Wednesday, December 14, 2022

ஆதிகாலத்தில் திருக்குற்றாலநாதர் கோயில் ஒரு பெருமாள் கோயிலாக இருந்தது.

சிவ சிவ
சித்திர சபை
********************
#திருச்சிற்றம்பலம்.

ஆதிகாலத்தில் திருக்குற்றாலநாதர் கோயில் ஒரு பெருமாள் கோயிலாக இருந்தது. 

அப்பொழுது, ஒரு சமயம் அகத்திய முனிவர் இந்தத் திருக்கோயிலுக்கு வந்தார். 

பார்க்க சிவப்பழமாக நெற்றி முழுவதும் விபூதி அலங்கரிக்க சிவனடியாராக அவர் உள்ளே நுழைய, அவரை வைணவர்கள் தடுத்து நிறுத்தி விட்டனர். 

‘இனி என்ன செய்யலாம்’ என்று சிந்தித்தபடி அவர் வெளியே வந்தார். 

பின், ஒரு வைணவரைப் போல் கழுத்தில் துளசிமாலை அணிந்து, நெற்றியில் திருமண் தரித்துத் திரும்பவும் கோயிலுக்குள் நுழைந்தார். 

அப்போது உள்ளே இருந்த அர்ச்சகர்கள் ஓடி வந்து அவரை வரவேற்று அவரையே பூஜை செய்ய அனுமதியும் தந்தனர். 

"அட கோவிந்தா! நான் பூஜைக்குத் தேவையான பொருள் ஒன்றும் எடுத்து வரவில்லையே! 

தயவு செய்து நீங்கள் எனக்கு வாங்கி வரவேண்டும்" என்றார் அகத்தியர். 

பூசாரியும் சரி என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினார். 

இதுதான் தக்க சமயம் என்று அகஸ்தியர் கர்ப்பக்கிரகத்துள் நுழைந்தார். 

அங்கு நின்ற கோலத்தில் இருந்த பெருமாளைப் பார்த்தார். தன் கையிலிருந்த சில மூலிகைகளைக் கசக்கினார். 

பெருமாளைப் பார்த்து "குறுகுக! குறுகுக!" என்று கூறியபடியே மூலிகைகளைக் கசக்கி அவர் தலைமேல் பிழிந்தார். பின், தன் கட்டைவிரலால் அழுத்தினார். 

பெருமாள் குறுகிச் சிவலிங்கமாக ஆனார். இப்படி, அகஸ்தியர் அழுத்தியதால் ஏற்பட்ட வடுவைச் சிவலிங்கத்தின் மேல் இன்றும் காணமுடிகிறது.

பெருமாளின் தலையை அழுத்தி உருவாக்கிய திருமேனி என்பதால் சிவலிங்கத்திற்குத் தலைவலி வருமோ என பயந்து அவரது சிரசில் மூலிகைச்சாற்றினால் அபிஷேகம் செய்து பூஜை செய்கிறார்கள். 

பின், இந்தத் தைலத்தைப் பிரசாதமாகத் தருகிறார்கள். 

இறைவன் மேனி இங்கு குறுகிப்போனதால் ‘திருக்குற்றால நாதர்’ என்ற பெயரில் அருள்புரிகிறார் என்பது வரலாறு. 

பஞ்ச சபைகளில் இது ‘சித்திர சபை’யாகப் போற்றப்படுகிறது.

திரிகூடமலை, ஞானபுரி, வேடன் வலம் வந்த ஊர், தேவகூடபுரம் என்று இந்த இடத்திற்குப் பல பெயர்கள் உண்டு.

இக்கோயிலில் அருள் புரியும் குற்றாலநாதரின் இடப்புறத்தில் அம்பாள் ஞான சக்தியாக அருள்புரிகிறாள் சக்தி பீடமே சக்தியாக இங்கு விளங்குவது மிகவும் விசேஷம்தான்! 

இந்தக் கோயில் மஹாபாரதத்துடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அர்ச்சுனன் சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் பெறக் கடுந்தவம் இயற்றினான். 

இதனால் அவன் வெற்றி பெற்று விடுவானோ என்று பயந்து அதைக் கலைக்க மூகன் என்ற அசுரனை துரியோதனன் அனுப்பி வைத்தான். அர்ச்சுனன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனது தவம் கலையாமல் இருக்க ஒரு வேடன் போல் வந்து மூகனை அழித்தார். 

ஆனாலும், தவம் கலையவே, வேடனைப் பார்த்த அருச்சுனன் தன் தவம் கலைந்தது குறித்து வேடனுடன் வாதிட்டான். பாதியில் வேடன் மறைந்து விடவே, வந்தது பரமேஸ்வரனே என்பதை உணர்ந்தான். மீண்டும் இறைவனைக் காணத் துடித்தான். 

இறைவனுக்குப் பூஜை செய்வதற்காகத் தான் கொண்டு வந்திருந்த பெட்டியை எடுக்கச் சென்றால், அங்கு அதைக் காணவில்லை.

‘இது என்ன? 

பூஜைப் பெட்டியைக் காணவில்லையே! 

இது என்ன அபசகுனம்? 

இனி இந்த உயிர் இருந்து என்ன பிரயோசனம்’ என்றெண்ணி உயிரை விடத் துணிந்தான். 

அதற்கு மேலும் அவனைச் சோதிக்க மனமில்லாத சிவபெருமான் "அருச்சுனா! உன் சிவபக்திக்கு மெச்சினேன்.

 நீ நேரே திரிகூடமலை செல்! 

அங்கு பூஜைப்பெட்டியைப் பெறுவாய்!" என்று கூறி, பாசுபதத்தையும் அளித்து ஆசி வழங்கினார்.

இது நடந்த நாள் பங்குனி உத்திரம் ஆகையால் இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடக்கிறது. 

இங்கிருக்கும் பீடம் மிக சக்தி வாய்ந்தது. இதைக் கையால் தொழுதாலே சகல பாபங்களும் விலகும்.

தென்காசி தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ சென்றால் இந்த இடத்தை அடையலாம். 

இங்கு நிறையக் குறவர் குடும்பங்களைக் காணலாம். பலவித மணிகள், ஊசிகள், பாசிமணி என்று நம்மை விடாமல் துரத்தி வியாபாரம் செய்துவிடுவார்கள்.

திருநெல்வேலி வரை செல்பவர்கள். திருக்குற்றாலநாதரையும் கண்ணாரக் கண்டு அவரது ஆசி பெற்று வாருங்கள்!

உற்றாரை யான் வேண்டேன்; 
ஊர் வேண்டேன்; 
பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! 
உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!
 -- #மாணிக்கவாசகர், திருப்புலம்பல்.

யார் ஒருவர் இறக்கும் தருவாயில் திருக்குற்றால நந்தீஸ்வர மூர்த்தியைத் தியானித்து #அப்பர் பெருமானின் மரண பயம் நீக்கும் ம்ருத்யுஞ்ஜய துதியான,

’உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது

குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் யாருளரோ’
என்ற துதியை ஒருமுறையாவது ஓதுகின்றார்களோ அவர்களுடைய வேண்டுகோளை எம்பெருமான் மனமுவந்து ஏற்பதால் அதுவே அவர்கள் இப்புவியில் ஏற்கும் கடைசி பிறப்பாக அமையும் என்பது உறுதி.

திருமுறை அறிவோம். 

திருமுறை அறிவிப்போம்.

#திருச்சிற்றம்பலம்

மார்கழி_ஸ்பெசல் 🌿🌹 🌹🌿"#திருப்பாவை_தேன்_துளிகள்🌿🌹

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
           🌹🌿#மார்கழி_ஸ்பெசல் 🌿🌹

  🌹🌿"#திருப்பாவை_தேன்_துளிகள்🌿🌹

🌹🌿ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற திருப்பாவை திருவெம்பாவை விரதத்தினை ஸ்ரீவில்லிபுத்தாரில் தன் தோழியடன் கடைபிடித்தாள். தான் மேழிகொண்ட அவ்விரத வழிமுறையினை நமக்கும் தொடப்படுத்தினாள். அதுவே திருப்பான பிரபந்தாயிற்று. திருப்பாவை 30 பாசுரங்ககளக் கொண்டது. அந்த 30 பாசுரங்களின் தேன் துளிகள் உங்களுக்காக... 

🌹 🌿 அருள் பெற்றிடுவோம்! அனுசரிப்போம் வாருங்கள்!!

🌹 🌿 #மார்கழித்திங்கள்...

இடைப்பெண்களே! இது மார்கழி மாதம் சந்திரன் பூரணமான நன்னாளில் நாம்

நாராயணனான ஸ்ரீகிருஷ்ணனை வணங்கினால், அவன் நம் விரதத்திற்கான பலனை அளித்திடுவான். வாருங்கள்.

🌹 🌿 #வையத்து_வாழ்வீர்காள்...

இந்த விரதத்தின் போது தினமும் அதிகாலையில் நீராடுவோம். நெய், பால் உட்கொள்ளோம். மைதீட்டோம். மலரைச் சூடோம். செய்யத் தகாதவற்றை செய்யோம். பெரியோர் வழி கடைபிடிப்போம்.

🌹 🌿 #ஓங்கி_உலகளந்த...

திரிவிக்ரமனை அதிகாலையில் நாம் நீராடி துதித்தால் மாதம் மும்மாரி பெய்யும். விவசாயம் செழித்திடும். பசுக்கள் குடம் குடமாய் நிறைய பால் சொரியும். குறைவற்ற செல்வம் நிறைந்திடும்.

🌹 🌿 #ஆழி_ #மழைக்_கண்ணா...

மழைக்கு அதிபதியான வருணனே! நீ கடல் நீரைப் பருகி, நாராயணன் உருவம் போல் கருத்து, பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல் மின்னி, சங்கு போல் இடி இடித்து உலகம் வாழும்படியாக மழை பெய்திடாய்.

🌹 🌿 #மாயனைமன்னு

வடமதுரையில் அவதரித்தவனும், யமுனைத் துறை தலைவனும், திருவிளக்கைப் போன்று ஒளி உடையவனுமான தாமோதரனை தூய புஷ்பங்கள் கொண்டு தூவி, அவன் நாமங்களைப் பாடினால் நம் பாவங்கள் தீயிலிட்ட தூசு போன்று உருத் தெரியாமல் போகும்.

🌹 🌿 #புள்ளும்_சிலம்பின...

பெண்ணே பறவைகள் கூவுகின்றன. கோயிலில் பெரிய சங்கின் ஒளி கேட்டிலையோ, பூதனையின் நச்சுப்பாலை உண்டவனை யோகிகளும், முனிவர் களும் தியானித்து துதிக்கும் ஹரிநாமம் கேட்கவில்லையா. எழுந்து வா.

🌹 🌿 #கீசு_கீசென்று...

பெண்ணே! பாரத்வாஜ பறவைகள் கீசுகீசு என்று ஒளி எழுப்புவது கேட்கவில்லையா? இடைப் பெண்கள் தயிர் கடையும் ஓசை கேட்கவில்லையா? நாங்கள் நாராயணனைத் துதித்து பாடுகின்றோம். கதவைத்திற.

🌹 🌿 #கீழ்வானம்_வெள்ளென்று...

பெண்ணே! கீழ்வாளம் வெளுத்து விட்டது. எருமைகள் பனிப்புல் சென்று விட்டன. கோபிகைகள் கிருஷ்ணனை துதிக்க போகாமல் உனக்காக அனைவரையும் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அப்பரம் பொருள் இரங்கி அருள் புரிவான். உடனே புறப்பட்டு வா.

🌹 🌿 #அரமணி_மாடத்து...

வீடு முழுக்க விளக்கு எரிய பஞ்சணை மீது படுத்துறங்கும் மாமன் மகளே! தாழ்ப்பாளை திறந்து விடு, அவளுடைய தாயைப் பார்த்து, உன் மகள் ஊமையா? செவிடா? மீளா உறக்கம் கொண்டாளா? நாங்கள் மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று ஆயிரம் நாமங்களும் சொல்லி விட்டோம். அவன் எழுந்திருக்கவில்லையே.

🌹 🌿 #நோற்றுச்_சுவர்க்கம்...

பெண்ணே! வாசலைத் தான் திறக்கமாட்டாய். எங்களுக்கு பதிலாவது சொல்லக் கூடாதா? நாராயணனான ஸ்ரீகிருஷ்ணனை நாம் துதித்தால் அவன் நமக்காக பலனைத் தந்திடுவான். கும்பகர்ணன் தன் உறக்கத்தை உனக்களித்தானா? கதவைத் திற.

🌹 🌿 #கற்றுக்_கறவைக்...

கண்ணனுக்கு ஏற்ற தங்கக் கொடி போன்றவனே! கிருஷ்ணனின் செல்வப் பெண்டாட்டியே! மயில் போன்ற சாயல் உடையவளே! உன் தோழிமார்களாகிய நாங்கள் உன் முற்றத்தில் வந்து நின்று கண்ணனை துதிக்கின்றோம்! நீ எழுந்து வாராய்.

🌹 🌿 #கனைத்து_இளங்...

கிருஷ்ண கைங்கர்யமாகிற மேலான செல்வத்தை உடையனனுடைய தங்கையே! இராவணனைக் கொன்ற இராமனை நினைத்தாலே மனதுக்கு இன்பத்தைத் தரும். பேரைச் சொல்லியும் நீ வாய் திறவாமல் இருக்கின்றாய். நீ சீக்கிரம் எழுந்திராய்.

🌹 🌿 #புள்ளின்_வாய்...

பகாசுரனையும், இராவணனையும் அழித்தவனான கண்ணனைப் பாடி நோன்பு நோற்கும் பிள்ளைகள் களத்திற்குச் சென்று விட்டார்கள். சுக்கிரன் உச்சிப்பட்டு வியாழன் மறைத்தான். நீயும் எங்களோடு சேர்ந்து வாராய்.

🌹 🌿 #உங்கள்_புழைக்கடை...

பெண்ணே! உன் புழைக்கடை யில் உள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்ந்தது. அல்லி மலர் மூடிக் கொண்டது. சன்னியாசிகள் கோயிலுக்கு சங்கு ஊதச் செல்கின்றனர். சங்கு சக்கரம் ஏந்திய கமலக்கண்ணனை நாம் துதித்தல் வேண்டும். எழுந்திராய்.

🌹 🌿 #எல்லே_இளங்கினியே...

இளமை தங்கிய கிளிபோல் இருப்பவளே! எழுந்திராய். வாய்ப்பேச்சில் நீ சமர்த்தையாய் இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிவோம். தோழிகள் அனைவரும் வந்தனரா, வந்தனர், ஆச்சரியமான செய்கைகளை உடையவனான கண்ணனை பாடுவதற்காக எழுந்திராய். 

🌹 🌿 #நாயகனாய்_நின்ற...

நந்தகோபனுடை திருமாளிகையைக் காப்பவனே! அழகிய தாழ்ப்பானைத் திறந்து விடு இடைச் சிறுமிகளுக்கு நீல நிற வண்ணனாங் ஸ்ரீகிருஷ்ணன் சப்திக்கும் பறையைக் கொடுப்பதாக தேர்சி வாங்களித்தான். அவன் தூக்கத்திலிருந்து எழுந்திருக் பாட வந்திருக்கிறோம்.

🌹 🌿 #அம்பரமே_தண்ணீரே...

எஸ்திரங்களையுது தண்ணீரையும், சோற்றினையும் தர்மம் செய்யும் நடு 'கோபரே! ஆயர்குலத்து மங்கள தீபமாயுள்ள யசோதை பிராட்டியே! ஆகாய ஒளியைத் துளைத்து உலகை அளந்தவனே! வீரக்கழல்களை அணிந்த பலராமா எழுந்திருக்க வேணும்.

🌹 🌿 #உந்து_மதகளிற்றன்...

யானை போல் பலமுள்ளன ரான நந்த கோபருடைய மருமகனே! நீளாதேவியே எழுந்திரு. கோழிகள் அழைத்தன. குயில்களும் கூவின, உன் நாதனாகிய கண்ணபிரானுடைய நாமங்கள் பாட வந்தோம். மகிழ்வுடன் கதவைத் திறப்பாயாக.

🌹 🌿 #குத்துவிளக்கெரிய...

நிலை விளக்கானது எரிய, யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட பஞ்சனையில் நீளா தேளியுடன் உறங்கும் ஸ்வாமி! வாய் திறந்து சொல்வாயாக. நீளாதேவி சிறிது போதும் அவனை விட்டு பிரிவதில்லை. இது உன் ஸ்வபாவத்துக்கும் தகுந்ததன்று.

🌹 🌿 #முப்பத்துமூவர்_அமரர்க்கு...

தேவர்களின் பயத்தைப் போக்கும் பலமுள்ளவனே! அழகிய வடிவுடைய நப்பின்னையே! துயில் ஏழாய். நோன்பிற்கு வேண்டிய உபகரணங்களை அளித்து, எங்கள் விரதத்தினை முழுமை அடையச் செய்திடுவாய்.

🌹 🌿 #ஏற்ற_கலங்கள்...

நந்தகோபனின் மைந்தனே! ஸ்ரீகிருஷ்ணா! எழுந்திராள். உன் எதிரிகள் உனக்கு தோற்று உள் மாளிகை வாசலில் வந்து உன் திருவாளை வணங்கி கிடப்பது போல, நாங்களும் உன்னை பாற்றி வந்துள்ளோம். துயில் எழுந்து ஆட்கொள்வாயா.

🌹 🌿 #அங்கண்_மாஞாலத்து...

இப்பூமியை ஆபுரியும் அரசர்கள் தங்கள் அகங்காரம் குலைந்து உன் சிம்மாசனத்தின் கீழ் கூடி இருப்பது போல, நாங்களும் உன் பாதங்களை சரணடைந்தோம் ஸ்வாமி! அழகிய கண்களால் எங்களை கடாக்ஷித்து அருளுங்கள்.

🌹 🌿 #மாரிமலை_முழைஞ்சில்...

மழை காலத்தில் மலைக் குகையில் உறங்கும் வீர்யமுடைய சிங்கம், தேகத்தை உதறி கர்ஜனை செய்து வெளிப்புறப்பட்டு வருவதைப் போல, காயாம்பூ நிற வண்ணா உன் சிம்மாசனத்தில் எழுந்தருளி நாங்கள் வந்த காரியத்தை விசாரித்து அருள வேணும்.

🌹 🌿 #அன்றிவ்வுலகம்...

அக்காலத்தில் இவ்வுலகினை அளந்த ஸ்வாமி! உன் திருவடிகளுக்கு, பலத்திற்கு, உன் புகழிற்கு மங்களம். உன் குணத்திற்கு, உன் கையிலுள்ள வேலாயுத் திற்கு மங்களம் என உன்னை துதித்து, பறை கொள்வதற்காக வந்துள்ளோம். ஸ்வாமி அருள் புரிய வேண்டும்.

🌹 🌿 #ஒருத்திமகனாய்...

ஒரே இரவில் தேவகிக்கு பிள்ளை யாய் தோன்றி, யசோதையின் பிள்ளையாய் ஒளிந்திருந்து வளரும் காலத்தில், கம்சனுடைய வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமாலே! எங்கள் விருப்பத்தை நிறைவேற்று, உன் வீர்ய குணத்தை நாங்கள் பாடி மகிழ்ந்திடுவோம்.

🌹 🌿 #மாலே_மணிவண்ணா...

 அடியாரிடத்தில் அன்புடைய மணிவண்ணா! இவ்விரதத்தை நாங்கள் செய்வதற்காக பாஞ்சசன்னிய மான சங்குகளையும், பெரியனவான பறகளையும், திருப்பல்லாண்டு பாடுமவர்களையும், மங்கள தீபங்களையும், துவஜங்களையும், மேற்கட்டிகளையும் அளித்தருள வேண்டும்.

🌹 🌿 #கூடாரைவெல்லும்...

தன்னை அடிபணியாதாரை வெல்லும்
கோவிந்தா! உன்னைப் பாடி நாங்கள் அடையும் பரிசாவது என்னவெனில், பலவகை ஆபரணங்களை அணிவோம். பீதாம்பரத்தால் அலங்கரித்துக் கொள்வோம். பால் சோறு நெய்யிட்டு உன்னுடன் கூடி உண்டு
மனம் குளிர்வோம்.

🌹 🌿 #கறவைகள்_பின்...

 பசுக்களோடு காடு சேர்ந்து உண்டு திரிவோம்.

எங்கள் குலத்தில் நீ பிறக்கும் புண்ணியத்தை செய்துள்ளோம்.

கோவிந்தா! உணக்கும் எங்களுக்கும் உள்ள உறவு ஒழிக்க முடியாது.

கோபிக்காமல் நாங்கள் விரும்புவதை அருள வேணும்.

🌹 🌿 #சிற்றஞ்_சிறுகாலே...

கோவிந்தா! இடை குலத்தில் பிறந்த நீ
நாங்கள் செய்யும் சிறு கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்ளாமல் போகக்கூடாது. ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உன் மகிழ்ச்சிக்காகவே உணக்கே தொண்டு புரிய அருள 
வேண்டும்.

🌹 🌿 வங்கக்கடல்...

மாதவனை, கேசவனை அழகிய இடைப்பெண்கள் துதித்து, பாவை நோன்புக்குரிய கைங்கர்யத்தைப் பெற்ற ஸ்ரீவில்லிப் புத்தூரில் பெரியாழ்வாரின் மகளான ஆண்டாள் அருளிச் செய்த 30 பாசுரங்களையும் பாராயணம் செய்தால் லக்ஷ்மி நாதனல் திருவருள் பெற்று இன்புற்று வாழ்வார்கள்.

🌹 🌿 நன்றி தி தி தேவஸ்தானம் மாத இதழ்🙏🙏

🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🎋

Tuesday, December 13, 2022

திருஆக்கூர் (ஆக்கூர்) #தான்தோன்றீஸ்வரர் (சுயம்புநாதர்) #வாள்நெடுங்கண்ணி அம்மன் (கடகநேத்ரி) திருக்கோயில் வரலாறு

தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும், நாயன்மார்களில் சிறப்புலி நாயனாரின் அவதார தலமான, கோச்செங்கட் சோழர் கட்டிய தலமான
#திருஆக்கூர் (ஆக்கூர்) 
#தான்தோன்றீஸ்வரர் (சுயம்புநாதர்) 
#வாள்நெடுங்கண்ணி அம்மன் (கடகநேத்ரி) திருக்கோயில் வரலாறு:

ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 46ஆவது சிவத்தலமாகும். இத்தலம் மீது சம்பந்தர் பாடிய தேவாரம் இரண்டாம் திருமுறையிலும், கபிலதேவ நாயனார் பாடிய பாடல் பதினொராம் திருமுறையிலும் உள்ளது. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி.

இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. செம்பொனார் கோயிலுக்கு ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.சிறப்புலி நாயனார் அவதரித்த தலம்.

மூலவர்:தான்தோன்றியப்பர் ( சுயம்புநாதர்)
உற்சவர்:ஆயிரத்தில் ஒருவர்
அம்மன்:வாள்நெடுங்கன்னி, கடக நேத்ரி
தல விருட்சம்:கொன்றை,பாக்கு, வில்வம்
தீர்த்தம்:குமுத தீர்த்தம்
ஆகமம்:காரண ஆகமம்
புராண பெயர்:யாருக்கு ஊர்
ஊர்:ஆக்கூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு

வழிபட்டோர்:

சிறப்புலி நாயனார், சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர், அருணகிரிநாதர்

தேவாரப்பதிகம்:

கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப் பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில் அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப் பாடல்:

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்:

நன்மையா னாரணனும் நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்
தன்மையார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.

பொருள்: நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

தலவரலாறு:

ஒரு முறை கோச்செங்கண்ணனுக்கு வயிற்றில் குன்ம (அல்சர்) நோய் ஏற்படுகிறது. இதனால் மன்னன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறான். இந்த நோயை தீர்க்க வேண்டுமானால், மூன்று தல விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோயில் கட்டினால் நோய் தீரும் என்று அசரீரி கூறுகிறது. மன்னனும் பல கோயில்கள் கட்டி வரும் போது ஆக்கூர் என்ற இத்தலத்திற்கு வருகிறான். அப்போது அசரீரி வாக்கின் படி கொன்றை, பாக்கு, வில்வம் என்று மூன்று தலவிருட்சங்களை ஒரே இடத்தில் பார்க்கிறான்.

உடனே இந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டுகிறான். அப்படி கோயில் கட்டும்போது ஒருநாள் கட்டிய சுவர் மறுநாள் கீழே விழுந்து விடும். இது எதனால் கீழே விழுகிறது என சிவனிடம் மன்றாடி கேட்கிறான். அதற்கு இறைவன் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தால் குறைபாடு நீங்கி கோயிலை சிறப்பாக கட்டலாம் என்று கூறுகிறார். அதன்படி 48 நாள் அன்னதானம் நடக்கிறது. இதில் ஒவ்வொருநாளும் ஆயிரம் இலை போட்டால் 999 பேர் தான் சாப்பிடுவார்கள் ஒரு இலை மீதம் இருந்து கொண்டே இருக்கும்.

மன்னன் மிகுந்த வருத்தத்துடன் இறைவனிடம் சென்று, “”ஏன் இந்த சோதனை, 48 நாட்களும் ஆயிரம் பேர் அன்னதானம் சாப்பிட்டால் தானே கோயில் கட்டுவது சிறப்பாக அமையும். ஆனால் தினமும் ஒரு ஆள் குறைகிறார்களே. இதற்கு தாங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்” என்று கெஞ்சுகிறான்.

ஆயிரத்தில் ஒருவர் :

மன்னனின் குரலுக்கு செவி சாய்த்து விட்டார் இறைவன். 48வது நாள் ஆயிரம் இலை போடப்பட்டது. ஆயிரம் இலையிலும் ஆட்கள் அமர்ந்து விட்டார்கள். ஆயிரமாவது இலையில் “ஆயிரத்தில் ஒருவராக’ அமர்ந்திருந்த வயதான அந்தணரிடம் சென்ற மன்னன், “”ஐயா, தாங்களுக்கு எந்த ஊர்” என்று கேட்டான். அதற்கு வயதான அந்தணர் “”யாருக்கு ஊர்” என்று மறுகேள்வி கேட்கிறார். (இதனாலேயே இந்த ஊருக்கு யாருக்கு ஊர் என்பது மருவி ஆக்கூர் ஆனது) மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் விரட்டுகின்றனர்.

ஓடி சென்ற வயதானவர் நெடுங்காலமாக அங்கிருந்த புற்றுக்குள் விழுந்து விட்டார். புற்றை கடப்பாறையால் விலக்கி பார்த்த போது உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாக “தான்தோன்றீசுவரர்’ தோன்றுகிறார். கடப்பாறையால் புற்றை குத்தியபோது கடப்பாறை லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. கடப்பாறை பட்டதில் அடையாளமாக இன்றும் கூட லிங்கத்தின் தலைப்பகுதியில் பிளவு இருப்பதைக்காணலாம்.

அருள்மிகு ஆயிரத்துள் ஒருவர் கையில் தண்டு ஊன்றிய நிலையில் நின்ற வண்ணமாக காட்சியளிக்கும் உற்சவ மூர்த்தியாவார். மூலவர் சிலா விக்கிரகம் இல்லை. இறைவனை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பலவாறு போற்றி வழிபடும் பாடல்களில் ஆயிரத்தொருவர் பற்றிய குறிப்புகள் ஒன்று கூட இடம்பெறவில்லை என்பது இங்கு நோக்கப்பட வேண்டிய ஒன்று. சுந்தரர் தன் திருத்தொண்டர் புராணத்தில் சிறப்புலியைப் பற்றி குறிப்பிடுகிறார். மேலும் ஆயிரத்தொருவர் பற்றியும் குறிப்பிடபடவில்லை. எனவே சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புவிநாயனாருக்கு காட்சியளித்த இறைவனின் திருஉருவே இவ்ஆயிரத்தொருவராக இருத்தல் வேண்டும் என்பது தெளிவு.

63 நாயன்மார்களிலொருவரும், திரு ஆக்கூரைத் தனது பிறப்பிடமாகக் கொண்டவருமான சிறப்புலி நாயனார் சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு அறுசுவை உணவு கொடுப்பது வழக்கம். ஒரு சமயம் 1000 அடியார்களுக்கு உணவளிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 999 அடியார்கள் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு அடியார் வரவேண்டுமே என கலங்கி, இறைவனிடம் முறையிட்டார். அப்போது இறைவன் தானே வயதான ஒரு சிவனடியாராக வந்து சிறப்புலி நாயனாரின் வேண்டுதலைப் பூர்த்தி செய்தார். இறைவன் அந்த ஆயிரவர்களில் ஒருவராகக் காட்சி தந்ததால் ஆயிரத்துள் ஒருவர் என்றும் வழங்கப்படுகிறார்.

அமைப்பு:

இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே பலி பீடம், நந்தியை அடுத்து கருவறை உள்ளது. இடதுபுறம் ஆயிரத்தொருவர் சன்னிதியும், நவக்கிரக சன்னிதியும் உள்ளன. பலிபீடம் நந்தி என்பவற்றைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவர் கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் இரண்டு பாணலிங்கங்கள், விசாலாட்சி, விசுவநாதர், சிறப்புலிநாயனார், மகாலிங்கம், சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், பரவையார், சுந்தரர், சங்கிலியார், கணபதி, மகாலிங்கம், பாலமுருகன், அருணகிரிநாதர், மகாலிங்கம், கஜலட்சுமி, கைலாசநாதர், பர்வதவர்த்தினி, வாயுலிங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, கோச்செங்கட்சோழன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னிதிக்கு வலப்புறம் அம்மன் சன்னிதி உள்ளது. அம்மன் சன்னிதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சரஸ்வதி, வள்ளி-தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. சுப்பிரமணியர் சன்னிதிக்கு முன்பாக மயிலும், பலிபீடமும் உள்ளன.

தலபெருமை :

சீறப்புலி நாயன்மார் பிறந்து, வாழ்ந்து, முக்தியடைந்த தலம். இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வது மிகவும் சிறப்பு. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தல் மிகவும் சிறப்பானதாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தன் திருப்புகழால் பாடியுள்ளார். அகத்தியருக்கு சிவன் திருமணக்கோலம் காட்டிய தலங்களுள் இதுவும் ஒன்று.

கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் கட்டிய சிவாலயங்களுள் இது மாடக்கோயில் ஆகும். இறைவனே வந்து பந்தியில் அமர்ந்து விருந்து உண்ட பெருமையுடைய தலம்.

பொது தகவல்:

காசியை விட வீசம் அதிகம்: 

கோயிலின் பின்புறத்தில் உள்ள விநாயகருக்கு பொய்யா விநாயகர் என்றுபெயர். இவர் அந்தண ரூபத்தில் வந்து மன்னனிடம் என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு மன்னன், “”சிவனுக்கு கோயில் கட்ட வேண்டும், ஆனால் சுவர் இடிகிறது” என்கிறார். அதற்கு விநாயகர் இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கு. பதில் கிடைக்கும் என்கிறார். ராஜாவுக்கோ, குளத்தில் மூழ்கினால் சுவர் எப்படி நிற்கும் என்று சந்தேகம். இதையறிந்த விநாயகர் காசியை விட வீசம் அதிகம் இந்தக்குளத்தில். காசியில் விட்ட பொருள்கள் எல்லாம் இந்த குளத்தில் கிடைக்கவே மன்னனின் சந்தேகம் தீர்ந்தது. இருந்தும் குளத்தில் மூழ்கிய மன்னன் இறைவனை நினைத்து எழுந்தான். கூடவே கோயிலின் கர்ப்பக்கிரகமும் வந்தது. மகிழ்ச்சியடைந்த மன்னன் மீதி கோயிலை கட்டி முடித்தான்.

கோவிலும் இருப்பிடமும்:

காவிரி சூழ் எழில் தென்னாட்டு சிவத்தலங்களில் காவிரியின் தென்கரையில் நூற்றுத் தொண்ணூறு சிவதலங்களில் நாற்பத்தி ஆறாவது தலமாக விளங்குவது திருஆக்கூர் திருத்தலமாகும். நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பேரூர் ஆக்கூர். மயிலாடுதுறையில் இருந்து (தாரங்கம்பாடி வழி) காரைக்கால், நாகப்பட்டினம் செல்லும் முக்கிய சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆக்கூர் பேருந்து நிலையத்தின் வடபாகத்தில் இத்திருக்கோயில் அமையப் பெற்றுள்ளது. பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் இத்திருக்கோயிலின் இறைவன் பெயரை தாங்கி எழில்மிகு தோரண நுழைவு வாயில் கம்பீரமாக நிற்கிறது. இவ்வூர் ஊராட்சியின் நிர்வாகத்தில் உள்ளது. இவ்வூரில் ஆரம்ப பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி, சுகாதார நிலையம், நூலகம் முதலியனவும் அமைந்த அழகிய வயல்கள் சூழ்ந்த ஊராகும். இவ்வூருக்கு சென்னை, புதுச்சேரி, காரைக்கால், சிதம்பரம், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

திருக்கோயில் தோற்றம்:

இத்திருக்கோயில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக திகழும் கோச்செங்கட் சோழநாயனார் கட்டிய திருக்கோயிலாகும். இவர் முற்கால சோழமன்னர் ஆவார். கோச்செங்கட்சோழர் எழுபது மாடக்கோயில் கட்டினார் என்பது பிரபந்தபாசுரங்கள் மூலம் வெளிப்படுகின்றன. அவற்றுள் ஒன்று பெண்ணா கடத்தில் உள்ள தூங்காணை மாடம் மற்றொன்று ஆக்கூர் தான்தோன்றி மாடமாகும். யானை ஏறமுடியாத படிக்கட்டுகளை உடைய உயரமான தளத்தை உடையவை மாடக்கோயில் என்று பெயர் பெற்றன. கோச்செங்கட்சோழன் அங்கன் அமரும் தானங்கள் பல சமைக்க என்று ஆணை இட்டான். அந்நாளில் ஆக்கூரில் உள்ள கிராமவாரிய மக்கள் தம் ஊருக்கு திருக்கோயில் கட்ட எண்ணி அரசனிடம் முறையிட்டிருத்தல் வேண்டும். (ஊர்க்காரியங்களை கவனிக்கும் கூட்டம் இருந்தது கல்வெட்டு செய்தியால் அறியப்படுகிறது) அரசனும் அதற்கு இசைய மக்கள் ஈசனார்க்கு கோயில் அமைக்கும் பணியில் முதல் பணியாக இடம் தேர்வு செய்யும் நாளில் நூல் வள்ளார் வகுத் முறையில் இடம் சமன் செய்யுங்கால மிகப்பெரிய ஒலி எழ அந்த இடத்தை அகழ்ந்து பார்க்கும் போது ஆதிறையானின் அருள்மேனி விண்ணொளியாக பிரகாசிக்க இருத்தல் கண்டு அந்த இடத்திலேயே கோயில் அமைத்திருத்தல் வேண்டும். இறைவன் தானாக கிடைக்கப் பெற்றமையால் இறைவனுக்கு தான்தோன்றி முடையான் என்றும் தான்தோன்றி அப்பர் என்று பெயரிட்டு மகிழ்ந்து வழிபட்டனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இறைவன் அவ்வாறு அகழும்போது கிடைக்கப் பெற்றமையால் இறைவனுக்கு தான்தோன்றி முடையான் என்றும் தான் தோன்றி அப்பர் என்று பெயரிட்டு மகிழ்ந்து வழிபட்டனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இறைவன் அவ்வாறு அகழும்போது கிடைக்கப்பெற்றமையால் லிங்கத்தின் பாணம் பிளந்து சிதைந்த நிலையில் இன்றும் காணலாம்.

மார்கண்டையருக்காக காலனை (எமனை) வதம் செய்ய சுவாமி சிரசு வெடித்து விஸ்வரூபத்தில் எழுந்து வதம் செய்தார் என்பது செவிவழிச் செய்தியாக அறியப்படுகிறது. இது போன்ற அமைப்பு எந்த கோவிலும் இல்லை.

இந்த சிவலிங்கம் கோச்செங்கட்சோழனுக்கு முன்னும் ஒரு காலத்தில் வழிபட்டு வந்திருந்து பிறகு யாதொரு காரணத்தாலோ மண் மூடி கிடந்திருந்தல் வேண்டும். எனவே தான் ஞானசம்பந்தர் தொன்மையால் தோற்றம் கேடு இல்லாதான் தொல்கோயில் என்று சிறப்பித்து கூறுகிறார். இவ்வாறு தான்தோன்றி அப்பராக காட்சியத்தார் என்பது தெளிவு. கோச்செங்கட்சோழன் காலம் நான்காம் நூற்றாண்டின் கடை என்று கணிக்கப்படுகிறது. எனவே இத்திருக்கோயில் நான்காம் நூற்றாண்டில் கட்டப்பெற்றது என்பது தெளிவு.

வாள்நெடுங்கண்ணியம்மை :

ஒரு சமயம் இறைவன் சிவனும் பார்வதிதேவியும் பூலோகத்தை சுற்றி வரும் போது பார்வதி தேவி இறைவனிடம் பூலோகத்தில் அழகிய மாளிகை அமைத்து அதில் வாசம் செய்ய வேண்டும் என்று இறைவனிடம் கூறிய போது இறைவன் சிவபெருமான் இந்த ஆசை வேண்டாம் என்றார். அம்பிகை பார்வதி தேவி பிடிவாதமாய் இருக்க இறைவனும் அம்பிகையின் கோரிக்கைக்கு அப்படியே ஆகட்டும் என்று கூறி தேவதச்சன் விஸ்வகர்மா தலைமையில் தேவர்களை கொண்டு மாளிகை அமைக்கப்பட்டது. மாளிகை முழுமைப்பெற்று கிரஹப்பிரவேசம் செய்ய முனிவர் புலஸ்தியர் தலைமையில் பல ரிஷிகள் கிரஹபிரவேசம் செய்தனர். இறைவனும் இறைவியும் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ள இவ்வேளையில் புலஸ்திய முனிவரிடம் உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றபோது புலஸ்திய முனிவரும் இதர அனைத்து முனிவர்களும் உங்களது அருள் மட்டும் போதும் இறைவா என்றனர். 

ஆனால் புலஸ்திய முனிவரின் தர்மபத்தினி இந்த மாளிகை வேண்டும் என தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத பார்வதிதேவி இந்த மாளிகை என்றும் ரண களமாகட்டும் என சாபமிட்டு இறைவனிடமிருந்து விடைபெற்று பூலோகத்தில் அத்ரி மகரிஷியின் வளர்ப்பு மகளாக பிறந்து வளர்ந்தார். பார்வதிதேவியை பிரிந்து இறைவன் கைலாயத்தில் தியானத்தில் மூழ்கினார். இப்படியே பல ஆண்டுகள் கடந்தபோது இறைவனிடம் அகஸ்திய முனிவர் இறைவா அம்பிகையுடன் எப்பொழுது சேர்ந்து அருள்புரிவீர்கள் என்று வினவினார். இறைவன் சிவபெருமான் அம்பிகை பார்வதிதேவியை தற்போது அத்ரி மகரிஷியின் மகளாக கட்கநேத்ரியாக பூலோகத்தில் பிறந்து வளர்ந்து வருகிறாள். அம்பிகை என்னை சேரும் நாள் விரைவில் நடைபெறும் என்றும் அதற்குரிய காலகட்டம் நெருங்கி விட்டது என்றார். 

ஆனால் அம்பிகை திருமணத்திற்கான மந்திரத்தை அம்பிகை ஜபம் செய்து வந்தால் விரைவில் நடைபெறும் என்றார். பார்வதிதேவி அகஸ்திய முனிவரிடம் இறைவனிடம் சேர என்ன செய்ய வேண்டும் கேட்டபோது அகஸ்தியர் சுயம்வர மந்திரத்தை அகஸ்தியர் மாமுனிவர் தெரிவித்ததும் அன்று முதல் அம்பிகை நாள்தோறும் ஜபம் செய்ய இறைவனே நேரில் வந்து அம்பிகையை ஆட்கொண்டார். அம்பிகையை ஆட்கொண்ட மாதம் பங்குனியில் வரும் வசந்த நவராத்திரி காலம் ஆதலால் இன்றும் இக்கோயிலில் வசந்த நவராத்திரியல் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது. அம்பிகை நாள்தோறும் ஜபம் செய்த இடம் ஆக்கூர் ஆகும். அம்பிகை செய்த மந்திரமே சுயம்வரபார்வதி மந்திரம் ஆகும். அகஸ்தியருக்கு மணக்கோலத்தில் காட்சியளித்த ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இன்றும் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தானத்தில் மணக்கோலத்தில் இறைவனும் இறைவியையும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அம்பிகை அமைத்த மாளிகை இலங்கையில் உள்ளது.

புலஸ்திய முனிவரின் பேரன்கள் தான் குபேரன், இராவணன் ஆகியோர் ஆவர்.

குபேரன் வழிபாடு :

புலஸ்தியர், விச்ரவஸ், அகஸ்தியர், நிதாகர் அத்ரி மகரிஷி வாழ்ந்த ஸ்தலம் ஆக்கூர். இங்கு தான் ஐந்து வேள்விகளை செய்தும் நான்கு வேதங்களை கற்றும், ஆறு அரங்கங்களை கற்று குபேரன், இராவணன் ஆட்சிபுரிந்துள்ளார்கள் என்று புராண வாயிலாக அறியப்படுகிறது. குபேரன் பிறந்த ஊரும், குபேரன் வழிபட்டு வந்த தான்தோன்றீஸ்வரர் சுவாமியையும், வாள்நெடுங்கண்ணியம்மையையும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை தருசித்தும் அர்ச்சனை செய்து வந்தால் வாழ்வில் எல்லா வளமும் கிடைக்கும் என்பது தின்னமாகும்.

தல சிறப்பு:

இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக தான்தோன்றீசுவரர் அருள்பாலிக்கிறார். 11ம் திருமுறையில் கபிலர் பாடிய பாடலிலும் இடம் பெற்றுள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 109 வது தேவாரத்தலம் ஆகும்.

திருவிழா :

திருவாதிரை அன்று நடராஜர் வீதிஉலா வருவதே கோயிலின் மிகப்பெரிய திருவிழா ஆகும். மற்றபடி சிவனுக்குரிய மாதாந்திரி பிரதோஷம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, பவுர்ணமி, போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.

பிரார்த்தனை :

இது ஒரு சிறந்த பரிகார ஸ்தலமாகும்.சுவாமிக்கு அம்பாள் வலது பக்கத்தில் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருமணம் வேண்டி சுயம்வர பார்வதி ஹோமம் செய்தால் திருமணம் நிச்சயம். குழந்தை வரம் வேண்டி சந்தான கோபாலகிருஷ்ண யாகம் செய்தல் சிறப்பு.

ஜாதகத்தில் நவகிரக தோஷங்களை போக்கிட நவகிரக சாந்தி ஹோமம், வாழ்வில் பொருட்செல்வம் பெற தனாகர்ஷண ஹோமம், குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை நீக்கிட துர்க்கா சப்த சதி ஹோமம், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைத்திட சூலினி துர்க்கை ஹோமம், வீடு வர்த்தக கட்டடம் கட்டி பாதியில் நின்று போன கட்டடம் முழுமை பெற்று பூர்த்தியடைய வராக ஹோமம், கூர்ம ஹோமம் செய்து பயன் பெறுங்கள்.

நேர்த்திக்கடன் :

தோஷ நிவர்த்திக்காக குழந்தையை தத்து கொடுத்து எடுக்கிறார்கள். குழந்தைக்காக பவுர்ணமி தினத்தில் வெண்தாமரை பூவால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் குழந்தை நிச்சயம். அம்பிகைக்கு உகந்த பஞ்சமி, அஷ்டமி, பவுர்ணமி, பிரதோஷ நாட்களிலும், செவ்வாய் வெள்ட மற்றும் ஞாயிறு கிழமைகளிலும், சம்பந்தபட்ட நபருடைய ஜென்ம நட்சத்திரத்தன்றும் செய்வது சிறப்பானதாகும். திருமணம் தடைபெற்றவர்கள் (ஆண், பெண் இருபாலரும்) இவ்விடம் சுயம்வரா பார்வதி ஹோமம் செய்து அணிந்திருந்த பழைய உடைகளை தானம் செய்து சுவாமி, அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் வழங்கி சகஸ்கர நாமாவளி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் பெற சந்தான பரமேஸ்வர ஹோமம் செய்து தம்பதியினர் அணிந்திருந்த பழைய உடையகளை தானம் செய்து சுவாமி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் வழங்கி சகஸ்ரநாமாவளி அர்ச்சனை செய்து வழிபட்டு பூஜையில் வைத்த பாலை பருகினால் குழந்தை பாக்கியம்கிட்டும்.

அமைவிடம் 
மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை-பொறையாறு பஸ் பாதையில் உள்ளது. 

திருச்சிற்றம்பலம்🙇
ஓம் நமசிவாய🙏

திருவண்ணாமலை 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும். அந்த 9 கோபுரங்கள் விபரம் வருமாறு:-

*திருவண்ணாமலை*
திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும் ஒரு பெயர் உண்டு.

அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

அதில் ஒன்று, திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் இருப்பதாகும்.

இந்த 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும். அந்த 9 கோபுரங்கள் விபரம் வருமாறு:-

1. ராஜகோபுரம் (கிழக்கு), 
2. பேய்க் கோபுரம் (மேற்கு),
3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு), 
4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு), 
5. வல்லாள மகாராஜா கோபுரம், 
6. கிளி கோபுரம்,
7. வடக்கு கட்டை கோபுரம், 
8. தெற்கு கட்டை கோபுரம்,
9. மேற்கு கட்டை கோபுரம்.

*1. ராஜகோபுரம்*

திருவண்ணாமலை ஆலயத்தில் கிழக்கு திசையில் கம்பீரமாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கு ராயர் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு.

தென்னகத்தில் மிகப்பெரும் ஆன்மிக பணி செய்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இந்த கோபுரத்தை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார் என்பதால் அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்த கோபுரம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த கோபுரமாக திகழ்ந்தது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை அமைக்கும்போது கருவறை கோபுரத்தை 216 அடிகள் உயரம் கொண்டதாக அமைத்து இருந்தார்.

அவருக்கு பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளுக்கு நினைவாக திருவண்ணா மலையில் பிரமாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

ராஜராஜன் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

1550களில் அந்த ராஜ கோபுரத்தை கட்டும் பணியை கிருஷ்ண தேவராயர் தொடங்கி தீவிரப்படுத்தி இருந்தார்.

135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைத்து ராஜகோபுரத்தை அவர் எழுப்பினார். ஆனால்

அதன் பணிகள் முடிவதற்குள் அவர் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த ராஜகோபுரத்தை கட்டும் படி சிவநேசர், லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார்.

கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆங்கிரச ஆண்டு கார்த்திகை மாதம் புதன்கிழமை பவுர்ணமி ரோகிணி நட்சத்திர நாளில் அந்த ராஜகோபுரத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த ராஜகோபுரம் பார்க்க பார்க்க கண்களுக்கு சலிப்பே தராத சிறப்பை கொண்டது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.

தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள்.

அதேபோன்றுதான் இந்த கோபுரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து அழகுற கட்டி முடிக்கப்பட்டதாகும். கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

11 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிட கலை அம்சங்களை அதிகமாக காணலாம். கோபுரத்தின் சுற்றுப்பகுதிகளில் நிறைய நாட்டிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், மயில்மேல் அமர்ந்த முருகன், அன்னபறவை, லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

கோபுரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பூதகனங்களும் கண்களுக்கு விருந்து கொடுப்பதாக உள்ளன.

கோபுரத்தின் இடது பக்கத்தில் செல்வகணபதி சிலை உள்ளது. விறன்மிண்ட நாயனாரின் சிலையும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே மன்னர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. அந்த காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இந்த கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களும் கல்வெட்டுகளாக உள்ளன.

அந்த காலத்தில் இறந்தவர்களின் 16-வது நாள் தினத்தன்று மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்த ராஜகோபுரத்தின் ஒரு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சமீப காலமாக இந்த பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

*2. பேய்க்கோபுரம்*

ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் பேய்க்கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் மலையை பார்த்தப்படி இருப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

ராஜகோபுரத்தை கட்டுவதற்கு கிருஷ்ணதேவ ராயர் திருப்பணிகள் தொடங்கியபோதே இந்த மேற்கு கோபுரத்தை கட்டுவதற்கும் திருப்பணிகளைத் தொடங்கி நடத்தினார். இந்த கோபுரத்தின் பணிகளையும் செவ்வப்ப நாயக்கர்தான் கட்டி முடித்தார்.

இதன் உயரம் 160 அடியாகும். இந்த மேற்கு கோபுரம் பேச்சு வழக்கில் மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது.

கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர்.

மற்றபடி பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் மகிசாசூரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், உமை அம்மை, பிரம்மா, முருகன், சரபேஸ்வரர், முனிவர்கள், பூதகனங்கள் இடம் பெற்றுள்ளனர்.

*3. திருமஞ்சன கோபுரம்*

திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு திசையில் திருமஞ்சன கோபுரம் அமைந்துள்ளது. அந்த காலத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக யானை மீது புனித நீரை இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.

எனவே இந்த கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை யார் கட்டியது என்று தெரியவில்லை.

எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால் ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்ததாக இந்த கோபுரம் திகழ்கிறது.

ராஜகோபுரத்திற்கு அடுத்தப்படியாக இந்த கோபுரத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்து செல்வார்கள்.

அதுபோல வீதி உலா முடிந்த பிறகு இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை உள்ளே அழைத்து வருவார்கள். இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைவானர்கள் சிற்பம் மிகுந்த சிறப்பு பெற்றது.

*4. வல்லாள மகாராஜா கோபுரம்*

இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு இந்த கோபுரத்தின் கட்டுமானப்பணி முடிந்ததாக ஒரு தகவல் உள்ளது. எனவே இந்த கோபுரத்திற்கு வீர வல்லாள திருவாசல் என்ற ஒரு பெயரும் உண்டு.

ராஜகோபுரத்தை தாண்டியதும் அடுத்து வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதை காணலாம்.

இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர் சிற்பங்களுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவபெருமான், காளை மீது அமர்ந்த சிவபார்வதி, சமணரை கழுவேற்றம் செய்யும் சிற்பங்களும் உள்ளன. லிங்கத்தை பார்வதி தழுவி நிற்பது போன்ற சிற்பமும் இடம்பெற்றுள்ளது.

அண்ணாமலையார் தனது மகனாக வல்லாள மகாராஜாவை ஏற்றுக் கொண்ட சிறப்பை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த கோபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

*5. கிளி கோபுரம்*

திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரி நாதர் பற்றி சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

அவரோடு தொடர்புடையது இந்த கிளி கோபுரமாகும். திருவண்ணாமலை தலத்தில் உள்ள கோபுரங்களில் இது மிக மிக பழமையானதாகும்.

1053-ம் ஆண்டு இந்த கோபுரத்தை ராஜேந்திர சோழன் கட்டினார். சுமார் 140 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

அருணகிரி நாதர் கிளி உருவம் எடுத்து தேவலோகம் சென்ற போது அவரது உடலை சம்பந்தாண்டான் என்பவன் எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர் கிளி உருவில் அலைய வேண்டியதாற்று.

அவர் கிளி உருவத்தோடு இந்த கோபுரத்தில் அமர்ந்து நிறைய பாடல்களை பாடினார்.

கந்தர் அனுபூதி, சுந்தர அந்தாதி ஆகிய இலக்கியங்கள் இந்த கோபுரத்தில் கிளி உருவத்தில் அமர்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த கோபுரத்தில் 33 கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆனால் அவற்றை இன்னமும் வெளியில் கொண்டு வர முடியவில்லை.

*6. தெற்கு கட்டை கோபுரம்*

திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் தெற்கு கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன.

*7. மேற்கு கட்டை கோபுரம்*

பேய் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.

*8. வடக்கு கட்டை கோபுரம்*

அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

*9. அம்மணியம்மாள் கோபுரம்*

திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு திசையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. அம்மணிம்மாள் என்ற பெண் சித்தர் உருவாக்கிய கோபுரம் இது.

சொக்கநாதா
சொக்கநாதா

நான்குவகை திருநீறு===================திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை

சிவ சிவ

#திருநீறு    ( வகைகள்)

நான்குவகை திருநீறு
===================
திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை

1. கல்பம்

2. அணுகல்பம்

3. உபகல்பம்

4. அகல்பம்

#கல்பம்

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.

#அணுகல்பம்

ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

#உபகல்பம்

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

#அகல்பம்

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

ஐந்து வகை திருநீறு
=================

1. இரட்சை

2. சாரம்

3. பஸ்மம்

4. பசிதம்

5. விபூதி

#இரட்சை

சுமனை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது ஈசானிய முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது சிவப்பு நிறத்தினை உடையது. இப்பசுவின் சானத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு இரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.

#சாரம்

சுசீலை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது தற்புருச முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு சாரம் என்று அழைக்கப்பெறுகிறது.

#பஸ்மம்

சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது.

#பசிதம்

பத்திரை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது வாமதேவ முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்பெறுகிறது.

#விபூதி

தந்தை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது சத்தியோசாத முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது கபில நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது.

சிவ சிவ

திருச்செந்தூர்_முருகன்_கோவிலில்கொடுக்கப்படும் #இலை_விபூதியின்_மகத்துவம்

#திருச்செந்தூர்_முருகன்_கோவிலில்கொடுக்கப்படும் #இலை_விபூதியின்_மகத்துவம்..!!
#அறுபடைவீடுகளில் #இரண்டாம்படை வீடான #திருச்செந்தூர் #சுப்பிரமணிய_சுவாமி_கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது #கந்தசஷ்டி திருவிழாவாகும். 

       இவ்விழாவில் #தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் 
என 
உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சஷ்டி விரதம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். 

இங்கு வழங்கப்படும் பிரசாதங்களில் முக்கியமானது இலை விபூதியாகும். ஒருமுறை #ஆதிசங்கரர் காசநோயால் பாதிக்கப்
பட்டு திருச்செந்தூர் முருகனிடம் வந்துள்ளார். அப்போது முருகப் பெருமான் ஆதிசங்கரரிடம் இனிய தமிழில் பாடல் பாடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் பெருமாளை மட்டும் பாடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் வருத்தமடைந்த முருகப் பெருமான் வருத்தத்தோடு இருப்பது கண்டு அப்போது அங்கு வந்த #பெருமாள் முருகன் வருத்தத்துடன் இருப்பதற்கு காரணத்தை கேட்டறிந்தார். 

விஷயம் புரிந்த பெருமாள் ஆதிசங்கரர் இடம் சென்று என்னை பாடுவதாக நினைத்து முருகப் பெருமான் முன் சென்று கண்ணை மூடிக் கொண்டு என்னை பாடு என்று கூறினாராம். அப்போது முருகப் பெருமான் முன் நின்று கண்ணை மூடிக்கொண்டு ஆதிசங்கரர் பாடினாராம். கண்ணை திறந்து பார்க்கும் போது முருகப் பெருமான் இருக்கும் இடத்தில் பெருமாள் இருந்துள்ளார். பெருமாள் தான் #முருகன், முருகன் தான் பெருமாள் என்பதை உணர்ந்த ஆதிசங்கரர், முருகப் பெருமானிடம் மன்னிப்பு கேட்டு முருகனை பாடி காசநோயை குணப்படுத்த வேண்டும் என்று வேண்டினார். உடனே முருகப்பெருமான் இலையில் விபூதியை அவரிடம் கொடுத்தார். #திருநீற்றுப்பச்சிலையில் (#பன்னீர்_இலை) வைத்து கொடுக்கப்பட்ட இலை விபூதியை சாப்பிட்டதும் #காசநோய் குணமாகியதாம். 

#தேவர்களை சிறை பிடித்து கொடுமைப்படுத்திய #சூரபத்மனிடம் தேவர்களை விடுவித்து முருகப் பெருமானிடம் சரணடையுமாறு #வீரபாகு தேவன் கேட்டபோது சூரன் மறுத்தான். முருகப் பெருமானிடம போர் புரிய தயாரானான். போர் தொடங்கியது போரில் முருகப் பெருமான் படை சார்பில் இருந்த வீரர்கள் சிலர் காயமடைந்தனர். அந்த காயத்திற்கு மருந்தாக இலை விபூதி கொடுத்து குணமாக்கியுள்ளனர். பின்னாளில் அதன் மகத்துவத்தை அறிந்து கோவிலை கட்டிய சாதுக்கள் பணியாற்றிய ஊழியருக்கு ஊதியமாக இலை விபூதியை கொடுத்துள்ளனர். பெற்றுக் கொண்ட ஊழியர்கள் விடலை கோவில் பிள்ளையார் அருகே வந்து அதைத் திறந்து பார்த்த போது ஊதியத்திற்கு ஏற்ப பொற்காசுகள் ஆக மாறியிருந்ததாம். வேலை செய்யாதவர்களுக்கு வெறும் விபூதி மட்டுமே இருக்குமாம். அதனுடைய தத்துவத்தை உணர்த்தும் வகையில் இன்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!!

நன்னிலத்தில் இருந்து நாகூர் செல்லும் வழியிலே திருப்புகலூர் என்ற திருத்தலம்.

திருச்செங்காட்டங்குடி
உத்திராபதீசுவரர்
திருகுகுழல் உமைநங்கை

நன்னிலத்தில் இருந்து நாகூர் செல்லும் வழியிலே திருப்புகலூர் என்ற திருத்தலம். இத்திருத்தலத்தில் இருந்து திருக்கண்ணபுரத்திற்கு ஒரு பாதை செல்கிறது. இவ்வழியாகச் சென்றால் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தை அடையலாம் அல்லது நாகூரில் இருந்து நன்னிலம் வரும் வழியிலே திருமருகல் என்ற திருத்தலம், இத்திருத்தலத்தின் வழியாகவும் திருச்செங்காட்டங்குடியினை அடையலாம். அருகருகே அமைந்த நிறைய கோவில்கள் இருக்கக்கூடிய பகுதி.

ஆம் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதரையும் தரிசிக்கலாம். திருப்புகலூர் திருத்தலம். திருக்கண்ணபுரம் திருத்தலம். திருக்கண்ணபுரத்தில் திவ்ய தேசம் இருக்கிறது, தேவாரத் திருத்தலமாகிய இராமநதீச்சுவரர் தலமும் இருக்கிறது. திருமருகல் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலங்கள் எல்லாம் ஒரே நாளிலே தரிசிக்கக் கூடிய வகையில் அருகருகே இருக்கக்கூடிய திருத்தங்கள். பார்த்துவிட்டு வர பேருந்து வசதிகளுக்கும் குறைவில்லை.  

திருஞானசம்பந்தப் பெருமான் இத்திருத்தலத்தை கணபதீச்சரம் என்று அழைக்கின்றார். கணபதியானவர் கசமுகாசுரனை வதம் செய்த  பாவம் நீங்க இவ்விடத்திலே இறைவனை வேண்டி வழிபட்டு அருள் பெற்றதாக ஐதீகம். ஆகவே இத்திருத்தலம் கணபதீச்சரம் என்று அழைக்கப் பெறுகிறது. 

இத்திருத்தலம் வரலாற்று ரீதியாகவும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை தன்னகத்தே அடக்கி இருக்கிறது. தமிழகத்திலே சிறிய ஒரு கிராமம். இத்திருத்தலத்தில் அவதரித்தவர் தான் சிறுத்தொண்டர் என்னும் நாயனார். இவர்தான் பல்லவ மன்னனின் படைத் தளபதிகளில் முக்கியமான ஒருவராகத் தலைமை ஏற்று, வாதாபி சென்று போர்க்களத்திலே தமிழர்களின் வீரத்தை பறைசாற்றி விட்டு, வாதாபி நகரை அழித்துவிட்டுத் திரும்பி வந்தபோது அங்கிருந்த கணபதி மேல் சிறுத்தொண்டருக்கு ஒரு ஈர்ப்பு. அப்பொழுது அவர் பரஞ்சோதி ஆக தானே இருந்தார். அந்த பரஞ்சோதியார் இருந்த ஊர் ஏற்கனவே கணபதீச்சரம் தானே. அவருக்கு உண்மையிலேயே வாதாபி கணபதி மீது வந்த காதலுக்கு வியப்பேதுமில்லை. கணபதீச்சரத்திலே அப்பேற்ப்பட்ட ஒரு கணபதியை நிறுவ வேண்டும் என்று எண்ணி வாதாபியிலிருந்து அந்த கணபதியை தன்னுடைய ஊருக்கு கொண்டு வந்தார். ஆனால் தற்போது அந்த வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட கணபதியானவர் திருவாரூர் திருத்தலத்தில் இருப்பதாக குடவாயில் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் ஒரு யூடியூப் காணொளியில் கூறியிருக்கிறார்கள். எது எப்படியோ வாதாபியிலிருந்து கணபதீச்சுரத்தைச் சேர்ந்த ஒருவர் நமது ஊருக்கு அங்கிருந்து ஒரு கணபதியை கொண்டு வந்திருக்கின்றார். அப்பேர்ப்பட்ட ஒரு பெருமை வாய்ந்த  கிராமம் இந்த திருச்செங்காட்டங்குடி. 

 திருச்செங்காட்டங்குடி ஊர்ப்பெயரும் புராண தோடு தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது. கஜமுகாசுரன் என்னும் அசுரனை கணபதி அழித்ததால் பெருகிய குருதியினால் இந்த ஊர் செந்நிறமாக மாறியதாகவும், அதனால் இந்த திருத்தலத்திற்கு திருச்செங்காட்டங்குடி என்று பெயர் வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

 பரஞ்சோதியார் ஆக இருந்து பின்னால் சிறுதொண்டர் ஆக மாறிய அந்த சிவனடியாரால் திருச்செங்காட்டங்குடி திருத்தலம் பல்வேறு பெருமைகளைப் பெற்றது. சிறுதொண்ட நாயனார் சிவனடியார்களுக்கு தினந்தோறும் அமுது படைத்து பணியாற்றியவர். அவர் அப்படி சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய ஒரு நாளிலே பைரவ வேடம் பூண்டு அவரை சோதிப்பதற்காகவே இறைவன் வருகிறார். தாம் வடபுலத்தில் இருந்து வருவதாகவும், தாம் பிள்ளைக்கறி மட்டுமே ஆறு மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடுவதாகவும், அதற்காக தக்க ஏற்பாடு செய்யுமாறும் சிறுதொண்டரிடம் கூறவே, சிறு தொண்டரும் தன்னுடைய ஐந்து வயது மகன் சீராளனையே கறி சமைக்கிறார். அதற்கு அவருடைய மனைவி திருவெண்காட்டு நங்கையும், அவர்கள் இல்லத்தில் வேலை பார்க்கக் கூடிய பெண்மணியும் இன்முகத்துடன் இறைவனுக்கு அமுது படைக்கிறார்கள். இறைவனின் திருவருளால் சிறுதொண்டரின் மகனான சீராளரும் உயிர்பெற்று வரவே, பைரவராக வந்து தங்களை சோதித்தது சிவபெருமானே என்று எண்ணி சிறுதொண்டர் கண்ணீர் மல்க இறைவனை வணங்குகிறார். அந்த நிகழ்வினை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் இவ்விழாவானது கொண்டாடப்படுகிறது. இதற்காக சோழ மன்னர், சித்திரை மாத பரணி நட்சத்திரம் மட்டுமன்றி ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பரணி நட்சத்திரத்தில் உத்திரபதீசுவரருக்கு சிறப்பு வழிபாடு செய்யவே, பல்வேறு நிவந்தங்களை வழங்கியிருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக நாம் அறிகின்றோம். 

சிவபெருமான் அன்று பைரவர் கோலத்திலே வந்ததை, ஐயடிகள் காடவர்கோன் காலத்திலே, இறைவனே வந்து தமக்கான சிலையை நிறுவியதாக ஐதீகம். அந்த உத்தராபதீஸ்வரர் எதிரே சிவபெருமான் அமர்ந்திருந்த கல்லத்திமரமும், அதற்கு முன்னதாக சிறுதொண்டர், அவர்தம் மனைவி திருவெண்காட்டு நங்கை, அவர் தம் மகன் சீராளன், அவர்கள் இல்லத்தில் பணி செய்த சந்தன நங்கை ஆகியோருடைய புடைப்புச் சிற்பமும் காணப்படுகிறது.

 இத்திருத்தலம் ஆனது பல்வேறு பெருமைகளை பெற்றது. கணபதி வழிபட்டு இவ்விடத்திலே இறைவனை ஸ்தாபிக்க, பின்னால் வந்த சிறுத்தொண்டராலும் இத்திருத்தலம் பல்வேறு பெருமைகளை பெற்று இன்றும் நம்மிடையே உள்ளது.

 இத்திருக்கோவில் வேளாக்குறிச்சி ஆதீனம்  நிர்வாகத்தில் உள்ளது.
 சிவபெருமானின் மைந்தனான கணபதி மட்டுமின்றி சிவ தொண்டர் ஆகிய சிறுதொண்டராலும் பெருமை பெற்று, நாயன்மார்கள் ஆகிய அப்பர் பெருமான், சுந்தரர் பெருமான், ஞானசம்பந்தப் பெருமான் ஆகியோராலும் பாடல் பெற்ற பெருமைக்குரியது இந்த திருச்செங்காட்டங்குடி திருத்தலம். ஆம் சம்பந்தர்,அப்பர், சுந்தரர், சேக்கிழார் ஆகியோரால் இந்த திருத்தலம் பாடப்பெற்றுள்ளது. பன்னிரு திருமுறையில் இந்த திருப்பதிகங்கள் இடம்பெற்றுள்ளன.
 நாயன்மார்களால் குறிப்பாக அப்பர்,சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் தேவாரத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவ்வகையிலே இந்த தரணியிலே இருக்கக்கூடிய தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் இத்திருத்தலம் காவிரி தென்கரைத் திருத்தலத்தில் வருகிறது. சோழநாட்டில் அமைந்துள்ள மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு திருத்தலம் இந்த திருச்செங்காட்டங்குடி திருத்தலம். 

இறைவன் பூமியிலே வந்து அடியார்களுக்கு அருள் செய்வதற்காக பல்வேறு திருத்தலங்களில் தம்முடைய திருப்பாதங்களைப் பதித்துள்ளார். இந்தத் திருத்தலமும் இறைவனின் திருப்பாதம் பட்ட ஊராகும். ஆம் பரஞ்சோதியார் என்று சொல்லப்படக்கூடிய சிறுதொண்ட நாயனாரின் வீட்டிலிருந்து கணபதீச்சரம் திருக்கோவில் கல்லத்திமரம் வரை இறைவனே நடந்து சென்று, மீண்டும் அந்த  மரத்தின் நிழல் அடியிலிருந்து நாயனாரின் வீட்டிற்கும் வந்து இருக்கிறார். இறைவன் பாதம் பட்ட பல்வேறு திருத்தலங்களில் இத்திருத்தலம் ஒரு முக்கியமான திருத்தலமாகும்.

பதிகங்கள்:
அங்கமும் வேதமும் -1 -06 திருஞானசம்பந்தர்

நறைகொண்ட -1 -61 திருஞானசம்பந்தர்

பைங்கோட்டு -3 -63 திருஞானசம்பந்தர்

பெருந்தகை -6 -84 திருநாவுக்கரசர்

 ஞானசம்பந்தப் பெருமானின் அங்கமும் வேதமும் என்ற திருப்பதிகம் மிக அருமையான திருப்பதிகம். திருமருகல் திருத்தலத்தில் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தினை நினைத்துப் பாடி இருக்கக்கூடிய இப்பதிகம் பெருமைவாய்ந்த பதிகம். திருமருகலில் இருக்கக்கூடிய ஞானசம்பந்தப் பெருமானை மீண்டும் கணபதீச்சுரம் வந்து வழிபடுமாறு சிறுதொண்டர் அழைக்கவே, திருமருகல் திருத்தலத்தில் இறைவனை நோக்கி, திருமருகல் திருத்தலத்தில் இறைவனிடமே யாம் செங்காட்டங்குடி திருத்தலத்தை கணபதிச்சுவரரை கண்டோம் என்று ஒரு பதிகத்தை பாடுகிறார். திருமருகல் பெருமானே தாங்கள் கணபதீச்சுரம் சென்று அமர்ந்த காரணம் என்ன? கணபதீச்சுரம் காமுற காரணம் என்ன? என்று அருமையான ஒரு பதிகத்தில் பாடியிருக்கிறார்.

"நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த
மைதவழ் மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கைதவழ் கூரெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே"

நாகை, கீழ்வேளூர் ஆகிய திருத்தலங்களில் எல்லாம் தரிசித்து வந்த ஞானசம்பந்தப் பெருமானை சிறுதொண்ட நாயனார் திருச்செங்காட்டங்குடி அழைத்து வந்து கணபதீச்சரம் ம இறைவனை பாடுமாறு வேண்ட ஞானசம்பந்தப் பெருமானும் நிறை கொண்ட என்ற பதிகத்தை பாடுகிறார்.

"தோடுடையான் குழையுடையா னரக்கன்றன் றோளடர்த்த
பீடுடையான் போர்விடையான் பெண்பாக மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடும்
காடுடையா னாடுடையான் கணபதீச் சரத்தானே." 

மேலும் சிறுதொண்டர் பணிபுரிய செங்காட்டங் குடிமேய பெருமானே என்று ஒரு பதிகமும் பாடி அருளுகிறார்.

"பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய்  தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன்  பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே"

 திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்புகலூரிலே எழுந்தருளி இருக்கின்ற பொழுது இத்திருத்தலத்திற்கு வந்து திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் இறைவன் புகழை ஒரு பதிகத்தில் பாடியிருக்கிறார்.

"பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
    பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
    எழுந்தருளி யிருந்தானை எண்டோள் வீசி
அருந்திறல்மா நடமாடும் அம்மான் தன்னை
    அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே"

 "செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க்கு அடியேன்" என்று திருச்செங்காட்டங்குடியை  சுந்தரர் திருத்தொண்டர் தொகையில் பதிவுசெய்கிறார்.

இதுகாறும் இலக்கியங்கள் பகர்ந்ததையும், புராணங்களையும் கண்டோம்.அடுத்து வரும் பதிவில் கல்வெட்டுக்கள் கூறுவதை காண்போம்

Followers

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் : எப்படி செய்வது? பலன்கள் என்ன?!* வித்யாரம்பம் சடங்கு: குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவு...