகளின் கரையோரம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு வழிபாடு
தீபாவளி தினத்தன்று, எவ்வாறு கங்காதேவி அனைத்து நீர்நிலைகளிலும் நிறைந்திருப்பாரோ, அதே போல் ஆடிப்பெருக்கன்று, காவிரித்தாய் அனைத்து நீர் நிலைகளிலும் வியாபித்திருப்பதாக ஐதீகம்.

ஆடிப்பெருக்கு அன்று, அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். பின்னர், ஆற்றங்கரையில் ஓர் இடத்தை தேர்வு செய்து, அதில் இலை விரித்து அகல் விளக்கு ஏற்றி வைக்கவேண்டும். மேலும் வெற்றிலை, எலுமிச்சம் பழம் படைத்து, கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும்.

சிலர், வாழை இலையில் தீபம் ஏற்றி, மங்கலப் பொருட்களோடு நதியில் மிதக்கவிட்டு வணங்குவார்கள். அப்போது காவிரித்தாயை மனதில் நினைத்து கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதோடு, வீட்டில் இருந்து கலவை சாதம் தயார் செய்து கொண்டுவந்து, ஆற்றங்கரையில் அமர்ந்து குடும்பத்தோடு உண்டு மகிழ்வார்கள். அதில் தயிர்சாதம் முக்கிய இடம் வகிக்கிறது.

தாலிச் சரடு மாற்றுதல்
புதிதாக திருமணமான பெண்கள், ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிற்றை மாற்றிக்கொள்வர். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தங்கள் கணவன் கையால் கட்டிக் கொள்வார்கள். இதன்மூலம் மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

கன்னிப் பெண்களும் அம்மனை நினைத்து மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவில் அவர்களுக்கு நல்ல வரன் அமையும் என்கிறார்கள். சுமங்கலிகள், தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆடியில் இந்த நாள் மட்டும் விதிவிலக்கு
பொதுவாக ஆடி மாதத்தில் திருமணம் போன்ற எந்த வித சுபகாரியங்களையும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு ஒதுக்கப்பட்ட மாதம் ஆகும். ஆனால் ஆடிப்பெருக்கு அன்று மட்டும் நல்ல நேரம் பார்த்து, நல்ல காரியங்களை மேற்கொள்ளலாம்.
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 


ஆற்றிற்கு நன்றி செலுத்தும் ஆடி 18 விழா

 ஆடிப்பெருக்கு (ஆடி 18)  அன்றைய தினம் விரதமிருந்து வழிபாடு செய்தால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர். 
தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி கயிறு மாற்றிக்கொள்வர். 
எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால், 
அந்த காரியம் மேலும் மேலும்  பெருகும் என்பது ஐதீகம்.
 
பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். 
மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள்  முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன. 
இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் புண்ணியநதி அன்னைக்கு, ஆடிப்  பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடப்படுகிறது. ஆடி 18-ம்‌பெருக்கு விழா;-
அனைவருக்கும் ஆடி பண்டிகை  வாழ்த்துக்கள் 

ஆடி மாதம்:- இதனை சூரியனின் தட்சிணாயன பயணமாக பார்க்கலாம்...

அயனம் 2 ;-உத்ராயணம்/தட்சிணாயனம் என்பது ஆடி மாதம் 1 முதல் மார்கழி 31 வரை..

இதனை ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள்...

அதனால் விவசாயிகள் ஆடிமாதம் வந்தவுடன் விவசாய நிலங்களை  உழவு செய்ய தொடங்குவார்கள்...

ஆடிப்பெருக்கில் :- நாடு செழிக்க தேவையான நீரை போற்றி பாதுகாக்கும் பொருட்டு நதியை தெய்வமாக  வழிபட்டார்கள் நம் முன்னோர்கள்...

இதனால் ஓடிவரும் காவிரி சூல் கொண்டு  வருவதை கொண்டாடிட

10 நாட்கள் முன்பே நவதானியங்கள் வைத்து முளைப்பாரி எடுத்து காவிரியில் நதிக்கரையில்  சாணியில் பிள்ளையார் பிடித்து... 

பச்சரிசி+சர்க்கரை கலந்து நைவேத்தியம் படைத்து...

மற்றும் பழவகைகள், பூவகைகள், சாத வகைகள் , காதோலை கருகமணி கொண்டு... தீபமேற்றி தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது வழக்கம்...

நுரைத்து பொங்கும் காவிரியால் வளமாக விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்டுதல்..

இதில் வயதான சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் தடவிய நூலை எல்லோருக்கும் தரும் போது சிலர் கைகளிலும் கழுத்திலும் கட்டிக் கொள்வார்கள்....

இதில் ஆடிப்பெருக்கில் புதுமண தம்பதிகள் தாலிக்கயிற்றை பெருக்கி போடும் பழக்கம் உண்டு...

அது போர்க்களத்திற்கு சென்று வந்த கணவரின் ஆயுளுக்காக செய்யப்பட்டது...

ஆனால் முதன்மை கோட்பாடு...விவசாயம் செழிப்பதற்கான பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று...

18-ம் நாள் போர்க்களம் என்பது :- பாண்டவர்கள்/கௌரவர்கள் நடத்திய மஹாபாரத போர் முடிந்த நாள் ஆடி 18...

பாண்டவர்கள் வெற்றி பெற்றதை கொண்டாடும் விழாவாக அதனை கொண்டாடினார்...

இன்றளவும் ஆடி 18-ம் நாள் முடியும் வரை எந்த நல்ல விஷயங்களையும் பேச மாட்டார்கள் நம் முன்னோர்கள்...

நாளை காவிரி வழிபாடு  செய்வது மிகவும் நல்லதே ஆனால் தயவுசெய்து நதியை அசுத்தமாக்கும் வேலைகளை செய்து பாவத்தை பெற்றுக்கொள்ளாதீர்கள்..

(குளித்து போட்ட துணிகள் -பிளாஸ்டிக் பாட்டில் -கண்ணாடி பாட்டில் -டயப்பர் ) நதியில் போடாதீங்க புண்ணியம் கிடைக்கும்...

புண்ணிய நதிகளை போற்றுவோம்..
பழைய பண்பாட்டு கலாச்சார முறைகளை வளர்ப்போம்.. 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 
 


Monday, July 27, 2026

குலதெய்வங்கள்" என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...?

"குலதெய்வங்கள்" என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...?
குலதெய்வம்..., குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். 

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது...

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்..., அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை... இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்... இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று... அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...

விஞ்ஞான முறையில் யோசித்தால்...* ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே... ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. 

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்... இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தை பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது... வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து... இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு... தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்... பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை... ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்... அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்... புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்... திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது... அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்... குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். ஒவ்வொருவரின் கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான்...

தாயிற் சிறந்த கோவிலுமில்லை...  தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை...எனவே, நம் முதல் குலதெய்வமான பெற்றோர்களை போற்றுங்கள்...

. படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, July 12, 2026

காசியில் உள்ள பிந்து மாதவர் கோயில்

காசியில் உள்ள பிந்து மாதவர் கோயில் அப்படி என்ன விசேஷம் அங்க குளிச்சதை பெரிதாக சொல்கிறார்களே... 
தெரியாததை தெரிந்து கொள்வோம்.

பிந்து' என்றால் துளி. 'மாதவ்' என்றால் மகாவிஷ்ணு. கங்கையின் ஒவ்வொரு துளியிலும் இறைவன் வீற்றிருக்கிறார் என்பதைக் குறிக்கும் விதமாக இப்பெயர் பெற்றது. அக்னிபிந்து என்ற முனிவர் விஷ்ணுவை நோக்கி இங்கு கடுமையான தவம் புரிந்தார். அவரது தவத்திற்கு மெச்சி, பெருமாள் இங்கு தோன்றி, முனிவரின் பெயரால் "பிந்து மாதவன்" என்ற திருநாமத்துடன் இங்கேயே எழுந்தருளினார்.

கங்கையின் பெருமை கங்கைக் கரையில் அமைந்துள்ள இத்தலம் விஷ்ணுவின் சக்தி நிறைந்த வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது. 
 பஞ்சகங்கா காட் அருகே அமைந்துள்ளது. இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி, கிரணா, தூதபாபா ஆகிய ஐந்து நதிகளும் கண்ணுக்குத் தெரியாமல் (அகிலமாக) சங்கமிப்பதாக நம்பப்படுகிறது. இந்த படித்துறையில் நீராடி பிந்து மாதவரைத் தரிசிப்பது கோடி புண்ணியங்களைத் தரும்.

கருவறையில் பெருமாள் சங்கு, சக்கரம், கதாயுதம் ஏந்தி, கையில் தாமரையுடன் கருப்பு பளிங்குச் சிலையாக மிகக் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
இவருக்குப் பக்கத்திலேயே விநாயகர், சிவன் மற்றும் நந்தி சிலைகள் வெள்ளை பளிங்குக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இது ஹரி-ஹர (சிவன்-விஷ்ணு) ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. 

16-ஆம் நூற்றாண்டில் ஜெய்ப்பூர் ராஜா மான்சிங் என்பவரால் இக்கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது.
ஆனால், 1669-இல் முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் அக்கோயில் இடிக்கப்பட்டு, அங்கிருந்த தூண்களைக் கொண்டே ஆலம்கிரி மசூதி (Alamgir Mosque) கட்டப்பட்டது.
கோயில் இடிக்கப்படும் முன்பு, அங்கிருந்த பெருமாள் சிலையைப் பக்தர்கள் கங்கை நதியில் மூழ்கடித்துப் பாதுகாப்பாக வைத்தனர்.

பின்னர், 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் முயற்சியாலும், 19-ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் பவன் ராவ் என்பவராலும் தற்போதைய புதிய கோயில் மசூதிக்கு அருகிலேயே புதுப்பிக்கப்பட்டு, சிலையானது மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது     

  ராமகிருஷ்ணர் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் ஆகியோரைத் தரிசித்ததோடு, கங்கை நதிக்கரையில் பஞ்சகங்கா காட் அருகே உள்ள பிந்து மாதவ பெருமாள் கோயிலுக்கும் சென்றார். அங்கு பெருமாளின் திவ்யமான திருவுருவத்தைக் கண்ட மாத்திரத்திலேயே, அவர் அப்படியே உருகி, பாவன சமாதி (ஆன்மீகப் பரவச நிலை) அடைந்தார். மகாவிஷ்ணுவின் பேரொளியை அவர் அந்தச் சிலையில் கண்டு பரவசமடைந்தார் என்று அவரது வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசி யாத்திரையின் போது ராமகிருஷ்ணருக்கு தெய்வீகக் காட்சி ஒன்று கிடைத்தது. கங்கை நதிக்கரையில் இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் மணிகர்ணிகா படித்துறை வழியாக அவர் படகில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு ஒரு காட்சி தெரிந்தது.
சிவபெருமான் கறைபடிந்த ஒவ்வொரு உடலின் அருகிலும் சென்று, அவர்களின் காதில் தாரக மந்திரத்தை ஓதி மோட்சம் அளிப்பதையும், அன்னை பார்வதி தேவி தனது மடியால் அவர்களுக்கு விசிறி விட்டு அவர்களின் பாவத் தளைகளை அறுப்பதையும் அவர் நேரில் கண்டு மிரண்டு போனார்.

இதன் காரணமாகவே, "காசியில் இறப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை, அவர்களுக்குச் சிவனே மோட்சம் அளிக்கிறார்" என்ற ஆன்மீக உண்மையை ராமகிருஷ்ணர் உலகிற்குத் தீர்க்கமாக எடுத்துரைத்தார்.

இவ்வாறு, சைவம், வைணவம் என்ற பேதங்கள் கடந்து, காசி விஸ்வநாதரையும், பிந்து மாதவ பெருமாளையும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறான வடிவங்களாகவே ராமகிருஷ்ண பரமஹம்சர் போற்றித் தரிசித்தார்.துளசிதாசர் வடமொழியில் இருந்த ராமாயணத்தை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 'ராமசரிதமானஸ்' ஆக எழுதினார். காசியில் இருந்த சில பண்டிதர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

அப்போது, துளசிதாசர் தனது காவியப் பிரதிகளை இரவில் காசி விஸ்வநாதர் கோயிலிலும், பின்னர் பிந்து மாதவர் கோயிலிலும் பெருமாளின் திருவடிகளில் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்தார்.

மறுநாள் காலை, அந்தப் பிரதியின் மேல் விஸ்வநாத பெருமானும், பிந்து மாதவ பெருமாளும் "சத்யம், சிவம், சுந்தரம்" என்று சான்றளித்து கையொப்பமிட்டதாக ஒரு ஆன்மீக வரலாறு உண்டு. இதன் மூலமே அவரது காவியம் தெய்வீக அங்கீகாரம் பெற்றது.

ஹனுமான் சாலிசா உருவான தலம்
துளசிதாசர் பிந்து மாதவர் கோயில் அமைந்துள்ள இதே பஞ்சகங்கா படித்துறையில் (Panchganga Ghat) ஒரு சிறிய குடிலில் தங்கியிருந்துதான் தனது ஆன்மீகப் பணிகளைச் செய்து வந்தார். அவர் தினமும் பிந்து மாதவரைத் தரிசித்து வந்தார். விஷ்ணு பக்தரான அவர், பெருமாளின் பரம பக்தனான அனுமனைப் போற்றி உலகப் புகழ்பெற்ற "ஹனுமான் சாலிசா" தோத்திரத்தின் பெரும் பகுதியை இந்தப் பஞ்சகங்கா படித்துறையில் அமர்ந்துதான் இயற்றினார் இத்தனை பெருமை மிகுந்த படித்துறையில் ஸ்நானம் செய்து மாதவரை தரிசித்தது சிறப்பு.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Wednesday, July 8, 2026

உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில்.

உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் 

ஸ்ரீவேலி விஷ்ணுக்ரஹம் , கொங்கரையர் நின்ற பெருமாள் கோயில், வெள்ளைமூர்த்தி ஆழ்வார் கோயில், இராஜேந்திர சோழ விண்ணகர், புருஷோத்தமத்துப் பெருமாள் கோயில், பஞ்சவரதர் கோயில்

காலம் / ஆட்சியாளர் 

கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்

கல்வெட்டு / செப்பேடு 

தாங்குதளத்தின் கருங்கல்லில்தான் கல்வெட்டுகள், எல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள பழமையான கல்வெட்டு சம்ஸ்கிருத மொழியில் பல்லவ கிரந்த எழுத்துகளில் உள்ளது. இக்கோயிலை காஞ்சிபுரத்துப் பாடகம் என்னும் ஊரில் வாழ்ந்த பரமேசுவரன் என்ற தச்சன் கட்டினான். அவன் நல்ல அறிவாளி. வாய்மையே தலையாய் நின்றவன். அவனால் இப்பெருங்கோயில் கட்டப்பட்டது. இதன் அளவுகளையும், அங்கங்களையும் அணிகளையும் எவன் ஒருவன் அறிகிறானோ அவனே வாஸ்து வித்தையில் சிறந்தவன். இவ்வாஸ்து மிகவும் மகோன்னதமானது. பெயராலும், வகையாலும் மிகச் சிறந்தது. வாஸ்துக்களில் எல்லாம் சூரியனைப் போன்றது. இவ்வூரில் ஆகம வல்லுநர்கள் பலர் இருக்கின்றனர். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என அனுபவம் மிக்கவர்கள் உள்ளனர். அவர்கள் அறிவுரைப்படி இக்கோயில் கட்டப்பட்டது என அக்கல்வெட்டுக் கூறுகிறது. 
ஏவம் வாஸ்து அபவத் மஹத் ப்ரவிகதம் நாமனாச ஜாத்யாதினா ஏனாஸ்மின் பகுபிஹ் யதாகம விதை: க்ராமே ப்ரயோகான் விதை; ஸ்ரீமத்பாடக வாஸினா க்ருத தியா தக்ஷ்ணா சதா வாக்மினா தேன இதம் பரமேசுவரேன மஹதா ஸ்ரீவாக்மினோ பாஸ்கர: அஸ்ய அலங்காரமானம் ச யதா லக்ஷண சம்யுதம் யஸ்சைனம் வேத்தி சகலம் ஸ வை வாஸ்துவிதாம் வர: 

என அக்கல்வெட்டில் உள்ளது. இதிலிருந்து இக்கோயிலை எட்டாம் நூற்றாண்டில் மிகச் சிறந்த கோயிலாகக் கட்டியிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை . 

இக்கோயிலில் திருமாலின் ஒன்பது மூர்த்தங்கள் உள்ளன என்றும் இது மரீசி ஸம்ஹிதை என்னும் வைணவ நூல்படி கட்டப்பட்டது என்றும் கண்டோம். அந்நூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறையோர்கள் வசிக்கும் ஊர்களில் நவமூர்த்தி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. 

இவ்வூர் 1200 மறையோர்களுக்கு நந்திவர்மனால் தானம் அளிக்கப்பட்டது என்று கண்டோம். இவ்வூரில் பலர் ஆயிரத்து இருநூற்றுவர் எனப் பெயர் கொண்டிருந்ததை கல்வெட்டுகள் காட்டுகின்றன. ஆதலின் இக்கோயில் தோற்றுவித்த காலத்திலேயே மரீசி ஸம்ஹிதையைப் பின்பற்றி கட்டியிருக்கிறார்கள் என அறியலாம். இதன் பின்னர் பல்லவன்  நந்திவர்மனின் கல்வெட்டு முழுமையாக எழுதப்படாமல் நின்றுவிட்டது.

 பத்தாம் நூற்றாண்டில் கொங்கரையர் என்பவனால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலின் இக்கோயில் கொங்கரையர் ஸ்ரீ கோயில் என்றும் பெயர் காணப்படுகிறது. கோயில் அதிட்டானத்தில் "கொங்கரையர் நின்ற பெருமாள்'' என்ற பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்திருப்பணி செய்யப்பட்டபோது கோயிலின் பண்டைய அமைப்பை எவ்விதத்திலும் மாற்றாமல் பணி செய்துள்ளது போற்றத்தக்க ஒன்றாகும். 

பார்த்திவேந்திர வர்மனின் ஒரு கல்வெட்டில் கொங்கரையர் எடுப்பித்த ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹம்" என்ற குறிப்பு காணப்படுகிறது. இது பத்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற திருப்பணி. இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் இக்கோயிலில் பல காணப்படுகின்றன. இவற்றில் கொங்கரையர் கோயில் என்றும், கொங்கரையர் கோயிலான ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹம் என்றும் புருஷோத்தமம் என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. 

1002வது ஆண்டில் இராஜராஜன் காலத்தில் கொங்கரையர் ஸ்ரீ கோயிலில் நின்ற பரமசுவாமிகளுக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள் தானம் அளிக்கப்பட்டன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புருஷோத்தமத்து பெருமானுக்கு நைவேத்யத்துக்காக ஒரு நிலம் கொடுக்கப்பட்டது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திரிவிக்ரமச் சேரியில் வாழ்ந்த ஒரு பெண்மணி ஸ்ரீவேலி விஷ்ணுகிருஹத்து வெள்ளைமூர்த்தி பெருமானுக்கு விளக்கெரிக்க 96 ஆண்டுகள் கொடுத்தாள். 

இதே போல ஹ்ரீஷீகேசச் சேரியைச் சேர்ந்த ஒருவர், ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹத்தில் எழுந்தருளி நின்ற ஸ்ரீராகவப் பெருமானுக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள் கொடுத்தார். இராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலனின் தேவி திரு அயோத்தி பெருமானுக்கு கோயில் கட்டினாள் என்று கண்டோம். 

அது வேறு கோயிலோ எனத் தோன்றுகிறது. இக்கோயில் சுந்தர வரதர் கோயிலேயே இருந்த மற்றொரு இராமர் கோயில் எனலாம். இராஜராஜனின் இறுதி ஆண்டில் வெள்ளை மூர்த்தி ஆழ்வார்க்கும், ஸ்ரீராகவ தேவருக்கும் நாள்தோறும் மூன்று சந்திகளிலும் திரு அமுது படைக்க ஊர்ச்சபையார் நிலம் அளித்தனர். இக்கோயிலில் திருப்பதியம் பாடும் ஸ்ரீ வைணவர்களுக்கு இந்த சந்திகளில் படைக்கப்படும் நைவேத்ய ப்ரஸாதத்தை விநியோகிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது. 

இவற்றிலிருந்து இராஜராஜன் காலத்தில் இக்கோயில் மிக உன்னத நிலையில் இருந்தது என்றும், பெரும்பாலும் ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹம் என்றே அழைக்கப்பெற்றது என்றும் பெருமாள் வெள்ளைமூர்த்தி ஆழ்வார் என்றே அழைக்கப்பெற்றார் என்றே அறிகிறோம். இங்கிருந்த ஸ்ரீராமரும் சிறப்பாக வழிபடப்பட்டார் என்றும் அறிகிறோம். இவ்வளவு சீரும் சிறப்புமாக இருந்த நிலையில் இராஜேந்திர சோழன் இக்கோயிலுக்கு திருப்பணி செய்திருக்கிறான். இக்கோயில் "இராஜேந்திர சோழ விண்ணகர்'' என்று அழைக்கப்பட்டது. 

பண்டைய பெயரும் சிலகாலம் வழங்கப்பெற்று பின்னர் அது வழக்கற்றுப் போயிற்று. உத்தரமேரூரின் பெயரும் இராஜேந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என மாறியதைக் கண்டோம். இந்தப் பெயர் மாற்றம் இராஜேந்திர சோழனின் நான்காவது ஆட்சியாண்டில் அதாவது 1016ல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து இக்கோயில் வழிபாடு செய்வதற்காக நான்கு வைகானஸர்கள் அமர்த்தப்பட்டனர். இவர்கள் அரசாணிமங்கலத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்து இக்கோயிலுக்கு மாற்றப்பட்டு, இங்கு வழிபட பங்குக்கள் கொடுக்கப்பட்டன. இதிலிருந்து இக்கோயிலில் வைகாஸனர்களே பூஜை செய்தனர் என்று அறிகிறோம். இன்றும் வைகானஸப் பிரிவினரே பூஜை செய்கிறார்கள் என்பது குறிக்கத்தக்கது. 

இராஜேந்திரன் காலத்தில் 1017ல், இக்கோயிலில் இருந்த கிருஷ்ணப் பெருமானுக்கு பூஜைக்கும், நைவேத்யத்துக்கும், திருவிழாக்களுக்கும், நிலம் தானம் அளிக்கப்பட்டது. இவற்றை ஸ்ரீ கிருஷ்ணகணப் பெருமக்களே மேற்பார்வையிட வேண்டும் என விதிக்கப்பட்டது. இக்கோயிலில் இராமபிரானுக்கு சிறப்பாக வழிபாடு நடந்ததைப் போலவே கண்ணபிரானுக்கும் சிறப்பாக பூஜை திருவிழாக்கள் நடைபெற்றன. 

இதே சோழ மன்னன் காலத்தில் கி.பி.1031ல் இவ்வூரில் 2240 குழி நிலம் தரிசாக இருந்தது. இவற்றிலிருந்து எவ்வித வரியும் வரவில்லை. ஆதலின் ஊர்ச்சபையார் இந்நிலங்களை தாங்களே மேற்கொண்டனர். இவற்றை வரி ஏதுமில்லாமல் கோயிலுக்கே கொடுத்து விட்டனர். இந்நிலங்களைத் திருத்தி இவற்றின் வருவாயைக் கொண்டு கோயிலின் மூன்று சந்நிதிகளில் பூஜைக்கும், நான்கு அயனங்களில் சிறப்பு வழிபாட்டுக்கும், கிரஹண காலங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் இக்கோயிலில் மேல் தளத்தில் உள்ள அனந்தசயனப் பெருமாளுக்கு பூஜைக்கும் விளக்குக்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் இக்கோயிலில் காலையிலும் மாலையிலும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாட மூவர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஊதியங்களுக்கும் இதைப் பயன்படுத்த வேண்டும். இதிலேயே மற்றொரு தானம் இக்கோயிலில் இருந்த ஸ்ரீ ராகவதேவருக்கு சிறப்பு பூஜைக்கும் பயன்படுத்த வேண்டும் என ஊர்ச்சபையார் விதித்தனர்.

 இராஜேந்திர சோழனின் ஆட்சியில் 1042ல், இக்கோயிலுக்கு ஒரு நந்தவனம் அமைக்கவும் குந்தவை ஆழ்வார் பெயரில் ஒரு மடம் ஏற்படுத்தவும் அம்மடத்தில் ஸ்ரீ வைணவர்களுக்கு உணவு அளிக்கவும் நிலம் கொடுக்கப்பட்டது. கோயில்களை ஒட்டி மடம் அமைத்து அதில் வைணவர்களுைக்கு உணவளிப்பது தொன்று தொட்டு வரும் ஒரு மரபாகும். 

1038ல் இராஜேந்திரனின் ஆட்சியில் ஊர்ச்சபையார் இக்கோயிலுக்கு நிலமளித்தார். அந்நிலத்தின் வருவாய் கொண்டு இரண்டு பணிகள் செய்ய பணித்தனர். ஒன்று நாள்தோறும் இக்கோயிலில் மூவர் திருவாய் மொழி விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல நாள்தோறும் வாஜஸனேய வேதம் ஓதவும் ஏற்பாடாயிற்று. இதிலிருந்து திருவாய்மொழி ஓதவும், வேதம் ஓதவும் இரண்டு மகா நிலம் அளித்துள்ளது. வேதத்தையும் திருவாய்மொழியையும் சமமாக பாவித்தனர் என அறிய முடிகிறது. இராஜேந்திர சோழன் ஆட்சியிலேயே இரண்டு முறை திருவாய்மொழி விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது குறித்துக் கொள்ளத்தக்கது. 

இக்கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்க சோழனின் காலச் சான்றும் சிறப்பு மிக்கதே. சோழவிச்சாதர பல்லவரையன் என்பவன் இவ்வூரில் 30 பாடகம் நிலம் வாங்கினான். இந்நிலம் 60-70 ஆண்டுகளாக விளைச்சலின்றி தரிசாகக் கிடந்தது. கோயிலை ஒட்டி ஒரு மடம் அமைத்து அதன் செலவுகளுக்காக கொடுத்தான். அத்துடன் திருமழிசை வள்ளல் என்பவரும் வீற்றிருந்தான் தாசன் என்பவரும் பணம் கொடுத்தனர். அவர்களது பணம் கொண்டு ஒரு மனை வாங்கப்பட்டது. இதில் அருளாளாசன் மடம் என்று ஒரு மடம் வைக்கப்பட்டது. அந்நிலத்தின் வருவாயைக் கொண்டு இம்மடத்தை நடத்த ஏற்பாடாயிற்று. அந்நிலத்துக்கு வாங்கி அளித்தவர் பெயரால் சோழ விச்சாதர விளாகம் எனப் பெயர் வைக்கப்பட்டது. அந்நிலத்துக்கு நிலம் வாங்கிய ஆண்டு வரி விலக்கும் கொடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐந்து காசு வரிகட்ட வேண்டும். நிலத்தைப் பண்படுத்த முதலாண்டு வரி விலக்களித்து ஊக்கமளித்து அடுத்த ஆண்டு முதல் வரிவிதிக்கும் முறை, அக்காலத்து வேளாண் - வரலாற்றை அறிய முடிகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் இரண்டு செய்திகள் இங்கு இடம் பெற்றுள்ளன. 38வது வருடம் இக்கோயிலில் நாட்டியமாடும் ஒரு பெண் ஆயிரத்து இருநூற்றுவ மாணிக்கம் என்பது அவளது பெயர். அவள் இக்கோயிலின் பிரகாரத்தையும் முன் மண்டபத்தையும் பிற சில கட்டிடங்களையும் கட்டினான். அவளது பணியையும் பக்தியையும் பாராட்டி, ஊரார் கோயில் தானத்தாரின் அனுமதியுடன் தினந்தோறும் பெருமாளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்திலிருந்து ஒரு குறுணி, திருவமுதை, இவளுக்கும் இவள் வம்சத்தாருக்கும் அளிக்க ஏற்பாடு செய்தனர். நாட்டியப் பெண்கள் கோயில்களுக்கு எவ்வளவு திருப்பணி செய்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு 

 அடுத்து வந்த மூன்றாம் இராஜராஜனது காலத்தில் இப்பெண் இக்கோயிலுக்கு மேலும் சில திருப்பணிகள் செய்தாள். அதையும் மெச்சி ஊரார் இவளுக்கு சில சலுகைகளை அளித்தனர். விக்ரம் சோழனின் 11ம் ஆண்டில், ஆடி மாதம் தோறும் வெள்ளைமூர்த்தி ஆழ்வாரின் திருவிழாவில் சொக்கப் பெருமாள் உலா வரும்போது அபிஷேகத்துக்கும் அமுதுபடி சாத்து படிகளுக்கும், அழகிய தேவன் என்பவன் நிலம் அளித்தான். இக்கல்வெட்டில், வெள்ளைமூர்த்தி ஆழ்வார் கோயிலில் திருவிழா எழுந்தருளும் சொக்கப்பெருமாள் என்பதால் வெள்ளைமூர்த்தி ஆழ்வார் என்பது மூலவர் பெயராகவும், சொக்கர் என்பது உத்ஸவர் பெயராகவும் காணப்பெறுகின்றன. மதுரையில் சொக்கநாதர் என்பது சுந்தரேசுரர் என அழைக்கப்படுவது நாம் அறிந்ததே அது போல. சொக்கப் பெருமாள் என்பதே சுந்தரவரதர் எனும் பெயரின் பிரதிபலிப்பு எனலாம். பின்னர் வந்த பிற்கால பாண்டியன் வீரபாண்டியன் காலத்தில், இக்கோயில் சொக்கப் பெருமாள் கோயில் என் அழைக்கப்பட்டது. சொக்கப்பெருமாள் கோயிலைச் சுற்றி வசிக்கும் வணிகர்கள், கேதாரீசுரர் , கோயிலைச் சுற்றி வசிக்கும் வணிகர்களைப் போல செக்குகளுக்கும், எண்ணைக்கும் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என உத்தரவு இடப்பட்டது. 12ம் நூற்றாண்டிலிருந்து கோயில் சொக்கப் பெருமாள் கோயில் என மக்கள் வழக்கில் வந்துள்ளமை காணலாம். தெலுங்கு சோழ மன்னன் விஜயகண்ட கோபாலன் என்பவன் காலத்திலும் இங்கு உத்ஸவர் சிறப்பிடம் பெற்றிருக்கிறார். 

ஆதலின் சொக்கப் பெருமாளுக்கு ஓர் ஊர் அளிக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசன் கிருஷண் தேவராயன் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்தான் என்று கண்டோம். அவனது கல்வெட்டும் இக்கோயிலில் உள்ளது. அது பாதியிலேயே நின்று போய் காணப்படுகிறது. முற்றிலும் எழுதப்படவில்லை .

சிற்பங்கள் நடுத்தளத்தில் கிழக்கு நோக்கி பெருமிதமாக அமர்ந்திருக்கும் பெருமான் - வைகுந்த வரதர் என அழைக்கப்படுகிறார். 

இது தவிர, இத்தளத்திலும் தெற்கு, மேற்கு, வடக்கு என திக்குக்கு ஒன்றாக கருவறைகள் உள்ளன. தெற்கு நோக்கிய கருவறையில் கிருஷ்ணனும் அர்ச்சுணனும் நரநாராயணர்களாக அமர்ந்து விளங்குகின்றனர். 

மேற்கு நோக்கி நரசிம்ம பெருமானும், வடக்கு நோக்கி பூவராக மூர்த்தியும் அமர்ந்து விளங்குகின்றனர். மேல் தளத்தில் அனந்தசயனம் கொண்டாராக திருமால் படுத்த திருக்கோலம். ஆக கீழ்தளத்தில் நான்கு , நடுத்தளத்தில் நான்கு , மேல் தளத்தில் ஒன்று என மொத்தம் திருமாலின் ஒன்பது மூர்த்தங்கள் உள்ளன. 

ஒன்பது மூர்த்தங்கள் உள்ளத்தை நவமூர்த்தி பிரதிஷ்டை என அழைப்பர். இக்கோயிலில் வைணவ மரபில் வைகானஸப் பிரிவில் மரீசி சம்ஹிதை என்ற நூலைப் பின்பற்றி வழிபாடு நடைபெறுகிறது. 

இந்த அமைப்புத் தவிர கீழ்தளத்தில் தெற்கு மேற்கு வடக்கு திக்குகளில் உள்ள கருவறைக்கு ஏறிச் செல்லப் படிகள் உள்ளன. அவற்றின் கைப்பிடிச் சுவர்கள் உள்ளன. தெற்கு கைப்பிடிச் சுவரில் சரஸ்வதியின் உருவம் உள்ளது. இவ்வுருவம் ஒரு சிறப்புடையது. 

இதைப் பார்த்தால் கஜலக்ஷ்மி போல் இருக்கும். இரண்டு புறங்களில் யானைகள் நின்று இத்தேவியின் மீது கலசங்களால் அபிஷேகம் செய்வது போல் இருக்கிறது. இது மேலெழுந்த வாரியாக பார்த்தால் கஜலக்ஷ்மி என்று கூறி விடுவோம். ஆனால் இத்தேவியின் மேலிரு கரங்களில் கலசமும் அக்கமாலையும் உள்ளன. இடது கரத்தில் புத்தகம் இருக்கிறது. வலது கரம் அபய ஹஸ்தமாகக் காணப்படுகிறது. இது சரஸ்வதியின் சிலை என்பதில் ஐயமில்லை . 

மரீசி சம்ஹிதை இந்த இடத்தில் சரஸ்வதி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. சரஸ்வதியை வாக்தேவி என்று அந்நூல் குறிக்கிறது. மேற்குப்புறப் படிச் சுவற்றில் இரதியும் மன்மதனும் நிற்கின்றனர். மன்மதன் எனக் காட்ட அவனுக்கருகில் மகரக் கொடி உள்ளது. மறுபுறம் கரும்பு வில்லும் மலர்களால் ஆன ஐங்கணைகளும் உள்ளன. வடபுறப் படிக்கட்டின் கைச்சுவற்றில் பிருகு மகரிஷி அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இக்கோயிலில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் மரீசி சம்ஹிதையில் கூறியுள்ளபடியே உள்ளன. இதன் விமானத்தில் தென்புறம், தக்ஷிணாமூர்த்தி, சந்திரசேகரர், உமா மகேசுரர், துர்க்கை , கணபதி ஆகிய சைவ உருவங்கள் உள்ளன. பிற திசைகளில் திருமால் கோலங்கள் உள்ளன.

தலத்தின் சிறப்பு 1100 ஆண்டுகள் பழமையானது. 

செல்லும் வழி 

போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. உத்திரமேரூருக்கு வடக்கே காஞ்சிபுரம் 28 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் அமைந்த தொடருந்து நிலையம் 26 கிமீ தொலைவில் உள்ள செங்கல்பட்டு ஆகும். இதன் மேற்கில் வந்தவாசி25 கிமீ மற்றும் ஆரணி 69 கிமீ தொலைவிலும், செய்யார் 32கி.மீ தொலைவிலும், தெற்கில் மதுராந்தகம் 26 கிமீ தொலைவில் உள்ளது.

                           ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, July 7, 2026

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்*

*அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்*
*மூலவர் :* நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர்.
*உற்சவர் :* கல்யாணசுந்தரர்
*அம்மன் :* சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை.

ஸ்தல விருட்சம் : வீழிச்செடி
தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள்
புராண பெயர் : திருவீழிமிழலை
ஊர் : திருவீழிமிழலை
மாவட்டம் : திருவாரூர்

*ஸ்தல வரலாறு :*
------------------------------------------------------
மஹாவிஷ்ணுவின் கையில் இருந்த சக்ராயுதம் தேய்ந்துபோனபோது, ஆற்றல் பொருந்திய வேறொரு சக்கரத்தைப் பெறுவதற்காக சிவபெருமானை மஹாவிஷ்ணு பூஜித்ததாகப் பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி சிவபெருமானை விஷ்ணு பூஜித்ததாக திருமாற்பேறு (திருமால்பூர்), திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன. இம்மூன்று தலங்களில், திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சலந்திரனைச் சம்ஹரிக்க திருமாலுக்கு சக்கரம் தேவைப்படுகிறது. அதை சிவபெருமானிடம் இருந்து பெறுவதற்காக திருவீழிமிழலைக்கு வருகிறார். ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் எண்ணியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி, ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999 மலர்களால் அர்ச்சனை செய்துவிடுகிறார். விஷ்ணுவை சோதிக்க நினைத்த சிவபெருமான், 1000-வது மலரை மறைத்து விடுகிறார். 1000-வது மலரைக் காணாமல் விஷ்ணு தவிக்கிறார். இன்னொரு தாமரை மலரைக் கொண்டு வந்து அர்ச்சனையைத் தொடர நேரமும் இல்லை. குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக, தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பிடுங்கி எடுத்து, எந்தக் குறையும் இல்லாமல் பூஜையை முடித்தவுடன், சிவபெருமானும் காட்சி கொடுக்கிறார். அத்துடன், திருமால் விரும்பியபடி அவருக்கு சக்ராயுதத்தையும் கொடுத்து அருள் செய்கிறார். இப்படி மஹாவிஷ்ணு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம்தான் திருவீழிமிழலை. இப்படி ஈசனை திருமால் வழிபட்ட செய்தியை திருநாவுக்கரசர் தனது பதிகம் மூலமாகப் பாடுகிறார். நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும் “பூதத்தின் படையர் பாம்பின்” என்று தொடங்கும் பதிகத்தின் 8-வது பாடலில், இத்தல வரலாறு குறித்துப் பாடுகிறார்.

கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துக்கு முன் பெரிய அழகிய திருக்குளம் உள்ளது. இறைவன் நேத்ரார்ப்பனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூலவர் சுயம்பு உருவில் சுமார் 5 அடி உயரத்தில் நற்காட்சி தருகிறார். மூலவர் லிங்கத்துக்குப் பின்புற கர்ப்பக்கிருக சுவரில், பார்வதி – பரமேசுவரர் திருமண கோலத்தைக் காணலாம். இறைவன் உமையை மணந்துகொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. மகாமண்டபத்தில், மாப்பிள்ளை சுவாமியாக கல்யாணசுந்தரர் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி. அவரது வலது பாதத்தின் மேலே திருமால் அர்ச்சித்த கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் காணலாம்.

கைலாயத்தில் வசிக்கும் சிவபெருமானுக்கும், காத்தியாயணி அம்பிகைக்கும் திருமண வைபவம் நடைபெற்ற தலம் திருவீழிமிழலை. ஆகவே, இத்தலம் ஒரு திருமணத்தலம். கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தைவிட, கர்ப்பக்கிருஹத்தின் மேல் இருக்கிற 16 சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானமே சிறப்பானது. இதற்கு விண்ணிழி விமானம் என்று பெயர். சக்கரம் பெற்ற திருமால், வைகுண்டத்தில் இருந்து கொண்டுவந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி, மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது. ஆலயத்தின் முதல் பிராகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம், சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மூலவரின் வலப்பக்க மண்டப அறையில், கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் பாவனையில் திருமால் காட்சி தருகிறார்.

இத்தலம் வீழிச்செடி, சந்தனம், சண்பகம், பலா, விளா முதலிய மரங்கள் அடர்ந்த காடாகப் பல காலம் இருந்தது. மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் ஒருவர் இத்தலத்தில் வசித்து வந்தார். அவர் தினம் ஒரு விளாங்கனி நிவேதனம் செய்து வீழிநாதரை வழிபட்டு வந்தார். அதன் பலனாக, ஈசன் அவர் முன் தோன்றி அருளாசி வழங்க, அவர் தவக்கோலம் பூண்டு, அருந்தவங்கள் செய்து அட்டமாசித்திகள் கைவரப் பெற்றார். இந்த மிழலைக் குறும்பருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.

இக்கோயிலில் உள்ள வெளவால் நெத்தி மண்டபம், மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாகும். அக்காலத்தில், கோயில் திருப்பணிகள் செய்யும் ஸ்தபதிகள், திருவீழிமிழலை வெளவால் நெத்தி மண்டபம் மற்றும் திருவலஞ்சுழி கல் பலகணி போன்ற அரிய திருப்பணிகள் நீங்கலாக மற்றவை செய்து தருகிறோம் என்று ஒப்புக்கொள்வார்கள். அத்தகைய சிறப்புபெற்ற இந்த வெளவால் நெத்தி மண்படம், இன்று கல்யாண மண்டபமாக விளங்குகிறது.

ராஜகோபுரம் கடந்து நுழைந்தவுடன், வலதுபுறம் உள்ள இந்த வெளவால் நெத்தி மண்டபம் அகலமான அமைப்புடன் நடுவில் தூண் இல்லாமல், சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்டுள்ள வளைவான கூரை அமைப்புடன் உள்ள இந்த மண்டபம், கட்டட வேலைப்பாட்டில் மிகமிக அபூர்வமானது. வெளவால்கள் வந்து வசிக்க முடியாதவாறு கூரை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். சித்திரை மாதத்தில், இறைவன் – இறைவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

*கோயில் சிறப்புகள் :*

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது.
 
இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார்.
 
கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.
 
தேவார மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்றாகும். இத்தலம் 23 திருப்பதிகங்களையுடையது. வீழிச்செடிகள் நிறைந்திருந்ததால் இவ்வூருக்கு திருவீழிமிழலை என்று பெயர் ஏற்பட்டது.
 
திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று ஒரு கையில் தாமரை மலரும், மறுகையில் கண்ணும் கொண்டு, நின்ற கோலத்திலிருப்பதை இக்கோயிலில் காணலாம். இங்கு இறைவனுக்கு முன்னே நந்தி தேவருக்குப் பதிலாக, திருமால் கூப்பிய கரத்தோடு நின்றிருக்கிறார் !
 
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது, நாட்டில் கடும் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது. இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள். மறுநாள் காலையில், கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள். அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர். படிக்காசு அளிப்பதிலும், அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் இறைவன் கொடுத்தார். சம்பந்தர் அதைப் பார்த்து “வாசி தீரவே காசு நல்குவீர்” என்னும் பதிகம் பாடிய பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருள் செய்தார். அவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள், கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. படிக்காசுப் பிள்ளையார், மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில் சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன. இவ்விருவரும் தங்கியிருந்த திருமடங்கள், வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.

படிக்காசு விநாயகர் கோயிலில் சம்பந்தர், நாவுக்கரசர் திருஉருவச்சிலைகள் உள்ளன. இருவரும் தாம் பெற்ற படிக்காசுகளைக் கொண்டு பொருட்களை வாங்கிய கடைத்தெரு, இப்போது ஐயன்பேட்டை என்றழைக்கப்படுகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர், செட்டியப்பர். அம்பாள், படியளந்த நாயகி. ஐயன் தராசு பிடித்த கையோடும், அம்பிகை படியைப் பிடித்தபடியும், உற்சவ மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றனர்.
 
கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது.
 
இத்திருக்கோயிலைச் சுற்றி; பத்ம தீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணு தீர்த்தம், திரிவேணி சங்கமம், குபேரதீர்த்தம், இந்திர தீர்த்தம், வருண தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வசிட்ட தீர்த்தம் முதலாக 25 தீர்த்தங்கள் உள்ளன.

ஸ்தலவிருட்சம் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒன்றாக மாறுபடுகிறது என்பர். இப்போது பலா, தலமரமாக விளங்குகிறது.
 சோலை சூழும் திருவீழிமிழலையில் வாழும் பெருமாளே! (முருகா, குமரா, உயிர்கா என ஓத அருள்தாராய்!) சூரனுக்கு அஞ்சி, முனிவர்களும் தேவர்களும் ஓலமிட்டதை இங்கு அருணகிரியார் பாடியுள்ளார். கந்தபுராணத்திலும் இக்கருத்தை உடைய பாடல் வருகிறது.
 
*திருவிழா:*

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

*நடை திறக்கும் நேரம்:*

காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

*முகவரி*

அருள்மிகு நேத்ரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை,
திருவீழிமிழலை அஞ்சல்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609 505.
போன்:  +91-4366-273 050, 94439 24825

*அமைவிடம் :*

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் பேரளம் வழியாக பூந்தோட்டம் வந்து, அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, June 29, 2026

படியேறி தரிசித்தால் நைனாமலை வரதராஜப்பெருமாள்.

படியேறி தரிசித்தால் வளம்தரும் நைனாமலை வரதராஜப்பெருமாள்


சேலத்தில் இருந்து திருச்சி செல்லும் பிரதான சாலையில் இருக்கும் புதன்சந்தை, நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பகுதி. இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது நைனாமலை வரதராஜப்பெருமாள் கோயில். திரும்பிய திசையெல்லாம் பசுமை மிளிர, இயற்கை எழில் கொஞ்சும் மலையின் உச்சியில்2,600 அடி உயரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் வரதராஜப்பெருமாள். குவலயவல்லித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. ‘‘நைனாமலை இதிகாச காலத்திற்கு முன்பிருந்தே இருந்துள்ளது. எம்பெருமாள் தங்கியிருந்து அருள்பாலித்து வரும் திருத்தலங்களுள்  முதன்மையானது என்றும் புராணக்குறிப்புகள் கூறுகிறது. 

பிரம்மாவால் பாடப்பெற்ற பிரமாண்ட புராணத்தில் பதினாறாவது அத்தியாயத்தில் இந்த மலையின்  சிறப்பு தெளிவாக விளக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் திருமலை நாயக்கமன்னரின் தம்பியான கோவிந்தப்ப நாயக்கரால் சில பகுதிகள் கட்டப்பட்டது’’ என்கிறது தலவரலாறு. மலையடிவாரத்தில் பாதமண்டபத்திலிருந்து மலையின் படிகள் தொடங்குகின்றன. 

உச்சிக்கு சென்று வரதராஜரை வழிபட 3360 படிகளை கடந்து செல்ல வேண்டும். பாத மண்டபத்தில் கூப்பிய கரங்களுடன் பக்தர்களின் நலனுக்காக இறைவனை வேண்டி வணங்கி நிற்கிறார் ஆஞ்சநேயர். அவரை வணங்கிய பின்னரே பக்தர்கள் படியேற துவங்குகின்றனர். மலைஉச்சியின் முகப்பில் கோயிலின் பெரிய மண்டபமும், திருமடைப் பள்ளியும் கட்டப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்துச் செல்லும் வகையில், மண்டபம்  விசாலமாக பரந்து கிடக்கிறது. 

திருமடைப்பள்ளியை தாண்டியதும் கோயில் படிகள் தொடங்குகின்றன. உபய வரதராஜ பெருமாளின் கோயிலுக்கு வலப்புறம், பாறையில்  வாலி சுக்ரீவர் திருவுருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. அதை தாண்டி சென்றதும், கோயிலின் தல விருட்சமான நெல்லி மரம் உள்ளது. அதனையடுத்து கம்பீரமான எம்பெருமாள் வரதராஜ பெருமாள் சன்னதியை மலையின் உச்சியில் காணலாம். 

மூலவராக வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழில்கோலம் தாங்கி அருள்பாலித்து வருகிறார். கோயிலில் கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகா  மண்டபம் என மூன்று மண்டபங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் ராம லட்சுமணர், சீதாதேவி, நவநீத கிருஷ்ணர், ராதா ருக்மணி வேணுகோபால், துவார  பாலகர்கள் ஆகியோரின் விக்கிரகங்கள் உள்ளன. கருடாழ்வார் கோயிலின் எதிரில் உள்ளார். கல்லால் செய்யப்பட்ட தீபஸ்தம்பமும் உள்ளது. 

தீபஸ்தம்பத்தில் பெருமாளுக்கு  திருமஞ்சனம் செய்யும் போதெல்லாம் திருக்கோடி தீபம் ஏற்றப்படுகிறது. பெருமாளின் வலது புறத்தில் குவலய வல்லி தாயாரின் தனி சன்னதி அமைந்துள்ளது. தமிழ் வருடம் ஆனி முதல் தேதியிலிருந்து, ஆடி மாதம் 30ம் தேதி முடிய  இரண்டு மாதங்களும் கதிரவன் உதிக்கும் போது கதிரவனின் கதிர்கள் சுவாமியின் மீது நேரே விழுந்து பிரகாசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

தற்போது அரிவாள் பாழி, பெரியபாழி, இடுக்கு பாழி, அம்மம்பாழி, பாண்டவ தீர்த்தம் அல்லது ஐந்தாம் பாழி என்று 5 தீர்த்தங்கள் உள்ளன. திருப்பதியை போன்றே பெருமாளுக்கு வாய்ப்பூட்டு பாதுகையுடன், கோமாளி வேஷம் ஆகியவை செலுத்துவது நடைமுறையில் இருந்து வருகிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்  பெருமாளை தரிசனம் செய்கின்றனர். திருப்பதிக்கு இணையான வரதராஜப் பெருமாளை படியேறி வழிபட்டால் வளமும், நலமும் பெருகும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம். 

Saturday, June 27, 2026

மச்சபுரீசுவரர் கோயில்ஊர் தேவராயன்பேட்டை

மச்சபுரீசுவரர் கோயில்
ஊர் தேவராயன்பேட்டை
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
கும்பகோணம் அருகேயுள்ள கோயில் தேவராயன்பேட்டையில் உள்ள திருக்கோயில் மச்சபுரீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. பெரிய புராணத்தில் இத்தலம் திருச்சேலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை மீன் ஒன்று வழிபட்டதால் இறைவனுக்கு மச்சபுரீசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இப்புராண நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில் கோயிலின் முன்மண்டபத்தில் சிவலிங்க வடிவிலான இறைவனை மீன் வழிபடுவது போன்ற சிற்பம் காணப்படுகிறது. இத்திருத்தலம் தேவார வைப்புத்தலமாகும். இங்குள்ள இறைவன் மச்சபுரீசுவரர் ஆவார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை ஆவார்

காலம் : கி.பி.9-ஆம் நூற்றாண்டு

ஆட்சியாளர் : முதலாம் ஆதித்த சோழன்

கல்வெட்டு:  இக்கோயிலில் 55 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு இக்கோயிலைச் சார்ந்து ஒரு ஆதுலர் சாலை (மருத்துவமனை) இயங்கியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

சிற்பங்கள் : மச்சபுரீஸ்வரர் கோவிலில் முருகனுக்கு தனி சன்னிதி உள்ளது. முருகன் ஆறுமுகத்தினராய், 12 கரங்களுடன் விளங்குகிறார். வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தியுள்ளார். திருமாலுக்கு உள்ளதைப்போல இங்கு முருகனுக்கும் சங்கு, சக்கரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகனுடன், வள்ளி தெய்வானையும் உடன் உள்ளனர். கருவறை விமானத்தின் தென்புறக் கோட்டத்தில் தென்முகக் கடவுள், மேற்கில் விஷ்ணு, வடக்கில் நான்முகன் காட்டப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் துர்க்கை, தெற்கில் கணபதி உள்ளனர்.

தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. 
கோயிலின் அமைப்பு : இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட, முற்காலச்சோழர் கலைப்பாணியைச் சேர்ந்தது. கருவறை தொடங்கி, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், எனவும், நந்தி, பலிபீடம், கொடி மரம் என ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இரு நுழைவாயிலைக் கொண்ட இக்கோயிலின் உள், வெளித் திருச்சுற்றுகள் உயர்ந்த செங்கற்சுவற்றினால் அமைக்கப்பட்டுள்ளது. வெளித்திருச்சுற்றில் இறைவி சன்னதியான திருகாமக்கோட்டம் அமைந்துள்ளது. மேலும் நிலைவாயிலுக்கு எதிரில் நந்தியுடன் சிறு மண்டபம் உள்ளது. முன் மண்டபத்தில் இடது புறத்தில் தர்ம விநாயகர், நவக்கிரகம், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன.

அருகில் உள்ள கோவில்கள்:  திருப்பாலைவனம்

செல்லும் வழி : பாபநாசம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில் பண்டாரவாடையை அடுத்து கோயில் தேவராயன்பேட்டை உள்ளது. 

                         ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, June 26, 2026

சிவபெருமான் நரசிம்மருக்கு விமோசனம் அளித்த தலம்.


சிவபெருமான் நரசிம்மருக்கு விமோசனம் அளித்து ஆட்கொண்ட தலமான,
அஷ்ட பைரவர் தலங்களில் ஒன்றானதும்,
#நகரத்தார்_கோயில் ("சிற்பக்கோயில்")
என்று அழைக்கப்படும் 
#இரணியூர் என்ற #ஹிரண்யனூர்
#ஆட்கொண்டநாதர் (இரணிஸ்வரன்)
என்ற #நரசிம்மேஸ்வரர்
 #சிவபுரந்ததேவி திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரணியூர் கோயில். நகரத்தாரின் 9 கோயில்களில் ஒன்றாக இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் சிற்பக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் 1941 முதல் 1944-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் நகரத்தார் புதுப்பித்து கட்டினர்.

நகரத்தார் கோவில்களில் ஒன்றான இரணியூர் கோவில் மிக சிறப்பான கலை நயத்துடன் அமைந்துள்ள மிக பழமையான கோவிலாகும். இரணியனை சம்ஹாரம் தோஷம் நீங்க அருளை பெற்ற தளம் என்பதால் இவ்வூர் இரணியூர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.

அதிகமான சிற்பங்கள் அமைந்திருப்பதால் இச்சிவாலயத்தினை சிற்பக் கோயில் என்றும் அழைக்கின்றார்கள். ஆலையத் தூண்களில் அஷ்டலட்சுமி, வல்லப கணபதி, வீரபத்திரர், முப்புரம் எரித்தவர், நவதுர்க்கை, இரணிய சம்ஹாரம் போன்ற சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இச்சிவாலயத்தின் மூலவர் ஆட்கொண்ட நாதர் எனவும், அம்பிகை சிவபுரந்த தேவி எனவும் அழைக்கப்படுகிறார். இச்சிவாலயத்திற்கு சிவாகமப் படி பூசைகள் செய்யப்படுகின்றன. தலவிருட்சமாக வில்வ மரம் அமைந்துள்ளது.

கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, திருவாதிரை, கார்த்திகை மற்றும் சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.

இரணியூர் தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஆட்கொண்டநாதர், தொழிலில் வெற்றி அருளும் ஈசனாக போற்றப்படுகிறார். பிரகாரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை அனைவரும் மயில் வாகனத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

இப்பகுதியில் உள்ள 9 நகரத்தார் கோயில்களில் இதுவும் ஒன்றாகும், இது நகரத்தார் சமூகத்தின் தனி குலங்களுடன் (பிரிவு) தொடர்புடையது.

கி.பி 713-ம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களால் இக்கற்சிற்பக் கோவில்கள் கட்டப்பட்டது.பின்னர் மகுட தனவைசியர் என்னும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஒரு பிரிவினரான திருவேட்பூருடையார் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலைஸ் சுற்றிலும் பாண்டிய மன்னர் கால சிற்ப கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் இரணியன் மார்பை கீறி வழுந்தோர் வேகம் மாற இரணியூர் ஈசனை வணங்கினான்.

ஈசனும் சிங்க முகமும், மானிட உடலும், மிருகத்தின் காலும், வாலும், பறவையின் இறக்கையும், இணைந்த வீரசபேஸ்வராய் உருவெடுத்து நரசிம்மரை ஆட்கொண்டு சாந்தப்படுத்தினார் என்பது வரலாறு

இதனால் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள ஈசனை ஆட்கொண்ட நாதர் என்றும் இரணிஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆட்கொண்ட நாதரால் இத்திருத்தலத்தில் நரசிம்மர் குளிச்சி பொருந்திய நீலமேக பெருமாளாக இத்திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் உள்ள தூண்களில் கலை நயமிக்க சிற்பங்கள் காண்பவரை வியக்க வைக்கிறது. மேலும் இச்சிற்பங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாக கருதப்படுகிறது.

ஆட்கொண்ட நாதர் சுயம்பு மூர்த்தியாக காட்சியகிக்கிறார். இக்கோவிலில் அமைக்கப்பட்டு இருக்கும் விமானம் சுவாமி அம்சம் என்பது ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. கோவில் முன் மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சாமியையும் விமானத்தையும் தரிசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இவற்றுள் அம்பாள் முன் உள்ள தூர்க்கை மண்டபத்தில் உள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள நவதூர்க்கை சிற்ப வல்லுனர்களால் போற்றும் பொக்கிஷமாய் திகழ்கிறது.

#கோயில்_குறிப்புகள்:

*மூலவர்: ஆட்கொண்ட நாதர்

*அம்மன்: சிவபுரந்ததேவி 

*தல விருட்சம்: வில்வம் 

*ஆகமம்: சிவாகமம் 

*ஊர்: இரணியூர்

*மாவட்டம்: சிவகங்கை 

#தல_வரலாறு: 

திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், திருமாலுக்கு காட்சி அருளி தோஷம் நீக்கினார். திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் ‘ஆட்கொண்ட நாதர்’ என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, ‘நரசிம்மேஸ் வரர்’ என்றும் பெயருண்டு.

திருமாலின் உக்கிரம் கண்டு அம்பிகையும் உக்கிரமடைந்தார். அதனால் நவகாளியாக வெளிபட்டு சிவனை வணங்கினார்.சிவனை வழிபட்டு சாந்தம் அடைந்தமையால் சிவபுரந்த தேவி என்று அழைக்கப்படுகிறார்.

அஷ்ட பைரவர் எழுந்தருளிய எட்டுத் தலங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனாலேயே இங்கு கால பைரவர் சிறப்புடன் வழிபடப்படுகிறார். இங்குள்ள மற்ற புராணங்களின்படி, குபேரனும் வாயுவும் இக்கோயிலிலும் வழிபட்டுள்ளனர்.

*கோயில் சிறப்பு: 

சுயம்பு மூர்த்தியாக ஆட்கொண்ட நாதர் அருள்பாலிக்கிறார். கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரம், விமானம் சுவாமியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் உள்ளது. இக்கோயில் முன்மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சுவாமியையும், விமானத்தையும் தரிசிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் நடைபெறுகிறது.

*கல்வெட்டுகள்:

கோயில் இணையதளத்தின்படி, இந்த இரணியூர் கோயில் கி.பி. 714 ஆம் ஆண்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, மூலக் கோயில் 8 ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்தது.

இந்தக் கோயில் சிவகங்கை மாவட்டத்தின் 34 கிராமங்களில் வசிக்கும் 3800 குடும்பங்களுக்குச் சொந்தமானது. நாட்டுக்கோட்டை நகரத்தரின் வரலாற்றின்படி, கவிரிபூம்பட்டினம் கிழக்கு வீதியில் வசித்து வந்த 502 குடும்பங்கள், பாண்டிய மன்னரின் வேண்டுகோளை ஏற்று இளையதாங்குடியில் குடியேறினர். 7 ஆம்  நூற்றாண்டில், அந்த 502 குடும்பங்களில் இருந்த இரண்டு சகோதரர்கள் இவ்விடத்திற்கு வந்து ஸ்ரீ அட்கொண்டநாதர் கோயிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தினர். 

இக்கோயில் தொடர்பான பதிவேடுகளின்படி, இந்த இடம் நகரத்தார் சமூகத்திற்கு கிபி 714 இல் வழங்கப்பட்டது (கலியுகம் ஆண்டு 3815 என பதிவு செய்யப்பட்டுள்ளது). முக்கிய கோவில் அந்த தேதிக்கு முன்பே இருந்ததாக நம்பப்படுகிறது. பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனின் ஆட்சியின் கீழ் நகரத்தார் சமூகத்திற்கு பல்வேறு நிலங்களும், கோயில்களை (9 நகரத்தார் கோயில்கள் உட்பட) பராமரிக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிகள் வழங்கப்பட்டன.

அசல் கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக கருதப்படுகிறது; இருப்பினும், இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாக புதுப்பிக்கப்பட்டது, அன்றிலிருந்து வழக்கமான புதுப்பிப்புகள் மற்றும் பராமரிப்புகள் உள்ளன. இப்பகுதிக்குள், சிற்ப கோயில் அல்லது சிற்பங்களின் கோயில் என்று பிரபலமாகக் அழைக்கப்படுகிறது – காரணம் இல்லாமல் அல்ல. இங்குள்ள சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள சிற்பங்களின் எண்ணிக்கையும், அந்த சிற்பங்களில் உள்ள விவரங்களும் கிட்டத்தட்ட ஒப்பிடமுடியாது.

பிற சிவாலயங்களை விட மிக முக்கியமான ஒன்று இத்திருத்தலத்தில் நவக்கிரக சன்னதியின் அருகில் மேலே குபேரர் கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தில் காட்சியாளிக்கிறார். இரணியூர் கோவிலில் உள்ள குபேரர் தன் வாகனமான குதிரையில் உள்ளபடி கட்சியாளிக்கிறார்.

மேலும் இங்கு தமிழ் வருடப் பிறப்பன்றும், அட்சய திருத்தி அன்றும் குபேர பூஜையானது நடைபெறும்.

வரலாற்று சிறப்பு மிக்க கலைநய மிக்க கற்சிற்பங்கள் நிறைந்த இக்கோவிலினை அதிகமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் கோடை விடுமுறை நாட்களில் காண வருகின்றனர்.

ஆட்கொண்ட நாதரை தரிசித்து விட்டு அங்கு ஒவ்வொரு தூணிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை அருகில் சென்று கண்டு வியக்கின்றனர். சிற்ப கலையில் முன்னோர்களின் செயல்மிகு திறனை ரசிக்கின்றனர்.

இத்தகைய சிறப்புக்கு சொந்தமான கோவிலானது சிவகேங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இரணியூர் இந்த ஊரானது திருப்பத்தூர் இருந்து சுமார் 13 கீ.மீ தொலையில் உள்ளது.சென்று ஆட்கொண்ட நாதரையும், அழகிய சிற்பங்களையும் தரிசித்து விட்டு வாருங்கள்.

*கோவில் நேரங்கள்:

கோயில் காலை 06.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 16.30 மணி முதல் 19.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*சென்றடைவது எப்படி?

இரணியூரில் உள்ள கோயில், திருப்பத்தூரிலிருந்து சுமார் 14 கி.மீ., திருமயத்திலிருந்து 18 கி.மீ., காரைக்குடியிலிருந்து 26 கி.மீ., திருச்சிராப்பள்ளியிலிருந்து 86 கி.மீ. மற்றும் சென்னையிலிருந்து 412 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.      

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, June 24, 2026

கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்.

கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில்
கிருஷ்ணாபுரம் வட்டம்
பாளையங்கோட்டை
திருநெல்வேலி மாவட்டம் 

மூலவர் பெயர் வெங்கடாஜலபதி

தாயார் / அம்மன் பெயர் 
அலர்மேல் மங்கை, ஸ்ரீதேவி, பூதேவி

தலமரம் துளசி

அருகில் உள்ள கோவில்கள்:

தென்காசி ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில், 
குற்றாலநாதர் கோயில், 
ஆழ்வார்குறிச்சி பெருமாள் கோயில்

செல்லும் வழி : திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் சாலையில் 10 கி.மீ. தொலைவில் கிருஷ்ணாபுரம் அமைந்துள்ளது. ஊரின் மத்தியில் வேங்கடாசலபதி திருக்கோயில் உள்ளது.

சிற்பங்கள் கருவறையில் மூலவர் வெங்கடாசலபதி உருவம் கருங்கல்லால் நான்கு அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி புடைசூழ அமைந்துள்ள பெருமாளின் மேலிரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் பற்றியுள்ளன; கீழிரண்டு கைகள் அபய மற்றும் கடிஹஸ்த முத்திரைகள் காட்டுகின்றன. 

உற்சவர் பெயர் ஸ்ரீனிவாசன், மூலவரைப் போலவே நான்கு கரங்களுடன் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி புடைசூழ காட்சியளிக்கிறார். 

கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் உள்ள வீரப்ப நாயக்கர் மண்டபத்தின் நுழைவாயிலில் இரண்டு யானைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. 
இக்கோயிலில் மொத்தம் 42 அழகு மிளிரும் சிற்பங்களைக் காணமுடிகின்றது. இவை உலகப்புகழ் பெற்றவை. மண்டபத்தின் தூண்களில் ஆளுயர உருவம் கொண்ட எழில் கொஞ்சும் சிற்பங்கள் புராணங்களின் அடிப்படையில் செதுக்கப்பட்டுள்ளன. ஆறு தூண்கள் மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட சிற்பங்களை உள்ளடக்கியுள்ளன. 

இக்கோயிலிலுள்ள வீரப்பர் மண்டபமும், அரங்க மண்டபமும் உன்னத சிற்பங்களைக் கொண்டுள்ளன. வீரப்பர் மண்டபத்தின் முன்னுள்ள அர்ஜுனன், குறத்தி ராஜகுமாரனைத் தூக்கிச் செல்லுதல், நாடோடிப் பெண்ணின் நடனம், கர்ணன், குறவன் அரசகுமாரியைத் தூக்கிச் செல்லுதல், தேவகன்னியின் நடனம், மன்மதன், அரங்க மண்டபத்திலுள்ள வீரபத்திரன், மன்மதன், பீமன், புருஷாமிருகம், தருமர் ஆகிய சிற்பங்கள் உள்ள கற்றூண்கள், நடனமாது, ரதிதேவியும் தோழிகளும், வீரபத்திரன் ஏவலாளர் ஆகிய சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன.

தலத்தின் சிறப்பு 

500 ஆண்டுகள் பழமையானது. நாயக்கர் கலைப்பாணி

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசின் கீழ் தமிழகத்தை ஆண்ட மன்னருள் ஒருவரான கிருஷ்ணப்ப நாயக்கர் இந்த கோவிலைக் கட்டி சிற்பங்களை நிறுவியுள்ளார். 110 அடி உயரத்தில் ஐந்து நிலை இராஜகோபுரமும், கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும் சூழப்பெற்று விசாலமாக 1.8 ஏக்கர் (0.73 ஹெக்டேர்) பரப்பில் நாயக்கர் கலைப்பாணியில் எழிலுடன் விளங்கும் அளவில் பெரிய வாழ்வியல் மற்றும் புராண சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கிருஷ்ணாபுரம் கோவில் ஒரு வைணவ வழிபாட்டுத் தலம் ஆகும். கிருஷ்ணப்பரின் மகன் வீரப்பரின் திருப்பணிகளும் இங்கு உள்ளன. கிருஷ்ணப்பர் நினைவாக இங்குள்ள கோவிலை அடுத்த ஊர் கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது.

                                       . ஓம் நமசிவாய படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

கும்பகோணத்தை சுற்றியுள்ள 6 சிவாலயங்கள்.

*கும்பகோணத்தை சுற்றியுள்ள 6 சிவாலயங்கள்*
                             
*நாகேஸ்வரர்*

கும்பகோணத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, நாகேஸ்வரர் திருக்கோவில். பூமியைத் தாங்கிக்கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு, அதன் பாரத்தை தாங்கும் சக்தி இல்லாமல் போனது. 

இதனால் மகாவிஷ்ணுவை வணங்கிய ஆதிசேஷன், தனது இயலாமையை எடுத்துரைத்து, தொடர்ந்து பூமியைத் தாங்கும் சக்தியைத் தருமாறு வேண்டினார். 

அதற்கு மகாவிஷ்ணு, “நீ.. கும்பகோணம் சென்று அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, அந்த நீரைக்கொண்டு அபிஷேகித்து நாகேஸ்வரரை வணங்கு. அதன் மூலம் பூமியைத் தாங்கும் வல்லமை உனக்குக் கிடைக்கும்” என்று அருளினார். 

அதன்படியே கும்பகோணம் வந்து நாகேஸ்வரரை வணங்கிய ஆதிசேஷன், பூமியைத் தாங்கும் முழு சக்தியையும் பெற்றார். இந்த ஆலயம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இங்கு வடக்கு திசையில் சிவகாமி அம்மை சன்னிதியும், தென் திசையில் சிங்கமுக தீர்த்தமும் இருக்கின்றன.

*கோடீஸ்வரர்*

கும்பகோணத்தில் அமுத கலசத்தின் மீது அம்பு எய்தார், சிவபெருமான். அந்த கலசத்தில் இருந்து தெறித்த ஒரு துளி அமிர்தம், கும்பகோணம் அடுத்துள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் ஆலயத்தின் குளத்திற்குள் விழுந்தது. 

இதையடுத்து அந்த குளம், அமிர்தக் கிணறாக மாறியது. எங்கும் ஒளி ரூபமாக வீற்றிக்கும் சிவபெருமான், இங்கு கோடீஸ்வரர் என்ற திருநாமத்தைத் தாங்கி நிற்கிறார். இங்குள்ள சிவலிங்கம், தன்னகத்தே, கோடி லிங்கங்களை அடக்கியதாக காட்சி தருகிறது. 

ஒரு முறை மத்ரயோகி என்ற முனிவர், தான் இழந்த தவ பலத்தை திரும்பப் பெறுவதற்காக, கோடி சிவலிங்க தரிசனத்தைக் காண விரும்பினார். அதன்படி இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும் தரிசிக்க வந்தார். 

அப்போது இத்தல இறைவன், தன்னுள் இருந்த கோடி சிவலிங்கத்தை முனிவருக்கு காட்டி அவருக்கு அருள்புரிந்தார். இங்குள்ள பரிவார தெய்வங்கள் அனைத்தும் ‘கோடி’ என்ற அடைமொழியோடே அழைக்கப்படுகின்றன.

*அபிமுகேஸ்வரர்*

சிவபெருமான் வேடனின் உருவம் தாங்கி வந்து, அமுத குடத்தை அம்பு எய்து சிதைத்தபோது, அந்த குடத்தின் மேல் இருந்த தேங்காய் ஓரிடத்தில் போய் விழுந்தது. 

விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரமும், அதன் அடியில் ஒரு சிவலிங்கமும் தோன்றின. தேங்காய்க்கு, ‘நாளிகேரம்’ என்ற பெயர் உண்டு. தென்னை மரத்தின் அடியில் தோன்றியதால், இத்தல இறைவன் ‘நாளிகேசர்’ என்று அழைக்கப்பட்டார். 

இத்தல அம்பாளின் திருநாமம், ‘அமுதவல்லி’ என்பதாகும். ஒரு முறை மகாமக குளத்தில் நீராடுவதற்காக நவ கன்னியர்கள் வருகை தந்தனர். 

அவர்கள் தரிசிப்பதற்கு ஏதுவாக, கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த நாளிகேசர், மேற்கு நோக்கி திரும்பினார். இதனால் இத்தல இறைவனுக்கு ‘அபிமுகேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. அபிமுகம் என்றால் நேர்முகம் என்று பொருள்.

*காளகஸ்தீஸ்வரர்*

இந்தப் பெயரைக் கேட்டதுமே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி அருகே உள்ள காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில்தான். 

ஆனால் நாம் பார்க்கப்போவது அதேபோன்று, கும்பகோணம் உப்பிலியப்பன் ஆலயம் அருகே அமைந்துள்ள காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் ஆகும். திருப்பதி அருகே உள்ள காளகஸ்தியில் செய்ய வேண்டிய பரிகார பூஜைகளை, 

அங்கே செல்ல முடியா தவர்கள், இந்த ஆலயத்தில் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயம் வந்து, இத்தல இறைவனை வேண்டினால் விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள். 

இங்குள்ள துர்க்கை அம்மனை வேண்டினால், வேண்டிய வரம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம். ஓம்கார வடிவில் அமைந்துள்ள அம்மனின் பிரகாரத்தில் உள்ள மணியை அடித்தால், ‘ஓம்’ என்ற நாதம் ஒலிப்பது சிறப்புக்குரிய அம்சமாகும்.

*அமிர்தகலசநாதர்*

கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, சாக்கோட்டை பகுதி. இங்குதான் அமிர்தவல்லி உடனாய அமிர்தகலசநாதர் கோவில் இருக்கிறது. 

இந்த ஆலயத்தைச் சுற்றிலும் கோட்டை ஒன்று இருந்த காரணத்தால் ‘கோட்டைக்கோவில்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. சிவபெருமான் வேடனாக வந்து அம்பெய்தி கும்பத்தை உடைத்தபோது, கலசம் மட்டும் போய் விழுந்த இடம் இதுவாகும். 

சோழர் கால சிற்பக்கலையின் மிகச் சிறந்த வேலைப்பாடாக விளங்கும் இத்தல மூலவர், சிவலிங்க ரூபமாக காட்சி தருகிறார். எனவே தான் இத்தல இறைவன் ‘அமிர்தகலசநாதர்’ என்று பெயர் பெற்றார். 

மூலவர் சன்னிதிக்கு வடக்குப் பகுதியில் தென் திசை நோக்கிய சன்னிதியில் அமிர்தவல்லி அம்மன் வீற்றிருக்கிறார். அம்மனுக்கு தவத்தின் பயனை இறைவன் உணர்த்திய தலம் இதுவாகும்.

*ஏகாம்பரேஸ்வரர்*

கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மூலவருடன், காமாட்சி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதியின் இருபுறமும் தீட்டப்பட்டுள்ள காயத்ரி தேவியின் திருவுருவமும், காமாட்சி அம்மனின் ஒவியமும் காண்போரை கொள்ளைகொள்வதாக அமைந்துள்ளன. 
                           -  வேலாயுதம் செ 
ஏகாம்பரேஸ்வரர், காளியம்மன் மற்றும் நவக்கிரகங் களுக்கு தனித்தனியாக சன்னிதிகள் காணப்படுகின்றன. இங்குள்ள காளிகாபரமேஸ்வரி என்னும் ராகுகால அம்மன், அசுரனை சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்துடன் காட்சி தருகிறாள். 

பொதுவாக துர்க்கை அம்மனுக்குத்தான் ராகுகால வழிபாடு நடத்தப்படும். ஆனால் இங்கு, காளிகாபரமேஸ்வரி அம்மனுக்கு ராகுகால வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, June 17, 2026

தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன்.

தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன். 
திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் தஞ்சை நகரில் சோழர் ஆட்சி மலரும்போதே நிசும்பசூதனி தேவி என்கிற வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் எழுந்தது தெரிய வருகிறது.

பேரரசர்கள் தங்கள் வெற்றிக்குத் தெய்வமாக விளங்கும் கொற்றவைக்கு ஆலயங்கள் அமைப்பது பண்டைய மரபு. தஞ்சை நகரின் புகழுரைக்கும் செந்தலைத் தூண்கள் (நியமத்துத் தூண்கள்) சுவரன்மாறன் எனும் பெரும்பிடுகு முத்தரையன் எடுப்பித்த நியமத்து மாகாளத்துப் பிடாரி கோயிலின் தூண்களே என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நியமத்து மாகாளத்துப் பிடாரி தேவியைப் பாண்டியன் மாறஞ்சடையன், தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவன், சோழ மன்னன் ராஜகேசரி வர்மனான ஆதித்தன் போன்ற பெரு மன்னர்கள் போற்றி வழிபட்டனர் என்பதை அதே தூண்களில் உள்ள கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. இதனால் தமிழகத்து, அனைத்து மன்னர் மரபினர்களும் தேவிக்கு எத்துணை ஏற்றம் தந்து வழிபட்டனர் என்பது தெரிய வருகிறது. இதே நெறியில்தான் விஜயாலயனும் தஞ்சையில் நிசும்பசூதனியை பிரதிஷ்டை செய்தான்.


கோயில் நுழைவுவாயில்
அன்னை பராசக்தி துர்க்கையாக, காளிதேவியாகப் பல்வேறு வடிவங்கள் பூண்டு, தீமையின் உருவாகத் திகழ்ந்த அரக்கர் பலரை வதம் செய்தாள் என்பதைத் தேவி மகாத்மியம் உரைக்கிறது. தேவியின் உன்னதத்தை வேதத்தில் கூறப்படும் 'ராத்திரி சூக்தம்' என்பதிலிருந்து பல நூல்கள் எடுத்துரைக்கின்றன.

கோயில் முகப்பு
தேவி துர்கா பரமேசுவரியாக இரத்தபீஜன் எனும் அரக்கனை அழித்தபோது, முதலில் நிசும்பனும் பின்னர் அவன் தம்பி சும்பனும் தேவியுடன் போர் தொடுத்தனர். அகம்பிடித்த அரக்கர்கள் இருவரையும் தேவி அழித்தாள். அப்போது அவள் பூண்ட வடிவே 'நிசும்பசூதனி' என்பதை நூல்கள் கூறுகின்றன.


விஜயாலயன் பிரதிஷ்டை

தஞ்சை கீழவாசலில் விஜயாலய சோழன் பிரதிஷ்டை செய்த நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளிதேவியின் வடிவம் பீடத்தின் மேல் அமர்ந்த கோலத்திலுள்ளது. இச்சிற்பத்தின் வலக்கால் மடங்கி ஆசனத்தின் மீது அமர்ந்திருக்க, இடக்கால் தொங்கிய வண்ணமாக உள்ளது. கையில் கத்தியும் கேடயமும் உள்ளன. மேல் பாகத்தில் வலக்கையில் ஏந்திய சூலத்தைக் கொண்டு காலடியில் இருக்கும் அரக்கனைக் குத்தித் தள்ளுவது போல அமைந்துள்ள இத்திருமேனிக்குப் பாம்பினாலாகிய குசபந்தமும், சடைமுடியும் விளங்குகின்றன.

நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன்</strong>
நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன்
கீழவாசல் பூமால் ராவுத்தன் கோயில் தெருவில் யோக பட்டத்தில் அமர்ந்திருக்கும் சிவனாரது திருவுருவமும், காளி கோயிலை ஒட்டிய மணற்பகுதியில் மார்பு வரை புதைந்துள்ள கெளமாரி உருவமும் மிகப் பழமையான 8 - 9 ஆம் நூற்றாண்டுச் சிற்பங்களாகும். இந்தப் பழைமை எச்சங்களோடு தேவி இங்குக் கோயில் கொண்டுள்ளாள். பொதுவாக எல்லா ஊர்களிலும் காளி கோயிலாக அல்லது பிடாரி கோயிலாகத் தேவியின் திருமுற்றங்கள் காணப்படும். இங்கு இடம் பெற்றிருக்கும் திருவுருவங்கள் 4 அல்லது 8 கரங்களுடன் திகழும். பெயர்களும் காளி, காளாபிடாரி, பட்டாரகி என்பனவாகக் குறிக்கப்பெறும்.


ஆனால் தஞ்சையில் விஜயாலயன் பிரதிஷ்டை செய்த தேவிக்கு "நிசும்பசூதனி' என்ற சிறப்புப் பெயர் காணப்படுகிறது. இதனால், இவ்வடிவம் மற்றக் காளி, பிடாரி உருவங்களிலிருந்து மாறுபட்டுத் திகழ்ந்திருக்க வேண்டும். தஞ்சைக் குயவர் தெருவிலுள்ள உக்கிரமாகாளி மற்ற இடங்களில் காணப்படும் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்த, காளாபிடாரியாகவே காணப்படுகிறாள். ஆனால் தஞ்சை பூமால் ராவுத்தன் கோயில் தெரு வடபத்ரகாளியோ தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத புதுமையான வடிவில் திகழ்கிறாள்.



ஆறு அடி உயரத்துக்கும் மேலுள்ள இச்சிலையில் தேவி அமர்ந்து காணப்படுகிறாள். பல கரங்கள். அக்கரங்களில் பல படைக்கலன்கள். தலையில் கேசம் தீச்சுடர்போல் மேல் எழுகிறது. முகத்தில் ஓர் உறுதி. அசுரப் பூச்சிகளை அழிக்க வேண்டும் என்னும் சீற்றம். வலது காதில் பிரேத குண்டலம். இடக்காதில் பெரியகுழை. சதை வற்றிய உடலில் வெறும் எலும்புதான். ஆயினும் திண்மையான நீண்டு தொங்கும் மார்பகங்கள். அவற்றைச் சுற்றிலும் பாம்பு கச்சாகச் சுழல்கிறது. மண்டை ஓடுகள் பூணூலாக அவள் உடலில் திகழ்கின்றன. எட்டுக்கரங்கள். அவை சூலம், வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் தரித்துள்ளன. ஓர் இடக்கரம் காலின் கீழ் கிடக்கும் அசுரரைச் சுட்டுகிறது. அவளது வலது அடி துண்டிக்கப்பட்ட ஒரு தலையின் மீது ஊன்றியுள்ளது. அந்தத் தலையே பெரிதாக உள்ளது. அதன் மீது ஊன்றியுள்ள அவளது காலில், எலும்பாக இருப்பினும், அழுத்தும் வலிமையைக் காணலாம். அவளது இடக் காலை அசைத்துக் கிடத்தியுள்ளாள். அவ்விருக்கையின் கீழ் நான்கு அசுரர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மூச்சுத் திணறுகின்றனர். ஓடுகின்றனர். என்ன பெருமிதமான சிற்பம். மயிர்க்கூச்செறியும் அமைப்பு. சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் என்னும் அசுரர்கள் நால்வரும் வதைபடும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம்  நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

<strong>வடபத்ர காளியம்மன்</strong>
வடபத்ர காளியம்மன்
கம்பீரமான தோற்றம்


தீமையை அழித்து அடியவர்களுக்கு அன்னை அருளமுது அளிக்கின்றாளோ எனக் கருதுமாறு கம்பீரமாக அமர்ந்துள்ளாள். இதை ஒத்ததொரு வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதேவடிவில் அன்னை எலும்புருவில் காட்சியளிக்கும் மற்றொரு சிற்பம் இருப்பதாகச் சிற்பவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இவள்தான் விஜயாலயன் வடித்த நிசும்பசூதனி என்பதில் ஐயமில்லை.

அவளுக்காக விஜயாலயனால் எடுக்கப்பட்ட கோயில் அழிந்தாலும், திருமேனி நிலை குலையாமல் இருப்பது தஞ்சையின் பெரும் பேறாகும். வரலாற்று ஏடுகள் குறிக்கும் தஞ்சை நகரின் தொன்மையான தேவியின் தெய்வத் திருவுருவமும் இதுதான் என்பது சிறப்புக்குரிய செய்தி.

வேண்டிய சக்தியைக் கொடுத்த காளி


விஜயாலய சோழன் காலம் முதல் வேண்டிய சக்தியைக் கொடுத்து அருள்புரிகிறாள் நிசும்பசூதனி என்கிற வடபத்ரகாளியம்மன். சிறப்பாக ஆட்சிபுரிவதற்கு இக்காளியையே விஜயாலய சோழன் நாடினான். இக்கோயில் தேவியை வழிபட்ட சோழ மன்னர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர்.

இக்கோயிலில் ஆப்பசார பூஜைகள் செய்தால் மன மற்றும் உடல் ரீதியான முடக்கத்தை நீக்கி, சோர்விலிருந்து விடுவித்துக் கொள்ளலாம். பொதுவாக, எதிரியைக் கண்டுபிடித்துவிடலாம்; ஆனால், துரோகியைக் கண்டறிய முடியாது. இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் அனைத்து எதிர்ப்புகளும் உடைத்தெறியப்படும். காரியத் தடை எதுவாக இருந்தாலும் தகர்த்தெறியப்பட்டு, வெற்றியைத் தரும்.

இந்தக் கோயிலையும் வலம் வரலாம்.. நவக்கிரக தோஷம் போக்கும் தஞ்சை சக்கரத்தாழ்வார்

மண்டபத் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ள எண் திசை காளிகள்
ராகு, கேது நிவர்த்தி தலம்

இக்கோயிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி அல்லது ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் சென்று வழிபட்டால் ராகு, கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தி கிடைக்கும். இதேபோல, தொழில், வேலை போன்ற காரியத்தில் தடைகள் இருந்தாலும், தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். பெரிய பிரச்னைகள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும்.

ஒரே இடத்தில் எண் திசை காளிகள்

அக்காலத்தில் தஞ்சை நகரைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் காளி கோயில் அமைக்கப்பட்டது. இதில், முதலாவது காளி கோயில் வடபத்ர காளியம்மன் கோயில். எட்டு திசைக்கும் செல்ல முடியாத பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்தால், தூண்களில் உள்ள எண்திசை அம்பாள்களையும் ஒரே இடத்தில் வழிபட்டுவிடலாம்.

ஆண்டுப் பெருவிழா

இக்கோயிலில் தை மாத முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி கடைசி வெள்ளிக்கிழமை வரை 21 நாள்களுக்கு ஆண்டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதில், பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இதேபோல, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாசி மகம், நவராத்திரி, பெளர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ஆகிய நாள்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

செல்லும் வழி

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தன் கோயில் வழியாக இக்கோயிலுக்குச் சென்றடையலாம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலுக்கு நடந்தும், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களிலும் செல்லலாம். வெளியூர்களிலிருந்து ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து ஆட்டோ மூலம் பயணம் செய்யலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக தஞ்சாவூருக்கு வந்து வரலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, June 15, 2026

காலபைரவர் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் உள்ளன.

காலபைரவர் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் உள்ளன .
கால பைரவர் சிவபெருமான் சார்பாக நவக்கிரகங்களையும் மனிதர்களையும் நிர்வாகம் செய்து வருகிறார்.

அதனால் கால பைரவருக்கு கால தேவன் என்று ஒரு பெயர் உண்டு.

காலபைரவர் உடைய மூச்சுக்காற்றுதான் வாக்கிய கணித பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் என்று விரிவடைகிறது.

கர்மவினையை நீக்குவதற்கு அதுவும் நம்முடைய முற்பிறவி கர்மவினைகளை  ஒரே பிறவியில் நீக்குவதற்கு பைரவர் வழிபாடு  செய்ய வேண்டும்.

பைரவ மந்திரம் தினமும் 108 முறை எழுதி வர வேண்டும்.

மிக வேகமாக வரம் தரும் கடவுள்களில் பைரவர் வராகி காளி சின்ன மஸ்தா பிரித்திங்கரா தேவி பத்ரகாளி அங்காள பரமேஸ்வரி ருத்ரகாளி மகாகாளி போன்ற தெய்வங்கள் முதன்மையானவை.

தமிழ்நாட்டில் காலபைரவருக்கு எட்டு படை வீடுகள் உள்ளன.

இந்த எட்டு படை வீடுகளும் சிவன் கோயில்களாக உள்ளன.

இந்த கோயில்களில் மூலவராக சிவலிங்கம் இருக்கிறது.

அப்படி சிவலிங்கம் இருந்தாலும் அந்த சிவலிங்க வடிவத்தில் காலபைரவர் தான் இருந்து அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்.

போன மூன்று பிறவிகள் முழுவதும் பழுத்த சிவனடியாராக இருந்திருந்தால் இந்த பிறவியில் பைரவர் வழிபாடு செய்ய முடியும் 

அல்லது 

போன மூன்று பிறவிகளில் ஏதாவது ஒரு பிறவியில் மட்டுமாவது சித்தர் ஒருவருடைய நேரடி சீடராக 40 வருடங்கள் வரை வாழ்ந்து இருந்தால் இந்த பிறவியில் பைரவர் வழிபாடு  நமக்கு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

சிவனும் பைரவரும் ஒருவரே என்பதை  நிரூபணம் செய்வதற்காக எட்டு படை வீடுகளில் சிவலிங்க வடிவத்தில் காலபைரவப் பெருமான் அருள் பாலித்து வருகிறார்.

 1.திருக்கோவிலூர் சிவன் கோயில்

2.பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை சிவன் கோயில்

 3 .தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் எட்டாவது கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்டியூர் அருள்மிகு  பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோயில்(ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி வந்து வழிபட வேண்டிய பைரவர் கோயில் இது)

4. திருக்கடையூர் காலசம்கார மூர்த்தி கோயில் மற்றும் திருக்கடையூர் மயானம் என்ற சிவன் கோயில்

5. மயிலாடுதுறை அருகில் உள்ள செம்பனார்கோயில்

6. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளடங்கிய பகுதியில் அமைந்திருக்கும் வழுவூர் வீரட்டானம்(அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி வந்து வழிபட வேண்டிய அனுஷ நட்சத்திர பைரவர் கோயில் இது)

7. திருவாரூரில் இருந்து நாகை செல்லும் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருவிற்குடி (இங்கேதான் மகாவிஷ்ணுவுக்கு செல்வத்தின் கடவுள் என்ற வரத்தை மகா கால பைரவ பெருமான் வழங்கினார்)

8. மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கொறுக்கை

இங்கேதான் ஈசனுடைய நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட நெருப்பு மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. இந்த கோயிலுக்கு அருகில் ஒரு தென்னந்தோப்பு அமைந்துள்ளது. அங்கு இன்றும் மன்மதனின் சாம்பல் இருக்கிறது.

நிறைவாக சிதம்பரம் சென்று அங்கே உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த எட்டு கோயில்களையும் தரிசனம் செய்வதற்கு குறைந்தது 4 நாட்கள் ஆகும் .

இந்த கோயில்களுக்கு சென்று வந்தால் போதுமானது சென்று வழிபட்டு வந்தால் போதுமானது.

உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் பைரவ மந்திரத்தை கீழே கொடுக்கின்றோம் .

 இந்த கோயில்களில் ஒரு மணி நேரம் வரை அமர்ந்திருக்க வேண்டும்.

 அவ்வாறு அமர்ந்திருந்து  உங்களுடைய ஜென்ம நட்சத்திர கால பைரவ மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை ஜெபிக்க வேண்டும்.

 இதன் மூலமாக மிகப் பெரிய அளவில் உன்னுடைய கருமவினை குறைந்து விடும் என்பது உறுதி.

 இந்த எட்டு கோயில்களுக்கும் நீங்கள் சென்று வழிபட்டு முடித்து ஒரு வருடம் ஆக வேண்டும் .

அதன் பிறகு உங்களுடைய போன நான்கு முற்பிறவி பற்றிய உண்மை ரகசியங்கள் உங்களைத் தேடி வரும்.

 எனக்கு அவ்வாறு கிடைத்தது !!!

அந்த அனுபவத்தை உங்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

 அடியேனது குரு அகத்தியரின் ஆணைப்படி இதை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

நம்முடைய ஜென்ம நட்சத்திர பைரவ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

வார தாரக சித்தர் என்பவர் பைரவ உலகத்தில் வாழ்ந்து வரும் தலைமை பைரவ சித்தர் ஆவார்.

 இவரை உபாசனை செய்து தான் ஆரியபட்டர், பாஸ்கராச்சாரியார் போன்றவர்கள் அழியா புகழ் பெற்ற ஜோதிட நூல்களை இயற்றினார்கள்.

நாம் வாழ்ந்து வரும் இந்த பூமியில் 

24 மணி நேரம் என்பது ஒரு நாள் என்றும்
 ஏழு நாட்கள் என்பது ஒரு வாரம் என்றும்

 30 நாட்கள் என்பது ஒரு மாதம் என்றும்

 365 நாட்கள் ஒரு வருடம் என்றும்

 காலத்தை நிர்ணயம் செய்தவர் இவர் தான்!!!

 மகா காலபைரவர் பெருமாளின் பரிபூரண ஆசீர்வாதம் பெற்ற பைரவ சித்தர் இந்த வார தாரக சித்தர் ஆவார்.

 ஜோதிடராக இருக்கும் ஒவ்வொருவரும் தினமும் காலையில் இவரை ஒரு முறையாவது  நன்றியோடு நினைக்க வேண்டும்.

அசுபதி ,மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும். 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ் வாரதாரக சித்த குரு நமஹ
ஓம் ஹ்ரீம் பம் பிஷன பைரவாய நமஹ

பரணி, பூரம் ,பூராடம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் ருரு பைரவாய நமஹ 

 கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவாய நமஹ

 ரோகிணி ,அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் 

ஓம்  ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ
ஓம் ஹ்ரீம் பம் கபாலபைரவாய  நமஹ

மிருகசீரிடம், சித்திரை ,அவிட்டம் நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வாரதாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் சண்ட பைரவாய நமஹ

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வாரதாரக சித்த குரு  நமஹ

ஓம் ஹ்ரீம் பம் சம்ஹார பைரவாய நமஹ

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரத்தை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வாரதாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் அசிதாங்க பைரவாய நமக

பூசம், அனுஷம் ,உத்திரட்டாதி நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின்வரும் மந்திரங்களை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் குறோதன பைரவாய நமக

ஆயில்யம் ,கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள் பின் வரும் மந்திரங்களை இங்கே 90 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும்.

ஓம் ஹ்ரீம் ஶ்ரீ வார தாரக சித்த குரு நமஹ

ஓம் ஹ்ரீம் பம் உன்மத்தபைரவாய நமஹ

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

சிவபுரம் சிவகுருநாதசுவாமி காலடியில் ராகுவுடன் கோவில்.

*சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோவில்*
*காலடியில் ராகுவுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்*
*சிவபுரம் என்று சிவபெருமானின் நாமத்தினைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ற ஒரே தலம் இதுவேயாகும்*

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 130 வது தேவாரத்தலம் ஆகும்.

 இறைவன் திருநாமம் சிவகுருநாதசுவாமி. இறைவியின் திருநாமம் ஆர்யாம்பாள், சிங்காரவல்லி.

*இத்தலத்தில், பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம்*. 

*இதனாலேயே ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு*.  அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை ' என்றழைக்கப்படுகிறது. 

*சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.*

பொதுவாக சிவாலயங்களில், சுற்று சுவற்றில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருப்பார். ஆனால் இத்தலத்தில் காலடியில் முயலகன் மட்டுமின்றி ராகுவும் இருப்பது ஒரு விசேடமான அம்சமாகும். இவரை வழிபட குரு, நாகதோஷம் நீங்கும்.

ஒருமுறை நந்தியின் சாபத்துக்கு ஆளாகி வராகமாக உருமாறிய மகாவிஷ்ணு, இத்தலத்தில் இறைவன் வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார். தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால் வெண்பன்றியாக இருந்து சிவனை வழிபட்ட சிற்பம் உள்ளது. #ஈசனைதேடிகுழு2026--
முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இங்குள்ள நடராசர் திருமேனி மிகவும் அழகானது. 

வெளிப் பிராகாரத்தில் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி. இவருக்கு 11 தேய்பிறை அஷ்டமியில் தயிர்சாதமும், வடைமாலையும் சார்த்தி அர்ச்சனை செய்துவந்தால் தீராத நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற, இழந்த பொருள் மற்றும் செல்வத்தை திரும்பப் பெற, தொழில் வளம் பெற பலன் கிட்டும். ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி ஆகிய சனி உபாதைகளும் 11 தேய்பிறை அஷ்டமியில் இத்தலத்து இறைவனையும், பைரவரையும் வழிபட நீங்கும்.  இத்தலத்தில், கோவிலுக்கு எதிரிலுள்ள சந்திர தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்தில் நீராடுவது சிறப்பாகும். குபேரன், ராவணன், அக்னி முதலானோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். ஒருமுறை நந்தியெம்பெருமானின் சாபத்துக்கு ஆளான குபேரன் தனது பதவியை இழந்தான். குபேரன் பூவலகில் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். தீபாவளி நாளில் இத்தலத்தில் குபேர பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இங்கு வந்து இத்தல இறைவனை வழிபட செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம்.

முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் மயிலுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் காலணிகளுடன் விளங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையிலிருந்து சிவபுரி செல்லலாம். 

திருவேற்காடு தேவி கருமாரியம்மன்.

*அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்*
                  
.  
இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது. 

மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு. 

*சுவாமி* : தேவி கருமாரியம்மன். 

*தீர்த்தம்* : வேலாயுத தீர்த்தம். 

*தலவிருட்சம்* : கருவேல மரம். 

*தலச்சிறப்பு* : இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர். 

இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது. புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு. 

ஆடி உற்சவத்தின் போது புற்றுக்கு பால் ஊற்றுதல் சிறப்பு நிகழ்ச்சியாக செய்யப்படுகின்றது.  

மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு. இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. 
கடன் தீர்த்தல், வியாதி, வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக நம்பப்படுகிறது. 

*தல வரலாறு* : அந்த காலத்தில் வெள்வேல மரங்கள் இவ்விடத்தில் அதிகம். எனவே வேற்காடு எனப்பெயர் பூண்டது. நான் மறைகளே வெள்வேல மரங்களாகி நின்ற வரலாறு இதோ! வெள்ளத்தால் உலகம் ஒரு முறை அழிவுற்றது. 

சிவன் உலகை மீண்டும் படைக்க எண்ணினார். வெள்ளம் வற்றியது, பின் வேதங்களை குறிப்பிட்ட இடத்தில் மரங்கள் ஆக்கினார். அவற்றின் அடியில் லிங்கம் தோன்றியது. லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள். 

அன்னையின் அருளால் மீண்டும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தோன்றினர். மீண்டும் உலகம் இயங்க ஆரம்பமானது. வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம் திருவேற்காடு. 

தேவர்கள் தோன்றிய இவ்விடத்தின் ஒரு பகுதி 'தேவர் கண்ட மடு' என்று அழைக்கப்படுகிறது. இதுவே திருவேற்காடு வரலாறு. 

இந்த திருவேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 

நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். 

பூஜை விவரம் : ஆறு கால பூஜை, (குறிப்பு:- அர்த்தஜாம பூஜை ஞாயிறு இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது) 
                  -  வேலாயுதம் செ 
.  
திருவிழாக்கள் : சித்ராபௌர்ணமி, ஆடித் திருவிழா(12 வாரங்கள்), தைப்பூசம், மாசிமகம், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12.00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

கோவில் முகவரி : அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு – 600 077, சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

Followers

சபரிமலையில் உள்ள படிகள் 18 ஆடி18க்கும் சம்மந்தம் என்ன❓

*நீர்நிலைகளை  போற்றி வழிபடும் ஆடிப்பெருக்கு விழா* .. ஆடி 18-  *ஆடிப்பெருக்கு*  சுப தினம்.... விவசாயம் செழிக்கவும், நாடு வளம்பெறவ...